சிதைத்த பின் செதுக்கும் மாயம் -அழகுராஜ் ராமமூர்த்தி
சிதைத்த பின் செதுக்கும் மாயம் -அழகுராஜ் ராமமூர்த்தி
படைப்புகளின் மீது வரும் உள்ளடக்கம் சார்ந்த எதிர்வினைகளைத் தவிர்ப்பதற்கும் எழுத்தாளர்களது சொந்தவுடைமையான சட்டதிட்டங்களாலான நகரங்களையும் நாடுகளையும் ஊர்களையும் உருவாக்குவதற்கும் கற்பனைப் பிரதேசங்கள் உருவாக்கப்படுகிறது. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் யுவன் சந்திரசேகரின் ஷொமிட்ஸியா முதலானவை அவ்வகைபட்டன. பலபடித்தான வாசிப்பு பார்வைகளில் ஒரு நிலையில் சேதுவின் பாண்டவபுரம் கற்பனையால் உருவாக்கப்பட்டதாலோ என்னவோ பல்வேறு வகைப்பட்ட உள்கிடக்கைகளை மாயநிலை எனும் போர்வையிலிருந்து மீறி வெளிப்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் பாண்டவபுரம் என்ற ஊர் ஒன்று இருக்கிறது. அந்த ஊரின் வரலாற்றில் தொடர்புடைய ஏதேனும் ஒரு பகுதி நாவலுக்குள் இருக்கிறதா என்பதை கூட நாம் தேடி பார்க்கலாம். மேலும் பாண்டவபுர திருவிழாவில் பத்தாம் உதயம் என்ற பெயரில் சித்திரையின் முதல் பத்து நாட்கள் கொண்டாடப்படும் செய்தி இருக்கிறது. பொதுவாக சித்திரை மாதத்தில் தொடர்ச்சியாக பத்து நாட்கள் வரைக்கும் கொண்டாடப்படும் திருவிழாக்கள் சமூகத்தை மையப்படுத்தாமல் ஊரை மையப்படுத்தி அமைவதாக இருக்கிறது இதற்கு இராஜபாளையத்தில் சித்திரை மாதம் நடக்கும் வெண்குடைத் திருவிழாவை ஒரு சான்றாகக் கொள்ளலாம்.
உண்மையான வரலாற்றையும் பண்பாட்டையும் குறியீட்டுப் பொருளாக எடுத்துக்கொண்டு சடங்கியல் முறைகளை மேற்கொள்ளாது அறுத்தெரிந்து நவீனத்துவ உருவாக்க முறையை சேது இந்நாவழில் பின்பற்றியிருக்கிறார். ஒரு புழங்குபொருள் வெவ்வேறு ஊரில் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படுவது போல கனவும் நனவு நிகழ்வும் ஒரு படித்தானதாக இருக்கிறது. இவற்றை ஒருங்கே வைத்து பார்க்கும் முடிவுக்கு வருவதற்கு முன்பிருந்தே பலவித குழப்பங்களை லாவகமாக கையாண்டிருக்கும் உத்தியால் சலனமின்றி வாசிக்கும் எண்ணம் நாவல் மீது உருவாகிறது. கனவு எது? நனவு எது? நனவில் நடப்பதாக நினைப்பது ஒருவேளை கனவாகிவிடக்கூடுமா? கனவில் நடந்தவை மட்டுமே நனவாக இருந்து நனவில் நடப்பவை மறைந்து போனால் என்ன ஆகும்? முதலான அடுக்கப்படும் பல கேள்விகளை வாசிப்பின்போதே எழுப்புவதில் நாவல் தேர்ச்சிடையந்திருக்கிறது. எழுத்தில் உண்மை, பொய், கற்பனை, புனைவுக்குள்ளான புனைவு என்பதையெல்லாம் தாண்டி நாவலின் ஆரம்பப் பகுதிகளை கடக்க வேண்டியுள்ளது. பின் குழப்பங்கள் என்பதை முடிச்சுகளாகக் கருதி அவற்றின் மீது கை வைக்க தொடங்கும் நிலையை அடையும்போதே நாவலில் இருந்து சில நுணுக்கமான வெளிப்பாடுகளை உணர முடிகிறது.
சமூகத்தின் இயல்புக்குள் நின்று கொண்டிருந்தாலும் எத்தனை புறம் சார்ந்த ஓயாத நெருக்கடிகள் சூழ்ந்து நின்றாலும் கற்பனையின் பக்கம் மனம் போவதற்கான காரணம் என்ன என்பதை மறைமுகமாக பாண்டவபுரம் கோடிட்டு காட்டுகிறது. பாண்டவபுரம் மனிதர்கள் ஒவ்வொருவரும் பிறிதொரு மனிதருடைய இருப்பை தனக்கு நெருக்கமானதென உணர்வதோடு நில்லாமல் அவ்வுணர்வினைப் பற்றிய ஓயாத கற்பனைகள் வழியே தங்கள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொள்கின்றனர். இந்த எதிர்பார்ப்பு என்கிற உரு மறைவதும் வளர்ந்து பெருகி இனவிருத்தி அடைவதும் அடுத்தகட்ட செயல்பாடுகளையும் சுற்றியுள்ள மனிதர்களையும் சார்ந்ததாக அமைகிறது. இரண்டு வகைப்பட்ட வாய்ப்புகளில் உருவை மறைய வைத்தல் என்கிற பாணியில் வெளிப்படும் நாவல்களில் எதார்த்த போக்கு மேலோங்கி வருகிறது. எதிர்பார்ப்பின் பெருக்கம் என்ற பாணியில் சென்றால் அது பலவித பரிமாணங்களாக தனது கைகளை நீட்டி விரிக்கின்றன. அத்தகைய நீட்டும் நடவடிக்கைகளில் புதிய உத்தி முறையை கையாளுவதில் கதை சொல்லும் முறை அடையாளம் பெறுகிறது. இதனடிப்படையில் பாண்டவபுரம் இரண்டாம் வகைப்பட்டதாக மாய எதார்த்த முறையை தனக்குள் கொண்டுள்ளது.
பெண் கதாபாத்திரங்கள் சிலவற்றை சமீபத்திய வாசிப்பில் கவனித்து வருகிறேன். ஒவ்வொருவரும் தனக்கான தனித்தன்மைகளை கொண்டவர்களாக காணப்படினும் காமத்தைக் காணும் புள்ளியில் கோபமும் வளர்ச்சியும் அச்சமும் கொண்டவர்களாக பல்வேறு மாறுபாடுகளுடன் வெளிப்படுகின்றனர். இதில் பாண்டவபுரம் தேவி கோபத்தின் உருவமாகத் தெரிகிறாள். அவள் கற்பனையோடு சேர்ந்து தனது கோபத்தையும் உள்ளூர வளர்த்தாலும் கற்பனை வளர்ச்சியை மட்டுமே வெளிப்படையாக முன்வைத்து கற்பனைக்குள் இருக்கிற இச்சை என்ற பிம்பம் கட்டமைப்புக்குள்ளாகிறது. இச்சை கோபமாக மாற்றத்தை அடையும்போது அவ்வளவு தூரம் நகர்ந்து வந்த கற்பனைக்குள் பிளவு ஏற்பட்டு புதிய மனம் ஒட்டுமொத்த பக்கங்களையும் நிரப்பக்கூடிய மாயம் நிகழ்கிறது. ஒட்டுமொத்த பக்கங்கள் என்பதற்குள் வாசிப்புக்கு உட்படாத பக்கங்களும் அடக்கமாக இருப்பது தான் இங்கு கவனிக்கத்தக்க அம்சம்.
இந்தியாவின் ஒற்றுமைகளுள் ஒன்று மைனர் கலாச்சாரம். சற்று நாகரீகமடைந்த இந்திய சமூக அமைப்பில் கலாச்சாரத்தின் சாயல் சிற்சில மாறுபாடுகளுடன் இந்திய நிலப்பரப்பு முழுக்கவும் படிந்திருக்கிறது. நான் சொன்ன மைனர் கலாச்சாரம் என்ற சொல்லுக்கான அர்த்தத்தை பிரபலமான தமிழ் திரைப்பட கதாபாத்திரமாகிய மைனர் குஞ்சுவின் வழியாக எடுத்துக்கொள்ளலாம். அப்படியான மைனர்களது ஹார்மோன் சேட்டைகளின் விளைவாக மாயவேட்டை ஒன்றை பாண்டவபுரம் நிகழ்த்துகிறது. பொதுவாக வேட்டையில் உயிரிழப்பே ஏற்படும். இங்கு வித்தியாசமாக நூற்றுக்கணக்கான மைனர்கள் மாய உற்பத்தியடைந்து பெண்களின் கற்பை வேட்டையாடுகிறார்கள். கற்பெனும் கற்பிதம் மீது நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு அச்சுறுத்தலாக மாறி நின்ற மைனர்களின் தோற்றத்தை தழும்பும் கீறலுமாக சித்தரித்து காமத்தனத்தின் விளையாட்டுக்காக காத்திருப்பதன் அமைதியான அலைவீசல் கடத்தப்பட்டிருக்கிறது.
பாண்டவபுரம் கற்களாலும் உடைந்த பாட்டில் துண்டுகளாலும் உருவாவதாக நாவலின் தொடக்கத்தில் கூறப்படுகிறது. பாண்டவபுரத்தின் மீது மாயத்தன்மையை புகுத்துவதற்கும் அங்குள்ள வீடுகளின் அமைப்பை விளக்குவதற்கும் மஞ்சள் வண்ண தகர மேற்கூரை என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிகப்பு தரையும் மஞ்சள் மேற்கூரையுமாக ஒரே அமைப்பில் வெள்ளைக்காரர்கள் காடுகளை அழித்து ஃபேக்டரிகளையும் காலணிகளையும் உருவாக்கியதாக இடம் குறித்த சித்தரிப்பு வலுவாகிறது. பாண்டவபுரத்தை உருவாக்கிய வெள்ளைக்காரர்கள் அந்நிலத்தில் இருந்தவர்களுக்கு வேலை கொடுத்து அங்கிருந்த பெண்களை உடைமையாக கொள்ள நினைப்பதை இவ்விடம் விளக்குகிறது. தங்கலான் படத்தில் வரும் ஒரு காட்சியில் அரசர்கள் முதல் முடியரசு காலத்திற்குப் பின் காலணியாதிக்க ஆட்சி நிலவிய காலம் வரை தொடர்ந்து வஞ்சிக்கப்பட்ட கோலார் மக்கள் தங்களது உரிமையை திரும்பப் பெறுவதற்கென தனது சூழலியல் உணர்வை எதிர்த்து செயல்பட தொடங்குவதாக படத்தின் காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது. தனது சூழலியல் வளத்தைவிட தனது உரிமையை திரும்ப பெறுவதை இலக்காக கொண்டிருப்பதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நில உரிமையைப் பெற பணம் தேவைப்படுகிறது. பணத்திற்கு மலையை உடைக்க வேண்டிய நிலை. பாண்டவபுரத்தில் அதேபோல காடழிப்பு நிகழ்ந்து தொழிற்சாலை தோற்றுவிக்கப்பட்டு வேலைகள் வழங்கப்பட்டதோடு புதிய காலணியும் உருவாக்கப்பட்டு வேலை செய்தவர்களது மனைவிமார்கள் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தங்க நாணயங்களுக்கு அடிமைப்பட்ட ஆடவர்களாக பாண்டவபுரம் ஆண்கள் இருந்திருக்கின்றனர். பாண்டவபுரத்து பெண்களும் படத்தில் வரும் மலையும் ஒரே நேர்கோட்டில் வைத்து பார்க்கதகுந்தவை. பாண்டவபுரம் ரயில்வே ஸ்டேஷன் இக்கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கதையின் எதார்த்தம் வழி மாயவாதம் புகும் இடமாக பாண்டவபுரம் ரயில்வே ஸ்டேஷன் இருக்கிறது.
சமூக வரலாற்றியல் நோக்கைக் கடந்த பாண்டவபுரத்தின் வேறொரு கதையும் ஆன்ம செயல்பாடும் ஒன்றுக்கொன்று விலகியும் இணைவதுமாக செல்கின்றன. பெண்ணுக்காக சண்டை போட்டு அழிந்த ஐந்து சகோதரர்களின் கதையைப் போல, பெண்களுக்காக அலைந்து திரிந்து வெறிபிடித்த கண்களைக் கொண்ட மைனர்களை காவு வாங்குவதற்காகவே காத்திருந்த பெண் ஒருத்தி ஆக்ரோஷமாக தனது கதையை சொல்லும் பகுதி ஒன்று இடம்பெறுகிறது. பாண்டவபுரம் அம்மன் அங்கு வாழும் சுமங்கலி பெண்களின் கற்பைப் பாதுகாக்கும் பாதுகாவலாளியாக நிற்பது பாண்டவபுரத் தொன்மக் கதையோடு தொடர்பு கொண்டிருக்கிறது. இப்படி கதைகளாலும் வரலாற்றின் அறிவு பொருத்தப்பாட்டோடும் பொருந்துமாறு அமையும் பாண்டவபுரம் கதையில் வரும் நகரம் உண்மையான நகரமா? என்பதை நாம் பல்வேறு கோணத்தில் அணுக வேண்டியுள்ளது. புனைவை உண்மையிலிருந்து எடுத்தும் உண்மைக்குள் புனைவை செலுத்தியுமே படைப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது. பாண்டவபுரம் புனைவு என்ற இடத்தில் மாய எதார்த்த நிலையை கொண்டுள்ளது. களரி பாடம், களரி குடும்பம், காளி காவு, திருவிழாவின் பரணி விழாவில் முதுகில் அலகு குத்தி கயிற்றை மரத்தில் கட்டி வலம் வரும் திருவிளக்கு வழிபாடு முதலானவை ஒரு கிராமத்தின் வடிவை அசலாக்கி காட்டுகிறது. எந்தவொரு கருத்தையும் கட்டமைக்கும் போது அதில் எதார்த்தத்தை முன்வைக்க உகந்த கருவியாக உழைப்பு, வழிபாடு, சடங்குகள் முதலானவை அமைகின்றன.
குளத்தில் உள்ள இருண்ட தண்ணீரில் சிவப்பு இரத்தம் கலக்கிறது. மீன்களைத் தூண்டில் போட்டு பிடிப்பதற்கும் வலை வீசி பிடிப்பதற்கும் ஈட்டியால் மீனைக் குத்தி தூக்குவதற்கும் மாறாக மீனை சுடுவது என்ற ஒரு செயல் பதிவு செய்யப்படுவதன் பின்னே காலத்தின் சூழலியல் அம்சம் மீது கல்லறிவதுடன் கால மாற்றமும் வெகு இயல்பாக சுட்டப்படுகிறது. குஞ்ஞுண்ணி மேனன் பெயரால் குஞ்ஞிகுட்டன் முகவரியை அறியும் போக்கு யதார்த்தவாதத்தை சுட்டும் பகுதியாக இருக்கிறது. சுமைதாங்கி உபயதாரராக இருந்த குஞ்ஞுண்ணி மேனன் குடும்பத்தின் வறுமை, உண்ணிமேனன் மாஸ்டர் என்ற அப்போதைய ஊரின் பெரிய மனிதர் போன்றவை எதார்த்தமான சித்தரிப்பில் நாவலை கொண்டு வந்திருக்கிறது. ஆங்கிலேயனின் வருகையைப் பேசுதலில் இருந்து பஞ்சாயத்து பிரசிடென்ட், பிரைவேட் பஸ், டாக்சி முதலான வார்த்தை பயன்பாடுகள் கால எல்லையை குறிப்பிடும்படியாக அமைகின்றன. அதனடிப்படையில் நின்று நாவலில் வரும் சம்பவங்களை புரிந்து கொண்டு பயணிக்க இவை துணைக்காரணிகள் ஆகின்றன. எவ்வளவு எதார்த்தத்தோடு நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டாலும் கூட இது நிகழ்வது உண்மையா? அல்லது கற்பனை சித்தரிப்பா? என்பதில் ஐயம் எழும் எழுத்துமுறை நாவல் முழுக்க விரவிக் கிடப்பதோடு நாவலின் சில பகுதிகளை முழுமையாக ஆக்கிரமித்து வியாபித்துக் கொள்கின்றன.
பாண்டவபுரத்திலிருந்து வரும் இளைஞர் யார்? வீட்டைவிட்டு எங்கும் வெளியில் செல்லாத தேவிக்கு பாண்டவபுரம் எப்படி தெரியும்? தினமும் இரயிலடியில் அவள் யாரை தேடுகிறாள்? என்று பல கேள்விகளின் விளைவாக எழுத்து முறை தனது புனைவுக்கான ஆதாரங்களை அதிகரித்துச் செல்கிறது. ‘‘கனவு காண்றதுங்கறதே மனுஷபிறவியோட சாபம்மா’’ என்று தேவி சொல்லுமிடத்தில் சாபம் என்ற தீமையின் காலங்கடந்து நிற்கும் வலிமை வாய்ந்த கருத்தாக்கம் வழி மாயம் நிகழ்கிறது. ஆனால் அந்த மாயம் பெண்களுக்கேயானது என்கிற தொனியும் எழுத்தாளர் மூலம் வெளிப்படுகிறது. கனவு என்கிற சாபம் இல்லை என்றால் வாழ்வும் சலிப்பாகப் போய்விடும் என்பதை சொல்லத் தவறவில்லை. சாபம் என்பதை நாம் துன்பம் என்று கொள்வதை பொருத்தமான வாசிப்பாக நான் கருதுகிறேன். ‘‘நாமெல்லாம் தாராளமா கனவுகள் காண்கிறவங்க தானே இப்படிப்பட்ட கனவுகள் இல்லேன்னா, வாழ்க்கையேகூட ஒரு சலிப்பான சமாச்சாரம் தான்’’ என்ற வரியின் மூலம் பாண்டவபுரம் என்ற கனவு கிராமத்திற்கான நியாயத்தை தேவியின் மூலம் பெற முடிகிறது.
பாண்டவபுரம் கனவு என்பதைத் தாண்டிய நம்பிக்கையாக உருவம் பெறுகிறது. அயோத்தியாவில் இருக்கும் இராமர் கனவா? உண்மையா? என்பதைத் தாண்டி அதன் மீது நம்பிக்கை இருப்பதுபோல் பாண்டவபுரத்தின் மீதும் நம்பிக்கை வைக்க கோரப்படுகிறது. ஒரு படைப்புருவாக்கம் மீது சமயம் சார்ந்த பற்றுநிலையை வரவைக்கும் அளவிலான பூச்சுகளைப் பூசும்போது கிடைக்கும் நம்பிக்கையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் பிரச்சார நெடியற்று நேர்மையை நிலைநாட்டும் போக்கை கையாளாது வெளிப்படும்போது கிடைக்காமல் போகும் தன்மையை இந்த சான்று செய்தியின் வழியே பார்க்க முடிகிறது. இதனை அடியொற்றி சில புனைவாக்கம் சார்ந்த குறியீட்டு உண்மைகளை அடையாளம் காண வேண்டியிருக்கிறது. படைப்புக்கு உள்ளிருந்து கிடைக்கும் பொருளைத் தாண்டிய சில நுட்பங்களைநாம் கவனிக்க வேண்டியுள்ளது. பாண்டவபுரம் புனைவைப் பற்றிய சில மேற்கோள்கள் அதற்கு உதவுகின்றன.
‘‘அறிவுக்குப் பொருந்தும்படியான ஓர் இறந்தகாலம் எனக்கு வேண்டும்.’’
‘‘இல்லாத ஒரு இறந்தகாலத்தை உருவாக்குவது வாழ்ந்து முடிப்பதை விட சிரமமானது தான்.’’
‘‘எதிர்காலம்கறது வெறும் எதிர்பார்ப்பு மட்டுமே. அதனால் உன்னோட வேர்கள் மொதல்ல இறந்த காலத்துல தேடு. அதுக்குப் பின்னால நிகழ்காலத்தின் வழியா எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து போ.’’
‘‘எல்லாமே கட்டுக்கதைங்க தான். நானும் நீங்களும் பாண்டவபுரமும் இந்த மகா பிரபஞ்சமுமெல்லாம்.’’
‘‘உண்மை கட்டுக்கதையவிட பல சமயங்களிலும் விசித்திரமானது தான்.’’
தேவி ஒரு கனவு கிராமத்தை உருவாக்கி அங்கிருந்து ஒருவனை வரவழைத்து அவனை தனக்குத் தெரியாதது போல நாடகமாட ஆரம்பித்து பின் அவனை தானே வரவழைத்தேன் என்ற உண்மைக்கும் எதார்த்தத்திற்கும் மீறிய வாதத்தை தொடங்கி வைத்து குழப்பம் விளைவிக்கிறாள். இக்குழப்பத்தால் சுவைபெறும் இந்த நாவலில் கற்பனையின் மீது நம்பிக்கை படிந்தபின் அறிவுக்கு ஏற்றபடியான இறந்தகாலத்தை அதாவது வரலாறை உருவாக்க மெனக்கெடுவதையும் அதன் சிரமத்தையும் பதிவு செய்வதோடு எதிர்காலத்திற்கு நிகழ்காலம் வழியென்றாலும் இறந்தகாலத்தின் நினைவுகளை ஏந்தியே செல்ல வேண்டும் என்ற தத்துவமும் உதிர்க்கப்படுகிறது. இறந்தகாலம் மீது அதிக கவனப்படுத்துதலை நிகழ்த்தி தனக்கேற்ற வகையிலே இறந்தகாலத்தை உருவாக்க தேவி முனைகிறாள். அதுவே பாண்டவபுரம் பற்றிய கதைகள் ஆகின்றன. தேவியையும் தேவியின் செயலையும் குறியீடாகக் கொண்டு வரலாறையும் வரலாற்றுருவாக்கத்தையும் பற்றிய பெரும் விவாதத்தைத் தொடங்க முடியும். இந்நாவலில் வைத்த புள்ளிகளில் மையின் அடர்த்தி மிகுந்ததொரு புள்ளி, இறந்தகாலம் பற்றிய புள்ளியாகும். வரலாறு என்பது பலபடித்தானது, மாறக்கூடியது, தரவுகளின் அடிப்படையில் பல்வேறு வியாக்கியானங்களை பொருத்துவதற்கு இடமளிப்பது, முழுக்க முழுக்க உண்மையை உடையதல்ல, உண்மையை நெருங்கக்கூடியது. அறிவுப்பூர்வமான வாதத்தின் வழியே உண்மையை உருவாக்க முயல்வது.
உண்மை, கட்டுக்கதை பற்றி கருத்துகள் நாவலின் தொடக்கம் மற்றும் இறுதி இடங்களில் வருகிறது. இதில் ஒன்று, தனக்குள் தானே நினைத்துக் கொள்வது. மற்றொன்று,எதிரில் இருப்பவரிடம் சொல்வது. ஒரு பொருள் பற்றிய கருத்து தனக்குள்ளிருந்து பிறரிடம் சொல்வதற்குரியதாக மாறுவதற்கு இடையில் நிகழும் பரிணாமங்களை நாவலின் கடைசி பகுதிகளின் வழியே அறிய முடிகிறது. செய்தித்தாள்களில் வரும் செய்திகளைப் பார்த்து நாம் நமக்குள் அடையும் அதிர்ச்சியையும் தனிமனிதனின் மன ஓட்டத்திற்குள் நிகழும் கற்பனைகளின் உரையாடல் மற்றும் அச்சத்தையும் வெவ்வேறு முறைகளில் வெளிப்படுத்துவதுமென அவற்றுக்கேற்ற சாத்தியமான பின்புலம் கொண்டு பாண்டவபுரம் கதையாக்கப்பட்டு இருக்கிறது. இந்த உலகமே கதைகளால் நிறைந்தது என்பார் எஸ்.ராமகிருஷ்ணன். கதைகள் மட்டுமல்ல கட்டுக்கதைகளாலும் நிறைந்தது. நாம் அவற்றின் மீது பழி போடும் விதமாக அமைந்து நமக்கு கதைகள் உதவி அளிக்கின்றன. எல்லாமே விதிவசம் என்பது போல் எல்லாமே கதைகளாகின்றன.
பாண்டவபுரம் பற்றிய ஒரு கதை தெய்வத்தோடு தொடர்புபட்டது. தெய்வ உருவாக்கம் என்பதைக் கடந்து யார் தெய்வமாக மாறுகிறார்? என்ற அழுத்தமான கேள்வி எழுப்பும் புனைவு இதில் கையாளப்பட்டிருக்கிறது. ஊருக்காக ஊரின் நன்மைக்காக உயிரைப் பலி கொடுத்தவர்களும் ஊருக்காகவும் ஊரின் நன்மைக்காகவும் சண்டையிட்டு உயிரிழந்தவர்களும் எல்லை தெய்வமாக்கப்படுவதுண்டு. இதில் உயிர் போவது மட்டுமே தெய்வமாக்கப்படுவதில் முதன்மை நிலைபெற்று நன்மை என்ற செயல்பாடு சற்று விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டிருப்பதற்கு பாண்டவபுர கதைகளில் வரும் ஒரு கதை சாட்சியாகிறது. தெய்வம் அல்லது தலைவர் என்ற எந்தவொரு மையம் நோக்கிய கருத்தாக்கமும் தனது நன்மைக்காக தன்னை சுற்றியுள்ளவர்களை பழி வாங்குவதாக அல்லது உறிஞ்சுவதாக அமைகிறது.
‘‘கொல்லனின் மனைவி பிரசவிக்கவே இல்லை. காரணம், அவருக்குத்தான் கர்ப்பமே இல்லையே! ஒரு காமுகனின் அழுக்கு மூட்டையை சுமக்க சபிக்கப்பட்ட நிராபராதியான அந்த பாவப்பட்ட இளைஞன் ஒரு உயிர்த்தியாகியானான். ஊரிலுள்ள இளைஞர்கள் அவனுடைய துன்பக்கதையை வெகுகாலம் வரையில் பாடித் திரிந்தார்கள். அவனுடைய இரத்தத்திலிருந்து நூற்றுக்கணக்கான மைனர்கள் பிறந்தார்கள். அவர்கள் விடாப்பிடியாக வெளிநாட்டுப் பெண்களை வலை வீசி பிடித்தார்கள். வெளிநாட்டு குடும்பங்களை கலக்கினார்கள். அதனால், பாண்டவபுரம் வெளிநாட்டுக்காரர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகிவிட்டது.’’ வெளியூரிலிருந்து வந்த வாள் செய்வதிலும் வாள் சண்டை போடுவதிலும் தேர்ந்த கொல்லனின் மனைவி அவன் மீதான அதிருப்தியால் பொய்யான சில செய்கைகள் செய்து இளைஞன் ஒருவனைக் குற்றவாளியாக்குகிறாள். அவனது உயிரும் போகிறது. இரத்தம் உயிருள்ளது என்பது விவிலியக் கருத்து. நாட்டார் தெய்வங்களுக்கு உயிரைப் பலி கொடுத்தல் என்ற அடிப்படையில் இரத்தத்தை பலிபீடத்தில் சிதறவிடுவர். இங்கு இளைஞனின் இரத்தம் எண்ணற்ற இளைஞர்களை பிறப்பிக்கிறது. பொய்யாக சாட்டப்பட்ட குற்றத்தினை உண்மையாகவே செய்யும் இளைஞர்கள் உருவாகின்றனர். இதனடிப்படையில் வெளியூர்காரர்களின் வருகையே பாண்டவபுரம் விகாரமடையக் காரணம் என்ற கருத்து உட்பொதிந்திருக்கிறது.
மகாபாரதத்தை அடிப்படையாக வைத்த மற்றொரு பாண்டவபுர கதையில் மூன்றாவது மகன் கடத்தி வந்த பெண் ஐந்து சகோதரர்களுக்கும் மனைவியாகிறாள். பின் குற்றவுணர்வு அடைந்தவளாக ஆண் வேடமணிந்து வீட்டை விட்டு சென்றவள், தியானித்த நிலையில் தங்க விக்கிரகமாகி பாண்டவபுரத்து கன்னிகளுக்கும் சுமங்கலிகளுக்கும் தெய்வமாக மாறினாள். இந்த கதையில் பக்கத்து ஊர் தலைவனின் மகள் பாண்டவபுரம் வந்து தெய்வம் ஆகிறாள். உள்ளபடி பார்த்தால் அவளும் வெளியூர்க்காரி. வெளியூர் பெண்ணின் வருகை ஒரு ஊரில் நிகழ்த்தும் மாற்றத்தை ஒட்டியதாக பாண்டவபுரம் பற்றிய கதைகள் இருக்கின்றன. இதனடிப்படையில் பெண் ஒரு புதிய ஊரை அடையும் போது ஆண்களை விட அதிகமாக கவனிக்கப்படுவதும் அவளை மையம் கொண்டு ஊர் மாற்றம் அடையும் வித்து போடப்படுவதும் மறைமுக செய்தியாக நாவலுக்குள் சொல்லப்படுகிறது.
பாண்டவபுரம் பற்றிய கதைகள் மட்டுமின்றி, பாண்டவபுரம் உணர்த்தும் செய்தியும் ஒன்றுக்கொன்று வேறுபாடு கொண்டவை. பாண்டவபுரம் எவருக்கு தெரியும் என்றால் குழப்பமான சிந்தை கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும். மனம், கனவு ஆகியவற்றின் பிதற்றலில் பாண்டவபுரம் உருவம் கொள்கிறது. வாதத்தின் போது தேவியிடம் ‘‘சொந்த கணவனின் மரணத்தை எப்போதாவது கனவுல காணாத எந்தவொரு பொண்ணும் இந்த பூமி மேல இருக்க மாட்டாங்க’’ என்று வெளியூரில் இருந்து வந்த இளைஞன் சொல்லும் செய்தி இடம்பெறுகிறது. ‘‘எவையெல்லாம் உண்மை, எவையெல்லாம் பொய்’’ என கேள்வி கேட்டு ‘‘ எல்லாம் உண்மைதான்’’ என்ற முடிவை எட்ட இந்நாவலின் சில பகுதிகள் முயற்சிக்கின்றன. மேற்கோளிடப்பட்ட நாவலின் வரிகளை கதாபாத்திரங்களின் உரையாடல் என்று கடக்காமல் நாவலின் அமைப்போடும் வைத்து சிந்திக்க வேண்டும். கனவு பற்றிய வாதம் நாவலின் மனம் மற்றும் கனவு பரப்பை குறிப்பிடவே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
பாண்டவபுரம் வேதனையின் மூலம் ஆசுவாசம் தரும் நினைவுகளால் கட்டப்பட்ட கனவு கிராமம் என்பதை நாவலில் வரும் கதாபாத்திரங்கள் ஒன்றுக்கொன்று சலிக்காது பேசும் நினைவுக்குவியலிலிருந்து காண முடிகிறது. பாண்டவபுரம் நினைவால் கட்டப்பட்டவர்களை அழைக்கிறது. உயர்ந்த தரையில் கருத்த பீடத்தின்மீது கருத்த உடை அணிந்த பாதிரியார் தன் நீண்ட கைகளை விரித்துக் கொண்டு, ‘‘பூமியில் சமாதானம் தேடுபவர்களே, இதோ என்னுடைய இந்த சக்திமிக்க கைகளுக்குள் எனக்கேயுரிய இருளுக்குள் வாருங்கள்.’’ என்று அழைக்கிறார். மற்றொரு இடத்தில் ‘‘பாண்டவபுரம் போன்று உள்ள சதிகாரர்களின் இடத்தை விட்டு பரிசுத்தமான ஒரு கிராமத்துக்குத்தான் போகப்போகிறேன். அங்கு என்னுடைய விஷ மணமுடைய மஞ்சள் புகையை பரப்பி விடக்கூடாது’’ என்ற வரி வருகிறது. மேலும், பாண்டவபுரத்தில் இருந்த இளைஞர்கள் சிற்றின்பம் மற்றும் ஆசைகளுக்காக சண்டையிடுபவர்கள், சூதாடுபவர்கள். சதிகாரர்கள். காமுகர்கள், அந்த நகரம் சபிக்கப்பட்ட நகரம் என்று சொல்லப்படுகிறது. இதில் வரும் பாதிரியார் மற்றும் மஞ்சள் கிராமத்தின் மஞ்சள் புகையை மட்டும் குறியீடாகக் கொண்டு இந்நாவலை ‘’ஜீரோ’’ படத்துடன் ஒப்பிடலாம். பாதிரி என்ற சொல்லை கிறிஸ்தவக் குறியீடாக்கி லிரித் என்ற பெண்ணோடும் மஞ்சள் புகையை பிங்க் நிறத்தோடும் ஒப்பிட்டு அந்த திரைப்படத்தில் உள்ள மன அதிர்வை கண்முன் கொண்டு வர முடியும். பாண்டவபுரம் அழைக்கும் இருள் சபிக்கப்பட்ட இருள். அங்கு சமாதானத்திற்கு இடமில்லை. குற்ற உணர்வுகளாலும் செய்த தவறுகளின் நினைவு பிடிப்பாலும் பீடிக்கப்பட்டவர்கள் ஒருபுறமும் சதிகார இளைஞர்களின் கூட்டம் மறுபுறமும் சூழ்ந்து இருளை பாண்டவபுரத்தின் நிறமாக்குகிறது.
‘‘பாண்டவபுரம் ஆறுதலானதுதான். ஆம் ஆறுதல் அளிக்க மட்டுமே கூடியது. குழப்பமான மனங்களில் மட்டும் தான் பாண்டவபுரம் உரு கொள்கிறது. ஏனென்றால் பாண்டவபுரம் அளிக்கும் ஆறுதல் புது குழப்பத்தை உண்டு பண்ணக்கூடியது. ‘என்னுடைய நண்பன் இருக்கிற வரைக்கும் எனக்கு வேற பிரச்சனையே இல்ல. ஏன்னா அவன் தான் எனக்கு பிரச்சனைய கொடுக்கிறதே’ என்ற வசனத்தைப் போன்றது பாண்டவபுரத்தின் ஆறுதல். கலப்பு நாகரிகம் வௌவால் போல தொங்கிக்கொண்டு தீர்க்கதரிசனம் சொல்லும் சாமியாரின் முக்காலம் பற்றிய தத்துவம், சூழலியல் அழிப்பு, தொன்மம், வழிபாடு, தெய்வ உருவங்கள், குற்றம் என எத்தனை எத்தனையோ மாயங்களையும் உண்மைகளையும் பாண்டவபுரம் உள்ளடக்கி படைக்கப்பட்டு இருக்கிறது.
நாவலில் வரும் ஆண், பெண் உறவுகளை மையமிட்ட கதையாடல்களும் உரையாடல்களும் வலுவானவை. பெண்களின் மனதில் உள்ள ஆண்களின் வகை மாதிரிகளில் சிலவும் ஆண்களின் எண்ணத்தில் இடம்பெறும் பெண்களின் வகை மாதிரிகளில் சிலவும் கலந்து கட்டி உணர்வுகளாகி உரையாடலிலும் புலம்பலிலும் எண்ணங்களிலும் வெளிப்படுகிறது. ‘‘பொய் முகங்களை களைந்து எடுத்தெறிவதற்கு நாம் திறமையுள்ளவர்கள் தானா?’’ என்ற வினா நாவலில் எழுப்பப்படுகிறது. இதனை நாவலில் வரும் கதாபாத்திரங்களான தேவி, ஊருக்குள் வரும் பாண்டவபுரத்து ஆள், குஞ்ஞிகுட்டன் தலைமுறையினர் உண்ணிமேனன் உட்பட்ட ஊர்க்காரர்கள், குஞ்ஞிகுட்டன் தங்கை ஆகிய அனைவரிடமும் பொருத்த முயலலாம். இதில் விரிவாக இடம்பெறும் கதாபாத்திரங்களில் பொய் முகங்களை காணமுடிகிறது. பொய் முகங்களை அல்லது முகமூடிகளை அணிந்தே மற்றொருவரிடம் பழகுகிறோம். தெரிந்த தகவல்களை பிறருக்கு சொல்லக்கூடாது என்பதற்காக தெரியாதது போல் நடிப்பதும் மதிப்பை உயர்த்துவதற்காக தெரியாதவற்றையும் தெரிந்தன போல் காட்டிக் கொள்வதுமாக பொய் முகங்களை அவ்வப்போது எல்லா மனிதர்களும் வெளிக்காட்டுகின்றனர்.
தேவிக்கு வந்திருப்பவரை தெரிந்திருக்கிறது. ஆனால் தெரியாதது போல காட்டிக் கொள்கிறாள். ஒரு கட்டத்தில் வந்திருப்பவர் பற்றிய தெளிவான சித்திரம் தெரியாத நிலையில் தனது கணவனின் தங்கை சியாமளாவிடம் தெரிந்தவர் போல காட்டிக்கொள்கிறாள். ‘‘சில தடவை திரும்பத் திரும்ப கேக்கும் போது எந்தவொரு பொய்யும் நிஜந்தான்னு தோணத் தொடங்கிடும். அதான் அந்த ஆளோட சூத்திரமும்’’ பொய், உண்மை ஆகியவற்றிற்கு இருக்கும் பலத்தைப் பேசும் இடங்கள் இவை. பைத்தியநிலையின் தொடக்கம் திரும்பத் திரும்பச் சொல்லி ஆழமாக நம்புவதும், நம்ப வைப்பதுமான செயல்முறை. மத நிறுவனங்கள் யாவும் கட்டமைக்கப்பட்ட விதமும் அப்படியே. ஒன்று அனுதின சடங்காக மாறும்போது இரண்டு வித விளைவுகள் ஏற்படுகிறது. ஒன்று சலிப்பு. மற்றொன்று ஆழமான நம்பிக்கை. மேற்கோள் இடப்பட்ட சியாமளா சொல்லும் வார்த்தைகள் முன்வைப்பது இரண்டாவது வகைபட்டவை.
பொதுவாக ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையிலான உறவின் தொடக்கம் சுற்றி இருப்பவர்கள் திரும்பத் திரும்ப சொல்லும் வார்த்தைகள் தரும் ஆசை மற்றும் மயக்கத்தால் ஏற்படுகிறது. ஆரம்பம் பொய்யாகவும் அதன் பின்னான வாழ்வு உண்மையாகவும் தொடர்கிறது. இங்கு கூர்ந்து நோக்கவேண்டியது திரும்பத் திரும்பச் சொல்பவர் எவர்? என்பதையே. தன்மை நிலைக்கு ஒரு முடிவும் பிறநிலைக்கு ஒரு முடிவுமாக வெவ்வேறு முடிவுகளை தீர்மானிப்பதாக எவர் என்ற குறிப்பீடு இருக்கிறது. இந்த நாவலில் தன்னிலை கூறுமுறை இருந்தாலும் தன்னிலை பிறநிலை ஒன்றை உருவாக்கி அதனை சுற்றி இருப்பவர்களுக்கும் காட்சியாக்கி ஓர் உரையாடலை நிகழ்த்தும் இடத்தில் தான் இந்நாவல் மாய யதார்த்தவாத நிலை உடையதாகிறது.
பொய்யின் படலம் ஒட்டுமொத்த மனித குலத்திற்கானது. மனத்தின் ஆழத்தில் எண்ணிலடங்காத ரகசியங்களை வைத்திருந்த மனிதர்களது காலத்திலிருந்து தற்போது சற்று மாறி இருக்கிறோம். எப்படியிருப்பினும் அளவில் குறைவாகவேனும் அவரவர்க்கென்ற ரகசியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த ரகசியங்களுக்குள் தான் ஆசாபாசங்கள், சமூகம் கட்டமைத்துள்ள ஒழுக்கம் பற்றிய விழுமியங்களைத் தகர்க்கும் நுண்ணுணர்வுகள் எல்லாம் அடைக்கலம் ஆகியுள்ளன, குஞ்ஞிக்குட்டனிடம் தேவி ‘‘மனித மனத்தின் ஆழத்தைக் கண்டவர்கள் இங்கு யார் தான் இருக்கிறார்கள்’’ என கேட்கிறாள். உண்மையிலேயே ஆழத்தைக் கண்டவர்கள் எவரேனும் இருந்திருந்தால் அழுத்தம் திருத்தமாக பாண்டவபுரத்தினை நிராகரித்து தேவியின் மனத்தையும் அதன் அலைபாய்தலையும் நிர்வாணப்படுத்தி இருப்பார்கள். இந்த கதையின் அடிப்படை நகர்வுமுறையும் சிதைவுக்குள்ளாகி இருக்கும். சில ரகசியங்கள், பொய்கள், வெளியில் சொல்ல முடியாத உணர்வுகள் ஆகியன பாண்டவபுரத்தின் ஆறுதலளிக்கும் அம்சங்களோடு அடங்கிப் போவன. பல்வேறு மனிதர்களின் மனங்களுக்குள் ஒரு பாண்டவபுரம் கட்டி எழுப்பப்பட்டு கொண்டே இருக்கிறது.
மீண்டொரு முறை நேருக்கு நேர் சந்திக்கக் கூடாது என்று நினைத்த ஒருவரை காணும் போது குற்றவுணர்வின் நிழல் உடலை ஆக்கிரமித்து நிற்பதற்கு ஒப்பான சூழலை உருவாக்கி அங்கு நிகழும் மௌனத்தையும் அதனை தொடர்ந்த பேச்சையும் நாவலின் ஆரம்பப் பகுதிகளில் காணலாம். ‘‘அவர்களுக்கிடையே சிறிது நேரம் சகிக்க முடியாத ஒரு மௌனம் பரவியது.‘’ என்ற வார்த்தைக்குள் சந்திப்பின் வழியாக மௌனம் என்ற அமைதியின் வழியே சகிக்க முடியாத நினைவுகள் அங்கும் இங்கும் கோரமிட்டு கத்தி ஆர்ப்பரிக்கின்றன. அந்த ஆர்ப்பாட்டமும் அதன் தொடர்ச்சியாக நிகழும் அதிர்ச்சியும் சகிக்க முடியாததாகின்றன. இந்த நினைவுகளின் கிளறல் தான் பாண்டவபுரத்தின் சாபத்திற்குரிய அடையாளம்.
ஒரு சந்திப்பு இவ்வளவு தூரம் உணர்வில் தாக்கத்தை ஏற்படுத்த காரணமென்ன என்பதற்கான விடையாக ‘‘ஒரு விசித்திரமான உறவாச்சே நமக்குள்ள இருந்த பந்தம்’’ என்ற வரி வருகிறது. இங்கே விசித்திரம் எனப்படுவது யாதெனில் கட்டுக்கடங்காத ஆசையும் விசாரிக்க வேண்டிய எண்ணமும் உள்ளத்தினுள் இருந்தும் அதனை சிறிதேனும் கூட வெளிப்படுத்த முடியாது வெறுமனே பார்வைகளால் மட்டுமே தொடர்பை வளர்த்து முடிப்பதாகும். முயங்கித் தள்ளும் வார்த்தைகளை மடைபோட்டு அடைத்து தனக்குள் புதைக்கும் மனநிலையை வளர்ப்பதற்குப்பின் இருக்கும் மன முடிச்சுகளை நாவல் சித்தரிக்க தவறிவிட்டது. எனினும் அதற்கான ஒரு சில புள்ளிகளை வைத்திருப்பதை நாம் மறுக்க முடியாது. இதில் இளைஞனுக்கும் தேவிக்கும் இடையில் இருந்த பேச்சுகளற்ற தொடுதலற்ற பார்வை ஊடகமாக அமையப்பெற்று இருக்கிறது. அந்த ஊடகச் செயல்பாட்டின் வெற்றியே சந்திப்பை சகிக்க முடியாததாக்கியுள்ளது.
மௌனம் களைத்தவனாக பாண்டவபுரத்திலிருந்து வந்தவன் ‘‘ஆச்சர்யம் தான் பொம்பளைங்களால எவ்வளவு சீக்கிரத்துல எல்லாத்தையும் மறக்கமுடியுது’’ என்கிறான். ஆனால் இந்த வார்த்தைக்கான எதிர்வினை நாவலின் பிந்தைய பகுதிகளில் மிக ஆக்ரோஷமாக வெளிப்படுகிறது. உண்மையிலேயே எதுவும் மறக்கப்படவில்லை பொய் முகங்களுக்கு பின்னே மறைக்கப்பட்டிருப்பது மறைமுகமாக கடத்தப்பட்டுள்ளது. மறந்ததாகவே நினைத்து கடந்திருந்தால் அந்த இடத்திலேயே ஒரு முற்றுப்புள்ளியை அடைந்திருக்க முடியும். அதற்கு மாறான இருப்பின் காரணமாக பெண்களின் கோபக்கனலைப் பெருக்கி உளக் குமுறலை தொங்கிய முகத்துடன் பதில்கள் இருந்தும் சொல்ல முடியாத நிலையை ஆண் சந்திக்க வேண்டியதாகிறது. குழப்பத்தையும் தயக்கத்தையும் விட்டொழித்து மௌனம் களைந்து ஒரு சொல் பேசியிருந்தால் இந்த விசித்திரத்தால் உருவாகும் மாயத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றும் வகையிலான கனமான நிலை சில பகுதிகளில் வெளிப்பட்டுள்ளது. இவை ஒருபுறம் இருக்க குஞ்ஞிக்குட்டனின் வாழ்க்கையும் பாண்டவபுர கதைகளுக்குள் வரும் பெண்களும் இதிலிருந்து சற்று வித்தியாசப்பட்டுள்ளன. இந்த வித்தியாசம் தான் மாயத்துடன் கூடிய எதார்த்தத்தில் இருந்தும் எதார்த்தத்தின் மாய உருவிலிருந்தும் நாவலைப் பிரிக்கிறது.
பாண்டவர்களின் தொன்மத்தோடு தொடர்புடைய பாண்டவபுரம் கதையில் வரும் மனைவி பற்றிய சித்திரம் ‘‘அவளை பொருத்தமட்டில் அவ ஜீவனில்லாத ஒரு அழகான விளையாட்டு பொம்மையாக மட்டும் தான் இருந்தாள். அவளோட எண்ணங்கள் அவர்களுக்கு ஒரு பிரச்சனையாகவே இருக்கவில்லை’’ என்பதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இத்தகைய வடிவமைப்பைக் கொண்ட பெண் எதிர்த்து களமாட வழியற்றவளாக குற்றவுணர்வுக்கு ஆட்பட்டு தெய்வமாகி அவளுக்கு பிந்தைய குடும்பப் பெண்களைக் காக்கும் தெய்வமாகிறாள். இங்கு பெண்ணைத் தெய்வமாக்கி தெய்வத்திற்கு அகங்கார சாயத்தைப் பூசிவிட்டு எதார்த்தத்தில் அடிமைத்துவ சாட்டையைக் கையில் ஏந்தும் எதார்த்தம் சுட்டப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க உடல் தோற்றத்தில் பின்தங்கியவனாக இருக்கும் குஞ்ஞிகுட்டனுக்கும் அவனது அழகிய மனைவிக்கும் இடையில் இருக்கும் உறவு குறித்த கருத்தாடல்கள் இடையிலேயே முக்கியத்துவம் உடையதாகின்றன. தேவி கருத்தரித்திருந்த காலத்தில் அறிவும் ஆண்மையுமுடைய ஆண்மகனுக்காக பிரார்த்திக்கிறாள். ஒரு பெண்ணின் உள்ளுணர்வை சற்று புரிந்துகொள்ள முற்பட்டு தன்மனச் சூழலில் சிக்கி அவளுக்கு எந்த வகையிலும் தொந்தரவு தரக்கூடாதென அதற்கேற்ற வழிவகை செய்யும் வக்கற்று நிர்க்கதியாக அந்தப் பெண்ணை விட்டு பிரிபவனை ஆண்மையற்றவன் என்று மறைமுகமாக உணர்த்தும் வகையில் தனது மகன் ஆண்மையுள்ளவனாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை அமைகிறது.
குஞ்ஞுண்ணி மேனன் பற்றிய கதையில் பாலைமரப் பிசாசு என்ற பெண் உருவால் அவன் வீழ்த்தப்படும் பகுதி இடம் பெறுகிறது. ஒருபுறம் பெண்ணைத் தெய்வமாகவும் மறுபுறம் பிசாசாகவும் ஆக்குவதோடு இல்லாமல் குடும்ப மானம், சமுதாய மானம் உள்ளிட்ட மான வகையறாக்களையும் பெண் மீது ஏற்றி பெண்ணை எப்போதும் தவறு செய்பவளாகவே காட்டும் போக்கு ஒன்றினை உண்ணிமேனன், தேவி, ஊர்க்காரர்கள் ஆகியோர் இடம்பெறும் பகுதிகள் வெளிப்படுத்துகிறது. அந்த கோபத்தைத் தான் நாவலின் கடைசியில் தேவி ரயில்வே ஸ்டேஷனில் ‘‘என் கை கால்களில் விலங்குகளைப் பூட்டுவதற்கு யாருக்கு அதிகாரம் உண்டு?’’ என கேட்கிறாள். மாயத்திலிருந்து விலகி எதார்த்தத்தையும் எதார்த்தத்துக்குள் இருந்து மாய வெளியையும் நோக்கி கேட்கப்படும் கேள்வியாக இரு பரிணாமங்களை இந்த ஒரு கேள்வி தனக்குள் கொண்டுள்ளது.
குஞ்ஞிகுட்டனுக்கு மைனர்களின் வரிசையில் கடைசி இடம் கொடுப்பதாக தேவி சொல்லும் பகுதி ‘‘மீண்டும் கிடைக்கும் நேசம் வெறும் சாதாரண கொடுக்கலும் வாங்கலுமாக ஆகிறது’’ என்ற வரியை நினைவுபடுத்துகிறது. காலம் தாழ்ந்ததற்குப் பின் கிடைக்கும் கனிவான சொற்கள் காயம் ஆற்றுவதற்கான மருந்தாக இருப்பதில்லை. மாறாக ஒப்பனைப் பூச்சின் பொய்யான பளபளப்பைக் கொண்ட தோற்றம் பெறுகிறது. பிரிவுக்கு இடம், காலம், சூழல், பின்னணி என்று எத்தனை நியாயமான காரணங்கள் இருந்தாலும் பிரிவு நிகழ்ந்த பின் மீண்டும் அன்புவயப்பட நினைத்தால் அதில் வெற்றி காண முடியாது என்கிற மனவியல் அடிப்படையான உண்மையை குஞ்ஞிகுட்டனின் வருகை மூலம் நாவல் உணர்த்துகிறது. தனிமையின் தீராத உழைப்பும் உழைப்பின் களைப்பும் மீறிய ஆசுவாசத்தைத் தரும் பாண்டவபுர இருளுக்குள் ஆண்களையெல்லாம் அடைத்து வைத்து கேள்விகளால் துளைத்து தோல்வியை உண்டு பண்ணி செருக்கை அழிக்கும் ஒரு கற்பனையைத் தேவி தனக்குள் தீவிரமாகக் கொண்டிருந்தாள். பதில்களற்ற அமைதி அவளை வெற்றியடைய செய்யாது தடுத்தன. அமைதியை ஆயுதமாக்கும் வித்தையையும் பாண்டவபுரம் அறிமுகம் செய்கிறது.
புறநிலையில் நாயர் மற்றும் மேனன் சமுதாயத்தின் பெருமைகளை நிலைநாட்டத் துடிப்பது மற்றும் கிறிஸ்தவர்கள் குறித்த விமர்சனத்தோடு களரிப்பாட குடும்பத்தின் பெருமை, சிறுமைகளோடும் நாவல் எழுதப்பட்டிருக்கிறது. இவை கடந்து சிவப்பு நிறங்களாலான பரிசுகள், ஓவியம், பத்து நாள் சித்திரைத் திருவிழா, வைத்தியசாலை, மீனவப் பெண், டாக்சி ஓடும் பாதை, ரயில்வே ஸ்டேஷன் ஆகியன கதைக்கு உயிர்ப்பு தருகின்றன. இதில் முதுகுக்குப் பின்னே இருந்தும் பேசும் இரண்டு பகுதிகள் தனித்து கவனிக்கத்தக்க வகையில் அமைகிறது.
‘‘சும்மாதான் கேட்டேன். மனசுல வச்சுக்காதீங்க என அவன் கூறிய சத்தம் முதுகுக்குப் பின்னால் கேட்டது.’’
‘‘நான் இன்னிக்கி போவலே,
அதற்கு பதிலைப் போல், அவன் முதுகுப்புறமாக வாயிற்கதவு ஒரு கீறிச்சலுடன் அடைப்பட்டது.’’
முதலாவது பகுதி கண்டுகொள்ளப்படாததற்கான அர்த்தத்தையும் இரண்டாவது பகுதி கண்டு கொள்ளப்பட்டதற்கான அர்த்தத்தையும் கொடுப்பினும் இரண்டிலும் முகத்திற்கு நேரான சந்திப்பு நிகழாமல் முதுகிற்குப் பின்னான வினையே நிகழ்ந்திருக்கிறது.
‘‘அவள் குலுங்கி சிரித்தாள். எல்லாவற்றையும் தகர்க்கக்கூடிய எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தக்கூடியதான சிரிப்பு அது.’’ பொதுவாக இப்படியான சிரிப்பு பெண்களிடமிருந்து வெளிப்படும் இடங்கள் கதைகளில் முக்கிய அனுபவத்தைத் தரும் வகையில் அமைந்து விடுகின்றன. கு.அழகிரிசாமியின் ‘திரிபுரம்’ கதையில் கடைசியில் வெங்கட்டம்மா சிரிக்கும் சிரிப்பை நினைத்தால் அதிர்ச்சியே மேலிடுகிறது. இப்படியான சிரிப்பை நேரில் சந்திக்கவே கூடாது என்ற எண்ணம் தோன்றும் வகையிலான தொந்தரவுபடுத்தும் சக்தி அதற்குள் இருக்கிறது.
பெண்ணின் எதிர்க்குரலை நாவல் வெளிப்படுத்த முனைந்துள்ளது. தேவி அந்த இளைஞனிடம் எதிர்பார்த்தது எதிர்ப்புக்குரலை. எதிர்ப்புக்குரலை தன் நியாயவாதங்களால் ஒடுக்கி ஒரு தோல்வியைப் பரிசளித்து ஒட்டுமொத்தமாக மைனர்களின் ரத்தத்தில் ஊறியுள்ள உயிர்ப்பெருக்க சக்தியை உறையவைக்க வேண்டும் என்பதே அவளது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் ஒரேயொரு சலனமற்ற மௌனம் அனைத்தையும் தகர்த்துவிட்டது. சில சமயம் போட்டிகளில் எதிர்த்து நிற்க முடியாத சூழலில் தோல்வியின் முடிவு வெட்ட வெளிச்சமான சமயத்தில் போட்டியை விட்டு விலகினால் வெற்றி வாய்ப்பு பெற்றும் தன் திறனை வெளிப்படுத்த முடியாத வீரர்களுக்கு எப்படி முழுமையான மனநிறைவு இருக்காதோ அதே நிலைதான் தேவிக்கு வந்து சேருகிறது. தேவியின் இரயில் காத்திருப்பும் தேடலும் பைத்தியக்கார நிலையுள் ஒன்று.
உணவு, உறவு, ஆர்ப்பாட்டம், ஆரவாரம், சீட்டாடுதல், குடித்தல் முதலான அன்றைய சுகானுபவங்களை மட்டுமே தனது நடவடிக்கையாகக் கொண்ட சமூகம் குடும்ப அமைப்பில் தோல்வியடைந்ததோடு குடியுருவாக்கத்தின் வழியே கிடைத்த பெருமித உணர்வுகளை விட்டுக்கொடுக்கும் நிலைக்கு ஆட்படுவதை பேசும் இடத்தில் சேது கிறிஸ்தவம் சார்ந்த தனது விமர்சனத்தை அல்லது நாயர், மேனன் முதலான பாரம்பரியத்தைக் கடைப்பிடித்தொழுகும் மரபுவாதிகளின் பார்வையை வெளிப்படுத்துகிறார். பாலைமரப் பிசாசு ஊர்வசியின் பழ வசியம் முதலானவை பெண்மையப் பார்வையை இச்சமூகம் கட்டமைத்த விதத்தை கோடுகிழித்து காட்டுகிறது. கடன் அமைப்பு முறை முதலான தகவல்களோடு மாயத்தைப் புகுத்தி சலிப்பற்ற வாசிப்பனுபவத்தை பாண்டவபுரம் கொடுக்கிறது.
பைத்தியக்காரத்தனமாக வாயில் ஏதோ முனங்கிக் கொண்டு தனக்குள்ளேயே பேசி செல்பவர்களைப் பார்த்து நாம் சிறுவயதில் பயப்பட்டு இருக்கலாம். இப்போதுதான் புரிகிறது அவர்கள் தனியாகப் பேசவில்லை கற்பனையாக ஒரு கதையை தனக்குள் வடிவமைத்து அதற்கு உருவம் கொடுத்து அந்த கதையின் உரையாடலுக்கு தங்களைத் தாங்களே பழக்கிக் கொண்டிருக்கிறார்கள். எதிரில் நின்று அவர்களது வார்த்தைகளுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் பேசுவது நம்மிடம் இல்லை. ஏதோவொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து தான் என்ன செய்ய வேண்டும் என்பதை கற்பனையில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு எல்லையில் மனதுக்குள் இருந்த முனங்கல் வாயசைவாகவோ அல்லது வார்த்தைகளாகவோ வெளிப்பட்டு விடுகின்றன.
பாண்டவபுரம் -சேது (தமிழில்
-குறிஞ்சிவேலன்),
ஏப்ரல் 2006, கிழக்கு பதிப்பகம்.
Comments
Post a Comment