காலடிச் சத்தம் - மா. அன்பரசு

காலடிச் சத்தம் - மா. அன்பரசு


தீபனுக்கு நான்கு வயது. வீட்டின் முன்புற மண்ணில் ஒரு சிறிய மரக் காரைத் தள்ளிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தான். கார் முன்னால் சென்றது. அவன் பின்னால் ஓடினான்.

திடீரென்று கால் இடறியது.மண்ணில் விழுந்தான். அழுகை வரவில்லை. மூச்சு மட்டும் வேகமாக ஏறி இறங்கியது. அவனைத் தூக்கிக்கொண்ட அம்மாவின் கைகள் நடுங்கின.

மருத்துவமனை. பல பரிசோதனைகளுக்குப் பிறகு மருத்துவர் சொன்னார்: “பிறவியிலேயே இதயத்தில் ஒரு குறைபாடு இருக்கு. இதை ‘டெட்ராலஜி ஆஃப் ஃபாலோ’ (Tetralogy of Fallot - TOF) என்பார்கள். குழந்தைகள் பிறக்கும் போதே இருக்கும் ஒரு அரிதான மற்றும் தீவிரமான பிறவி இதயக் குறைபாடு ஆகும். இது இதயத்தின் அமைப்பைப் பாதிக்கும் நான்கு வெவ்வேறு குறைபாடுகளின் தொகுப்பாகும். பச்சிளம் குழந்தைப் பருவத்திலேயே திறந்த இதய அறுவைச் சிகிச்சை (Open-heart surgery) செய்து சில குறைபாடுகளைச் சரிசெய்யலாம். ஆனால், சில குழந்தைகளுக்கு நுரையீரலுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிகள் (Pulmonary Arteries) மிகவும் குறுகியதாகவும் சிறியதாகவும் இருக்கும். அதனால் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதிக உடல் உழைப்பைத் தவிர்க்க வேண்டும்.”


அந்த நாளிலிருந்து தீபனுடைய வாழ்க்கையில் பல கதவுகள் மூடப்பட்டன. ஓடக்கூடாது. விளையாடக்கூடாது. அதிக தூரம் நடக்கக்கூடாது.

பள்ளிக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வெளியே காத்திருப்பார்கள். மற்ற குழந்தைகள் மைதானத்தில் ஓடும்போது, அவன் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருப்பான்.

சில நேரங்களில் தலைசுற்றும். சில நேரங்களில் மயங்கி விழுவான். அம்மா மருந்தைக் கொடுத்து படுக்க வைப்பாள். சிறிது நேரத்தில் அவன் சரியாகிவிடுவான். ஆனால் பயம் மட்டும் அவனைச் சுற்றியே இருந்தது. கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது.


“தனியா எப்படிப் போவ?”


அந்தக் கேள்வியிலேயே அவனுடைய ஆசை முடிந்துவிடும். பாதுகாப்பாக வளர்க்கப்பட்டான். அதனால் எதையும் தொடங்குவதற்கே பயந்தான்.

இருபத்து மூன்று வயதில் இதய நோயாளிகளுக்கான ஆறு நாள் பயிற்சி முகாமுக்குச் சென்றான். முதல் நாள் பெற்றோர்களும் உடன் இருப்பார்கள். அடுத்த நாட்களில் நோயாளிகளுக்கே தங்களை எப்படிப் பார்த்துக்கொள்வது, மருந்து, உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றைப் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. “இது வருடந்தோறும் நடப்பதால், தீபனுக்கு பல விஷயங்கள் ஏற்கனவே தெரிந்திருந்தன. அதனால் புதிதாக வந்தவர்களுக்கு உதவிக்கொண்டிருந்தான்.”


அன்றுதான் சாராவைச் சந்தித்தான். அவளுக்கு இருபத்தொரு வயது. முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு. எதையும் நேராகக் கேட்பாள். ஒருநாள் அவள் தீபனைப் பார்த்துக் கேட்டாள்: “நமக்கு நோய் இருக்குன்னு நாம ஏன் வாழ்க்கையையே நோயாக்கணும்?”

தீபன் பதில் சொல்லவில்லை. மாலை நேரத்தில் இருவரும் முகாமின் நடைபாதையில் மெதுவாக நடந்தார்கள்.


சாரா சொன்னாள்: “நாளைக்கு என்ன ஆகும்னு தெரியாது. அதுக்காக இன்றைக்கே சாகக்கூடாது.”


சில அடிகள் நடந்த பிறகு நின்றாள்.


“பயந்துட்டே இருந்தா... நம்ம வாழ்க்கை எப்போ வாழ்றது?”


தீபன் அவளைப் பார்த்தான். அந்தக் கேள்விகளுக்கு அவனிடம் பதில் இல்லை. ஆனால், அந்த இரவு அவனால் வழக்கம்போல் தூங்க முடியவில்லை.


ஆறு நாட்கள் முடிந்தன. பிரியும் நேரத்தில் தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டார்கள். முதலில் ஒரு “ஹலோ”. பிறகு குறுஞ்செய்திகள். அதன்பிறகு நீண்ட அழைப்புகள்.


நோய், குடும்பம், கனவுகள், பயம் என்று பேசிக்கொண்டே இருந்தார்கள். நட்பு காதலாக மாறியது. ஒருநாள் தீபன் கேட்டான்:

“சாரா... என்னைக் காதலிக்கிறாயா?”


சில நொடிகள் அமைதி.


“ஆமாம்.” அவன் சிரித்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு, எதிர்காலத்தை நினைத்து அவன் பயப்படாமல் இருந்த நாள் அது. இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு.


“இருவருக்குமே இதயப் பிரச்சனை.”


“திருமணத்துக்குப் பிறகு என்ன ஆகும்?”


“குழந்தை?”


கேள்விகள் அதிகமாகின.


ஒரு இரவு சாரா அழுதுகொண்டே தொலைபேசியில் சொன்னாள்: “தீபன்... என்னால முடியல... இங்கிருந்து போயிடலாமா?” அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினார்கள். கையில் இரண்டு நாட்களுக்குத் தேவையான பணம் மட்டுமே. முதல் நாள் காதல் இருந்தது. அடுத்த நாள் பசி வந்தது. தங்க இடம், வேலை, மருந்து ஒவ்வொன்றாக வாழ்க்கையின் உண்மைகள் முன்னால் நின்றன. காதல் மட்டும் வாழ்க்கையை நடத்தாது என்பதைப் புரிந்துகொண்டார்கள். ஆனால் காதலை விட்டுவிடவும் முடியவில்லை. வீட்டுக்குத் திரும்பினார்கள். சில காலத்திற்குப் பிறகு குழந்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இருவரும் ஒப்புகொண்டப்பின் திருமணம் செய்துகொண்டார்கள்.


திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இரண்டு வீட்டாரும் ஒரே விஷயத்தைச் சொன்னார்கள்.

“நீங்க இருவரும் தனியா இருந்துதான் வாழ்க்கையை நடத்தணும்.”


அது கோபத்தின் வார்த்தையாக இருந்தது. கவலையின் வார்த்தையாக இருந்தது. ஒரு சிறிய வாடகை வீடு. இரண்டு நாற்காலிகள். ஒரு இரும்புக் கட்டில். சிறிய அலமாரி. சுவரில் ஒரு காலண்டர். இரண்டு டம்ளர்கள். அதுதான் அவர்களுடைய உலகம். சில நாட்கள் கழித்து சாராவின் அம்மா வந்து பார்த்துவிட்டுப் போவாள். சில வாரங்கள் கழித்து தீபனுடைய அப்பா வந்து விசாரித்துவிட்டுப் போவார்.


“மருந்து சரியா சாப்பிடுறியா?”


“சாப்பாடு பார்த்துக்கோ.”


“பணம் தேவையிருந்தா சொல்லு.” வாயால் கோபம். கைகளில் அக்கறை. ஒரு வருடம் இப்படியே கழிந்தது. ஒரு மாலை சாரா ஜன்னலருகில் உட்கார்ந்திருந்தாள். வெளியில் மழை.


“தீபன்...”


“ம்?”


“நமக்கு ஒரு குழந்தை இருந்தா எப்படி இருக்கும்?”

அவன் அமைதியாக இருந்தான். மருத்துவ ஆலோசனை, பரிசோதனைகள், எதிர்காலம் எல்லாமே அவன் மனதில் ஓடியது. சாரா அவனைப் பார்த்தாள். எப்படியும் சாகத்தான் போறோம்.


“வாழ்க்கையை முழுக்க பயந்துட்டே வாழ முடியாது.”


மருத்துவ ஆலோசனையுடன் அவர்கள் முடிவெடுத்தார்கள். முடியுமென்று நம்பினார்கள்…

சில மாதங்களுக்குப் பிறகு...


அந்தச் சிறிய வீட்டில் ஒரு குழந்தையின் அழுகை கேட்டது. மிகுந்த வலிகளுக்கு மத்தியில் தீபன் குழந்தையைத் தூக்கிக்கொண்டிருந்தான். சாரா அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவள் விரல்கள் குழந்தையின் கன்னத்தைத் தொட்டன. சுவரில் இருந்த காலண்டரின் கீழே, பல மாதங்களாக அசையாமல் இருந்த ஒரு சிறிய மரக் கார் இருந்தது. தீபன் அதை எடுத்து குழந்தையின் அருகில் வைத்தான். குழந்தையின் விரல்கள் அதைத் தொட்டன. அந்தச் சிறிய வீட்டில் மூன்று மூச்சுகள் ஒன்றாகக் கலந்தன. அவனுக்குப் பெயர் வைத்தார்கள்.


இனியன்.


வாழ்க்கை எளிதாக இல்லை. தீபன் ஒரு துணிக்கடையில் பில்லிங் வேலை பார்த்தான்.

சாரா அருகிலிருந்த கடையில் வேலைக்குச் சென்றாள். இருவருடைய வருமானமும் சேர்த்து மாதம் முப்பதாயிரத்துக்குள். வாடகை, மளிகை, மருந்து, குழந்தையின் செலவு என்று நாட்கள் கணக்குப் பார்த்தே நகர்ந்தன. இனியன் வளர்ந்தபோது அவனுக்கு அவர்கள் அடிக்கடி ஒரு விஷயத்தைச் சொல்வார்கள்: “யாரையும் முழுசா நம்பி வாழ்க்கையை ஒப்படைக்காதே.”


“உன்னை நீ பார்த்துக்கணும்.”


அந்த வார்த்தைகளின் அர்த்தம் அவனுக்குப் புரியவில்லை. அவன் மரக் காரைத் தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் ஓடுவான். அவர்கள் பயந்துகொண்டே பார்த்தார்கள். ஆனால் அவன் ஓட்டத்தை நிறுத்தவில்லை.


இனியனுக்கு நான்கு வயது. அவன் வீட்டின் தரையில் ஒரு சிறிய மரக் காரைத் தள்ளிக்கொண்டிருந்தான். கார் தரையில் உருண்ட சத்தம். அவன் சிரிப்பு. அந்தச் சத்தம் சமையலறையிலிருந்த சாராவுக்கும் கேட்டது. அவளுடைய உடல்நிலை சில காலமாகக் குறைந்து கொண்டிருந்தது. அன்று இரவு மூச்சுத்திணறல் அதிகமானது. இனியன் தூங்கிக்கொண்டிருந்தான். அவனுடைய போர்வை காலிலிருந்து விலகியிருந்தது. அருகில் மரக் கார் கவிழ்ந்து கிடந்தது. தீபன் அவளருகில் வந்தான்.


“ஹாஸ்பிடலுக்குப் போலாம்.” அவள் தலையசைத்தாள்.


“வேண்டாம்.” அவளுடைய பார்வை இனியன் மீது சென்றது. சில நொடிகள் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு தீபனுடைய கையைப் பிடித்தாள்.


“நான் இல்லாம போயிட்டா...” வார்த்தை நின்றது.

“இனியனுக்காக நீ இருக்கணும்.” அவளுடைய விரல்கள் மெதுவாகத் தளர்ந்தன.


அடுத்த நாள்... சாரா இல்லை.


செய்தி தெரிந்ததும் இரு வீட்டாரும் வந்தார்கள். நேற்று வரை தனித்தனியாக இருந்த இரண்டு குடும்பங்களும் அன்று ஒரே வீட்டில் நின்றிருந்தார்கள். சாராவின் அம்மா அழுதுகொண்டிருந்தாள். தீபனுடைய அம்மா இனியனைத் தூக்கிக்கொண்டிருந்தாள். தீபன் மட்டும் அமைதியாக உட்கார்ந்திருந்தான். சில நேரம் கழித்து எழுந்தான். இனியனைப் பார்த்தான்.


“இனிமேல் இனியனை நான் பார்த்துக்கறேன்.” அவன் அந்த வார்த்தையைச் சொல்லும்போது, சாரா சொன்ன கடைசி வார்த்தை அவன் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. சாரா இறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு... தீபனும் இறந்தான். அப்போது இனியனுக்கு நான்கு வயது ஆறு மாதங்கள். இரண்டு குடும்பங்களின் பராமரிப்பிலும் இனியன் வளர்ந்தான். 


சில ஆண்டுகள் ஒரு வீட்டில்.


சில நாட்கள் இன்னொரு வீட்டில். தாத்தா, பாட்டிகளின் கைகளில் அவன் வளர்ந்தான். இரண்டு வீடுகளிலும் அவனுக்காக கதவுகள் எப்போதும் திறந்திருந்தன. ஆண்டுகள் ஓடின. இனியனுக்கு இருபத்தேழு வயது. அவன் எதையும் மறக்கவில்லை. உறவினர்கள் மறக்கவும் விடவில்லை ஆனால் ஆரோக்கியமாக வளர்ந்திருந்தான். அவனுடைய பெற்றோரிடம் இருந்த இதயக் குறைபாடு அவனுக்கு வரவில்லை. ஆனால் அவனுடைய அறையில் ஒரு சிறிய மரப்பெட்டி மட்டும் இருந்தது. அதற்குள் அம்மாவின் பழைய துணி. அப்பாவின் கைக்கடிகாரம். சில புகைப்படங்கள்.


மற்றும்...


நான்கு வயதில் தள்ளிக்கொண்டிருந்த அந்தச் சிறிய மரக் கார். சில இரவுகளில் பெட்டியைத் திறப்பான். பொருட்களை எதையும் எடுத்துப் பார்க்காமல், நீண்ட நேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருப்பான். பிறகு மெதுவாக மூடிவிடுவான்.


இனியனுடைய திருமண நாள். மண்டபம் முழுவதும் சிரிப்பும் சத்தமும். மணமேடையில் அவன் அமர்ந்திருந்தான். சடங்குகளுக்கு நடுவே ஒரு நொடி அவன் எழுந்து வெளியே சென்றான். அவனுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு பழைய புகைப்படத்தை எடுத்தான். அதில் தீபனும் சாராவும் ஒன்றாக நின்றிருந்தார்கள். பின்னால் அவர்கள் வாழ்ந்த அந்தச் சிறிய வாடகை வீட்டின் சுவர். அவன் புகைப்படத்தின் ஓரத்தை விரலால் மெதுவாகத் தடவினான். பிறகு அதை ஒரு பெரியவரிடம் கொடுத்தான்.


“அவங்க என் கல்யாணத்தைப் பார்க்கிற மாதிரி... இதை கொஞ்சம் பிடிச்சுக்கோங்க.” அவர் புகைப்படத்தை இரு கைகளாலும் வாங்கிக்கொண்டார். முகூர்த்த நேரம் வந்தது. இனியன் தாலியை எடுத்தான். அவன் கைகள் நடுங்கவில்லை. தாலி கட்டி முடிந்தது. எல்லோரும் கைதட்டினார்கள். இனியன் மட்டும் சில நொடிகள் அமைதியாக இருந்தான். அவனுடைய பார்வை மீண்டும் அந்தப் புகைப்படத்தின் மீது சென்றது. அதில் இருந்த இருவரும் அவனுடைய வாழ்க்கையின் தொடக்கம்.


ஒரு சிறிய வீடு. இரண்டு நாற்காலிகள்.


ஒரு இரும்புக் கட்டில். இரண்டு டம்ளர்கள்.


அந்த வீட்டில் ஒருநாள் கேட்ட குழந்தையின் முதல் அழுகை. அதற்குப் பிறகு வந்த சிரிப்புகள். அந்தச் சிரிப்புக்காக அவர்கள் எவ்வளவு பயந்திருந்தாலும், அந்தக் குழந்தையைத் தழுவாமல் வாழவில்லை.


நினைவோடு இனியன் மண்டபத்தின் வாசலில் நின்றான். மணமகளுக்கு எல்லாம் தெரியும். மணமகள் அவன் கையைப் பிடித்தாள்.


“என்ன?”


இனியன் மெதுவாகச் சொன்னான்: “என் அப்பாவும் அம்மாவும் எனக்கு எதுவும் சொல்லித் தரல... வாழ்ந்து காட்டிட்டாங்க.”


அவள் அவன் கையை இறுக்கமாகப் பிடித்தாள்.


“போகலாம்.”


இருவரும் நடந்தார்கள். புதிய காலடிச் சத்தம் தொடர்ந்தது.

Comments

Popular posts from this blog

இலக்கியமும் இசையுமுமான வாழ்வு கவிஞர் சுகுமாரனுடனான உரையாடல்

கல்லூரிகள் டூ பல்கலைக்கழகங்கள் -மா. அன்பரசு

மா. அன்பரசு குறுங்கதைகள்