சத்யா
-விசித்திரன்
“ஏண்டி தலையில எண்ணெய் வச்சா தான் என்னவாம் மண்ட புல்லா பாரு செம்பட்டையா மாறி கிடக்கு” என்று பார்வதியின் பேச்சை சற்றும் கவனியாது சீப்பின் சிறிய பற்கள் இருக்கும் பகுதியால் சீவி இடத்தில் பலமுறை தலையை சீவிக் கொண்டிருந்தாள் அமிர்தா.” செவிட்டு முண்ட சொல்றத காதுல வாங்குதா பாரு ச்சீ” “என்னமா உனக்கு பிரச்சனை” என கடுகடுத்த குரலில் கேட்ட அமிர்தாவை நோக்கி ஏதும் பேசாமல் பார்வதி தன் கண்களை மட்டும் உருட்டி காண்பித்தாள். அவர்கள் நின்று கொண்டிருக்கும் இதே வாசற்படி மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி இருந்தது என்று இருவரும் தங்களின் நினைவுக் கண்ணாடி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அமிர்தா கல்லூரி சேர்வதற்கு முன்பு வரை பார்வதி தான் அமிர்தாவிற்கு தலைவாரி ஜடை பின்னி பள்ளிக்கு அனுப்புவது வழக்கம். ஒவ்வொரு நாளும் வாசற்படியில் கூச்சல் இருந்து கொண்டே இருக்கும் அவரின் ஜடையை பின்னுவதற்கு பார்வதி படும் பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை. “அம்மோ வலிக்குது மெதுவாதான் வரேன், அப்டியே புடிச்சி இழுக்காதே” “தலைய ஆட்டாம ஒரு இடமா நில்லு” என்று பார்வதி முகத்தில் ஒரு கடுகடுப்பு இருந்து கொண்டே இருக்கும். அமிர்தாவின் தலைமுடியில் வன்முறையை கையாளும் பார்வதியின் போக்கை தீர்மானிப்பது முந்தைய நாள் அமிர்தாவின் தந்தை எந்த அளவுக்கு குடித்திருக்கிறார் என்பதைப் பொறுத்தே அமையும். அவர் செய்யும் ராவடிகளுக்கு ஈடு கொடுக்க முடியாத பார்வதி இன்றுவரை அந்த கோபத்தை வெளிக்காட்ட அமிர்தாவின் தலை முடியை தக்க இடமாக வைத்துக் கொண்டுள்ளார். அவள் இன்னும் மனநலம் பாதிக்கப்படாமல் இருக்கவும் அவளின் மணக்குறையையும் வெதும்பல்களையும் கொட்டி தீர்க்கும் களமாகவே அமிர்தாவின் தலையை பாவித்திருக்கிறாள்.
இதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த போராட்டம் சூடு பிடிக்கும். கீழ் நடுத்தர குடும்பங்களில் சனிக்கிழமை தான் சம்பள நாள் இதை எத்தனை பேர் அறிவார்கள் என்று தெரியவில்லை. பொருளாதார நிபுணர்கள் கூட தினக்கூலி, மாத சம்பளம் என்று வகைப்படுத்தி உள்ளனர். ஆனால் வாரச் சம்பளம் என்பது வறுமைக்கோட்டிற்கு மேல் வாழும் மக்களால் பெரிதளவில் வாங்கப்படும் சம்பளம் முறையாகும். சனிக்கிழமை இரவுகள் என்பது பெரும்பாலான லோயர் மிடில் கிளாஸ் குடும்பங்களின் வாழ்வில் ஒரு மகிழ்ச்சியான இரவு ஆகும். பேக்கரி கடைகளில் இனிப்புகளையும் கேக்குகளையும் குழந்தைகளுக்கு ஆசை ஆசையாக வாங்கிக் கொண்டு வரும் அப்பாக்கள் தூங்கிப் போன குழந்தைகளின் முகத்தைப் பார்த்து ஆனந்தம் அடைந்து களைத்து போய் உறங்க சென்று, எறும்புகள் மெய்க்காத எவர்சில்வர் பாத்திரங்களில் அந்த இனிப்புகள் பத்திரப்படுத்தி ஞாயிற்றுக்கிழமை விடிந்தவுடன் “நைனா பல்லு தேச்சுட்டு வா அப்பா உனக்கு வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு” என ஆசையாய் அப்பாக்கள் அழைப்பது இன்றும் பலர் வீட்டில் நடக்கிறது. இது ஒரு வகையினர் மற்றொன்று இதற்கு அப்படியே எதிர் மாறாக வாங்கிய சம்பளத்தை சனிக்கிழமை இரவுகளில் குடித்து பாதியை காலி செய்துவிட்டு மீதி பணத்தை சட்டை பையில் வைக்கிறோமா அல்லது ஜட்டி பாக்கெட்டில் வைக்கிறோமோ என்று கூட தெரியாமல் சாலையில் தொலைத்து விட்டு வருவோரும் இன்றும் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட கணவர் தான் பார்வதிக்கு வாய்க்கப்பெற்றிருந்தார். சனிக்கிழமையில் அமிர்தாவின் தந்தை கொடுக்கும் கொடுமைகளை வெளிக்கொட்ட ஞாயிற்றுக்கிழமையில் அமிர்தாவுக்கு ஈரு ஈத்துவதாக சொல்லி தன்னுடைய ஆதங்கத்தையும் கோபத்தையும் பார்வதி போக்கிக் கொள்வாள். உள்நாக்கு ஆடும் வண்ணம் பீறிட்டு கூச்சலிடுவால் அமிர்தா அவளின் வாயை அடக்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பார்வதி பயன்படுத்தும் ஒரே வாக்கியம் “தலைய பாரு ஊருபட்ட பேனு, ஆத்தா இல்லாத புள்ளயா நீ, பெத்தவ சரியில்லன்னு ஊர்ல எல்லாரும் என்ன கரிச்சு கொட்டிக்கனும் நினைக்கிறியா” அமிர்தாவிடமிருந்து இந்த கேள்விகளுக்கு ஒரு நாளும் பதில் கிடைத்ததில்லை.
அமிர்தா கல்லூரி சேர்ந்த நாள் முதல் அவளும் கூந்தலை பின்னிட்டு கொள்வதை நிறுத்திக் கொண்டாள். பார்வதியின் ஈரு ஈத்தும் பணியில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டாள். காரணம் அமிர்தாவின் தந்தை கடந்த மூன்று வருடமாக ஒழுங்காக மவுண்ட் ரோட்டில் உள்ள டன் பில்டிங்கில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். ஆனால், அவர் கொடுக்கும் ஒன்று இரண்டு குடைச்சல்களை தாங்கிக் கொள்ள முடியாமல் அவற்றைக் கொட்டித் தீர்க்கவே அமிர்தாவை இன்றும் திட்டிக் கொண்டே இருக்கிறாள். அதேபோன்று முனங்கல் தான் இன்று கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்த அமிர்தாவின் மீது பாய்கிறது .இதையெல்லாம் அமிர்தா சட்டை செய்வதே இல்லை. “இது என்ன நேரம் பாரு கத்துக்கிட்டே இருக்கோம்” என தன் அம்மாவின் வாய்விடாத மொழிக்கு தனக்குள் தானே பதில் சொல்லிக் கொண்டு கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்தாள். காதின் ஓரங்களில் சுருள் போல முடியை திருகிக்கொண்டு இரண்டு ஸ்லைடு பின்களால் கூந்தலை முடியிட்டுக் கொண்டிருந்தாள். அவள் கல்லூரி முடிந்து வீடு திரும்பும் முன்னர் கிட்டத்தட்ட ஆறு முறையாவது முடியை அவிழ்த்து மீண்டும் இறுக முடிவாள்.
அவசர அவசரமாக தன்னுடைய பையினுள் சாப்பாட்டு டிபனையும் சானிட்டரி பேடையும் திணித்துக் கொண்டாள். எந்நேரமும் அவள் தன் பையினுள் ஒரு பேடை கையிருப்பு வைத்து இருப்பது வழக்கமான ஒன்று. கடற்கரைக்கு ஒரு நாள் நண்பர்களுடன் சென்றிருந்தபோது அமிர்தாவின் தோழி ஒருத்தி மாதவிடாய் இருந்தும் தண்ணீரில் இறங்க இடுப்பளவில் வந்த அலை அவளின் பேடை நனைத்தது. மிகவும் அசௌரியமாக உணர்ந்தாள். இதை எல்லோரிடமும் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாலும் அவளுக்கு அந்நேரத்தில் உதவியது அமிர்தா தான். எப்போதும் தான் வைத்திருக்கும் மற்றொரு பேடை எடுத்து நீட்டினாள். பையின் நடுவே தண்ணீர் பாட்டிலையும் புத்தகங்களையும் எடுத்து வைத்து விறுவிறு வென்று செருப்பை மாட்டிக் கொண்டு தெருவினுள் நுழைந்தாள் அமிர்தா.
பாம்ம்ம்…….பாம்ம்ம்…. என்ற சத்தத்துடன் அப்போதுதான் தண்ணீர் வண்டி அத்தெருவினுள் நுழைந்தது. பார்வதி உடனே போய் “அமிர்தா ஏண்டி நாலு குட தண்ணீர் புடிச்சிட்டு போ டி” என்று அடிவயிற்றில் இருந்து கத்திக்கொண்டே அமிர்தாவை பின்தொடர்ந்து இரண்டு மூன்று நடை எடுத்து வைத்தாள். அதற்குள் எதிர் திசையில் இருந்து தண்ணீர் வண்டிக்காரன் “எம்மா தண்ணீ புடிக்க போறியா இல்லையா? பைப் அவுக்கவா வேண்டாமா ?” என்று அழுத்தம் கொடுத்து கொண்டிருந்தான். “தேவிடியா முண்டை சொல் பேச்சு கேக்குதா பாரு கூப்ட கூப்ட நிக்காம போகுது இன்னைக்கு வீட்டுக்கு வரட்டும் கால் ரெண்டத்தையும் ஒடைக்குறேன்”. மெதுவாக முனங்கிக் கொண்டே சென்ற பார்வதியை தண்ணீர் வண்டியின் பாம்…. பாம் …..என்ற சத்தம் துரிதப்படுத்தியது.
தெருவை கடந்த உடன் அமிர்தா தன்னுடைய நடையின் வேகத்தை குறைத்துக் கொண்டாள். தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கார் குடியிருப்பு பகுதியில் செல்லும் போது எவ்வித வேக மாறுபாடு கொண்டிருக்குமோ அதே போல் ஒரு தொணி அமிர்தாவின் நடையிலும் தென்பட்டது. அவள் ஒன்றிரண்டு முறை தெருவை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டாள் அமிர்தாவும் லேசு பட்டவள் அல்ல, பார்வதிக்கு எந்த விதத்திலும் சளைத்தவள் அல்ல. இந்த தண்ணீர் வண்டியின் பின்னால் ஓடி ஓடி அமிர்தா களைத்துப் போய் இருக்கிறாள். அவளின் நாடியின் கீழ் உள்ள பிறை சந்திரன் போன்ற காயம் . குடங்களை கையில் ஏந்தி ஓடும் போது புத்தம் புதியதாக போட்ட தார் ரோடில் விழுந்ததில் கிடைத்த பரிசு. அதன் பின்னால் பெரிதளவில் கூட்டமாக இருக்கும் நேரங்களில் அமிர்தா தண்ணீர் பிடிக்க செல்வதில்லை வீட்டில் இருக்கும் நேரங்களில் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி தப்பித்து விடுவாள். இல்லையென்றால் குடுகுடுவென்று அங்கிருந்து ஓடி தப்பித்துக் கொள்வாள்.
கொஞ்ச தூரம் வந்ததற்கு பின்னால் அமிர்தா தன்னைத்தானே “சே அம்மா பாவம் ஒண்டியா கஷ்டப்படுது இந்த வயசுலயும் இடுப்புல குடத்த தூக்கிட்டு மூச்சு வாங்க படி ஏறி இறங்கிட்டு இருக்கு நான் கொஞ்சம் உதவி பண்ணி இருக்கணும் நேத்து தான் பாவாடைக்கு மேல தண்ணி குடம் வச்சு வச்சு தழும்பான இடத்துல மஞ்சா போட்டு இருந்துச்சு, இன்னும் ரணமா தான் இருக்குது, அது ஆறா இன்னும் நாலு அஞ்சு நாள் ஆகும் ஆனா இன்னிக்கே தண்ணி வேற தூக்குது,என்னடி கிறுக்கிடி நீ, சரியான சுயநல காரி, உன்னோட உடம்பு நோவா கூடாதுனு மட்டும் பாக்குற என்ன ஜென்மன்டி நீ” என வாய் விடாமல் தன்னுடைய ஆடைகளின் விலகலை (சரியாக இருக்கும் போதே) சரி செய்து கொண்டேன் தன்னைத் தானே திட்டிக் கொண்டாள். பார்வதி கூட அமிர்தாவை இவ்வளவு நேரம் திட்டவில்லை. ஒருவேளை கொஞ்ச நேரம் நின்று பார்வதி திட்டிய சொற்களைக் கேட்டு இருந்தால் இது போதும் என்று நிறுத்தி இருக்கக்கூடும்.
ஒரு வழியாக கல்லூரி செல்வதற்கான பேருந்து பிடிக்க பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்தாள் அமிர்தா. காலை அனைவரும் வெளியே செல்லும் ‘பீக் ஹவர்ஸ்’ என்பதால் பேருந்துகள் மாநகர குப்பை தொட்டிகள் நிரம்பி வழிவகை போல மக்கள் அடர்த்தியால் நிறைந்து இருந்தது. வெள்ளை ஃபோர்டு பேருந்துகளில் ஏறுவதற்காக கூட்டம் அலை அலையாக காத்துக் கொண்டிருந்தது அமிர்தாவின் குறி அதன் மேல் இல்லை. அமிர்தாவோ ஆயிரம் ரூபாய் பாஸ் வாங்கி வைத்திருப்பதால் சொகுசு பேருந்துகளில் பயணம் செய்வதையே விரும்பினால், என்றாவது வேறு வழியின்றி வெள்ளை ஃபோர்டில் ஏறுவதாயின் அன்றும் சிடு சிடுத்தும் சலிப்புடனும் சென்று இருக்கையில் அமர்வாள். ஆம் காலியாக வந்தால் மட்டுமே ஏறுவாள் அதற்கும் ரொம்ப ராங்கிக் கொள்வாள். ஏசி பேருந்தில் மட்டுமே ஏற அனுமதி இல்லை. நல்ல வேலை அந்த வழித்தடத்தில் ஏசி பேருந்துகள் ஓடாது. பேருந்து வந்தவுடன் அமிர்தா வழக்கம் போல் ஏறி ஜன்னல் ஓராயிருக்கையில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க துவங்கினாள். கைபேசியில் ‘ஐ யம் கேட்ச் தி பஸ்’ என்ற செய்தியை அனுப்பிவிட்டு தொடு திரையை அமர்த்திக் கொண்டாள். புதிதாக எங்காவது கட்டடப்பணி தொடங்குகிறது என்றால் அதனை வேடிக்கை பார்ப்பதும் கூர்ந்து கவனிப்பதுமே அமிர்தாவின் முக்கிய வேலையாக இருந்தது. பேருந்தில் ஏறிய 35 வது நிமிடத்தில் “வள்ளுவர் சிலை எல்லாம் இறங்குங்க” என்று நடத்துனரின் விசில் வரும் வரை அமிர்தாவின் இந்த நோட்டமிடுதல் முடிவடையாது.
பேருந்து நிறுத்தத்தில் இருந்து கல்லூரி 55 மீட்டர் தூரத்தில் உள்ளது. பேருந்து நிறுத்தத்தின் அருகில் ஒரு பைக் மெக்கானிக் கடை ஒன்று உள்ளது. அமிர்தா பஸ்ஸிலிருந்து இறங்கிய கையோடு கல்லூரி திசையை நோக்கி நடக்கத் தொடங்கினாள். “ஓய் மெதுவா போ, எந்த கோட்டையை பிடிக்க போற இவ்வளவு வேகமா போய்” என வெங்கட் அண்ணன் இடைமறித்து அமிர்தாவின் நடையினை கேலி செய்தார். அமிர்தா பட்டென்று வெங்கட் அண்ணனை நோக்கி “அண்ணா விளையாடாதீங்க செமஸ்டர் முத நாளே லேட்டா போனா மேம் என்ன காரி துப்பும் அதான்” “ஓஹோ! செமஸ்டர் முடிஞ்சு போச்சா, அதான் இவ்வளவு நாள் இந்தப் பக்கம் ஆளையே காணோமா சரி சரி நீ தான் வரல இந்த சத்யா பையனும் இங்க வரவே இல்லையே என்னமா கத” “அவனப் பத்தி என்னன்னு சொல்றது அவன் பாதி நேரம் நல்லா பேசுறான் அப்புறம் என்னன்னு தெரியல எதுவும் சொல்ல மாட்றான் தனியா யோசிக்கிறான் இதோ செமஸ்டர் முன்னாடி நாள் வரைக்கும் நல்லாத்தான் பேசிட்டு போனா வீட்டுக்கு போறதுக்குள்ள என்னதான் ஆச்சுன்னு தெரியல னா” என இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அந்தத் தெரு முக்கில் வந்து கொண்டிருந்த நடக்க பழகி சில மாதங்களே ஆன குழந்தை ஒன்று தடுக்கி விழுந்தது. உடனே உடன் வந்த பாட்டி எல்லாம் திருஷ்டி என்று மருமகளின் முகத்தைப் பார்த்து சொல்லி சாலையின் ஓரத்தில் இருந்த செங்கல் ஒன்றினை எடுத்து குழந்தையின் தலையை மூன்று முறை சுற்றி பட்டென்று தரையில் போட்டு சுக்கு சுக்காக நொறுக்கினார். அந்தத் துகளினை எடுத்து குழந்தையும் நெற்றியில் இட்டாள் அந்த கிழவி. வெங்கட் அண்ணன் இதை பார்த்தபடியே இருக்க “இதோ இதே போல சத்யாவுக்கு திருஷ்டி தான் சுத்தி போடனும் போல” என நகைச்சுவையாய் அமிர்தா சொன்னதை கேட்டு சிரிக்க முடியாமல் அசைவற்றிருந்தார் வெங்கட். காரணம், அமிர்தா சொன்ன செமஸ்டர் கடைசி நாள் சத்யா வெங்கட் அவர்களை சந்தித்து பேசினார். “அண்ணா என்ன யோசிக்கிறீங்க என்று அவரை உசுப்பும் வேளையில் அமிர்தாவின் கைபேசியில் அவள் அனுப்பிய குறுந் தகவலுக்கு பதிலாக சத்யாவிடம் இருந்து ‘ஓ நைஸ்’ ‘ஐ அம் ரீச்டு’ என்று உள்ளீடு செய்திருந்தான். உடனே அதை படித்துப் பார்த்துவிட்டு “அண்ணா அவன் கிளாஸ் தான் இருக்கான் நான் என்னன்னு போய் பாக்குறேன்” என்று சிரித்த மொழியுடன் நகரத் தொடங்கினாள்.
பேச்சு தொடங்கும் போது இருந்த அதே கலகலப்பும் சிரிப்பும் வெங்கட் அண்ணனிடம் இல்லை. அமிர்தா விரைந்து ஓடி அந்த தெருவில் இருந்து மறைந்தாள்.
“வா! கோவிந்தன் மவனே! எப்படி இருக்க” என்று ஒருபுறமும் “மாமா இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட் பொண்ணுங்க எல்லாம் அல்டியா இருக்கு வா போயிட்டு வாச்சா வுட்டு வரலாம்” என்ற பேச்சுகள் வகுப்பறையில் ஒலித்துக் கொண்டிருந்தது. வகுப்புகள் துவங்குவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னதாகவே சத்யா வந்து அவனுடைய மேசையில் பையினை வைத்து படுத்துக்கொண்டான். அவனுக்கு முன்னதாக எப்போதும் முதலில் வரும் இரட்டை சகோதரிகளைப் பார்த்து புன்முறுவல் செய்தான். இதுனாள் மட்டும் அவர்களும் நான்கைந்து பெண் தோழியரை தாண்டி வேறு யாரிடமும் பேசியதுமில்லை. சத்யாவை தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டே இருந்தனர். பல நாட்கள் கழித்து பார்க்கும் போது கேட்கப்படும் வழக்கமான சம்பிரதாய கேள்விகளான ‘நல்லா இருக்கியாடா’ இங்கு கொஞ்சம் மாறி ‘டேய் இன்னும் இருக்கியா உயிரோட’ என்பதே வகுப்பறையில் பெரும்பாலும் கேட்கப்பட்டிருந்தது. சத்யாவும் வந்தவர்களில் தனக்கு நெருக்கம் இல்லாத நபர்களிடம் கடின முயற்சியால் சிரிப்பை முகத்தில் வரவழைத்துக் கொண்டு புன்முறுவல் செய்தான். நெருங்கிய நட்பு வட்டாரம் வருகை தர தானாக முகத்தில் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. சத்யா இடைவிடாது வகுப்பறையின் வாசலை நோக்கியே பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் கண்கள் அமிர்தாவை தேடிக் கொண்டிருந்தது.
சத்யா கைபேசியில் கடைசியாக அனுப்பிய குறுஞ்செய்தியை நான்கைந்து முறை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். அமிர்தா வெங்கட் அண்ணனுடன் பேசியதி சத்யாவிற்கு பதில் அனுப்ப மறந்துவிட்டாள். அதனாலயே சத்யா மீண்டும் மீண்டும் வாசலை நோக்கி வந்த வண்ணம் இருந்தான். அமிர்தாவுக்கு முன் ஆசிரியர் முந்திக் கொண்டார். அனைவரும் அவரவர் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டனர். முதல் வகுப்பினை ஐ.ஆர் சார் எடுக்க மாணவர் மத்தியில் கூச்சலும் கிண்டலும் நிரம்பி இருந்தது. சுகுமாரன் எல்லா ஆசிரியர்களையும் கேளிக்கை பொருளாக மாற்றி விடுவான். இன்று ஐ.ஆர் சாரும் அதற்கு தப்பவில்லை. வகுப்பு சிரிப்பலைகளால் நிறைந்திருந்தது. சத்யாவும் ஜோதியில் ஐக்கியமாகி சிரித்தாலும் மீண்டும் மீண்டும் கைபேசியின் திரையை அமுக்கி பார்த்துக் கொண்டே இருந்தான். சரியாக பீரியட் தொடங்கி 15 நிமிடத்தில் அமிர்தா வகுப்பறையில் நுழைந்தாள். சத்யா அவளைப் பார்த்து உதடுகளை தின்பண்டங்களை கொரிக்கும் அணில் போல அசைத்து “மெசேஜ் போட தான் என்ன வா போ” என்று செல்லக் கோபத்துடன் கசந்து கொண்டான். அமிர்தா “டேய் சாரி டா சொல்றேன்” என்று சமாதானம் சொல்லிக் கொண்டே இருக்கையில் அமர்ந்தாள். சுகுமாரும் ஐ.ஆர் சாரை விடுதாக தெரியவில்லை. தொடர்ச்சியாக இரண்டு வகுப்புகள் நடக்கவே 10:15 மணிக்கு இன்டர்வல் நேரம் வந்துவிட்டது என்று ஆசிரியர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
அமிர்தா சத்யாவின் அருகில் அமர்ந்து “டேய் இன்னிக்கு என்ன ஆச்சுன்னு தெரியுமா” என்று காலையில் தண்ணீர் பிடிக்கும் போது ஏற்பட்ட கதையையும் தன் அம்மா தான் தலையில் என்னை வைகக்காததால் திட்டிம கதையையும் சொல்லிக் கொண்டிருக்க எதையும் கவனிக்காமல் மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டிருந்தான். உடனே அமிர்தா “என்னதான் பிரச்சனை உனக்கு” சில நொடி மௌனம் காத்து “ஒரு மெசேஜ் போட என்ன? குறைஞ்சா போயிடுவ ஹூம்…” இன்று கோபித்து பெருமூச்சு வாங்கிய சத்யாவை பார்த்து “சரி சரி கோச்சிக்காத வர வழியில வெங்கட் அண்ணனை பார்த்தேன் அவரோட பேசிட்டு அப்படியே மறந்துட்டேன்” என்று சொன்னவுடன் சத்யாவின் முக பாவனை முற்றிலும் மாறியது. “ஆமா நீ அவர போய் பாக்குறது இல்லையாமே” என்று அமிர்தா கேட்க சத்யா “அவ்வளவுதான் சொன்னாரா வேற எதுவும் சொல்லல யா?” இன்று பயம் கலந்த பணியில் கேட்டான் அமிர்தா நிதானமாக “நானும் அவரும் வழக்கம் போல பேசினோம் உன்னப் பத்தி கேட்டாரு நானும் சொன்னேன்.” என்று சொன்ன பின்னாலே சத்யா நிதானத்திற்கு வந்தான் இருப்பினும் குப்பென்று அவனின் முகம் வியர்த்ததை அமிர்தா கண்டுபிடித்து “என்ன ஆச்சு” என்று கேட்க “ஒன்றுமில்லை ஒன்றுமில்லை” என மழுப்பிக் கொண்டே அங்கிருந்து போய் விட்டான் .
மதியம் கல்லூரி வகுப்புகள் முடிந்தவுடன் வழக்கமாக வரும் பஸ் ஸ்டாண்டுக்கு சத்யா வரவில்லை. அமிர்தாவும் பஸ்ஸில் ஏறி வெங்கட் அண்ணன் மெக்கானிக் ஷாப்பில் வெறித்து பார்த்தபடியே இருந்தாள். குழப்பத்தில் ஆழ்ந்திருந்த அமிர்தா சாலையின் எதிர் வரும் தண்ணி லாரியின் சத்தத்தில் தான் சுய நினைவுக்கு வந்தாள்.
பாம்ம்ம்………பாம்ம்ம்……..பாம்ம்ம்…………
Comments
Post a Comment