கவனிக்க -அழகுராஜ் ராமமூர்த்தி
கவனிக்க -அழகுராஜ் ராமமூர்த்தி
பிப்ரவரி மாதம் கூதிர் இதழில் நான் எழுதிய “ஜெய் ஹே ஆசையின் இரண்டு கவிதைகள்” என்ற கட்டுரையில் ஏதோவொரு ஆவேசத்தில் கம்பனின் இராமன் மனிதன் என்று கூறியிருக்கிறேன். ஆனால் கம்பனின் இராமன் மீது தான் தெய்வீகத் தன்மை போர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியாவெங்கும் இருக்கும் இராமயண கதைகளில் இராமன் மனிதனாகவும் தெய்வமாகவும் இரு வேறு நிலைகளில் கதைக்குள் இருக்கிறான். சில கதைகளில் இராமனை எதிர்மறையாகவும் இராவணனை நேர்மறையாகவும் கூறுவதும் உண்டு. இராபனைப் பற்றிய ஆராய்ச்சியை ஒதுக்கி வைத்துவிடுவோம். அந்த சிறு கட்டுரை பேசுவது இலக்கிய ஆராய்ச்சி அல்ல. அரசியல் என்பதையும் இந்த இடத்தில் தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். என்னுடைய கட்டுரையில் இருக்கும் தவறை எவரும் சுட்டிக்காட்டப்படாததை என்னவென்று சொல்வது? எவரும் சொல்லாததால் நானே சொல்ல வேண்டிய நிலை.
டி. எம்.கிருஷ்ணாவிற்கு மியூசிக் அகாதமி “சங்கீத கலாநிதி” விருதை அறிவித்ததையொட்டி எழுந்த விவாதங்கள் பலவற்றிலும் பலவாறான கருத்துகள் பகிரப்பட்டன. மெய்நிகர் உலகில் உள்ள சொத்தைத்தனம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட சம்பவத்தையொட்டி எந்தவொரு நபருக்கு அதிக ஆதரவு வருகிறதோ அந்த நபர் பகடிக்கும் உட்படுத்தப்படுவார். இதேநிலை தான் டி.எம்.கிருஷ்ணாவுக்கும் நடந்தது. நான் கிருஷ்ணாவின் ஒரேயொரு கச்சேரியை மட்டும் தான் நேரில் கேட்டிருக்கிறேன். எனக்கு இசையறிவு இல்லையென்றாலும் அந்த கச்சேரியில் ஒரு மனலயம் கிடைத்தது உண்மை. டி.எம்.கிருஷ்ணாவிற்கு 2016ல் மகசேசே விருது கொடுக்கப்படக் காரணம் அவர் கர்நாடக இசையை சமூக உள்ளடக்கத்திற்குள் கொண்டு வந்தது தான். 2024 ஆண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் “சங்கீத கலாநிதி” விருதுக்கான எதிர்ப்புக் குரலாக பதிவு செய்யப்படுவது பெரியாரை அவர் பாடியது. பெரியாரைப் பாடுவதற்கு முன்பே அவர் அம்பேத்கரைப் பாடியதைக் கவனமாக மறந்துவிட்டார்கள் போல. இவ்விரண்டு விருதுகளும் அளிக்கப்படுவது குறித்து சொல்லப்படும் காரணங்கள் வேறு. மியூசிக் அகாதமி அவரது இசைத்திறனுக்குத் தான் விருது எனத் தெளிவாகச் சொல்லியுள்ளது. கிருஷ்ணாவிற்கு விருது அளிக்கப்படுவது என்பதைத் தாண்டி, அவரை ஒரு கலைஞராக அங்கீகரிக்காது அவரது கலைத்திறனை மட்டுப்படுத்தி சிதைப்பதற்கே இந்த விருதிற்கான எதிர்ப்பு வருகிறது என புரிந்து கொள்ள முடிகிறது. டி. எம்.கிருஷ்ணா கர்நாடக இசைக்கலையையும் நாட்டார் கலைகளையும் இணைக்க முற்படவில்லை. இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்க விளைகிறார். இரண்டிற்கும் கலை வித்தியாசம் உண்டு. இரண்டும் ஒன்றல்லா.தனித்தன்மைகளால் ஆன இருவேறு கலைகள் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். கிருஷ்ணா மேற்கொண்ட குப்பத்தில் கர்நாடக இசை முதலான முன்னெடுப்புகள் வித்தியாசமானவை. அவர் இந்த முயற்சியின் போது தனது கலைத் திறனை சமரசப்படுத்திக் கொள்ளவில்லை. எப்போதும் ஒரு கலைஞன் அவனது உச்சபட்ச கலை வெளிப்பாட்டையே வெளிப்படுத்த வேண்டும். பார்வையாளர்களுக்காக கலையினை எளிமைப்படுத்துவதாகக் கூறி தன் இசைத்திறனை பாழடித்துவிடக்கூடாது என்பதோடு தன்னுடைய இசைக்கேற்ற ரசனையை பார்வையாளர்கள் வெளிக்கொண்டு வர ஏதுவாக அவர்களது ரசனைத்திறத்தை வளர்ப்பதிலும் கலைஞனுக்குப் பங்குண்டு என்ற கருத்துடன் செயல்படுபவர் டி.எம்.கிருஷ்ணா. ஏன் இதை இங்கே குறிப்பிட்டுள்ளேன் என்ற கேள்வி வரலாம். விருது குறித்து ஆரம்பத்தில் வந்த சில பதிவுகள் கிருஷ்ணாவின் இசையில் குறையில்லை என்பதாக ஆதரவு நிலையில் வந்தன. இதற்கு எதிர்வினையாக வலிந்திறங்கி அவரிடம் புதுமையான கலையம்சம் ஏதும் இல்லை என்ற பதிவுகள் வந்தன. அதன்பின் அரசியல் என்ற ஒரு புள்ளியை நோக்கி விவாதம் நகர்ந்தது. அதில் அண்ணாமலை அளித்த ஆதரவும் முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாழ்த்தும் அடக்கம். அதற்கும் பலவாறான கருத்துகள் வந்தன. இங்கு நாமும் இருக்கிறோம். ஏதேனும் ஒரு கருத்தைச் சொல்லியாக வேண்டும் என்ற மனநிலையை மெய்நிகர் உலகு கொடுத்திருக்கிறது என்பதே நாம் அறியும் முடிவு. மகசேசே விருது பெற்றபின் டி.எம்.கிருஷ்ணா விகடனுக்கு அளித்த பேட்டியின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அது கிருஷ்ணாவின் நிலைப்பாடுகளை அறிவதற்கு உதவும்.
இணைப்புகள்:
https://www.vikatan.com/literature/arts/66559-music-fan-the-gap-need-to-be-reduced-tmkrishna
https://youtu.be/nWLg4FfRXUU?feature=shared - அம்பேத்கர் பாடல்
https://youtu.be/zLpFhcFzZx4?feature=shared - பெரியார் பாடல்
Comments
Post a Comment