கானகநாடன் கவிதை
ஒடுங்கிய வயிற்றுடன் காட்டின் மகள் நிலம் கிளறுகிறாள்
அந்தோ வந்தன அவளின் கொடியோடு பெருங்குடலும் சிறு மகவும்
பெருங்குடலில் மாட்டிய தந்தமிழந்த யானை அரமற்று விழிபிதுங்கி நெளிகிறது
கறுத்த மேனி
சிறுத்த கண்கள்
நரைத்த மயிர்
கனத்த நெஞ்சில் கானங்காத்த புலிகளும் மான்களும் வயிறு நெப்பிய தேனும் தினைமாவும் தாகந்தணித்த சுனையும் ஆவாரம்பட்டையும்
ஓவென்று கொட்டும் அருவியும்
ஓலங்கள் கட்டத்தில் அடங்கி இசைத்துக் கொண்டிருக்கின்றன
அதைக் கேட்கவும் நுகரவும் படைகள் பெருகிப் பண்ணாங்கு பாடுவதாகக் கேள்வி
நகர வீதிகளின் பெருங்கடைகளின் மின்வெளிர் ஓவியங்களில் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் கேள்வி
இறுதி மூச்சிழக்கும் பூமியின் ஆதிவிதைகளின் உயிர்நெடி
-கானகநாடன்
Comments
Post a Comment