அக்னி நட்சத்திர கர்ப்பம் - வேலாயுதம் பொன்னுசாமி

 

அக்னி நட்சத்திர கர்ப்பம் - வேலாயுதம் பொன்னுசாமி 

      கடல் கர்ப்பம் தரிக்கும் காலம் குறித்து முன்னாள் செம்மலர் ஆசிரியரும் எமது ஆசானுமான எஸ்.ஏ.பெருமாள் கூறக் கேட்டிருக்கிறேன். கரிசலின் முன்னத்தி இலக்கிய ஆளுமை கி.ரா அவர்களது கதைகள் அடைமழை காலத்தில் கர்ப்பம் தரிக்க எழுத்தாளர் எஸ். லட்சுமணன பெருமாள்  கதைகளோ அக்னி நட்சத்திர காலத்தில் கர்ப்பம் தரித்ததாக ஒரு படிமம் என்னுள் உருக்கொள்கிறது. எதார்த்தவாதம் என்பது  இருப்பதை  அப்படியே கூறுவதல்ல. இருப்பது எப்படியாக மாற வேண்டும் என்பதை கூறுவதாக  இருக்க வேண்டும் என்பார் பொதுவுடமை சித்தாந்த ஆசான் ஏங்கெல்ஸ். மற்றொருபுறம் கதை சொல்லியின் கதை சொல்லல் வழியாகத் தான் புனைவின் கரு உருவாகிக் கொள்கிறது என்ற ஒரு பின்நவீனக் கருத்தும்  இருக்கிறது. எழுத்தாளர் எஸ்.லட்சுமண பெருமாள் தன் வாழ்வியல் அனுபவம் சார்ந்து கண்ட மனிதர்களை, கதை மாந்தர்களாக புனைவில் உருக் கொடுத்துள்ளார். இதில் தனித்துவமற்ற மனிதர்களைத் தனித்துவமானவர்களாகவும், மேலும் அவர்களுக்கு தனித்த குணாம்சங்களை ஏற்றி உயிர் துடிப்புள்ள தனி மனிதர்களாகக் காட்டுகிறார். பொது சமூக வாழ்க்கையை மட்டுமல்லாது,  தொண்டை மண்டலம், கொங்கு, நடு நாடு, நதிக்கரை,  கரிசல், நாஞ்சில், வடசென்னை போன்ற வட்டார வாழ்வுகளையும் இணைத்ததாகவே தமிழ் இலக்கியம் பரப்பு விரிந்திருக்கிறது. இவற்றின் உட்பிரிவுகளாக தலித்திய, பெண்ணிய எழுத்துகளும் தங்களது இடங்களை கோரி நிற்கின்றன. இதில் தனது கரிசல் பகுதியை வாய்மொழி கதை சொல்லும் முறையில் அமைந்த  நாட்டார் மரபையும் அதனைத் தொடர்ந்து உருவான சங்கத் திணை மரபின் கூறுகளும் முயங்கும் எழுத்தாக லட்சுமண பெருமாள் எழுத்து முறை இருப்பதாக அறிய முடிகிறது. ஒரு தமிழ் எழுத்தாளர் கரிசல் இலக்கியத்தை பாலைத்திணையுடன் ஒப்பிடுகிறார். மழையை விரட்டும் கரிசல் என்று முன்னத்தி ஏர் கி.ரா குறிப்பிடுகிறார். "முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" என்கிறது சிலப்பதிகாரம். இது சரியா? தவறா? என்பதை உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன் அன்பர்களே.

    "ரசிகமணி டி.கே.சி.யின் பேரன் தீப. நடராஜன் "கரிசல், விந்தை உலகமாக இருக்கிறது, தோண்டத் தோண்ட அந்த மண்ணில் இருந்து என்னென்னமோ கிடைக்கின்றன" என்று பிரமிக்கிறார். அப்படியாக எது கரிசலின் வசீகரமாக இருக்கிறது? என்பதை புனைவெழுத்துக்கள்  வழியாக கண்டடைந்தால், கரிசல் மண் சார்ந்த வாழ்வை பின்புலமாகக் கொண்ட மக்களின் இயல்பு, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சமூக உறவுகள், சடங்குகள், உணவுவகைகள் (நெல்லுச்சோறு கரிசல் மக்களுக்கு எட்டாக்கனி. அப்படி 40 வருடங்களுக்கு முன் கதை எழுதி இன்றும் பேசப்படக்கூடியவர் எழுத்தாளர் திடவை.பொன்னுசாமி) தொன்மங்கள், கலைகள், தொழில், அதில் அடைந்து வரும் மாற்றங்கள், ஆற்றாமைகள், தவிப்புகள், சமூக உறவுகள், சொலவடைகள், விடுகதைகள், விளையாட்டுக்கள், கனவுகள், இதனுடன் பின்னிப் பிணைந்த கேலி  கிண்டல் மற்றும் பண்பாட்டு மதிப்பீடுகள், என்று கரிசலின் தனித்துவத்தை  பட்டியலிடலாம்... எழுத்தாளர் லட்சுமண பெருமாள் கதை உலகம் இவைகள் அனைத்தையும் உள்ளடக்கி "நிலம் இல்லை என்றால் மொழி இல்லை என்ற பிரஞ்ஞையுடன் , ஐந்து பூதங்களில் ஒன்றான தன் கரிசல் நிலத்தை அணுவணுவாக எழுத்துக்கு கடத்தியிருக்கிறார். ஆம்  புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மொழியே நிலமாக இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பாடம்.... பேசப்படாத மொழியும், சொல்லப்படாத நிலமும் அழிந்து போகும் என்பது மானிடவியல் அறிஞர்களின் கருத்து. கரிசல் பூமியில் டைட்டானியம் தாதுக்கள் அபரிமிதமாக இருக்கின்றது, என்று அறிவியல் கண்டுபிடிப்பு கூறிவிட்டால் கரிசல் மக்கள் அனைவரும் புலம்பெயர்வதைத் தவிர மாற்று வழி இருக்கிறதா? அப்படியான சூழலில், எழுத்தின் நினைவுகளில் மட்டுமே கரிசல் மிதந்து கொண்டே இருக்கும். புனைவின் இக்கண பரிமாணத்தை உணர்ந்து கொண்டால், தோழர் லட்சுமணப் பெருமாள் போன்ற கரிசல் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எவ்வளவு பெரு மதிப்பு கொண்டது என்பதை வாசகர்களான நாம் அறிந்து கொள்ளமுடியும். தனிமனித மறதியையும் சமூக மறதியையும் மீட்டெடுத்துக் கொண்டே இருப்பது புனைவுகளே. இப்போது நடந்து கொண்டிருக்கும், இலக்கிய உரையாடல்கள் மூலம் கரிசலின் தவிலையும் நாதஸ்வரத்தையும்  இசைக்கச் செய்த, தலைமையை வளர்ச்சிக்காக தகர்ப்போம் என்பதில்  பெரும் நம்பிக்கை கொண்ட பாரம்பரியமிக்க கோவில்பட்டி த.மு.எ.க.ச தோழர்களுக்கு அன்பும் மரியாதையும். மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் "கரிசல்" என்ற அமைப்பை ஏற்படுத்தி இப்பண்பாட்டை மீண்டும் மீண்டும் மீட்டெடுக்கும் கிரேக்க தொன்ம, நாயகன் பிரமிதீயஸாக  நமக்கு கிடைத்திருக்கிறார்.

     பட்டியல் ஜாதி மக்களுக்கு துணி வெளுக்கும் புரதவண்ணார் வாழ்வு குறித்து  எழுத்தாளர் இமையம் கோவேறு கழுதைகள் நாவலில் உரையாடி இருப்பார். இப்படி தமிழ் புனைவு மரபில் அரிதினும் அரிதான விளிம்பிலும் விளிம்பான‌ ஒர் கதை எழுத்தாளர் எஸ்.எல்.பி.யின் *கிருஷ்ணப் பருந்து*.. பட்டியல் ஜாதி மக்களிலும் மிகக் கீழான ஜாதியாகப் பார்க்கப்படும் பிணம் எரிக்கும் புலைய மக்களுக்கு, முடி திருத்துதல் போன்ற குடிமைவேலை செய்வது முத்துக்கூத்தன் பரம்பரையின் தொழில். புலையர்கள் தங்களுக்கு கிடைக்கும் கூலியில் இருந்து, ஜீவனம் செய்து கொள்வது, தீண்டான் ஜாதியை சேர்ந்த முத்துக்கூத்தனின் வாழ்க்கையாதாரம். தீண்டான் ஜாதி முத்து கூத்தனுக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கும் புதைப்பதற்கு நிலம் இல்லா தவிப்பையும் இவர்களுக்குள்  நிலவும் பண்பாட்டு அசைவுகளையும், நாம் அறிந்திடாத களத்தில் இருந்து பேசுகிறது, இக்கதை. தமிழின் மிகத் தனித்துவமான கதையாக வாசகனாகிய நான் உணர்கிறேன். துடி, மருவாதி ஆகிய இரு கதைகள் தாழ்த்தப்பட்ட, விலக்கப்பட்ட, அதிகார அடுக்குகளால் அழுத்தப்பட்டுக் கையறு  நிலையில் இருக்கும் எளிய மக்களின் உளவியலை மிக நுண்தளத்தில் வைத்து பேசும் சிறப்பான கதைகள். ஆங்கிலத்தில் weapons of the weak  என்ற ஒரு வாக்கியம் உண்டு.. எளியோரின் ஆயுதம் எப்படி எல்லாம் சமூகத்தளத்தில் செயல்பட்டு தன்னை நிரூபித்துக் கொள்ளும் என்பதை பேசும் சிறப்பான வலியும் கேலியுமான கதைகள். நவீன தொழில்நுட்ப வரவால்  சூரங்குடி செம்மண்ணால் அடுப்பு செய்து விற்கும் கைவினைக் கலைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை சீரழிவை பிடிமானமாக புதிய தொழிலை பற்ற முடியாத அவலத்தை, அதற்கு கணவனும் மனைவியும் படும் பாடுகளை, சொல்லும் சாகஸம் கதையும் சங்க அகத்திணை பாடலில் இல்லாத தலைவி, தோழி இடையிலான உறவை சித்தரித்து, புறவுலகில் ராஜாத்தியாக வலம் வந்த  பச்சையம்மாள், அக வாழ்வை புரிந்துகொள்ள முடியாமல் தன் வாழ்வை சீரழித்துக்கொள்ளும்  செவ்வியல் கதைகூறல் முறையில் எழுதப்பட்ட மாலை பூத்த வேளை, கதை சங்கப்பாடலில் இல்லாத ஒரு அவல சித்தரிப்பு.. சாகஸம் போன்றே வயனம் சிறுகதையும். வாழ வழியற்று சாவதொன்று தான் தீர்வு என்ற ஜீவித நிர்பந்தத்தைத் தாண்டி, வாழ்தல் என்பதே ஒரு மாந்ரீக யதார்த்தம் தான் என்று வாசகனான என்னிடத்தில்.தோன்றுகிறது.. ஆறு மாத பச்சிளங் குழந்தையை, "வாங்கிக் கொள்ளுங்கள் பஸ்ஸில் ஏறி கொள்கிறேன் என்று விட்டுச் சென்ற பெண்ணின் நிர்பந்த நிராகரிப்பும், அதை வாங்கிய அயினு, குழந்தையை கொடுத்துச் சென்ற பெண்ணை தேடி கையில் ஏந்தி இதன் தாய் யாருமா? யாருமா? என்று கடைவீதிகளில் அலைந்து திரிய  ஏற்கனவே 6பெண் குழந்தைகளுடன் மரண ஜீவிதம் நடத்தி வரும் தன் மனைவி அய்யம்மாளுக்குப் பயந்து குழந்தையுடன் வீடு வந்து சேர  அய்யம்மாளோ, தேவமலரின்  கிறிஸ்துமஸ் மலர்கள் போன்று  மனம் பூரித்து, ஆத்தாள் கொடுத்த குழந்தை என்று பித்தநிலையில் கொண்டாடுகிறாள். இந்த அற்புதத்தை செய்து காட்டியவர் எழுத்தாளர் லட்சுமண பெருமாள்....

     சீதாப்பிராட்டியும் சீனிக்கொத்தனாரும் என்ற தலைப்பிலான கதை சினிமாவை உண்மை என்று நம்பும் மனித உளவியலுக்கு நெருக்கமாக, அன்று நாடகத்தையும் உண்மை என்று நம்பிய பொது உளவியலின் நுண் தளத்தையும், வயிற்றுப்பாட்டுக்காக நாடகத்தை நீட்டிச்செல்லும் அவலமும். எதார்த்தமும் கதையும் சிதறடிக்கப்படுவதை எஸ்.எல்.பி.க்கே உண்டான வளமையான நையாண்டி தன்மையுடன் கதையை சொல்லி இருப்பார். ஆதிப்பழி கதை தொகுதியின் "என்னுரை" சமீபத்தில் வெளியான வாழை திரைப்படத்தின்  போக்கிற்கு மேலான வலிமிகு உண்மைகள். இப்படி எழுத்தாளர் சு.லட்சுமண பெருமாளின் படைப்புலகம் குறித்து தனித்தனி தலைப்புகளில் ஆய்வுகளும், ஆய்வரங்கங்களையும் நடத்துவதற்கான அனைத்து தகுதிகளையும் உள்ளடக்கியது. தோழரின் கதைப்பரப்பின் மீச்சிறு பகுதியைத்தான் உங்களிடம் பகிர்ந்து உள்ளேன். ஒரு கரிசல்காரருக்கு மேற்கு மலைத்தொடர் அடிவாரத்தில் இருந்து வந்தவனின் அன்புகளும் வணக்கங்களும் இவ்வாய்ப்பை வழங்கிய கோயில்பட்டி த.மு.எ.க.ச  தோழர்களுக்கு அன்புகள்.

      (15.செப்டம்பர்,2024, ஞாயிற்றுக்கிழமை மாலை கி.ரா. நினைவு மண்டபம் கோயில்பட்டியில் நடந்த எழுத்தாளர் எஸ். இலட்சுமணப்பெருமாள் படைப்புகள் குறித்த ஆய்வரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு