விளிம்புநிலை மக்களின் குரல்களை மையப்படுத்தும் தனிச்சொல் -தெங்காசியன்


விளிம்புநிலை மக்களின் குரல்களை மையப்படுத்தும் தனிச்சொல்  -தெங்காசியன் 

      தமிழ் இலக்கியச்சூழலில் தீவிரவாசிப்பு குறைந்து, விமர்சனங்களும் குறைந்து இணையவழியிலான முகநூல் மற்றும் புலனவழி பதிவுகளோடு தங்களின் விளம்பரதாகத்தைத்  தீர்த்துக்கொள்கின்றன. இந்நிலையில் சிறுபத்திரிக்கைகள் குறித்து பேசுவதும், கலந்துரையாடுவதும் காலத்தின் தேவை என்றே கருதுகிறேன். ஏனென்றால், மொழிவயப்பட்ட இச்சமூகத்தின் மொழியையும், அரசியலையும் வெளிப்படுத்துவதில் சிறுபத்திரிக்கைகள் முன்னிலை வகிக்கின்றன. இவை இலக்கணம், இலக்கியம், வரலாறு, கலைகள் முதல் தற்கால சிறுகதை, நாவல், கவிதை, சினிமா போன்ற வகைமைகளில் தங்களின் நவீன விமர்சனங்களை முன்னிலைப்படுத்தி எழுத்து, மணிக்கொடி, வானம்பாடி, கசடதபற, கார்க்கி, சிற்றேடு போன்ற சிற்றிதழ்கள் தீவிரத்துவம், அமைப்புவாதம், நவீனத்துவம், யதார்த்தவாதம், விளிம்புநிலை என்ற பார்வையில் நவீனஇலக்கியம், முற்போக்கு இலக்கியம், மாற்று இலக்கியம் என்றெல்லாம் முன்வைக்கப்பட்டது. இங்கு சந்தைபடுத்தலினூடாக முதலாளித்துவம், சுரண்டல், ஆதிக்கம், பாகுபாடு போன்ற விடயங்களை தவிர்க்க முடியாது என்றாலும், சில சமுதாய சீர்திருத்தத்தின்போது வரும் சிக்கல்களை கட்டவிழ்த்து அதனை தகர்ப்பதும் அதன்வழி புரிந்து சமத்துவத்தை பொதுமைப்படுத்துவதும் இங்கு தவிர்க்க முடியாத சூழலாக மாறியுள்ளது.  

      சிற்றிதழ்கள் அச்சு ஊடகமாகக் கொண்டு பலமரபார்ந்த அபத்தங்களையும், தற்பெருமைகள் புனைந்து வணிகரீதியான பார்வையில் வெளிவரும் தற்போதைய சிறுபத்திரிக்கை சூழலில் பிரேம், ஜமாலன், மாலதிமைத்ரி, ஜவகர் ஆகிய தோழர்கள் ஒருங்கிணைந்து 2022 தனிச்சொல் என்ற குழு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து விளிம்புநிலை சார்ந்த படைப்புகள் மற்றும் படைப்பாளர்களை கொண்டு இணையவழியாகவும், நேரடியாகவும் கூட்டங்களை ஒருங்கிணைத்து பன்மை அரசியலை உரையாடல் வழியாக மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தியது. உரையாடல் அனைத்தும் ஆவணப்படுத்தல், இன்றைய தலைமுறையினரை திறனாய்வுபார்வையில் எழுதுவதற்காக அச்சுஊடகம் தவிர்த்து இணையத்தின் உதவியுடன் தனிச்சொல்என்ற மின்னிதழ் கடந்த ஜூலை மாதம் கொண்டு வரப்பட்டது. பொதுவாக விளிம்புநிலை மக்களின் குரல்களாக நீலம், தலித், தலித்முரசு போன்ற இதழ்கள் வந்தாலும்,   இவ்விதழ்கள் விளிம்புநிலையில் உள்ள அனைத்து சமூகங்களின் விடுதலை மற்றும் பாகுபாடு, பொது பாலின மற்றும் பால்புதுமையர் விடுதலை,  பொதுபாலின மற்றும் பால்புதுமையர் ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடுகளை பேசிகிறதா? என்றால் சந்தேகம் தான். பொதுவாக பிராமணர் × தலித், இடைநிலைசாதி × தலித் என்ற அரசியலை மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறது. ஆனால் தனிச்சொல் இதழானது விளிம்புநிலை மக்களின் குரலாக ஒலிப்பதோடு அன்றி விளிம்புநிலைக்குள் இரட்டை ஒடுக்குதலுக்கு ஆளாகின்ற சமூகங்கள், பாலினங்கள், பால்புதுமையர், மாற்றுத்திறனாளர், பழங்குடியினர், புலம்பெயர்வு மற்றும் சூழலியல் ஆகிய விளிம்புநிலை மக்களின் குரல்களை மையப்படுத்தும் நோக்கில் தனிச்சொல் தனது முதலாவது இதழில் கவிதை பகுதியில் வாங்கடா(பால்புதுமையர்), புனிதத்தீட்டு (பால்புதுமையர் , சாலையோர சந்திப்புகள் (மாற்றுத்திறனாளர்), பன்றிப்பாடல் (தலித்தியம்), கட்டுரை பகுதியில் தலித்துகளையும்- பெண்களையும் குறிவைக்கும் குடியரக்கன், பாலிழிவு: வேதமரபு, செவ்வியல் மரபு, வாய்மொழிமரபு, மேலோர் அடையாளங்களும் மூலக்கூறு உருவாக்குதலும்- பாலின அடிமைகள், சூழலரசியல், நூல் விமர்சனப்பகுதியில் கிறிஸ்துவத்தில் ஜாதி, திருநங்கைகளின் வலிகளால் ஆன பனுவல் உணர்த்தும் உருவமும், சிறுகதைப்பகுதியில்- பொழப்பு (தலித்தியம்). மேற்காண் தனிச்சொல் இதழில் உள்ளடக்கப் பகுதியினை காணுகையில் தனிச்சொல் இதழ் எந்த மக்களின் வாழ்வியலை, குரல்களை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதோ அந்நோக்கத்தில் விளிம்புநிலை மக்களின் குரல்கள் தனிச்சொல் இதழில் செயல் மொழியாக ஆக்கம் பெற்றிருப்பதைக் காண முடிகின்றது. சிறுபத்திரிக்கைகள் தோன்றிய வரலாற்றை நோக்குகையில் ஏதோ ஒரு நோக்கம் கொண்டு எழுச்சியுற்று ஆரம்பிக்கப்பட்டாலும், படைப்பாளரின்றி, வாசகரின்றி, பாராட்டுகளின்றி, தரமின்றி தொடர்ந்து இதழை நடத்தமுடியாமல் மறைந்திருக்கின்றன. ஆனால் தனிச்சொல் பிந்தைய இதழ்களின் வரலாறு தெரிந்தும் ஒரு கடினமான பாதையை தேர்ந்தெடுத்து அதில் எந்தெந்த மக்களின் குரலாக இயங்கப்போகிறோம் என்ற உறுதியுடன் தனிச்சொல் இதழ் தனது படைப்புகளை தொடர்ந்து கொண்டுவரும் என வாசகர் பார்வையில் எதிர்பார்ப்போம்.

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு