அரா கவிதைகள்

 

அரா கவிதைகள்  

இருளின் ஒதுக்குப்புறம் தேடி

நாய்கள் மோண்ட படகுகள்

அங்கொன்றும் இங்கொன்றுமாக

நிறுத்தப்பட்டிருக்கும் நடு ராத்திரியில்

கடற்கரை மணலுள் கால் புதைத்து

நட்டிக் குத்தி நிற்கும் 

கலங்கரை சைரனில்

உச்சுக் கொட்டி சுவைத்திழுக்கும் இதழ்கள்

தேன் கொட்டி நக்கிய ஓசையை

ஒழுக ஒழுக இனிக்கும் கடல்

அலையடிக்கும் காற்றில் 

எச்சில் துப்பிப் பழகும்

 

தோண்ட தோண்ட மினுங்கும் 

வண்டுகளும்

பொச்சுக்கு மேல் எண்ணெய் தடவி 

தீ சுமந்து 

கருகல் வாடை முகர்ந்த

மின்மினியைத் துரத்தும் தீப்பூச்சிகளும்

தொப் தொப்பென கருங்கட்டிப் பாறையின் 

கொட்டாங்குச்சி உடைசலாக

கீழே விழும் கருப்பட்டியும்

இரவெல்லாம் பல நிறங்களில் 

விழித்திருக்கிறது

*****

 

எறும்பாக உருமாறி

காகித்தட்டில் எச்சில் வடித்து

சிரித்துக் கொண்டிருக்கும் ஜாங்கிரியை

கடித்து இழுத்து

கூட்டிற்குள் நுழைக்க

கால்களான கைகளை முறுக்கிக் கொண்டு

வேக வேகமாய் வருகிறேன்

 

வேப்பிலை தண்ணீர் கொண்டு

நடுவில் கிழிக்கப்பட்ட கோட்டை

எகிறிக் குதிக்க பின்னங்கால்களுக்கு

பயிற்சி தேவைப்படுகிறது

 

சக எறும்புகள் எல்லாம் 

என்னைப் போல் அல்ல

எறும்புகளாகவே பிறந்தவை

கோடுகள் தரையில் இடப்படும் முன்பாகவே

சறுக்கிச் செல்லும் லாவகம் அறிந்தவை

 

தாவத் தெரியாமல்

சறுக்க முடியாமல்

வேகமாக வருவற்கு தயங்கும்

நடிகர்களான எறும்புகள்

மீசையை முறுக்கி பாவ்லா செய்கின்றன

 

நட்ட நடு ராத்திரியில் 

நட்சத்திர வெளிச்சத்தூல்

தனிமை நிரம்பிய வெற்று வீதியில்

குதித்துப் பழகிக் கொண்டிருக்கும்போது 

ஜாங்கிரி தட்டு பறக்கும் தட்டாகி

பறந்துவிட்டது

எக்கி எகிறி இன்னும் தூரம் குதித்தாலும்

பறந்தது பறந்ததே

*******

 

மேனி முழுவதும் பொய்கள்

அப்பப்பட்டுள்ளது

தோலில் இருக்கும் மேடுகளிலும் குழிகளிலும்

பூசப்பட்டிருந்த உண்மைகள்

உதிரத்தொடங்கிவிட்டது.

 

எதைக் கொண்டு பளபளப்பாக

தீட்டிக்கொள்வதென

புற்களில் படுத்து

முதுகை உரசுகிறேன்

வலிந்துருகும் இரத்தத்திற்குள்

சில பொய்களின் நியாயங்கள்

பார்த்துச் சிரிக்கின்றன

 

சூரியன் கருக்கித் தள்ளும்

எண்ணெய் வடிந்த பக்குகளுக்குள்

சதித் திட்டங்களின் அசலான பத்திரங்கள்

பழுப்பு நிற உருளைகளாகி

விழுகின்றன

 

விழுந்துடையும் திட்டங்களின் நெடியில்

உலகம் சூன்யமாகும் வன்மம்

வளைந்து ஊர்ந்து 

கோளப்பிடியை நெருக்கி உடைக்கிறது

 

உடையும் துகள்களுக்குள் நிறைந்துள்ள

அணுக்களும் கதைகளும் மோதுவதில்

உண்மைகள் மேலேறி நிலவின் பக்கம்

ஒளியைத் திருப்பிச் செல்கின்றன.

*******

 

மறக்கப்பட்டு

மறக்கப்பட

மறதிக்குள் உடனடி மறதியில்

மறந்திட 

மறுபடி மறுபடி

மறக்கத்  துடிக்கிற

மறக்கப்படுகிற

மறக்கப்படினும்

மறவாமல் மருகின

மறக்க புகைக்குள் மறைந்திட்ட

நீருள் புதைந்திட்ட

மறத்தல் வினை

மறவாமல் தொடர்கிறது

நான் மறந்துவிட்டேன்

மறந்துவிட்டேன்

மறந்திடாமல் மறந்துவிட்டேன் 

****

 

எத்தனையோ பேர்

தான் மர்ம பிரதேசத்திற்கு

போய் வந்ததாகவும்

அஃதொரு

அலாதி அனுபவமென்றும்

அடிக்கடி சொல்லியதுண்டு

அங்கு போவதற்கென

அதிக மெனக்கட்டும்

இருக்கின்றார்கள்

வண்டியில் பெட்ரோல்

போட வேண்டும்,

பர்ஸ் நிறைய பணம்

வைத்திருக்க வேண்டும்.

பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாக

இருக்க வேண்டும் போன்ற 

விதிகளும் கூடுதலாக 

சேர்ந்து கொள்கிறது.

 

பேசிக்கொண்டே இருப்பதும்

பொய்கள் சொல்வதும்

உருட்டி விளையாடுவதும்

கிள்ளி நகைப்பதும்

மர்ம பிரதேசத்தின் அத்தியாயங்கள்

இவற்றில் ஒன்றிரண்டு

குறைவுபட்டும் இருக்கலாம்

அல்லது இவற்றில்

ஏதேனும் ஒன்று மட்டுமே

உங்களிடம் இருக்கலாம்

இந்தக் கணக்குகள் எல்லாம்

பயணிக்க இருக்கும்

பிரதேசத்தின்

மர்ம ஊழ் சூழ்ந்த

ஆன்மாவின் எடைக்கு ஏற்றது.

*******

 

சருகுகளின் வாடை கூட

அடிக்காத அளவிற்கு

காய்ந்து போன மரத்திடம்

உனக்கு என்ன வேலை

அதன் பாடுகள்

அதனுடனே தங்கியிருக்கட்டும்

நீ போய்

பார்க்கவும் வேண்டாம்

தண்ணீர் எடுத்து

பாய்ச்சவும் வேண்டாம்

அழுது புலம்ப கண்ணீரற்று

காய்ந்துபோய் கிடக்கிறது.

 

நீ அங்கே சென்று அமர்வது

அதன் நிலத்தின் மீது

பச்சைப் புற்களாலான

அம்பை எய்து 

அதன் உயிரை கருக்கும்

காட்டேரியின் குருதி வாடைக்கு

மேலானது.

 

பார்க்காதே

பக்கத்தில் போகாதே

எதையும் பார்க்காதே

அது அப்படியே கிடக்கட்டும்

காய்ந்தே கிடக்கட்டும்.

******

 

பிரபஞ்ச மின்மினிகள்

அண்டத்தில் குருதி

பிசுபிசுத்து ஒழுக

படிந்த திட்டுக்களின்

சிவப்புக் கறைக்குள்

லெனின் ஒளிந்திருக்கிறான்

 

வழுக்கைத் தலையைத் தடவிக்கொண்டு

தொப்புள் கொடியை சொறிந்தவாறு

யோனி பிளந்து கீழே விழுகிறான்

மீசை வைத்த லெனின்

 

இன்னும் என்ன செய்யப் போகிறான்

பிரபஞ்ச யோனியைப் பிளந்து

ஒரு புரட்சி கூட செய்யலாம்.

 

கர்மா கருகருத்து கக்கும்

மலத்தின் மஞ்சள் கரையுள்

அழுகல் வாசனை

துவாரத்துள் பிடித்துள்ள சிகரெட்டின்

பட்டனை அழுத்தும் போதெல்லாம்

நுரையீரல் அடைக்கிறது

சிகப்பு புகையுடன்.

******

எழினிக்குப் பின்னே ஏறி இறங்கும் 

பொம்மைகளுள் இராமனும் இருக்கிறான்

இராமசாமி நிறத்தில் மினுங்கும்

அவளது கைகளின் வழியே வழிகிறது

இதழ் கவ்வும் காட்சிகள்


உள்ளங்கையில் கீச்சிய கோடுகள்

ஓவிய உருவெடுக்கும் நேரங்களில் 

கன்னத்தில் பச்சை குத்தப்படுவது

அன்றாடமாகிவிடுகிறது 

ஜிகினாக்கள் ஒட்டப்படுவதை

எண்ணிக்கைக்குள் அடக்கும் பணி

காலியாக இருக்கிறது

பயோடேட்டா தூக்கிக்கொண்டு 

வரிசையில் நிற்கும் எவருக்கும் 

எண்ணுவதற்குத் தெரியவில்லை 


ஏக் தோ தீன் என எண்ணச் சொல்லி 

வாய்பாடு பாடிய பறவைகள் 

எச்சமிட்டு அலகு தூக்கிச் சிரிக்கிறது 

பின்னப்படாத தலைச்சிறகுகளின் அடர்த்தியை

மலையோரத்துச் சிறுவன் விற்கும்

சீப்பு வாங்கி சீவுவதற்காக 

மரம் சாய்ந்து நிற்க வைத்துச் செல்லும் 

உடன் வேலையாட்கள் 

திரும்பவதில் நிச்சயமில்லை


*******

 

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு