தீனன் கவிதைகள் 

ஆதி


கால்களைப் பரப்பி 

அமர்ந்திருந்த கிழவி

 என்மீது வசைபாடத் 

தொடங்கினாள் 


அவளை இதற்கு முன் 

ரோமானியாவில் 

ஜிப்சிகள் ஒன்றுகூடும்

தங்கச் சதுக்கத்தில் பார்த்திருக்கிறேன்


பச்சை வண்ண சாயம் தீட்டியிருந்த தனது கேசத்தை 

சிவப்புப் பாசிகள் கோர்த்த நூலொன்றில் வனப்பாக 

முடிந்திருந்த அவள் 

தனது பேரனின் 

பிணத்தை வைத்துப்

பிச்சையெடுத்துக் கொண்டிருந்தாள் 


குறுகலான அவளது கண்களில் படித்திருந்த 

அடர்த்தியான மை 

எனக்கு இரவு நிசியில் பேய்கதை சொல்லும் 

ஒருத்தியை ஞாபகப்படுத்தியது 


உருண்டையான ரப்பர் பந்து போல் அவள் 

காட்சியளித்தாள் 

கிழிந்திருந்த ஜாக்கெட்டின் விளிம்புகளில் தொங்கிய

 குண்டுமணிகள் 

அவளின் யுவதியுருவிற்கு 

என்னைக் கடத்திச் சென்றது 


அவளிடம் பழிப்புக் காட்டுவதன் மூலம் என்னை 

அவளுக்குள்

தள்ளிவிட விரும்பினேன் 

எனது உயிர் தீரும்வரை 

அவளுக்குள் படுத்துறங்குவேன்


ஓக் மரங்கள் அடர்ந்த 

ரகசியமான நிலப்பரப்பில் 

தீ வண்ணம் கொண்ட 

விஷக் காலான்களை 

முகர்ந்து செத்த 

அவளின் பேரனைப் போல் 

வீழ்ச்சியை சுய இன்பம் செய்தபடி பூடகத்தின் பிடியில்

சிறுமைப்பட்டு நையும் 

என்னை வைத்தும் 

அவள் பிச்சையெடுக்கக் கூடும்


ரோமானியனாக இல்லாவிட்டாலும் ரகசிய நிலப்பரப்பின் 

வரைபடத்தில் வைக்கப்பட்ட தேவையில்லாத

 புள்ளியாகவாவது 

நான் இருக்கத் தலைப்பட்டக்

காலங்கள் உண்டு 


ரத்தமகன்ற தனது கருவறைக்குள் பேரனைச் சுமந்த 

அந்த ரோமானியக் கிழவியைத் தேடியழைவதில் 

எனது வாழ்நாட்களை கழிக்க விரும்புகிறேன் 


அவளே 

எனக்கு ஜனனம் தந்த தாயை உயிர்த்தண்டாக 

கைய்யில் ஏந்திய

ஆதி


அவளே

என் ரோகங்களுக்கு 

மருந்து 

என் சுயத்தை

மீட்டுக்கொள்ளும் 

பாதை

ஒருக்களித்துப் படுத்துக் கொள்வதற்கான

சுதந்திரம்

அழிவின் அழிவு 

அலைதலின் தங்குமிடம்

சிற்றின்பத்தின் சாபவிமோசனம் 


சுயத்தைக் கிழிக்கும்

கூர்மைகளிடமிருந்து 

என்னைக் காக்கும் அவள்

பராபரத்தி


எண்ணப் புழுக்களின் 

நெழிவுகளை 

நெற்றிக்குள்ளிருந்து கருக்கும் 

ஆகிருதி 


தூக்கத்தின்மேல் குத்தி நின்று 

இமைகளின் மேல் படரும் 

உயிர்ப்புரு


சாரமின்மையின் மடத்தனத்தைத்   

தொக்கமெடுக்கும் 

ஊழ்கிழத்தி      


எனது சுயநினைவின் மீது 

பல்பதித்த 

நடுக்கத்தின் பொரைக்கு

கசப்பின் இன்பத்தை அவள் முலையூட்டுகிறாள்


அந்தமாதிக் காலமாய் 

அவளுக்குள் சூழமர்ந்த 

எனது அருவத்தை அவள் தலைவருடுகிறாள்

********      

                        சொரூபம்


கிழவி, நான் தந்த

இருபது ரூபாயை 

முத்தமிட்டு வணங்கினாள்

எனக்கு ஆத்திரம் பொங்கியது 

அவளிடமிருந்து அதை வெடுக்கென பிடுங்கிவிட 

முற்பட்டேன்

வேதனை நிரம்பிய

அவளது பார்வை

சாரம் இழந்த எனது விழிகளுக்குள் 

எதையோ துளாவியது


அந்தத் தாளைப் பிடுங்கி 

நாலாகக் கிழித்து

இரண்டை விழுங்கினேன்

கிழவி குழம்பிப் போனாள்

அவளது காதுகளுக்கு அருகில் ரகசியமாக 

முனுமுனுத்தேன்

நீ சுத்த முட்டாள்

நீ முதியவளும் இல்லை 

பிச்சைக்காரியும் இல்லை

நீ சொரூபம் 


தொடாதே 

எனக்கு உன் உதவி தேவையில்லை 

சாத்தான் வேடமிட்ட 

கடவுள் நீ 

உன்னை நம்புவதற்கில்லை 

உனக்கு நாக்கு இருக்கிறதா காட்டு 

எதற்கு அழுகிறாய்  

இப்போது இந்த 

இருபதுரூபாய் துண்டுகள் இரண்டையும் என்

 கண்முன்னே

நீ விழுங்குகிறாய் 


தொலைந்து போ 

என்னையாவது தொலையவிடு 

என்னைத் தேடுவதற்கு நீ யார் 


இந்தா அனைத்தையும் எடுத்துக்கொள் 

என் ஆடைகள் உனக்குப் 

பொருத்தமாக இருக்கும் நிர்வாணமாவதில் 

எனக்கு வெட்கமில்லை 

பிச்சை எடுப்பதில் 

உனக்கு வெட்கமிருக்கிறதா 

உன்னைப் பிச்சை எடுக்க வைத்த அவனுக்கு 

வெட்கமிருக்கிறதா வெட்கத்துக்கு இது காலமில்லை 


பிறப்பு சிதைந்தவளே 

என்னிடம் ஏன் வந்தாய் 

உனக்கு இருபது ரூபாய் தருவதற்காகவா நான் 

மாய்ந்து கொண்டிருக்கிறேன்

உனக்கு தவறு பிறக்கட்டும் 


பற்களை மூடு 

காட்டேரியே 

என் கழுத்தில் சுவை கண்ட உன்னை இனியும் நான் 

அஞ்சப்போவதில்லை 


உன் நெற்றிச் சுருக்கங்கள்

எனக்குள் 

ஓலமிடுகின்றன 


எனக்கு உன் முலைகளும் வேண்டாம் 

இந்த இருபது ரூபாயும் வேண்டாம் 


இந்தா வைத்துக்கொள் 

எந்த மலை உச்சிக்கு 

நீ என்னை 

அழைத்துச் சென்றாலும்

நான் உன்னை 

தூஷிக்கவே செய்வேன் 


எனக்குத் தேவை 

உனது தாலாட்டல்ல

உனது காமம் 

அழிவில்லாத உனது காமத்தை 

உனக்குள் சேமித்து 

என்னை உருவாக்கு 


வேசை 

எனக்கு அழு 

தங்குவதற்கு உன் 

அல்குலில் கொஞ்சம்

இடம் தா 

உயிருக்குத் தூக்கம் 

வரும்போது 

நான் விழித்துக் 

கொள்கிறேன் 

திருடுவது போல் நடிக்காதே 

வாழ்த்துகள் சாவதற்கு 


குடிகாரி 

சிரிக்காதே 

நீ உலைந்துபோன அசைவம் 

வயிற்றுக்குள் மரணத்தை 

ஒளித்து வைத்திருக்கும் 

பேய் நீ 


உன் பூ விழுந்த கண்களை 

எனக்குத் தந்துவிடு 


துக்கத்துக்கு ஏன் 

பாலூட்டுகிறாய் 


உருவத்தெளிவில்லாத

உன் தொடைகளில் தலைவைத்து 

தீக்குளிக்க விரும்புகிறேன் 


எதற்குள்ளாவது உனக்கு 

அழிவு இருக்கிறதா 


சாதலைக் கற்பி எனக்கு 

தரித்திரக்கோலத்தை விலக்கு 

கன்னித்தன்மைக்குத் தவழ்ந்து செல் 

ஆசிர்வதி என்னை

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு