இலக்கியமும் இசையுமுமான வாழ்வு கவிஞர் சுகுமாரனுடனான உரையாடல்

இலக்கியமும் இசையுமுமான வாழ்வு 

கவிஞர் சுகுமாரனுடனான உரையாடல் 


சந்தித்தோர்: வேலாயுதம் பொன்னுசாமி, குமரேஸ்வரன், அழகுராஜ், கருப்பண்ணா


அழகுராஜ்: பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் மொழிபெயர்ப்புகள் குறித்துத் தங்களுடைய கருத்து என்ன?


சுகுமாரன்: பிற மொழிகளில் உள்ள நல்ல படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் பலர் மொழிபெயர்க்கிறார்கள். ஆனால், தமிழ் மொழிக்குக் குறிப்பிட்டத்தக்க ஏதேனும் ஒரு பங்களிப்பை அல்லது சிறப்பைச் சேர்க்கும் என்றால் மட்டுமே அந்த மொழிபெயர்ப்புக்கு உண்மையான மதிப்பு இருக்கும். அப்படியான மொழிபெயர்ப்புகளே இங்கு நிலைத்து நிற்கும்.


அழகுராஜ்: பிற மொழித் தழுவல்கள் அல்லது பாதிப்பில் உருவாகும் படைப்புகள் போலச்செய்தல் (Copy/Plagiarism) ஆகிவிடாதா? தமிழ் எழுத்தாளர்களுக்கு இது ஒரு நெருக்கடியை உருவாக்குமா?


சுகுமாரன்: நிச்சயமாக இல்லை. எந்தவொரு படைப்பும் திடீரென்று ஆகாயத்தில் இருந்து இறங்கி விடுவதில்லை. அது ஏதேனும் ஒரு படைப்பின் கிளையாகவோ அல்லது பாதிப்பாகவோ உருவாகிறது. உதாரணமாக, நமது பெரும் காவியமான கம்பராமாயணம், வால்மீகியின் ராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டிருந்தாலும், அது அப்படியே வால்மீகி இராமாயணத்தின் நகல் அல்ல. அதேபோல, இன்றைக்கு நாம் வாசிக்கும் நாவல், சிறுகதை போன்ற வடிவங்கள் அனைத்துமே பிற மொழிகளின் தாக்கத்தால் வந்தவைதான்; ஆனால், அவை காலப்போக்கில் நமக்கான வடிவமாக மாறிவிட்டன. எனவே, இதைப் போலச் செய்தல் அல்லது நகலெடுத்தல் என்று கூறி ஒதுக்கிவிட முடியாது.


அழகுராஜ்: நீங்கள் மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலிருந்தும் மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளீர்கள். இந்த இரண்டிற்கும் இடையே நீங்கள் உணர்ந்த வேறுபாடு என்ன?


சுகுமாரன்: இரண்டிற்கும் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளையும் கருவிகளையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆங்கில நூல்கள் பெரும்பாலும் நம் கலாச்சாரத்தையோ அல்லது மொழியையோ சார்ந்தவை அல்ல. ஆங்கிலத்தில் வாசிக்க முடியாத  தமிழ் வாசகனுக்கு, அந்தப் படைப்பு எந்தவிதத் தடங்கலுமின்றித் தெளிவாகச் சென்று சேர வேண்டும் என்பதை முதன்மையாகக் கொண்டு மொழிபெயர்க்க வேண்டும். இதன் அர்த்தம் அந்த மூலத்தின் உயிரைப் பலிகொடுத்து மொழிபெயர்ப்பது அல்ல.


 மலையாளத்தின் கலாச்சாரமும் மொழியும் தமிழ்ச் சூழலுக்கு மிக நெருக்கமானவை. அதனால், சில மலையாள வார்த்தைகளை அப்படியே தமிழில் பயன்படுத்தினாலும் தமிழ் வாசகரால் புரிந்துக்கொள்ள முடியும். உதாரணமாக, 'தறவாடு' என்ற மலையாளச் சொல்லைக் 'குடும்பம்' என்று மாற்றாமல் அப்படியே பயன்படுத்தினாலும் தமிழ் வாசகன் புரிந்து கொள்வான்.  


அழகுராஜ்: அதனால்தான் மலையாளத்திலிருந்து மலையாளத் தன்மையோடு நீங்கள் மொழிபெயர்த்த வைக்கம் முகம்மது பஷீரின் 'மதில்கள்' நாவல் அதிக வாசகர்களைச் சென்றடைந்ததா?


சுகுமாரன்: பஷீர் எப்போதுமே எல்லோராலும் வாசிக்கப்படக்கூடிய ஒரு மகத்தான எழுத்தாளர். அவர் மறைந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் அவருடைய புத்தகங்கள் இன்னமும் தொடர்ந்து அச்சிடப்பட்டு, வாசிக்கப்பட்டு வருகின்றன. 'மதில்கள்' நாவலை   சொந்த விருப்பத்திற்காகவே மொழிபெயர்த்தேன். ஏற்கனவே அதற்கு இரு தமிழ் மொழிபெயர்ப்புகள் (நீல. பத்மநாபன்,   சுரா ஆகியோரால் செய்யப்பட்வை) இருந்தபோதிலும், அதில் ஒரு மலையாளத் தன்மை இருக்க வேண்டும் என்று விரும்பி  மீண்டும் மொழிபெயர்த்தேன்.


அழகுராஜ்: 'மயிலம்மா: போராட்டமே வாழ்க்கை' போன்ற ஒரு புத்தகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அல்லது சிந்தனை உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?


சுகுமாரன்: சிறுவயது முதலே எனக்கு அறிமுகமான அரசியல் மற்றும் கோட்பாடு இடதுசாரி அரசியல் மட்டுமே. என் தந்தை கம்யூனிச இயக்கத்தின் மின்சாரத் தொழிலாளர் சங்கத்தில் தீவிரச் செயல்பாட்டாளராக இருந்தவர். சிறுவயதில் வீட்டிற்கு வந்து செல்லும் இடதுசாரி தலைவர்களும், தந்தை கொண்டு வரும் சிவப்பு நிறப் துண்டுப்பிரசுரங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கார்ல் மார்க்ஸ் போன்றவர்கள் மனிதனின் நிலையை உயர்த்துவதற்காகப் பேசிய மனிதாபிமானப் பக்கமே என்னை ஈர்த்தது. அந்த எளிய மனிதர்களின் பக்கமும், பாதிக்கப்பட்டவர்களின் பக்கமும் நிற்க வேண்டும் என்ற மனநிலையின் வெளிப்பாடே மயிலம்மா குறித்த அந்தப் புத்தகம். அப்போது  நான் சூர்யா தொலைக்காட்சியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, கொக்கோ கோலா நிறுவனத்திற்கு எதிரான மயிலம்மாவின் போராட்டத்திற்கு ஆதரவாக செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தோம். அலைவரிசைக்கு கொக்கோ கோலா நிறுவனத்திடமிருந்து பெரிய விளம்பர ஆதரவு (Sponsorship) வந்துகொண்டிருந்தது. ஆனால், நாங்கள் அவர்களுக்கு எதிரான செய்திகளை ஒளிபரப்பியதால், கோபம் கொண்ட அந்நிறுவனம் தங்களது விளம்பரங்களை உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இதனால் நிறுவனத்திற்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக என் நிர்வாகி என்னிடம் கூறினார். இருப்பினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றதில் எனக்குப் பெரிய திருப்தி இருந்தது.


அழகுராஜ்: சுற்றுச்சூழல் சார்ந்து வேறு ஏதேனும் படைப்புகளை எழுதத் திட்டமிட்டுள்ளீர்களா?


சுகுமாரன்: எனக்கென்று தனியாகச் சுற்றுச்சூழல் கொள்கைகளோ அல்லது திட்டங்களோ (Agenda) கிடையாது. அடிப்படை வாசிப்பும் ஆய்வும் கொண்ட  சாதாரணக் குடிமகனுக்கு இருக்கவேண்டிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மட்டுமே என்னிடம் உள்ளது. ஒரு உணர்வுப்பூர்வமான எழுத்தாளனாக, மனதைப் பாதிக்கும் விஷயங்களுக்கு  எதிர்வினையாற்றுகிறேன். உதாரணமாக, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராகப் பெரிய போராட்டம் நடந்தபோது, மலையாளத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்திற்குத் தமிழில் உரையாடம் எழுதினேன். படத்துக்குக் குரல் கொடுத்துப் பங்களித்தேன். மற்றபடி ஒன்றும் செய்யவில்லை. மேலும் நானொரு முழுநேரச் சூழலியல் போராளி எல்லாம் கிடையாது. நான் ஒரு எழுத்தாளன், கவிஞன். கொஞ்சம் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்; அந்தச் சொகுசை இழக்க விரும்பவில்லை.


அழகுராஜ்: ரித்விக் கட்டக் மற்றும் அவர் தொடர்பான படைப்புகள் குறித்துத் தங்களுடைய பார்வை என்ன? 'சினிமா அண்ட் ஐ' (Cinema and I) போன்ற கட்டுரைகள் தமிழில் வெளிவந்துள்ளதா?


சுகுமாரன்: 'சினிமா அண்ட் ஐ' (Cinema and I) என்ற நூலிலிருந்து இரண்டு கட்டுரைகளை எடுத்து நான் மொழிபெயர்த்துச் சேர்த்துள்ளேன். எனக்கு அடிப்படையிலேயே மூன்று விஷயங்களின் மீது பெருங்காதல் உண்டு. முதன்மையானது  இலக்கியம். இரண்டாவது சங்கீதம். எனக்கு சங்கீதம் ரொம்பப் பிடிக்கும். ஒரு கட்டத்தில் சங்கீதம்  கற்றுக்கொள்ளவும் போனேன். அது வெற்றி பெற்ற முயற்சியாக இருக்கவில்லை. மூன்றாவது சினிமா கோயம்புத்தூரில் ஃபிலிம் சொசைட்டி (Film Society) தொடங்கியதில் நானும் எனது நண்பர்களும் இருந்தோம். 


     2025ல் குருதத், ரித்விக் கட்டக், எம்.பி. சீனிவாசன் ஆகிய மூவருக்கும் நூற்றாண்டு நிறைவடைகிறது. இது குறித்துப் பதிப்பாளர் சிவ. செந்தில்நாதனிடம் பேசியபோது, எம். பி. சீனிவாசன் பற்றி 'மக்களிசை மேதை எம். பி. சீனிவாசன்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். ரித்விக் கட்டக் குறித்து 'படப்பெட்டி' இதழில் கட்டுரை எழுதத் தொடங்கி, அது ஒரு சிறப்பு இதழாகவே உருவெடுத்தது. இந்திய சினிமாவில் எனக்கு ராய்க்கு அடுத்தபடியாகத்தான் மற்ற அனைவருமே. 


    80-களின் காலகட்டத்தில் ரித்விக் கட்டக்கின் திரைப்படங்களைப் பார்த்தபோதே நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். வழக்கமாக ஒரு கதைப்படம் என்பது வறட்சியாகவும், உணர்வில்லாமலும் இருக்கும் என்று சொல்லப்பட்டதற்கு மாறாக, ஒரு எரிமலைக் கொந்தளிப்பின் அத்தனை உணர்ச்சி வேகத்தோடும் படம் பண்ணியவர் அவர். மெலோ டிராமாவிற்கு ஒரு கலை அந்தஸ்தைக் கொடுத்தவர் ரித்விக் கட்டக்தான். அவர் நினைத்திருந்தால் மெலோடிராமடிக் சினிமாக்களை உருவாக்கிப் பெரிய செல்வந்தர் ஆகியிருக்கலாம்; ஆனால், அதைச் செய்யாமல் சினிமாவுக்காகவே உழைத்து, அதற்காகவே அழிந்தும் போனவர். அன்றிலிருந்து அவர் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்ப்பேன்.


கருப்பண்ணா: தமிழ் எழுத்துச் சூழலில் 'ஒற்றைமயமாக்கல்' (Homogenization) குறித்த உங்களின் கருத்து என்ன?


சுகுமாரன்: ஒற்றைமயமாக்கல் என்பது தமிழ்ச் சூழலுக்கு மட்டுமே பிரத்யேகமானது அல்ல; உலகம் முழுவதுமே அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக எல்லாவற்றையும் ஒரே நிழலின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு எதிர்ப்பாகவே எல்லா மொழிகளிலும் இலக்கியங்கள் உருவாகின்றன.


உலகம் என்பது பன்மைகளால் உருவானதே தவிர, ஒருமையால் உருவானது அல்ல. தமிழ் கலாச்சாரம், மலையாளக் கலாச்சாரம், தெலுங்கு கலாச்சாரம் உள்ளதைப் போல இந்தியக் கலாச்சாரம் என்ற ஒன்று உள்ளது. அதனாலே அயோத்தியில் பிறந்த ராமன் என்ற பெயர் கன்னியாகுமரியில் பிறந்த ஒருவருக்கு வைக்கப்படுகிறது.  


      இந்தியக் கலாச்சாரம் என்பது பன்மைத்தன்மை கொண்டது. ஏ. கே. ராமானுஜன் சொல்வது போல, இந்தியாவிலேயே முந்நூற்றுக்கும் மேற்பட்ட இராமாயணங்கள் இருக்கின்றன. பாரதி என்ற கவிஞன் ஒரே நேரத்தில் இந்து மதத்தைக் கொண்டாடுபவனாகவும், தேசியவாதியாகவும், தமிழ் உணர்வாளனாகவும் பன்முகத் தன்மையோடு இருந்திருக்கிறான். பாரதியாரின் படைப்புகள் அனைத்திற்கும் அடிப்படையாக விளங்குவது, அவர்தம் கவிதைகளுக்குள் பொதிந்துள்ள மானுடத்தைக் கொண்டாடும் பெருமனமே ஆகும். பாரதியைப் புரிந்து கொள்ள விரும்புவோர், இந்த மானுட நேயத்திலிருந்தே தங்கள் பார்வையைத் தொடங்க வேண்டும்; மாறாக, வேறு வழிகளில் அணுகக் கூடாது. இன்றைய சூழலில், பாரதியாரின் ஏதேனும் நான்கு கவிதைகளை மட்டும் மேற்கோள் காட்டி, அவரை ஒரு குறிப்பிட்ட அமைப்பின் தீவிர ஆதரவாளர் என்றோ, அல்லது அவர் இயற்றிய "சத்ரபதி சிவாஜி" பற்றிய கவிதையைக் கொண்டு அவரை ஒரு குறிப்பிட்ட மதத்தின் தீவிரவாதி என்றோ நிறுவுவது மிக சுலபமான காரியமாகிவிட்டது. ஆனால், உண்மை அதுவன்று. இத்தகைய தவறான அணுகுமுறைகளும் முயற்சிகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.


கருப்பண்ணா: குறிப்பிட்ட ஒரு எழுத்தாளர் அங்கீகரித்தால் மட்டுமே ஒருவர் எழுத்தாளராகக் கருதப்படும் நிலை உருவாகியுள்ளது. அதுகுறித்த உங்களுடைய கருத்து என்ன?


சுகுமாரன்: குறிப்பிட்ட ஒரு எழுத்தாளர் அங்கீகரித்தால் மட்டுமே ஒருவர் எழுத்தாளராகவோ அல்லது கவிஞராகவோ ஏற்றுக்கொள்ளப்படுவார் என்ற மனநிலை இங்கு நிலவுகிறதென்றால் குருவின் முகத்திலிருந்தே கல்வி கற்க வேண்டும் என்ற பழமையான மதிப்பீடுகளைப் போன்றதே இதுவும் ஆகும். ஆனால், என்னுடைய அறிவாலும், அனுபவத்தாலும், உணர்வாலும் சீர்தூக்கிப் பார்த்த பின்னரே எதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். அப்படித்தான் நான் இருக்கவும் விரும்புகிறேன்.


அழகுராஜ்: தென்கொரியா போன்ற நாடுகளில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் கள அமைப்புகள் குறித்தும், தமிழ் இலக்கியச் சூழலில் அத்தகைய வாய்ப்புகள் சாத்தியமா?


சுகுமாரன்: மேற்கத்திய நாடுகளிலோ அல்லது பிற நாடுகளிலோ எழுத்து என்பது ஒருவரின் முழுநேரத் தொழிலாக இருக்கிறது. அவர்கள் ஒரு சில நாவல்களை மட்டுமே எழுதியிருக்கக்கூடும்; இருப்பினும், அதுவே அவர்களின் முதன்மைப் பணியாக அமைகிறது. தென்கொரியாவில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக அமைப்புகள் மற்றும் பயிற்சி முகாம்கள் இயங்கி வருகின்றன. அங்குச்  வேறு எந்த இடையூறுமின்றி, எழுத்துப் பணியில் மட்டுமே ஒருவர் முழுமையாக ஈடுபட முடியும்.


       நம் சூழலில் அத்தகைய அமைப்புகள் அரிதாகவே உள்ளன. ஒருவேளை வீட்டிலிருந்து எழுத முற்பட்டால், குடும்பப் பொறுப்புகள் மற்றும் அன்றாடத் தொந்தரவுகள் எழுத்துப் பணியைப் பாதிக்கக்கூடும். இருப்பினும், ஒரு நாவலை எழுதித் தீர வேண்டும் என்ற உள்ளார்ந்த நிர்பந்தம் இருந்தால், வீட்டிலிருந்தே அதை எழுதிவிட முடியும். இந்தியாவில் 'சங்கமம் ஹவுஸ்' (பெங்களூரு) போன்ற சில முயற்சிகள் எழுத்தாளர்களுக்காகச் செயல்பட்டு வருகின்றன. மேலும், 'காலச்சுவடு'ம் இசைக் கலைஞர் டி. எம். கிருஷ்ணாவின்   அறக்கட்டளையும் இணைந்து 'வானகம்'  என்ற பெயரில் ஆனைகட்டியில் எழுத்தாளர்கள் தங்கி எழுதுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் முழுநேர எழுத்தாளர்கள் அல்லர் என்பதால், ஒரு மாதம் முழுமையாகத் தங்கி எழுதுவது அவர்களுக்குச் சற்றுச் சவாலான காரியமாகவே உள்ளது.


அழகுராஜ்: 'வெல்லிங்டன்' மற்றும் 'பெருவலி' நாவல்களில் வரலாற்றுப் பின்னணி கொண்டு பெண்களின் நிலை மற்றும் அதிகாரம் குறித்துப் பேசியது திட்டமிட்ட செயலா?


சுகுமாரன்: 'வெல்லிங்டன்' மற்றும் 'பெருவலி' ஆகிய நாவல்களில், வரலாற்றுப் பின்னணியில் பெண்களின் அதிகாரம் மற்றும் அவர்களின் நிலை குறித்த உரையாடல்கள் முதன்மை பெற்றுள்ளன. 'பெருவலி' நாவலின் பின்னுரையில் குறிப்பிட்டதுபோல, அதனை வெறும் வரலாற்று நாவலாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. நான் கண்ட சமகால அரசியல் சூழல்களையும், அதிகாரக் குடும்பங்களில் உள்ள பெண்களின் வாழ்க்கையையும் உற்றுநோக்கியதன் விளைவே அதுவாகும். குடும்பத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் எல்லாவற்றையும் செய்யும் பெண்களுக்கு, இறுதியில் எத்தகைய அதிகாரமும் வழங்கப்படுவதில்லை என்பதை நேரடியாகச் சொல்ல முடியாத சூழலில்தான், இத்தகைய வரலாற்றுப் பின்னணி பயன்படுத்தப்பட்டது. ஒரு படைப்பு என்பது வாசகர்களின் பல்வேறு வியாக்கியானங்களுக்கு இடமளிப்பதாகும்.


அழகுராஜ்: நாவலில் பயன்படுத்தப்பட்ட "நாழிகைக் கடிகை" என்ற சொல்லாடல் குறித்தும், "அடைந்தால் அரியாசனம், இல்லையென்றால் மரணம்" என்ற வரலாற்று முழக்கம் என்னைக் கவர்ந்தது. அது குறித்து கூறுங்கள்.


சுகுமாரன்: நாவலில் இடம்பெற்ற "நாழிகைக் கடிகை" என்பது பொழுது காட்டும் கருவியைக் குறிக்கும் எளிய சொல்லாடலே ஆகும். 'மணிக்கடிகை' என்பதன் மற்றொரு வடிவமாகவே அது பயன்படுத்தப்பட்டது.


     அதேபோல, "அடைந்தால் அரியாசனம், இல்லையென்றால் மரணம்" என்பது வரலாற்றில் ஏற்கனவே எழுப்பப்பட்ட ஒரு முழக்கமாகும். நாவலின் தேவைக்காகவும், அந்தச் சூழலை விவரிப்பதற்காகவும் மட்டுமே அதனைப் பயன்படுத்திக்கொண்டேன்; அதில் எனது தனிப்பட்ட பங்களிப்பு ஏதுமில்லை.


அழகுராஜ்: 'வெல்லிங்டன்' நாவலில் தெலுங்கு, கன்னடம், படகா, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகள் சார்ந்த பண்பாட்டுச் சூழல் இடம்பெற்றதன் காரணம் என்ன?


சுகுமாரன்: அது இயல்பாக அமைந்த ஒன்று.  அந்தந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த மொழியிலேயே உரையாடுவது இயல்பு. ஒரு நாவலுக்குள் நிகழும் உரையாடல் என்பது அம்மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவே இருக்க வேண்டும். கதைகளில் இடம்பெறும் உரையாடல்கள் இயல்பாகவோ இயற்கையாகவோ அமைபவை அல்ல; அவை எழுத்தாளரின் படைப்புத் திறனால் உருவாக்கப்படுபவையே ஆகும். கதைச் சூழலுக்கு ஏற்ப உரையாடல்களைப் புனைவது எழுத்தாளரின் பணியாகும்.


      உதாரணமாக, கி. ராஜநாராயணன் அவர்களின் கதைகளிலும் நாவல்களிலும் வரும் பாத்திரங்கள் பெரும்பாலும் நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் தமிழில் எவ்வாறு உரையாடினார்கள் என்ற வினா நமக்கு எழுவதில்லை. அதேபோல, அசோகமித்திரனின் கதைகளில் சாதாரண இழுவண்டி ஓட்டுநரும் கீழ்த்தட்டு தொழிலாளியும் பேசுவது போன்ற உரையாடல்கள் பிராமண மொழி நடையிலேயே அமைந்திருக்கும்; ஏனெனில் அவருக்குப் பழகிய மொழி நடை அதுவே ஆகும்.


      நான் எனது படைப்புகளில் உரையாடல்களை எழுதியபோது, அந்தந்தக் கதாபாத்திரங்கள் சார்ந்த சமூகப் பின்னணியின் மொழியிலேயே அமைக்க வேண்டும் என விரும்பினேன். மேலும், நான் வாழ்ந்த சூழலில் தெலுங்கு, படகா, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் மற்றும் உருது பேசும் மக்கள் நிறைந்திருந்தனர். அவர்களின் உரையாடல்களைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. எனவே, அக்கதாபாத்திரங்களை இயல்பாகச் சித்தரிக்க அவர்களின் தாய்மொழியிலேயே உரையாடல்களை அமைத்தேன்.


அழகுராஜ்: 'இசைதரும் படிமங்கள்' கவிதையில், புல்லாங்குழலின் துளைகளில் மனிதர்களின் சோகங்கள் மோதின என்று எழுதியுள்ளீர்கள்? அது வாசிக்கும்போது நன்றாக இருக்கிறது. பொதுவாக கலைப் படைப்பிற்குத் துக்கம் ஒரு தூண்டுகோலாக அமைகிறதா?


சுகுமாரன்: கலைப் படைப்பிற்குச் சோகம் தூண்டுகோலாக அமைகிறதா என்றெல்லாம்  ஆழமாகச் சிந்திக்கவில்லை. எனக்கு மனவருத்தம் இருந்த காலத்தில் ஹரிபிரசாத் சௌராசியாவின் புல்லாங்குழல் இசையைக் கேட்டேன். அது எனது துக்கத்தையெல்லாம் வெளிப்படுத்துவது போல் அமைந்திருந்தது. அவ்வளவுதானே தவிர, அதற்கு மேல் பெரிய தத்துவ விளக்கங்கள் எதுவும் என்னிடம் இல்லை.


அழகுராஜ்: வரலாற்றுப் பாத்திரங்களை மையமாகக் கொண்டு எழுதப்படும் புனைவுகளைப் பற்றிய தங்களுடைய பார்வை என்ன?


சுகுமாரன்: நான் என் பள்ளிப் பருவத்தில் வரலாற்றுப் பாடத்தில் மிகக் குறைவான மதிப்பெண்களையே பெற்றவன். வரலாற்று நாவல்கள் எதையும் நான் விரிவாகப் படித்ததில்லை. வரலாற்றின் மீது எனக்குப் பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை. ஆனால், எழுதவும் வாசிக்கவும் தொடங்கிய காலத்தில், வரலாற்றின் முக்கியத்துவத்தை மெல்ல உணர்ந்தேன். அனைத்து நிகழ்வுகளுக்கும் பின்னால் ஒரு காலமும், மனித செயல்பாடும் இருக்கிறது; அதுவே வரலாறு என்பதை அறிந்தேன். அவ்வாறு அணுகியபோது, அறியாமலேயே வரலாற்றைத் தொடுபவனாக மாறினேன். வரலாற்று நாவல் எழுத வேண்டும் என்பது என் முதன்மை நோக்கமன்று. வரலாறு என்பது இன்று வாழும் நாம், நாளை இல்லாமல் போகும்போது நமது வாழ்க்கைச் சித்திரமாக மாறுவதே ஆகும். மனிதர்கள் மனிதர்களோடு எவ்வாறு உறவு கொண்டிருந்தார்கள், அதனை எவ்வாறு வளர்த்தார்கள் அல்லது வீழ்த்தினார்கள் என்பதை அறிவதே வரலாறு. 


அழகுராஜ்: தமிழ் புனைவிலக்கியத்தில் (சிறுகதை மற்றும் நாவல்களில்) வரலாற்று ஆளுமைகள் (புத்தர், காந்தி, ஜஹானாரா போன்றோர்) பாத்திரங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ள முறைகள் மற்றும் அவற்றின் இலக்கியப் பரிமாணங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?


சுகுமாரன்: புத்தரோ காந்தியோ நவீனப் புனைவுகளுக்குள் வரும்போது, அவர்கள் வெறும் மனிதர்களாகவோ அல்லது பழைய காலத்து மனித உருவமாகவோ மட்டுமே வரவில்லை. அவர்கள் ஒரு கருத்தாகத்தான் (Concept) வருகிறார்கள். அந்த கருத்து இன்றைக்கும் நம்மிடையே நடைமுறையிலும் புழக்கத்திலும் இருக்கிறது என்பதுதானே உண்மை? அதை நாம் நம்முடைய காலத்தின் கண்ணோட்டத்திலிருந்துவைத்து அணுகுகிறோம்.


        அண்மையில்கூட அமலன்  ஸ்டேன்லியின் 'புத்தம்' நாவலைப் படித்தேன். அது புத்தரைச் சமகாலத்தில் (Contemporary) நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பற்றிப் பேசுகிறது. திரும்பத் திரும்ப நாம் அதைத்தானே செய்துகொண்டிருக்கிறோம்? வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால், அது இன்றைய வாழ்க்கைக்கு எந்த வகையான பொருளைத் தருகிறது என்பதுதான். வரலாற்றுப் பின்னணியை வெறும்  கனவுலகச் சித்தரிப்பாக அமைப்பது புனைவின் நோக்கமில்லை; மாறாக,  பயணத்தின் மூலம் நாம் என்ன அடைந்தோமோ, அதை இன்றைக்கு யோசித்துப்பார்ப்பதுதான் இலக்கியம்.


அழகுராஜ்: தமிழ் இலக்கியங்கள் மலையாளத்திற்கு மொழிபெயர்க்கப்படுவதன் நிலை குறித்தும், இரு மொழிகளுக்கும் இடையிலான இலக்கியப் பரிமாற்றம் குறித்தும் கூறுங்கள்?


சுகுமாரன்: தமிழிலிருந்து மலையாளத்திற்குச் செல்லும் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு அங்கு பெரிய வரவேற்பு இருப்பதாகச் சொல்ல முடியாது. மலையாளத்திலிருந்து ஏராளமான இலக்கியங்களை நாம் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளோம்; ஆனால் தமிழிலிருந்து மலையாளத்திற்குச் சென்றவை மிகக் குறைவே. இதற்கு இரு முதன்மை காரணங்கள் உள்ளன. முதலாவதாக, தமிழிலிருந்து மலையாளத்திற்கு மொழிபெயர்க்கத் தகுதியான மொழிபெயர்ப்பாளர்கள் போதிய அளவில் இல்லை. இரண்டாவதாக, மலையாள வாசகர்களிடம் தமிழ் இலக்கியம் குறித்த ஒரு இளப்பமான அபிப்பிராயம் நிலவுகிறது. வங்காள இலக்கியத்தில்தான் அரிய படைப்புகள் உருவாகியுள்ளன என்றும், தமிழ் இலக்கியத்தில் பெரிய அளவில் எதுவும் நிகழவில்லை என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.


     தமிழில் உள்ள பல சிறந்த படைப்புகள் மலையாளத்திற்குச் செல்லாமலேயே உள்ளன. அதேவேளையில், மலையாள இலக்கியங்கள் அனைத்தும் வளமானவை என்ற தவறான பிரம்மையும் நம்மிடம் உள்ளது. மேலும், நாம் கடந்த 50 ஆண்டுகளாகச் சமஸ்கிருத ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுள்ளோம்; ஆனால் மலையாளத்தில் சமஸ்கிருதச் சொற்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதுவும் மொழிபெயர்ப்பிற்கு ஒரு சிறிய தடையாக அமைகிறது.


அழகுராஜ்: கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளுடனான தமிழ் இலக்கியப் பரிமாற்றம் எவ்வாறு உள்ளது?


சுகுமாரன்: தெலுங்கு மொழியிலிருந்து நமக்கு அதிகளவில் மொழிபெயர்ப்புகள் வருவதில்லை. அங்கு என்ன நடக்கிறது என்பதே அறிய முடியாத அளவிற்கு ஒரு இலக்கிய மூடுபனி சூழ்ந்துள்ளது. கன்னட மொழியிலிருந்து அனந்தமூர்த்தி, பைரப்பா போன்றோரின் படைப்புகள் தமிழுக்கு வந்துள்ளன. இருப்பினும், தெலுங்கில் வெளிவரும் படைப்புகள் பெரும்பாலானவை உரத்த குரலிலேயே பேசுகின்றன. 70-கள் மற்றும் 80-களில் இடதுசாரி இயக்கங்கள் வலுவாக இருந்த காலத்தில் வந்த படைப்புகளைத் தவிர்த்துப் பார்த்தால், பெருமளவில் அரசியல் நாவல்கள் தென்படுவதில்லை. அத்தகைய போக்கில் எதுவும் இல்லை என்று கூறப்படும் அதேவேளையில், இடையிடையே தெலுங்கு மொழியின் தாக்கம் எட்டிப் பார்ப்பதையும் உணர முடிகிறது. ஏனெனில், இன்றளவும் கற்பனாவாதம் (ரொமாண்டிசம்) சார்ந்த பல விஷயங்களே அதற்குள் நகர்ந்துகொண்டிருக்கின்றன. அதற்கு வெகுஜன ரீதியிலான சான்றுகளாக அவர்கள் எடுக்கும் திரைப்படங்களையே குறிப்பிடலாம்.


 தொடர்ந்து கற்பனாவாதத்திலேயே திளைத்திருக்கும்போது மற்றொரு நிகழ்வும் சாத்தியமாகிறது. அதுவே அனைத்தையும் ஒன்றாக்குதல் அல்லது ஒரே தரப்படுத்துதல் ஆகும். அது மிக எளிதாக நிகழ்ந்துவிடுகிறது. தமிழில் பல்வேறு சிக்கல்களைப் பேசக்கூடிய சிறு சிறு திரைப்படங்கள் வேறுபட்ட கோணங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், தெலுங்குத் திரைப்படங்கள் ஏறத்தாழ இரண்டு அல்லது மூன்று வகைகளுக்குள்ளேயே அடங்கிவிடுகின்றன. முதலாவது, மிகவும் சிறப்பாக நடைபெறும் ஒரு திருமண நிகழ்வை மையமாகக் கொண்டு அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கப்படும் திரைப்படம். இரண்டாவது, மிக மோசமான மனிதன் ஒருவன் இருக்க, அவனுக்கு எதிராகச் செயல்படும் கதைக்களம். மூன்றாவது, இவற்றை எல்லாம் தாண்டி இயற்கை கடந்தது அல்லது சாத்தியமே இல்லாத நிகழ்வுகளைப் புனைவது. இவை அனைத்துமே மக்களை ஒரே விதமான நம்பிக்கைக்குள் கொண்டுவந்து நிறுத்துவதற்குத் துணையாக நிற்கின்றன. அங்கு அதுவே நிகழ்கிறது.


அழகுராஜ்: பகடையாட்டம் போன்ற வரலாறு அல்லது அரசியலைப் பேசக்கூடிய நாவல்கள், அதற்கு இணையான ஊடுபிரதிகளாகத் தமிழில் வேறு ஏதேனும் வெளிவந்துள்ளனவா? குறிப்பாக, திபெத் விவகாரத்தைச் சொமிட்ஸியா என்பதாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலைப்போல ஏதேனும் வந்துள்ளதா?


சுகுமாரன்: வெளிப்படையான கட்சி அரசியலாக இல்லாமல், வேறு வகையான அரசியலைப் பேசும் படைப்புகள் தமிழில் இயல்பாகவே வந்துள்ளன. உதாரணமாக, கார்த்திக் பாலசுப்ரமணியன் எழுதிய 'தரூக்' நாவல் ஆஸ்திரேலிய பழங்குடியினரைப் பற்றிய அரசியலைப் பேசுகிறது. அதுமட்டுமின்றி, அ. முத்துலிங்கத்தின் கதைகள், ஷோபாசக்தியின் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் ஆகியவற்றிலும் அரசியல் இழையோடுகிறது. எழுத்தாளர் இமையமும் அதுபோன்ற படைப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார். இவை அனைத்துமே தமிழில் உள்ளன. இந்தியாவில் உள்ள மற்ற எந்தத் தேசிய இனத்தையும் விட, அரசியல் ரீதியாக அதிக விழிப்புணர்வு பெற்ற இனம் தமிழினமே ஆகும். எனவே, இங்கு இலக்கியங்களில் அது இயல்பாகவே வெளிப்பட்டுவிடும். ஜெயமோகனால் 'வெள்ளை யானை' போன்ற நாவலை எழுத முடிகிறது. எஸ். ராமகிருஷ்ணனால் 'சஞ்சாரம்',  'நிமித்தம்' போன்ற அரசியல் பின்னணி கொண்ட படைப்புகளை உருவாக்க முடிகிறது.


      வெளிப்படையான அரசியல் இல்லையென்றாலும், அதனை ஓர் எழுத்தாளன் செய்ய வேண்டிய கட்டாயமும் இல்லை. நாம் அனைவருமே தினமும் ஏதோ ஒரு வகையில் அரசியலுக்குள் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். நமக்குள்ளும் அரசியல் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. ஒரு விஷயத்தைப் பற்றிய தெளிவான கருத்தும், அதை எவ்வாறு செயல்படுத்துவது, அதனுடன் எவ்வாறு ஒத்துழைப்பது என்ற பார்வையும் நம்மிடம் உள்ளது.


அழகுராஜ்: தற்போது சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஊடகங்களின் பரவல் அதிகமாகியுள்ளது. இந்த ஊடகப் பரவலை இலக்கியச் சூழலில் எவ்வாறு அணுகுவது? ஒரு படைப்பை முழுமையாக வாசிக்காமலேயே அதைப் பற்றி உடனடியாகக் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதுவது ஒரு குறைபாடாக உள்ளது அல்லவா?


சுகுமாரன்: ஊடகப் பரவலை ஒரு வகையில் நேர்மறையாகவே பார்க்க வேண்டும். அது ஜனநாயக ரீதியில் அனைவரும் தங்களது அபிப்பிராயங்களைப் பதிவு செய்வதற்கான களத்தை அமைத்துக் கொடுக்கிறது. அதில் எதனை எடுத்துக்கொள்ள வேண்டும், எதனைத் தவிர்க்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். இன்று நமக்குத் தேர்வுகளுக்கான வாய்ப்புகள் (Choices) அதிகமாகிவிட்டன. முன்னர் நான்கு எழுத்தாளர்கள் மட்டுமே இருந்த சூழலில், எனக்கு இருவரைப் பிடிக்கும், இருவரைப் பிடிக்காது என்ற நிலை இருந்தது. இன்று பத்து எழுத்தாளர்கள் இருக்கும்போது, அதில் ஏதேனும் ஒன்றை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும்.


       அனைத்துக் கால கட்டங்களிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அல்லது தம்பட்டம் அடித்துக் கொள்ளும் குரல்கள் இருந்துகொண்டே தான் இருக்கும். அது இருக்கும்; ஆனால், காலப்போக்கில் மறைந்துவிடும். 


      நாம் நீண்டகாலமாகச் சொல்லி வருகின்ற ஓர் உவமைதான் இது. புதுக்கவிதை அறிமுகமான காலத்தில், சி.சு. செல்லப்பா 'எழுத்து' இதழில் புதுக்கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டார். அதன்பின்னர், தமிழின் முதல் புதுக்கவிதைத் தொகுப்பான 'புதுக்குரல்கள்' வெளிவந்தது. அதில் 23 கவிஞர்களின் 64 கவிதைகள் இடம்பெற்றிருந்தன. நீங்கள் பார்த்திருப்பீர்கள். சரி, அன்று இருந்த அந்த 23 கவிஞர்களில் இன்று எத்தனை பேர் நினைவில் இருக்கிறார்கள்? பிரமிள், க. நா. சுப்பிரமணியம், பசுவய்யா, சி. மணி, நகுலன் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டுமே எஞ்சியுள்ளனர். மீதியுள்ள நபர்கள் என்ன ஆனார்கள்? ஊடகங்களின் நிலையும் அதுவே. 


      வெகுஜனப் பத்திரிகைகளிலும் இந்த மாற்றத்தைக் காணலாம். ஒரு காலத்தில் 'தில்லானா மோகனாம்பாள்' தொடர்கதையைக் வாசிப்பதற்காக இரயில் நிலையங்களில் போய் நின்று வாங்கிப் படித்தார்கள். ஆனால், இன்று ஒரு படைப்பாளியின் கதையால் மட்டுமே இதழ்களின் விற்பனை அதிகரிக்கும் என்ற நிலை இல்லை. 


அழகுராஜ்: அதேபோல, பலர் இணைய இதழ்கள் மூலமாகப் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இணைய இதழ்கள் அதற்கான களத்தைத் தருகின்றன. இணைய இதழ்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து பார்க்கிறீர்களா?


சுகுமாரன்: நானும் இணைய இதழ்களில் எழுதியிருக்கிறேன். எனது தேவைக்கு ஏற்ப இணைய இதழ்களைப் பயன்படுத்திக் கொள்கிறேனே தவிர, அவற்றின் தேவைக்காக என்னை நான் இழப்பதில்லை.


அழகுராஜ்: பதிப்பு மற்றும் தொகுப்புப் பணிகளைச் செய்யும்போது எந்த மாதிரியான முறைகளைக் கையாள்கிறீர்கள்? குறிப்பாக, தி. ஜானகிராமன் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோரின் கதைகளைத் தொகுத்த அனுபவம் பற்றிப் பகிருங்கள்.


சுகுமாரன்: தி. ஜானகிராமன் கதைகளைத் தொகுத்ததும், ஜெயகாந்தன் கதைகளைத் தேர்ந்தெடுத்ததும் இரு வேறுபட்ட அனுபவங்கள். ஜானகிராமனின் அனைத்துக் கதைகளையும் தொகுக்கலாம் என்ற எண்ணம் வந்தபோது, நானாகவே சென்று சில இடங்களில் மாட்டிக்கொண்டேன். எனக்கு ஜானகிராமனைப் பிடிக்கும். தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் தி. ஜானகிராமனும் ஒருவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவருக்கு எனது முழுமையான ஆதரவு என்றும் உண்டு. தமிழின் சிறந்த எழுத்துக் கலைஞர்களில் முக்கியமானவர் அவர் என்று நம்புகிறேன். ஆனால், அதற்காகப் பதிப்புப் பணிகளைச் செய்ய வேண்டும் என்றெல்லாம் நான் திட்டமிடவில்லை. உண்மையில், பிரபஞ்சன் தான் ஜானகிராமனின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவது என்றும், அவரது கதைகளை ஒழுங்குபடுத்தித் தொகுப்பது என்றும் ஒப்புக்கொண்டிருந்தார். அது நடைபெறாமல் போன சூழலில், விருப்பப்பட்டு 'நான் செய்யட்டுமா?' என்று கேட்டு வாங்கிப் பண்ணத் தொடங்கினேன்.


     எனக்குக் கல்விப்புலம் சார்ந்த அகாடமிக் அறிவோ அல்லது முறையான பயிற்சியோ கிடையாது. எனவே, எனக்குத் தோன்றும் எளிய முறையிலேயே அதனைத் தொகுக்க முடியும் என்று தோன்றியது. ஏனெனில், இதற்கு முன்னர் தமிழில் வெளியான ஆ. இரா. வேங்கடாசலபதியின் புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பு, பெருமாள்முருகனின் கு. ப. ராஜகோபாலன் கதைகள் தொகுப்பு, பழ. அதியமானின் அழகிரிசாமி கதைகள் தொகுப்பு போன்றவை கல்விப்புல ஒழுங்குடன் (Academic sense) அமைந்திருந்தன. எனக்கு அந்த ஒழுங்கோ, அதற்கான பயிற்சியோ கிடையாது. ஜானகிராமனை ரசனைப்பூர்வமாக அணுகிய எனது பார்வையின் அடிப்படையிலேயே தொகுக்க முடிவு செய்து செய்ய ஆரம்பித்தேன். முதல் பதிப்பு அவ்வாறே வெளிவந்தது; முன்னுரையிலும் அதைக் குறிப்பிட்டிருந்தேன்.


      இரண்டாவது பதிப்பில் தான் அதனை ஓர் அகாடமிக்கான தன்மையில் செப்பனிட்டேன். ஏனெனில், ஒரு தொகுப்பைச் செய்து முடித்த பிறகு கொஞ்சம் கற்றுக்கொண்டேன் அல்லவா, அதை வைத்து இரண்டாவது பதிப்பைச் செய்தேன். எனக்கு இதில் சில கருத்து வேறுபாடுகள் உண்டு. கல்விப்புலத்தில் உள்ளவர்களுக்கு, ஓர் எழுத்தாளன் எழுதிய அனைத்தையும் மீண்டும் அச்சிற்குக் கொண்டுவர வேண்டும், பதிப்பித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், எனக்கு அப்படி ஒரு அபிப்பிராயம் இல்லை. தி. ஜானகிராமனுடைய முதல் பதிப்பில் வந்த கதைகளே மிக முக்கியமானவை. ஏனெனில், அவர் உயிரோடு இருந்த காலத்தில் அந்தப் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அப்படியெனில், அந்தத் தேர்வு அவருடையதாகத்தானே இருக்கும்? அதிலிருந்து விடுபட்ட கதைகள் வேண்டாம் என்று அவரே முடிவு செய்திருக்கலாம் என நாம் யூகிக்க முடிகிறது. ஆனால், கல்விப்புலத்தைச் சார்ந்த ஒருவர் தொகுக்கும்போது அனைத்தையும் சேர்த்து விடுகிறார். 


      இதேபோல தொகுக்கும்போது வேறொரு நண்பர் ஜானகிராமனுடைய 'அபூர்வ மனிதர்கள்'  தொகுப்பு இருப்பதைக் கூறினார். அது அவர் 'தினமணி கதிர்' இதழில் எழுதிய நடைச்சித்திரங்கள்;  கதை போன்றுதான் இருக்கும். அதையும் சிறுகதையாகச் நாம் சேர்க்கலாம்  என்றபோது நான் உடன்படவில்லை. ஏனெனில், ஜானகிராமன் அதனைச் சிறுகதை என்று குறிப்பிடவில்லை. அதனால் அது வேண்டாம் என்றேன். அந்த வகையில் தான் என்னுடைய பதிப்பு அமைந்தது. இதனை நான் திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறேன்; இது ஆய்வுப் பதிப்பு அன்று, ஆர்வப் பதிப்புதான்.


       மற்றபடி ஜெயகாந்தனின் கதைகள், ஆ. மாதவனின் கதைகள் ஆகிய இரண்டையும் நான் தொகுத்துப் பதிப்பித்துள்ளேன். அவை எனக்குப் பிடித்த கதைகள் அல்லது எனது வாசிப்பில் மிக முக்கியமானவை என்று பட்ட கதைகள். மேலும், தமிழ்ச் சிறுகதைப் பரப்பிற்குள் இந்தக் கதைகள் பேசப்பட வேண்டும் என்று நான் நினைத்த கதைகள். அப்படித் தான் அவற்றைத் தொகுத்திருக்கிறேன். அதற்கு என்று ஒரு இறுக்கமான அளவுகோலை நான் வைத்துக்கொள்ளவில்லை.


அழகுராஜ்: தி. ஜானகிராமனின் கதைகளில் 'இசை' சார்ந்த கதைகள் மிகவும் சிறப்பானவை. செய்தி போன்ற கதைகளில் இசையைப் பற்றிப் பேசியிருப்பார். உங்களுக்கும் இசை மிகவும் பிடிக்கும் என்பதால், அந்தத் தொகுப்புப் பணியின் போது மறுபடியும் வாசித்த அனுபவத்தில், புதிதாக என்ன மாதிரியான விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது?


சுகுமாரன்: ஒரு படைப்பை நீங்கள் செவ்வியல் படைப்பு என்று எப்போது கூறுவீர்களென்றால், அதனை இரண்டாவது முறை, மூன்றாவது முறை அல்லது முப்பதாவது முறை படிக்கும்போதும் அது புதிதாக ஏதேனும் ஒன்றை உங்களுக்குத் தர வேண்டும். அப்படித் தரக்கூடிய ஓர் எழுத்தாளர்தான் தி. ஜானகிராமன்.


     அவரது கதைகளில் இரண்டைப் பற்றிக் கூற வேண்டும் என நினைக்கிறேன். ஒன்று 'செய்தி' என்ற கதை. அதில் நாதஸ்வர வித்துவான்  'சாமா' ராகத்தை வாசிப்பார். அது சமாதானத்தைத் தரக்கூடிய ராகம்.  அந்தச் செய்தி இசையைக் கேட்கும் அந்நியருக்குத்  தெரியாது. ஏதோ ஒரு யுத்தம், கட்டிடங்கள் எல்லாம் இடிந்து விழுகின்றன, குழந்தைகள் ஓடுகிறார்கள், அதற்குப் பிறகு அமைதி வருகிறது—அதனை உணர்ந்தேன் என்பார். அது இசை அளித்த செய்தி என்பதாக அந்த ராகம் அமையும்.


       நமக்கும் அது வெறும் செய்தியாகத்தான் இருக்கும். ஆனால், ஏதோ ஒரு நாளில் அந்தச் சாமா ராகத்தைக் கேட்டுக்கொண்டிருந்தபோது இதனை அப்படியே ஜானகிராமன் பாடியிருக்கிறார் என்று தோன்றியது! அவர் எழுதியிருக்கிறார் என்று தோன்றவில்லை, 'பாடியிருக்கிறார்' என்றே தோன்றியது. அப்படியான ஒரு புதிய திறப்பை அது அளித்தது. சாமா ராகத்திற்கு இப்படிப்பட்ட குணம் இருக்கிறது என்பது சங்கீதம் தெரிந்தவனுக்குத் தெரியலாம், நான் சங்கீதம் கேட்கிறவனே தவிர சங்கீத அறிஞன் அல்லன். எனக்குப் புதிதாக அந்த இசைக்குள் அது தெரிந்தது. அதன் மூலமாக அந்தச் சிறுகதை வேறொரு தளத்திற்கு, உயர்த்தப்பட்ட ஒரு தளத்திற்குச் செல்கிறது.


     இரண்டாவது, 'இசைப் பயிற்சி' என்றொரு கதை. தீண்டப்படாத சிறுவன் ஒருவன், மற்ற சிறுவர்களுக்கு இசை கற்றுக்கொடுப்பதைப் கேட்டுக்கொண்டிருப்பான். அவனைக் பார்த்ததும் "இவ்வளவு நன்றாகப் பாடுகிறாயே!" என்று பாராட்டி, அவனைக் கொட்டகையில் உட்கார வைத்துச் சங்கீதம் கற்றுக்கொடுப்பார். உடனே மற்றவர்கள் எல்லாம் தீட்டாகிவிட்டது, இவனுக்கு எப்படிச் சொல்லித் தரலாம் என்று எதிர்ப்பார்கள். அதற்கு இவர், "சங்கீதத்திற்குச் சாதி வேறுபாடு எதுவும் கிடையாது" என்பார். "இன்றைக்கு வகுப்பு இத்துடன் முடிந்தது, நாளைக்குச் சீக்கிரமாக வா, வீட்டுக்குள் வைத்துதான் கற்றுக்கொடுக்கப் போகிறேன்" என்பார். அது மிகவும் சிறப்பான கதை. சங்கீதம் என்பது சாதியைக் கடந்த வேறு ஏதோ ஒன்றைச் செய்கிறது என்ற மற்றொரு பரிமாணம் அதில் புலப்படும்.


     மூன்றாவது, 'பாஷாங்க ராகம்' என்றொரு கதை. ஒரு குடும்பத்தின் கதை.  கடித வடிவில் எழுதப்பட்டது. ஓர் இசை விமர்சகர் இறந்துவிடுகிறார். அவருக்கு அஞ்சலி தெரிவித்துப் பத்திரிகையில் ஒரு பெரிய கட்டுரை வருகிறது. அதற்கு நன்றி தெரிவித்து அவருடைய மகள் அப்பத்திரிகையாசிரியருக்குக் கடிதம் எழுதுகிறாள். "பத்திரிகையில் எழுதியதற்கு நன்றி, ஆனால் அது அனைத்துமே பொய்; இதன் உண்மையை இப்பொழுதாவது கூற வேண்டும் என நினைக்கிறேன்" என்பதுதான் அந்தக் கடிதம்.


      இசை விமர்சகராக இருந்த அவளுடைய தந்தைக்கு இசையில் பெரும் ஈடுபாடு உண்டு. அவருக்கு மூன்று மகன்கள். மூன்று பேருக்கும் இசை கற்றுக்கொடுக்கிறார். அதில் மூன்றாவது பையனுக்கு எதுவுமே வரவில்லை. முதல் இரண்டு மகன்களும் பிரமாதமாகப் பாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த இரண்டு மகன்களும் இறந்துபோன பிறகு, இவனிடம் "கற்றுக்கொள்" என்றால் இவனால் கற்றுக்கொள்ள முடியவில்லை. பாட வரவில்லை, இசையின் நுட்பங்கள் தெரியவில்லை; ஆனால் இலக்கணம் தெரிகிறது! இப்படிப் பாடினால் இந்த ராகம், இப்படி வாசித்தால் இது என்று இலக்கணம் மட்டும் தெரிகிறது.


      "உனக்குச் சங்கீதமே வராது" என்று தந்தை விட்டுவிடுகிறார். ஆனால், இவர் பேசுவதைக் கேட்டுப் பல வித்வான்கள் இவருக்கு நிறையச் சங்கீதம் தெரியும் போலிருக்கிறது என்று நினைக்கிறார்கள். அப்படித்தான் அவருக்குத் திருமணமும் நடக்கிறது. மனைவியிடமும் அதையே பேசுகிறார். வேலைக்கே போக வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். "சரஸ்வதியே கை கூப்பிச் சேவை செய்யும்போது நான் எதற்கு வேலைக்குப் போக வேண்டும்?" என்கிறார். ஒரு கட்டத்தில், வீட்டிற்கு வந்துபோகும் நண்பருக்கும் தன் மனைவிக்கும் இடையே ஏதோ ஓர் உறவு இருப்பதை அறிந்து கோபப்படுகிறார். அதற்கு மனைவி, "நீ ஒழுங்காகக் குடும்பத்தைக் கவனித்திருந்தால் அவன் வரப்போவதில்லை. நீ சாப்பிட்ட காபி, சோறு, உடுத்திய உடை எல்லாமே அவன் கொடுத்ததுதான்" என்று கூறியதும் உடைந்துபோகிறார்.


      அப்போது ‘’ஒரு கச்சேரியில், "பாஷாங்க ராகம் எப்போது வரும்?" என்று கேள்வி எழும்.  அதாவது, ஒரு ராகம் ஒழுங்காகப் பாடப்படாமல் போகும்போது அந்நிய சுரம் உள்ளே வரும். "இந்தச் சுரம் ஒழுங்காக வேலை செய்யாதபோது பாஷாங்க ராகம் வரும்" என்று மையப் பாத்திரமான பெண் சொல்லுவாள்.  எனக்கு அந்தக் கதை அப்போது புரியவில்லை, பின்னர்தான் புரிய ஆரம்பித்தது. அது இசையைப் பற்றிய கதை அல்ல; ஒரு பெண்ணை நீ வெறும் பெண்ணாக மட்டுமே பார்த்திருக்கிறாய், வேறு எதாகவும் பார்க்கவில்லை என்பதை உணர்த்தும் கதை அது.


அழகுராஜ்: கவிதைகளைப் பாடலாக, இசையோடு பாடுவதைக் கேட்பதுண்டா? கவிதைகள் பாடலாக மாற்றப்படும் முயற்சிகள் பற்றிச் சொல்லுங்கள்.


சுகுமாரன்: அடிப்படையில் பாடல் வேறு, கவிதை வேறு. அப்படி வேறுபட்ட ஒன்றாக இருந்தாலும் அத்தகைய முயற்சிகளும் நடக்கத்தான் செய்கின்றன. எனக்கு அந்த முயற்சிகளிலோ அல்லது கதை சொல்லும் முயற்சிகளிலோ பெரிய ஈடுபாடு இல்லை.


அழகுராஜ்: நீங்கள் மேற்கொண்ட பயணங்கள் குறித்து இதுவரை எழுதாத முக்கியமான விஷயங்கள் ஏதேனும் உள்ளனவா?


சுகுமாரன்: என்னுடைய கல்லூரிப் படிப்பு முடியும் வரை எனக்குப் பயணங்கள் சாத்தியப்படவில்லை. அதன் பிறகு வாய்ப்புகள் கிடைத்தன. சிறு சிறு இடங்களாகச் சென்றேன். முதலில் கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டம், அப்புறம் தமிழ்நாடு, பிறகு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என்று ஒருவகையில் நிறையச் சுற்றியிருக்கிறேன். அவை எல்லாமே எழுதித் தீர்த்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன். இன்னும் ஏதேனும் பாக்கி இருக்கிறதா என்று தெரியவில்லை.


அழகுராஜ்: கடைசியாகப் பார்த்த அல்லது நீங்கள் பார்த்த திரைப்படங்களில் ஒளிப்பதிவு (Cinematography) போன்ற அம்சங்களில் சிறப்பாக அமைந்த படங்கள் எவை?


சுகுமாரன்: திரைப்படத்தை அப்படிப் பிரித்துப் பார்ப்பதில்லை. திரைப்படம் என்பது  முழுமையான கலை. அதில் எல்லாமே சேர்ந்ததுதான். அப்படிச் சொல்ல வேண்டுமெனில் நிறையப் படங்களைக் குறிப்பிட முடியும். அதனைப் பற்றித் தனியாகப் பேசலாம்.


அழகுராஜ்: அதில் ஏதேனும் ஒன்று இரண்டைக் குறிப்பிடுங்களேன்?


சுகுமாரன்: இயக்குநர் அஸ்கர் ஃபர்ஹாதியின் 'ஏ செப்பரேஷன்' (A Separation) என்ற ஈரானியத் திரைப்படத்தைச் சொல்லலாம். எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் அப்பாஸ் கியாரோஸ்தமி. 'வேர் இஸ் தி பிரண்ட்ஸ் ஹவுஸ்?' (Where Is the Friend's House?) போன்ற படங்களை எடுத்தவர்.


    மற்ற புலன்களை எல்லாம் மூடிவிட்டு, காதை மட்டும் திறந்து வைத்து இசை கேட்கிறோமல்லவா? அதுபோல மற்ற புலன்களை எல்லாம் மூடிவிட்டு, கண்ணை மட்டும் திறந்து வைத்துப் பார்த்த திரைப்படங்கள் என்றால் அது தார்க்கோவ்ஸ்கியின் (Tarkovsky) திரைப்படங்கள். அவருடைய காட்சிகளின் கவித்துவத்திற்காகப் பார்க்கப்பட்ட படங்கள் அவை. இன்னும் நிறையப் பேரின் படங்கள் உள்ளன.


அழகுராஜ்: நவீன நாடகங்கள் பற்றி உங்கள் மதிப்பீடு என்ன?


சுகுமாரன்: எனக்குப் பரிச்சயம் இல்லாத அல்லது அவ்வளவு விருப்பம் இல்லாத இலக்கியத்துறை அல்லது கலைத்துறை என்றால் அது நாடகம்தான். பெரிதாகப் பார்த்ததில்லை. அதைப் பற்றி அபிப்பிராயம் சொல்லும் அளவுக்குக் கூட எனக்கு அதில் அனுபவம் இல்லை. சில நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். இந்தி, மராத்தி, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில். தமிழ் நாடகங்களில்  பரீட்சார்த்தமான 'பரிக்ஷா' அமைப்பின் நாடகங்கள் மீது எனக்குப் பெரிய அபிப்பிராயம் இல்லை. ந.முத்துசாமி போன்றவர்கள் செய்த நாடகங்களும் அப்படியே. அதனால் அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதே நல்லது, மன ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதனால் நான் பேசுவதில்லை. எனக்கு அது பிடிபடவில்லை.


அழகுராஜ்: தமிழ் இலக்கியச் சூழலில் முன்பும் மொழிபெயர்ப்புகள் அதிகமாக இருந்திருக்கின்றன. மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் பல படைப்புகள் தமிழில் வந்துள்ளன. ஆனால், சமீபகாலமாகத் தொழில்நுட்பம் மற்றும் பிற வசதிகள் காரணமாக மொழிபெயர்ப்பு அதிகளவில் வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த மொழிபெயர்ப்பின் வரவு தேவையின் காரணமாகவும் சந்தையின் காரணமாகவும் நிகழ்கிறதா? மேலும், இத்தகைய மொழிபெயர்ப்புகளின் வருகை தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு நெருக்கடியையோ அல்லது போட்டிகளையோ உருவாக்குமா? வாசகர்கள் தமிழ் எழுத்தாளர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பை வைக்க இது வழிவகுக்குமா? 


சுகுமாரன்: இதில் அச்சப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தமிழைப் பொறுத்தவரை 1940-கள், 50-களிலிருந்தே மொழிபெயர்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. 50-கள், 60-களில் மிகப்பெரிய அளவிலான மொழிபெயர்ப்புகள் தமிழில் வெளிவந்துள்ளன. 


    தமிழில் மொழிபெயர்ப்பில் ஈடுபடாத படைப்பாளர்களே இல்லை எனலாம். க. நா. சுப்பிரமணியம், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன் என யாரைக் குறிப்பிட்டாலும், அவர்கள் அனைவரும் ஒன்று அல்லது இரண்டு மொழிபெயர்ப்புகளையாவது செய்திருக்கிறார்கள். 

‌

      இரண்டாவதாக, தமிழ் நூல்களை அச்சிட்டுப் பதிப்பித்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் ‘பேர்ல் பப்ளிகேஷன்ஸ்’ (Pearl Publications) என்ற அமெரிக்க நிறுவனம், ஹெமிங்வே போன்றவர்களின் பல அமெரிக்க நாவல்களைத் தமிழில் கொண்டு வந்தது. க.நா.சு., வல்லிக்கண்ணன் போன்ற பலர் அந்தப் பதிப்பகத்திற்காக மொழிபெயர்ப்புகளைச் செய்தனர். 


     40-களின் இறுதியில் தொடங்கி 60-கள், 70-கள் வரை நம்மைப் பெரிதும் செல்வாக்கிற்கு உட்படுத்தியது ரஷ்ய இலக்கியங்கள் தாம். அவ்வளவு பெரிய படைப்புகள் வந்தபோதும், அவை தமிழ் எழுத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை; இனிமேலும் பாதிக்காது. ஏனெனில், அவற்றின் வீச்சு அல்லது தாக்கம் என்பது மிகவும் குறைவு. 


      ஒரு சான்றாக, மார்க்வெஸின் 'தனிமையின் நூறு ஆண்டுகள்' நாவலை எடுத்துக்கொள்வோம். மலையாளத்தில் அது 1985-86-ல் வெளிவந்தது. 1982-ல் நோபல் பரிசு பெற்றவுடனேயே அது அங்கு மொழிபெயர்க்கப்பட்டு, ஆண்டிற்கு 2000 படிகள் என அச்சிடப்பட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான படிகள் விற்பனையாயின. ஆனால் தமிழில் இதுவரை 13 பதிப்புகள் வந்து, சுமார் 10,000 முதல் 15,000 படிகள் மட்டுமே விற்பனையாகியிருக்கும். எனவே, இது பெரிய போட்டியாக அமையாது. 


     அடிப்படையில் மொழிபெயர்ப்புகள் செய்யக்கூடிய முதன்மை விஷயம் என்னவென்றால், அவை உங்களுடைய எழுத்து நுண்ணுணர்வில் (Sensibility) சில தாக்கங்களை ஏற்படுத்தும். அதுபோன்ற எழுத்து நடைக்கு அது வழிகோலும். 'தனிமையின் நூறு ஆண்டுகள்' போன்ற நாவல்கள் வந்திருக்காவிட்டால், பா. வெங்கடேசனின் 'தாண்டவராயன் கதை’ அல்லது தமிழவனின் 'ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்' போன்ற நாவல்கள்  உருவாகியிருக்க வாய்ப்பில்லை. ஜெயமோகன் எழுதிய 'காடு', 'கன்னியாகுமரி' போன்ற கதைகளும், எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி ஆகியோரின் எழுத்துகளும் மார்க்வெஸ் அல்லது மாய யதார்த்தவாதத்தின் சாயல் கொண்ட கதைகளே. ஒரு மொழிபெயர்ப்பு இந்த மொழிக்குள் செய்யக்கூடியது இத்தகைய தாக்கங்களைத்தான். கதை சொல்லும் முறையில் புதிய உத்திகளை உருவாக்குவதற்கும், புதிய வாக்கிய அமைப்புகளுக்கும், புதிய துணைப் பிரதிகள் உருவாவதற்கும் இது இடமளிக்கிறது. எனவே மொழிபெயர்ப்பு என்பது வரவேற்கத்தக்கது. 


     இப்போது தகவல் தொடர்பு எளிதாகிவிட்டதால், மொழிபெயர்ப்பு அதிகமாக இருப்பது போன்ற தோற்றம் கிடைக்கிறது. மேலும், அன்றுபோல ஒரு புத்தகத்திற்காகப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியமும் இன்றில்லை. அத்துடன், புதிய தலைமுறையினர் மொழிபெயர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது பெண்களே அதிகளவில் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் பெரும்பாலான மொழிபெயர்ப்புகளைப் பெண்களே செய்துள்ளனர். அதற்கான களமும் வாய்ப்புகளும் உருவாகுவதோடு, தமிழ் போன்ற ஒரு பெரும் மொழி அதற்கு இடம் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


      இதில் அடிப்படையான சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். நமது மொழி மற்றும் பண்பாடு ஆகியவை சில விஷயங்களை ஏற்கும்; சிலவற்றை ஒதுக்கித் தள்ளும். எனவே, மொழிபெயர்ப்பில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அந்த மொழிபெயர்ப்பு இந்த மொழிக்கு ஏதேனும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பைத் தருகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். கண்ணில் படுவதையெல்லாம் மொழிபெயர்த்துத் தர வேண்டிய அவசியமில்லை. நமது மொழி ஒன்றும் குப்பைத் தொட்டி அல்ல. ஏற்கனவே நம்மிடம் சில தேவையில்லாதவை இருக்கும்போது, புதிய குப்பைகளை நாம் சுமக்க வேண்டியதில்லை. அந்தத் தேர்வு மிக முக்கியமானது. ஆனால், இன்றைய சூழலில் மொழிபெயர்ப்பாளர்களின் ஆர்வத்தின் காரணமாக அந்தத் தேர்வு சற்று குறைந்திருக்கிறது. 


குமரேஸ்வரன்: நாராயண குரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தபோது எழுந்த சர்ச்சைகள் பற்றியும், அதை அவர் எதிர்கொண்ட விதம் பற்றியும் கூறுங்கள். 


சுகுமாரன்: நாராயண குரு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தபோது, நம்பூதிரிகள் உள்ளிட்ட மேல்தட்டுப் பிரிவினர் "நாங்கள் வராததால் நீங்கள் பிரதிஷ்டை செய்துவிட்டீர்களா?" என்று கேட்டனர். அதற்கு அவர், "நாங்கள் பிரதிஷ்டை செய்தது ஈழவ சிவன்; பிராமண சிவன் அல்ல" என்று மிகத் தெளிவாகவும் நுட்பமாகவும் பதிலளித்தார். 


அழகுராஜ்: மலபார் பகுதியில் நடைபெற்ற 'மாமாங்கம்' விழா மற்றும் சாவேர் படை பற்றிய பின்னணி என்ன? 


சுகுமாரன்: 'மாமாங்கம்' என்பது கோழிக்கோடு மற்றும் மலபார் பகுதியில் நடைபெற்ற ஒரு விழா. அதில் இரு ஜமீன்தார்கள் நேரடியாக மோதிக்கொள்ளாமல், தங்களுக்காகப் போராட 'சாவேர் படை' என்ற ஒரு சிறப்புப் படையை உருவாக்கி அனுப்புவார்கள். அந்தப் படைகள் ஒன்றோடொன்று மோதி உயிரை இழக்கும்; அதில் வெற்றி பெறுபவரே வெற்றியாளராகக் கருதப்படுவார். இந்த மனிதநேயமற்ற செயலுக்குப் புனிதத்தன்மை பூசப்பட்டு, கனவில் அழைப்பு வருவது போன்ற கதைகளும் புனையப்பட்டன. 


வேலாயுதம் பொன்னுசாமி: கமல்ஹாசனின் 'ஹே ராம்' திரைப்படத்தில் வரும் மாமியார் கதாபாத்திரம் (ஹேமா மாலினி ஏற்றது) தி.ஜானகிராமனின் 'அலங்காரத்தம்மாள்' கதாபாத்திரத்தை ஒத்திருக்கிறதே? 


சுகுமாரன்: ஆம், 'ஹே ராம்' திரைப்படம் ஒரு சிறந்த படைப்பு. அதில் பல இலக்கியக் கூறுகள் மற்றும் கவிதைகளின் தாக்கங்கள் (ஜீவனானந்த தாஸ் கவிதைகள் போன்றவை) இடம்பெற்றுள்ளன. நீங்கள் குறிப்பிட்டது போல, அந்தப் படத்தில் வரும் மாமியார் கதாபாத்திரத்தில் 'அலங்காரத்தம்மாள்' நாவல் கதாபாத்திரத்தின் சாயலும், கிரீஷ் கர்னாடின் படைப்புகளின் தாக்கமும் இருப்பது உண்மைதான். 


அழகுராஜ்: கர்நாடக இசைத்துறையுடனான உங்களின் அனுபவங்கள் மற்றும் தொடர்புகள் குறித்துக் கூறுங்கள். 


சுகுமாரன்: எம்.டி.ராமநாதனின் கச்சேரியை முதன்முதலில் கேட்டது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம்.‌ என் நண்பர் 'இசை' தனது கட்டுரையில் "நீங்கள் இலக்கியத்திற்குள் நுழையும் போது, உங்களை முதன்முதலில் விழித்துப் பார்க்கச் செய்யும் முகம் சிறந்ததாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருப்பார். அவர் நண்பர் இளங்கோ கிருஷ்ணன் கூறியதாகவே அதை எழுதியிருப்பார். "எங்களை விழித்தெழச் செய்த முகம் சுகுமாரனின் முகம்" என்று அவர் குறிப்பிட்டிருப்பார். அதுபோல, சங்கீதத்தில் என்னை முதன்முதலில் விழிக்கச் செய்த முகம் எம். டி. இராமநாதனுடையதுதான். அவர் ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் (Master of Masters). இத்தகைய அனுபவங்கள் நம்மை விட்டு ஒருபோதும் விலகாது. 


குமரேஸ்வரன்: டி. எம். கிருஷ்ணா அவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமி பற்றி எழுதிய பதிவுகள் குறித்து உங்கள் கருத்து என்ன? 


சுகுமாரன்: டி. எம். கிருஷ்ணாவின் விமர்சனம் எம். எஸ். சுப்புலட்சுமி பற்றியது. டி. கே. பட்டம்மாளுக்குத் பாரம்பரியமான பின்னணி இருந்தது; ஆனால் எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களை நாம் ஒரு 'தெய்வீகப் பிம்பமாக' (Deity) மாற்றிவிட்டோம் என்பதுதான் கிருஷ்ணாவின் பிரதான விமர்சனம். அந்த அம்மா இயல்பாகவே ஒரு சிறந்த கலைஞர். ஆனால், அவரை ஒரு கலைஞர் என்ற தளத்தில் நிறுத்துவதற்குப் பதிலாக, ஒரு 'பக்திப் பாடகியாக' மட்டுமே சுருக்கிவிட்டார்கள். 


      தேவதாசி குலத்திலிருந்து வந்த ஒரு பெண்ணைப் பிராமணர்கள் அனைவரும், காஞ்சி சங்கராச்சாரியார் உட்படக் கொண்டாடினார்கள். இந்திரா காந்தியைக்கூட தள்ளி உட்காரச் சொல்லக்கூடிய சங்கராச்சாரியார், எம். எஸ். சுப்புலட்சுமியைத் தன் அருகில் அமரவைத்து பாட்டுக் கேட்டார். 


       ஆனால், கிருஷ்ணாவின் ஆதங்கம் என்னவென்றால், அவரை முழுமையான ஒரு கலைஞராக ஆக விடாமல், ஒரு 'பக்திப் பாடகியாகவும்', 'பாடும் இயந்திரமாகவும்' (Singing Machine) மாற்றிவிட்டார்கள் என்பதுதான். ஆண்டாளின் 'திருப்பாவை'யைக் கொண்டாடிய அளவுக்கு, 'நாச்சியார் திருமொழி'யைப் பேசாமல் அதை ஓரங்கட்டிவிட்டார்கள். ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாடலை ஏற்றுக்கொள்ளாமல், பெண் என்ற நிலையிலிருந்து உயர்த்தி, கடவுள் நிலைக்குக் கொண்டு சென்றுவிடுவது இந்தச் சமூகத்தின் பொதுவான இயல்பாகவே இருக்கிறது. 


       டி. ஜே. எஸ். ஜார்ஜ் எழுதிய 'எம்.எஸ்.சுப்புலட்சுமி - ஒரு வாழ்க்கை வரலாறு' (ஆங்கிலத்தில்) என்ற புத்தகம் உள்ளது; பாரதி புத்தகாலயம் அதைத் தமிழில் வெளியிட்டுள்ளது. அது ஒரு நாவலைப் போன்ற சுவாரஸ்யம் கொண்டது. ஜி. என். பாலசுப்பிரமணியம்.  எம். எஸ். சுப்புலட்சுமி இடையிலான காதல், "நீ கூப்பிட்டால் நான் வந்துவிடுவேன்" என்று அவர் கடிதம் எழுதும் அளவிற்கு தீவிரமாக இருந்தது. ஆனால், எம். எஸ். சுப்புலட்சுமி என்ற ஒரு பெரிய பிம்பம் உருவாகிக் கொண்டிருந்ததால், அந்த உறவு தொடரவில்லை. அந்தக் கடிதங்களையெல்லாம் டி. ஜே. எஸ். ஜார்ஜ் தன் புத்தகத்தில் பிரசுரித்துள்ளார். 


அழகுராஜ்: தமிழ் சினிமா மற்றும் பிற மொழிச் சினிமாக்களுக்கு இடையிலான வேறுபாடுகள் மற்றும் யதார்த்த நிலை குறித்து உங்கள் பார்வை என்ன? 


சுகுமாரன்: மலையாளச் சினிமாவில் கடந்த 70-75 ஆண்டுகளாக இடதுசாரி மனோபாவம் நிலவி வருகிறது. அது யதார்த்தமான பதிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஒரு மலையாளப் படத்தைப் பார்த்தால், அக்கதாபாத்திரத்தின் வீடு, சாதி, தொழில், பழக்கவழக்கம் எல்லாவற்றையும் எளிதாகக் கண்டறிந்துவிட முடியும். இயக்குநரோ, கதை ஆசிரியரோ பிரத்யேகமாக மெனக்கெடாமல் இயல்பாகவே அதை அமைத்திருப்பார்கள். 


    ஆனால், தமிழில் தொடக்கத்திலிருந்தே சினிமா என்பது ஒரு 'பொழுதுபோக்குச் சாதனமாக' (Entertainment value) மட்டுமே பார்க்கப்பட்டது. அதை ஒரு கதையாகவோ அல்லது கலைப் படைப்பாகவோ பெரிதாகக் கருதவில்லை. 


      உதாரணத்திற்கு, இந்தித் திரையுலகின் மிகப்பெரிய நடிகரான அசோக் குமார் 'ஆலம் ஆரா' போன்ற படங்களிலும், திலீப் குமார் 'மதர் இந்தியா' போன்ற சமூக விழிப்புணர்வுப் படங்களிலும் நடித்தார்கள். பெங்காலியின் சூப்பர் ஸ்டார் உத்தம் குமார், சத்தியஜித் ராயின் 'நாயகன்' (Nayak) படத்தில் நடித்தார். மலையாள சூப்பர் ஸ்டார் பிரேம் நசீர், எம்.டி.வாசுதேவன் நாயரின் 'அடிமைகள்' படத்தில் நடித்தார். 


     ஆனால், சிவாஜி கணேசன் போன்ற ஒரு மாபெரும் கலைஞனுக்கு அத்தகைய வாய்ப்புகள் அமையவே இல்லை. அவர் 'திருவிளையாடல்', 'கர்ணன்', 'பாசமலர்' போன்ற பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கைப் படங்களிலேயே நடிக்க நேரிட்டதே தவிர, உலகத் தரத்திலான மாற்றுச் சினிமாக்களில் நடிக்கவில்லை. கன்னடத்திலிருந்தோ, மலையாளத்திலிருந்தோ, வங்காளத்திலிருந்தோ உலகத் தரத்திற்கு இணையான சிறந்த படங்களை நம்மால் சுட்டிக்காட்ட முடியும். ஆனால், தமிழ் திரையுலகில் உலகத் தரத்திற்கு இணையான ஒரு திரைப்படத்தைச் சுட்டிக்காட்டுவது இன்றளவும் சவாலான ஒன்றாகவே உள்ளது.


குமரேஸ்வரன்: தமிழ் வாழ்க்கை, தமிழ்ப் பண்பாடு மற்றும் தமிழர்களின் அன்றாட வாழ்வியல் ஆகிய அனைத்தையும் பிரதிபலிக்கும் ஒரே திரைப்படமாக நீங்கள் எதைச் சுட்டிக்காட்டுவீர்கள்? 


சுகுமாரன்: அப்படி ஒரே திரைப்படமாக எதையும் முழுமையாகச் சொல்லிவிட முடியாது. மணிரத்னம் அல்லது பாரதிராஜாவின்  படங்கள் சில தளங்களில் நெருக்கமாக அமைந்திருந்தாலும், அவை செயற்கையான கதையமைப்பைக் கொண்டவைதான். 'டூ லெட்' அல்லது 'கடைசி விவசாயி' போன்ற நவீன திரைப்படங்களும் கூட மக்களின் பெரும்பாலான பொதுவான பிரச்சனைகளைப் பேசுவதில்லை. 


      மாறாக, 'பருத்திவீரன்' போன்ற திரைப்படங்கள் கிராமிய வாழ்க்கையின் யதார்த்தமான கரடுமுரடான தன்மையைப் (Rawness) பேசுகின்றன. இருப்பினும், அதில் காட்டப்படும் அளவிற்கான வன்முறை நிஜ வாழ்க்கையில் இல்லை. எனவே, தமிழ் சினிமாவை பொறுத்தவரை தமிழ் வாழ்க்கையானது பகுதி பகுதியாகவே பல படங்களில் பதிவாகியுள்ளது. 


குமரேஸ்வரன்: தமிழில் பொழுதுபோக்குத் திரைப்படங்கள் ஒருபுறம் இருக்க, அரசியல் அல்லது கருத்துப் பிரச்சாரம் செய்யும் திரைப்படங்களும் உருவாகி வந்திருக்கின்றன அல்லவா? 


சுகுமாரன்: நிச்சயமாக, கதைகளில் மூன்று வகைகள் உண்டு: 


     முதலாவது கதைக்காக மட்டுமே உருவாக்கப்படும் கலைப் படைப்புகள். இரண்டாவது பொழுதுபோக்கிற்காகப் பயன்படுபவை. மூன்றாவது கருத்துப் பிரச்சாரத்திற்காகப் பயன்படுபவை. இந்திய மொழிகளிலேயே பிரச்சாரத்திற்காகக் கதையையும், சினிமாவையும், நாடகத்தையும் மிகவும் வெற்றிகரமாகப் பயன்படுத்திய பெருமை தமிழுக்கே உரியது. திரைப்படப் பிரச்சாரத்தின் வழியே ஆட்சியையே கைப்பற்றிய இடம் நம் தமிழ்நாடு. கேரளாவில் கம்யூனிசம் சார்ந்த நாடகங்களும் எழுத்துகளும் தீவிரமாக இருந்தபோதிலும், தொழிலாளர்களின் கட்டமைப்பு சார்ந்த பல காரணங்களால் மட்டுமே அங்கு ஆட்சி மாற்றம் சாத்தியமானது. ஆனால், இங்கு திராவிட இயக்கங்கள் சமூக சீர்திருத்தக் கருத்துகளைத் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்த விதம் மக்களைப் பெரிதும் ஈர்த்தது. 


அழகுராஜ்: பெரியாரின் கருத்துப் பிரச்சாரங்களும் சமூக மாற்றங்களும் மக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின? 


சுகுமாரன்: நாராயண குரு செய்த அதே சீர்திருத்தப் பணியைத்தான் பெரியாரும் தமிழ்நாட்டில் செய்தார். பெரியார் அனைத்துக் கருத்துகளையும் மிகவும் வெளிப்படையாக, "கருப்பு – வெள்ளை" என்ற கோணத்தில் அணுகினார். மனிதனுக்கு இயல்பாகவே ஆன்மீகத்திலோ அல்லது இசையிலோ ஏதேனும் ஒரு பிடிப்புத் தேவைப்படுகிறது. பெரியார் அந்தப் பிடிப்புகளையும் உடைத்து, மாற்றுப் பார்வையை முன்வைத்தார். 


      பெரியாரின் தீவிரமான பேச்சு சமூகத்தின் நடைமுறைகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தன. இன்று பெண்களைக் கைம்பெண் என்று ஒதுக்கி வைப்பதோ, ஒருவரைச் சாதிப் பெயர் சொல்லி இழிவாகப் பேசுவதோ கூடாது என்ற விழிப்புணர்வு மக்களிடம் வந்திருப்பதற்கு இத்தகைய பிரச்சார இயக்கங்களே பிரதான காரணம். 


அழகுராஜ்: ஒரு பக்கத்துல பெரியார் கலை, இலக்கியத்தையெல்லாம் பயங்கரமா விமர்சித்தார். ஆனால் அதே திராவிட இயக்கம் தான் இலக்கியத்தையும் சினிமாவையும் தன்னோட முதன்மைப் பிரச்சார உத்தியாகவும் கையில் எடுத்துச்சு. இந்த முரண்பாட்டை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?


சுகுமாரன்: குர்ஆனில் "கவிஞர்கள் பொய்யான கற்பனைகளை மக்களிடம் திணிப்பவர்கள்; அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்" என்ற தொனியிலான வரிகள் சில சந்தர்ப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், அதற்கு மாறாக அங்குப் பிரமாதமான இசை, கட்டிடக்கலை, ஓவியம் மற்றும் சிற்பக்கலைகள் வளர்ந்துதான் இருக்கின்றன. இது மனிதச் சமூகத்தின் இயல்பான முரண்நகையாகும். 


அழகுராஜ்: கேரளாவில் திரையுலகை விட இலக்கியத்திற்கு அதிக முக்கியத்துவமும் மரியாதையும் அளிக்கப்படுவதன் காரணம் என்ன? 


சுகுமாரன்: இதற்கு முதன்மைக் காரணம் அவர்களின் கல்வி அமைப்பாகும் (Academic structure). தமிழ்நாட்டில் பள்ளிக் கல்விக்குள் நவீன இலக்கியங்கள் பெரிதாகச் சேர்க்கப்படவில்லை. பாரதியார், பாரதிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர் போன்றவர்களோடு பள்ளிப் பாடப் புத்தகங்கள் முடிந்துவிடும்., நவீன இலக்கியத்திற்கான இடம் குறைவாகவே இருந்தது.  


அழகுராஜ்: புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி போன்றவர்களின் கதைகள் சில துணைப்பாடங்களில் இடம்பெறுகின்றன 'புயலிலே ஒரு தோணி' ஒரு பகுதியை பாடத்தில் வைத்து இருக்கிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில் மட்டுமே இதில் சில மாற்றங்கள் வந்துள்ளன தானே?


சுகுமாரன்: நான் கல்லூரி பயின்ற காலத்தில் (PUC), நாரண. துரைக்கண்ணனின் 'தரங்கிணி’ என்ற ஒரு நாவலையே 5 முதல் 10 ஆண்டுகள் பாடமாக வைத்திருந்தார்கள். அதற்கு இடைப்பட்ட காலத்தில் தமிழில் எத்தனையோ சிறந்த நாவல்கள் வந்தபோதிலும் அவை பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. 'அம்மா வந்தாள்', 'மோகமுள்', ஜெயகாந்தனின் நாவல்கள் போன்றவை அங்கே அறியப்பட்டிருந்தன. குறைந்தபட்சம் நா. பார்த்தசாரதியின் 'குறிஞ்சிமலர்' நாவலையாவது அவர்கள் வாசித்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருக்கலாம்; அப்படி ஒரு சூழல் இருந்தது. 


அழகுராஜ்:  புதுவைப் பல்கலைக்கழகத்தில்  கேரளத்தைச் சேர்ந்த ஒரு மாணவனிடம் பேசிய போது பேரா. எம். கே ஷானு எழுதி யூமா வாசுகி மொழிபெயர்த்த 'பஷீர் தனிவழியில் ஒரு ஞானி' நூலைப் பற்றிப் பேசினேன். மலையாள எழுத்தாளரை உனக்குத் தெரியுமா என ஆர்வத்துடன் பேசினான். ஆனால், அவனுக்குத் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றித் தெரியவில்லை. அதே சமயம், விஜய் போன்ற தமிழ் திரைப்பட நடிகர்கள் தமிழ்நாட்டில் எந்த அளவிற்குப் பிரபலமாக இருக்கிறார்களோ, அதே அளவிற்குக் கேரளத்திலும் இருக்கிறார்கள். தமிழ் திரைப்படங்களைத் தீவிரமாகக் கவனிக்கும் அளவுக்கு இலக்கியம் கவனிக்கப்படவில்லையோ?


சுகுமாரன்: நாம் இங்கிருந்து கொண்டு மலையாளத் திரைப்படங்கள் யதார்த்தமாகவும் கலைத்தன்மையோடும் இருப்பதாகக் கூறுகிறோம். ஆனால், அவர்கள் தங்களின் பொழுதுபோக்கிற்கான திரைப்படங்களாகத் தமிழ் திரைப்படங்களையே கருதுகிறார்கள். 'போக்கிரி' திரைப்படம் திருவனந்தபுரத்தில் 275 நாட்கள் திரையரங்கில் ஓடியுள்ளது. இது, படித்த மலையாள சமூகத்தின் ஒருவிதமான மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது; அவர்களுக்குத் தமிழ் என்றால் இவ்வளவுதான் என்ற எண்ணம் இருக்கிறது. 


அழகுராஜ்: புத்தகக் கண்காட்சிகளிலும் கல்விப் புலத்திலும் தமிழ் வாசிப்புச் சூழல் எவ்வாறு அமைந்திருக்கிறது? 


சுகுமாரன்: புத்தகக் கண்காட்சிகளுக்குப் புத்தகம் வாங்க வரும் பெரும்பாலானோர் இளைஞர்களே. 40 அல்லது 50 வயதைக் கடந்தவர்கள் ஒரு புத்தகத்தின் விலை ₹300 என்றால் யோசிக்கிறார்கள்; ஆனால் இளைஞர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். அவர்களிடம் உள்ள இந்த ஆர்வம் சுய முயற்சியால் வளர்ந்ததுதானே தவிர, பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ ஊட்டப்பட்டதல்ல. கல்வி நிறுவனங்களில் இந்த ஆர்வம் ஊட்டப்பட்டிருந்தால், தமிழ் இலக்கியம் இன்னும் பல படிகள் முன்னேறி இருக்கும். 


        நம்முடைய அரசியல், பண்பாட்டுச் சூழல் மற்றும் கல்வி ஆகிய மூன்று தளங்களிலும் நாம் முன்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக, நின்ற இடத்திலேயே நிற்கிறோம் அல்லது பின்னோக்கிச் செல்கிறோம். திமுக போன்ற இயக்கங்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பாக ஊர் தோறும் படிப்பகங்கள் இருந்தன. ஊர்த் தியாகிகளின் பெயரிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் இயங்கிய அந்தப் படிப்பகங்களில் நாளிதழ்களும் வார இதழ்களும் இடம்பெற்றிருந்தன. அவை ஒரு தலைமுறை வாசிப்பதற்குச் சிறந்த வாய்ப்பாக அமைந்தன; ஆனால் இன்று அவை எங்குமில்லை. 


      அதேபோல, கல்லூரிப் புலமும் பழைய புலமையின் பிடியிலேயே சிக்கியுள்ளது. ஆசிரியர்கள் தங்களின் பாதுகாப்பான சூழலை (Comfort zone) விட்டு வெளியே வரத் தயங்குகிறார்கள்.  


         காவிரிப் பிரச்சினை போன்ற ஒரு முக்கியப் பிரச்சினை குறித்து கருத்து அறிய வேண்டுமென்றால், இங்குள்ளவர்கள் ஒரு நடிகரிடமோ நடிகையிடமோ தான் அபிப்பிராயம் கேட்கிறார்களே தவிர, ஒரு எழுத்தாளரிடமோ அல்லது துறை சார்ந்த வல்லுநரிடமோ சென்று கேட்பதில்லை. தலித் பிரச்சினைகள் குறித்தும் எழுத்தாளர்களிடம் கருத்துகள் கேட்கப்படுவதில்லை. கலாச்சார ரீதியாக நாம் இன்னும் பின் தங்கியே இருக்கிறோம். 


      இருப்பினும், ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து வந்துள்ள முதல் தலைமுறை இளைஞர்கள் இலக்கியம் மற்றும் சினிமாவுக்குள் நுழையும் போது புதிய மாற்றங்கள் நிகழ்கின்றன. மாரி செல்வராஜ், பா இரஞ்சித் போன்ற படைப்பாளர்களின் வரவால் வேறுபட்ட திரைப்படங்கள் சாத்தியமாகின்றன. இத்தகைய படைப்புகளைப் பாரதிராஜாவிடமோ அல்லது சங்கரிடமோ நாம் எதிர்பார்த்திருக்க முடியாது. 


அழகுராஜ்: சமூகப் பகிர்விற்கும் (Social sharing) வாசிப்பிற்கும் படிப்பகங்கள் எவ்வாறு உதவின? 


சுகுமாரன்: படிப்பகங்கள் என்பது வெறுமனே வாசிப்பதற்கான இடம் மட்டுமல்ல; அது ஒரு சமூகக் கூடலாகவும் (Social gathering) கருத்துப் பரிமாற்றத்திற்கான களமாகவும் இயங்கியது. ஒருவர் வாசித்த நூலை மற்றொருவருடன் பகிர்ந்து கொள்ளும் பண்பு அங்குச் சாத்தியமானது; இப்போது அத்தகைய சூழல் பெருமளவில் குறைந்துவிட்டது. 


      புத்தகக் கண்காட்சிகளில் மாணவர்களை அழைத்து வந்து புத்தகங்களை வாங்கச் செய்வது ஒரு நல்ல முயற்சியாகும். எனினும், ஆசிரியர் சமூகம் வாசிப்பில் போதிய ஆர்வம் காட்டுவதில்லை என்ற விமர்சனமும் உள்ளது. அதே வேளையில், தங்களின் பேரன்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் தேடித் தேடிப் புத்தகங்களை வாங்கிச் செல்லும் மூத்த தலைமுறையினரையும் நாம் காண முடிகிறது. 


அழகுராஜ்: தமிழாசிரியர்கள் மற்றும் கல்விப் புலத்தின் வாசிப்புச் சூழல் குறித்த உங்கள் கருத்து என்ன? 


சுகுமாரன்: பொதுவான நமது கல்வி முறையில், பட்டப்படிப்பு முடிந்துவிட்டால் வாசிப்பும் முடிந்துவிட்டதாகவே பெரும்பாலானோர் கருதுகிறார்கள். முதுகலை முடித்துக் கல்லூரியில் பணியாற்றத் தொடங்கிவிட்டால், இனிமேல் படிக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் நிலவுகிறது. அவர்களது அறியாமையை மறைக்க வேறு வழியும் தெரிவதில்லை. 


      பெருமாள் முருகன் போன்றவர்கள் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டிய பின்னரே சிலர் வாசிக்கத் தொடங்குகிறார்கள். கல்விப்புலத்தில் நாம் பட்டப்படிப்பைப் வேலைக்காக மட்டுமே படிக்கிறோம்; வேலை கிடைத்ததும் அதன் நோக்கம் முடிந்துவிட்டது எனக் கருதுகிறார்கள். எனினும், "இனிமேல் ஆசிரியர்கள் வாசிக்க வேண்டும்" என்ற நிலைமை மாணவர்களின் கேள்விகளால் மெதுவாக மாறி வருகிறது. 


குமரேஸ்வரன்: சினிமாவில் காண்பிக்கப்படும் கருத்துகள் மற்றும் பிம்பங்கள் தமிழ்நாட்டில் எத்தகைய மாற்றங்களை உருவாக்குகின்றன? 


சுகுமாரன்: சினிமா என்பது ஒரு கருத்தியலை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதே சமயம், அது இளைஞர் கூட்டத்தை வேறு விதமாகவும் திசைதிருப்ப வாய்ப்புள்ளது. சூழலை மாற்றும் ஆற்றல் சினிமாவிற்கு உண்டு. 


     அணுப் பிளவு (Nuclear fission) மற்றும் அணுச்சேர்க்கை (Nuclear fusion) கண்டுபிடிப்பு எவ்வாறு மனித குலத்தின் பயன்பாட்டிற்கும் அதே நேரத்தில் அழிவிற்கும் காரணமாக அமைந்ததோ, அதேபோலத்தான் சினிமாவும். அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அதன் விளைவுகள் அமையும். 


அழகுராஜ்: இந்தச் சூழல் எதிர்காலத்தில் மாறுமா? 


சுகுமாரன்: நிச்சயமாக மாறும். அடுத்த தலைமுறை இளைஞர்கள் இந்தச் சூழலை மாற்றுவார்கள். 10 ஆண்டுகளில் ஒரு பெரிய மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் உள்ளுக்குள் சற்று எதிர்மறைச் சிந்தனை கொண்டவர்களாக (Pessimistic) இருந்தாலும், காலம் மாறும்போது சூழலும் மாறும் என்ற நேர்மறை நம்பிக்கை அவசியம். 


அழகுராஜ்: நடிகர்கள் அரசியலுக்கு வருவதும், 'மாற்று அரசியல்' பேசுவதும் குறித்து உங்களின் பார்வை என்ன? 


சுகுமாரன்: எம்.ஜி.ஆர் கட்டமைத்த அரசியல் உத்திதான் இங்குத் தொடர்கிறது. திரைப்படங்களின் வழியே தன்னை நாயகனாகவும், எதிராளிகளை வில்லனாகவும் சித்தரித்து அரசியலில் வெற்றி பெறும் போக்கு எம். ஜி. ஆர் காலத்தில் தொடங்கி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, தற்போது மு. க. ஸ்டாலின் வரை தொடர்கிறது. 


        தற்போது புதியதாக அரசியலுக்கு வரும் நடிகர்களும், 'தூய்மையான அரசியல்' மற்றும் 'மாற்று அரசியல்' என்ற பெயரில் எம்.ஜி.ஆரின் அதே உத்தியைத்தான் பின்பற்றி வருகிறார்கள். 


அழகுராஜ்: இன்றைய தலைமுறையினரின் வாசிப்புப் பழக்கம் மற்றும் நூலகச் சூழல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? 


சுகுமாரன்: பட்டப்படிப்பு முடிந்து வேலைக்குச் சென்றுவிட்டால் வாசிப்பு முடிந்துவிட்டது எனக் கருதும் மனநிலை நிலவுகிறது. இளைஞர்கள் பலர் வாசிப்பதில்லை என்று வருத்தப்பட்டாலும், அவர்கள் அலைபேசிகளிலும் டிஜிட்டல் தளங்களிலும் ஏதோ ஒன்றை வாசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். வாசிப்பதற்கான நல்ல சூழலும், வழிகாட்டுதலும் அமையும் போது அவர்கள் இயல்பாகவே நல்ல புத்தகங்களைத் தேடி வாசிக்கத் தொடங்குவார்கள். குடும்பமும் கல்வி நிறுவனங்களும், சமூகமும் அதற்குரிய சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். 

Comments

Popular posts from this blog

கல்லூரிகள் டூ பல்கலைக்கழகங்கள் -மா. அன்பரசு

மா. அன்பரசு குறுங்கதைகள்