நவீனக் கவிதைகளில் தந்தைகள் – பகுதி I
-தமிழ்மணி
நெகிழனின் கவிதைகளில் இரண்டு தந்தைகள் இருக்கிறார்கள். ஒருவர் கவிஞருக்குள்ளிருக்கும் தந்தை, இன்னொருவர் கவிஞருக்கு எதிர்நிலையில் இருக்கும் தந்தை. முதலில் அவரது முதல் தொகுப்பான பூஜ்ய விலாசத்தில் ‘அவுட்’ என்ற கவிதையைப் பற்றிப் பார்க்கலாம். அக்கவிதையில் மகளுடன் ஒளிந்துவிளையாடும் கண்ணாமூச்சி ஆட்டம் வழியாக தந்தையானவர் வாழ்வின் தோல்வியை வெளிப்படுத்துகிறார். இது கவிஞர் கொண்டிருக்கும் தந்தைமையிலிருந்து தோன்றிய கவிதை.
அவுட்
ஒளிந்துகொள்ள இடம் தேடும் வாழ்வில்
ஒளிந்துகொள்ள நிர்பந்திக்கும்
பிள்ளைகளுடனான கண்ணாமூச்சி
சுவாரசியம் நிறைந்தது
மகள்
கண்களைப் பொத்திக்கொண்டு
எண்களை முணுமுணுத்தாள்
எண் ஐந்தின்போது
ஒரு திரைக்குப் பின்னாள் ஒளிந்தேன்
சிமிட்டி அலையும் பிஞ்சு விழிகள்
தேடலை அறிந்திராதவை
இரக்கச் சுரப்பில் தடித்த என் தொண்டை
குன்றத்திலிருந்து புரளும் தகர டின்னைப்போல
ஒலி எழுப்பியபோது
மகள் கத்தினாள்
அப்பா நீ அவுட்
ஆமாம் கண்ணே
வாழ்வின் எல்லா ஆட்டங்களிலும்.
இதே தொகுப்பில் ‘அம்மாவின் சிறகுகள்’ கவிதையில் தான் எதிர்கொண்ட / கவனித்த தந்தையின் சித்திரத்தினை காட்சிப்படுத்தியிருப்பார். இந்தத் தந்தை தாய்க்கு துயரம் விளைவிப்பவராக / கொடுமைக்காரராக இருப்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இக்கவிதையில் கவிஞர்(மகன்) ஒரு பார்வையாளன் மட்டுமே. மேலும் இது தாயின் பாட்டினை பேசுகிறது.
அம்மாவின் சிறகுகள்
திருமணத்திற்கு முன்
அம்மாவுக்கு சிறகுகள் இருந்தன என்பது
பாட்டி சொல்லித்தான் தெரியும்
அவள் ஊர்ர்க்குருவிகளோடு பறந்து
அத்தனை மரங்களையும் கண்டிருக்கிறாள்
மரங்கள் தீர்ந்துவிட்டிருந்த ஒருநாளில்தான்
அப்பாவை மணக்க ஒப்புக்கொண்டாள்
அப்பாவுக்கு
கோழி இறகால் காது குடையும் பழக்கம்
சிறுவயதிலிருந்தே இருந்தது
வீட்டிலிருந்த கோழிகள் சீக்கு வந்து
ஒன்றன்பின் ஒன்றாக இறந்துபோகவே
அப்பா
அம்மாவின் சிறகிலிருந்து ஒரு இறகை
வெடுக்கெனப் பிடுங்கினார்
ரத்தம் சொட்டச் சொட்ட
அம்மா அப்படியே சுருண்டு விழுந்தாள்
காது குறுகுறுக்கும்போதெல்லாம்
அப்பாவின் விரல்கள்
அம்மாவின் சிறகை நோக்கி நகர்ந்தன
இப்போதும்
அம்மா குளியலறை போகும்போது
இறகுகள் இருந்ததற்கு சாட்சியாய் விளங்கும்
வடுக்களைத் தடவிக்கொண்டு
ஊமை அழுவாச்சி அழுகிறாள்.
இரண்டாவது தொகுப்பான ‘மூன்று சப்பாத்துக்களின் கதை’யில் தந்தை மீதான அதிருப்தியை சிறு வயதிலிருந்து அனுபவித்த மகனின் குரலாக கவிதை ஒலிக்கும். முந்தையத் தொகுப்பில் அம்மாவின் சிறகுகள் கவிதையில் வரக்கூடிய தந்தைக்கு பதிலளிப்பதாகவும் கொள்ளலாம்.
கூரை கூம்பிலமர்ந்து
கரைகிறது காகம்.
விருந்தாளி வரப்போவதாக மனைவியும்
பசிக்குக் கத்துகிறதென்று மகளும் கூற
கண மெளனத்துக்குப் பின்
பெருமூச்செறிந்தவாறு அம்மா சொன்னாள்,
அது உன் அப்பா.
அன்றிலிருந்து
என் கைகளில் வந்தமர்ந்து
பறந்து செல்ல துவங்கிற்று
ஒரு கல்.
பொக்கை வாய் எனும் மூன்றாவது தொகுப்பில், முதல் தொகுப்பிலிருக்கும் அவுட் கவிதையை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரும் பாணியிலான கவிதை இடம்பெற்றிருக்கிறது. வாழ்வை தகவமைத்துக்கொள்ளும் பாதையில் ஒருவன் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான சுழற்சிக்குள் தலை நுழைத்து அவதியுறுகிறான். இம்மாதிரியான சூழலிலிருந்து வெடித்துக் கிளம்புவதாய் இக்கவிதைகள் என்னளவில் தோன்றுகின்றன.
அப்பா என்றெழுதி
கண்ணீரால் கிரீடம் வரைந்த மகளுக்கு
எனது பற்களைக் கோத்து
பாசி மாலையெனத் தந்து
ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறேன்
மகளுக்கு பிடிக்காதென்றாலும்
வாழ்க்கைக்குப் பிடிக்கும்
என்னைப் பொக்கை வாயோடு பார்ப்பது.
தந்தையைப் பற்றிய நெகிழனின் கவிதைகளில் தனக்குள் இருக்கும் தந்தையை அதிகம் வெளிப்படுத்துகிறார். அந்த தந்தைக்கு வாழ்வு அழுத்தங்களும் கசப்புகளும் நிறைந்ததாகவே இருக்கிறது. தாய், மனைவி, மகள் எனும் மூன்று பெண்களின் வழியாக நெகிழனின் தந்தைமை கட்டமைக்கப்பட்டுள்ளது. தான் எதிர்கொண்ட தந்தையை வருத்துபவராக காட்சிப்படுத்துகிறார். அம்மாவின் சிறகுகள் கவிதையில் தாய்-தந்தை உறவின் விரிசலை சிறுபிரயாயத்திலிருந்து கண்ணுறும் மகனுக்கு அதன் பாதிப்பு வளர்ந்த பின்னரும் துரத்துகிறது. மேலும் தந்தையை நேரடியாக எதிர்கொள்வது சிக்கலாக இருக்கிறது (அ) அப்படிப்பட்ட தருணம் அமையாமல் போயிருக்கலாம். குறிப்பாக, தந்தையை எதிர்க்கும் கவிதையில் தந்தையின் இருப்பு இருக்காது. தந்தைக்கு பதிலீடாக அங்கு நெகிழன் வைப்பது காக்கையை.
*******
வே.நி.சூர்யாவின் ‘கரப்பானியம்’ பிரதியில் தந்தை சார்ந்த கவிதைகளானது தனக்கு எதிர்நிலையில் இருக்கும் தந்தையைப் பற்றியது மட்டுமே. அந்தத் தந்தையை தனக்குள் ஊரும் பூரான் கொலை செய்யச் சொல்கிறது என்று ‘நான்’ தலைப்பிட்ட கவிதையில் வெளிப்படுத்துகிறார்.
எனக்கு ஏழு பூரான்களைத் தெரியும்
.................... .............. ...................
இரண்டாவது திரும்பத் திரும்ப அப்பாவை கொலைசெய்யச் சொல்வது
................... ............. .....................
(பக்.22)
தந்தையை எதிர்ப்பதில், எதிர் கருத்து வைப்பதில் மகன்களுக்கு அச்சமும், சங்கடங்களும் உண்டு. அதனை அவர்கள் தங்களுக்கேற்ற வகைகளில் செய்துகொள்கிறார்கள். அதிகாரம் கைக்கு மாறும்போது அந்தப் பாத்திரைத்தை மகன்கள் ஏற்பார்கள். ‘மறுரூபம்’ கவிதையில் கவிதை சொல்லி தந்தையை எதிர்க்கிறார். இதில் அதிகாரமாற்றமெல்லாம் கிடையாது. தொந்தரவின் வெளிப்பாடாய் கிளம்புகிற எதிர்ப்பே பிரதானமாகிறது.
மறுரூபம்
அவ்வப்போது அப்பா
அட்டைப்பூச்சியாக உருமாறுவார்
அன்றைய தினங்களில்
கண்ணில்படும் யாவற்றிலும்
ஒட்டிக்கொள்வது அவர் வழக்கம்
அப்பொழுதெலாம் வழமைக்கு
திரும்புகளென்று
அம்மா திரும்பத் திரும்ப சொல்லிப்பார்ப்பாள்
தகவலறிந்து என் சகோதரன்
அட்டைப்பூச்சிக்கான
தலையணையையும் போர்வையையும்
துரித அஞ்சலில் அனுப்பி வைப்பான்
இதுவரை சந்தோஷம் சஞ்சலம் என
எதன்யெதன் மீதெல்லாமோ
ஒட்டிக்கொண்டிருந்தார்
பொறுமையில்லாத நான் பொறுத்துக்கொண்டேன்
சகித்துக்கொண்டேன்
ஆனால் இன்று இந்நாளின் மீது
ஒட்டிக்கொண்டிருப்பதை
சகித்துக்கொள்ள இயலவில்லை
உயர்ந்த குரலில்,
சற்று நகருங்கள்
நான் மறுநாளுக்கு செல்ல வேண்டாமா எனக் கேட்டேன்
பதிலுக்கு உன் இதயத்தில்
ஒட்டிக்கொள்ளவாயென கேட்கிறார் அவர்.
அட்டைப் பூச்சியின் தன்மை இரத்தம் உறிவது. இது எல்லா வகையான அட்டைகளுக்கும் பொருந்தாது. இக்கவிதையில் அப்பாவை அட்டைப் பூச்சியென உவமைப் படுத்தியிருப்பதிலிருந்து அவர் தொடர்ந்து மகன்களை உறிஞ்சிக்கொண்டே / சுரண்டிக்கொண்டே இருக்கிறார் என்று புரிந்துகொள்ளலாம். அதனாலேயே கொதிப்பு நிலை அடைந்த மகன் தந்தைக்கு எதிராய் ஒரு சொல்லை உதிர்க்கிறான். ஆனால் தந்தை அதற்கு சளைத்தவர் இல்லை என்பது உன் இதயத்தில் ஒட்டிக்கொள்ளவாயென அவர் கேட்பதிலிருந்து தெரிய வருகிறது. தந்தை ஒட்டுண்ணியாய் பீடித்திருப்பது மகனுக்கு ஒவ்வாமை அளிக்கிறது. தந்தையின் கண்காணிப்பு நிழலிலிருந்து தப்பித்து ஓடவே விரும்புகிறான்.
மேல்சொன்ன கவிதையின் சாரத்துடன் ‘அப்பாவின் நாள்’ என்கிற இன்னொரு கவிதை உள்ளது.
அப்பாவின் நாள்
இப்போது நீலப்படத்தில் லயித்திருக்கும் அப்பா அடுத்து என்ன செய்வார்
தன்னைப் பார்த்துவிட்ட என்னை உதைக்கலாம்
அல்லது
அருவெறுப்பூட்டும் பெண்ணான குற்றவுணர்ச்சியைக் கட்டியணைக்கலாம்
ஆனால் எனக்கு தெரியாது
எப்போதும் ஊகிக்கயியலாதவரான அப்பா
எப்போதும் ஊகிக்கயியலாத காரியங்களை செய்கிறார்
வீட்டை சிறையாக்குவதில் வித்தகரான அப்பா
கெட்ட வார்த்தைகளில் கடவுள் உட்பட எல்லோரையும் திட்டுகிறார்
விளக்கேற்றப்படும் நாட்களில் மட்டும் குடிக்கும் அவர்
ஒரு மரத்தைப் போல ரோட்டில் சரிந்து கிடப்பதுண்டு
அப்போதெல்லாம் நாய் குதறி தவறிவிடக்கூடாதென்ற
கருணையில் மட்டும்
அவரை வீட்டுக்கிழுத்து வருவேன்
இல்லத்தில் கழியும் ஒவ்வொரு இரவிலும்
எனக்கும் அப்பாவுக்கும் இடையில் என் அம்மாவை அழவைக்கக்கூடிய
ஒரு கத்தி துடித்துக் கொண்டிருக்கும்.
மற்ற இரு கவிதைகளிலும் தந்தையின் மீது அளவுகடந்த கோபம் வெளிப்படுகிறது. ‘நான்’ கவிதையில் கொல்லவும் துணிகிறது. அத்தன்மை இக்கவிதையில் சற்று தணிந்துள்ளது. தந்தை குடித்துவிட்டு சாலையில் கிடக்கையில் நாய் குதறிவிடக்கூடாதென்று வீட்டிற்கு இழுத்து வருவதான கருணை கவிதைக்குள் எழுந்துள்ளது. அப்படி எழுந்தாலும் வாய்ப்புக் கிடைத்தால் கத்தி வீசுவதற்கான மனநிலையில் இருப்பதையும் கவிதை வெளிப்படுத்துகிறது. தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இருக்கக்கூடிய வெளியை நிரப்புவது தாய்தான். இருவருக்குமிடையில் அவள் ஊடாடுகிறாள். அவளை அழவைக்கக்கூடிய கத்தி அவர்களின் இடையில் சுழன்று கொண்டிருக்கிறது. அவள் அங்கு இல்லையென்றால் கத்தி தன்னுடைய வேலையை செய்திருக்க வாய்ப்பு அமைந்திருக்கலாம்.
சூர்யாவின் இந்தக் கவிதை மூலம் நெகிழனின் பொக்கை வாய் தொகுப்பில் உள்ள ஒரு கவிதையை தொடர்புபடுத்த முடிகிறது.
“கோபத்தில்
அவள் வீசியெறிந்த தாலிக் கயிறு
வந்து விழுந்தது
எனக்கும் மகளுக்குமிடையே
மகள் எனை நோக்கியோ
நான் மகளை நோக்கியோ
எப்போதெல்லாம்
எட்டு வைக்கிறோமோ
அப்போதெல்லாம்
பிளந்த வாயோடு
சீறுகிறது
அம் மஞ்சள் நிறப் பாம்பு.” (பொக்கை வாய், பக்.23)
சூர்யாவின் கவிதையில் தந்தை – மகனுக்கிடையே கத்தி இருக்கிறது. இங்கு தந்தை – மகளுக்கு இடையே மஞ்சள் நிறப் பாம்பு (தாலி) இருக்கிறது. முன்னது இருவருக்குமிடையேயான முரண். பின்னது கணவன் – மனைவிக்கு இடையேயான முரணால் தந்தைக்கும் மகளுக்குமான உறவு தொடர்பறுப்பு. முன்னதில் தந்தைக்கும் மகனுக்கும் ஊடாக தாய் பாலமாக (அ) அசாம்பிவிதம் ஏற்படாமல் தடுக்கும் தூணாக அமைகிறார். பின்னதில் தந்தைக்கும் மகளுக்குமான அன்பை நெருங்கச் செல்லவிடாமல் தாய்(மனைவி) தடுக்கிறாள்.
(தொடரும்)
Comments
Post a Comment