வரலாற்றில் மீள்வாசிப்பு -அருண்குமார்
வரலாற்றில் மீள்வாசிப்பு -அருண்குமார்
கடந்த காலத்தின் நீட்சியில் வாழும் நாம் அதனைப் பின்னோக்கி பார்த்து அறிவது மிக முக்கியம். அதன்பொருட்டே நாம் வரலாற்றினை ஒரு பாடமாகவே படித்து வருகிறோம். அதன் பெருமைகளை நம்மீது ஏற்றிக்கொள்ள எத்தனிக்கிறோம். ஆனால், பொதுவாய் வரலாற்றின் உண்மை பொய்மைகளை அறிய என்றும் நாம் முற்படுவதில்லை. வரலாற்றினைக் கட்டமைக்க தொல்லியல் சான்றுகள், கல்வெட்டுகள், நாணயங்கள், செப்பேடுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் என பலதரப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி வருகிறோம்.
வரலாறு என்பது திரவம் போல ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றவாறு அதன் தன்மையில் மாற்றம் பெறுகிறது. சில இடங்களில் வரலாறு வெறும் பதிவாக மட்டும் உள்ளது. சில இடங்களில் பெருமையாக விளங்குகிறது. வேறு சில இடங்களில் மறக்கப்பட வேண்டியதாக அல்லது உணரப்பட வேண்டியதாக இருக்கிறது. பல இடங்களில் மறக்கப்பட்டதாக உள்ளது. அப்படியெனில், அதன் இயல்பு என்னவாக இருக்கும் என்ற கேள்வி நம்முள் எழும். கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என இம்மூன்றையும் இணைக்கும் ஒரு பாலத்தின் அடித்தளமாக செயல்படுகிறது வரலாறு எனப் புரிந்துகொள்ளலாம்.
நம்மைப் பொறுத்தமட்டில் நாம் வரலாற்றுத்தரவுகள் என பலவற்றைப் பதிவுசெய்து அறிந்து வருகிறோம். ஆனால், அவையெல்லாம் உண்மைகளா? அல்லது கட்டமைக்கப்பட்ட பிம்பங்களா? என்பதே இக்கட்டுரைக்கான சாரம். நாம் எந்த அளவிற்கு உண்மைகளைப் பெறுகிறோமோ அதேஅளவில் மாய பிம்பங்களையும் நம்பி பயின்று வருகிறோம். வரலாற்றில். மேட்டிமைத்தனம் கொண்ட நபர்களும் குழுமங்களும் தன்னை முன்னிறுத்தி மற்ற சாராரை அடிபணிய வைக்க பல பிம்பங்களை உருவாக்கி வரலாற்றின் ஊடே புகுத்தியுள்ளனர். புகுத்தியும் வருகின்றனர். இதில் தற்பெருமை பேசும் கூட்டமும் தற்சமயம் இணைந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆண்ட பரம்பரைப் பட்டத்தை இறக்கிவைக்க இவர்களால் இயலாது. இத்தகைய சிந்தையுடன் அவர்கள் வரலாற்றில் செல்வாக்கு பெற விரும்பி அத்தகு விடயங்களில் தங்கள் ஆதிக்கத்தைக் காண்பிப்பர். அது இயலாத பட்சத்தில் அதனை தீட்டு, இழிவு என மாற்றிவிட்டு பிறரை ஒதுக்கியும் வசைபாடியும் மகிழ்வர்.
இதற்கு மத்தியில் எப்படி உண்மையான வரலாற்றினைப் புரிந்துகொள்வது?
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"
எனும் வாக்கிற்கிணங்க சுற்றித்திரியும் தற்பெருமைகளையும் பொய்மைகளையும் களைவதற்கு நாம் சற்று மெனக்கெட வேண்டும். இதற்கு ஒருபடி மேலாக வரலாற்றுத் திரிபுகள் உலா வரும் காலமிது. போலிப் பெருமிதம் பேசித் திரியவே இவை நடைபோடுகின்றன. உண்மைகளை மறைத்தும் இல்லாத விடயங்களைத் திணித்தும் வரலாறு இப்போது கட்டமைக்கப்படுகிறது.
வரலாறு எல்லா காலங்களிலும் அல்லது எல்லா விடயங்களிலும் ஒரே ஒரு உண்மையை மாத்திரம் கொண்டிருப்பதில்லை. அநேக இடங்களில் பல உண்மைகள் ஒரே கருவில் பிறக்கும் தன்மைதனை கொண்டதுதான் வரலாறு. அத்தகைய உண்மைகளை கண்டறிய பொய்மைகளைக் களைந்தாலே போதும் எனக் கருதுகிறேன். இதுதான் உண்மை, இது இவ்வாறு தான் இருந்திருக்கும் என வரலாற்று நிகழ்வுகளை உறுதிபட எல்லா நேரங்களிலும் சொல்லிவிட இயலாது. வரலாறு யூகத்தின் அடிப்படையில் தான் வரையறுக்கப்படுகிறது பல சமயங்களில். அச்சமயம் வரலாற்றின் சார்புநிலையை அறிவதும் இங்கு அவசியமாகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த சூழலுக்கு ஏற்றவாறு வரலாற்றுத்தரவுகள் உருவாகின்றன. அதனை தற்போதைய காலகட்ட மனநிலையில் அணுகுவது சரியாக இருக்காது. அவ்வாறான தரவுகள் எதை வெளிப்படுத்துகின்றன என்பதையும் அதன் சார்புநிலையையும் புரிவதற்கு அந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்கு நமது பார்வையைப் பயணிக்கச் செய்து தரவுகளை அலசி ஆராய வேண்டும். இவ்வாறு ஆராய்கையில் போலிப் பெருமிதங்களையும் அலங்கார வார்த்தைகளையும் தவிர்த்தல் முக்கியம்.
மேலே கூறியது போல, வரலாறு ஏதோ ஒரு புள்ளியில் சார்புநிலையுடன்தான் இயங்குகிறது. இருப்பினும் அதனைப் பெரிதளவில் ஒருதலைபட்சமாக மாற்ற நினைப்பதுதான் வரலாற்று தரவுகளுக்கு செய்யும் துரோகம் என்றே கூட கூறலாம். ஒரே கோணத்தில் வரலாற்றை அணுகக்கூடாது. இந்த அணுகுமுறை தான் வரலாற்றுப் பொய்மைகளுக்கு அடித்தளம். தற்போதைய காலகட்டத்தில் பலகோணங்களில் வரலாற்றினை ஆய்ந்து வருகின்றனர். பற்பல உட்பிரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன (குறிப்பாக, விளிம்புநிலை மக்களின் வரலாறு). ஆனால், அதேஅளவில் திரிபுகளும் போலிப்பெருமிதங்களும் அதிகரித்து வருகின்றன. இதன் பொருட்டே நாம் நமக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வரலாற்றுத்தரவையும் பகுத்தறிய வேண்டியுள்ளது.
தாயைப் போல் பிள்ளை என்று தான் சொல்வோம், பிள்ளையைப் போல் தாய் என்று சொல்வதில்லை. காலத்தால் முற்பட்ட ஒன்றையே உதாரணமாகவோ மையப்படுத்தியோ நாம் கூறுவோம். அப்படி இருக்கையில், காலத்தால் முந்திய சமுத்திர குப்தரை அவருக்குப்பின் 1400 வருடங்கள் கழித்து வாழ்ந்த பிரெஞ்சு நெப்போலியனைக் கொண்டு எவ்வாறு முன்னவரை இந்தியாவின் நெப்போலியன் என்று கூற இயலும்? 3000 ஆண்டுகள் முன்னர் எகிப்தை ஆண்ட மன்னன் மூன்றாம் தட்மோசுவை எகிப்தின் நெப்போலியன் என்பர். இதேநிலை தான் தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்ற அடைமொழியிலும் பயின்று வருகிறது (ஜான்சிராணியை விட ஒரு நூற்றாண்டு முன்னவர் வேலுநாச்சியார்). காலத்தால் முற்பட்டவரை வைத்துதான் ஒப்புமை பகிர வேண்டும். ஆனால் நாம் இதனைப் பெரிதாய் யோசிப்பதில்லை (ஒரு மதிப்பெண் வினாவாக கடந்துவிடுகிறோம்).
தரவுகள் இல்லை அல்லது கிடைக்கவில்லை என்று சிலவற்றை இருண்ட காலம் எனக் கூறிவிடுகிறோம். ஒருசிலவற்றில் சிறப்பாக விளங்கினர் என்று தாமதிக்காமல் பொற்காலம் என்று ஏற்றுக்கொள்கிறோம். எதனடிப்படையில் ஒன்றை பொற்காலம் என்றோ இருண்டகாலம் என்றோ கூற இயலும். பொற்காலம் நிகழும்போது அனைத்து பிரிவினரும் மகிழ்வாய் நிம்மதியாய் இருந்தனரா என்று பார்ப்பதில்லை தானே. ஒரு கோணத்தில் இருண்டகாலமாக (அல்லது இருட்டடிக்கப்பட்டு) இருப்பது வேறு பார்வையில் பொற்காலமாக இருக்கலாம். ஒரு சிலருக்கு பொற்காலமாக விளங்கிய காலத்தில் வேறு சிலர் விளிம்புநிலையில் அவதிப்பட்டு இருக்கலாம். இதனை அவர்களும் கூறுவதில்லை, நாமும் கேட்பதில்லை.
எதிர்கேள்விகளை முன்வைத்தால் தான் பொய்மைகளைக் களைந்து உண்மைகளும் அலங்காரம் களைந்து இயல்பும் வெளிப்படும். கேள்வி கேட்பது தான் இங்கு சிக்கலான ஒன்றாக உள்ளது. ஆய்ந்தறிந்து வாசிக்கத் துவங்கினாலே கேள்விகள் நம்மை நச்சரிக்கத் துவங்கிவிடும். வரலாறு சார்ந்த புரிதல் இந்தக் காலத்தில் பெருமை சார்ந்த விடயமாகவே நம்மிடையே கரைந்துள்ளது. கடந்தகால தரவுகளைக் கொண்டு கட்டமைக்கப்படும் எதார்த்தமான வரலாறே போதுமானது. அதனை நமது வாழ்விற்கான வழிகாட்டியாய், கடந்தகால எச்சமாய் கொண்டு பயணிக்க முடியும்.
சிறிய விடயங்களிலும் சரி கோட்பாட்டு ரீதியான வரலாற்றுப் புரிதல்களிலும் சரி நாம் இதனைதான் புரிந்துணர வேண்டும். பெருமை பேசி துதிபாடி நம் அடையாளங்களை அழித்துக்கொள்ளப் போகிறோமா அல்லது பொய்மைகளைத் தரவுகளுடன் வாழ்வினை செப்பனிடப் போகிறோமா என்ற கேள்வியை உங்கள் முன்வைக்கிறேன். போலிப் பெருமிதங்கள், தற்பெருமை, திரிபுகள் போன்ற பொய்மைகள் களையப்பட்ட வரலாறு இங்கு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கையுடன் வரலாற்றினை மீள்வாசிப்பு செய்து மறுகட்டமைப்பு செய்வோமாக.
Comments
Post a Comment