வாசகர் பகுதி

 அப்படியென்ன 

                                            -அரம்பன்

     கூதிர் மூன்றாம் இதழ் பெண்ணியத்தை மையப்படுத்திய இதழாக வருமென எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான். நினைவின் தவிப்பை பேசும் இராகுலனின் கவிதைகளும் அதன் தொடர்ச்சியாக கொள்ளத்தக்க வகையில் இளவெயினி கவிதையும் இருந்தது. அருண் எழுதியுள்ள எழுத்தாளராதல் எளிது என்கிற பகுதி இன்று வாசிப்பு, எழுத்து, ஆய்வு என சிந்தனைத்தளத்தில் பயணிக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பகுதி ஆகும். தொடர்ந்து கொள்கையில் உறுதியாக தீராத உழைப்பும் சோர்வற்ற முயற்சியும் கொண்டு செயல்படும் ஒருவர் அதற்கான பலனை அடைவார் என்கிற நம்பிக்கையை அருணின் எழுத்து மூலம் தெரிந்துகொள்ளலாம். சத்யா தொடர்கதையில் தாயுக்கும் மகனுக்குமான உறவு மையம் கொண்டிருக்கிறது. தீனன் எழுதிய ஐந்தாவது முத்திரை கட்டுரைக்காகவே இதழ் வெளியாகிறதோ என நினைக்கும் வகையில் இதழின் அதிக பகுதியை ஆக்கிரமித்து ஒரு முத்திரையாக அந்த கட்டுரை விளங்குகிறது. குற்றவுணர்வின் பல பரிமாணங்களை காட்சிப்படுத்தும் கட்டுரையின் மொழி குற்றவுணர்வு வேண்டுமா? வேண்டாமா? என நினைக்க வைக்கிறது. மேலும் கட்டுரைக்கு இடையில் வரும் ஒவ்வொரு கவிதையும் ஆழமான பொருளைப் பேசுவதாக இருக்கிறது. வழக்கம்போல திரமிளனின் கவிதை பராசக்தி, பேனா என்று அரசியல் தலைவரையும் நவசக்தி, சக்கரமென இலக்கியவாதியையும் குவளை எனும் கோட்டில் இணைக்க முற்படுகிறது. அட்டைப்படம் இந்த கவிதைக்கு பொருத்தமான வகையில் இருக்கிறது. மனத்தின் தன்மையை சொல்லும் வகையில் குரு எழுதிய மனப்பிதற்றல் கவிதை அமைந்துள்ளது. எடுத்தாளப்பட்ட பகுதி ஒன்றாவது ஒரு பெண்ணிய எழுத்தாளரின் படைப்பை கொடுத்திருக்கிறதே எனத் தேற்றிக்கொள்ள வேண்டியது தான். கு.ப.சேது அம்மாளின் ‘புயல் ஓய்ந்தது’ கதை நடராஜன், சாரதா எனும் இணையர்களுக்கு இடையே நடக்கும் உரையாடலால் ஆன கதையாகும். ஆண், பெண் உணர்வுகளை அப்படியே பேசியுள்ள இந்த கதை இன்றும் சிலருக்கு பொருந்தக்கூடியதே. மேலும் அரா கவிதைகள் இதழில் இடம்பெற்றுள்ளது. அரா கவிதைகள் குறித்து அரம்பன் இப்போதைக்கு பேசப்போவதில்லை.

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு