நீலம் - சமகாலத்தில் சாதி மற்றும் பாலின அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களின் கலாச்சார மற்றும் இலக்கியம் முக்கியத்துவம் குறித்த கருத்தாடல்


Neelam: A Discourse on the Cultural and literary importance of the Oppressed based on Caste and Gender in the Contemporary

-D.Santhosh


நீலம் - சமகாலத்தில் சாதி மற்றும் பாலின அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களின் கலாச்சார மற்றும் இலக்கியம் முக்கியத்துவம் குறித்த கருத்தாடல்

(தமிழில்- த.சத்தியப்பிரியா)


     நீலம் பண்பாட்டு மையத்தின் கீழ் முளைத்து வருகின்ற நீலம் இதழ் தலித்திய நடவடிக்கைகளையும் ,  கவிஞர்களையும் , பாடகர்களையும் (கானா மற்றும் சொல்லிசை) பற்றி பேசுகிறது.  நீலம் பண்பாட்டு மையத்தின் நோக்கமானது சாதியற்ற சமுதாயத்தை உருவாக்கி அதன் மூலம் சாதி பற்றிய எண்ணத்தை அழிப்பதாகும். இது சாதிய அடக்குமுறை மற்றும் அடையாள அரசியலால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களால் தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வரும் மையமாகும். இவ்வியக்கம்  தலித் வாழ்க்கை முறை பற்றி ஓலமிடுவதோ அல்லது தலித் பாத்திரங்களை அனுதாபத்துடனோ இரக்கத்துடனோ காட்டுவதோ இல்லை. மாறாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் கருத்துப்படி தலித்திய வாழ்க்கை முறை என்பது சாதி அமைப்பு முறைகளை பற்றி கவலைப்படாத கொண்டாட்டங்களுக்கான வாழ்க்கை முறையாகும். தலித் மக்கள் பஞ்சமர்கள் அல்லது தீண்டத்தகாதவர்கள் என்றும் சதுர் வர்ணத்தில் சேராத நிலம் இல்லாதவர்கள் என்றும் கருதப்படுகின்றனர். இதனால் அவர்கள் அவர்னாஸ் அல்லது ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாக கருதப்படுகின்றனர். இக்கட்டுரை துல்லியமாக இளைஞர்களின் கருத்தாடல் /  தமிழகத்தில் நடக்கும் தலித்திய நடவடிக்கைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. கலாச்சாரம் மற்றும் இலக்கியம் ஒரு கருத்தாடலை மறுகட்டமைப்பு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது . இக்கட்டுரை சமகால இளைஞர்களின் மத்தியில் தலித்திய வாழ்க்கை முறை பற்றிய கருத்தாடல்களைப் பேசுகிறது. 


 பின்னணி: 

     இந்தியாவில் தலித்திய எழுத்துகளின் மீதான பொதுவான பார்வை என்பது தவறான கண்ணோட்டமாக உள்ளது. முடிவில் தலித்திய எழுத்துகள் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளையும் பாதிப்புகளையும் மட்டுமே பேசுவது என கருதப்படுகிறது. முன்னணி திறனாய்வாளர்களான கவி அணில் மற்றும் வித்யாதர் புன்டலிக் கருத்துப்படி “தலித்திய இலக்கியம் கற்பனைத் திறனால் எழுதப்பட்டு தலித்திய மக்களின் வலிகளை உணர வைக்கவும் இலக்கிய வெளிப்பாட்டினைக் கொணரவும் கூடியது” நிர்மல் குமார் பட்குலே மற்றும் நார்ஹர் குருண்ட்கர் “ஒரு சவர்ணாவாலும் தலித்திய இலக்கியத்தை படைக்க முடியும் மற்றும் இம்மாதிரியான இலக்கியத்தை படைப்பதற்கு எழுத்தாளரின் தீண்டத்தகாதவர் எனும் நிலை முக்கியமானது அல்ல“ என குறிப்பிட்டுள்ளனர். இவ்விதழ் முதன்மை எழுத்தாளர்கள் அல்லது தலித் அல்லாத எழுத்தாளர்கள் படைத்த தலித்திய பொருண்மையுள்ள கருத்தாடல்களை பற்றி பேசுவதால், தலித் அல்லாத எழுத்தாளர்கள் பொய்த்தன்மை / இலக்கிய அடிபணிதல் கொண்டவர்களென தலித்திய இலக்கியத்தை படைப்பதன் மூலம் கடுமையான விமர்சனத்தை கொடுத்து மற்றும் தலித் மக்களை அனுதாபத்துடனும் இரக்கத்துடனும் காட்சிப்படுத்தி உயர் கலாச்சாரம் மற்றும் கல்வி அறிவினை இல்லாமல் செய்வதை அம்பலப்படுத்துகிறது. இவ்வாறு தலித் இலக்கியம் சமூக அநீதி,  இயலாமை,  வலி மற்றும் துன்பம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை என்று பிம்பத்தை உருவாக்குகிறது.  முல்க் ராஜ் ஆனந்தின் ‘Untouchable’எனும் நாவலிருந்து “பகா”வும் மனு ஜோசப்பின் ‘serious men’ நாவலில் “ஆதி” என்னும் இரண்டு கதாபாத்திரங்களையும் எழுத்தாளர் பரிதாபமாக அனுகியுள்ளார்.சுய சரிதைஇலக்கிய வகை தலித்திய கருத்தாடல்களின் போக்கினை மாற்றியது. கே.ஏ.குணசேகரனின் சுயசரிதையான ‘வடு’ அவர் வாழ்வில் சந்தித்த சாதிய பாகுபாடுகளை வெளிப்படுத்துகிறது. 


நீலம் பண்பாட்டு மையம்:

      நீலம் பண்பாட்டு மையம் ஆவடியில் உள்ள கரலப்பாக்கம் என்னும் குக்கிராமத்தை சேர்ந்த  இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் சிந்தனையில் பிறந்ததாகும்.  பா. ரஞ்சித் அம்பேத்கர் சித்தாந்தத்தை பின்பற்றுவர் என்பதை அவர் இயக்கிய திரைப்படங்களான மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களின மூலம் அறியலாம் மற்றும் இவரைப் பொறுத்தவரையில் சமரசம் செய்து கொள்ளாதவர் என்பது இவரது படங்களின் மூலம் வெளிப்படுகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் மற்ற முற்போக்கு இயக்குனர்களைப் போல முற்போக்கு திரைப்படங்களை எடுப்பதோடு மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் இயக்குனர்களான மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை போன்றவர்களுக்கு ‘நீலம் தயாரிப்பு நிறுவனம்’ மூலம் வழி வகுத்து தான் சொன்ன சொல்லின்படி நடந்துள்ளார். இவர் திரைப்பட இயக்குனராக மட்டுமல்லாது சமூக ஆர்வலராகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார். தலித் மற்றும் தலித் அல்லாத மக்களுக்காக நீலம் பண்பாட்டு மையத்தினை இவர் தொடங்கியுள்ளார். பா.ரஞ்சித் “புகழ்பெற்றிருப்பது மட்டுமல்ல. அரசியல் ரீதியாக ஒருவரின் அடையாளத்தை நிலைநிறுத்துவதும் முக்கியம்.” என்கிறார். எடுத்துக்காட்டாக மைக்கேல் ஜாக்சனை எடுத்துக்கொண்டால் , ஆப்ரோ-அமெரிக்க மக்கள் அவரை நேசிக்கிறார்கள் மற்றும் அவரை தங்களில் ஒருவராக பார்க்கின்றனர். அவர்களை மகிழ்விப்பதைத் தாண்டி அவரது இசை செல்லவில்லை. அவரது இசை எந்த சமூக அரசியல் தலையீட்டையும் செய்யவில்லை. உண்மையில், நான் கென்ட்ரிக் லாமர் மற்றும் கேம்பினோ (டொனால்ட் க்ளோவர்) போன்ற கலைஞர்களால் ஈர்க்கப்பட்டவன். அவர்கள் இசையினால் அவர்கள் உருவாக்கும் சமூக தாக்கமே நாம் செய்ய விரும்புவதாகும் என்று கூறினார்.  கருப்பு கலை இயக்கம் பா.ரஞ்சித் அவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதால் அவர்  தலித்திய வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் வாழ்வில் சந்தித்த துன்பங்கள்,  முற்போக்குத் தலைவர்களான அம்பேத்கர், பெரியார், அயோத்திதாச பண்டிதர் போன்றவர்களை வாழ்த்தும் பாடல்களை வெளிப்படுத்தும் இசைக்குழுவை தொடங்கினார். 


Casteless collective - மார்கழியில் மக்களிசை:

       சாதியற்ற கூட்டின் உருவாக்கம் மற்றும் சித்தாந்த அடித்தளத்தினை பற்றி பேசுகிறது. அறிவு என்பவர் முக்கிய சொல்லிசைக் கலைஞர்/ பாடகர் /பாடல் எழுத்தாளர் மற்றும் சாதியற்ற கூட்டின் முக்கிய பங்காளர். அறிவு ஒரு நேர்காணலில் “கலையே மனிதனின் மனதுக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழியாகும். இதுவே அவர்களது வாழ்க்கைக் கதையை பெரிய இசைக் கச்சேரியில் அவர்கள் கேட்கும் முதல் முறையாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மையத்தின் நிறுவனரான இயக்குனர் பா. ரஞ்சித் பேசுகையில் “சாதியற்ற கூட்டு என்பது மக்களின் மத்தியில் சமத்துவத்தை உருவாக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட அரசியல் குழுவாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார். அவர்களது நிகழ்ச்சியின் போது அவர்கள் ‘quota’ என்ற தலைப்பில் பாடல்களையும் ஜெய் பீம் வாழ்க்கையையும் இசைத்துப் பாடினர். அவரது புகழ்பெற்ற பாடலான ‘“எஞ்சாயி எஞ்சாமி” என்னும் பாடல் வரலாறு மற்றும் கலாச்சார வேர்களை பாடலின் தொடக்கத்திலேயே பறை இசை மூலம் பேசி உள்நாட்டு நிலமற்ற தொழிலாளர்கள் தொழிலாளி என்பதற்கான மரியாதையை இழந்து தாய்நாட்டின் மீதான பற்றுடன் கேள்விக்குரிய பொருள் முதல்வாத வாழ்க்கை வாழ்வதை வெளிப்படுத்துகிறது. அறிவு “எனது நோக்கம் யாரையும் ஆறுதல்படுத்துவது அல்ல, தொந்தரவு செய்வதே” எனக் கூறியுள்ளார். மார்கழியில் மக்களிசை என்பது கருப்பு கலாச்சார எதிர்ப்பின் தாக்கத்தினால் உருவானதாகும். ஒவ்வொரு வருடமும் இந்நிகழ்ச்சி தமிழ் மாதமான மார்கழியில் (திசம்பர் 17 - சனவரி 14) நடத்தப்படுகிறது. இந்த மாதத்திலேயே பார்ப்பன கச்சேரிகள் - கர்நாடக இசை நிகழ்ச்சிகள் சாதிய அடிப்படையில் விலக்காக இருப்பதற்காக அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. மக்களிசை (மக்களின் திருவிழா) இதற்கு எதிரானதாகும். கானா இசைவாணி beef song என்னும் உணவு அரசியலை பேசும் பாடலுக்காகவும், ‘I am sorry ayyapa என்னும் சபரிமலைக்குள் பெண்கள் செல்லும் சர்ச்சைக்குரிய அரசியலைப் பேசும் பாடலுக்காகவும் புகழ் பெற்ற கானா பாடகி ஆவார். கானா இசைவாணியே 2020ல் அவரது சாதனைகளுக்காக ‘பிபிசி 100 பெண்கள் விருது’ பெற்ற முதல் கானா பாடகி ஆவார். 8 வருட இடைவெளிக்குப் பின்பு முதல் தமிழ் பெண்ணாக மதிப்புமிக்க பெண்கள் சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றார். ஒரு நேர்காணலில் அவர் “கர்நாடக இசை எனக்கு என்னுடைய திறமைகளை வெளிப்படுத்தவும் காட்சிப்படுத்தவும் வாய்ப்பினைத் தரவில்லை. சாதியற்ற கூட்டே ஒரு கானா பாடகியாக என்னை மேடையில் இசை கச்சேரி நடத்த இடம் அளித்தது. எனவே கானா பாடுவதும் அல்லது பிறவகை இசையைப் பாடுவதும் எனது உரிமை” எனக் குறிப்பிட்டுள்ளார். இசைத் திருவிழாவின் பெரிய பரப்பு அல்லது நோக்கம் என்பது சாதி அடிப்படையிலான அடையாளத்துடன் பார்க்கப்படுகின்ற கலைஞர்களை மேடை ஏற்றுவதன் மூலம் அவர்களது கலாச்சார அடையாளத்தை வலியுறுத்துவதாகும். பறை போன்ற இசைக்கருவிகள், நாட்டுப்புற பாடல்களான ஒப்பாரி போன்றவை ஒடுக்கப்பட்டவர்களின் கலாச்சாரத்தை புத்துயர் பெறச் செய்கின்றது. பார்ப்பன கச்சேரி கலைஞர்களைப் போல் மேல் சட்டை அணியாமல் இக்கலைஞர்கள் கச்சேரி நடத்துவதில்லை. கச்சேரி நடத்தும் ஒவ்வொரு கலைஞர்களும் சுயமரியாதை,  சுய கண்ணியம்,  எதிர்ப்பை வெளிப்படுத்தும் மேலங்கி (நீலம்) அணிந்துள்ளனர்.  இந்த ஆடை அம்பேத்கரின் தத்துவங்களையும் , எண்ணங்களையும் வெளிப்படுத்துவதாகவும், வலியுறுத்துவதாகவும் உள்ளது. 


கூகை திரைப்பட இயக்கம் - நீலம் பதிப்பகம்: 

       தலித்திய மக்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறையை பற்றி பேசப்படுகிறது. கூகை என்பது திரைப்படம் சார்ந்த இலக்கியங்களை படைப்பதற்கான இயக்குனர்களை அறிமுகப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட நூலகம். “உதவி இயக்குனர்கள் பொதுவாக நூல்களை வாங்குவதற்கும் படிப்பதற்குமான பணத்தை வைத்திருப்பதில்லை” என மந்திரன் குறிப்பிடுகிறார். அவர் “பாலின சமத்துவமின்மை மற்றும் மதம் ஆகியவையே இன்றைய காலத்தில் குறிப்பிடத்தகுந்த சிக்கல்களாகும். இவையே அடிக்கடி திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகின்றது. நாங்கள் எதிர்கால இயக்குனர்கள் முற்போக்கு சிந்தனைகளை நேர்மறை விவாதங்களின் மூலம் சித்தரிக்க விரும்புகிறோம். தமிழில் நிறைய திரைப்படங்கள் சாதிய பெருமை, பெண்ணிய அடக்குமுறை போன்றவற்றை சித்தரித்துள்ளன. இது போன்ற சிக்கலுக்குரிய கருவை மாற்றி திரைப்படமாக்க விரும்புகிறோம்” என கூறுகிறார்.  கூகை திரைப்பட இயக்கமானது மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை, கவின் அந்தோணி, முருகன் மந்திரன் போன்ற இளம் இயக்குனர்களை உருவாக்கியுள்ளது. இத்திரைப்பட இயக்கமானது திரைப்படங்களுக்கும் இயக்குனர்களுக்கும் மட்டுமின்றி வளர்ந்து வருகின்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள்,  ஆய்வாளர்களுக்கும் வழிவகுக்கிறது. இது நீலம் பண்பாட்டு மையத்தின் சித்தாந்தம் பற்றிய தெளிவினை சமுதாய சேர்ப்பினை  கொடுக்கிறது. எழுத்தாளர்/ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் இந்த மேடையை அயோத்திதாசரின் புரட்சிகரமான எண்ணங்களின் மூலமாக தலித்திய வாழ்க்கை முறை மற்றும் தலித்திய வாழ்க்கையில் பௌத்த மதத்தின் பங்கு போன்றவற்றின் மீதான தனது கருத்தை வெளிப்படுத்த பயன்படுத்திக் கொண்டார். புனைவுகள், புனைவுகள் அல்லாதவை, கட்டுரைகள், ஆய்வு கட்டுரைகள் போன்ற அனைத்திலும் நீலம் பதிப்பகத்தின் தெரிந்த முகமாக இவர் உருவாகியுள்ளார். நீலம் பதிப்பகம் தலித்திய எழுத்தாளர்கள்,  கவிஞர்கள், தமிழ்ப்பிரபா, வெயில்  போன்ற சிறுகதை எழுத்தாளர்கள் போன்றவர்களை அவர்களது படைப்புகளை பதிப்பிக்க ஊக்கமளிக்கிறது. மௌனன் யாத்ரிகாவின்  “எருமை மறம்” என்பது நீலம் பதிப்பகத்தின் அண்மைக்கால படைப்பாகும். முனைவர் ராஜ்குமார் “தலித் எழுத்துக்களானது சமுதாய நடைமுறைகளை ஏற்றுக் கொள்ளாததாக கருதப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். விடுதலை சிகப்பி என்னும் விக்னேஸ்வரன் அவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘எரிசோறு’ என்னும் அண்மைக்கால  பதிப்பின் மூலம் புகழ்பெற்ற கவிஞராக உருவாகியுள்ளார். இவரது கவிதைகள் எதார்த்தமாகவும் புராண கதாபாத்திரங்கள் மூலம் விளக்கப்பட்டும் உள்ளது. நீலம் பண்பாட்டு மையத்தால் நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் இவர் நினைவுபடுத்தி பேசிய நையாண்டித்தனமான கவிதை இந்து மக்களின் நம்பிக்கைகளை காயப்படுத்துவதாக உள்ளதென இவர் மீது வலதுசாரி பாரத் இந்து முன்னணியினாரல் ஒரு குற்ற வழக்கு சாட்டப்பட்டுள்ளது. அக்கவிதை (மார்கழி மரணம்)  கையால் துப்புரவு செய்தல் பற்றிய வர்ணனைகளையும் புராண கதாபாத்திரங்களான இராமர், இலட்சுமணர், அனுமன் மற்றும் சீதா பற்றிய கதாபாத்திரங்களை கொண்டதாகவும் உள்ளது. இவரது கவிதைத் தொகுப்பு ஆணவ கொலைகளையும்,உணவு அரசியலையும், தலித்திய பெண்ணியத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது. இவரது கவிதைகள் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு கவிஞர் சாதிய அடிப்படையிலான கலவரங்களால் பாதிக்கப்பட்ட சிவகங்கையைச் சேர்ந்தவர் என்பதால் பெரும்பாலான வாசகர்களால் கொண்டாடப்படுகிறது. இவரது மற்றுமொரு கவிதையான ‘பேரன்புக்காரி’யில் ஆணவக் கொலையைப் பற்றி நேர்மறையான விதத்தில் ஆணவம் என்பதை அழிக்கும் உவமைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேல்சாதியை சேர்ந்த பெண் தலித் சமூகத்தை சேர்ந்த மனிதனை காதலிப்பதாக கவிதை அமைந்துள்ளது. அப்பெண் தன் காதலனிடம் “கவனமாக இரு அவர்கள் எப்போது வேண்டுமானாலும் உன்னை தாக்கலாம்” என்று அழுவதாகவும் அந்த ஆண் பெண்ணுடன் ஓடிச்சென்றால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி (அவர்களது உடல் சாம்பலாக சிதைக்கப்படும்) சிந்திப்பதாகவும், அந்த பெண் கிராமத்திற்குத் திரும்பும் வழியில் அரளி விதைகளை சேமித்து அதை ஆடுக்கல்லில் போட்டுவிட்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாயில் நுரை தள்ள இறந்த பிறகு பேரன்புக்காரி பெருமையுடனும், வெறுப்புடனும் அமர்ந்திருப்பதாக கவிதையை அமைத்துள்ளார். சிகப்பி அவரது கவிதைகளில் தலித்திய மக்களின் மத்தியில் நேர்மறை எண்ணங்களை விதைக்கும் விதத்தில் எல்லைக்குட்பட்ட மக்கள் மற்றும் அவர்களின் மேல்ஜாதி மக்களால் பின்பற்றப்படும் சமுதாய எதிரிகள் மீதான பதட்டம் பற்றிய பார்வைகளை விளக்கியிருப்பார். 


அவளது ஒவ்வொரு மூச்சும் அவனது பெயரை காதலுடன் சொல்லும் ஆனால் கிராமத்து மக்கள் ஒன்றாக இணைந்து அவளது தலையை வெட்ட முடிவெடுக்கின்றனர். அவளது தலை சிதைக்கப்பட்டதால் உருண்டோடியது. அவளது நாக்கு அவனின் பெயரை உச்சரித்தது. கும்பலால் / கிராமத்து மக்களால் கை நிறைய கல் உப்பு அவளது கொலையின் போது தெறித்த இரத்தத்தின் மீது தூவப்பட்டது.(ஆணவ கொலை). இவரின் பெரும்பாலான கவிதைகள் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. 


        இவரது கவிதைகளின் மூலம் இன்றைய தலித்திய மக்கள் மத்தியில் நேர்மறை சிந்தனையின் முக்கியத்துவத்தை தெரிவிப்பதை உணர்ந்து கொள்ளலாம்.  இவர், இவர் அல்லது இவரது மக்கள் சாதிய பின்புலத்தின் காரணமாக சந்தித்த உண்மை சம்பவங்களை எழுத தயங்கியதே இல்லை. இவரது முதல் கவிதையில் சகோதரத்துவத்தைக் கலைக்கும் சமுதாய ஒப்பந்தமாக சாதியைக் குறிப்பிடுகிறார். மேலும், இவர் (ஒடுக்கபட்டவர்) சவர்ன ஹிந்துவில் சேர்ந்தவர் அல்ல என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இவரது “முகநூல் நண்பன்” கவிதையானது“ இலங்கை தமிழன் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, தெருக்களில் விளையாடும் போது விமானத்தின் ஒலியைக் கேட்டு வேகமாக குழப்பத்துடன் ஒளிந்து கொள்வோம் என்று கூறியதாகவும், அதற்கு நான் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது கிணற்றில் குளித்து கொண்டிருக்கும் போது, மேல் ஜாதிக்காரனின் மிதிவண்டி ஒலியைக் கேட்டு, உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடுவோம் என்று கூறினேன்” என்பதாக அமைந்துள்ளது. 


முடிவு:

            முனைவர் ராஜ்குமார் “தலித் என்பது அரசியல் குறியீடு மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் சேரிகளும் வேற்றுமைகளைக் கொண்ட சேரிகள் என அறியப்படுவதாகவும்” கூறுகிறார்.  அதே நேரத்தில், லெல்லா கருண்யகரா “தலித் என்பது ஒரு அடையாளம். நேர்மறை அடையாளம் மட்டுமே தலித்திய விடுதலைக்கான முதல் படியாகும்.” என்கிறார். இதிலிருந்து சகோதரத்துவம் சாதி, வகுப்பு, பாலினம், இனம், நிறம் போன்ற அனைத்தையும் கடந்து பூத்து சாதியற்ற சமுதாயத்தை உருவாக்கும். நீலம் பண்பாட்டு மையம் கலாச்சார மற்றும் இலக்கிய புத்துணர்ச்சியூட்டி, ஒடுக்கப்பட்டவர்களின் மேம்பட்ட நேர்மறை அடையாளத்தை ஒரு கையில் அமைப்பதாகவும் மற்றும் கற்பித்து அல்லது தமிழ்நாட்டிலுள்ள ஒருவரது உடை, மொழி, உணவு மற்றும் சாதி போன்ற அடையாளத்தால் கலங்கபடுத்தப்பட்டுள்ள  சவர்ண ஹிந்துக்களின் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் உள்ளது. மார்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற உரை ஒன்றில் “எனக்கு ஒரு கனவு உள்ளது ஒரு நாள் ஜார்ஜியாவின் சிகப்பு மலைகளில் முன்னாள் அடிமைகளின் மகன்களும், முன்னாள் அடிமை முதலாளிகளின் மகன்களும் சகோதரத்துவம் என்னும் நாற்காலியில் ஒன்றாக அமர்வர்” என்று குறிப்பிடுகிறார்.


துணைக் குறிப்புகள்:


  • கருண்யகரா, லெல்லா. தலித் முதல் பவித்ர தலித் வரையிலான அடையாள வரலாறு , டால்விஸ் பதிப்பகம் 2018.


  • சிகப்பி, விடுதலை. எரிசொறு , நீலம் பதிப்பகம் 2023.


  • மார்ட்டின் லூதர் கிங் ‘எனக்கு ஒரு கனவு உள்ளது: உலகை மாற்றிய எழுத்துகள் மற்றும் உரைகள், ஹார்பர் ஒன் பதிப்பகம் , 1992.


  • https://thewire.in/caste/debate-how-babasaheb-ambedkar-rejected-the-word-dalit


  • https://www.theguardian.com/music/2020/sep/07/we-will-bring-change-the-indian-band-shaking-a-cruel-caste-system


  • https://thewire.in/caste/what-arivus-enjoy-enjaami-tells-us-about-the-cultural-resistance-to-caste


  • https://scroll.in/reel/921668/this-chennai-library-is-helping-aspiring-tamil-filmmakers-through-books-and-conversations


  • https://www.huffpost.com/archive/in/entry/pa-ranjith-is-the-conscience-the-indian-film-industry-desperately-needed_in_5d15f040e4b03d61163a12a5


  • https://www.youtube.com/watch?v=1IpWB7h1Dc  கானா பாடகி இசைவாணி அவரது துன்பங்களை பகிர்ந்து கொண்ட நேர்காணல்


  • https://www.youtube.com/watch?v=yCX_x8eVSvM சாதியற்ற கூட்டு தொடங்கப்பட்டது பற்றிய ஆவணம்


  • https://www.youtube.com/watch?v=AFtfOq9l1tA இந்தியாவில் தலித் இலக்கியம் பற்றிய கருத்தாடல் , முனைவர் ராஜ்குமார். 

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு