கிரீஷ் கார்னாடின் ஆறு நாடகங்களில் முரணும் முகமூடிக் கட்டமைப்பும் - அழகுராஜ் ராமமூர்த்தி
கிரீஷ் கார்னாடின் ஆறு நாடகங்களில் முரணும் முகமூடிக் கட்டமைப்பும் - அழகுராஜ் ராமமூர்த்தி இந்திய நவீன நாடக வரலாற்றில் மராத்தியின் விஜய் டெண்டுல்கர், வங்காளத்தின் பாதல் சர்க்கார், இந்தியின் மோகன் ராகேஷ், தமிழில் இந்திரா பார்த்தசாரதி மற்றும் மலையாளத்தில் சங்கரப்பிள்ளை ஆகியோருக்கு இணையாகக் கருதப்படுபவர் கன்னடத்தின் கிரீஷ் கார்னாட் என நாடகத்துறையினர் சொல்வதுண்டு. இவர்களில் பாதல் சர்க்கார் மற்றும் கிரீஷ் கார்னாட், இந்திரா பார்த்தசாரதி ஆகியோரின் நாடகங்களை வாசித்துள்ளேன். ஏனையோரைப் பெயரளவில் நாடகத்துறையினர் மூலமாகக் கேள்விப்பட்டுள்ளேன். கன்னட மொழி நாடகங்களை உலகத் தரத்திற்கு உயர்த்திய பெருமை கிரீஷ் ரகுநாத் கார்னாடுக்கு உண்டு என்பது மிகையில்லை. இவர் வெறும் நாடகாசிரியர் மட்டுமல்ல; சிறந்த நடிகர், இயக்குனர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர். தனது நாடகங்களில் புராணம், வரலாறு மற்றும் நாட்டுப்புறக் கதைகளைப் பயன்படுத்தி, அவற்றின் ஊடாகத் தற்கால மனித வாழ்வின் சிக்கல்களைப் பேசியவர். அந்நாடகங்கள் உள்ளார்ந்த கலையம்சத்தையும் உடன்கொண்டுள்ளன. ...