டி.கே டூ டி.எம்
டி.கே டூ டி.எம்
கலை வடிவங்களில் இசை என்பது மிகவும் வலிமையானது. மனிதன் இசைக்கு மிகவும் நெருங்கியவனாகவே இருக்கிறான். அதுவும் அவனைத் தன் கட்டுக்குள் வயப்படுத்தியுள்ளது. ஆதியிலிருந்து மனித குல வரலாற்றில் இசை மிகப்பெரிய இடத்தை பெற்றிருக்கிறது. இலக்கியங்கள் மனிதனின் வாழ்வில் அறிவொளி ஏற்றி அடுத்தடுத்த தளங்களில் அவனை நகர்த்தி வருகின்றது. இலக்கியங்களில் வரும் புத்தாக்க முயற்சிகள் நேரடியாக விளைந்தவை அல்ல என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். தேவன் வானத்தையும் பூமியும் சிருஷ்டித்தார், பின்னாளில் மனிதனையும் சிருஷ்டித்தார். என்ற கூற்றெல்லாம் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டால் நொறுங்கிப் போனது போலவே எந்த ஒரு மாற்றம் ஆயினும் நேரடியாக இலக்கியத்தை வந்தடைவதில்லை. மற்ற கலை வடிவங்களின் ஊடே உட்புகுகின்றது. நவீனத்துவத்தின் எல்லா மாற்றங்கள் யாவும் முதலில் ஓவியம், சிற்பம், இசை என்றமைந்து பின்னாளிலே இலக்கியத்தை வந்தடைகிறது. உலகெங்கிலும் இசை என்பது பொது மொழியாக உள்ளது. ஆனால், ஒரே மாதிரியான ரசனை எல்லா மக்களிடமும் இருப்பதில்லை. மேலை நாடுகளின் இசை ரசனை முறையும், இந்திய இசை ரசனை முறையும் மாறுபட்டுள்ளது. பீதோவன், மொசாட், பிரான்சிஸ் சூபெட் போன்றவர்கள் இங்குள்ளவர்களால் பெரிதும் பேசப்படுவதில்லை. ஆயினும் மக்களிடையே மனவெழுச்சியைத் தூண்டி புரட்சியில் ஈடுபடுவதற்கு இசை மிகப்பெரும் காரணியாக அமைந்துள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் என்பது பிரிட்டிஷ் இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் கருவுற்றிருந்த காலம். நாடெங்கும் சுதந்திரக் கனல் கனன்று கொண்டிருந்தது. வெறும் அரசியல் தலைவர்கள் மட்டுமே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காலத்தில் சாதாரண மக்களையும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்ததற்கு முக்கியமான காரணியாக அன்றைய கால தேசிய உணர்வு மிக்க நாடகங்களும், பாடல்களும் அமைந்தன. பல்வேறு இசைக்கலைஞர்களும் தாங்களாகவே முன்வந்து சுதந்திரப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். காந்தியின் வருகை 1915க்கு பின் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரின் கொள்கைகளால் பல்வேறுபட்ட தலைவர்களும் மக்களும் தங்களை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டனர். அவ்வாறு காந்தியை கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பாடகியே டி.கே பட்டம்மாள் ஆவார்.
தேசியக் குயில் டி.கே. பட்டம்மாள் பெயரை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் பாடிய பாடலான “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரத்தை அடைந்து விட்டோம் என்று” இன்றளவும் சுதந்திர தினத்தன்று பள்ளிகளில் ஒலிக்கப்பெறுகிறது. பள்ளிக்காலங்களில் அந்தப் பாடலை கேட்டிராதோர் இல்லை என்று சொல்லலாம். பாரதியின் அந்த வரிகளை மெட்டமைத்து பாடிய பெருமைக்குரியவர் டி.கே. பட்டம்மாள் ஆவார். அனைவராலும் ‘பட்டா’ என்று செல்லமாக அழைக்கப்படும் பட்டம்மாளின் இயற்பெயர் அலமேலு. இவர் 1919 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் நாள் காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் என்னும் ஊரில் கிருஷ்ணசாமிக்கு மகளாக பிறந்தார். தன் தந்தையின் பூர்வீக ஊரான தாமல் (டி) மற்றும் தன் தந்தையின் பெயரான கிருஷ்ணசாமி(கே) ஆகியவற்றை இணைத்துக் கொண்டு டி.கே. பட்டம்மாள் என்று அழைக்கப்பட்டார்.
பட்டம்மாள் பிறந்த வருடம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு வருடமாகும். அப்போது ஆங்கில அரசு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களையும் புரட்சியாளர்களையும் ஒடுக்கும் நோக்கத்தோடு இந்திய பாதுகாப்புச் சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டத்தை கொண்டு வர முயன்றது. அதற்காக ‘சிட்னி ரௌலட்’ என்ற ஆங்கில நீதிபதியை தலைமையாகக் கொண்ட ஒரு குழுவை ஏற்பாடு செய்தது. அக்குழுவின் தலைவரான சிட்னி ரௌலட் பெயரால் அது “ரௌலட் மசோதா” என்று அழைக்கப்பட்டது. ரௌலட் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்தன. காங்கிரஸ் கட்சி 1919 ஆம் ஆண்டு மார்ச் 30 சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்தது. பஞ்சாப் மாகாணத்தில் அமிர்தசரசில் போராட்டத்தை நடத்த இந்திய தேசிய காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது. அதைத் தடுக்கும் திட்டத்தோடு அக்கட்சியை சேர்ந்த தலைவர்களான வழக்குரைஞர் சைஃபுதீன், மருத்துவர் சத்தியபால் ஆகியோர் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தப் பின்னணியில் தான் சைஃபுதீன், சத்திய பால் ஆகிய இருவரையும் விடுதலை செய்ய வற்புறுத்தியும், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சீக்கியர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் என மத வேறுபாடின்றி 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கெடுத்தனர். “ஜாலியன் வாலாபாக்” என்பது நெடிய சுவர்களால் சூழப்பட்ட குறுகிய ஒரே ஒரு நுழைவாயில் கொண்ட மைதானம். அவர்கள் அறிவித்தபடி இரங்கல் கூட்டம் சரியாக 4:30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் நடத்தக்கூடாதென்று, ஏற்கனவே அறிவித்திருந்த ஜெனரல் ரெஜினால்ட் டயர் என்ற ஆங்கில அதிகாரி தன் படையுடன் மைதானத்தை அடைந்தான். நுழைவு வாயிலில் படையை நிறுத்தி வைத்தான். தன் ஆணையை மீறி கூடிய கூட்டத்தையும் சுதந்திரத்திற்கான கலகத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத டயர் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி கூட்டத்தை நோக்கி சுடுமாறு உத்தரவிட்டான். தோட்டாக்கள் தீரும் வரை 15 நிமிட நேரம் துப்பாக்கிகள் குண்டுகளை கக்கின. கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இந்தியர்கள் 1500 பேர் கொல்லப்பட்டனர். உலக வரலாற்றில் இது மிக கொடிய சம்பவமாக பதிவு செய்யப்பட்டது. வருகின்ற ஏப்ரல் 13-ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் 105வது நினைவு நாள் ஆகும். இத்தகைய அரசியல் சூழலிலேயே பட்டம்மாள் பிறக்கிறார்.
பட்டம்மாள் முறையாக இசை பயின்றவர் அல்ல. அவரின் தாயான ராஜம்மாளே பட்டம்மாளுக்கு முதல் ஆசிரியர் ஆவார். பின்னாளில் தந்தை கிருஷ்ணசாமியும் அவரின் இசை பயிற்சிக்கு உந்துதலாக அமைந்தார். பட்டம்மாள் சிறுவயதில் வீட்டில் ஸ்லோகங்களை சொல்வது என்பது அவருடைய இசை பயணத்தில் தவழ்ந்த காலம் எனலாம். அவருடைய தந்தை நிறைய ஸ்லோகங்களை பட்டம்மாளுக்கு சொல்லிக் கொடுத்தார். பட்டம்மாளின் இசைத்திறத்தை அறிந்த தந்தை கிருஷ்ணசாமி தினமும் காலை 3 மணியிலிருந்து ஆறு மணி வரை ஸ்லோகங்கள், பாசுரங்கள், பாடல்கள் என்று அனைத்தையும் சொல்லிக் கொடுப்பார். பிறகு இரண்டு மணி நேரம் ஓய்வு கொடுத்து விட்டு மீண்டும் எட்டு மணிக்கு தொடங்கி விடுவார். இதைப் பற்றி 2001 ஆம் ஆண்டு “இந்து” இதழுக்கு பட்டம்மாள் அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.
“அந்தக் காலங்களில் இசைத்தட்டுகளோ பிரதானமில்லை மனனம் செய்து குரு பாடுவதை பார்த்தும் கேட்டும் அப்படியே பாட வேண்டும். எல்லா கீர்த்தனைகளையும் மனப்பாடம் செய்திருக்க வேண்டும். அதற்கான பயிற்சியை தினமும் காலை. 3:00 மணி முதல் 6:00 மணி வரையும் பின் 8:00 மணி முதல் 10:00 வரையும் என் தந்தை எனக்கு வழங்குவார்.”
பின்னாளில் ஒரு தெலுங்கு ஆசிரியரிடம் முறையாக சங்கீதமும் தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். இயற்கையாகவே பட்டம்மாள் அவர்களிடம் இசை பாடும் திறமை நிறைந்து இருந்தது.
1931-ஆம் ஆண்டு டி.கே. பட்டம்மாள் அவர்கள் தன் பள்ளி ஆண்டு விழாவில் “சத்தியவான் சாவித்திரி” நாடகத்தில் சாவித்திரியாக வேடம் புரிந்து நடித்திருந்தார். பட்டம்மாள் பாடிய பாடலை பார்வையாளர் கூட்டம் கண்ணீர் சிந்தி கைதட்டல்களால் பாராட்டியது. பட்டம்மாளின் பாட்டுத்திறத்தைப் பாராட்டி அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இந்த செய்தியினை “சுதேசமித்ரன்” இதழ் பட்டம்மாளின் படத்துடன் வெளியிட்டது. வெறும் ஊரளவில் பள்ளியளவில் மட்டும் பிரபலமாய் இருந்த பட்டம்மாளின் குரல் வளம் நாடறியும் ஒரு பேசுபொருளாக மாறியது. பட்டம்மாளின் குரலை இசைத் தட்டுக்களில் பதிவேற்றம் செய்ய கொலம்பியா கிராமபோன் நிறுவனம் பட்டம்மாளின் தந்தையான கிருஷ்ணசாமியை அணுகியது. முதலில் பயத்துடன் இருந்த கிருஷ்ணசாமி அதை மறுத்தார். பின்னாளில் அவரின் நெருங்கிய நண்பரான டாக்டர்.சீனிவாசன் என்பவரின் வற்புறுத்தலின் பேரில் அதற்கு ஒப்புக்கொண்டார். சுமார் 12 வயதில் பட்டம்மாளின் குரல் இசைத் தட்டுகளில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
பட்டம்மாளின் குடும்பம் என்பது சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட ஒன்று. கிருஷ்ணசாமி காந்திய கொள்கைகளுக்கு சிறந்த அபிமானியாக இருந்தார். அவரால் பட்டம்மாளும் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்து கொண்டார். தேசபக்தியை தூண்டும் பாடல்களையே பெரிதும் பட்டம்மாள் பாடினார். அதற்காக அவர் கை கொண்டது பாரதியாரின் பாடல்களையே. பின்னாளில் வானொலிகளில் பட்டம்மாளின் குரல் பெரிதும் ஒலிக்கத் தொடங்கியது. ஆல் இந்தியா ரேடியோவின் சென்னை வானொலி நிலையத்தின் வளர்ச்சிப் பாதையில் பட்டம்மாளின் பங்கு அளப்பரியது. இரவு 7:30 முதல் 9 மணி வரை ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளில் பட்டம்மாளின் கச்சேரிகளைக் கேட்க தனி ரசிகர் கூட்டம் இருந்தது. அடிக்கடி தன் கச்சேரிகளை பட்டம்மாளும் வழங்கினார். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் நாடு விடுதலை பெற்றதை வானொலியில் அறிவித்தவுடன் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரத்தை அடைந்து விட்டோம் என்று” என்ற பாரதியாரின் பாடலினை தொட்டு தொடங்கி தன் குரலால் பாடலால் இசையால் இந்திய தேசத்தின் விடுதலையை தமிழக மக்களுக்கு அறிவித்தார் டி.கே. பட்டம்மாள். இசைத் தட்டுகள் வானொலி நிகழ்ச்சிகள் என்ற சிறிய பணிகளைக் கடந்து 1933 ஆம் ஆண்டு முழு நேர கச்சேரியை பொது மேடையில் டி.கே. பட்டம்மாள் நிகழ்த்தினார். சென்னை எழும்பூரில் இருந்த “மகிலா சமாஜம்” என்ற அமைப்பு இவருக்கு முழு கச்சேரி நடத்த முதல் வாய்ப்பு கொடுத்தது.
நாட்டின் விடுதலை மீது அக்கறை கொண்டிருந்த பட்டம்மாள் மக்களிடையே, எழுச்சியைத் தூண்டும் பாரதியார் பாடல்களையே பெரிதும் தன் கச்சேரிகளில் தேர்ந்தெடுத்து பாடினார். ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’, ‘ஆடு ராட்டே சுழன்று ஆடுராட்டே,, ‘தொன்று நிகழ்ந்த’, ‘வீர சுதந்திரம் வேண்டி’ முதலான பாடல்களை பெரிதளவில் பாடினார். மேலும் அன்றைய காலகட்டத்தில் கர்நாடக சங்கீதங்கள் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் மட்டும் பாடப்பட்டு வந்த சூழலில் தைரியமாக தமிழ் பாடல்களை கச்சேரிகளில் டி.கே பட்டம்மாள் பாடினார். தமிழிசை இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்னாலே பட்டம்மாளின் இந்த செயல் நோக்கத்தக்கது.
இசைக்கு மொழி இல்லை என்பது உண்மைதான். ஆனால் அந்த இசையின் முழுமையான இன்பத்தை அவரவர் மொழிகளினூடே கேட்கின்ற போது தான் அனுபவிக்க முடியும். பாடலும் அதன் வரிகளும் கேட்பவர்களால் புரிந்து கொள்ள முடிகின்ற போது அது மகிழ்ச்சியை அளிக்கின்றது. கடந்த நூற்றாண்டு வரை மேடைகளில் பாட்டுக் கச்சேரி என்றாலே கர்நாடக சங்கீதம் தான் அதையும் தமிழ் அல்லாத வடமொழியிலும் தெலுங்கிலும் தான் பாடுவது மரபாக இருந்தது. பாரதி இதை கடுமையாக சாடி ‘சங்கீத விஷயம்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார்.
“ரஸ ஞானம் இல்லாதபடி பல்லவிகளும் கீர்த்தனங்களும் பாடுவோர் ஸங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டு வெற்று உடலை அதாவது பிணத்தை காட்டுகிறார்கள் இக்காலத்து ஸங்கீத வித்வான்களிலே பலர் ஸங்கீதத்திற்கு நவரசங்களை உயிர் என்பதை அறியாதவர்.
முத்துசாமி தீட்சிதர், தியாகையர், பட்டணம் சுப்பிரமணிய ஐயர் முதலியவர்களின் கீர்த்தனங்களில் சிலவற்றை அதிக சங்கதிகளுடன் பாடுவோரே ‘முதல் தர வித்துவான்’. இந்தக் கீர்த்தனங்கள் எல்லாம் சமஸ்கிருதம் அல்லது தெலுங்கு பாஷையிலே இருக்கின்றன. ஆகவே ‘முக்காலே மும்மாகாணி’ வித்வான்களுக்கு இந்த கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது எழுத்துக்களையும் பதங்களையும் கொலை செய்தும் விழுங்கியும் பாடுகிறார்கள் அர்த்தமே தெரியாதவனுக்கு ரசம் தெரிய நியாயம் இல்லை.
நானும் பிறந்தது முதல் இன்று வரை பார்த்துக்கொண்டே வருகிறேன். பாட்டு கச்சேரி தொடங்குகிறது. வித்வான் ‘வாதாபி கணபதிம்’, இன்று ஆரம்பஞ் செய்கிறார். ‘ராமநீ ஸமான மெவரு’ ,மரியாத காதுரா,’ ‘வரமுலொஸகி’ ஐயையோ ஐயையோ ஒரே கதை.
எந்த ஜில்லாவுக்கு போ எந்த கிராமத்திற்கு போ எந்த வித்வான் வந்தாலும் இதே கதை தான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்பு காதாக இருப்பதால் திரும்பத் திரும்ப ஏழு எட்டு பாட்டுகளை வருஷக்கணக்காக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோற்காது உள்ள தேசங்களிலே இந்த துன்பத்தை பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
பூர்வீக மகான்களுடைய பாட்டுக்களை மறந்து போய் விட வேண்டும் என்பது என்னுடைய கக்ஷியன்று. அவற்றை அர்த்தத்துடன் பாட வேண்டும். புதிய புதிய திருத்தங்களை வெளியே கொண்டு வர வேண்டும் இப்போது சங்கீத வித்வான்களிலே தலைமை பட்டிருப்போம். தமிழிலே புதிய மெட்டுக்களில் கீர்த்தனங்கள் செய்யும் முயல வேண்டும்” என்ற பாரதியின் எதிர்பார்ப்பை முதன்முதலில் கர்நாடக சங்கீத மேடைகளில் நிறைவேற்றி காட்டியவர் டி.கே. பட்டம்மாள் ஆவார்.
பட்டம்மாளுக்கு இசைத்துறையில் கதவு எளிதாக திறக்கப்படவில்லை. அதற்கு காரணம் அவர் பிறந்த குடும்பப் பின்னணியும் அன்றைய கால சமூக நிலையுமே ஆகும். ஒரு பிராமணப் பெண் மேடையேறி பாடுவது என்பது அக்காலச் சூழலில் அசாத்தியமான ஒன்று. காரணம் நடனம் ஆடுவதையும் பாடுவதையும் தேவதாசி குலத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே செய்து வந்தனர். தேவதாசி பெண்களுக்குண்டான நடனம் மற்றும் பாடல் ஆகிய கலைகளை பிராமணக் குலத்தைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டு வந்தது. பட்டம்மாளின் இசைப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த அவரின் தந்தை கிருஷ்ணசாமியும் கூட ஆரம்ப காலகட்டங்களில் பட்டம்மாள் மேடையேறி பாடுவதை முற்றிலும் கண்டித்தார். அதற்கு முக்கியமான காரணம் மேடை ஏறிய பிராமணப் பெண்ணை யார் திருமணம் செய்து கொள்வார் என்பதே. இந்தக் கவலை 1940 ஆம் ஆண்டு ஈஸ்வரன் என்பவரை டி.கே. பட்டம்மாளை மணமுடித்ததன் விளைவாகத் தீர்ந்தது. கிருஷ்ணசாமியின் நண்பரான சீனிவாசன், ஈஸ்வரனை பட்டம்மாளுக்கு திருமணம் செய்து வைத்தார். ஈஸ்வரனும் பட்டம்மாளுக்காக தன்னுடைய பணியினைத் துறந்து அவரை கச்சேரிக்கு அழைத்து செல்வதை முதன்மை பணியாக கொண்டிருந்தார். பட்டம்மாளின் தந்தை மற்றும் கணவர் ஆகிய இருவரும் அவரின் வளர்ச்சிக்கு படிக்கற்களாக அமைந்திருந்தனர். அந்த விதத்தில் டி.கே. பட்டம்மாள் மிகவும் கொடுத்து வைத்தவர் என்று சொல்ல வேண்டும்.
பட்டம்மாள் இறை பக்தியும் தேசபக்தியும் ஒரு சேர கொண்டிருந்தார். இசைத்துறையில் இவ்வாறு தான் வளர்வதற்கு காரணம் தனக்குக் கிடைத்த அருள் ஆசியே என்பதை டி.கே. பட்டமாள் அவர்கள் பதிவு செய்துள்ளார். அதற்காக இரண்டு நிகழ்வுகளை அவர் குறிப்பிடுகின்றார். ஒன்று பட்டம்மாள் மூன்று மாத கைக்குழந்தையாக இருந்த போது அவருடைய தந்தை கிருஷ்ணசாமி திருவண்ணாமலையில் இருக்கும் ரமண மகரிஷியின் ஆசிரமத்திற்கு சென்றிருந்தார் கிருஷ்ணசாமியின் குடும்பத்தை வாஞ்சையோடு அம்மடம் வரவேற்றது. கிருஷ்ணசாமியின் குடும்பத்தோடு கனிவோடு உரையாடிய ரமணர். மழலை சிரிப்போடு கை கால்கள் அசைத்துக் கொண்டிருந்த பட்டமாலை பார்த்தார். தம் சேவைகளிடம் சொல்லி தேனை எடுத்து வரச் சொன்னார். அந்த தேனை தன் விரல்களால் எடுத்து குழந்தை பட்டமாளி நாக்கில் தடவினார். தெய்வீகத்தை உணர்ந்தது போல டி.கே. பட்டம்மாள் உச்சிக்கொட்டி சுவைத்தார். மற்றொன்று காஞ்சி காமகோடி பீடத்திற்கு கிருஷ்ணசாமி குடும்பம் அடிக்கடி செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள் சென்றிருந்தபோது பட்டம்மாள் ‘மோக பஞ்ச சாதகத்தை’ வாக்கு சுத்தத்தோடு பாடியதை கேட்டு மடத்திலிருந்து எல்லோரும் வியந்தார்களாம். இதனை அறிந்த சந்திர சேகர சங்கராச்சாரியார் அதன் பின் நடைபெற்ற விஜயதசமி நவராத்திரி விழாவில் பட்டம்மாளை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார். சுலோகம் பாடிய சிறுமியை கண்டு மகிழ்ந்தார் சங்கராச்சாரியார் உடனே பூஜையில் இருந்த தேங்காய் வைத்திருந்த கலசம் ஒன்றை எடுத்து கிருஷ்ணசாமியின் கைகளில் கொடுத்து, இந்த தேங்காயை அரைத்து பாயாசம் செய்து பட்டமாளுக்கு கொடுங்கள் என்றார். பகுத்தறிவு ரீதியில் அணுகும் போது இந்த கருத்துக்கள் நமக்கு ஏற்புடையதாக இல்லாவிடினும் பட்டம்மாளின் தேசபக்தியை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது.
எல்லாத் துறைகளையும் போலவே இசைத்துறையும் அன்றைக்கு ஆணாதிக்கம் நிறைந்ததாக இருந்தது. பெண்களுக்கு ராகங்களை விரிவாகப் பாடும் அளவுக்கு கற்பனைத் திறன் கிடையாது போன்ற நம்பிக்கைகள் மிகத் தீவிரமாக இருந்தன. ஆச்சாரமான பிராமண குடும்பத்திலிருந்து கலைத்துறைக்கு பெண்கள் வரக்கூடாது என்ற சமூகத்தின் பிற்போக்குத்தனத்தை உடைத்தது போலவே கர்நாடக இசை மேடைகளில் ஆண்கள் மட்டுமே பாட முடியும் என நம்பப்பட்டு வந்த ராகம், தானம், பல்லவியை ஆண்களுக்கு நிகராக பாடி பெண்களால் பாட முடியாது என்ற பிற்போக்குச் சிந்தனையை உடைத்தவர் டி.கே. பட்டம்மாள்.
“பெண்கள் ஒரு காலத்தில் தானம் செய்யாமல் அல்லது செய்ய விடப்படாமல் இருந்தார்கள். பிரபலமான பிருந்தா, முத்தா போன்று பெரிதாக தானம் பாடியது இல்லை. இவர்கள் சுவரகல்பனை செய்வதையே தவிர்த்தனர். என்றும் கூறுவர் ராகம் கீர்த்தனை பதம் ஜாவளி என்று போய்விட்டனர். பெண்களுக்கு கணக்கு வழக்கு அறிவு கம்மி இதெல்லாம் எதற்கு இவர்களுக்கு என்று ஒரு காலத்தில் கர்நாடக சங்கீதம் பாமரர்களுக்குத் தேவை இல்லை என்கின்ற மேட்டிமை வாதத்தின் நீட்சியாய் ஒரு உப முடக்குவாதம் பேசியிருக்கிறோம். செயல்படுத்தியுமிருக்கிறோம். எனக்குத் தெரிந்து இதை உடைத்து தானம் பாடலாம் பெண்களும் ராகம், தானம், பல்லவி செய்யலாம் என்று காட்டியவர் டி.கே பட்டம்மாள்” என்கிறார் அருண் நரசிம்மன்.
RTP என்று சொல்லப்படும் ராகம், தானம், பல்லவி கர்நாடக இசை சங்கீதங்களில் திறன் படைத்தவர்கள் மட்டுமே பாடக்கூடிய ஒன்றாக இருந்து வந்தது. குறிப்பாக ஆண்கள் மட்டுமே ராக தான பல்லவியை பாடி வந்தனர். RTP இந்திய இசை பாரம்பரியத்தின் முழுமையான அம்சங்களில் ஒன்றாகும். இசைக்கலைஞர்கள் தங்களின் திறமையை முழு வரம்பையும் அறிவின் ஆழத்தையும் நிரூபிக்கும் ஒரு முறையாகும். ராக ஆலாபனை தானம் நிரவல், கல்பனசுவரம் ஆகியவற்றை உள்ளடக்கியது ராக தான பல்லவி ஆகும். மிக சிக்கலான தாளகதியில் அமைந்த பல்லவிகளை கூட பட்டம்மாள் மிக இலகுவாக பாடி அன்றைய ஆண் ஜாம்பவான்கள் எல்லாம் மிகுந்த மரியாதையுடன் தன்னை கவனிக்க செய்தார். இதனால் அவருக்கு ‘பல்லவி பட்டம்மா’ என்ற பெயரும் வந்து சேர்ந்தது.
விடுதலை இயக்கப் போராட்டத்தில் தீவிர செயல்பாட்டாளராக டி.கே. பட்டம்மாள் விளங்கினார். 1935 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸின் பொன்விழா மேடையில் தன் முதல் விடுதலை பாடல்கள் கச்சேரியை அரங்கேற்றம் செய்தார். அதன் பின் பல்வேறு காங்கிரஸ்(அன்றைய காங்கிரஸ்) கூட்டங்களிலும் விடுதலை பாடல் கச்சேரிகளையும் டி.கே. பட்டம்மாள் அவர்கள் நிகழ்த்தினார். எத்தனையோ காங்கிரஸ் கூட்டங்களில் பாடினாலும் அவர் ஒருபோதும் பணம் பெற்றதில்லை. நாட்டுக்காக பாடுவதும் பாரத தாய்க்காக சமர்ப்பணம் செய்யும் பாடல்களுக்கு எப்படி? பணம் வாங்க முடியும் என்று உறுதியாக மறுத்துவிட்டார். எல்லோருடைய விடுதலை பாடல்களின் கச்சேரியை போலவே டி.கே பட்டம்மாளின் கச்சேரி இல்லை. அது தனித்துவமாக அமைந்திருந்தது. பட்டம்மாள் பாரதியாரின் பாடல்களை மட்டுமே அதிக அளவில் தேர்ந்தெடுத்தார். இதைக் குறித்து அவர் பதிவு செய்துள்ளதாவது.
“நான் சிறுவயதாக இருந்தபோது நிறைய காங்கிரஸ் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பாடுவதற்காக அழைக்கப்பட்டு இருக்கிறேன். நான் பெரும்பாலும் விடுதலை என்று தணியும் இந்த சுதந்திர, வீர சுதந்திரம் வேண்டி, செந்தமிழ் நாடெனும் போதினிலே போன்ற பாரதியார் பாடல்களையே அதிகம் பாடுவேன் முதலில் எனக்கு பாரதியார் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் என் தந்தை விடுதலை பற்றி சொல்லிச் சொல்லி வளர்த்த போதே அவரைத் தெரிந்து கொண்டேன். பாரதியார் பாடல்கள் பாடத் தொடங்கிய பின் காங்கிரஸ் அமைப்பின் எல்லா கூட்டங்களுக்கும் கச்சேரி நிகழ்த்த அழைக்கப்பட்டேன்”
பாரதியாரின் பாடல்கள் தடை செய்யப்பட்ட காலத்திலும் அவருடைய பாடல்களை மேடைகளில் தைரியமாக முழங்கினார். அதனை கண்டு வியந்த சிலம்பு செல்வர் மா.பொ. சிவஞானம் சுதந்திரத்திற்கு பிறகு பட்டம்மாள் அவர்களுக்கு ‘பாரதியார் விருது’ வழங்கி சிறப்பித்தார்.
காங்கிரஸ் கூட்டங்கள், கச்சேரிகள் என்று பாடிக்கொண்டிருந்த பட்டம்மாள் 1939 ஆம் ஆண்டு திரைத்துறையிலும் கால் பதித்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தையும் காந்திய கொள்கைகளையும் ஆதரித்த படமான ‘பால யோகி’ கே. சுப்பிரமணியன் அவர்களால் எடுக்கப்பட்டது. இப்படத்தில் பாபநாசம் சிவன், ராஜகோபால் ஐயர் ஆகிய இருவரும் இசையமைத்த ‘தேச சேவை செய்ய வாரீர்’ எனத் தொடங்கும் பாடல் தான் தேசியக் குயில் டி.கே. பட்டம்மாள் பாடிய முதல் “திரையிசைப் பாடல்” ஆகும். இதன்பின் பல்வேறு திரையிசைப் பாடல்களை அவர் பாடியுள்ளார். பட்டம்மாள் தன் பாடலையும் குரலையும் தேசத்திற்காகவும் தெய்வீகத்திற்காகவும் மட்டுமே சமர்ப்பணம் செய்வேன் என்று உள்ள உறுதியோடு விளங்கினார். பெரிய திரைப்பட வாய்ப்புகள் வந்தபோதிலும் தேசிய பாடல்களையும் தெய்வப் பாடல்களையும் மட்டுமே பாடுவேன். காதல் பாடல்களை பாட மாட்டேன் என்று தனக்கான தனிப்பாதை அமைத்துக் கொண்டார். அவரின் சமகாலத்தில் எம். எஸ். சுப்புலட்சுமி, ரமாமணிபாய், கே பி சுந்தராம்பாள் போன்றோர் இருந்ததும் எவ்வித பாகுபாடும் போட்டியுமின்றி டி.கே.பட்டம்மாள் தனக்கான பாதையில் பயணித்தார்.
பட்டம்மாளின் தேசிய சேவையை அன்றைய காலகட்ட அரசியல் தலைவர்களும் பல்வேறுபட்ட அமைப்புகளை சேர்ந்தவர்களும் பெரிதும் பாராட்டினர். அவ்வாறு பட்டம்மாள் வளர்ச்சியை கண்டு பெருமிதம் கொண்டவர்களில் கல்கியும் ஒருவர். இதற்கு பின்னால் ஒரு அரசியல் பின்னணி உள்ளது. தான் வாழ்ந்த காலத்தில் பிராமணர்களால் பெரிதும் தூஷிக்கப்பட்டு பின்னாளில் வேறுவழியின்றி அதே பிராமணச் சமூகம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படுத்திய பாரதியின் பாடல்களை பிராமண குலத்தை சேர்ந்த டி.கே. பட்டம்மாள் பாடினார். இன்றளவும் பாரதியை ஒரு நேஷ்னல் ஃபிகர் ஆக மாற்றும் மத்தியில் ஆளும் அரசும் அவரின் தேசிய இயக்கப் பின்னணி மட்டுமே பேசுகிறது. இது போன்ற நடவடிக்கைகள் கொதிப்பினை ஏற்படுத்துகிறது. பட்டம்மாளின் சங்கீத பயணத்தை பார்த்து உணர்ந்தவர் என்ற வகையில் ‘பட்டம்மா பாட்டு’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார்.. கல்கி பின்வருமாறு.
“சென்ற வருட கடைசியில் காங்கிரஸ் மண்டபத்தில் நடந்த சங்கீத விழாவின்போது ஒரு நாள் அவர் ஸ்திரீகள் தான் பாட வேண்டும் புருஷர்கள் பாடக்கூடாது புருஷர்கள் பாட்டு சொல்லிக் கொடுக்கலாம் என்றார். இது ஒரு கட்சி இதற்கு மாற்றான கட்சிக்காரர்களும் இருக்கிறார்கள் இவர்கள் சிவ சிவா! ஸ்திரிகள் பாடுவதும் பாட்டா! வளவள குழகுழவென்று இழுத்தால் பாட்டு ஆகிவிடுமா! தாளபேளந்தான்! தாளக்கட்டு இல்லாத பாட்டு என்ன பாட்டு என்பார்கள். இந்த இரண்டு கட்சிக்காரர்களும் ஸ்ரீமதி பட்டம்மாள் பாட்டில் திருப்தி அடைய இடம் உண்டு. நலங்கிலும் ஊஞ்சலின் தவிர ஸ்திரிகள் பாட்டு என்று வாய் திறக்கக்கூடாது என்று சொல்பவர்கள், கூட ஸ்ரீமதி பட்டம்மாள் பாடலாம் என்று ஒப்புக் கொள்வார்கள்.” பின்னாளில் கல்கியின் சிறந்த கட்டுரைகள் என்று நூலாக்கம் செய்த போது அதில் ஒரு கட்டுரையாக இந்த கட்டுரை இணைக்கப்பெற்றது.
பட்டம்மாளின் வாழ்க்கை இன்று படிப்பதற்கு நமக்கு எளிமையானதாக இருந்தாலும் அது அவ்வளவு எளிதானதாக இல்லை. முன்பு கூறியது போலவே அவர் வளர்ந்த குடும்ப சூழல் மற்றும் அன்றையக் கால சமூகப் பின்னணி ஆகும். இடைவிடாது தேசப்பணி ஆற்றிய டி.கே. பட்டம்மாள் அவர்களின் சேவையை போற்றும் வண்ணம் இந்திய அரசாங்கம் அவருக்கு 1971 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு அவருடைய நினைவு போற்றும் வண்ணம் இந்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது. இதைத் தவிர இசைத்துறையில் எண்ணற்ற விருதுகளை டி.கே. பட்டம்மாள் அவர்கள் பெற்றுள்ளார் 1962 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதினையும் 1970 ஆம் ஆண்டு கர்நாடக இசை துறையில் உயரிய விருதான “சங்கீத கலாநிதி” விருதினைப் பெற்றுள்ளார். டி.கே.பட்டம்மாள் குறித்து ஆங்கிலத்தில் D.K Pattammal :A Mejestro and Her Timeless Music, Gana Saraswati D.K Pattammal: Dimensions Of A Divine. Songster என்ற இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. பட்டம்மாளின் ஆரம்பகால இசைப்பயணம் அவரின் திறமையின் காரணமாக தடுக்கப்பட்டு இருக்குமாயின் அது ஏற்கத்தக்கது. ஆனால் அவர் ஒரு பெண்ணாக இருப்பதாலும் பிராமண குலத்தில் பிறந்ததாலும் அவருக்குண்டான வாய்ப்புகள் நிராகரிக்கபடுதல் கலையினை ஊனப்படுத்துவதே அன்றி வேறில்லை.
இன்றளவும் இதே போக்கு தொடர்கிறது டி. எம். கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது அளிக்கப்படுவதை அரசியலாக்குவது கலையின் குரல் வளையை நெறிப்பது போன்றே உள்ளது. டி.எம்.கிருஷ்ணாவின் விருதினை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக இசை குரல் இரட்டையர்களான காயத்ரி மற்றும் ரஞ்சனி ஆகியோர் டி.எம். கிருஷ்ணாவின் குரல் வளத்தின் மீது குற்றச்சாட்டு வைக்காமல் அவர் பாடிய பொருண்மையை கேள்விக்குட்படுத்தி சர்ச்சை பொருளாக மாற்றுவது அவர்களின் இயலாமையை காண்பிக்கிறது. பெரியாரைப் பாடியதற்காக டி.எம் கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது என்பது மீண்டும் கலையினை அரசியலுக்குள் உட்புகுத்தி ஊனப்படுத்துவதே அன்றி வேறில்லை.
டி.எம் கிருஷ்ணாவின் திறமையின் மீது சர்ச்சை எழுப்பப்பட்டு இருந்தால் அது ஆரோக்கியமான ஒன்றாக இருந்திருக்கும். அவரின் பொருண்மையில் அதிருப்தி தெரிவிக்கும் காயத்ரி மற்றும் ரஞ்சனி அவர் பாடிய நாராயண சரஸ்வதி ஜனரஞ்சனி ராகம் தானம் பல்லவி கேட்டிருக்கிறார்களா? என்ற கேள்வியை நமக்குள் உண்டு பண்ணுகிறது. இன்று கர்நாடக இசை கச்சேரிகளில் பிராமண பெண்களே என்று சொல்லுவதற்கு வித்திட்ட டி.கே பட்டம்மாளின் இசை கச்சேரிகளில் வயலின் வாசித்த காயத்ரி மற்றும் ரஞ்சனி ஆகியோர் இசையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமைவது வேதனை அளிக்கிறது. டி.எம் கிருஷ்ணாவிற்கு விருது வழங்கப்படுமேயானால் இனிமேல் மியூசிக் அகாடமியில் கச்சேரிகள் செய்ய மாட்டேன் என்று சொல்லுவது காயத்ரி மற்றும் ரஞ்சனி ஆகியோரின் விழிப்புணர்வைக் காட்டுகிறது.
பெரியார் போன்ற சமூகப் போராளிகளை விமர்சிப்பதற்காகவே இங்கு ஒரு கூட்டம் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. பெரியாரை எதிர்க்கும் கோஷ்டியினர், அவர்க்கு எதிராக எழும் சர்ச்சைகளுக்கு ஆதரவு தரும் வேளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் காயத்ரி மற்றும் ரஞ்சனி ஆகியோருக்கு ஆதரவு வழங்கியுள்ளார். காந்தியின் கொள்கையில் நாட்டம் கொணடவரான கிருஷ்ணசாமி பட்டம்மாளைப் பாட சம்மதித்தார். ஆனால் இன்று காந்தியை முன்னிலைப்படுத்துவதாக சொல்லும் கோட்சே வழியிலான ஆளும் அரசு தொடர்ச்சியாக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
கடந்த மார்ச் 19 ஆம் நாள் பட்டம்மாள் அவர்களின் 105 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் இன்றும் கூட பால், சாதி, வர்க்கம் அடிப்படையில் கலைகள் கட்டப்பட்டுள்ளது. டி.கே. பட்டம்மாள் தொடங்கி டி.எம். கிருஷ்ணா வரை பலருக்கு மேட்டிமைவாதிகளால் அடக்குமுறைகள் தொடர்ந்து இங்கு நடத்தப்பட்டு வருகிறது. அரசியல் தலையீடுகள் இன்றி ஒரு நல்ல கலையை காணவிருப்பதே நம் அனைவருடைய வேட்கையாக உள்ளது.
“என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று தணியும் இந்த அடிமையின் மோகம்”
பாரதியின் பாடல் கலைக்கு பொருத்தமாக உள்ளது.
துணைகள்:
தேசியக் குயில் டி.கே பட்டம்மாள் -தாமல் கோ சரவணன்
D.K Pattammal :A Mejestro and Her Timeless Music,
https://en.wikipedia.org › wiki › R…
ராகம் தானம் பல்லவி – விக்கிபீடியா
Gana Saraswati D.K Pattammal: Dimensions Of A Divine. Songster
இந்து தமிழ் நாளிதழ், மார்ச் 9 ,2009
https://www.vikatan.com/lifestyle/music/special-story-about-award-controversy
Comments
Post a Comment