ராம்: இயக்குநர் வேடமணிந்த இலக்கியவாதி - தீனன்

 ராம்: இயக்குநர் வேடமணிந்த இலக்கியவாதி - தீனன்


          கற்றது தமிழ் படத்தைப் பார்த்தது தொடங்கி ராமின் ரசிகனாகிப் போனேன். என்னை இதன் முன்னும் இனியெப்போதும் அவருக்கு ரசிகனாக்கிட அது ஒன்றே போதுமானதாகும். ராமுக்கு அப்படி பலர் உண்டு. சினிமாவில் தமக்கென புது பாணியை உருவாக்கி செயல்படுவோர் Auteur அந்தஸ்தைப் பெறுகின்றனர். ஏனையோர் sturcture இல் சிக்கிய இயக்குநர்கள் மட்டுமே. இந்த இடத்திலேயே ஒரு உடைப்பு நிகழ்கிறது. கட்டமைப்பை உடைக்கும்போதே கலைஞன் உருவாகிறான். இல்லையெனில் அவன் அந்தக் கட்டமைப்பில் ஒரு ஊழியனே. அதேநேரம் ஒரு கலைஞனின் பிரசவம் முழுமையான உடைப்பின் மூலம் மட்டுமே நிகழ்வது இல்லை. இலக்கியத்தில் அது அதன் முழுமையான அளவில் சாத்தியமாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏனையவை கட்டமைப்பின் பாற்பட்டதே. இசைக்கு கட்டமைப்பு தேவை, அதுபோலவே சினிமாவுக்கும். ஆனால் மலை இடுக்குகளை ஊடுருவிச் சல்லடையாக வெளிப்படும் சூரிய ரேகைகள் போல கட்டமைப்பில் இருந்து வெளிப்பாடடைய தம் இறுதி வரை முயலும், அதற்காகத் தன்னையே இழக்கத் தயாராக இருக்கும் கலைஞர்கள் இங்கு சொற்ப பேர் உண்டு. அவ்வாறான கலைஞனாக நான் ராமைப் பார்க்கிறேன். ராமைப் பேசும்போது அறச்சீற்றம், தார்மீக கோபம் போன்ற வார்த்தையாடல்களைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. எல்லாம் சரியான ஒழுங்கில் இருப்பதான சமூகத்தின் பொய் பிம்பத்தை வன்முறை கொண்டு உடைக்க எத்தனித்த அவரின் கோபத்துடன் எளிதாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது.

       சிறு வயதில் இருந்தே ஒரு படத்தைப் பார்த்தால் அதன் நாயகனே அந்தப் படத்தின் மொத்தமுமாக அந்தப் படம் நம்மை உணரச் செய்யும். மொத்தத்திற்குமான உருவமாக அதன் நாயகனே இருப்பான். ஆனால் ‘கற்றது தமிழ்’ல் அந்த நாயகனை ரத்தமும் சதையுமாக கிழித்துக்கொண்டு அவனைப் படைத்த இயக்குநர் வெளிவரத் துடிப்பதை உணர முடிந்தது. தமிழில் பாலா, மணிரத்னம், மிஷ்கின் போன்றோர் தமக்கென தனி பாணி வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் படத்தைத் தாண்டி அவர்களை ஒரு நாயகர்களாக நாம் ஏற்றுக்கொள்வதில் நெருடல் இருக்கிறது. அவர்கள் சமூகப் பிரச்சனைகளைப் பேசும்போது அந்தப் படைப்புகள் போற்றத்தக்கவையாக அமைந்து அதனுடன் நம்மைத் தொடர்புபடுத்திக்கொள்ளலாம். வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்றோரின் படைப்புகளும் அப்படியே. ஆனால் படைப்பைத் தாண்டி அந்தப் படைப்பாளியை அவனின் முழு தார்மீகத்துடன் எலும்பும் சதையுமாக ஏற்றுக்கொள்வது எந்த அளவு சாத்தியமாகியுள்ளது எனத் தெரியவில்லை. ஆனால் ராமை ஒரு நாயகனாக ஏற்றுக்கொள்ள முடிகிறது. தமிழ் சினிமாவில் வேறு எவரையும் விட ராமை அப்படிச் சிந்திக்க முடிகிறது. ஒருவேளை இது அவரின் படைப்பின் பாணியால் ஏற்பட்டதாக இருக்கலாம். சினிமாவில் கேரக்டர் ஸ்டடி என்ற வகைமை உண்டு. அது தமிழ் சினிமாவில் குறைவாக இருப்பதாக நான் உணர்கிறேன். கமலின் சில முயற்சிகளை மட்டுமே என்னால் நினைவுகூர முடிகிறது. நாயகனைக் கட்டமைப்பில் நிறுத்தி அவனைச் சுற்றி மாந்தர்களை உலவ விட்டு அதில் ஏற்படும் வெவ்வேறான சலனங்களைக் கதைகளாக புனைவது ஒரு வகை. மாறாக கேரக்டர் ஸ்டடி என்பது நாயகனுக்குள் நிகழும் எண்ண மோதல்களைப் பிரதானப்படுத்துகிறது. சில நேரம் அவனைச் சுற்றிய சலனங்களால் அவனுக்குள் இந்தப் போராட்டம் நிகழலாம். சிலநேரம் அவனுக்குள் நிகழும் இந்த போராட்டத்தால் அவனைச் சுற்றிய சலனங்கள் நிகழும். 

      ‘கற்றது தமிழ்’ல் முதலில் அவனைச் சுற்றிய சலனங்களால் அவனுக்குள் மண்டியிருந்த சீற்றத்தின் திரி தீப்பற்றிட அவன் கொலை புரியும் மிருகமாகிறான், அல்லது அவன் உணர்வு நிலையில் நின்று சொல்ல வேண்டுமென்றால் அவன் தெய்வமாகிறான். மனிதனால் ஆகாதெனினும் தெய்வத்தின் நிலையினின்று எதுவும் செய்யலாம். எல்லோருக்குள்ளும் பதிலறியா கேள்விகள் உள்ளன. அவையே வன்முறையின் விதைகள். எல்லோருக்குள்ளும் உறங்கும் இந்த வன்முறையின் விதைகளுக்கு நியாயமற்ற ஒரு சமூகம் நீர் வார்த்தபடி இருக்கிறது. சமூகத்தின் குரூரக் கழிவுகளால் மூச்சடைக்கும் நிலை ஒன்று வரும்போது இந்தக் கேள்விகளுக்குப் பதிலறிய ஒருவன் கிளம்பும்போது வன்முறை விழிக்கிறது. விழிப்புணர்வே வன்முறையாகிறது. 

    அகிம்சை காலாவதியாகும் ஒரு சமூகத்தில் காந்திகள் வன்முறையாளர்களாகின்றனர். தனி மனிதனின் கோபம் வெவ்வேறு வடிவங்களில் சமூகத்தால் அநீதியைச் சந்தித்தோரின் கூட்டுச் செயல்பாடாகிறது. ஆனால் ‘கற்றது தமிழ்’ல் பிரபாகரின் கோபம் சமூகத்தின் மேலானதாக இருந்தாலும் அவன் கேள்விகளுக்கு விடைதேடுவதில் அர்த்தமில்லை என்று உணர்கிறான். அவனின் அப்பழுக்கற்ற சிறு பிராய காதல் மட்டுமே இந்த வேட்டைக்காட்டில் அவனின் ஒரே புகலிடமாக இருக்கிறது. வாழ்வதை விட தண்டவாளத்தில் தலை வைத்து சாவது ஒருவனுக்கு சந்தோஷத்தை தருகிறதென்றால் அதிலிருந்து ஒன்றை மட்டுமே புரிந்துகொள்ள முடிகிறது. தனிமனிதனின் வன்முறையை விட சமூகத்தின் கூட்டு வன்முறை மிகக்கொடியது. சமூக வன்முறையின் எதிர்வினை தான் தனிமனிதனின் வன்முறை என்ற புள்ளிக்கு வந்து சேர முடிகிறது. சமூகமே ஒரு மிகப்பெரிய பயங்கரவாத இயக்கமாக இருக்கிறது. இங்கு, வன்முறை என்பதில் இரத்தம், கொலையைக் குறிக்க வேண்டியதில்லை. அவை அநீதியையும் சமூக அவலங்களையும் உள்ளடக்கியதே. 

       "ஏழ்மை தான் இருப்பதிலேயே ஆகக்கொடிய வன்முறை" என்கிறார் காந்தி. ராம் ‘கற்றது தமிழ்’ல் வன்முறையைக் கொண்டாடினாரோ என்று எண்ணத் தோன்றும். ஆனால் அவர் ஒருவனின் தார்மீக கோபத்தை, தன்னை அடித்து வீழ்த்தும் அநீதியை எதிர்கொள்ளும் ஒருவரின் சாமானியனின் வெளிப்பாட்டு முறையாக வன்முறையைக் காட்டினார். பிரபா, காந்தியில்லை. 

இப்படியான ஒரு கதாபாத்திரத்தைத் தேடிச் செல்லும்போது அது இயல்பாகவே அதை நோக்கியே சென்றுவிடுகிறது என்று சொல்கிறார் ராம். அடிப்படையில் கற்றது தமிழ் கள்ளம் கபடமற்ற இரு குழந்தைகளின் கதை. மலை வெளிகளில் அரிக்கன் விளக்குடன் இன்பமாக ஒடித் திரிந்து பட்டாம்பூச்சி பிடித்த பிரபாவுடையதும், ஆனந்தியுடையதுமான கதை. அவர்களின் கதை அதே மலையில் முடிவடைகிறது. பிரபா தமிழ் வாத்தியார் ஆனதும் கொலைக்காரன் ஆனதும், ஆனந்தி பாலியல் தொழிலாளி ஆனதும் இடைப்பட்ட ஒரு அத்தியாயம் மட்டுமே. மிகச் சிறியதும் கூட. 

     கற்றது தமிழ் முதல் ஏழு கடல் ஏழு மலை வரை ராமுடைய படங்கள் அனைத்தும் குழந்தைகளையே பேசுகிறது. எனவே அது மனிதர்கள் அனைவரையும் பேசுகிறது. அனைவரும் வளர்ந்துவிட்ட குழந்தைகளே. 'சினிமா பாரடைசோ' படத்தில் சிறு பிராய நினைவுகளின் மயக்கந்தரும் இன்பத்துக்கு வீழ்ந்துவிடாதே என்று பொருள்படும்படி 'டோன்ட் கிவ் இன்டூ நாஸ்டால்ஜியா' என்ற வசனத்தை ஆல்பர்டோ என்ற முதிய பாத்திரம் இளைஞனுக்குச் சொல்லும். அந்தப் படத்தில் அந்த இளைஞனுக்கு இருந்தது இன்பமான நினைவுகள். ஆனால் இந்த வசனம் சிறு வயதில் துன்பங்களை எதிர்கொண்ட ஒருவன்/ ஒருத்திக்கும், வளர்ந்த பின் அந்த துர் நினைவுகளின் வலியை சுமக்காதே என்றும் பொருள் கொள்ளலாம்.  

      எதுவாக இருந்தாலும் இந்த வசனம் நூற்றுக்கு நூறு உண்மையாக இருந்தாலும் இதில் உடன்படுவதிலும் இதை முழுமையாக கிரகித்து கொள்வதிலும் சிரமம் இருக்கிறது. மீண்டும் இந்தக் கேள்வி எண்ண மோதல்களுக்கே வந்து நிற்கிறது. இதுவும் வன்முறையைத் தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கும் ஒரு விடையறியா கேள்விதான். குழந்தைமையை மறந்த அதிகார வர்க்க மனிதர்களே இன்று அனைத்து விதமான அநீதிகளையும் செய்து வருகின்றனர். தாமும் தாயின் நேசத்தில் ஒரு கள்ளம் கபடமற்ற குழந்தையாக இருந்து வளர்ந்தவர்கள் என்ற அறிதல் இருந்திருந்தால் அவர்கள் இந்த அநீதிகளை, இத்தனை கொலைகளை, குழந்தைகளுக்கு எதிரான மனிதாபிமானப்பற்ற குற்றங்களை, குழந்தைகளிடமிருந்து அவர்களின் பிறப்புரிமையான குழந்தை பிராயத்தையே பறிக்கும் செயல்களில் ஈடுபட வாய்ப்பிருந்திருக்காது. உலகில் உள்ள எல்லா வன்முறைக்குமான தீர்வு, எல்லா பதிலறியா கேள்விகளுக்குமான விடை குழந்தைமையில் தான் இருக்கிறது. எனவே அந்தக் குழந்தைமையை மீண்டும் மீண்டும் பேச வேண்டியுள்ளது. இன்பமான குழந்தைப்பருவமும், துன்பமான குழந்தைப் பருவமும் மீண்டும் மீண்டும் பேசப்பட வேண்டியது. சினிமா மீதான பேரார்வம் கொண்ட சிறுவனுக்கும் பிலிம் ஆபரேட்டருக்கும் இடையே ஏற்படும் எதார்த்த நட்பையும் (Cinema paradiso). ஈராக் ராணுவத்தினரால் வன்கொடுமை செய்யப்பட்டு குழந்தை பெறும் குர்து சிறுமி அந்தக் குழந்தையைக் கொலை செய்ய முயல்வதையும் (Turtles can fly) பேசியே தீர வேண்டும். 

     தமிழ் சினிமாவில் அப்படித் தொடர்ந்து பேசுபவர்களில் ராம் முக்கியாமானவர். ஏழு கடல் ஏழு மலையிலும் குழந்தைமையே பிரதானப்படுகிறது. ஏழு கடல் ஏழு மலை தாண்டி என சிறுவனுக்குச் செல்லும் இரவுக் கதையாய் தொடங்கும் படம் 8000 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் சாவற்ற ஒருவனின் (நிவின் பாலி) எண்ண மோதல்களாக விரிகிறது. 

    8000 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஒருவனுக்குள் எத்தனை ஞாபகங்கள் இருக்கும். அது அவனுக்கு இந்த உலகைப் பற்றிய எந்த மாதிரியான புரிதலை வழங்கியிருக்கும். அவன் தேடல் என்னவாக இருக்கும் என்று நீள்கிறது கதை. தன் மகன் பிறந்ததில் இருந்து அவனை நேரில் பார்க்காமல் துபாயில் கூலி வேலை செய்யும் ஒரு சாமானியன் (சூரி) முதல் முறையாக தன் மகனைப் பார்க்கும் அவாவுடன் இந்தியா வந்து ஊருக்கு செல்லும் ரயிலில் ஏற அங்கு அவனும் 8000 வயது மனிதனும் மட்டுமே ஒரு பெட்டியில் இருக்க நேர்கிறது. அது கால்பெட்டி என டிரெய்லரிலேயே சொல்லிவிட்டார் ராம். கற்றது தமிழ் முதலே, சின்ன தவறுதான் என மிகவும் சாதாரணப்படுத்தப்பட்ட ஒரு விஷயத்தை மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் நாயகர்கள் ராமினுடையவர்கள். 

     இந்தப் படத்தில் ரயில் பெட்டியின் பொந்துக்குள் அப்போதே குட்டிகளை ஈன்ற எலியை சாமானியன் எதேச்சையாக சாகடிக்க முயலும் செயல் சாவற்றவனுக்கு மிகப்பெரிய தவறாகத் தெரிகிறது. உயிர்களில் மனித உயிர், மிருக உயிர் என்ற வேறுபாடு கிடையாது என்பதே அவனின் நியாயம். இருவருக்குமிடையேயான அற முரணைக் கொண்டு காலாதி காலமாக இருக்கும் மானுடத்தின் அறச் சிக்கலை விலங்குகளை மையமிட்ட குறுங்கதைகளாக பேசுகிறார் ராம். அவை பெரும்பாலும் ஏஐ கலந்த அனிமேஷன் காட்சிகள். ஏஐ மூலம் உண்மையைப் போன்ற யதார்த்தமான காட்சிகளை உருவாக்கப் பலர் மெனக்கிடுகின்றனர். ஆனால் ராம் அவற்றை வெறும் கார்ட்டூன் என்ற அளவில் மட்டுமே வைத்திருக்கிறார். 

       முழுமை என்பது பொய். முழுமையற்றதே நாம். அண்மைக் காலமாக நாம் தொழில்நுட்பத்தால் எட்ட முயலும் முழுமைக்கான ஒரு எதிர்ச் செயலாகவே இதைப் பார்க்க முடிகிறது. அதனை அதனளவில் அணுகுவதே பெரும் நிம்மதியை வழங்குகிறது. இன்றைய போலச் செய்தல் உலகில் இதுபோன்ற எளிமையானவையே ஆசுவாசமாளிப்பதாக உள்ளது. ஏழு கடல் ஏழு மலை படத்தின் கதை முழுமையுமே ஒரு குழந்தை கேட்டு கிரகிக்கும் வண்ணம் மிக மிக எளிமைப்படுத்தப்பட்ட மானுடத்தின் கதையே. அது மனிதனின் ஆதி தொட்ட கதை என்பதாலேயே 8000 ஆண்டு மனிதன் என்ற மிகை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. 

      அன்பு, உயிர்களிடத்து பரிவு, எல்லாவற்றிக்கும் மேலாக முடிவிலியற்ற காதலால் நிறைந்திருக்கிறது ஏழு கடல் ஏழு மலை. அதில் வஞ்சம் கொண்ட மனிதர்களும் வருகின்றனர். ஆனால் அவர்கள் காலத்தின் கைதிகள். செத்திடும் மானிடப் பூச்சிகள். முரணாக சாவற்ற மனிதனோ சாவை விரும்புபவனாக இருக்கிறான். "எனக்கு தான் சாகுறதுக்கான பாக்கியம் இல்லையே" என தான் காதலிக்கும் பெண்ணிடம் மீண்டும் மீண்டும் கூறுகிறான் அவன். அவள் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பிறந்த வண்ணம் இருக்க, சாவற்றவன் அவளையே காலாதி காலமாய் தேடி அலைபவனாக இருக்கிறான். இளவரசியாக ஒரு முறை, இயேசு வாழ்ந்த காலத்தில் கல்லடி படும் பெண்ணாக ஒரு முறை, காட்டில் திரியும் மர்ம பெண்ணாக ஒரு முறை, தனுஷ்கோடியில் சிலைகளைப் புகைப்படம் எடுப்பவளாக ஒரு முறை என அவள் மீள மீள அவனை வந்தடைகிறாள். இல்லை, அவன் சென்றடைகிறான். இத்தனை ஆயிரம் ஆண்டுகளும் அவளைச் சந்திக்க பயணப்பட்டவனாகவே அவன் இருக்கிறான். ஒரு காலவெளியில் இருவருக்கும் குழந்தை பிறக்கிறது. அவளைப் பிரிய நேர்கிறது. குழந்தை பாலின்றி சாகிறது. அவன் ரயிலில் எலி ஈன்ற குட்டிகளில் தன் குழந்தையைக் காண்கிறான். எலியைக் கொல்ல முயன்ற எளியவனைக் கொல்ல முயல்கிறான். 

     உயிர்களிடத்து அன்பு என்பதன் மூலம் தான் சைவம் உண்ணுதலை உணர்த்த எத்தனிக்கவில்லை என்று கூறிவிடும் ராம், எலியின் மீதான (படத்தில் சாவற்றவனின்) கருணையை இயற்கையின் மீதான கருணையாகவும், எலியின் மீதான மனிதனின் (படத்தில் சாமானியனின்) தன்னுணர்வற்ற வன்முறையை இயற்கைக்கும்‌ மனிதனுக்கும்‌ இடையிலான முரணாகவும் உணர்த்தி நிற்கிறார். இதை அண்மையில் அறிய நேர்ந்த ஸ்டூவாக்ரசி என்பதுடன் இணைத்துப் பார்க்க முடிந்தது. ஸ்டூவாக்ரசி (stewacracy) என்பது சாயு வெரிட்டி என்ற தத்துவவாதி ஜனநாயகத்திற்கு (democracy-க்கு) மாற்றாக முன்வைக்கும் அரசு முறையாகும். ஜனநாயகம் மக்களை மையப்படுத்திய மக்கள் நலனை பிரதானப்படுத்துகிறுது. ஸ்டூவாக்ரசி சுற்றுச்சூழலின் நலனை முதன்மையாக வைத்து செயல்படும் ஆட்சிமுறையை வலியுறுத்துகிறது. சூழலியக்கத்துக்கு அடுத்த இடத்தில் தான் மனிதர்களை ஸ்டூவாக்ரசி நிறுத்துகிறது. தற்கால சூழலில் இந்த முறைக்கான ஆதரவாளர்கள் உருவாகி வருகின்றனர். ஏழு கடல் ஏழு மலையும் அதன் கூறுகளை கொண்டதாகப் படுகிறது.

      "மழை பெய்யும்போது யாரும் சாகக்கூடாது" என்றபடி அவனுக்கு இடைப்பட்ட நேரத்தில் தன் காதல் கதையைச் சொல்கிறான் சாவற்றவன். ரயில் பெட்டியின் இருக்கைக்கு அடியில் இத்தனை நேரம் பசி மயக்கத்தில் கிடந்த சிறுவனை அவர்கள் கண்டுபிடிக்கின்றனர். அவனின் வருகை படத்தின் சம்பாஷணையை வேறு கோணத்துக்கு எடுத்துச் செல்கிறது."அந்தச் சிறுவனை ரயிலில் இருந்து தள்ளிவிட்டுக் கொன்றால் உன்னை உயிரோடு விடுகிறேன்" என புதிர்போடுகிறான் சாவற்றவன். அவன் வார்த்தைகள் யாவும் எளியவனுக்கு புதிராகவே இருக்கின்றன. தூய தமிழ் உட்பட. இந்தப் படத்தைப் பார்க்கும் தற்போதைய தலைமுறை குழந்தைகளுக்கு நிச்சயம் அது புதிராகவே இருக்கும். தொல்காப்பியம் தொடங்கி அவன் உணர்ச்சிநடையில் பேசும் பாக்கள் படத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கிறது. ஆனால் புரிய வேண்டுமே. அவனே அவற்றுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய சூழல் எழுகிறது. ஆனால் 2026இல் வெளியாகும் ஒரு படத்தில் சங்க இலக்கியத்தை கையாண்டிருப்பது ஒரு நல்ல முயற்சி. அதுவும் குழந்தைகளை ஈர்க்கும் ஒரு படத்தில் அது மிகவும் தேவையான ஒன்று. 

      படம் குழந்தைகளுக்கு மட்டுமானதா என்றால் இல்லை. மென்மையான காதலைத் திரையில் பார்த்து வெகு காலம் ஆகிறதென்ற ஏக்கத்தை இப்படம் தீர்க்கிறது. தனுஷ்கோடி கடல் மணலில் நனவோடையாக நிகழும் காட்சிகள் போதும் இந்த படத்தை பேச. சுற்றிலும் இருள். எலும்பை உருக்கும் குளிர் இரவில் நீண்டு விரிந்த வெட்ட வெளியில் தீயின் முன் அமர்ந்து கைகளை கதகதப்பாக்கிக்கொள்ளும் உணர்வைத் தருகிறது படம். பாடல்களும் காட்சிப்படுத்தலும் படத்தின் மாய எதார்த்த தன்மையோடு சிரமமின்றி கைகோர்த்து இழையோடுகிறது. காதலியின் சில்லிட்ட கரங்களுடன் கரம் கோர்ப்பது போன்ற மெல்லுணர்வைப் படம் கடத்துகிறது. காதலைத் தாண்டிய அன்பையும் தாய்மையையும் பேச படம் தவறவில்லை. தன்னைத் தவறாகப் பார்க்கும் பைத்தியக்காரனைத் தன் மார்போடு சாய்த்து அவனுக்குத் தாய்மையை உணர்த்துகிறாள் பெண். அதுவே இந்த படம் அடைந்த உச்சம். 

      அன்பு, அழகியல் ஒருபுறமும் ரயிலில் எளியவனுடனான அறச்சிக்கல் ஒருபுறமும் என இரு முனைகளை முடிச்சிட முயல்கிறார் ராம். நல்லவனை மிகவும் நல்லவனாக்கும் சாவற்றவனின் ஆன்ம விளையாட்டு ராமினுடையது. பதிலறியா கேள்விகளுக்கு அவர் அளிக்கும் ஒத்தடம். படத்தில் முடிவற்று பயணிக்கும் ரயிலை உருவகிக்கிறான் சாவற்றவன். ரயில் எப்படி பல மனிதர்களை சுமந்து தன் பயணத்தை தொடர்ந்த வண்ணம் இருக்கிறதோ சாவற்றவனின் பயணம் அவன் சந்திக்கும் மனிதர்கள், விலங்குகளின் ரணங்களைச் சுமந்தபடி தொடர்கிறது. மனித வரலாற்றின் துயரங்களை எளிய மக்களின் வலியை ஒரு காய்ச்சல் கனவாக காட்சிக்குள் கொண்டுவர முயன்ற ராமின் பகிரத பிரயத்தனம் மிஷ்கின் அடிக்கடி பயன்படுத்தும் சொல்லாடல் போல், "கால்களை முத்தமிட" தகுந்த முயற்சி. குறிப்பாக படத்தின் கடைசியில் சாவற்றவன் நாயகன் மட்டுமல்ல என்று தெரிய வரும்போது படம் வேறொரு பரிணாமம் எடுக்கிறது. இது படத்தைப் பார்க்க நினைப்பவர்களுக்கு ஸ்பாய்லர் தான். ஆனால் தொடக்கம்-முடிவு, கேள்வி-விடை என அண்மை காலமாக வரும் பார்முலா படங்களுக்கு அது பொருந்தும். அந்தக் கதைகளில் ஆன்மா இருப்பதாக தெரியவில்லை. ராமை போன்றோரது பதிலறியா கேள்விகள், அறப் பார்வை, அன்பின் வன்முறையான வெளிப்பாடு. கேரக்டர் ஸ்டடி. பார்த்துணர வேண்டிய ஒரு அனுபவம். ஒரு முழுமையற்ற மாஸ்டர்பீஸ். ராம், இயக்குநர் வேடமணிந்த இலக்கியவாதி. 

Comments

Popular posts from this blog

இலக்கியமும் இசையுமுமான வாழ்வு கவிஞர் சுகுமாரனுடனான உரையாடல்

கல்லூரிகள் டூ பல்கலைக்கழகங்கள் -மா. அன்பரசு

மா. அன்பரசு குறுங்கதைகள்