அஜய் சுந்தர் கவிதைகள்
அஜய்
சுந்தர் கவிதைகள்
எனது மொழி குறித்து அவர்கள் கேட்டபோது
நான் சொற்கள் இன்றி நின்றிருந்தேன்
எனது மொழி குறித்து அவர்கள் கேட்டபோது
நான் நாக்கைத் தேடிக்கொண்டிருந்தேன்
எனது மொழி குறித்து அவர்கள் கேட்டபோது பிடுங்கப்பட்ட எனது நிலத்திற்காக அழுது
கொண்டிருந்தேன்
எனது மொழி குறித்து அவர்கள் கேட்டபோது
தீர்ந்துபோன ஒரு நீர்க்குடுவையைப் போல
நசுக்கப்படும் எனது குரல்வளையால் பேச
இயலவில்லை
எல்லாம் சரியாகிவிட்டது எனச் சொல்லி
எனது மொழி குறித்து அவர்கள் கேட்டபோது
நனைந்து போன ஒரு கந்தல் துணியைப் போல
எனது வாயைத் தைத்துக்கொண்டிருந்தேன் நான்.
*******
நீண்ட நெளியும் புழுக்கள் வரையும் மணல் ஓவியம்
துயரத்தின் கால்களில் மிதிபட்டிருக்கையில் செய்யப்பட்ட சத்தியங்கள்
அன்றொருநாள் பறந்துவந்து
தோளமர்ந்த துரதிஷ்ட கருணைக்கு கூர்முட்களின் சாயல்
துரோகங்களின் காடுகளில்
எவ்வளவு தேடியும்
ஒருபோதும் கண்டுபிடிக்க முடிந்ததில்லை
அந்தக் கொடிய விலங்கை
அன்று சிறுசெடியின் துளிர்முனையில் மொட்டுக்களாய் இருந்த காரணங்கள்
உலகின் மாபெரும் மலர்களாக
இப்போது விழுங்குகின்றன என்னை
ஊர் முழுக்க அவை எவ்வளவு மணம் பரப்பினாலும்
ஒரு இளங்கன்றின் முதல்நடைகளாய்
எப்போதும் எழுந்துகொண்டிருக்கும் முயற்சிகள்
Comments
Post a Comment