கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

     

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024





தொகுப்பாசிரியர் பகுதி

 அன்பான வாசகர் பெருங்குடிகளே உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 மாதங்களாக எங்களோடு பயணிக்கும் வாசகர்கள், படைப்பாளர்களை எங்கள் கூதிர் இதழ் ஆசிரியர்கள் ஒருபோதும் மறவாமல் இருப்போம். நம் கூதிர் இதழ் ஆசிரியர்கள் நினைத்தாற்போல் பத்து மாத இலக்கை இன்றுடன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள். புதிதாக நால்வர் இணைந்து ஒரு இதழை தொடங்குகிறார்கள் என அறிந்து எங்களுக்கு முதல் படைப்பை வழங்கிய எழிலரசி முதல் இந்த மாத இதழ் வரை எங்களுக்கு அனைத்து படைப்புகளையும் வழங்கிய அனைத்து படைப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். சில காரணங்களால் காலதாமதமாக வந்தாலும் அதனை பெரிதாக பொருட்படுத்தாமல் எங்களுடன் பயணித்த வாசகர்களுக்கும், பல்வேறு சூழலிலும் எங்களுக்கு பல்வேறு அனுபவங்களை கூறி நல்வழியில் நடத்திச் சென்ற அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களாகிய எங்களை படைப்பு சிம்மாசனத்தில் அமர்த்தி படைப்பாளனாக முடி சூட்டிய கூதிர் சொந்தங்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

- ச.தணிகைவேலன்

*****

    மாணவர்கள் நான்கு பேர் ஒன்றிணைந்து தொடங்கியது தான் இந்த கூதிர் மின்னிதழ். எங்களுக்கென இதழ் தொடர்பாக இலக்கும் நோக்கங்களும் இருந்தது. நோக்கம் என்பது நான்கு பேர் மனநிலையில் வெவ்வேறானது. இதழ் வெளியீடு என்பது குறைந்தபட்சம் 10 இதழ்களை வெளியிட வேண்டும் அந்த வகையில் இலக்கினை அடைந்துவிட்டோம். இதழுக்கு படைப்பினை வழங்கிய அத்தனை பேருக்கும் நன்றி. மேலும் எங்களோடு தொடர்ந்து பயணித்த வாசகப் பெருமக்களும் சில கருத்துக்களை தனிப்பட்ட முறையில் வாசகர் பகுதியிலும் தெரிவித்தவர்களுக்கும் நன்றி. சிலரின் படைப்புகள் நிராகரிக்கப்பட்டது அவர்களையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம்‌. படைப்புத்தேர்வு செய்வதில் எங்களுக்குள் ஆலோசித்த பிறகு தான் தேர்வு செய்யப்பட்டது. அதே நேரத்தில் நிராகரிக்கப்பட்டவை அனைத்தும் படைப்பே இல்லை என்று ஆகாது.

     என் பார்வையில் அனைத்து படைப்புகளும் உன்னதமானது‌ ஏனெனில், தங்களின் சொந்த முயற்சியாலும் தங்களின் அனுபவத்தையும் உணர்ச்சியையும் மொழியால் தீட்டுகிறார்கள். மேலும் என் தனிப்பட்ட கருத்து அடிப்படையில் ஒரு படைப்பை படைப்பே இல்லை என்று கூறுவது அபத்தமானது. அதை விடுத்து அதில் உள்ள குறைகளை எடுத்துச்சொல்லி படைப்பாளரை செம்மைபடுத்த வேண்டும் அதே நேரத்தில் கருத்தாக்கத்தின் அடிப்படையில் அந்த படைப்பு சமூகத்தில் கேடு விளைவிக்கும் என்றால் விமர்சனம் செய்து அந்த படைப்பை அடித்து நொறுக்க வேண்டும். அதற்கான வேலையும் இதழில் சிறுகதை மூலம் நடந்தது. நாங்கள் எந்த படைப்பையும் படைப்பே இல்லை என்று நிராகரிக்கவில்லை இதழின் வடிவம் எங்களுடைய கருத்துகள் அடிப்படையில் தேர்வு செய்யும் நிலையில் இருந்ததால் ஒரு சில படைப்பை தேர்வு செய்தோம். ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான மனநிலையும் சுவையும் இருக்கும் அதற்கு ஏற்ற போல் படைப்பை தேர்வு செய்து வெளியிட்டு இருப்பதாக நம்புகிறோம். இந்த இதழுக்கு படைப்புகளை தந்த அனைத்து படைப்பாளிகளும் தொடர்ந்து பல்வேறு இதழுக்கும் தங்களின் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த கூதிர் இதழ் இந்த மாதத்தோடு ஓய்வெடுக்க தயாராகிவிட்டது. வாய்ப்பு இருந்தால் வருங்காலத்தில் பத்து இதழ்களின் தொகுத்து பனுவல் வடிவில் வெளியிட முயற்சி எடுப்போம் என்று மகிழ்ச்சியோடு கூறிக் கொள்கிறேன். நன்றி.

-ஆ.கிரண்குமார்

*****

          ‘கூதிர்’ இதழ் சவால் நிறைந்தாக இருந்தது. பெயர் தெரிவு முதலே பல தடைகள். முகநூலில் பதிவேற்ற ஆபாச உள்ளீடு என்று காண்பித்தது இதழின் நகர்வுக்கு தடையாக இருந்தது. இருந்தும் இதழ் வெளிவந்திருக்கிறது. மின்னிதழ் பற்றிய அறிமுகமும் அனுபவமும் கிடைத்தது. அனுபவத்திற்காக உருவாக்கப்பட்ட இதழ் அதை வழங்கி இருக்கிறது. இதழைத் தொடர்ந்து வாசித்த வாசகர்களுக்கு நன்றிகள். இடை இடையே வாசித்த வாசகர்களுக்கும் நன்றிகள். படைப்புகளுக்கு நன்றிகள். இதழ் இனிமேல் தான் வாசிக்கப்பட போகிறது.  இல்லாத ஒன்றே தேடப்படும் கூதிர் இதழும் அவ்வாறே. காரணம் அது தாங்கி வந்த படைப்புகளின் தரம் இன்னும் பல்வேறு வாசகர்களால் வாசிக்கப்படும் இது திண்ணம். மேலும் என்னோடு பயணித்த தொகுப்பாசிரியர்களுக்கும் நன்றி. இந்த மாத இதழ் கலவையான படைப்புகளுடன் வெளிவருகிறது.

-ஜெ.மோகன்

 *****

     கூதிர் இதழ் தொடங்குவதற்கான திட்டம் 2023 டிசம்பர் மாதத்தில் போடப்பட்டது. திட்டத்தின்படி எவ்வித வேலைகளும் முறையாக நடைபெறவில்லை. ஆனால் நண்பர் தினேஷ் கண்ணனின் ஒத்துழைப்பால்  முதல் இதழ் குறித்த நேரத்தில் வெளியானது. தினேஷ் இடித்துரைக்கவில்லை என்றால் ஜனவரி ஒன்றாம் நாள் கூதிர் முதல் இதழ் வெளியாகி இருக்காது என்பதே உண்மை. அதேபோல கூதிர் பத்தாவது இதழ் குறித்த நேரத்தில் வெளிவருவதற்கு காரணமாக இருப்பவர் வசந்த். முதலும் முடிவும் இதழுக்குள் நேரடி தொடர்பற்றவர்களின் உழைப்பினாலேயே வெளி வந்திருக்கிறது. இதனை எப்படி எடுத்துக் கொள்வது என தெரியவில்லை. குறித்த நேரத்தில் தான் இதழ் வெளியாக வேண்டுமா? என்று கேட்கலாம்குறித்த நேரம் தவறும்போது இதழை வெளியிடுவதற்கான ஆர்வத்திலும் கவனத்திலும் உழைப்பிலும் தன்னிச்சையாகவே தொய்வு ஏற்படுகிறது. ஆர்வமும் புதிய அனுபவத்தை பெற வேண்டும் என்ற விருப்பமுமே இவ்விதழ் தொடங்குவதற்கான மூலம். அதன்படி இனிப்பும் கசப்புமான அனுபவத்தையே இவ்விதழ் பணியில் பெற்றிருக்கிறேன்

      ஒரு இதழ் கவனிக்கப்படுவதற்கு  காலங்கள் செல்லும் என்பதை அறிவேன். இருப்பினும் அவ்வப்போது ஒவ்வொரு இதழையும் வாசித்து என்னிடம் கருத்தை பகிர்ந்த சிலரை குறிப்பிட்டாக வேண்டும். தினேஷ் கண்ணன், பிரபாகரன், பாலாஜி, மதன், கண்ணதாசன், வெங்கடாசலம், உமாசங்கர் ஆகியோர் இதழ் வெளியானவுடன் படித்து  தொடர்புடைய சில கருத்துகளை சொல்லியிருக்கின்றனர். இப்பணியில் நான் தொடர்ந்து செயல்படுவதற்கு இவர்களெல்லாம் ஒரு காரணம்மேலும் ஆரம்ப இதழ்களை தோழர் வேலாயுதம் பொன்னுசாமியும் இறுதியில் வெளியான இதழ்களை குறித்து தோழர் பேச்சிமுத்தும்  கவனித்து சில கருத்துக்களை பகிர்ந்தனர். இதழின் அமைப்பு குறித்து ஆலோசனைகள் அளித்த  கவிஞர்கள் ஆசை மற்றும் றாம் சந்தோஷ் ஆகியோரையும் இவ்விடத்தில் நினைவுகூர்கிறேன். முகப்போவியம் வரைந்து வாங்குவதை மையமிட்டு பல்வேறு கதைகள் உண்டு. மாதம் ஒருமுறை இணையவழியில் கூதிர் சார்பாக உரையாடல் நிகழ்த்த வேண்டும் என்று காமாட்சி காயத்ரி அவர்கள் தெரிவித்தார். ஆனால் அது சாத்தியப்படாமல் போயிற்று. இவர்கள் அனைவருக்கும் என் நன்றி உரியது. தங்களது படைப்புகளை அனுப்பி உதவிய நண்பர்களுக்கும் சகித்துக் கொண்டு உடன் பணியாற்றிய முகப்போவியம் வரைந்து கொடுத்தவர்கள் மற்றும் பிற தொகுப்பாசிரியர்களுக்கும் நன்றி

        ஒருநாள் நண்பர் பரசுராமன் இதழை அச்சில் பார்க்க வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார். அப்போது ஒட்டுமொத்த இதழ்களையும்  மீளொரு முறை கவனித்தேன். நான்  நினைத்ததில் பகுதி அளவே நிறைவேறியிருந்தது. இதழுக்கு தொடர்புடையவன் என்ற  சார்பில் இருந்து விலகிப் பார்த்தால் தற்போது வரக்கூடிய இணைய இதழ்களின் அருகில் வைத்து பார்க்கக்கூடிய சில அம்சங்கள்கூதிர்ல்  இருந்தது. சில இடங்களில் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தி இருக்கலாமோ என்ற எண்ணமும் உடன் எழுந்தது. இவையெல்லாம் ஒரு பாடம்

     மொழிபெயர்ப்பில் ஆர்வம் கொண்டு செயல்பட விரும்பும் சிலரது ஆக்கங்களை இதழில் வெளியிட்டிருக்கிறோம். மேலும் தொடர் கதை, இருப்பதிலேயே குறைவான அளவில் கதைகள். எல்லா இதழ்களிலும் கட்டுரைகள், கவிதைகள், இலக்கிய மதிப்புரைகள் ஆகியன வெளியாகியுள்ளது. எடுத்தாளப்பட்ட பகுதி மூலம் நாட்டுடைமையாக்கப்பட்ட  எழுத்தாளர்களது ஆக்கங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. இவற்றுக்கு மத்தியில் ஒரே ஒரு நிறைவளிக்கக்கூடிய அம்சம் புதியவர்கள் சிலர் இவ்விதழ் அறிமுகம் மூலம் வாசிக்கவும் எழுதவும் தொடங்கி இருப்பதே. பலருடைய முதல் கவிதை மற்றும் கட்டுரை கூதிர் இதழ் வாயிலாக வெளியாகி இருக்கிறது. சில படைப்புகளை வெளியிடுவதற்கு நாங்கள் தேர்வு செய்யவில்லைசிலவற்றை திருத்தி வாங்கியும் வெளியிட்டிருக்கிறோம். படைப்புகளை நாங்கள் தேர்வு செய்யாததால் எவரும் துவண்டு விட வேண்டாம். என்னுடைய ஆக்கங்கள் பல்வேறு இதழ்களால் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன.

    கூதிர் பருவம் பத்தைப் பொறுத்தவரைதனிச்சொல்அறிமுகம், தொல்காப்பியம் குறித்த சமூகவியல் பார்வை, எழுத்தாளர் எஸ். லட்சுமண பெருமாளின் இலக்கியப் பங்களிப்பு, மௌனியின் கதைகள், இமையத்தின் எழுத்துகள் பற்றிய கட்டுரை, வரலாற்றைப் புரிந்து கொள்வது பற்றிய அறிமுகம், வெறுங்கால் நடை, பாண்டவபுரம், உடைந்த கூடு(நஸ்தானிர்ஹ்)நூல் விமர்சனம் ஆகியன வெளியாகியுள்ளது. அஜய் சுந்தர், இர.கண்ணதாசன், .வருண்குமார், தெங்காசியன், ஆல்யன், கானகநாடன், அரா ஆகியோரது கவிதைகளோடு தொன்மக்கிணறு, கிழக்கின் ரேகைகள்,தாத்தா சொன்ன கதை ஆகிய கதைகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது. தொடர்கதைகளுக்காகவே இதழ்கள் தொடங்கப்பட்ட வரலாறு தமிழில் உண்டு. கூதிர் இதழைப் பொருத்தவரை தொடர்கதைக்காக இதழ் தொடங்கப்பட்டவில்லை என்றாலும் இதழில் விசித்திரனின் சத்யா தொடர்கதை எழுதி முடிக்கப்பட்டிருக்கிறதுஅக்டோபர் மாதம் என்றால் என் நினைவில் இருப்பவற்றுள் ஒன்று காந்தி, மற்றொன்று அக்டோபர் புரட்சி. எடுத்தாளப்பட்ட பகுதியில் ரகுநாதனின்அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்நூலின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது

         -ரா.அழகுராஜ் 

******************

தொகுப்பாசிரியர்கள்

ரா.அழகுராஜ்

ஜெ.மோகன்

ஆ.கிரண்குமார்

ச.தணிகைவேலன்

  

முகப்போவியம்

அ. திலகக்கனி

 

உள்ளடக்கம்


அஜய் சுந்தர் கவிதைகள்

அக்னி நட்சத்திரகர்ப்பம் - வேலாயுதம் பொன்னுசாமி

போருக்குப் பிறகு-இர.கண்ணதாசன்

வைதீக விழுங்கலுக்குஎதிரான சமண பன்மீய மீட்டெடுப்பு –தீசன்

தூக்கம் -க.வருண்குமார்

கிழக்கின் ரேகைகள் -அரம்பன்

விளிம்புநிலைமக்களின் குரல்களை மையப்படுத்தும் தனிச்சொல் -தெங்காசியன்

ஆல்யன் கவிதை

மௌனியைப் பேசுதல்-கி. தினேஷ்கண்ணன்

சத்யா –விசித்திரன்

கையறுநிலையை உணர்த்தும்பிரதிசு.வெங்குட்டுவனின் வெறுங்கால் நடை -தமிழ் மாணவன்

தெங்காசியன்  கவிதைகள்

வரலாற்றில் மீள்வாசிப்பு–அருண்குமார்

தொன்மக் கிணறு ஆல்யன்

என் வாசிப்பில் இமையம் –திராவிடன்

கானகநாடன் கவிதை

சிதைத்த பின்செதுக்கும் மாயம் -அழகுராஜ் ராமமூர்த்தி

தாத்தா சொன்ன கதை -தவிடன்

தாகூரின் உடைந்த கூடு (நஸ்தானிர்ஹ்) -ப. பட்டி திவ்யா

அரா கவிதைகள்

எடுத்தாளப்பட்ட பகுதி

அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும் –ரகுநாதன்


 

இதழில் வெளியாகும் படைப்புகளுக்கு அதன் படைப்பாளர்களே பொறுப்பிற்குரியவர்கள்.


Pdf வடிவில் இதழை வாசிப்பதற்கு👇

கூதிர் பருவம் -10


தொடர்புக்கு

மின்னஞ்சல் முகவரி 

koothirmagazine@gmail.com


முதல் பத்து இதழ்களுக்கு



புலனம் மற்றும் அலைபேசி 

88073 39644

63699 12549

95973 81055

98949 44640

 

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு