சத்யா –விசித்திரன்
சத்யா –விசித்திரன்
“வாடா! சத்யா இப்போ ஆச்சும் வந்தியே எங்க அண்ணன் இருந்தவர அது ஓடி ஓடி வரும். ஒத்த தங்கச்சி னு பார்த்து பார்த்து செய்யும் பணம் காசு இல்லனாலும் அண்ணன் முகத்தை அடிக்கடி ஆச்சும் பாக்குறோம்னு சந்தோஷம் இருந்துச்சு. இப்ப என்ன பண்றது அது போச்சு …..ஹூம்……எனக்குன்னு இப்ப யார் இருக்கா ? இந்த கெதில இருக்கேன். பாப்பாவ பாத்தியா அண்ணி சொல்லுச்சா பெரிய மனுஷியா ஆயிட்டான்னு. இதோ எங்க அண்ணன் சாகும்போது இதுக்கு என்ன மூணு வயசு மாமா மாமான்னு பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கும். காலம் எவ்வளவு வேகமா ஓடுதுல பாத்தியா” விசும்பிக் கொண்டு முந்தானையால் மூக்கை துடைத்துக் கொண்டிருந்தாள் சத்யாவின் அத்தை. அவளின் பேச்சுகள் முழுவதிலும் கவனம் செலுத்தாமல் இருந்தாலும் சத்யா அப்பப்போ அதற்கு ஏற்றார் போல் தலையை அசைத்தும் ஹூம் கொட்டியும் அத்தையின் வார்த்தைகள் வெளிவர வழி விட்டான். தன்னுடைய அப்பா தன் தங்கை மேல் வைத்த பிரியம் மட்டும் அவனுக்கு நன்றாக தெரியும். அவன் தந்தையின் இறப்பிற்குப் பிறகு தன்னுடைய தாயினைக் கண்டுக் கொள்ளாத தந்தை வீட்டார் மீதெல்லாம் மிகுந்த கோபம் இருந்தாலும் அத்தை பாவம் என்று சொல்லுவான்.
ஈஸ்வரி அத்தை தான் தன் தந்தை வகையறாவில் மாற்றி பிறந்தவர் என்பது பழகிய அனைத்து சொந்தக்காரர்களுக்கும் தெரியும். தனி குணம் அந்த குடும்பத்தில் அப்போதே எஸ்எஸ்எல்சி வரை படித்தவர். பதினோராம் வகுப்பில் சேர்வதற்கு முன்பே பிடித்து திருமணம் செய்து விட்டனர்.கள்ளம் கபடம் இல்லாத பேச்சு. கொஞ்சம் அப்பிராணி. கணவர் மீது அதீத பாசம் எந்த அளவிற்கு என்றால் திருமணம் ஆகி இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தொழில் செய்ய வெளியே செல்ல மாட்டேன் என்று வீட்டிலேயே டேரா போட்ட கணவனை எந்த ஒரு வார்த்தையும் சொல்லாமல் அன்றிலிருந்து அவளே ஒண்டியாக வேலைக்கு போக ஆரம்பித்தாள். தன் வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து வெளியே மற்ற வீடுகளில் பாத்திரம் தேய்க்க புறப்பட்டு விடுவாள். பலமுறை அவளின் கைகள் நீரில் ஊறிப் போய் சேற்றுப்புண் வந்துவிடும். சைபால் மருந்து வாடை இருக்காமல் இருக்காது மழைக்காலங்களில். இவ்வளவு நெருக்கடியில் வேலைக்கு சென்று கஷ்டப்பட்டாலும் யாராவது தன் கணவனை ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும் கோபம் பொத்துக் கொண்டு அவளுக்கு வந்து விடும். “பொண்ணே! உன் புருஷன் ஆளு நல்லா தானே இருக்கான் கெடா மாரி வேலைக்கு போக சொன்னா நீயும் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம் இல்ல எதுக்கு ஒண்டி இப்படி லோல் பட்டுட்டு கொடக்குற” அவளின் நன்மைக்கு சொன்னாலும் அவளுக்கு அது பிடிக்காது. இவ்வாறாக பேசுபவரிடம் அவள் திரும்பி பேசுவதும் இல்லை. இன்றும் அவள் தன்னுடைய கணவனை விட்டு தராததற்கு காரணம் அவன் கணவனுக்கு இதுவரை எந்த குடிப்பழக்கமும் சிகரெட் பழக்கமும் இருக்கவில்லை. சூதும் முன்பு ஆடினார், திருமணத்திற்கு முன் இப்போது அதுவும் இல்லை. அதன் காரணமாய் அவரை விட்டு தந்தது கிடையாது. இப்போது கடைசி சில வருஷங்களாக தான் மீண்டும் வேலைக்கு போக ஆரம்பித்திருக்கிறார். சத்யாவுக்கு தன் அத்தையை மிகவும் பிடிக்கும் ஆனால் அத்தையின் பைத்தியக்காரத்தனமான தன் கணவன் மீது கொண்டிருந்த அன்பை பற்றி பலமுறை தன் தாயிடம் “ யம்மோ ஈஸ்வரி அத்தையும் ஏன் இப்படி இருக்காங்க அந்த ஆள வேலைக்கு போக சொன்னாதான் என்ன? சும்மா அந்த ஆளு வேலைக்கு போனா உடம்பு சரியில்லை னு பூச்சி காட்றாரு, நீயும் அத்தை கஷ்டப்படுது னு என்று கவலைப்பட்டுனு கெடக்குற” தன் தாயினைக் கடிந்து கொள்வான். இப்போது தன் எதிரே எதிர் பட்டு பேசிய அத்தைக்கு மறுமொழி சொல்ல வேண்டும் என்று சத்யா தயாரானான். இருந்தும் அவனுக்கு மிகவும் சோர்வு. நேற்றிரவே பலவிதமான விஷயங்களை தன்னுடைய மண்டையில் போட்டு குழப்பி தூக்கத்தை ஞாபகம் மறதி உள்ளவன் தன்னுடைய ஒரு காலினைத் தொலைத்தது போல் தொலைத்து இருந்தான். சத்யாவின் தாய் காலையில் அவன் வைத்திருந்த அலாரத்துக்கு முன்பாகவே போன் செய்ததாலே தூக்கம் கலைந்தது. அதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் தூக்கம் கண்ணை வலித்துக் கொண்டு சென்றது. வீட்டை பூட்டி அரைத்தூக்கத்தோடு படபட அவனை குளித்து இங்கு வந்து சேர்ந்தான். சுயநினைவுக்கு திரும்பி “அத்தை எப்படி இருக்கீங்க அம்மா தான் நீ காலையில கிளம்பி வா னு சொன்னாங்க அதான் வர லேட்டு கோச்சுக்காதீங்க” பேசிக்கொண்டே இருக்கும்போது பக்கவாட்டில் இருந்து ஒரு குரல் “டேய் சத்யா வந்துட்டியா வாடா நான் வாங்க சொன்னதை வாங்கினு வந்தியா” கேட்டுக்கொண்டே சத்யாவை நெருங்கி அவன் கையில் வைத்திருந்த கட்டப்பையினை வாங்கி ஸ்வீட் பாக்ஸ், தாம்பூல தட்டு, வெற்றிலை, பாக்கு ,எடுத்து அடுக்கினால் சத்யாவின் தாய். சத்யா முன்பு இது போன்ற நிகழ்வுகளில் பங்கு கொண்டது கிடையாது இதில் என்னென்ன சடங்கு நடக்கும் என்பது பரிச்சயம் இல்லை. அக்கம் பக்கத்து வீட்டில் இதுபோன்ற விழாவுக்கு அழைப்பு வருவதும் குறைச்சல் தான். எல்லா வீட்டிற்கும் குங்குமச்சிமிழ் கொண்டு செல்பவர்கள் எங்கள் வீட்டை ஏதோ சாக்கடை நீர் ஓடும்போது எட்டி தாண்டுவது போல் கடந்து செல்வார்கள். அதையும் தாண்டி கொஞ்சம் நெருங்கியவர்கள் வீட்டிற்கு வந்து சொல்லுவதும் உண்டு. அங்கேயும் அவனை அழைத்துக்கொண்டு போனதில்லை. சோறு சாப்பிட்டாமலே மொய் மட்டும் வைத்துவிட்டு வந்து விடுவார்கள் தீட்டு வீட்டில் சோறு சாப்பிட மாட்டேன் என்ற குறிக்கோள். அதனால் அங்கு நடப்பது எதுவும் சத்யாவுக்கு புரியவில்லை. வெரித்து நின்று கொண்டிருந்தான் பின்பு ஓரமாக நாற்காலியில் அமர்ந்து தன்னுடைய கைபேசியில் அமிர்தாவுக்கு மெசேஜ் செய்ய தொடங்கினான். காரணம் இத்தனை நாட்களாய் அவன் அவளிடம் சரியாக பேசவில்லை பேச முயற்சித்த அமிதாவையும் எதிர்கொள்ள திராணியில்லாமல் தள்ளிப் போட்டிருந்தான். இன்று அவனாக கைபேசியில்
‘ஓய் இருக்கியா!?’
‘அமிர்தா ஐ அம் வெரி சாரி லாஸ்ட் 3 4 டேஸ் நான் உன்கிட்ட சரியா பேசல’
‘உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்’
என்ற வரிசையாக குறுஞ்செய்திகளை டைப் செய்து அனுப்பிவிட்டு, அவளிடம் இருந்து ஏதேனும் சமிக்ஞை வருகிறதா என்று காத்துக் கொண்டிருந்தான். இன்று வெங்கட் அண்ணன் தன்னை உடலுறவுக்காக அழைத்ததை அமிர்தாவிடம் சொன்னால்தான் பாரம் சற்றாவது குறையும் அவனுக்குள் சொல்லி இருந்தான் அமிர்தா தன் நம்பிக்கைக்கு உரியவளாக நம்புவதற்கு இத்தனை நாள் தேவைப்பட்டது.
எல்லா விஷயங்களையும் எல்லோருக்கும் சொல்லிவிட்டால் நெருக்கமானவர்களுக்கு என்ன சொல்வது. கனமான வார்த்தைகளை யாரிடம் நிறைய கொடுக்கிறோமோ அவர்களே நமக்கு நெருக்கமாகி போகிறார்கள். போனைப் பார்த்துக் காத்திருந்த இரண்டு நிமிடங்களில் கோபத்துடன் இருந்த அமிர்தா ‘ம்ம்’ என்று மட்டும் பதிலளித்திருந்தாள். இந்த ம் மட்டுமே சத்யாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி தந்தது. காரணம் அவனுடைய கணிப்பு படி எந்தவித குறுஞ்செய்தியும் இப்போதைக்கு எதிர்முனையில் இருந்து வராது. இது மாறுபட்டு இருப்பது கொஞ்சம் ஆனந்தம். அவன் ஆர்வத்தில், எங்கிருந்தோ வந்த ஒரு உத்வேகம். துணிச்சலில் நடந்தவற்றை எல்லாம் கடகடவென பைப் செய்து கொண்டிருந்தான். அதில் எழுத்துப் பிழைகள் வந்தாலும் விஷயத்தை கடத்திவிட்டால் போதும் என்று அவன் நினைத்தான். ஒன்றிரண்டு முறை வார்த்தைகளை அழித்து புதிய வார்த்தைகளை இட்டு டைப் செய்து கொண்டே இருந்தான். முக்கால்வாசி டைப் செய்து வைத்திருந்த வேளையில் திடீரென அவன் அம்மா தொண்டைக் கிழியும் வண்ணம் “டேய் சத்யா உடனே வாடா” கத்தியவுடன் சத்யாவும் உடனே டைப் செய்து இருந்த மிச்சத்துடன் போனை தன்னுடைய பாக்கெட்டில் போட்டு உடனே அவன் அம்மாவிடம் போய் “என்னம்மா இப்போ எதுக்கு இப்படி விரியிற மொல்லமா கூப்பிட்டா தான் என்ன? எனக்கென்ன செவுட்டுக்காதா சும்மா சும்மா கத்தாதே எத்தனை தபா சொல்றது” இப்படி அவன் சொன்னவுடன் அவளும் பதிலுக்கு “நேத்து பொறந்த பீக் குட்டி நீ எனக்கு சொல்லித் தரியா ரீஜென்ட் எனக்கும் தெரியும் வாயாடுன டர்ன்னு வாய கிழிச்சு வச்சிடுவேன் பாத்துக்கோ ரொம்பதான் பண்ற”
“சரி என்ன வோணும் சீக்கிரம் சொல்லு”
“பந்திக்கு தண்ணி கேன் சொல்லி இருந்தேன் அது இன்னும் வரல நீ என்னனு ஒரு எட்டு பார்த்துட்டு வா”
“சரி சரி போறேன் சரியான குடைச்சல்டா இது” முணங்கிய படியே நடந்தான். அவன் வாசலை அடைந்தவுடன் குட்டி யானையில் இருந்து 15 தண்ணி கேன்களை இறக்கி கொண்டிருந்தார்கள். கணக்கு முடிக்க சொல்லி காசு சத்யாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை கொடுத்துவிட்டு வண்டியில் முன்னால் சென்று சத்யாவிற்கு பகிர் என்று இருந்தது. உடம்பு கிடுகிடுவென நடுங்கியது தொண்டையை இறுக்கிப்பிடித்தது போல. திடீரென ஒரு உஷ்ணம் பரவியது இதயத்துடிப்பு இயல்பைக் காட்டிலும் பல முறை அதிகமானது கப்பென வியர்வை. அட்ரீனலின் ரஷ் சத்யாவுக்குள் நடந்தது. காரணம் அந்த வண்டியை ஓட்டி வந்த நபர். அவர்தான் சத்யாவின் வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணியவன். மனதால் சத்யா ஒரு பாதுகாப்பு அற்ற உணர்வு எப்பொழுதும் நிறைந்திருக்க அவரே காரணம். வெங்கட் அண்ணன் கேட்ட கேள்வியும் அவர் அவனிடம் கொண்ட அணுகுமுறை எல்லாம் நாகரிகமாக இருந்தும் அவன் பயந்து நடுங்க வைத்ததற்கு காரணம் அந்த நபருடன் உண்டான முந்தைய ஞாபகங்கள். பட்டென்று அவனைப் பார்த்தவுடன் ஒதுங்கிக் கொண்டான். ரவிகுமாருக்கு சத்யாவின் முகம் ஞாபகத்தில் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் சத்யாவிற்கு அவனின் குரூர உடல் முழுவதுமாக கண்ணுக்குள் அப்படியே அடைப்பட்டிருந்தது. அன்று அவனைக் கடைசியாக பார்த்த போது இருந்த ஏதும் இன்று மாறவில்லை. அதே ஒல்லியான கை கால்கள், கோள் மூஞ்சு, தாடி மீசை முளைக்காத மொளுகட்டியான முகம், நெஞ்சு எலும்பு தெரியும் மார்பு கருத்த தேகம் அனைத்தும் அப்படியே இருந்தது.
சித்திரம் போல் அவன் சத்யாவை இப்போது பார்த்தால் அந்த அளவிற்கு அடையாளம் கண்டு கொள்வான் என்று தெரியவில்லை. சத்யாவின் இன்றைய தாடி மீசை கூடிய முக அமைப்பு அவன் நெருங்கிய உறவினரே அவனை எளிதில் அடையாளம் கண்டு கொள்வதில் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. அவனுக்கு பயம் கவி கொண்டது ரவிக்குமாரின் கண்களில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக உள்ளே ஓடி வந்து அமைதியாக ஒரு மூலையில் உட்கார்ந்து தான். லப்டப் வேகம் குறையவில்லை. கொஞ்ச நேரத்திற்கு நிதானம் அவனுக்கு இல்லை. தன்னுடைய கைப்பேசி எடுத்துப் பார்க்க அவன் செய்து வைத்திருந்த குறுஞ்செய்தி அழிந்துப் போயிருந்தது அமிர்தாவும் என்ன என்பது போல் ஒரு ஸ்டிக்கரை அனுப்பி இருந்தாள். தான் நேரில் கட்டாயம் சொல்லுகிறேன் என்பதை ஆங்கிலத்தில்.
‘சாரி ஐ வில் மீட் யு டுமாரோ’
‘வி வில் டிஸ்கஸ்’
மெசேஜ் அனுப்பி விட்டு போனை ஆப் செய்து சட்டை பையில் போட்டுக் கொண்டான். விழாவும் முடியும் தருவாயில் வந்தது சீர்வரிசை தட்டுகளை எண்ணி வைக்கும் பணியில் ஈஸ்வரியும் சத்யாவின் தாயும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். சீர்வரிசை பலகாரங்களில் குறிப்பிட்டவற்றை சத்யாவின் தாய்க்கு கொடுத்து அனுப்ப தூக்கு ஏனத்தை தயார் செய்தாள். முறுக்கு,அதிரசம், சோமாஸ், பெடலங்காய் உருண்டை போட்டு
“சத்யாவுக்கு குடுங்க நீ பொடலங்காய் உருண்டை அவனுக்கு பிடிக்கும்னு நிறைய வச்சிருக்கேன்.”
“பாப்பா நீ ஒன்னும் கவலைப்படாத எல்லாம் பாத்துக்கலாம்
உங்க அண்ணன் இல்லாங்கட்டியும் சத்யா இருக்கான் அந்த ஸ்தானத்துல” சொல்லி பாதுஷாவை எடுத்து
கொடுத்தாள். ஈஸ்வரிக்கு தன் அண்ணன் அடிக்கடி தனக்கு வாங்கி வந்து தரும் அந்த ஸ்வீட்டை
நினைத்து கண்ணீர் வந்தது. “அண்ணிக்கு எவ்வளவு ஞாபகம் பாத்தியா” விசும்பி கொண்டே “உங்க
அம்மாவை பாருடா” கூறிவிட்டு மகிழ்ச்சியோடு அங்கிருந்து கிளம்பினார்கள். சத்யா தன்னுடைய
வாய்க்குள் பாதுஷாவை குதப்பிக் கொண்டிருந்தான். அது அத்தனை இனிப்பை தரவில்லை அவனுக்கு......
*******
சத்யா ஐந்தாம் வகுப்பில் டியூஷன் படித்துக் கொண்டிருக்க அங்கு வந்து சேர்ந்தான் ரவிக்குமார். அப்போது அவன் ஒன்பதாம் வகுப்பு. சத்யா ரவிக்குமாரை மேற்பார்வை செய்து சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அந்த டியூஷன் அக்கா அவனுக்கு பொறுப்பு கொடுத்திருந்தார். வீடுகளில் சென்று டியூஷன் படிப்பது சிறுவயதில் பழக்கமாக இருந்தது. ஊரிலே பல டியூஷன் அக்காக்கள் ஆங்காங்கே அவதரிப்பார்கள். அந்த டியூஷன் அக்கா பள்ளியிலும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இரவு 7 மணி போலவே வருவார். அதுவரை அவரின் தங்கையே கவனித்துக் கொள்வார். ரவிக்குமாருக்கு படிப்பு சுத்தமாக வராது அவன் எப்படி ஒன்பதாம் வகுப்பு வந்தான் என்பதே வியப்புதான். டியூஷன் சேர்ந்து அவன் படித்தாக நினைவில் இருப்பது குறுங்கேள்விகள் இரண்டு மட்டும். சத்யாவும் பல போராட்டங்களுக்குப் பிறகு அதனை அவனின் மண்டையில் திணித்தான்.
‘இறைவனின் முத்தொழில்கள் என்ன?’
‘படைத்தல்,காத்தல், அழித்தல்’
அந்த இரண்டு வினாக்களை மனப்பாடம் செய்வது தினம் தினம் ரவிக்குமாருக்கு முதல் வேலையாக இருக்கும். அவன் படித்த பள்ளியிலும் பெரிதாக எதையும் கண்டு கொள்ள மாட்டார்கள். வீட்டிலும் தன்னை யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள், அவன் சொல்லுவது அது எந்த விதத்தில் உண்மை என்றும் தெரியவில்லை. கலகலவென பேசுவான் வீட்டில் ஆடு வளர்ப்பதால் ஆட்டுப்பால் மூன்று நாளுக்கு ஒரு முறை கொண்டு வருவான். தினமும் கறந்தால் அரை டம்ளர் தான் வரும் மூன்று நாளுக்கு ஒருமுறை கறந்தால் ஒரு சொம்பு வரும் என அவன் சொல்லுவது, கறிக்கடையில் மட்டும் ஆடு (மட்டன்) பார்த்திருந்தா சத்யாவுக்கு புதிதாக இருந்தது. ரவிக்குமார் விடலை பருவம் எட்டி இருந்ததால் அவனுக்கு பாலியல் உணர்வு என்பது அதிகமாக இருந்தது. அவன் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாலும் அவனின் வயது அதற்கு பொருத்தமானது இல்லை. சத்யாவிடம் பல நேரம் பாலியல் ஆசையை தூண்டும் கதைகளை சொல்லுவான். பெண்களின் உருவ அமைப்பு எல்லாவற்றையும் குறித்த அவனின் வர்ணனைகள் சத்யாவை வியந்து கேட்க வைத்தது. சிறுவயதில் கேட்கும் மந்திர கதைகளை போன்று வாய் பிளந்து கொண்டு அவன் சொல்லும் கதைகளை ரசித்து கொண்டிருப்பான். ஆண்குறியின் விறைப்புத்தன்மை மேலும் ஆண் குறியின் நீளம் ஆகியவற்றை பற்றிய அவனின் பேச்சுகள் புதிதாக இருந்தது. அவனுடைய ஆண்குறியை தொட்டுப் பார்க்கச் சொல்லி வற்புறுத்துவான் சத்யாவுக்கு இஷ்டமில்லை என்றாலும் அவனே வலிந்து சத்யாவின் கைகளை பிடித்து அவனின் ஆண் குறியின் மீது வைத்து விடுவான். இது பிடிக்காமல் இருந்தது எப்படி தப்பிப்பது சுத்தமாக தெரியவில்லை. இதைப் பற்றி யாரிடம் சொல்வது என்று அவனுக்கு ஒரு குழப்பமாக இருந்தது. யாரிடமும் சொல்லவும் முடியாது என்று அவனே தீர்மானித்திருந்தான். இருந்தாலும், அவன் சொல்லும் பாலியல் கதைகள் பாலியல் ஆசைகள் அரும்பிக் கொண்டிருந்த சத்யாவுக்கு அது பசி ஆற்றுவதாய் அமைந்தது. அந்தக் கதைகளைக் கேட்பதற்காகவே சத்யா வருவதும் அதே சாக்கில் ரவிக்குமாரும் தன்னுடைய இச்சைக்கு அவனை ஆட்படுத்துவதுமாக நாட்கள் சென்றன.
ஆறாம் வகுப்பு தொடங்கியவுடன் சத்யா டியூஷன் போவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டான். ரவிக்குமாரை பார்ப்பதற்கு வாய்ப்பு அத்தோடு அற்றுப்போனது. இந்த சூழ்நிலையிலே எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சத்யா ஒரு நாள் தன்னுடைய நண்பர்களுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஒரு மதியப் பொழுது. திடீரென்று அங்கிருந்த மினரல் வாட்டர் கம்பெனிக்கு மீன்பாடியில் ரவிக்குமார் வந்தான். அவனுடன் பரசுராமன் என்ற ஒரு கையாளையும் உடன் அழைத்து வந்து இருந்தான். சத்யா துருதுருவென்று “டேய் ரவி” என்று கூப்பிட்ட உடனே ரவியின் பார்வை என்பது சத்யாவின் மேல் விழுந்தது. ரவியின் பார்வையில் அத்தனை வக்கிரம் பொதிந்திருந்தது. காமத்தின் ஆதி பார்வை.
சத்யாவின் உடலை பாம்பைப் போல் விழுங்கியது. விளையாட்டாக அன்று அவன் கூப்பிட்டது அத்தனை பெரிய விபரீதமாக முடியும் என்று அவன் அன்று நினைத்திருக்க வாய்ப்பில்லை. பாய்ந்து வந்து ரவி சத்யாவை பிடித்தான். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அவன் பிடியில் சிக்காமல் இருந்தான். உடனே மீன்பாடியை பரசிடம் கொடுத்து “ இதப்புடியேன் நான் சொல்லி இருக்கேன்ல எனக்கு டியூசன்ல பூல புடிச்சு விடுவான் ஒருத்தன்னு அவன் தான் டா இன்னைக்கு மாட்னா”
“சரிடா ரவி உட்றாத கெட்டிமா புடிச்சுக்கோ”
இருவரின் பேச்சுகளின் வீரியத்தை சத்யா அறியவில்லை. இந்த பரசுராமனுக்கு சரியாக சத்யாவின் வயதே இருக்கும், அதைவிட குறைச்சலாக இருக்குமே தவிர்த்து, கூடுதலாக இருக்க முடியாது. பள்ளி படிப்பை இடை நிறுத்திவிட்டு கூலித் தொழிலுக்கு சொல்லுவானாக இருந்தான் அவன். ரவிக்குமாரும் அன்று டியூஷனில் சத்யாவிடம் படித்த பாடத்துடன் பள்ளி படிப்புக்கு முழுதும் லீவு விட்டு விட்டான். பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்லும் அந்த வழக்கமான சுண்ணாம்பு கால்வாய் வழியில் அவர்களுடன் பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தான். “சரி ஓரமா வந்து கையடிச்சிவிட்டு போ சத்தம் போடாதே” ரவிக்குமார் சத்யாவின் காதில் சொன்னான். “ஓத்தா போடா சும்மா விளையாடாதடா என்ன கலாய்க்கிறீயா” அவன் சொன்னதை விளையாட்டாகவே எடுத்துக் கொண்டான் சத்யா. இப்படியே போய்க் கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று அந்த சுண்ணாம்புக் கால்வாய் உள் வண்டியை ரவி செலுத்த சத்யாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. பரசுராமன் சத்யாவின் பேக்கைப் பிடுங்கி” உள்ள வரல பேக்கை தூக்கி கூவத்துல போட்டுவேன்” கண்களுக்கு தெரியும் அளவிலே அந்த கூவம் ஓடிக்கொண்டு இருந்தது. அந்த கருமை விட பரசுராமன் எண்ணம் அதிபயங்கரமாக இருந்தது. அவன் சத்யாவை விட உயரம் குறைச்சல் தான் “ ஓத்தா பூலே ஒழுங்கா பேச்ச கேக்க மாட்டியா அவ்வளவுதான் பேக்கை தூக்கி கூவாத்தில போட்டு பூலாச்சானு ரெண்டு பேரும் போயிடுவோம்” சத்யாவுக்கு அழுகை பீறிட்டது. தரதரவென யாரும் இல்லாத அந்த மதியத்தில் சுண்ணாம்பு எரிக்கும் தொட்டியின் அருகே சத்யாவை வலித்துச் சென்றார்கள். தார்பாய் போட்டு கட்டப்பட்டிருந்த அந்த கொட்டாயின் அருகில் மீன்பாடியும் நின்றது. சத்யா இதற்கு முன் அப்படி ஒரு அழுகை அழுததே இல்லை “ஓத்தா அழுத கைய ஒடச்சு போட்டுருவேன் கம்முனு சொல்றது செய்” அவனின் மிரட்டல் இன்னும் சத்யாவின் கண்களில் கண்ணீர் வரவழைத்தது. ‘வாடா,போடா’ பேசியது முற்றிலும் மாறி “நான் வீட்டுக்கு போறேன் என்னை உட்டுரு, நான் வீட்டுக்கு போறேன்” மீண்டும் மீண்டும் இதே பேசினான். இதை எல்லாம் பொருட்படுத்தாமல், அவர்களுக்குள்ளே இந்த இடம் வேண்டாம் ‘பேசின்பிரிட்ஜ் போலாம் வியாசர்பாடி போலாம்’ என்று பேசிக் கொண்டனர். முடிவில் இந்த இடமே சரியானதாக இருக்கும் என்று இருவரும் உறுதிப்படுத்திக் கொண்டார்கள். கருகலான அந்த சுண்ணாம்பு எரித்த தொட்டியின் அருகே ரவி சென்று, அவனுடைய சாக்ஸை கீழ் இறக்கி ஆண்குறியை வெளியே எடுத்து நீட்டி பிடித்துக் குலுக்கச் சொன்னான் சத்யா “என்ன உட்டுரு” என்று வாய் விட்டு கதறினான். அழுக அழுக கண்ணீரெல்லாம் வாய்க்குள் சென்று உப்பு போல கரித்தது அதனோடு வாயில் இருந்து எச்சிலும் ஒருபுறம் சேர்ந்து உதடுகளில் ஒழுகி சத்யாவை நிலைகுலையச் செய்தது. ஒருபுறம் சத்தம் போட்டால் பரசுராமன் தூக்கி எறிந்து விடுவேன் என்று சொல்லுவதும் ‘ஓத்தா ஒழுங்கா புடிடா’ என்ற ரவியின் அதட்டல் வார்த்தைகளும் சத்யாவை பயத்தின் விளிம்பில் தள்ளியது. ரவிக்குமாரின் ஆண் குறியினை பிடித்த முன்னும் பின்னுமாக ஆட்டத் தொடங்கினான். அந்த ஆண் குறியின் உஷ்ணம் தன் கைகளை கருக்கினால் கூட பரவாயில்லை என்றிருந்தது.
தொடைக்கு கீழ் இறங்கிய சாக்ஸூம், பனியனைக் கீழ் விழாமல் கழுத்தில் நெருக்கி பிடித்துக் கொண்டிருந்த செயலும், கைகளை மேல் நோக்கி இருப்பதுமான தோற்றம் ஒரு கண்டறியப்படாத கொடூர மிருகம் போல் காட்சி தந்தது. கொஞ்ச நேரத்திற்கு பிறகு கையை எடுத்து தப்பிக்க நினைத்தால் பேக்கைத் தூக்கி எறிவது போன்று நின்று கொண்டிருந்த பரசுராமனின் கண்கள் இரண்டாயிர நரகங்களை வைத்த பின்னும் இன்னும் பாவங்களை வைப்பதற்கான இடம் இருப்பதாக தோன்றியது. கொஞ்ச நேரம் தொடர்ந்து பின் விந்து வெளியேறியது அப்போது ரவிக்குமார் திருப்தி அடைந்தான். உஸ் உஸ் என்று சத்தம் எழுப்பி வயிற்றை பெல்லி டான்ஸரைப் போல் அசைந்தான். சத்யாவின் கைகளில் ஒழுகிய விந்தினை ரவிக்குமார் மீது பூச “ஒத்தா பூலே” என தலையில் தட்டினான். கீழே கிடந்த இலையால் அதை துடைத்து எரிந்து விட்டு பரசுராமன் கைகள் இருந்து பையைப் பிடிங்கி வேகமாக ஓடினான். ஆளை எரிக்கும் அந்த வெளுத்த சுண்ணாம்பு காவாய் முழுதும் இப்போது அவனுக்கு ரவிக்குமாரின் விந்தணுவினால் ஆக்கப்பட்டதாக தோன்றியது. குதிகால்களில் எல்லாம் அந்த சுண்ணாம்பு ஒட்டிக்கொண்டது. காய்ந்த ஆற்று படுகை போல கண்ணீர் ஓடிய சத்யாவின் கன்னங்கள் வெளிரி இருந்தது. வீட்டிற்கு சென்று ஓவென்று குமுரி அழுதான். அன்றிலிருந்து அவன் மனதில் ஒரு பயம் தொற்றி கொண்டது.
இன்று தன் ஈஸ்வரி அத்தை வீட்டில் அவனைப் பார்த்தவுடன் மூலையில் கிடந்த அந்த பயம் எல்லாமும் முழுவதுமாக அவனை ஆக்கிரமித்துக் கொண்டது. சரி அமிர்தாவிடம் முதலில் வெங்கட் அண்ணன் கூறியதை பற்றி பேசுவோம். பின்பு அவளிடம் அவன் மீதம் வைத்திருக்கும் அந்த ஒற்றை ரகசியத்தையும் போட்டு உடைத்து விடலாம் என்று நினைத்திருந்தான். மறுநாள் சத்யா கல்லூரிக்கு சென்றான் ரொம்ப நாட்கள் கழித்து அவன் செல்வது போல் இருந்தது. அமிர்தா வழக்கம் போல் வகுப்பில் உட்கார்ந்து இருந்தாள் சத்யா அமிர்தாவின் அருகில் அமர்ந்து “என்னாச்சுன்னா” எந்த வித பீடிகையும் இன்றி நேரடியாகவே ஆரம்பித்தான். வெங்கட் அண்ணன் நடந்து கொண்ட விதத்தை பற்றி கூறியவுடன் அமிர்தா அதை நகைச்சுவையாக “பார்ரா உனக்கு மேல் ப்ரோபோசல் எல்லாம் வந்து இருக்கு அப்புறம் வேற என்ன சொன்னாரு” அவனைக் கிண்டலடிப்பது போல் கேட்டாள்.
“டேய் நான் இதுக்கு முன்னாடி ஒரு பையன் எப்படி லவ் ப்ரொபோஸ் பண்ணுவாங்கன்னு கேட்டது இல்ல, அப்புறம் என்ன எல்லாம் சொன்னாரு” ஆர்வமாக கேட்டாள். சத்யாவும் ஒன்றிரண்டு முறை “ஏய் நான் எவ்வளவு சீரியஸா சொல்ற நீ என்னன்னா”என்று கவலை தொனிக்கும் குரலில் கேட்கும் பொழுதே பாதி வார்த்தைகள் சிக்கிக் கொண்டன. நாம் அவிழ்க்கும் அத்தனையும் அனைவருக்கும் வேண்டியது இல்லை என்பது சத்யாவுக்கு தெரியாமல் இருந்தது. “சரி நான் வரேன்” வகுப்பு முடியும் முன்னே கிளம்பினான். வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் பல்வேறு நினைவுகள். தன்னுடைய உணர்வு கேளிக்கையாக பார்க்கப்படுகிறது என்று வெம்பிக்கொண்டிருந்தான் சத்யா. வெங்கட் அண்ணன் கேட்ட கேள்வி தன்னால் ஏன் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும், அவன் மறக்க நினைத்த நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட நபர்களை கண் முன் கண்டது எல்லாமும் மனதில் அழுத்தத்தை உண்டு பண்ணியது. ‘என் மனம் ஏன் ஒரு பெர்முடா டிரையாங்கிள் ஆகிவிடக் கூடாது’ தனக்குள்ளாகவே கேள்விகள் கேட்டுக் கொண்டான்.
அவனின் மூத்திரப்பையும் நிறைந்திருந்தது. வீட்டை நெருங்கி இருந்தாலும் அவசரம். கூவத்தின் அருகில் சென்று சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய ஆண்குறியினை பார்க்க அவனுக்கு அத்தனை வெறுப்பு. தான் ஆணாகப் பிறந்ததற்கு அருவருக்கத் தொடங்கினான். ஆண்குறியின் மீதான தாழ்வு மனப்பான்மை பள்ளியிலிருந்தே. அதன் பின் அவன் பெற்ற மோசமான அனுபவம், அவன் சொல்ல நினைத்ததை பொருட்படுத்த தயாராக இல்லாத அமிர்தா என்று கோபத்துடன் கலந்த கண்ணீர் மேலோங்கியது.அவனுடைய ஆண்குறியினை நெரிந்தான். அத்தனை பேரின் குரல்வளைகளை நெரிப்பதுப் போல் உணர்ந்தான். சிறுநீர் பாய்ச்சல் அதிகப் படுத்தினான். எதிர்பாராத விதமாக அப்போது அதே இடத்திற்கு ரவிக்குமாரும் சவாரிக்காக வந்திருந்தான். சிறுநீர் கழிக்க சந்துக்குள் சென்றான். சத்யாவும் இதனை கவனித்துக் கொண்டிருந்தான். அவனை பின் தொடர்ந்து கொண்டே சென்றிருந்தான் அந்த சந்தின் மூலையில் ஒரு பீர் பாட்டில் உடைந்து கிடந்தது. லுங்கி தூக்கி சிறுநீர் கழிக்க ரவிக்குமார் அமர்ந்தான் ஓவென்று ஒரு சத்தம்.
சவாரிக்கு வந்த குட்டி யானை மறுநாள் காலை வரை அங்கிருந்து நகரவில்லை. சத்யாவை நேற்று கிண்டல் செய்து விட்டோம். அவனிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று அமிர்தா காத்திருக்க, பருவ மழை போல் பொய்த்து போனான். யாருக்கு தெரியும் அது நிரந்தர பொய்ப்பு என்று.
வெங்கட் அண்ணன் கடையை தாண்டி வரும் போது அவரிடம் கேட்காமல் சத்யா இருக்கிறானா என தலையினை உள்நுழைத்து பார்த்தாள். சரிதா அக்கா மட்டும் தென்பட்டாள். சத்யாவை காணவில்லை என அவன் தாய் இரவில் இருந்து தேடினாள். சத்யாவும் ரவிக்குமாரும் போன மாயம் தெரியவில்லை.
அன்றிரவே ஒரு செய்தி பரவியது அந்த ‘கூவாத்து பக்கத்துல
ஆண்குறி வெட்டப்பட்டு உடம்பு ஒன்று இருக்குதுன்னு’
Comments
Post a Comment