மெய் முறிந்தால் மெய் (எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடன் உரையாடல்)


மெய் முறிந்தால் மெய்

(எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடன் உரையாடல்)

(சந்திப்பு: ரா. அழகுராஜ், ஜெ. மோகன், ஆ. கிரண்குமார், , ச. தணிகைவேலன்,               த. சத்தியப் பிரியா ர. பிரகாஷ்ராஜ்,)


ரா. அழகுராஜ்: நீலம் என்ற வண்ணம் தொடக்கத்திலிருந்து உங்கள் எழுத்துகளில் வருகிறது அதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் இருக்கிறதா?

    கடல் நீலம், வானம் நீலம், கடவுள் நீலம் கடவுளுக்கு நிகரான மீட்பர் அம்பேத்கர் நீலம். நீலம் என்பது தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் நிறமாக உள்ளது. நான் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவிய நாளைக் கொண்டாட நாக்பூரில் உள்ள தீக்ஷா பூமி சென்றிருந்தேன். அங்கு ஓரடி அல்லது முழங்கை அளவு நீள மார்பளவு சிலை எங்கு பார்த்தாலும் இருந்தன. அந்தச் சிலைகளும் நீல நிறத்தில் இருந்தன. அந்தச் சிலைகள் அம்பேத்கர் போல இல்லை. அவற்றை எப்படி அம்பேத்கர் என்கிறீர்கள் என்று கேட்டால் அவை நீலமாக இருப்பதால் அம்பேத்கர் என்றார்கள். கடல் தொடங்கி வானம், கடவுள், அம்பேத்கர் வரை ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீலம் என்பது ஒரு உருவகமாக (Metaphor) தொடர்ந்து வருகிறது. அதனால் என்னுடைய நாவலான நல்ல பாம்பு: நீல அணங்கின் கதை என்னும் நாவலில் நீல அணங்கு என்கின்ற உருவகத்தை (Metaphor) உருவாக்கியிருக்கிறேன். காளியும் நீலமாகத்தான் இருக்கிறாள். காளி என்பதன் பொருள் கருப்பு. ஆனால் அவளுடம்பில் நீல நிறத்தைத்தான் பயன்படுத்துகிறோம். எனவே அவளை blue goddess என்றேன்.

     கம்யூனிஸ்டுகளுக்கு சிவப்பு என்பது போல் நீலம் இங்கு தலித்துகளின் நிறமாக இருக்கிறது. அந்த நீலத்திற்குள் சிவப்பும் அடக்கமாக உள்ளது. ஆப்பிரிக்க எழுத்துக்களில் கருப்பு என்பது தொடர்ந்து வரும். அவர்களின் நாடகங்களில் முகமூடிகள், ஆடைகள் எல்லாம் கருப்பு நிறத்தில் வடிவமைத்திருப்பார்கள். அவர்களுடைய இலக்கியங்களில் கருப்பு என்பது ஒரு புரட்சியின் உருவகமாக (Revolutionary Metaphor) வந்திருப்பது போல நீலம் என்பது இந்திய அளவில் குறிப்பாக, தமிழகத்தில் புரட்சி மற்றும் எழுச்சியின் நிறமாக உள்ளது. சிவப்பு, நீலம், கருப்பு மிக முக்கியமான நிறங்கள். கிறித்துவத்திற்கு வெண்மை, இந்து மதத்திற்கு காவி, பௌத்தத்திற்கு கபிலம், இஸ்லாமுக்கு பச்சை எப்படி மதம் சார்ந்த வண்ண உருவகமாக (Coloric Metaphor) உருவாகியிருப்பது போல், கருத்தியல் Metaphor ஆக நீலம் இருக்கிறது. நீலம் எனக்குப் பிடித்த நிறமாக உள்ளது. என் உள்ளுணர்விலிருந்து என்னை அறியாமல் அந்த நிறம் வெளிப்பட்டு விடுகிறது. 

ரா. அழகுராஜ்: உங்களுடைய நாடக அனுபவங்கள் பற்றி கூற முடியுமா?

     ஆம். நான் ஐந்து நாடகங்கள் எழுதியுள்ளேன். அதில் இரண்டு நாடகங்கள் நான் முழுமையாக எழுதியவை. மீதமுள்ளவை பிரேமுடன் சேர்ந்து எழுதியவை. எங்களின் பதிப்பாகவே முதல் தொகுப்பான ஆதியிலே மாம்சம் இருந்ததுவெளிவந்தது.  பின்னாளில் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. இந்த ஐந்து நாடகங்களில் இரண்டு நாடகங்கள் நாடகத் துறை மாணவர்களுக்காக எழுதியவை. பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் எம்.ஏ இறுதியாண்டில் பயிலும் மாணவர்கள் கட்டாயம் நாடக அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், என் இரண்டு நாடகங்கள் வெவ்வேறு ஆண்டுகளில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. எஸ். ராமகிருஷ்ணன் மரண வீட்டின் குறிப்புகள்’ (Notes form the dead house) என்ற தஸ்தாவெஸ்கியின் நாவலைத் தழுவி (Adopt) நாடகம் எழுதி முருகபூபதியிடம் கொடுத்தார். ச. முருகபூபதி என்னுடைய நண்பர். அவர் அதை அரங்கேற்றம் செய்யும்பொழுது என்னையும் உதவிக்கு சேர்த்துக் கொண்டார். பல்கலைக்கழகத்தில் அவருடன் சேர்ந்து சில பகுதிகளை எழுதினேன். அந்த நாடகத்தில் என் பெயரும் (எஸ்.ராமகிருஷ்ணன், ரமேஷ்) போடப்பட்டிருக்கும்‌. ஆனால் ராமகிருஷ்ணன் தான் அந்த நாவலைத் தழுவி நாடகமாக்கியது.  சில பகுதிகள் மட்டும் நான் பின்னாளில் சேர்ந்து எழுதியவை. நான் மேடை வடிவமைப்பிலும் பணியாற்றியிருக்கிறேன். மரணவீட்டின் குறிப்புகள் எனும் நாடகத்தில் சிறைச்சாலையின் இரும்புத்தன்மையைக் காண்பிக்க, அந்த நாட்களில் பல்கலைக்கழகத்தில் சாலைகள் போடப் பயன்பட்ட காலி தார் டின்னுகளை மேடையில் ஏற்றி வடிவமைப்பு செய்தது, மிகவும் பிரமாதமாகப் பேசப்பட்டது. எம். டி. முத்துக்குமாரசுவாமி மிகவும் சிலாகித்துப் பேசினார். அவரும் ஒரு நாடக எழுத்தாளர் மற்றும் இயக்குநர். அந்த நாடகம் நல்ல அனுபவத்தைத் தந்தது.

      நான் இரண்டு நாடகங்களை மொழிபெயர்த்திருக்கிறேன். ழான் ழெனே வின் Dead watch நாடகத்தைப் பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் கடுங்காவல் என்று மொழிபெயர்த்தேன். அதை நாடக வெளியில் வெளி ரங்கராஜன் வெளியிட்டார். ஜார்ஜ் பெரக்என்கிற போஸ்ட் மார்டன் நாவலாசிரியருடைய இரண்டு நாடகங்களில் ஒன்றான ஒக்மான்தாசியோன்நாடகத்தைப் பெருக்கம்என்ற தலைப்பில் மொழிபெயர்த்தேன். (சம்பள உயர்வு என்ற பெயரில் அதை சொல்லலாம்). அது ஒரு சவாலான மொழிபெயர்ப்பு. நான் மொழிபெயர்த்த இரண்டு நாடகங்களையும் சேர்த்து இரண்டு பிரெஞ்சு நாடகங்கள்என்ற தலைப்பில் சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. அதற்கு முன்பாகவே நாடகவெளி இதழில் அவை வெளிவந்தன. அதில் ஒரு நாடகமான கடுங்காவல்நாடகத்தைப்  பாண்டிச்சேரி அல்லயன்ஸ் பிரான்சிஸ்சில் இரண்டு காட்சிகளாக முதல் நாள், இரண்டாம் நாள் என்று மேடையேற்றினோம். அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.


   கேரளாவில் இருந்து முதுகலைப் படிப்பிற்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையில் பயின்ற மாணவர்களைக் கொண்டு மலையாள உச்சரிப்பிலேயே தமிழ் நாடகத்தை நிகழ்த்தியிருக்கிறோம். பிரேம் அந்நாடகத்தில் நடித்ததோடு இயக்கியும் இருப்பார். சில புகைப்படங்கள் இன்றும் என்னிடம் இருக்கின்றன. அந்த நாடகத்தைச் சென்னையில் அரங்கேற்ற அனுமதி பெற்றோம். ஆனால் தமிழ்நாட்டில் அல்லயன்ஸ் பிரான்சிஸை மையமிட்டு இயங்கிய மற்றொரு கலைக்குழு எங்களைத் தவிர்த்து விட்டது. அத்துடன் நாடகம் அரங்கேற்றும் போக்கினைக் கைவிட்டு விட்டேன். பாண்டிச்சேரியில் பீம் சேனா தலித்திய இயக்கம் இருந்தது. அந்த அமைப்போடு இயங்கிய நேரத்தில் நானும் பிரேமும் இணைந்து மண்ணிலிருந்து’ (‘History of Dalits’) என்ற நாடகத்தை எழுதினோம். அந்த நாடகம் கம்பன் கலையரங்கத்தில் மேடையேற்றப்பட்டது. அந்நாடகத்திற்கு பிரேம் தான் இயக்குனர்; இருந்தும், அதில் நான் முழுமையாக ஒரு இயக்குனராகப் பணியாற்றினேன். அதில் ஒரு முழு அனுபவம் எனக்கு கிடைத்தது. அந்த நாடகத்திற்கு மேடை வடிவமைப்பு ராஜ்குமார், இசை கே. ஏ குணசேகரன், ஒளி அமைப்பு வ.ஆறுமுகம், கதை, வடிவமைப்பு ரமேஷ் - பிரேம், இயக்குனர் பிரேம், இணை இயக்குனர் ரமேஷ் பிரேதன். இந்த நாடகம் அரங்கம் நிறைந்த நாடகமாக ஆயிரம் பேருக்கு மேல் பார்வையாளர்களைக் கொண்டு நிகழ்ந்தது. 

     எனக்கு நாடகம் ஒரு பிடித்தமான கலை வடிவம். அதன் உடலோடு உறவாடுகின்ற தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு கதை எப்படி உடலிலிருந்து பரிணமிக்கிறது அல்லது உடலிலேயே எப்படி கதையாக மாறுகிறது என்ற அபூர்வமான தன்மை உடல் அளவிலும் என் மன அளவிலும் கற்பனை வளத்தை ஊட்டியது. ஒரு நாடகத்தை மேடையேற்ற ஐம்பதாயிரம் ரூபாய் செலவு செய்து இருபத்தைந்து நபர்கள் கூட வராத போது மனம் நொந்து போகிறது. நாங்கள் death watch நாடகத்திற்காக ஐம்பதாயிரம் ரூபாய் செலவு செய்தோம். முதல் நாள் இருபத்தைந்து நபர்கள் இரண்டாம் நாள் இருபத்தைந்து நபர்கள் என்று ஐம்பது நபர்கள் மட்டுமே வருகை புரிந்தனர். அதிலும் சிலர் இடையில் எழுந்து செல்வது அவமானமாகவும் உழைப்பை கொச்சைப்படுத்துவதாகவும் இருந்தது. பிறகு நான் நாடகங்கள் எழுதுவதைத் தவிர்த்து நாவலாக எழுதத் தொடங்கினேன். என்னுடைய நாவல்களைக் கவனித்தால் அதில் சிறுகதை, கவிதை மற்றும் நாடகக் கூறுகளும் அதனுள் இருக்கின்றன. நீங்கள் என்னுடைய சொல் என்றொரு சொல்நாவலை  எடுத்துக்கொண்டால் அதில் நிறைய நாடகப் பிரதிகளை வைத்திருப்பேன்.


      என்னுடைய கவிதைகளையும் நாடகமாக அரங்கேற்றலாம். காந்தியைக் கொன்றது தவறுதான்பத்து கவிதைகள் அடங்கிய தொகுப்பு. அதில் பத்தாவது கவிதை ஒன்றில் ஒருத்தி உறங்கிக் கொண்டிருப்பாள். அவள் கனவில் காந்தி துப்பாக்கியோடு வந்து, நீட்டி என்னைச் சுடு என்பது போல் வார்த்தைகள் இன்றி இரைந்து கொண்டிருப்பார். நீண்ட நேரம் தொடரும் அந்த மன்றாடல். இறுதியாய் காந்தியின் நெற்றிப் பொட்டில் வைத்து வெடிக்கும் சத்தம் கேட்கும், அவள் கண் விழிப்பால் நெற்றியில் இட்ட திலகம் ரத்தம் போல வியர்வையில் கலந்து மூக்கின் நுனியில்  ஒழுகும். இந்த கவிதையைச் சென்னையில் இருக்கும் நண்பர் நாடகமாக்கி மேடையேற்றி இருக்கிறேன் என்றார். இப்போதெல்லாம் என் கவிதைகளில் நிறைய கதைகளையும் அதனுள் வைக்கிறேன். இறுதியாக வெளிவந்த காமத்துப்பா லரசியலறிக்கைமூன்றாவது பகுதி ஆபெண் கூற்று. அதில் வரக்கூடிய 100 குறுங்கதைகளைக் கவிதைகள் என்று தான் சொல்வேன். சில வசனக்கவிதைகளும் இருக்கின்றன. நாடகத் தன்மைகளும் அந்தக் கதைகளுக்குள் இருக்கின்றன. நாடகத்தில் என் கவனத்தைச் செலுத்திக் கொண்டுதான் வருகிறேன். ஆனால் நாடகத்தை அரங்கேற்றுவதற்கான உடல்நிலை, மனநிலை இல்லை. நாடகத்தில் நடிப்பவர்கள் மற்றும் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை விட, இன்று பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால், நான் கதைகளாகவே நாடகங்களை எழுதி வருகிறேன்.

ரா. அழகுராஜ்: ஆதியிலே மாம்சம் இருந்தது என்று எழுதியுள்ளீர்கள்; ஆனால் விவிலியத்தில் ஆதியிலே வார்த்தை இருந்தது என்று தான் வரும் இதைப் பற்றி சொல்ல முடியுமா?

  ஆம். விவிலியத்தில் ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை மாம்சத்தால் ஆனது. மாம்சத்தில் அந்த மாம்சம் தேவனோடு இருந்தது என்று வரும். நான் இரண்டாவது வரக்கூடிய மாம்சத்தை முதலில் போட்டிருக்கிறேன். மாம்சத்தில் இருந்து தான் வார்த்தை வரும் மொழி இரண்டாவதாகவே  உருவானது.  உடல் தான் முதலில் உருவானது. மாடு உருவான பிறகுதான் மா என்ற சத்தம் இருக்கும். அதே போல மாந்த இனம் உருவான பின்பே மொழி உருவாகியிருக்கும். ஆகையால் மாம்சம் முதலில் வந்திருக்கும், அதிலிருந்து மொழி உருவாகியிருக்கும். வார்த்தை என்பது மொழியின் ஓர் அலகு. அதனாலேயே மாம்சத்தை முதலில் வைத்தேன். அப்போதுதான் அது தருக்க வரிசையாக (logical sequence) இருக்க முடியும். அந்த மாம்சத்தில் இருந்து வார்த்தைகள் அரும்பின.

ரா. அழகுராஜ்: உங்களின் எழுத்துக்களில் அவள், அவன், ஆண், பெண், ஆபெண் இந்த மாதிரியான சொற்கள் முன்னிலை பெறுகிறது. இதற்கான ஆரம்பப் புள்ளி எங்கிருந்து தொடங்கியது?

     நான் எழுதும் போதிலிருந்தே உருவாகிவிட்டது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அப்போது முழு ஆண்டு தேர்வு முடிந்த பின்பு மதியப் பொழுது, நீங்கள் பாரதிதாசனின் கல்லறையைப் பார்த்திருப்பீர்கள். அதுவோர் இடுகாடு. வெறும் வெட்ட வெளி. பெரிய கடற்கரைப் பாலை நிலம். அந்த இடத்திற்கு சுடு மணலில் செருப்பின்றி ஓடிச் சென்று கல்லறை மேல் அமர்ந்து எழுதுவேன். அப்போது ரொமான்டிக் சார்ந்து ஒரு கவிதை எழுதினேன்‌.   அந்தக் கவிதையில் இருந்து நான் இவ்வாறு எழுதி வருகிறேன்.

      கவிதையில் வரக்கூடிய ஆணும், பெண்ணும் பூடகமான இருப்பு. அவை Concrete (நிலையானது) இல்லை. அப்படி இல்லாதபோது Concrete (நிலையான) பால் இருக்க முடியாது. எல்லாம் பாலற்ற உடம்புகள் அல்லது பால் குழம்பிய உடம்புகள். இல்லையென்றால் என் எதிரில் இருப்பவர்கள் தான் என் பாலின அடையாளத்தை முடிவு செய்கிறார்கள். எதிரிலிருப்பவர் ஆணாக இருந்தால் நான் பெண்ணாக உணர்கிறேன். எதிரிகளே என் ஆயுதத்தை முடிவு செய்கிறார்கள்என்று போராளிகள் மத்தியில் பொன்மொழி இருக்கிறது. அதுபோல என் எதிரிலிருப்பவர்கள் தான் என் பாலினத்தை முடிவு செய்கிறார்கள். நான் ஆணா? பெண்ணா? என்பது பிரச்சனை இல்லை. என் எதிரில் இருப்பவர் பிரச்சினை. என் எழுத்துக்களில் தொடர்ச்சியாக, ஊடாடி வரக்கூடிய கேள்வி பதில் அல்லது ஊடாடிக்கொண்டே வரக்கூடிய சொல்லாடலாக (discourse) தான் இந்த ஆணோ, பெண்ணோ, ஆபெண்ணோ இருக்கிறது. ஆணும் பெண்ணும் சிறிய கோடுகள் தான். அந்தக் கோடு அழிந்தால் ஆபெண்ணாக மாறி விடுகிறார்கள். நான் தொடர்ந்து அந்த உருவகத்தை என் கவிதைகளில் வளர்த்தெடுத்து வருகிறேன். எல்லாத் தளங்களிலும் கவிதைகள், கதைகள்,, நாவல்கள் என்ற வகைமையில் பயன்படுத்தி வருகிறேன்.

     என்னுடைய சிறு வயதிலிருந்தே நிறைய கேள்விகள் இருந்தன. என் அப்பா ஒரு தையல் கலைஞர்.  ரங்கப்பிள்ளை வீதியில்   எங்கள் கடை இருந்தது. நான் மூன்றாவது நான்காவது படிக்கும்போது   பூக்காரத் தெருவில் இருந்தோம். ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் கடைக்குச் சென்று விடுவேன். அப்போது கூத்தாண்டவர் திருவிழா  கூவாகத்தில் நடைபெறும். இந்தப் பகுதியில் பூக்கட்டி விற்பவர்கள் நிறைய இருப்பார்கள். இப்போது குறைந்து விட்டனர். இந்தப் பகுதியே ஒரு காலத்தில் பூந்தோட்டமாக இருந்தது. இந்தப் பகுதியில் உள்ள ஆண்கள் பூ வைத்துக்கொண்டு மஞ்சள் குளித்து, புடவை கட்டி, தாலி, வளையல் எல்லாம் போட்டுக்கொண்டு கூத்தாண்டவர் கோவிலுக்கு
போவார்கள். தெருவிற்குத் தெரு, கடைக்குக்  கடை சென்று பிச்சை எடுப்பார்கள். அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கும் சிறிய கவுன், வளையல், லிப்ஸ்டிக் அணிவித்துப் பொட்டு வைத்து, பெண் வேடமிட்டு   எங்கள் கடைக்கு வருவார்கள். அவர்களையெல்லாம் பார்ப்பதற்கு வினோதமாக இருக்கும். நேற்று ஆணாகப் பார்த்த ஒருவர் இன்று பெண்ணாக இருக்கிறார். நாளை மீண்டும் ஆணாகி விடுவார். அந்த தாலியறுக்கும் சடங்குக்கு சொல்பவர்கள் அன்றாட வாழ்வில்  ஆணாக இருக்கும் ஒரு நபர். சிறுவயதிலேயே இந்தக் காட்சி என் மனதில் பதிந்துவிட்டது.

   என்னுடைய நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகளில் திருநங்கைகள் தொடர்ந்து வருகிறார்கள். அதற்கான காரணத்தை எனக்குள்ளாகவே ஆராய்ந்து பார்க்க மூல ஊற்றாக இருப்பது நான் பாண்டிச்சேரியில் பார்த்த திருநங்கை வேட்டமிட்டவர்கள், இன்னொரு காரணம் நான் சந்தித்த உண்மையான திருநங்கைகள். சமீபத்தில் சில திருநம்பிகளையும் சந்தித்திருக்கிறேன். ஈகோ இல்லாதவன் என்பதால் திருநங்கைகளால் என்னோடு இயல்பாகப் பழக முடிகிறது. நான் எழுத்தாளன், கவிஞன் என்பதனால் தான் அவர்களால் என்னிடம் வெளிப்படையாக பேச முடிகிறது. தன்னைக் காயப்படுத்தி விடமாட்டான் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் வருகின்றது.  சகஜமாக பழகுகிறார்கள். திருநங்கைகள் என் சகோதரிகளாகவும் திருநம்பிகள் என் சகோதரர்களாகவும் அதையும் தாண்டிய உறவு வந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே தொடர்ந்து என் நாவல்களில் அவர்கள் வருகிறார்கள். என்னுடைய அவன் பெயர் சொல்என்ற நாவலில் நிறைய திருநங்கை கதாபாத்திரங்கள் வருகின்றன.

     தமிழ்நாட்டிற்கு எப்படி கூவாகம் இருக்கின்றதோஅதே போல் பாண்டிச்சேரிக்கு பிள்ளையார் குப்பம் உள்ளது. இது உசுட்டேரிக்கு அடுத்து காட்டேரிக்குப்பத்தை ஒட்டியும் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிக்கு நெருக்கமாகவும் இந்தப் பிள்ளையார் குப்பம் உள்ளது. அங்கும் ஒரு கூத்தாண்டவர் கோயில் உள்ளது. அங்கேயும் சடங்குகள் நடக்கும் அங்கு நடக்கும் அழகிப் போட்டிக்கு மூன்று நடுவர்களில் ஒருவராக சென்றிருந்தேன். அப்போது பெங்களூரில் இருந்து ஒரு திருநங்கை வந்தார். ஒரு பிள்ளையைப் போட்டு தாண்டினால்” கூட ஆண் பெண்ணாக மாறினாள் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி ஒரு பேரழகி. பணக்கார பேரழகி. அடுத்து பாண்டிச்சேரியைச் சார்ந்த கருப்பு அழகி. கிளியோபாட்ரா போன்றவள். அந்தப் போட்டியில் பெங்களூரு திருநங்கைக்கு முதல் பரிசு பாண்டிச்சேரி அழகிற்கு இரண்டாம் பரிசு என நானும் என்னோடு இருந்த ஓவியர் சிற்பி ஜெயராமனும் வழங்கினோம். அந்த நேரங்களில் மேடையில் பின்பகுதியில் நிறைய திருநங்கைகள் தயாராகிக் கொண்டிருந்தன. அப்போது அங்கே வயதான கிழ திருநங்கைகளுக்கு உள்ளாடை அணிய உதவி செய்திருந்தேன். சப்பையாக மிகவும் தளர்ந்த மார்பாக இருந்ததால்அதற்காக டீ கப்புகளை அவர்களின் மார்புகளில் பொருத்தி உதவினேன். அந்த திருநங்கை என்னை என் மவனே தங்கம்” என்று கண்ணாறு கழித்தார்கள். மறக்கமுடியாத நிகழ்வு. அதேபோன்று இங்கு திருநங்கைகளுக்கான அமைப்பு இருந்தது. அதனோடு சிறிது காலம் பயணித்து இருக்கிறேன். நண்பர்களும் எனக்கு உண்டு.

       என்னுடைய எழுத்துக்களில் திருநங்கைகள் இரண்டற கலந்துவிட்டார்கள், தொடர்ந்து வருகிறார்கள்.மேலும் அவர்களை உருவகமாகப் பயன்படுத்த நிறைய இருக்கிறது. ஒரு ஆண் உடல் போலவோ பெண் உடல் போலவோ மொக்கையான ஒரு படித்தான தன்மையானதாகவோ அல்லது தட்டையானதாகவோ இல்லை. அதில் விளையாட நிறைய உள்ளது. தன்னுடைய உடலிலே இரு பாகங்களாக வைத்துக் கொள்கிற மாதிரி அது. என்னை இரு கூறாக பிரித்து சதுரங்க ஆட்டம் (Chess)

எதிரெதிர் திசையில் அமர்ந்து விளையாட ஒரு முடிவிலி ஆட்டம் உருவாவதுபோல் உருவாகிக்கொண்டே இருக்கிறது. இந்த உடல் என்பது ஒருமை இல்லை பன்மை. அப்படியாகவே இந்த ஆபெண் உடல் இருக்கிறது. தோண்டத் தோண்ட புதுப்புது தரவுகளைத் தரும் ஊற்றாக உள்ளது. இதைப் பற்றி நிறைய எழுத வேண்டும் போல் உள்ளது. ஆனாலும் ரமேஷ் இதையே எழுதிக் கொண்டிருக்கிறார். இதைத் தாண்டி எழுத மாட்டாரா? என்ற கேள்வி வந்து விடக்கூடாது என்பதற்காக தள்ளி வைக்கிறேன். பின்னால் வருபவர்கள் இதைப் பற்றி ஆபெண் பற்றி நிறைய எழுத வேண்டும். எழுதவும் இருக்கிறது.

ரா. அழகுராஜ்: பாம்பு உங்கள் கதைகளில் அடிக்கடி ஒரு தொன்மாக வருகிறது. அதற்கான காரணம் என்ன? நீங்கள் கடைசியாகப் பாம்பை எப்போது பார்த்தீர்கள்?


      நான் சந்தித்த பாம்புகள் ஊர்வனமாகவும் இருக்கின்றன, நடப்பனவாகவும் இருக்கின்றன. கடைசியாக எப்போது பாம்பு பார்த்தீர்கள் என்று கேட்டால், அதற்கு பதிலே கிடையாது. என்னுடைய உலகையே தொலைக்காட்சி வழியாக தான் பார்க்கிறேன். பாண்டிச்சேரி கடலை, நட்சத்திரத்தை, நிலாவைப் பார்த்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிறது. மண்ணை மிதித்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிறது. மனிதர்களையும். உலகத்தையும் தொலைக்காட்சி வழியாகத் தான் பார்க்கிறேன். அது ஒரு ஜன்னல். சென்ற வாரம் ஒரு பிரெஞ்சு சிம்பொனியைத் தொலைக்காட்சி வழியே தான் பார்த்தேன். அதே போல் பாம்புகளையும் நேஷனல் ஜியோகிராபி சேனல் வழியாக தான் பார்க்கிறேன்.

ரா. அழகுராஜ்:நீங்கள் நிறைய பாம்புகளை அடிக்கவும் செய்திருக்கிறீர்கள். அதே சமயம் பாம்புகளை விரும்பி எழுத்துகளில் கொண்டு வருகிறீர்கள் இதைக் குறித்து சொல்லுங்கள்.

   ஆம். நிறைய பாம்புகளை அடித்திருக்கிறேன். அவை என் எழுத்துக்களிலும் வந்திருக்கின்றன. தமிழ் தொல்மனம் பாம்பால் ஆனது. அது தமிழர்களின் குலக்குறியாக(Totum) உள்ளது. அடிப்படையில் நாம் நாகர் இனம்.  நாகத்தால் உருவானவர்கள். நாகம் இல்லாமல் எந்த மனிதனும் குறிப்பாகத் தமிழன் இருக்க முடியாது. நாகூர், நாகர்கோவில், நாகபுரம், நாகமலை, நாகமங்கலம், நாகப்பட்டினம், என்னும் ஊர்ப் பெயர்களும், நாகப்பன், நாகாத்தம்மன், நாகராஜன் நாகேஸ்வரி, நாகேஷ், நாகநாதன், நாகப்பழம் என்ற பெயர்களும் வந்திருப்பதைப் பார்க்க முடியும். இந்தப் பகுதியே நாகலாந்து அதாவது நாகர்களின் நிலம் (land of nagas) . இன்று அந்த பெயர் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தின் பெயராக உள்ளது. இந்தியாவினுடைய பழைய பெயர் ஜம்புத் தீவு; ஆனால், என்னைப் பொறுத்தவரை நாகத்தீவு. நாகத்தைக் கழுத்தில் அணிந்ததாகவும் நாகத்தை ஏறி மிதிப்பதாகவும் அதை அழிப்பதற்காகவே ஆரியக் கடவுள்கள் உருவாக்கப்பட்டன.  பாம்புகள் பற்றிய தொல் நினைவுகளை மீட்டெடுப்பது புரட்சிகரமான வேலை. மேலும் அது நம்மை நாமே நினைவு கூறுவது.



     மாரியம்மன் என்பது பாம்புகளின் வடிவமே. புற்று இல்லாத ஒரு மாரியம்மனையாவது பார்க்க முடிகிறதா? இந்தியாவிலேயே எந்தத் தொல்குடி மரபைக் காட்டிலும் தமிழ் தொல்குடி பாம்பை முன்னிலைப்படுத்துகிறது

, வணங்குகிறது. நம்மைவிட சக்தி வாய்ந்தது, அது ஒரு அம்மன். பெண் தெய்வம். ஆண் பாம்பாக இருந்தாலும் அது பெண்தான். பாம்புகளில் எல்லாமே பெண்தான். இதனாலேயே பாம்பு என்னும் குறியீடு தொடர்ந்து வருகிறது. குறியீடு என்று சொல்வதுடன் உருவகம் எனலாம். பாம்பைப் பயின்று வருகிறேன் I Am Studying Snakes. அது குறித்து நிறைய எழுத வேண்டும்.  பாம்பை வைத்து முழு நாவலை எழுத விரும்புகிறேன். நல்ல பாம்பு : நீல அணங்கின் கதையே என் உடல் உபாதை காரணமாக விரிவாக எழுத முடியாத ஒன்றுதான். கவிதை நடையில் ஒரு 125 பக்கத்தில் அதை எழுத வேண்டியதாயிற்று. அதை விரித்து எழுதினால் 600 பக்கத்திற்கு மேல் எழுத வேண்டிய பெரிய நாவல். நாவல் முற்றுப்பெற்று இருந்தாலும், அதை விரித்து எழுத முடியவில்லை. நான் நீண்ட நாள் வாழ்ந்தால் நீல அணங்கின் கதை இரண்டாம் பாகம் எழுதுவேன்.

ரா. அழகுராஜ்: கடவுள் குறித்து உங்கள் பார்வை? முருகன் படத்தை மாட்டியுள்ளீர்கள்? ஒரு எழுத்தாளன் இறந்ததற்குப் பின்பு அவனுடைய எழுத்தை வேறு வேறு தன்மையாக மாற்றக் கூடிய சூழல் உள்ளதோ?


 
    ஏற்கனவே சொன்னது தான் நான் ஒருமை கிடையாது. பன்மை. நான் ஒருமையாக இருந்தால் தி.க வில் இருக்க வேண்டும் இல்லை
, கம்யூனிஸ்டாக இருக்க வேண்டும் இல்லை, ஒரு அம்பேத்கரிஸ்டாக இருக்க வேண்டும் இல்லை, ஒரு சங்கியாக இருக்க வேண்டும். அப்படியும் இருக்கவில்லை. நான் ஒரு பண்பை நான் ஒரு சந்திப்பு முனையம்(Junction) எல்லா இரயிலும்  பேருந்தும் வரும். நான் பல நபர்களின் கூட்டுத் தொகுப்பு. எனக்குள் முருகனும் இருக்கிறான் பெரியாரும் இருப்பார், அம்பேத்கரும் இருப்பார், கோட்சேயும் இருப்பார், காந்தியும் இருப்பார், நானும் இருப்பேன், என் எதிரி இருப்பா், நான் கொலை செய்ய விரும்புபவனும் இருப்பான், என்னை ஈன்றவளும் இருப்பாள்; கொல்லத் துடிப்பவளும் இருப்பாள்.  உடலுக்குள் மனம் பன்மையானது. என்னுடைய பாலினம் ஒருமைதான். ஆனால் மனதிற்குள் ஆணும் இருக்கிறான், பெண்ணும் இருக்கிறாள், ஆபெண்ணும் இருக்கிறது. எல்லாம் சேர்த்த தொகுப்பாக நான் இருக்கும் போது தொகுப்பறிவாக செயல்படுகிறேன். எனக்குள்ளே ஒரு கொலைகாரனும் இருக்கிறான், ஒரு உயிரை உருவாக்குபவனும் இருக்கிறான். நான் ஒற்றை அல்ல. ஒரு மனிதனுக்குள் என்ன என்ன கோணங்கள் இருக்கிறதோ அது எனக்குள்ளும் இருக்கிறது. நான் கூட்டு மனம் கூட்டுத் தன்னிலை. எனக்குள் எல்லாமே

இருக்கும். இந்த சமூகத்தின் நல்லவைகளும் தேவையானவைகளும் என்னுள் இருக்கின்றன. அதே வேளையில் தீயவைகளும் தேவையல்லாதவைகளும் என்னுள் இருக்கின்றன. கழிவுநீரும் இருக்கிறது, காவிரியும் இருக்கிறது. நான் சமூகத்தின் ஒரு கூட்டுச் சோறு. பலமும் இருக்கும், பலவீனமும் இருக்கும் கலாச்சாரமும் இருக்கும் கலாச்சார எதிர்த்தன்மைகளும் (Anti culture Elements) இருக்கும். அதை தவிர்க்க விரும்பவில்லை. நான் நிகழ்த்துக்காரனாக (performative) இருக்க விரும்புகிறேன். நாடகத்தில் ஒரு உடல் தன்னை எப்படி வெளிக்காட்டுகின்றதோ அதுபோல என்னை வைக்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாடகத்திற்கு தகுந்த மாதிரி உடல் மொழியை மாற்றுவது போல ஒவ்வொரு நாளும் நான் என்னை வேறுபடுத்தி வாழ்ந்து பார்க்கிறேன்.

    நான் ஒரு ரமேஷ் மட்டும் இல்லை, ஒரு காலத்தில் நான் பிரேமாக வாழ்ந்திருப்பேன், என் மனைவி மாலதியாக வாழ்ந்திருப்பேன், இன்னொரு காலத்தில் என் மகள் தாபிதாவாக வாழ்ந்திருப்பேன். எல்லாரும் எனக்குள் அடக்கம். என்றைக்காவது நான் எனக்காக வாழ்ந்திருக்கிறேனா என்று பார்த்தால் நான் எல்லோரும் வந்துபோன இருப்பாக இருந்திருப்பேன். பிட்டுத் துணிகளால் ஒட்டுப்போட்டுதைத்த சட்டை போல துண்டு உடல்களால் ஆனவன். முருகன் இருப்பார். பாம்பு இருக்கும். இதை ஒரு தத்துவச் சருக்கு அல்லது தத்துவச் செருக்கு என்று நினைத்துக் கொள்ளவில்லை. யாராவது ரமேஷ் தன்னுடைய கொள்கையிலிருந்து வழுக்கி விட்டார் அல்லது விலகிவிட்டார் என்று சொன்னால் அது நகைச்சுவையானது. காரணம் அது என்னுடைய கொள்கை அல்ல. நீங்கள் கம்யூனிஸ்டா? என்றால் ஆமாம் கம்யூனிஸ்ட் ஆன்ட்டி கம்யூனிஸ்டா? என்றால் ஆமாம் ஆண்டி கம்யூனிஸ்ட் எனக்குள்ளே ஒரு முதலாளித்துவவாதியும் இருக்கிறான். என்னிடம் கோடி ரூபாய் கொடுத்தால் பொதுவில் கொண்டு போய் கொடுக்கமாட்டேன். நான் வைத்துக் கொள்வேன். எத்தனை கம்யூனிஸ்டுகள் கோடீஸ்வரராக இருக்கிறார்களென எனக்குத் தெரியும். ஒரு அடையாளத்திற்குள் யாரும் அடங்குவதில்லை உலகத்தில் என்னென்ன இருக்கிறதோ அது எனக்குள்ளும் இருக்கிறது. என்னை ஒரு புனிதமான ஒற்றை நபராகப் (purified individual) பார்த்தால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள். நான் அப்படி கிடையாது. நான் ஒரு பலப்பட்டடை. எனக்கு பத்து அம்மா, பதினைந்து அப்பா. எனக்கு ஆண்குறியும் இருக்கிறது, பெண்குறியும் இருக்கிறது. ஆபெண்ணா என்றால் அதையும் தாண்டினது. நான் என்னைப் பாலற்ற உடல் (Sex Less Body) என்று சொல்லிக் கொள்வேன். அர்த்தநாரியும் நானே அனர்த்தநாரியும் நானே.

ரா. அழகுராஜ்: இளையராஜா தத்துவமும் அழகியலும் என்ற நூலினை எழுதியுள்ளீர்கள். தற்போது இளையராஜா காப்புரிமை தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது‌. நீங்கள் அந்தப் புத்தகத்தில் அவருக்கு இசை தொழில் அல்ல வாழ்க்கை என்று கூறியுள்ளீர்கள். இன்றும் அதே கருத்தில் நிற்கிறீர்களா?


    வாழ்க்கை தான். தொழில் என்றால் வைகை அணையிலேயே அவர் தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்திருக்கலாம் அல்லது படித்து வேறு தொழிலுக்குப் போயிருக்கலாம். ஆனால் இல்லையே. எனக்கு தொழில் எழுதுவது. என்னுடைய வாழ்க்கையும் அதுதான். என் இருப்புக்கான அடையாளமே எழுத்து தான். இன்றும் பத்து நபர்கள் எனக்கு அன்பளிப்பாக பணம் தருகிறார்களென்றால் என் எழுத்தினால் தான். நான் எழுத்தாளனாக இல்லாவிட்டால் தர மாட்டார்கள். இளையராஜாவும்  இசையை உண்ண முடியாது. அதேபோல் கவிதைப் புத்தகங்களையும் காகிதங்களையும் நானும் உண்ணமுடியாது. உதாரணத்திற்குச் சொல்வதென்றால், ஒரு புத்தகம் எழுதினால், பத்து சதவீதம் இராயல்டி வரும் அதில் வாழ முடியும். கேரளாவில் அப்படி வாழலாம். தமிழ்நாட்டில் சாத்தியம் இல்லை. அதே போல் இளையராஜாவுக்கு அவரின் அடிப்படை இசை. அதில் விலகி வேறு தொழிலுக்குப் போகவில்லை. அவருக்குப் பணம் கிடைத்தால் சிம்பொனி அரங்கேற்றம் செய்வார். ஒரு சிம்பொனியை அரங்கேற்றம் செய்ய ஐந்து கோடி ரூபாய் செலவாகிறது. அந்தச் செலவுகளை கவனிக்கப் பணம் ஈட்ட வேண்டும் தானே. என்னுடைய புத்தகத்தை விற்பதினால் பணம் சம்பாதிக்கிறேன். அதேபோல் தான் அவரும்.

ரா: அழகுராஜ் : நல்ல பாம்பு: நீல அணங்கின் கதை அதில் உள்ள அத்தியாயங்கள் எல்லாம் Non linear ஆக உள்ளது அது பற்றி.

    எல்லாமே நேரியலற்றது (Non linear).  நீங்கள் காலையில் எழுந்ததிலிருந்து என்னைச் சந்தித்தது வரையிலான எல்லாவற்றையும் யோசித்துப் பாருங்கள் Non linear ஆக தான் இருக்கும். உங்களுடைய கேள்விகளும் Non linear ஆக உள்ளது. நம் உரையாடலும் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குத் தாவிக் கொண்டுதான் போகிறது. மொழி, வாழ்க்கை, சிந்தனை எல்லாம் Non linear. நேரியலாக(linear) எதையும் செய்ய முடியாது. Linear ஆக எழுதப்பட்ட எல்லா நாவல்களையும் எடுத்துப் பாருங்கள் Non linear தன்மை இருக்கும். உங்களின் குடும்பமே ஒரு Non linear தான். உங்களையும் உங்கள் அப்பாவையும் பொருத்த முடியுமா? உங்களையும் அம்மாவையும் பொருத்த முடியுமா? ஆனால் குடும்பம் என்ற கட்டமைப்பு எல்லாவற்றையும் பொருத்துகிறது. இந்த Non linear ஆக உருவான குடும்பம், பின்னாளில் தனித்தனியாகப் பிரிந்து மற்றொரு Non linear குடும்பத்தை உருவாக்குகிறது. செல் பகுப்பு (Cell division) போல குடும்பமும் Non linear அங்கம். Linear என்று எதுவுமே கிடையாது.

ரா. அழகுராஜ் : ரமேஷ் என்கின்ற உடலுக்கு இந்தப் பாண்டிச்சேரி என்கின்ற நிலம் எந்த மாதிரியான சிந்தனைகள் அல்லது பு‌துப்புது யோசனைகளைத் தருவதற்கு உதவியுள்ளது?

    பாண்டிச்சேரி. இது ஒரு பாழான இடம். பாண்டிச்சேரியில் எனக்கு நண்பர்களே இல்லை. நான் ஒரு அனாதையாக இருக்கிறேன். பிறந்ததிலிருந்து அவ்வாறு உணர்கிறேன். உடல்நிலை நன்றாக இருக்கும்போது  பத்து, பதினைந்து தெருக்களைச் சுற்றி வந்தேன்; இப்போது என்னுடைய புழங்குவெளி கட்டில் மட்டுமே.  இவ்வாறு இருக்கையில் நான் என்னை எந்தவொரு ஒரு நிலத்தைச் சார்ந்தவனாகவும் அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. நான் என் உடலோடு வாழ்கிறேன் ( I Am Living With My Body).

ரா. அழகுராஜ்: கடல் என்பது பற்றி உங்களுடைய பார்வை கடலில் தனியாகப் பயணம் செய்து உள்ளீர்களா?

   கடலைப் பற்றி நிறைய எழுதி உள்ளேன். உங்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையைப் போல எனக்கு இந்த கடல். கடல் என்ற ஒன்று இல்லையென்றால் என்றோ நான் தற்கொலை செய்திருப்பேன். இல்லை, யாரையாவது கொலை செய்திருப்பேன். கடலில் பயணம் செய்திருக்கிறேன். தனியாகப் பயணம் செய்ததில்லை. ஆனால், கடலில் தனியாக நின்றிருக்கிறேன். இரவில் தனியாக சென்றிருக்கிறேன். போலீஸ்காரர்கள் வந்து விரட்டும் அளவிற்கு உட்கார்ந்திருக்கிறேன். கடலில் தொலைந்து போயிருக்கிறேன். கடல் எனக்குப் பிடித்தமான ஒன்று. கடல் இல்லாவிட்டால் இங்கு ஒன்றுமே இல்லை. இயற்கையைத் தவிர மனிதனுக்கு என்ன இருக்கிறது. மலை என்று இருக்கிற ஊரில் மலையைத் தாண்டி என்ன இருக்கிறது. பாண்டிச்சேரி என்ற சின்னப்  பகுதிக்குள்ளே (Teritory) அடைபட்ட கடலைத் தாண்டி எதுவும் இல்லை. அந்தக் கடல் தான் என்னை உயிரோடு வைத்திருக்கிறது. அந்தப் பெருவெளி தான் என்னை நான் அடையாளப்படுத்தி உறவாட வழி செய்கிறது. அதுதான் ஆதி சக்தியாக என் முன் வந்து நிற்கிறது. இந்தக் கடலுக்கும் எனக்கும் ஓயாத உரையாடல் நடந்துக்கொண்டே இருக்கிறது. என்னை பெரிய ஆளாக நிலை நிறுத்துகிறது. கடலுக்கு முன்னே என்னை சிறிய ஆளாக நான் ஒருபோதும் கருதியது கிடையாது. கடலுக்கு முன் நான் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறேன். கடலை விட நான் அடர்த்தியானவன், ஆழமானவன், அகன்று விரிந்து நிற்பவன் என்று  நினைக்கிறேன். என்னுடைய சிந்தனைக்குள் கடல் அடங்கிவிடுகிறது என்ற இறுமாப்பில் இருக்கிறேன். அந்த இறுமாப்போடு கடலுக்குள் இறங்க அது என்னை வாரிச் சுருட்டிக் கொண்டு போய்விடுகிறது. கடலோடு ஓயாமல் நான் விளையாடிக்கொண்டே இருக்கிறேன். சதுரங்கம்(Chess) விளையாடுகிறேன். அலைகள் ஒவ்வொரு காய்களாக எடுத்து முன் வைக்கிறது. நான் கரையில் நின்று எதிர்காய்களை நகர்த்துகிறேன். கடல் எனக்குப் பிடித்தமான ஒன்று.

   எங்களுடைய குடும்ப வழக்கின்படி எரிப்பது. எரித்து அந்த சாம்பலைக் கடலில் தான் கரைப்பார்கள். நான் அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். எங்கேயாவது ஆற்றில் கரைத்து விடப் போகிறீர்கள். ஆறுகள் இப்போது எல்லாம் கடலில் கலப்பதே இல்லை அவை தடுத்து நிறுத்தப்பட்டு சாக்கடையாக தேங்கி விடுகின்றது. ஆகையால், என்னைத் தயவு செய்து கடலில் கரைத்து விடுங்கள். என் அப்பா, அக்கா எல்லோரும் அங்கு தான் இருக்கிறார்கள். என்னையும் கரைத்து விடுங்கள். அங்கே நான் உயிரோடு இருப்பேன். கடல் இருக்கின்ற வரை நான் இருப்பேன் அல்லவா! கடல் என்னுடைய சக இருப்பு அது தாண்டி நான் இல்லை. என்னைத் தாண்டி அது இல்லை என்று தான் நான் நினைக்கிறேன்.

ரா. அழகுராஜ்: பௌத்தம் உங்களுடைய இலக்கியங்களில்  கருத்து அடித்தளத்திற்கு எந்த மாதிரியான பங்கினை செய்தது?

   ஆரியத்தினுடைய வன்முறை, இம்சை அதனால் இந்தத் துணைக்கண்டம் இன்றளவும் எவ்வளவோ வன்முறைகளைப் பார்த்து வருகிறது. அதை எதிர்த்து நின்ற மரபுகளில் பௌத்தம் என்னை ஆட்கொண்டது. ஆரிய கொடுங்கோன்மைக்கு எதிராக அகிம்சை மாற்றத்தை முன்மொழிந்த பெரிய அறிவு மரபு பௌத்தம். ஒரு மாற்றுப் பண்பாடு மாற்றுக் கட்டமைப்பு தோற்றுவிக்க முற்படுபவர்களுக்கு அடிப்படை தத்துவமாக பௌத்தம் இருக்கிறது. அப்படித்தான் அம்பேத்கருக்கும் பௌத்தம் இருந்தது.


     
நான் பௌத்தத்துடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது அம்பேத்கருடைய
புத்தமும் அவர் தம்மமும்படித்த பிறகு நிறைய திறப்புகள் ஏற்பட்டன. நான் பௌத்த மார்க்கத்தையும் விமர்சனத்தோடு ஏற்றுக்கொள்கிறேன். நான் எல்லாவற்றையும் ஏற்பேன் எதிர்த்தும் நிற்பேன். இன்றைய பௌத்தத்தின் போக்குகளில் எனக்கு உடன்பாடு இல்லை. அது வைதீக வன்முறைகளை  எல்லாம் ஏற்றுச் செயல்படுகிறது. இன்று பௌத்தத்தை மதமாக ஏற்ற நாடுகளிலும் இதே நிலைதான். பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் இதைப் பார்க்கலாம். அங்கும் வன்முறை கலந்த மத அமைப்பாக மாறிவிட்டது. அதற்கும் புத்தருக்கும் சம்பந்தமில்லை. எப்படி இன்று உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மார்க்ஸ், ஏங்கெல்ஸுக்கும் சம்பந்தமில்லை என்பது போல தான் அதுவும். எந்தவொரு பௌத்த அமைப்பையும் சார்ந்தவன் அல்லன்; கம்யூனிசத்தை எப்படி கற்கிறேனோ, அப்படித்தான் பௌத்தத்தையும் கற்கிறேன். இந்த ஆரிய மதம் அச்சுறுத்தல், ஒடுக்குதல், வன்முறையைக் கையாளுதல் ஆகியவற்றைக் கண்டு தவித்த போது அவற்றிலிருந்து மீட்பதாக இந்த மார்க்கம் அமைந்தது. அதுவும் இந்திய நிலப்பகுதியில் பெரிதும் நிலைத்து நின்று விடவில்லை. நிலைத்து நின்றவற்றையும் சிதைத்து விட்டார்கள். இன்று பிற நாடுகளில் அரசு மதமாக கோலோச்சி இருக்கின்ற பௌத்தம் இந்தியாவில் நலிந்துள்ளது. இன்றைக்கு பௌத்த விகார்கள் எல்லாம் எவ்வாறு சிதைந்து இருக்கின்றதோ அதுபோல, அதன் கட்டமைப்பும் சிதைந்துள்ளது. இந்தியாவில் பௌத்த எழுச்சி அம்பேத்கருக்கு பின் ஏற்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் அப்படி ஒன்றும் நிகழவில்லை. சனாதனம் அதற்கு இடமளிக்காது. இந்த மனம் சனாதனத்தால் ஆனது. எந்த மதத்திற்குள் சென்றாலும் அது அதன் வழியாக செயல்படுகிறது. ஒரு இந்துவாக இஸ்லாமியனாக கிறித்துவனாக இருந்தாலும் அவனுக்குள் சனாதனம் இருந்து செயல்படுகிறது. அது இந்த நிலத்திலிருந்து உருவான மனக்கட்டமைப்பு.  ஒரு நிலத்தின் வாசம் எல்லாத் தாவரம் மற்றும் விலங்குகளுக்குள்ளும் இருப்பது போல இந்த சனாதனம் இங்கு பிறந்த எல்லா மனிதர்க்குள்ளும் நிறைந்து பரவி கிடக்கிறது. சுத்தமாக, சனாதனம் நீக்கப்பட்ட ஒரு மனத்தை கூட நான் பார்த்ததே இல்லை. ஆதனால் தான் நான் என்னை பௌத்தன் என்று சொல்லுவது ஒரு பாவனை. மார்க்ஸே தன்னை கம்யூனிஸ்ட்டாக சொல்லிக்கொள்ளவில்லை. அது மிகவும் உச்சநிலை; அதை யாரும் எட்ட முடியாது. மைத்ரி நிலை, கம்யூனிச நிலை எல்லாம் பாவனையே. அதை யாராலும் அடைய முடியாது. நான் ஒரு பாவனை என்று தெரிந்து கொண்டிருப்பதால் தான் நிம்மதியாக இருக்கிறேன். என்னை ஒருவன் கொலை செய்தாலும் கூட அவனுக்கு தோன்றியது செய்து விட்டான் என்று நினைத்து  அதைப் பொருட்படுத்தாமலேயே உயிர் பிரியும். இப்படி எல்லாவற்றையும் பாவனையாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை பௌத்தத்திலிருந்து வந்தது.

ஜெ. மோகன்: நீங்கள் பன்மயமாக இருக்கிறீர்கள். ஆனால் காந்தியையும் அம்பேத்கரையும் பற்றிய முரணான கருத்துகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

    நான் அவர்களை இரு துருவங்களாக பார்க்கவில்லை. அவர்களின் இலக்கு ஒன்று. களம் வெவ்வேறு. இரண்டு நபர்களுக்கு அடிப்படை விடுதலை. ஒருவருக்கு இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுதலை, மற்றொருவருக்கு இந்திய ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுதலை. இந்த ஏகாதிபத்தியம் என்பது ஐரோப்பிய மனமாகவும் இருக்கலாம், இந்திய மனமாகவும் இருக்கலாம். அம்பேத்கரின் ஏகாதிபத்தியம் இந்திய மனம். இரண்டு பேரின் நோக்கம் தனி மனித விடுதலை. இந்த விடுதலை உருவாக்குவதே இரண்டு சிந்தனைவாதிகளின் இலக்கு. அதே நேரம் யார் தான் முரண்படவில்லை. மார்க்ஸும் ஏங்கெல்ஸும் முரண்படவில்லையா? ஒரே கோட்பாட்டின் கீழே பணியாற்றினார்கள் ழீல்தெலஸ்< ஃபெலிக்ஸ் கோத்தாரிக்குள் முரண்பாடு வரவில்லையா? எனக்கும் பிரேமுக்கும் முரண்பாடு வந்ததினால் தான் பிரிந்தோம். ஆகையினாலே முரண்பாடு கட்டாயம் வரும். ஆனால் பயணிக்க கூடிய இலக்கு ஒன்றாக இருக்கிறதா என்பதே முக்கியம்.

    அண்ணல் அம்பேத்கரையும் அண்ணல் காந்தியாரையும் நான் வெவ்வேறாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களை (இணை முரண்) binary opposition ஆக பார்க்கவில்லை. இணைக் கோடுகளாக பார்க்கிறேன். ஆனால், இந்திய மனம் காந்தியையும் ஏற்றுக்கொள்வதில்லை. அம்பேத்கரையும் ஏற்றுக் கொள்வதில்லை. பொதுவாக ஏற்றுக் கொண்ட மனங்களில் எண்ணிக்கை விகிதாசார அடிப்படையில் குறைவு. காந்தியை ஏற்றுக்கொண்டவர்கள் பெரும்பாலானவர்கள் ஆனால் அவர்கள் உண்மையிலேயே காந்தியவாதிகளாக இருக்கிறார்களா என்றால் கேள்விக்குறி? அம்பேத்கரைக் குறைந்த அளவு ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் உண்மையான அம்பேத்கரிஸ்டாக இருக்கிறார்கள். கதர் சட்டை, கதர் குல்லா போட்டவர்கள் தம்மை காந்தியவாதிகளாக நினைத்துக் கொள்கிறார்கள். அவ்வாறு போலி காந்தியவாதிகள் நிறைந்திருக்கும் சமூகத்தைக் காட்டிலும் உண்மையான அம்பேத்கரிஸ்டாக கொஞ்சம் இருந்தாலே வளமான சமூகம் உருப்படும். உண்மையாக இருவரையும் அணுகும் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கும் சமுதாயம் சமநிலையைப் பெறும். அதற்கு இன்னும் காலம் எடுக்கும். இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படும்; அதுவே நல்ல ஜனநாயகத்தை உருவாக்கும்.

ச. தணிகைவேலன்: நல்ல ஜனநாயகத்தை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் இன்று தென்படவில்லை அதுபற்றி.

     எதிர்காலத்தில் நடக்கும். இது ஒன்றும் எளிதில் நடைபெறாது. அதற்கு முதலில் நாம் மனதளவில் குடும்ப அமைப்புக்குள்  ஜனநாயகவாதியாக உருவாகவேண்டும். பிறகு தன்னை விஸ்தரித்து ஒரு சமூக அமைப்புக்குள் ஜனநாயகவாதியாக உருவாக வேண்டும். முதலில் நாம் ஜனநாயகம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பொதுவுடமைவாதியாக உருவாக முடியும். அதற்கு பின்னாலேயே காந்தியவாதியாகவோ கம்யூனிஸ்டாகவோ மாற முடியும். நாம் இன்னும் பாலபாட நிலையில் இருக்கிறோம். எல்லாமும் எல்லாருக்கும் வேண்டும் என்பது தானே எல்லாருக்குமான எதிர்பார்ப்பு. ஒருவர் இன்னொருவரை இகழாமல் இருக்க வேண்டும் என்பது தான் அடிப்படை. என்னைப் போல் உன்னை நேசிக்கிறேன் என்றால் பிரச்சனையே இல்லை. அன்பின்மை (Lack of love) தான் இன்றைய பிரச்சனை. ஆதலினால் காதல் செய்வீர்என்று பாரதி சொன்னது போல்  காதலினால் எல்லாம் கிடைக்கும். கலவி மட்டுமல்ல. காதல் தான் மாந்தனையே உருவாக்கும்.

ஆ. கிரண்குமார் : பின் நவீனத்துவம் என்ற கோட்பாட்டை நீங்கள் எவ்வாறு புரிந்து வைத்துள்ளீர்கள் அதற்கென்று தனி உத்தி ஏதேனும் உள்ளதா?

    Postmodern is a way of Expression. பின்நவீனத்துவ (Postmodern) இலக்கியம் என்று தனியே உருவாக்க முடியாது. Postmodern literature என்று எழுத முடியாது. Postmodern reading பின் நவீனத்துவ வாசிப்பு தான் சாத்தியமே ஒழிய பின் நவீனத்துவ எழுத்து என்று எதுவும் இல்லை. பின் நவீனத்துவ நாவல் என்பது பின்நவீனத்துவ வாசிப்பினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இந்த உரையாடல் முழுவதுமே postmodern discourse தான்.


https://www.instagram.com/p/DOduZn6EjzA/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு