மௌனியைப் பேசுதல் -கி. தினேஷ்கண்ணன்
மௌனியைப் பேசுதல் -கி. தினேஷ்கண்ணன்
மௌனியின் படைப்புகளை பேசப்புகும் கட்டுரையாக இதை பாவிக்க வேண்டியதில்லை. உள்ளார்ந்த கலைஞன் ஒருவனின் சிருஷ்டிகளை வெட்டிக் கூறுபோட்டு வைப்பதில் விருப்பமும் இல்லை. புறவயமான உலகத்தின் அபத்தங்கள் கலையுள்ளத்தின் ஊடாட்டங்களால் கேலிக்குள்ளாகின்றன. காலடித் தடங்கள் பதியாத நினைவுப்பாதையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையே நம்மால் பார்க்க முடிகிறது.
மௌனியின் அகவொட்டான குறுகிய பயணத்தின் சுவடுகளில் காலாகாலத்துக்குமான மனோ ஆவேசங்கள் உரைந்து பிரக்ஞைபூர்வமான இருப்பில் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது. அது எத்தனை ஊழ்கள் கடப்பினும் மனதில் தகிப்பை உண்டுபண்ணும் அழியாச்சுடர். உள்ளொழுக்குகளை ஊடறுத்து வெடித்துச் சிதறுவதற்கான காத்திருப்பை தியானித்திருக்கும் பிரபஞ்ச கானம்.
ஞாபகங்களின் அதீத தன்மையுடைய சுமையினால் நிகழும் எண்ணங்களின் சஞ்சாரம் காட்சிகளாக சமையும் எழுத்து மௌனியினுடையது. வீடு, பாதை, இடங்கள், வானம் என சொற்ப எல்லைகளுக்குள் அடங்கும் இக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் வெளிப்பாடடைவது ஒன்றுதான். அவை நினைவுகள். கூரான மழுங்கலான சலனங்களை தீட்டிய நினைவுகளின் அவசரத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் துயரார்ந்த தருணங்களை புரிந்துகொள்ள முடியாமல் கண் கொட்ட விழித்து நிற்கும் தனித்துவிடப்பட்ட ஆத்மாக்கள். மொத்த வாழ்க்கையும், தருணங்களால் தீர்மானிக்கப்படும் அபத்தத்தின் புரியாமையில் கழிகின்றன பொழுதுகள். புரிந்துகொள்வதற்கு முன்பே பிரிந்துவிடுகின்ற காதல் மௌனி எழுதும் கதைகளின் ஜீவத்துடிப்பு என்று கொள்ளலாம். அவர் சிருஷ்டித்த மனிதர்கள் காலத்தின் முகமூடியுடன் புறத்தின் விகசிப்புகளினின்று அந்நியப்பட்டு அலையும் ஆத்மாக்கள்.
மூன்றாவது மனிதனாய், அவர்கள் சஞ்சரிக்கும் வீட்டிலும் தெருவிலும் சாலைகளிலும் தொடர்பறுந்து சிந்தனைவயப்பட்டு சென்றுகொண்டிருப்பதை பார்கக முடிகிறது. தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது. அர்த்தத்தினால் விழுங்கப்பட்ட வெற்றுச் சடங்களுக்குள் ஏக்கத்தினது உயிர்ப்பை, அவர்களது இருப்பும் இறப்பும் உண்டுபண்ணி விடுகிறது. நிசப்தத்தில் ஒடுங்கிய மௌனத்தின் மூச்சிறைப்பில் கண்ணீர் கரையில் எழுத்துகள் அழிந்த யாரோ ஒருவனின் காதல் கடிதத்தை சொஸ்தத்தின் சுமையாய் ஏந்தி அலையப் பண்ணுகிறது.
தன்னெழுச்சியினால் மட்டுமே வெளிப்பாடடையும் நெருக்கமான சிடுக்குகளைக் கொண்ட மனோலயத்தில் இயங்கியும் அதனாலேயே நகர்தலுக்குமான லிகிதங்கள் பாழ்பட்டு இன்மைக்கும் முழுமைக்குமான இடைவெளியில் ஸதம்பித்துவிட்ட ஆன்மாக்களை கொண்டவர்கள் இவர்கள். புறக்காட்சிகளினின்றும் அகத்தூண்டுதலையே வரித்துக்கொள்ளும் அவச்சுவை ததும்பும் நுரைக் குமிழிகளைப் போன்ற கண்ணாடி விம்பமுடைய சிருஷ்டி கர்தாக்கள். நகரத்து சிலைக்கு நடுவே, விண்ணை நோக்கிய நீரின் பாய்ச்சலை அவதானித்திருப்பது போல் நாளத்தை அறுத்து செங்குத்தாக பீய்ச்சியடிக்கும் அலங்காரமான இரத்தத்தின் ஜீவனான உயிர் சாசுவதத்தில் மெல்ல வெளியேறிக் கொண்டிருக்கும் மயக்கத்தை உடைய மாந்தர்கள்.
சங்கீதமாக, சொற்களாக, அர்த்தமற்ற முணுமுணுப்பாக விகசிக்கும் மௌனமும் உணர்ச்சியற்ற சிரிப்பு கொண்ட மாந்தர்கள். யாராலும் கூடவர முடியாத இடங்களில் சஞ்சாரம் செய்பவர்கள். உலகினின்று ஒழிக்கப்பட்டவனைப் போன்று இருத்தலை வேண்டி நிற்கும் இவர்களால் புறக்காட்சிகளினின்றும் மனக்கிலேசங்களையே என்றென்றுமாக உணரமுடிகிறது.
எதையும் சொல்வதற்கல்லாத முணுமுணுப்புபோடு கரைகின்றன பொழுதுகள். காதில் சிரித்து மனதில் மரணபயத்தைக் கொடுத்த அவளது சப்தம் அவளல்லாத மீதி வாழ்வில் எனக்குள் அதிர்ந்து கொண்டிருக்கிறது. நிராகரிக்கப்படும் வலிகள் மீள மீள வெளிப்பட்டு மரத்துவிடக்கூடியதான பாங்கினை எட்டுகிறது. சிறியதான சலனமும் உரைந்துநிற்கும் சாகரத்தை மீளப் பிரவாகிக்கும்படி செய்துவிடுகிறது. ஏக்கங்கள் வன்முறையற்றதாய் நிலையின்மையிலேயே அடங்கிவிடுகிறது. மரணிப்பததை தவிர இரத்தத்திற்கும் சதைக்கும் வேறு அதிக வகை இங்கு கிடையாது. தஸ்தயேவ்ஸ்கியின் ரஷ்கோல் நிகோவ்களுக்குக்கும் மௌனியின் பாத்திரங்களுக்கும் அதுவே வேறுபாடு. ரஷ்கோல் நிகோவால் சைபீரியப் பனியில் விலைமாதான சோனியாவின் உள்ளங்கைகளிலிருந்து கததப்பான காதலை உணரமுடிகிறது. நெடிய வாழ்வின் தொடக்கமது. மௌனியின் சேகரன்கள் உணர்வுக் கொந்தளிப்பினை உள்ளூர அடைத்துவைத்து புளுங்குபவர்கள். வீட்டிற்கும் வெற்று சாலைகளுக்குமாக அவற்றை கடத்துபவர்கள். இரவுகளை அஞ்சும் பிராணிகள். மௌனியின் சேகரன்களுக்கும் சோனியாவின் காதலை உணர முடிகிறதுதான். ஆனால் பூரான் போல் உள்ளங்கையில் நெளியும் ஜீவத்துடிப்பில் அல்லாமல் கிணற்றுக்கயிற்றில் தூக்கிட்டு மேல்நோக்கியபடி தொங்கும் சோனியாவின் கால்களும் தேகமும் இவன் மனதில் மெதுவான ஊஞ்சல் ஆடுகின்றன. அவள் முகத்தை இவன் பார்த்தான். காதலை....? தேவர்போல் தீண்டாது ஆடிக்கொண்டு நிற்பவளுடைய முகத்தை பார்த்தான். முதல் தரம் முத்தம் கொடுக்கும்போதிருந்த அவள் முகத்தோற்றத்தை மனதில் கண்டான். இவன்.. காதல்.. ஓடி ஓடி அவ்வூரை விட்டகன்றான்.
அவள்களும் ஊர்களும் ஆற்றமுடியாத காயமாக இவன்களை திக் பிரம்மையில் தள்ளுகிறது. எதிர்வீடும் சிறுவயதும் கோவில் பிரகாரமும் அவளின் நினைவுகளுக்கு மட்டுமே சொந்தமானதாக மாறும்போது போக்கிடம் இன்றி இவனது ஆன்மா பலவீனப்பட்டுக்கொண்டிருகிறது. வாய்விட்டு அலறுதலில் கிடைக்கும் ஆறுதல் தரும் அவளின் முகத்தினின்று எனக்காக வெளிப்படுவது இரு துளி கண்ணீர் மட்டுமே ஆகும். ஆனால் அவளை மீளப்பெறுவதற்கான எனது செயல்கள் சுயநினைவுடனான தொடர்பறுபட்டு கிறுக்கல்கலாக வெளிப்படுகிறது. அவளை வெளிக்கொண்டுவர பிடில் இசையும் மதுக்குப்பிகளும் பிரயோஜனப்படவில்லை. காணாமல் போவதை விரும்பமுடிகிறதே தவிர யாரிடமிருந்து காணமல் போவது என்று தெரியவில்லை. எல்லாம் மந்தமான கதியில் நகர்ந்துகொண்டிருக்கிறது. இது குழப்பமும் அல்ல தெளிவுபடுத்துவதற்கு. இது தெளிவினால் ஏற்பட்ட விரக்தி. மனத்தாங்கலினால் சமைந்த உலகு.
கேள்விக்குறியாக மட்டுமே விரியும்
அவளது கண்கள் வினோதங்காட்டி நரகக்குழியாக இழுக்கிறது. அந்தக் குழிக்குள் வருடங்கள்
தொலைகின்றன.
தொலையும் வருடங்கள் ஏன் என்ற கேள்வியின் விகசிப்புடன் சிமிட்டிப் பார்க்கிறது. துவண்டு கிடக்கும் நடைபாதைகளில் மனங்கெட்டு திரியலானேன். ஏன்? எங்கே? என குரைக்கும் தெருநாயிடம் அவளைப் பற்றி விவாதிக்கிறேன். சரி சரி என குரைப்பில் ஆமோதித்து அவை எட்டி ஓடுகின்றன. ஏன்? எங்கே? என குருவிகளும் கத்துகின்றன. அச்சமூட்டும் இரவுகளை சுமந்துகொண்டுவரும் மாலைப் பொழுதுகளை சமாளிக்கக் கூடுவதில்லை. தனிப்பட்டு போன காகம், கடைசியாய் மேயும் ஆடு, மயக்கங் கொடுக்கும் காற்று என எவ்வித அலறல் சப்தமும் பிரபஞ்ச பயங்கர நிசப்தத்தையே உணர்த்துகின்றது.
மேகமூட்டுக் கொண்டு இருண்டு கிடக்கும் நடுப்பகல்களும் சதா இரவும் துரத்துகின்றன. வாய்விட்டு அலறும் வருத்தம் சூழ்ந்த இந்த அந்திப் பொழுதுகள் இரவின் அச்சத்தை கூர்மையாக்குகின்றன. தவிர்க்க முடியாத இரவுகள் விழிப்பில்லாத எனது தூக்கத்தின் தொடக்கத்தை உணர்த்துகின்றன போலும். மரக்கிளையில் ஒடுங்கிய காற்று, அல்லாட்டங்களின் பொழுதுகளை ஊற்றுக்கண் கொண்ட கணங்களால் நிறைக்கின்றன. மனத்தின் அந்தரக் குகையில் பழுக்கக் காய்ச்சின சூட்டுகோலால் எழுதப்பட்ட எண்ணங்கள் வலியெடுக்கின்றன. இந்த இரவின் தொடக்கத்தில். சமனடையாது நின்ற, காதலி பிரிந்த தருணம், நின்றது நின்றது தான். ஜீவ கலையுள்ள அவளின் பிரபஞ்ச கானம் அவளுக்குள் அடைபட்ட சங்கீதம், எனதும் அவளுடையதுமான ஒன்றுதலின் மரணம். இரவின் ஒளியற்ற ஆபாசத் தோற்றத்தில் காலம் விறைத்து நின்றுவிட்டது.
ஓராயிரம் பார்வைகளை பொட்டென்று தெறிக்கும் அவளின் அகஸ்மாத்தான ஒற்றைப் பார்வையில் செத்துவிடுவதற்கான வேகம் எனக்குள் பாய்கிறது. அவளது கண்கள் எனது மரணங்களின் கருவூலம். உடலுக்கான தேடலோடு ஒட்டாமல் நிற்கும், உணர்ச்சிகள் கெட்டிப்பட்ட ஸூதலத்தை தாண்டிய ஏக்கங்களினால் மட்டுமே வாழவும் மரணிக்கவும் தலைப்படுகிறேன்.
அசந்தர்பங்களின் சூழ்ச்சியினால் வாழ்க்கை விசித்திரங்கொண்டு பைத்தியப்படுகிறது. பூடகப்பட்டு மறைந்த தருணங்களால் நிறைந்த நாட்கள் சாபமாகவும் நியாயமின்றியும் எனக்கான அமைதியின்மையை சுமந்து நிற்கிறது. எனக்கானது என்பதில் இருக்கும் அபத்தத்தை உணர்த்த நரகமாக எனக்குள் இறங்குகிறது. எனக்கானவளின் சொந்தம், அறுபட்ட மணிக்கட்டின்மேல் இருக்கும் தையல் தழும்போடு நரம்பினால் நூலிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளின் பேண்டேஜ் மருந்து வாசனையோடு எனது காதலை ஞாபகம் வைத்துகொண்டவனைப் போல் அவளள்ளாத அவளின் நெருக்கத்திற்கு தவித்துக்கொண்டிருக்கிறேன். புரியாமையில் துக்கித்து நிற்கும் கோணல் மாணலான எண்ணங்களின் வெளிப்பாடுதான் எனது துயரார்ந்த தருணங்களின் மௌனமான ஓலங்கள் போலும்.
ஏன்? எங்கே?
என்ற விழிப்பார்ந்த கேள்விகளால் அனாதி காலத்துக்கும் துரத்தப்பட்டுவருகிறேன். அவள்
வரப்போவதில்லை, நீயே சொல், உனக்கு தான் தெரியுமே, இங்கு ஏன் வந்தாய், தூங்குவதே இல்லையா,
தேவைதானா இதெல்லாம், என்னை தொந்தரவு செய்யாதே, நானும் உன்னைக் காதலிப்பதால் எதுவும்
மாறப்போவதில்லை.. மரணத்தின் முத்தமென அவள் பேசாத வார்த்தைகள் அவச்சுவை கொண்டு எனக்குண்டான
விதியை எழுதிக்கொண்டிருக்கிறது. இறந்தவளுக்கு எழுதிய கடிதத்தைக் கொண்டு சேர்க்க நானே
உயிரைவிடுகிறேன். எங்கேயோ எவனிடத்திலோ நான் உனக்கு எழுதிய கடிதங்களை ஒப்படைத்துள்ளேன்.
நிசப்தத்தின் ஆங்காரத்தோடு நமது காதலை அழுதுகொண்டிருக்கும் தனிப்பட்ட ஆத்மாகளுக்காக
அதை சமர்ப்பிக்கிறேன்.
Comments
Post a Comment