அரா கவிதைகள்

 அரா கவிதைகள் 

புள்ளிகளை எல்லாம்

குறுக்காகவும்

நெடுக்காகவும்

வைப்பதைப் பார்த்து

கோலமிடப் போவதாய்

நினைத்து விட வேண்டாம்

புள்ளியாகிப் போன பாதைகளின்

எண்ணிக்கையை

உட்கார்ந்து கணக்கெடுக்கிறேன்


இந்த வேலைக்கு நடுவே

என்னை அழைக்கும் 

ஒருவன் அல்லது ஒருத்தி 

மற்றொரு புள்ளியை

என் சரீரத்திலோ

கண்ணுக்குத் தெரியாத

ஸ்தெப்பி பரம்பிய

மனவெளியிலோ

வைத்துவிட்டு

குங்ஃபூ சைகைகளுடன்

கண்களை உருட்டி

அனாயசமாக

என்னைப் பார்த்து

சிரிப்பார் என்பதாகவே

எனக்குள் எண்ணங்கள் ஓடுகின்றன

இதோ அவரே ஓடி வருகிறார்

என்னவென்று

கேட்டுப் பார்ப்போம்

நீயும் உடன் வா.

*****

அவ்விரு கோள கண்களுக்குள்ளே

சாவும் சாவின் சாவியும்

இரகசியமாக்கப்பட்டு

மறைவாக உண்டு.


சிற்றுயுர உச்சியில் கிளம்பும்

சிரிப்பின் நுனிகளுக்கும்

மேலிடும் பாவனைகளுக்கும்

பதில்கள் கூட இருக்கலாம்

அலகு இலா அல் பொருளில்

எல்லாம் விளையாட்டெனும்

மாயைக்குள் இழுத்து போட்டு

வலை மூடி சிறை பிடிக்கும்

அசைவுகளுள்

மந்திரமற்ற வசிய பிடி

கருப்பொருளை 

கச்சிதமாக கனத்துடன் 

சிறுபொழுதின் நெடி முழுக்க

மாற்றிக் கலைத்து வியந்திட

வில்லின் நெளிவில் புறப்பட்ட

மொட்டையான அம்பை

சிலுவையில் கட்டப்பட்டிருக்கும்


உடலின் இடுப்பையொட்டி

குறியிட்டு செலுத்திடினும்

அது கண்களைப் பேற்றுத் தள்ளும்

எத்தனத்தோடு 

சாவகாசமாக பக்கம் வர 

மெல்லிய புலம்பல்

பலரது செவியினுள் நேரூட

பாயத் தொடங்கியதும்

அம்பினும் தீவிரமாக வீசிய

மென் புலம்பல் தாழ்வற்று

புயலின் தீவிரம் கொள்ள

முழுதும் ஏளனமும் எக்காளமும்


அம்பின் நுழைவிற்கு

இன்னும் எத்தனை காலம்

ஏற்கனவே ஒரு மாதம் முடிந்ததாம்

விரைந்திடும் ஆர்வமும்

வேண்டாமென விலகலும்

காரணங் கொண்டே

தொந்தரவின் பிணிக்கும்

படரிட்டுப் பரவிடும்

புற்றீசல்களின் கூடுகளுக்கும்

கொள்ளும் அச்சத்தில்

ஒரு மாதமெல்லாம்

ஒன்றுமில்லை

உருண்டு திரியும் அவ்விரு கோளங்களின்

உற்பத்தியாக உவர் நீர் வரின்

எத்தனையோ இடி இறங்கும்

எதிர் நிற்கும் சுவாச உறைக்குள்


சந்தேகமும் உண்டு

அவ்விளையாட்டுப் புத்தியின்

நிலைத்திருத்தல் மீது

எந்நேரமும் முறுவலிட்டு

சிதைத்து அறுக்கும் வலியற்ற

சிலநேர வலிகளுடனான

காயத்தின் வேதனைக்குள்

கிளறிவிட்டு சொறிந்திடவும் ஆசை

மருந்தின் ஆற்றலுள் வெக்கையிட்டு

காயம் ஆறவும் ஆசை

ஆற விரும்பும் காயத்தின் செந்தோல்

வேறோர் காயம் கொடுக்கும்

கருவியாகின் இக்காயத்தின்

சிகிச்சை பக்க விளைவாகி

இம்சிக்கத் தொடங்கிட்டால்

அதன் ரணம் அவ்விரு கோளத்தின்

ஒளியின் சிதைவானால்

அதேவில்லின் அடுத்த அம்பு

முந்தினும் விரைந்து

மார்பில் செருகி பக்கவாட்டில்

விழுந்திடும் எண்ண சமிக்ஞைகள்

இரைச்சலிடுகிறது

இரைச்சலின் எல்லா ஒலிகளுக்கும்

ஒற்றை ஒவ்வாமைப் பார்வை

சொஸ்தமாகலாம்

******

நிறைய நேரத்தைக்

குடித்துக் கொண்டிருக்கிறேன்

அது செரிமானம் ஆகுவதேயில்லை

சுகமான செரிமானத்தின்

ஏற்ற எதிரிடை பயன்பாட்டு 

நேர விகிதங்களை

முட்கள் மெல்ல குதிக்கும் 

நேரத்தில் எல்லாம்

மீன்கள் வாயில்

தூண்டில் சிக்கி

நாக்குக்குள் புழுவை

நெழிய விடுகிறது


அந்தரத்தில் ஆடும்

மீன் உடலின்

வால் பிளவுகள்

விறைக்கும் நேரத்தில் கூட

கண் மூட முடியவில்லை

செதில்களை உதிர்த்து தொங்கவிட்டு

குடிப்பதற்கென நேரத்தை 

ஆத்துகிறேன்.

*****

ட்ரைனேஜ் குரலை 

விசாரிக்கப் போனேன்

ஆறு கம்பிகளை குறுக்கும்

மூன்று கம்பிகளை நெடுக்கும்

வெல்டிங் செய்த மூடியை

குனிந்து கொண்டு

காலால் தட்டிக் கேட்கிறேன்


அண்ணே நீ உள்ளேயா இருக்க?


இன்னும் வளைந்தால் 

கையால் தட்டியே கேட்டிருக்கலாம்

குனிந்தது கொஞ்சம் 

சௌகரியப்படுவதற்கே

தட்டிக் கேட்க வேண்டுமென 

குனியவில்லை


குரல் ஓய்ந்துவிட்டது

பதில்களற்ற துர்நாற்றத்தோடு

மூக்கில் ஏறிய 

வீச்சத்தின் நெடி

இரவில் படுக்கவிடாது

உட்காரச் சொல்கிறது.

கொஞ்ச நேரம் உட்கார்ந்தும்

படுத்தும் விழித்தே சோர்கிறது

இமைகள் இரண்டும்

*****

சுமப்பதும் சுமக்கப்படுவதும்

மீண்டும் மீண்டும் நடக்கிறது


உயிரின் ஓசையற்ற திசு கதறிக்கொண்டு

சிலுவையின் வலதுகை பலகையின்

நடுமத்தியத்தில் ஒட்டியிருக்கும்


எத்தனை முறை இழுத்திடினும்

கையினடியை விட்டு

பிடி கழன்று உதிர்வதே இல்லை.


சிலுவை மர மூலத்தில் எத்தனையோ

இலைகள் இன்னும் உதிர்கிறது.

திசு மட்டும் பழுப்பாகி நிற்கும் 

*****

மனிதன் தான்

கடவுளும் கூட

மனிதனா? கடவுளா?

மனித தோற்றத்தில் கடவுள்


சாட்டையால் அடிக்கும் போது

குருதி கொப்பளித்து

தோல் முழுக்க பரம்பியிருந்த

வியர்வைத் துளிகள்

போட்டுக் கொடுத்த பாதையில்

சிவந்து ஓடின.


மனித எலும்புகளில்

சாட்டையடி விழும்போது

துடித்த துடிப்பில்

எலும்புகளெல்லாம் மேலெழும்பி

பார்க்குமளவு

வெளி தெரிந்தது.

எல்லாம் இப்படியிருக்க

எப்படி கடவுள்?


தூக்கிச் சென்ற சிலுவையை

மலையில் ஊன்ற

சிலுவை மரம் முழுக்க

செவ்வண்ணம்

மேலிருந்து கீழே

ரோம தூரிகை இன்றி

பூசப்படும் வேளையில் கூட

மன்னிக்கச் சொன்னதால் தான்

அவர் கடவுள்‌.


நானும் மன்னிப்பேன் என

நீயும் சிலுவை தூக்கலாம்

கசையடிகள் வாங்கலாம்

தொங்கிக்கொண்டே

மன்னிக்கவும் செய்யலாம்

ஒருபோதும் கடவுளாக முடியாது.


அதையெல்லாம் செய்த

அவர் கடவுள்‌

நானோ இல்லை என்ற வாதம்

உன்னைப் புரட்டிப் போடும்.

சவாலிட்டு பந்தயம் கட்டி

தொங்கிக்கொண்டே

மன்னிக்கிறேன்

‘மன்னியும்' என

ஏதேதோ பிதற்றினாலும்

சம்பிரதாயச் சொற்களே

ஒலிபடும்.


மனதளவில் உதிர்ந்த சொற்களும்

சொற்களுக்கு முந்தைய செயல்களுமே 

கடவுள்.


நானெப்படி கடவுள் ஆவதென

நீ கேட்டாலும்

ஆக முடியாது 

தோற்கடிக்கப்பட்டு எப்படி 

கடவுள் ஆவது?

என்றொரு புத்தகம் எழுதினாலும்

நீ கடவுள் ஆவதில்லை

புதிய ஆக்கமடைவதுமில்லை


வேண்டுமானால் சிந்திய இரத்தத்தின்

துளிகளைப் பருகி

கடவுளை உனதருகே வரச்சொல்.

கடவுளோடு இரு.

சவால் விட்டுச் செய்யும் காரியமும்

சவடாலான பேச்சும்

கடவுள் ஆவதே இல்லையாம்


இதையெல்லாம் படித்து விட்டு

கடவுள் என்றால் என்ன?

என்றொரு கேள்வியை மட்டும்

என்மீது தொடுத்து விடாதே.

*****

நான் பையில் சொருகியிருந்த

பேனா விநோதமானது

அதன் மீது படிந்திருந்த

விநோதப் பூச்சில் 

பலரது கைரேகை இருந்தது.

ஆம், பரிசாக பலரிடமிருந்து

கைமாறி வந்த பேனா.

கை நழுவி எங்கோ போன

அந்த பேனாவை 

தெரிந்தோ தெரியாமலோ

யாரோ எடுத்துவிட்டனர்.


பரிசாக வந்த பேனாவுடைய

விநோத வடிவமைப்பின் மீதான

மயக்

கத்தில் அதனை

சொந்தமாக்க எண்ணாமல்

நான் யாருக்கேனும் 

பரிசளித்திருக்க வேண்டும்.

அப்படி செய்ய நினைக்காது

அதைப் பையிலேயே சொருகியிருந்தேன்.


ஏனோ விநோதம் படிந்த

பொருட்கள் மீது ஏறும் ஆர்வம்

விநோத மனிதர்களிடம் ஏற்படுவதில்லை. 

அவர்கள் பைத்தியமாக இன்றும் அழைகிறார்கள்…

*****

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு