என் வாசிப்பில் இமையம் -திராவிடன்

 

என் வாசிப்பில் இமையம் -திராவிடன்

    எல்லா எழுத்தாளர்களும் தனக்கென்று தனித்த எழுத்துக்களால் வளம் வரும் வேளையில் அனைத்து விதமான போக்குகளிலும் எழுத்தை எடுத்துச் சென்று தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ளவதின் மூலம் இமயத்தின் பங்கு சிறப்பானது என்று சொல்லலாம். அந்த வகையில் நான் இமயத்தை வாசிக்கும்போது அவரது அனைத்து விதமான எழுத்துக்களும் எனது அனுபவங்களில் நான் அனுபவித்தாகவே எனக்கு தென்பட்டது. 

   செல்லாத பணம் நூலின் வாயிலாக இமையம் எனக்கு அறிமுகமாகி இருந்தாலும் எனக்கு அவருடைய “பெத்தவன்” படைப்பே  அதிக ஈடுபாடை ஏற்படுத்தியது. “பெத்தவன்” என்னும் படைப்பை பெண்ணை நோக்கில் எடுத்து செல்வதா அல்லது தலித்திய நோக்கில் எடுத்துச் செல்வதா அல்லது உளவியல் நோக்கில் எடுத்துச் செல்வதா என்றே தெரியவில்லை எனக்கு. அந்த வகையில் இமையம் ஒவ்வொரு பகுதியையும் அவ்வளவு உணர்வுபூர்வமாக கடத்திச் சென்று இருப்பார்.

    இந்த சமூகத்தில் நிறைய சிக்கல்களையும் இன்னல்களையும் சந்திக்கும் ஒரு தலித் இளைஞன் ஒரு உயர் சாதி பெண் ஒருவரை காதலிக்கிறான் என்பதற்காக அந்த இளைஞனையும்  அவனது பெற்றோர்களையும் கட்டி வைத்து அடிப்பது மற்றும் அந்த பெண் மற்றும் அவளது குடும்பத்தை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கிய அந்த கிராமப்புற மக்களின் வாழ்வையும் கிளைக் கதைகளாக இரண்டு சாதிய சண்டைகளையும் எடுத்துக் கூறி கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்று இருப்பார். 20ஆண்டுகள் வரமாயிருந்து பெற்ற மகளை மருந்து கொடுத்து சாகடிக்கும் அளவிற்கு அந்த பெண்ணின் தகப்பனை மனம் மாற்றம் செய்யும் சாதிய உணர்வை இமையம் எடுத்துக்காட்டி இருப்பார். அதிலும் குறிப்பாக அந்தப் பெண்ணின் மயிரை அறுப்பது அந்தப் பெண் முன்னால் 20ஆண்கள் கூடி நின்று ஆபாசமாக காட்சியளிப்பது போன்றவை மனதிற்கு ரொம்ப வருத்தத்தை ஏற்படுத்தக் கூடிய  இடமாக இமயம் எடுத்துக் கூறியிருப்பார். இது  போல எத்தனை எழுத்தாளர்கள் வந்தாலும் இன்னும் கிராமப்புறங்களில் படித்த இளைஞர்கள் அது போன்ற செயல்களில் ஈடுபட்டு தான் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதே உயர் சமூகத்தை சேர்ந்த ஒரு ஆண் கீழ சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அவனை ஏற்றுக் கொள்கின்றனர். இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒரு நபர் என்றால் அது ஏதுமறியா ஊனமற்ற அந்தப் பெண்ணின் தங்கை தான்.  இவ்வளவு சமூக சிக்கலிலும் தனது மகனின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் தந்தையின் நிலைமை, என்னதான் உயர் பதவிக்கு சென்றாலும் தாழ்த்தப்பட்டவன் என ஒதுக்கி வைக்கப்படும் அந்த இளைஞனின் நிலைமை, தன் காதலால் பல அவப்பெயருக்குள்ளாகும் அந்தப் பெண் என முப்பரிமாணமாக இமயம் இதை எடுத்துச் சென்று இருப்பார்.  அடுத்த கட்டமாக பெண்களையும் அரசியலையும் மையப்படுத்தி வந்த “வாழ்க வாழ்க” எனும் குருநாவல் எனக்கு பிடித்த ஒரு படைப்பு. ரூ.500 பணத்திற்கு ஆசைப்பட்டு அன்றாட பெண்கள் அரசியல் கூட்டம் ஒன்றிற்கு செல்கின்றனர். காலை 10 மணிக்கு வரதாக சொல்லி மாலை 3:30 மணி வரை வராமல் இருக்கும் ஒரு தலைவிக்காக சாதாரண ஏழைப் பெண்கள் காத்திருக்கின்றன. அவர்கள் ஒன்றும் கூவத்தூர், கொடநாடு போன்ற சொகுசிடங்களில் காத்திருக்கவில்லை. பல ஏக்கர் காட்டை அழித்து உச்சி வெயில் மண்டையை உடைக்கும் அளவுக்கு ஒரு மொட்டாந்திர கூட்டத்தில் சிக்கி நீர் சுளுக்கு, மயக்கம், கைகால் முறிவு, மரணம் போன்ற பல இன்னல்களை சந்தித்தும் மேலும் கைக்குழந்தையின் பரிதவிப்பு, வெயிலின் தாக்கம், தண்ணீரின் தாகம் இத்தனைக்கும் இடையில் தனக்கு சரிக்கு நிகராக அமைந்த கீழத்தெருப் பெண்ணிடம் வாதாடும் மகளிர்கள் போன்றவர்களோடு அமர்ந்துள்ளனர். அவ்வளவு இடையூறுகளுக்கு இடையில் “என் உயிரிலும் உயிரான, உடலிலும் மேலான” என ஒலிக்கும் அரசியல் தலைவியின் நிலை, தனது வாரிசுக்காக சொத்து சேர்க்கும் எதிர்க்கட்சியின் நிலை, ஆளுங்கட்சி எதிர்க்கட்சி எதுவாயினும் அதில் நம்ம சாதிக்காரன் தான் இருக்கணும்கிற சராசரி ஆம்பளைங்களின்  நிலை என பலவித அரசியலையும் அதில் இமயம் எடுத்துச் சென்று இருப்பார் அது குறிப்பிடத்தக்கது .வாழ்க வாழ்க எனும் படைப்பில் இதுவரை  கவனிக்க தவறிய பெண்களின் நிலைமையும் பலவிதமான அரசியல் கோணத்தையும்  எடுத்து செல்வதன் வாயிலாக ஒரு எழுத்தாளராக இமயம் செய்த அந்த பணி பாராட்டுத்தக்கது. வகுப்பறையை தவிர்த்து பொதுவெளியில் நடக்கும் குற்றங்களை தெளிவாக வாசகர்களுக்கு எடுத்துச் செல்லக்கூடிய ஒரு ஆசிரியராக எனக்கு தென்பட்டார். வாழ்க வாழ்க என்னும் நூலில்  ஒரு ஏழரை மணி நேரத்திற்கு உள்ளாகும் இருமை எதிர்வுகளாக நாம் அதில் ஆராய்ந்தால் பெண்கள் vs ஆண்கள், ஏழை vs பணக்காரர், நகரம் vs கிராமம்,  மேலத்தெரு vs பறத்தெரு, மணமுடிந்த பெண்கள் vs மண முடியாத பெண்கள், கட்சித் தலைவி vs கட்சித் தலைவன்,  தலைமை vs தொண்டன், பண முதலைகள் vs உண்மை விசுவாசிகள் போன்றவற்றை அமைப்பியல் முறையில் சிறப்பாக எடுத்துக் கூறலாம் . தனி மனித நலனுக்காக சூழலில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறியிருப்பார்.  இவ்வாறாக எடுத்து செல்லும் இமையம் முற்றிலும் மாறி ஒரு ஆண் பெண்ணின் உறவின் முக்கியத்துவத்தை முழு ஆவேச பரிணாமத்துடன்  எழுதிய  படைப்பாக “எங்கத” என்னும் படைப்பை காணலாம். இன்றைய சூழலில் வலைதளங்களில் அதிகம் நகைச்சுவையாக்கப்படும் 90 கால கட்ட இளைஞர்களின் திருமண வாழ்க்கையை போல் ஒரு இளைஞனின் மன ஓட்டத்தை எடுத்துச் செல்லும் படைப்பு அது. இமயத்தின் எழுத்து தரத்தில் கிளையான தடம் போல் ஒரு மாறுபட்டு எழுத்தோட்டத்தை அதில் நாம் காணலாம். ஒரு பெண்ணின்  வருகைக்குப் பின்னால் ஒரு ஆணின் மனது சந்திக்கும் பல இன்னல்களின் வெளிமுகமாக இந்நூல் வெளிப்படுகிறது. திருமணத்தின் மீது வெறுப்பற்ற ஒரு இளைஞன் அதை காலம் கடத்தி வருகின்றான். அந்நேரத்தில் ஒரு பெண் ஆசிரியரின் வருகை அவனது வாழ்க்கையை புரட்டி போடுகிறது. அவனது மாற்றத்தால் ஊருக்கே பிடித்து போன ஆசிரியை அவனது இளைய தங்கையை தவிர்த்து அவன் குடும்பத்தில் மற்ற அனைவரும் வெறுக்க தொடங்கினார்கள். ஆனால் அந்த ஆசிரியை தவிர்த்து வெளி வட்டாரத்திருக்கு செல்ல மறுக்கிறான் அவன். இரண்டு பிள்ளைக்கு தாயான விதவை ஆசிரியரை நம்பி தனது வாழ்க்கையை இழக்கும் அந்த இளைஞனை எண்ணி அவனது தாய் புலம்பாத நாளில்லை; அதனை காட்டிலும் அந்த இளைஞனுக்கு அந்த ஆசிரியை பற்றிய நினைப்பு மட்டுமே. அந்த ஆசிரியைக்கும் அவன் மேல் ஆசை வந்தது . தனது கணவனை பற்றியும் அவங்க குடும்பத்தை பற்றியும் அவ்வபோது அவனிடம் சொல்லி இருந்தாலும் ஒரு அதிகாரியை பற்றி முற்றிலுமாக மறைக்காமல் மறைத்து பேசி இருப்பாள். அப்போதுதான் அவன் மனம் உடைந்து அலைந்து திரிவான்.கதை அடுத்து கட்டத்திற்கு மாறும்.இதை வைத்து அடுத்த கட்டத்தை அழகாக நகர்த்தி இருப்பார். அடுத்த படைப்பு “மண்பாரம்” என்னுடைய கிராமத்தை கண்முன் காட்டிய படைப்பு. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பேசக்கூடிய படைப்பு சராசரி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் என்பது மேல் மேலக்குடியினரின் கையில் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டிய படைப்பு. தன்னைக் காப்பாற்றத் துணையே ஏதும் இல்லாதவர்க்கு யார் தான் நம்பிக்கையை ஓட்ட முடியும்? எடுத்து வைத்த அடி சறுக்கி மீண்டும் முதல் படிக்க வந்து சேரும் பொழுது ஏற்படும் ஆற்றாமையை துடைத்து தன்னை யார் இனி கரையற்ற போகிறார்கள் என்று ஏங்கும் நிழல்களின் வெளிப்பாடு  இதில் வரும் சிறுகதைகள் என்று கூறலாம். “சாரதா” என்னும் படைப்பு என் வாழ்நாளில் மறக்க முடியாத படைப்பு சங்க இலக்கியத்தில் கேள்விப்பட்ட ஒரு வார்த்தை கையறு நிலை அதனை சாரதா என்கிற படைப்பின் மூலம் படம் எடுத்துக் காட்டுகிறார் எழுத்தாளர். பெண்களின் நிறைவேறாத காதலை மையமிட்ட படைப்பு என்றே சொல்லலாம். 50 வயதை கடந்த தனவேல் சாரதாவின் 3 மணி நேர ரயில் பயணத்தில் 30 ஆண்டு காலமாக அனுபவங்களை எடுத்து சொல்கிறார்  சாரதா.  அதில் குறிப்பாக அந்த ரயில் பயணத்தின் போது ஒரு பார்வையற்றவர் இவர்களை கடக்கும்போது பாடிய “ஆண்டவன் யாரையும் விட்டதில்ல வாழ்க்கையின் வட்டத்தில” என்கிற பாடல் கற்பனையில் நினைத்தால் கூட உடம்பு சிலிர்க்கிறது. அதில் எழுத்தாளர் இமையம் இளைஞர்களின் இன்றைய நிலையை அந்த சாரதாவின் பேத்தியின் வாயிலாக நமக்கு தெரியப்படுத்துவது அற்புதம். இவ்வாறாக இமையத்தின் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு எழுத்துத் தடத்தில் நம்மை அழைத்துச் செல்லும். இன்றைய ஆய்வாளர்களின் தேடலான தலித்தியம், பெண்ணியம், அரசியல், உளவியல் போன்ற அனைத்து வித எழுத்துக்களையும் இமையத்தின் படைப்புகளின் வாயிலாக நாம் காண முடிகிறது. ஆகச்சிறந்த படைப்புகளில் இமயத்தின் “சாரதா”என்னும் சிறுகதை எப்போதும் நிலைத்து நிற்கும். ஒரு எழுத்தாளர் என்பவன் வாசகரின் வாசிப்புக்கு சலிப்பு ஏற்படுத்தாமல் அவனை ஒரே மூச்சில் படிக்க வைக்க வேண்டும் என்பதனை இமயம் சரியாக பயன்படுத்தி உள்ளார். ஆனால் இமையத்திடம் உள்ள அந்த தாக்கம் என்பது எதிலோ நன்கு சிக்குண்டு இருப்பது மட்டும் எனக்கு தெரிகிறது. ஆனால் சரியாக அது எனக்கு புலப்படவில்லை. அவரின் மொழிநடை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது படைப்புகளை படிப்பதன் வாயிலாக ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களின் பலவித பரிணாமங்களை நம் கண் முன்னே எடுத்துச் செல்லும் என்பது மட்டும் புரிகிறது.

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு