கூதிர் பருவம் -4, ஏப்ரல் 2024
கூதிர் பருவம் -4, ஏப்ரல் 2024
தொகுப்பாசிரியர் பகுதி
இந்த மாத இதழ் தீனனின் முறுகேறிய மொழியில் வெளிப்பட்டுள்ள கவிதைகளுடன் தொடங்கியுள்ளது. ஜெயதே எழுதியுள்ள டி.கே. டூ டி.எம் கட்டுரை சமகாலப் பொருத்தப்பாட்டிற்கு வரலாற்றை முன்னுதாரணமாகக் கொள்ளும் கட்டுரை ஆகும். டி.கே. பட்டம்மாள் முதல் டி.எம்.கிருஷ்ணன் வரை கர்நாடக இசைக்குள் புதுமை புகும் போதெல்லாம் ஒவ்வொருமுறையும் எப்படியான எதிர்வினைகள் நிகழ்ந்துள்ளன என்கிற சிந்தனைக்குரிய தோற்றுவாயாக ஜெயதேவின் கட்டுரை அமையுமென நம்புகிறோம். பாண்டிச்சேரியில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆர்த்தி என்கிற சிறுமியின் பெயரைத் தலைப்பாகக் கொண்ட அகிலா சுப்பரமணி எழுதிய கவிதையோடு உளமொழியெனில் என்ற தலைப்பில் தி.கு.இரவிச்சந்திரனின் கட்டுரையில் தொடங்கி படைப்பு மொழிக்கான சான்றை சுந்தரராமசாமியிடமிருந்தும் சமூக மொழிக்கான சான்றை இராசேந்திரச்சோழனிடமிருந்தும் பெற்ற அழகுராஜ் எழுதிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. மொழியின் பலவாறான சிந்தனைகளைத் தொகுத்துக் கூற முற்படும் முயற்சியாக இதனைக் கொள்ளலாம். இராமன் மற்றும் இராவணனை வைத்து தமிழில் நூற்றுக்கணக்கான கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன. அதன் தொடர்ச்சியாக அந்த வரிசையில் கொள்ளத்தக்க ஒரு கவிதையாக க.கிருத்திகாவின் கவிதையைக் கூறலாம்.
Neelam: A Discourse on the Cultural and literary importance of the Oppressed based on Caste and Gender in the Contemporary என்ற -D.Santhosh எழுதிய கட்டுரையை, நீலம் - சமகாலத்தில் சாதி மற்றும் பாலின அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களின் கலாச்சார மற்றும் இலக்கியம் முக்கியத்துவம் குறித்த கருத்தாடல் என்ற தலைப்பில் த.சத்தியப்பிரியா தமிழ்ப்படுத்தியுள்ளார். இக்கட்டுரை நீலம் பண்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் அறிமுகம் செய்யும் வகையில் அமைந்துள்ளது. வழக்கம்போல விசித்திரனின் சத்யா தொடர் கதை, இந்த மாதம் வெங்கட் என்கிற கதாபாத்திரத்தின் அறிமுகத்தை “சத்யா” கொடுக்கிறது. புலம்பி பின் ஆசுவாசம் தேடும் தொனியில் பிரகதியின் இரண்டு மொழிபெயர்ப்பு கவிதைகளும் நவீன கவிதைகளில் தந்தையின் சித்திரத்தைப் பற்றிய பதிவாக தமிழ்மணியின் கட்டுரையும் அமைகின்றன. நெகிழன் மற்றும் வே.நி.சூர்யாவின் கவிதைகளை ஆழ்ந்த வாசிப்பின் வழி தமிழ்மணி அணுகியுள்ளார். சோர்வு, சிலுவை, சரீரம், மீன், இரத்தம், வீச்சம், பேனா என பலவற்றை படிமங்கொண்டு எழுதப்பட்ட அராவின் கவிதைகளும் முந்தைய இதழில் வெளியான கட்டுரையைத் திருத்தி சமகாலத்திய செயல்பாடுகளுக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் “கவனிக்க” எனும் தலைப்பில் அழகுராஜ் ராமமூர்த்தி எழுதிய பதிவும் இடம்பெற்றுள்ளது. அயோத்திதாசப் பண்டிதரின் வேதம், வேதாந்தம், விபூதி பற்றிய சிந்தனைகளை எடுத்தாளப்பட்ட பகுதியில் பயன்படுத்தியுள்ளோம். வாசகர் பகுதி என்ற ஒன்றும் இதழில் உண்டு. நண்பர்கள் வாசித்து கருத்துகளைத் தெரிவிக்கவும். அடுத்த மாத இதழை மார்க்சியம் மற்றும் தமிழ் ஈழம் சார்ந்த படைப்புகளை மையப்படுத்தி கொண்டு வரலாம் என்றொரு திட்டமுண்டு. என்ன நடக்கிறதென பார்க்கலாம்…
-தொகுப்பாசிரியர்கள்
தொகுப்பாசிரியர்கள்
ரா.அழகுராஜ்
ஜெ.மோகன்
ஆ.கிரண்குமார்
ச.தணிகைவேலன்
முகப்போவியம்
மு.உமாசங்கர்
உள்ளடக்கம்
மொழிபெயர்ப்பு கவிதைகள் -பிரகதி (தமிழில்)
நவீனக் கவிதைகளில் தந்தைகள் – பகுதி I - தமிழ்மணி
எடுத்தாளப்பட்ட பகுதி - அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகள்
இதழில் வெளியாகும் படைப்புகளுக்கு அதன் படைப்பாளர்களே பொறுப்பிற்குரியவர்கள்.
குறிப்பு
இந்த மாத இதழை பெண்கள் சிறப்பிதழாகக் கொண்டு வர முயற்சி நடந்தது. அந்த முயற்சியின் போது வந்த படைப்பு ஒன்றை செம்மைப்படுத்தச் சொன்ன இதழின் தொகுப்பாசிரியர் ஆணாதிக்க மனநிலையுடன் பெண்ணியம் என்ற போர்வைக்குள் நுழைந்து கருத்து தெரிவிப்பவரென சாடப்பட்டார். இதற்கு மத்தியில் இதழ்ப்பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. படைப்புகள் மற்றும் இதழில் வெளியான படைப்புகள் குறித்த கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
Pdf வடிவில் இதழை வாசிப்பதற்கு👇
கூதிர் இதழைப் பக்கத்தைத் திருப்பி வாசிக்கும் வசதியுடன் வாசிக்க👇🏽👇🏽
தொடர்புக்கு
மின்னஞ்சல் முகவரி
முதல் பத்து இதழ்களுக்கு
புலனம் மற்றும் அலைபேசி
88073 39644
63699 12549
95973 81055
98949 44640
Comments
Post a Comment