கிழக்கின் ரேகைகள் -அரம்பன்

 

கிழக்கின் ரேகைகள் -அரம்பன்

             வடைகள் சுடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. 

   நிலா, பாட்டி, காக்கா, நரியென வடைகளைச் சுற்றி கதைகள் அளந்துவிடப்படுகிறது. இந்த கதைகளை எல்லாம் காதாறக் கேட்டு சலித்தவன் ஒருவனே இன்று கதை விடப் போகிறான். இப்போது கதைகளே வடைகளாகிவிட்டன. 

        அந்த பாட்டியும் வடை சுடுவதற்கு தயாராகிக்கொண்டிருந்தாள். கிழக்கு கடற்கரைச் சாலையில் எக்கர் புழுதியை விசிறித் தள்ளாமல் போகும் சென்னை பேருந்துகளைப் பார்ப்பது வடை கதைகளில் வரும் உண்மையை பார்ப்பதற்கு சமானம். மண் பறக்கும் சாலைகளையொட்டி வளையும் கால்களைக் கொண்டு நிற்கும் தள்ளுவண்டிகளில் எப்போதும் கலர் பனியன்கள் அணிந்த கூட்டம்.

       கூட்டத்தின் முன்னே விதவிதமான சேர்க்கைகளில் கலந்து கட்டிய பல வண்ண பொடிகள் தூவிய பண்டங்கள் கேரிப்பைகளுக்குள் கட்டப்பட்டு வண்டிமேசை முழுவதும் அடுக்கப்பட்டுள்ளன.  அடுக்கியதை பெறுவதற்கே வண்டிகளில் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.. அந்த இடைஞ்சல்களுக்குள்ளேயே கடைக்காரனின் கைகள் அவ்வப்போது ஒவ்வொரு பண்டங்களையும் துலாவுமாறு போய் சரியான பொருளை எடுத்துக் கொடுக்கிறது. துலாவும் கைகளுக்கான முகங்கள் எல்லாம் வண்டிக் கடையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த முகங்கள். இதற்கு எதிரில் பாட்டி வண்டியற்ற தனது திறந்தவெளி கடையைத் திறக்க தொடங்கினாள்.

      குனிந்தபடி கைநரம்புகள் புடைக்க அடுப்பைத் தூக்கிக்கொண்டு கால்களின் வளைந்த நகங்களற்று மூடிய கருநிற விரல்களை ஊன்றி விறுவிறுவென்று வந்த பாட்டி  மண் அடுப்பைக் கீழே வைத்த பின்பும்கூட நிமிரவில்லை. நிமிர்ந்திருந்தாலும் அவளுக்கு அதிக உயரம் இருந்திருக்காது. காக்கைகள் கூடுகட்ட பொறுக்கி வைத்திருந்த குச்சிகளை எல்லாம் வயர் கூடைக்குள்ளிருந்து அவள் கொட்டியதை ஆங்காங்கே நின்று கொண்டிருந்த காக்காக்கள் நோட்டமிட்டன. 

  எதையும் கண்டுகொள்ளாதவளாக குச்சிகளை அள்ளி அடுப்புக்குள் போட்டாள். வெளியே நீட்டிக்கொண்டிருந்த குச்சிகளை இரண்டு வசவு சொற்களால் ஒடித்து திணித்து பழைய செய்தித்தாள் ஒன்றைக் கிழித்து போர்த்தி  வடைசட்டியால் அடுப்பை மூடிவிட்டு ஆங்காங்கே சிதறிக்கிடந்த பாத்திரங்களையெல்லாம் சரிபடுத்தி முன்னாலிருந்த டிவி டேபிள் மேலே தட்டு ஒன்றில் அவித்த கப்பக்கிழங்குகளை பரப்பி வைத்தாள். தூசுகள் போகாதவாறு கிழிந்த வெள்ளை பேப்பர் கொண்டு தட்டு மூடப்பட்டது. காற்றில் பேப்பர் தூக்கப்படும் போதெல்லாம் வரிக்குதிரை குதித்து அமர்கிறது. 

 

     நான் இங்கு இறங்கியிருக்கக்கூடாதென கடுமையான பசியில் புலம்ப முடியாமல் பொறுமிக்கொண்டிருந்தான் மருண். அந்த வெயிலில் அவனால் அதை மட்டுமே செய்திருக்க முடியும். ஒரு மரம் கூட சாய்ந்தொதுங்க வளர்க்கப்பட்டிருக்கவில்லை. வளர்க்கப்பட்ட மரங்களில் அடைக்கலம் புக ஐந்து கிலோமீட்டர் நடந்து சென்று மதில் சுவரைத் தாண்டி குதிக்க வேண்டியிருந்தது. வளர்ந்த மரங்கள் எல்லாம் வரிசையாக வெட்டப்பட்டு விட்டன . பூச்சிகளுக்கு மட்டும் நிழலாக நடுரோட்டில் மேடை போட்டு செடிகளும் பூக்களும் வளர்க்கப்படுகின்றன.

      செடிகளுக்குள் அடைக்கலம் புகும் பூச்சிகள் மீது அடிக்கப்படும் வெளிச்சம் இருளின் தனிமைச் சாவை விட கொடுமையானதாக மாறுகிறது. எல்லா  பூச்சிகளுடைய  றெக்கைகளிலும் கிழக்கு கடலை போல நிறம் மாறி அரிப்பு ஏற்படுகிறது. றெக்கையின் வெளுப்பை சொரிந்து கொள்ள நீள்வதற்கு கைகள் மறுக்கின்றன. மேலேறி வரும் கடலின் அலைகள் என்னை எடுத்துக்கொண்டு போய்விடாதா? என்று இரவில் கதறும் பூச்சிகளுக்கு வெக்கை காற்றும் வெயிலின்  நிழலும் பழக்கமாகி வருகிறது. காக்காக்களின் பிதுங்கின  கண்களில் சிசிடிவி கேமரா சிவப்பு ஒளியின் பன்மடங்கு கூர்மை மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தின் மீது விழுகிறது. விழுந்த பார்வைகளின் காட்சிகளை சூத்தில் இரத்தம் வடிய நடந்து வந்த நாய் தன் வாலால் தள்ளியதை காக்காக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

     இது எதையும் கவனிக்காமல் பாட்டியின் மீது தன் கவனத்தை காக்கா கூட்டங்களில் சேராத காக்காவில் ஒருவனான மருணும் குவிக்கிறான். கிழிந்த பேண்டுக்குள் கைகளால் காலைத் தடவியும் ஒரு ரூபாய் கூட தேறவில்லை அற்புத விளக்கைத் தடவி இருந்தாலாவது ஜீனி  கப்பக் கிழங்குகளையோ இரண்டு வடைகளையோ பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பயறு வகைகளையோ கொடுத்திருக்கும். இதற்கு மேலும் தடவினால் முடிகள் உதிர்ந்து எரிச்சல் வருவதை தவிர வேறு எந்த பலனும் இல்லை. புதிதாக விற்கப்படும் பேண்டுகளே கிழிந்திருப்பதால் இப்போதெல்லாம் கிழிந்த பேண்டுகளை எவ்விதக் கூச்சமுமின்றி அவனால் போட்டுக் கொள்ள முடிகிறது.

    பாட்டியின் சிக்கு பிடித்து வாராத தலைமுடி எண்ணெய் மொழுகி சீவிய ஜீனியின் கொண்டையாக மாறப்போவதில்லை. அவளது நரம்புகள் படர்ந்த கால்கள் வாலாகவும் ஒட்டிய வயிறு வீங்கித் தள்ளிய தொப்பையாகவும் பூ விழுந்த கண்கள் பிரகாசிக்கும் சூரியனாகவும் கூன் விழுந்த முதுகு திமிர் ஏறியதாகவும் உருமாற்றம் அடைவதற்கு இந்த வெயிலில் சாத்தியமேயில்லை. வெயிலில்லாமல் மழை வந்தாலோ குளிரடித்தாலோ கூட இது எதுவும் நடக்கப்போவதில்லை. திண்பதற்கு ஏதாவது கொடுத்து அவள் ஜீனியாக மாற முடியும்.

  ஆனால், அவள் ஜீனியாக மாறுவதற்கான இந்த எளிய வழியை அறிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை. பெட்டிக்கடைக்குள் இருந்து திடீரென எழுந்து குரல் கொடுக்கும் கடைக்காரர்களைப் போல டிவி டேபிளுக்கு பின்னே குரலற்று அவள் உட்கார்ந்து தன் வேலையைச் செய்கிறாள். அவனது கைகள் ஒழுங்கமைக்கப்பட்ட இயந்திரத்தைப் போல தன்னிச்சையாக எதையும் கவனத்தில் கொள்ளாது தன் பாட்டுக்கு வயிற்றுப் பாட்டுக்கு வேலை செய்கிறது.

    ஆங்கில எழுத்துகளில் வண்ண பல்புகளையும் வண்ண பல்புகளால் ஆங்கில எழுத்துகளையும் பகுமானமாக முகப்பில் ஏந்தி நிற்கும் சுற்று வட்டார கடைகள் எதிலும் வடை கிடைப்பதில்லை. பப்ஸ், ரோல் வகையறாக்கள் தான் கண்ணாடி கூண்டுக்குள்  வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை திண்பதற்குள் படாதபாடு பட வேண்டி இருக்கிறது. தாடியும் மீசையும் ஒரு பப்ஸை வாங்கித் திண்பதற்குள் நரை வண்ணம் பூசப்பட்டு விடுகிறது. சட்டைகள் எல்லாம் ஜிகினாக்களைப் போல பப்ஸ் உதிரிகள் ஒட்டிக் கொள்கின்றன. வடையைக் காண்பதும் பிய்த்து திண்பதும் அருகி வரும் பகுதியாக பாட்டி உட்கார்ந்திருந்த சுற்றுவட்டார பகுதி மாறி வருகிறது. மண் அடுப்பும் அவள் சுட்ட ரேகைகள் ஒட்டிய வடைகளும் வருங்காலத்தில் தொல்லியல் ஆய்வாளர்களால் கூட கண்டறிய  முடியாதனவாக மாறலாம். 

   ‘என்ன தம்பி பாட்டி வடை சுட ஆரம்பிச்சிருச்சா’ என்று ஒரு அக்கா கேட்கிறாள்.

    புதிதாக வந்து உடன் நின்றவர்கள் ஆயா வடை தான் சுடப்போகிறதா? இல்லை வேறெதுனும் புது தீனி செய்கிறதா? என்று விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

   ஐம்பது அடி தூரத்தில் கைலியை பிடித்துக் கொண்டு தன் கையை பார்த்து ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார்.

    சுற்றியுள்ள எல்லோருடைய வாயிலிருந்தும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு வார்த்தையாவது வெளிவந்த வண்ணமே இருக்கிறது. பாட்டி மட்டும் குச்சியை திட்டியதைத் தாண்டி வேற எதுவும் இதுவரை பேசவில்லை.

  மருண் லேசாக பாட்டியிடம் பேச்சு கொடுத்தான். ‘என்ன பாட்டி வடை சுடுறீங்களா?

  பதில் இல்லை.  ஒருவேளை காது கேட்காமல் இருக்குமோ என்று மீண்டொரு முறை கேட்டான். லேசான தலையசைப்பு மட்டுமே பதிலானது. அவளுக்கு பதில் சொல்ல விருப்பமில்லாததாலோ வேலை நிறைய இருந்ததாலோ  தலையை மட்டும்  அசைத்தாள். பாட்டிகள் ஓயாமல் பேசி பேசி காதுகள் முழுக்க மணல்  சலித்துக் கொண்டிருக்க இவ்வளவு வாயிலிருந்து மட்டும் வார்த்தைகள் வருவதற்கு தள்ளாடுகின்றன.

   எனக்கு மட்டும் வேலை இல்லையா, என்ன? பாட்டியைப் பார்த்தால் திமிர் பிடித்தவளாகத் தெரிகிறாள். அவளது திமிரில் ஒரு வசியம் இருக்கிறது. இளைஞர்களுக்கு பிடிக்குமென பெரும்பான்மை பெண்கள் தங்களுக்குள் நினைக்கும் எவ்வித ஒப்பனைப் பூச்சும் அவளிடம் இல்லை. தன்னை ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரிடமும் நியாயப்படுத்தும் வண்ணம் இதுதான் என் குணமென ஒப்பிக்கும் செயற்கை வசனங்கள் ஏதுமற்று இயல்பாய் ஒளிரும் அவரது நடக்கையைப் பார்த்து மேலும் மூன்று இளைஞர்கள் அவளைப் பார்க்கத் தொடங்கினர்.

  புதிய இளைஞர்கள் மூவரும் எங்கோ செல்வதற்கு அந்த நிறுத்தத்தில் இறங்கி இருந்தனர்.  அவர்களை அழைத்துச் செல்ல வருபவர்களின் தாமதத்திற்கு இடையில் எவரேனும் அவர்களுக்கு பொழுதுபோக்காக  அமைவார்களா? என்கிற எதிர்பார்ப்பு அவர்களது தோளில் உட்கார்ந்திருந்தது.  பேசுவதற்கெல்லாம் சிரிப்பவனாகவும் சிரிப்பதை வைத்தே பேசுபவனாகவும் பேசுவதையும் சிரிப்பதையும் கண்டிப்பவனாகவும் முவ்வேறுபட்டவர்களாக அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். 

    “டேய் இந்த பக்கம் நிற்போமா? இல்ல அந்த பக்கமா  போவோமா?”

 “எங்குட்டு நின்னாலும் ஒன்னு தாண்டா. எங்கெயாவது நிழல் இருக்குதான்னு பாரு. ஓரமா ஒதுங்கலாம்.“

   “அந்த போர்டுக்கு பின்னாடி மட்டும் தான் நல்லா இருக்கு வேணும்னா போய் நின்னுகோங்க”

   மூவரில் ஒருவன் தகர விளம்பர பலகைக்குப் பின்னே வெயிலின் கண்ணில் படாதவாறு ஒளிந்து கொண்டான். வெயிலின் நேரடி தாக்குதலைவிட தகரத்தின் சூடு குறைவில்லை. இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு வாட்டின. வெயிலிலும் ஏதாவது சூடாக திண்ண வேண்டும் போல் இருந்தது. ட்ராமாட்டிக் படத்தைப் போல பாட்டியை பார்த்துக் கொண்டிருந்த மருணுடன் மூவரும் இணைந்தனர். பாட்டியின் வசியம் வித்தியாசமானது. அவள் நேரடியாக மந்திரம் ஏதும் சொல்லி அவர்களை ஈர்க்க வேண்டியதற்கு அவசியம் இல்லை. அவளது எல்லை கோட்டைக்குள் வருபவர்கள் தானாகவே அவளைப் பார்த்து  மயக்கமடைவர். காக்காக்களோடு  சமரிட்டு தன்  கோட்டைகளையும் வடைகளையும் காப்பதே அவளது  அன்றாடம். 

 நால்வரையும் சுற்றியிருந்த இடங்களெல்லாம் புரள்கின்றன. பக்கத்திலிருந்த சாலை நழுவடைகிறது. கடைகள் சில்லு சில்லாக உடைந்து தெறிக்கின்றன. மின்கம்பங்களில் நிற்கும் கொடிய காக்கைகளின் கண்கள் ஏக்கத்தின் விளையாட்டை விளையாட தொடங்குகிறது.  கம்பங்கள் மரத்தூண்களாகின்றன. மின் வயர்கள் கொடிகளாய் படர்கின்றன. தார் மண்ணாக உடைந்து நொறுங்குகிறது. மருணும் மூன்று இளைஞர்களும் கற்பனையற்ற மூதாதை நிலத்திற்குள் செல்ல ஆயத்தமாகினர்.

    பௌவ்வ்….. ஈ.சி.ஆர் திருவான்மியூர் என்ற போர்டு மாட்டிய பேருந்து சடக்கென நிற்கிறது. பேருந்திற்கு முன்னால் வளைந்த காரும் காரில் இருந்தவர்களும் காயமின்றி தப்பினர். ஆயத்தமான இவர்களது பயணம் ரத்தானது. நெடுஞ்சாலைகளில் இப்படி திரும்புவது ஆபத்தனாது. அதிலும் திருப்பத்தையொட்டி கடையொன்றை வைத்து உட்கார்ந்திருந்தால்….

   வடைசட்டியில் ஊற்றப்பட்டிருந்த பழைய எண்ணெயில் கருப்பு மட்டுமே தெரிகிறது. விளம்பரத் தாள் ஒன்றைக் கிழித்து பற்றவைத்து அடுப்பினுள் போடவும் புகைபரவி தீ பிடிக்கிறது. மண்ணெண்ணெய் ஊற்றாமல் இவ்வளவு வேகமாக தீயைப் பற்றவைத்துவிட்டாளே. அவள் பற்ற வைத்த ஓசையை கேட்டு காக்காக்களும் நரிகளற்ற நெய்தல் நிலத்தின் நாய்களும் தங்களை தயார்படுத்திக் கொண்டன .

  கூடைக்குள் மடக்கி வைத்திருந்த பழைய எண்ணெய் கவர்களிலிருந்து ஒன்றை எடுத்து அடுப்புக்குள் போடவும் பாலிதீன் வாடை குப்பென அடித்து கடற்கரைப் பக்கம் ஒதுங்கியது. புதிய பாமாயில் பாக்கெட்டை அரிவாள்மனையால் வெட்டி எண்ணெயை வடைசட்டியில் ஊற்றவும் லேசாக எண்ணெய் கலங்கியதை கண்டுகொள்ளாதவளாக நாளைக்கு தீயெறிக்க எண்ணெய் கவரை சேமித்தவளாக தலையைத் தூக்கிப் பார்க்கிறாள். 

   பலவித போர்களை காலம் முழுக்க சந்தித்து வந்தவளுக்கு இன்று நடக்கும் போரில் புழுதி பறப்பது பிடிக்கவில்லை. பக்கத்திலிருந்த வாளியில் கப்பக்கிழங்கு அவித்த கசடுத் தண்ணீரை கடைக்கு முன் தூசு பறக்காதவாறு ஊற்றி விடவும் புழுதி பறப்பது குறைந்தது. 

   இதெல்லாம் நடப்பதற்கும் ஐம்பது அடியைக் கடந்து கைலியைத் தூக்கி கட்டிக்கொண்டவர் கப்பக்கிழங்கு வாங்க வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. அவரைத் தொடர்ந்து வரிசையாக வண்டியிலும் காரிலும் வந்தவர்கள் எதுவும் பேசாமல் காசைக் கொடுத்து பயறு பாக்கெட்டுகளையும் கப்பக்கிழங்குகளையும் எடுத்துவிட்டுப் போகின்றனர். காக்காக்களையும் நால்வரையும் தவிர்த்து வேறெவரும் வடைக்காக காத்திருக்கவில்லை. 

   வடைமாவு வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தின் தட்டு திறந்தவுடன் காக்காக்கள் பாட்டியின் கடைமீது படையெடுக்கத் தொடங்கிவிட்டன. பற்றாக்குறைக்கு இரண்டு நாய்கள் வேறு. கொலைவெறிக் கண்களோடு கொதிக்கும் அடுப்புக்குள்ளிருக்கும் வடையைக் கூட கொத்திச் செல்ல அவை பயிற்சியெடுத்து வந்திருப்பது பறந்து வரும் வேகத்திலேயே தெரிகிறது. கையிலிருந்த குச்சிகளால் காக்கைகளைத் துரத்துகிறாள் பாட்டி. காக்கைகள் அவளை வளையம் விடுகின்றன. பாட்டிக்கு ஒத்தாசையாக அவற்றை துரத்திய பின் நாய்கள் எச்சில் வடியும் நாக்குகளுடன் அருகில் வருகின்றன.  

    இப்போது எதிலும் கவனம் செலுத்தாது தட்டில் பிணைந்து வைத்திருந்த மாவினை உருட்டித் தட்டி வடை போடத் தொடங்கியவுடன் ஒவ்வொருவராக பண்டங்களை வாங்க வருகின்றனர். இடையில் காசு கொடுப்பவர்களிடம்  இடதுகையை நீட்டி காசை வாங்கப் போனாலும் அவர்கள் தருவதில்லை. தகர டப்பாவிற்குள் போட்டுவிட்டு தன்பக்கமாக எதிரிலிருக்கும் கடற்கரைக்குள் செல்கின்றனர்.

  மேலும் கீழுமாக ஏறியிறங்கி எண்ணெயைக் கலக்கி வடை பொறிகிறதைக் காண பொறுக்காத மூவரும் இருபது ரூபாய்க்கு பத்து வடைகளை சுருட்டி வாங்கித் திண்ண ஆரம்பித்தனர். மற்றொரு பத்து ரூபாயை நீட்டி வடையைக் கேட்டதற்கு முனங்கிக் கொண்டு உங்களுக்கா வடை என மறுத்தாள். வடைகள் சுடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

 

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு