கையறுநிலையை உணர்த்தும் பிரதிசு.வெங்குட்டுவனின் வெறுங்கால் நடை -தமிழ் மாணவன்
கையறுநிலையை உணர்த்தும் பிரதிசு.வெங்குட்டுவனின்
வெறுங்கால் நடை -தமிழ் மாணவன்
“எல்லா மொழிகளும் புனைவிலிருந்தும் பாவனைகளிலிருந்தும் தொடங்குகின்றன. இந்த புனைவுகளும் பாவனைகளும் மனிதர்களை உற்பத்தி செய்து தருகின்றன. மனிதர்களை உற்பத்தி செய்து உலவவிடும் இந்தப் புனைவுகளும் பாவனைகளும் பெரும்பரப்பாக, சூழ்வெளியாக மனிதர்களைக் கவிந்து கிடக்கின்றன. மனிதநிலைகளின், சேர்க்கைகளின் அலைவும் கலைவும் இந்தப் புனைவுகளூடாக நிகழும் பெரும் இடம்பெயர்வாக, தடம் காணல்களாகத் தொடர்ந்துகொண்டே இருக்கக்கூடியவை” (பிரேம்,ரமேஷ்). இப்புனைவுகளின் வழியே மொழி வாழ்கிறது. அந்த வகையில் புனைவுநிலை வடிவமான சு.வெங்குட்டுவனின், ‘வெறுங்கால்நடை’ எனும் சிறுகதைத் தொகுப்பை அறிமுகஞ்செய்தல் இன்றியமையாததாகிறது.
குடி கிணறு, கடன் மீண்டார் நெஞ்சம், ஜரிகை, கயிறு, ஈஷோபதேசம், ஆரெக்ஸ், வெறுங்கால் நடை, இளஞ்சூடான நீர், சிறுகையாலாவிய வாழ்வு, மூன்றாவது ஒன்று, வாஸ்தவம், எருமை நாயகம், ஆபரேசன் சிந்தாமணி ஆகிய பதிமூன்று சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் மையக்கருவாக, திருமணமாகாத வயது கடந்த ஆண்களின் வாழ்வியல் போராட்டங்களையே கொள்கிறது. மேலும்,இடைநிலை சாதி ஆண்கள்/ இளைஞர்கள் தன் இருப்பை நிறுவிக்கொள்ள பனியன் கம்பெனி, தறித் தொழிலென விவசாயத்தை விட்டு எவ்வாறு வெளியேறி அலைவுறுகின்றனர் என்பதையும் சித்திரிக்கின்றன இக்கதைகள்.
‘குடிகிணறு’, நிலமும் மனமும் ஒன்றிப்போன
ஒரு மனிதனின் வாழ்வியலை எடுத்தியபும் பிரதி. கிராமப்புறங்களில் உழவுத்தொழிலை விட்டு
வெளியேறி பனியன் கம்பெனி போன்ற கார்ப்பரேட் கூலிகளாக மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில்,
தன் அடையாளமான நிலத்தை இழக்க விரும்பாத ‘அப்புச்சி’
இயற்கை வெளியைத் தன்னுள் கரைத்துக்கொண்டவர். அவர் நிலத்திலிருந்து அந்நியப்படுதல் எனும்
சொல்லைக்கூட அறியாதவர்,
‘சேந்து கிணத்தூட்டய்யன்’,
“அப்புச்சியின் நிலையும் கூட குடி கிணற்றைப் போலவே ஆனது”(ப.21),
“அப்புச்சியும் சேந்துகிணறும் ஒன்றுதான்”(ப.21)
போன்ற கதையாடல்கள் அந்நிலையை உணர்த்துவன. அத்தகைய மனிதரின் வாழ்வனுபவத் தொகுப்பே இக்கதையாகும்.
நகர்மயமாதல் குறித்தான எளிய மனிதனின் பார்வையையும் முன் வைக்கிறது. நிலத்திலிருந்தும்
மொழியிலிருந்தும் அந்நியப்பட்டவர்கள் அவற்றுள் ஊறிப்போனவர்களுடன் நிகழ்த்தும் உரையாடலாக
இப்பிரதியை அடையாளப்படுத்தவியலும்.
‘கடன்மீண்டார் நெஞ்சம்’, இக்கதை சொந்த நிலங்களை விட்டு, விற்று வெளியேறி கார்ப்பரேட் கூலிகளாக மாறுவது. நிலங்களையும் உழவையும் இழந்து, நகர்மயமாதலினால் நிலையாமையான இருப்பை முன்வைப்பது ஆகியன மையப்பொருளாகக் கொள்கிறது. உழவைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியா சூழ்நிலையை உருவாக்கும் மறைமுக அரங்காக நவீனத் தொழிற்கூடங்கள் திகழ்கின்றன.
“நிழலடி வேலையும், கூடுதல் சம்பளமும்,
‘வாங்க போங்க’ எனும் மரியாதையான விளிச்சொற்களும், அவர்களுக்கு புதுமலர்ச்சியைக் கொடுக்க
காட்டு வேலைக்கு வர மறுத்தனர்”(ப.34).
இப்படி அழியும் சூழலிலிருந்து சற்று விலகிய நிலையினவாக உழவுத்தொழிலே கார்ப்பரேட்மயமாதல்;
அதன்வழி திருமணமாக அந்த இளைஞனுக்குப் பெண்தர மறுத்தல்; கடன்பட்டு நிலத்தை இழந்து பனியன்
கம்பெனிக்கு வேலைக்குச் சென்று வசதியான பின்பு, நிலமில்லாதவருக்கு எவ்வாறு பெண்ணைத்
தருவது போன்ற அமைப்பைக் கொண்ட இப்பிரதிநிலத்தின் அடையாளத்தை / முக்கியத்துவத்தை வெளிக்காட்டுவதாக
அமைகிறது. மேலும்,
“சரி விடுங்க தம்பி, வேற ஏதாவது பாத்தா போகுது. இதுவே எங்க காலமா இருந்தா உங்கள மாதிரி பையனுங்களுக்கெல்லாம் க்யூ வரிசையில பொண்ணு குடுக்க நிப்பானுங்க. ஆனா, காலம் இன்னிக்கு அநியாயத்துக்கும் மாறிப்போச்சே”(ப.42) எனும் குரல் காலத்தின் நிலையற்ற தன்மையையும் காலம் மாறினாலும் நிலத்தினால் பின்னப்பட்ட மனம் மாறாமலிப்பதையும் எடுத்துரைக்கிறது.
‘ஜரிகை’, திருமணமாக இளைஞன் பொதுவெளிகளில் சமூக அவநிலைக்கு உள்ளாதல். அதுவும் படிக்காமல் கோழிப்பண்ணையிலும் பனியன் கம்பெனிகளிலும் வேலை செய்யுமவர்களின் நிற்கதியை விளக்குகிறது. பெண் கிடைக்காமல் மனம் வெதும்பி, கஞ்சா போதைக்கு உள்ளாகிப் பித்து நிலையை எய்துவதே இதன் மையக்கருவாகும்.
‘ஆரெக்ஸ்’, இக்கதை பனியன் கம்பெனித் தொழிலாளர்களையும் அவ்விடத்தையும் நிகழ்களனாய் கொண்டதாகும். நிறுவனமயமாக்கப்பட்ட வாழ்வில் மனித உடல்கள் உற்பத்திக் கருவிகளாக மட்டுமே பாவிக்கும் இக்காலவெளி, அவர்களின் காதல், காமம், ஆசை, இன்பம், துன்பமென அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொள்கிறது. மனிதர்களுக்கான சுதந்திரவெளியை அது எப்போதும் அளிப்பதே இல்லை. இந்நிலையில், பனியன் கம்பெனியின் தொழிலாளரான திருமணமாகாத ஆரெக்ஸ் பழனிச்சாமிக்கு, செல்போன் மூலம் புதிய உறவு அதாவது வயது முதிர்ந்த பெண்ணுடன் தொடர்பு உருவாகிறது. இதனை அறிந்து கேலிசெய்த சக நண்பர்களுடனே முரண்பாடு ஏற்பட்டு பிரியும் நிலை உருவாகிறது. பாலியல் சுதந்திரம் ஒடுக்கப்பட்ட இச்சமூகத்தின் பிரதிநியான ஆரெக்ஸ் பழனிச்சாமி அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் பொருட்டு வேலையிலிருந்து விலகி விடுகிறார். பல ஆண்டுகள் கழித்து திருமணமாகாத உடன் வேலைசெய்த வெங்குட்டுவை சந்திக்கிறார். காலம் எல்லாவற்றையும் மறக்கடித்திருக்கும் தன்மை கொண்டதாக அவர் மகிழ்ச்சி பொங்க ‘அட மாப்ள நீயா’ என்று எப்போதும் போலவே இயல்பாகப் பேசினார். இருவரின் உரையாடலின் இறுதியில் அந்த மூத்த வயதுடையவளின் பெண்ணையே தான் திருமணம் செய்துகொண்டதும், தன் மனைவியின் தங்கையை நீ கட்டிக்கோ மாப்ள என்று செங்குட்டுவைச் சொன்னதும் இக்கதையின் மையப் புள்ளியாகும். பாலுறவு எனும் உடல் வேட்கை நிலை குடும்பம் எனும் அமைப்புக்குள் தன்னைக் காத்துக்கொள்ளும் களனாக மாறிப்போவதை இப்பிரதி சுட்டுகிறது.
‘வெறுங்கால் நடை’, தமக்கு பெரிதும் பழக்கமில்லாத நண்பரான வடிவேலு, கரண்ட்பில் கட்ட வரும்போது தென்படுகிறார். பின் அவரே வந்து என் மேலேதும் கோவமா என்று உரையாடலைத் துவங்குகிறார். மேலும், குழப்பும்படியான காரணங்களை சொல்லி வீட்டில் தன்னை விட்டுவிடும்படி கேட்டுக்கொள்கிறார். முதலில் மறுத்து பின் ஒப்புக்கொண்டு இல்லம் அழைத்துச் செல்கிறான் கதாநாயகன். வீட்டிற்கு சென்ற பிறகு, அலங்கோலமாக கிடக்கும் வீட்டைப் பார்த்து திகைப்புறுகிறான். உங்களுக்கு திருமணமாகிவிட்டதா என்று கேட்டதற்கு இனிதான் என்று பதிலுரைக்கிறார் வடிவேலு. அவ்வீட்டிலிருந்த 555 சீட்டுக்கட்டுகளைப் பார்த்து உடன் யார் விளையாடுவார் என்று கேட்டதற்கு,
“சோடியெல்லாம் இல்ல நானே ஆடிக்குவேன்… ஆமாம். நானே ஆடிக்குவேன். ரெண்டு பக்கமும் ரண்டு கையி. எதுத்தால ஒரு கையி. எனக்கொரு கையி. நாலு கைக்கும் சர்சர்னு சீட்டப்போட்டுட்டு நாலுகைக்கும் சேர்த்து நானே ஆடிக்குவேன். செம இன்ட்ரெஸ்டா இருக்கும்”(ப.92) எனும் பதிலைக் கேட்டு ஒன்றும் புரியாதவனாய் திகைப்புறுகிறான். தனிமையின் துயர் ஒருவரை எந்தளவிற்கு பாதிக்கிறது என்பதை விளக்கும் பகுதி இது. தன்னுடைய செல்போனை வடிவேலு வீட்டிலேயே மறந்துவிட்டதால் எடுக்க போன போது, அவன் வீடு உள்ளே பூட்டப்பட்டிருந்ததுடன் ஒரு பெண்குரலும் கேட்டதால் திடுக்கிடுகிறான். இந்த இடம் தான் பிரதி வாசகருக்கான இடத்தை அமைத்துத் தருமிடம். தனிமையின் கொடுந்துயரில் போதைப் பழக்கத்திற்கு உள்ளாகிய ஒரு நபர், சீட்டாட்டம் போலவே ஒரு பெண்ணையும் பாவித்துத்தானே பேசிக்கொண்டிருக்க வாய்ப்புள்ளது. எப்போது ஏதோவொன்றை சார்ந்திருக்க விரும்புகின்ற மனம், விரும்பா தனிமையினாலும் சமூக விலக்கலினாலும் பித்துநிலையை எய்துவதையே குறிப்பிடுகிறது.
‘இளஞ்சூடானநீர்’, ரங்கமணி எனும் குடிகார கதாபாத்திரத்தின் வாழ்வியலே இக்கதையின் மையமாகிறது. அவரின் கதையைப் பற்றி அறிந்துகொள்ள நாச்சிக்குட்டி மாமனிடம் கேட்கும் பாத்திரத்திடம், அவன் தன் மாமனார் வீட்டில் தன் சகலையின் புல்லட்டை ஓட்ட ஆசைப்பட்டு கற்றுகொள்ள எத்தனித்திருக்கிறான். முதலில் வண்டியை ஸ்டார்ட் செய்யும் பாடம். அன்று விடியகாலையில் சிறுநீர் கழிக்க வந்தவன் வண்டியைப் பார்த்ததும் ஸ்டார்ட் செய்ய ஆரம்பித்து சலித்து விடுகிறான். இதற்கிடையில், தன் மாமியார் ஊரிலுள்ளோரை அழைத்து வந்து, இந்நிகழ்வைக் காட்டி சிரித்திருக்கிறாள். அவருடைய சகலை வரும்போது என்ன செய்தாலும் ஸ்டார்ட் ஆகவில்லை என்று கூற, எது செய்தாலும் ஆகாது முதலில் சாவியைப் போடவேண்டும் என்று சொல்ல அனைவரும் சிரித்துள்ளனர். சாவியைப் போட்டு ஸ்டார்ட் செய்து பின் நிறுத்திய சகலை, ரங்கமணியின் மனைவியைப் பார்த்து, ‘இவனைக் கட்டியதற்கு நீ என்னை மூனாந்தாரமாகக் கட்டியிருக்கலாம்’ என்று சொல்லவே அவள் உட்பட ஊரார் அனைவரும் சிரிக்கின்றனர். இதனைப் பொறுத்துக்கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி வந்து விடுவதோடு பனிரெண்டு ஆண்டுகள் கழித்தே மீண்டும் தன் குடும்பத்தோடு சேர்கிறான். புதிய புல்லட் வண்டி வாங்கி அதை தனியாக ஸ்டார்ட் செய்தலே தன் லட்சியமாகக் கொண்டு குடும்பத்தை விட்டு விலகியிருக்கிறான்.
பாலியலை மையமாகக் கொண்டியங்கும் சமூக அமைப்பில், அதற்கேதேனும் பாதகம் ஏற்படின் தன் ஆளுமைச் சிதைந்ததாகவே எண்ணும் மனங்களை விளக்கும் பாத்திரமே ‘ரங்கமணி’. பாலியல் ஆளுமை என்பது இங்கு ஆணை மையமிட்டே அமைந்தமையால், தன் ஆண்மையை நிரூபிக்கப் போராடும் ஓர் உடலின் செயற்பாடுகளே கதைக்களமாகிறது.
‘எருமைநாயகம்’, பணக்கார வீட்டில் பிறந்த சாமிநாதனுக்கு வெகுநாட்களாகியும் திருமணம் ஆகாமையால், ஏழைக் குடும்பத்துப் பெண்ணான நந்தினியை மணம் முடித்து வைக்கிறார்கள். சாமிநாதனின் அம்மா வசதியை முதன்மைபடுத்தி நந்தினி வீட்டாரை தொடர்ந்து இழிவுபடுத்தி வந்தமையால் அவள் அதை விரும்பாது தன் தாய் வீட்டிலேயே இருந்து கொள்கிறாள். விவாகரத்துக்கு முயன்ற சாமிநாதனின் தாய், தன் சொத்தில் வகிபாகம் அப்பெண்ணிற்கு கொடுக்க வேண்டுமென்று வக்கீல்கள் சொன்னதால் அதனை கைவிடுகிறாள். சுயமரியாதையோடு வாழ நினைக்கும் பெண்ணை நிறுவனமயப்பட்ட குடும்ப அமைப்பு ஏற்றுக்கொள்வது எப்போதும் சிக்கலே.
“தான் மகாலட்சுமி மாதிரிங்கிற உண்மையை அறியாத அப்பாவியாகவும் இருக்கா… தானொரு அழகிங்றத அறிஞ்ச பொண்ணுகளெல்லாம் பயங்கர ஆணவத்தோடு இருப்பாளுக… ஊட்டுக்காரன், மாமியாரு, மாமனாரு சொல்றதையெல்லாம் கேக்கமாட்டாளுக… நமக்கு இப்படிப்பட்ட பொண்ணுதான் வேணும்”(ப.153) எனும் ஆண்மையக் குரலோடு எதிர்பார்த்த பெண் தன் சுயமரியாதையோடு துணிந்து நிற்பது குடும்ப அமைப்பில் அதிர்வை ஏற்படுத்துவதில் வியப்பில்லை. மேலும், “ஒரு மகாலட்சுமி, தானொரு மகாலட்சுமியென்பதை உணர்வதற்கு எவ்வளவு நேரமாகி விடப்போகிறது? அது எப்போது வேண்டுமானாலும் நிகழ்ந்துவிடலாமே”(மேலது.) என்ற கதை சொல்லியின் குரல், பாத்திரத்தின் ஆண்மையக் குரலை மறுத்தொலிக்க எத்தனிப்பதாகும். பிரிந்திருக்கும் ஆணின் மனநிலையை மையப்படுத்துகிறது இக்கதை.
இதுபோல, ‘ஆபரேசன் சிந்தாமணி’யில் திருமணமாகாத அறிவுடைய பெண்ணைப் பற்றி ஊரார் வைத்திருக்கும் அபிப்பிராயமும், நில புரோக்கரான கல்யாணமாகாத பழனிச்சாமியின் வாழ்வியலுமே கதைக்களம். இருவரும் போதைப்பழக்கத்திற்கு உள்ளாதல், பின் இருவரும் ஒன்றாதலாக கதை நகர்கிறது. இத்தொகுப்பிலுள்ள பெரும்பான்மையான கதைகளனைத்தும் முப்பது வயது கடந்தும் திருமணமாகாத ஆண்களின் வாழ்வியலையே மையமாகக் கொள்கிறது. வாழ்வியல் என்பது சமூக வாழ்வியலே அன்றி அவர்களின் பாலியல் உணர்நிலை, மனக்கிளர்ச்சி என்பது பற்றி பெரிதும் மையப்படுத்தாமை ஏமாற்றமே. அவர்களின் வாழ்வியலை, துயரத்தை எடுத்தியம்பும் அதேவேளையில் கிராமங்களின் அழிவு, உழவுத்தொழிலின் அழிவு, நகரவிரிவாக்கம், கார்ப்பரேட்மயமாக்கல் எனும் பின் – காலனியத்துவ அம்சங்களைத் தன்னுள்ளே கொண்டியங்குகிறது. இப்பிரதியின் ஊடுபாவும் நூலாக ஆணை மையமிட்ட சமூக அமைப்பையே, அதன் அதிகாரத் தொனியையே கொண்டியங்குகிறது. மேலும், திருமணமாகா ஆண்களின் கையறுநிலையை எடுத்தியம்புவதாயும் அமைகின்றது. இந்தியச் சமூகம், ஒருவர் தனித்திருப்பதை எப்போதும் ஏற்பதேயில்லை. தான் பாவித்துக்கொண்ட கடவுளரையும் அக்குடும்ப நிலையினின்றே பேணிக்கொண்டது. இவ்வாறான, சமூகத்தில் தனியாக வாழ முற்படும் ஒருவரைத் தன்னால் இயன்றவரை இழிவுசெய்து ஒதுக்குகிறது. சடங்குகள், நம்பிக்கைகள் மூலம் அவர்களைத் தீண்டத்தகாதவர்களாக்கி விடுகின்றது. இத்தகைய இறுக்கமான குடும்ப/ சமூக அமைப்பிற்கு உந்து சக்தியாகத் திகழ்வது ஆணாதிக்க தந்தைவழிச் சமூக அமைப்பும், அதன்வழி கட்டமைக்கப்பட்ட சாதியைப் பேணுகின்ற மதமுமேயாகும். இவற்றை களைந்தெறிதல் எனும் தளத்திலே புதிய புனைவுகள் உருவாகும். பழனிச்சாமி, சிகரெட், மது ஆகியன பிரதி முழுவதும் பயணிக்கும் உடனுறைகளாகும். மேலும், தன் குடும்பக்கதையைப் பேசிப் பேசி ஊர்ப்பெண்களின் வாய் சலித்ததாக கோபி எண்ணுவதைப் போல இப்பிரதியின் சிலவிடங்களில் உவமை நிலை, இயங்குநிலை ஆகியவிடங்களில் கோபியின் நிலையே நமக்கும்.
(பிப்ரவரி 2022ல் களரி(மணல்வீடு)
இலக்கியக் கூட்டத்தில் ‘வெறுங்கால்நடை’ நூல்
வெளியீட்டின் போது வாசிக்கப்பட்ட கட்டுரை.)
Comments
Post a Comment