வகைமை நோக்கு தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய வரவு: விளிம்புநிலை இலக்கியமும் அழகியலும் - சு. வருண் குமார்
வகைமை நோக்கு தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய வரவு: விளிம்புநிலை இலக்கியமும் அழகியலும்
- சு. வருண் குமார்
கல்வியாண்டின் இறுதி பருவத்தை முடித்திருக்கும் மாணவர்கள் தங்களின் மேற்படிப்பிற்கு ஏற்ற பாடத்தையும் கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருக்கிறார்கள். பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு குறித்தான அறிமுகம் மற்றும் புரிதல் மாணவரகளிடையே பெருகி வந்துள்ளது. அதே வேலையில் பாடத்திட்டத்தின் (Syllabus) திறத்தை/தரத்தைத் தெரிவு செய்வதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்துகின்றனர். அந்த வகையில் தமிழ் இலக்கியத்துறையின் பாடத்திட்டம் குறித்தான பார்வை இங்கு விவாதிக்கப்படுகிறது.
சமூகம் மற்றும் மொழி புலமாக இயங்கும் தமிழ் இலக்கியத்துறை எந்த அளவு சமூகம் சார்ந்து தன் பாடத்திட்டத்தை வடிவமைத்துக் கொள்கிறது என்பது ஆராயத்தக்கது. இன்று நாம், நம் ஆசிரியர்கள் படித்த அதே வகைமை நோக்கில் அமைக்கப்பட்ட தமிழ் இலக்கியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தைதான் படிக்கிறோம். வகைமையில் உள்ளிருக்கும் இலக்கியங்கள் கூட பெரிதும் மாற்றப்படவில்லை. மற்ற துறைகள் நவீனமாகவும் ஒருங்கிணைந்த தன்மையிலும் தங்கள் பாடத்திட்டம், செயல்முறை, ஆய்வுத் துறைகளை வடிவமைத்துக்கொண்டன. அவ்வகையில் தமிழ் இலக்கியத் துறை நவீனமாக ஒருங்கிணைந்த தன்மையுடன் இயங்குகிறதா? என்ற கேள்வி எழுகிறது.
தமிழை மொழி மற்றும் இலக்கியத் துறையாக அமைத்திருக்கும் எல்லா கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பாடத்திட்டம் என்பது தொன்றுதொட்டு வெளிவந்த இலக்கியங்களை கால வரிசையிலும் வகைமை நோக்கிலுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியம், அற இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பியங்கள், நவீன இலக்கியம் என்று கால வரிசைப்படுத்துகின்றன. இலக்கணத்தில் தொல்காப்பியம், நன்னூல், நம்பியகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை போன்ற பாடத்திட்டமாக உள்ளன. இளங்கலையில் இலக்கியங்கள் அறிமுகமாக சில பாடல்களைத் தொகுத்து தனித்தனி பகுதியாக அமைக்கின்றனர். இலக்கணப் பகுதியில் மேலே குறிப்பிட்ட நூல்கள் முழுவதுமாக இடம்பெறுகின்றன. முதுகலையில் தொல்காப்பியம் இருக்கிறது. அதிலும் சில கல்வி நிறுவனங்களில் தொல்காப்பியம் செய்யுளியல் நீங்களாக இருந்தது என்று சொல்லப்படுகிறது. தேடிய வரை இப்போது எல்லாம் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.
மேலேயுள்ள அமைப்பு தமிழ் இலக்கிய வரலாற்றில் வெளிவந்த எல்லா இலக்கிய இலக்கண வகைமைகளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறது. இந்த பாடத்திட்ட அமைப்பிலும் நுண்ணிய அரசியல் அடிநாதமாக ஓடுகிறது. கல்வி நிறுவனங்கள் தாங்கள் சார்ந்துள்ள கொள்கையின் (மதம்) அடிப்படையில் பாடத்திட்டத்தை வடிவமைக்கின்றன. தங்கள் கொள்கையைச் சார்ந்த படைப்புகள் மற்றும் எழுத்தாளர்களே பாடத்திட்டத்தில் அமைக்கப்பட்டிருப்பது சற்று உற்று நோக்கினால் தெரியவரும். இது ஒருவகை கொள்கைப் பாரப்பலாக இருக்கலாம்.
தேர்வுப் பாடங்கள் (Elective) என்று அமைக்கப்பட்டவை மிக சிறந்த தன்மையிலாவை. இந்த தேர்வு பாடங்கள்தான் மாணவர்களுக்கு பல்துறை சார்ந்த அறிவையும் ஆய்வு தளங்களையும் ஏற்படுத்தி தருகின்றன. இந்த பகுதி தமிழ் இலக்கியத் துறையை உலகளாவியத் தன்மையிலும் ஒருங்கிணைந்த பார்வையிலும் பார்க்க உதவுகிறது. தேர்வு பாடங்களில் முதன்மையாக இடம்பெறக்கூடிய பாடங்கள் வரலாறும் பண்பாடும், திறனாய்வு அணுகுமுறை, மொழிப்பெயர்ப்பு, மானிடவியல், படைப்புக்கலை, அகராதியியல், தொல்லியல் மற்றும் கல்வெட்டு, ஒப்பிலக்கியம், இதழியல், நாட்டுப்புறவியல், கணிணித்தமிழ் மற்றும் உரை சார்ந்த பாடங்கள் இடம்பெறும். வரிசைப்படுத்தப்பட்ட பாடங்கள் அனைத்தும் தமிழை மற்ற துறைகளுடன் இணைத்து பார்த்து பல்துறை அறிவை வளர்க்க வழிவகுக்கும். இதுமட்டுமின்றி தனித்தனி ஆளுமைகள் சார்ந்த இயம் அமைக்கப்படுகின்றன. காட்டாக பாரதியியம், காந்தியம், பெரியாரியம், அயோத்திதாசரியம், மார்க்சியம் போன்றவை குறிப்பிடத்தாக்கன.
இலக்கியத் திறனாய்வு, ஒப்பியல், மொழிபெயர்ப்பு மற்றும் மானிடவியல் போன்ற பாடங்கள் மொழி குறித்தான ஒரு சமூகப் பார்வையையும் மற்ற மொழி மற்றும் பண்பாட்டு தன்மைகளை தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகம் செய்கின்றன. அதிலும் திறனாய்வுக்கலை இலக்கிய உலகில் பெரும் மாற்றங்களையும் கேள்விகளையும் எழுப்பின.
இரசனை முறை திறனாய்வு ஒரு வகையில் இலக்கியத்தின் சமூக வரலாற்று பின்புலத்தை பற்றி பேச முற்படுவதில்லை என்று சொல்லலாம். இலக்கியம் மற்றும் அதன் படைப்பாளியை நாயகன் போல் ஆக்குவது அதன் உள்ளோடும் அரசியலையும் அவை உருவாகியதன் நோக்கத்தையும் மறைக்கிறது. அவ்வகையில் சமூகத்தின் மாற்றத்தையும் மாற்றுவதற்கான தன்மையில் தோன்றிய சில கோட்பாடுகள் இலக்கிய வகைமைகளில் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்தின. இலக்கியங்களை வேறொரு கோணங்களில் பார்க்கவும் மறுவாசிப்பு செய்யவும் இவை உதவின. ராஜ் கௌதமன் தமிழ் இலக்கியங்களைத் தலித்தியப் பார்வையில் மறுவாசிப்புக்கு உட்படுத்தியதுக் குறிப்பிடத்தக்கது.
சமூக தளத்தில் உருவாகிய கோட்பாடுகளில் சற்றே மாறுபட்டு விளிப்புநிலையில் உள்ள மக்களை முன்னிருத்துவதாக உருவாகியுள்ளதே விளிம்புநிலைக் கோட்பாடுகள். மொழி, இலக்கியம், சமூகம் என்று பொதுநிலையில் இயங்கிவந்த கோட்பாடுகள் சமூகத்தின் பொதுத்தன்மையினால் மறைக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்டவர்க்ளின் குரலாக இக்கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. இது பற்றிய இலக்கியங்களை விளிம்புநிலை இலக்கியம் (Marginal literature) என்பர். இவ்விலக்கியம் விளிம்புநிலையில் உள்ள மக்களின் வாழ்வியலையும் அழகியலையும் (Marginal Asthetics) அடிப்டையாகக் கொண்டு எழுந்தவை.
காலந்தோறும் இலக்கியங்களின் வகைமைகள் மாற்றமடைவதற்கான சமூக-வரலாறு-பண்பாட்டு-அரசியல் பின்னணியை புரிந்துக்கொள்வது அவசியமாகும். தமிழ் சூழலில் இலக்கிய வரலாறு இரண்டு வகைப்படும். ஒன்று இலக்கியத்தின் வரலாறு மற்றொன்று இலக்கியத்தில் வரலாறு. இதில் பின்னது முன்னதை அறிய உதவுகிறது எனலாம். இலக்கிய மற்றும் இலக்கண உருவாக்கம் என்பது அக்காலக்கட்டத்தின் வழக்குகளை சமூக-பண்பாட்டு-அரசியல் நிகழ்வுகளை தொகுத்து தரும் வேலையைச் செய்கிறது. இப்படி உருவான இலக்கியங்களை வகைமை நோக்கில் பேசும் இலக்கிய வரலாறுகள் எத்தனையோ உருவாகின. அதிலும் போட்டித்தேர்வுகளுக்கு என்றே பல இலக்கிய இலக்கண வரலாறுகள் உருவாக்கப்பட்டன. அதில் இந்த விளிம்புநிலை சார்ந்த படைப்புகள், ஆய்வுகள் பற்றியச் செய்திகள் மற்ற வகைமைகளுக்கு கொடுக்கப்பட்ட அளவிற்கான பின்னணி புரிதலுடனும் இவ்வகைமை உருவாகியதன் தேவை மற்றும் வரலாறுகள் போதியளவு இருக்கின்றவா என்று பார்ப்பது அவசியமாகும்.
விளிம்புநிலை படைப்புகள் மற்றும் ஆய்வுகள் தமிழ் இலக்கிய உலகிற்கு புதிய வரவு என்பது அண்மையில் தோன்றியது என்ற பொருள்தளத்தில் இருந்து புரிந்துக்கொள்ளக் கூடாது. இவை தமிழ் சமூக பண்பாட்டு தளத்தில் ஒரு புதிய திருப்பம் என்று எடுத்துக்கொள்ளலாம். அகம் - புறம், அறம், பக்தி, பின் இடைக்காலச் சமூகத்தில் செல்வந்தர்களை நோக்கி திரும்பிய துதிப்பாடல்கள் மற்றும் நவீன காலத்தில் ஏற்பட்ட வடிவமாற்றம் மற்றும் புதிய உள்ளடக்கப் போக்குகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் தோன்றிய வடிவ உள்ளடக்க மாற்றங்கள் என புரிந்துக்கொள்ளலாம்.
விளிம்புநிலை படைப்புகள் மற்றும் ஆய்வுகள் மேலைநாடுகளில் முன்னரே தோன்றி வெகுவிரைவாக பரவத்தொடங்கியது எனலாம். ஆங்கில மொழியால் உலகமெங்கும் பரவிய இது இன்றும் ஆங்கில துறைகளின் பாடமாகவும் பேசுபொருளாகவும் இருக்கின்றது. தமிழ்ச்சூழலில் இருபதாம் நூற்றாண்டில் இடைப்பகுதியில் பேசத்தொடங்கிய இவ்விளிம்புநிலைக் கோட்பாடுகள் தமிழ் சிறுபத்திரைக்கையின் (பிரக்ஞை, நிறப்பிரிகை, தலித், மனற்கேணி…) மூலமாகத் தீவிரமாக வளர்ந்தன. தங்களது படைப்புகள் மூலம் இவற்றைப் பேசியவர்களில் பாமா, ப.சிவகாமி, இமையம், சோலை சுந்தர பெருமாள், பூமணி, சுகிர்தராணி, மேலாண்மை பொன்னுச்சாமி, பெருமாள் முருகன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
விளிம்புநிலை என்ற வகைமைக்குள் யாரெல்லாம் எதுவெல்லம் அடங்கும் என்பதையும் அவை எம்மாதிரியான படைப்புகளை மற்றும் பார்வையைக் கொண்டுள்ளது என்பதை சுருக்கமா விளங்கிக்கொள்ளலாம். விளிம்புநிலை என்று சொல்லப்படுபவை தலித்தியம், பெண்ணியம், பால்புதுமையரியம், மாற்றுத்திறனாளியம், பழங்குடியினர், புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்று வகைப்படுத்திக்கொள்ளலாம். இதனை சமூகவியல், பாலினம், உடல், பண்பாடு மற்றும் இடம் / வெளி என்றும் பாகுப்படுத்திக்கொள்ளலாம். மையத்திற்கு எதிரான, பன்மைத்துவத்தை முன்னிருத்துகிற, எதிர்ப்பண்பாட்டு அரசியலை பேசுவதாக இந்த விளிம்புநிலை அழகியல் அமைந்திருக்கின்றன. இவை ஒவ்வொன்றின் பின்னணியைப் புரிந்துக்கொள்வதன் மூலம் இவ்விளிம்புநிலைக் கோட்பாடு தமிழ் இலக்கியத்தில் எவ்வகை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறியலாம். இப்பகுதி ஒவ்வொரு கோட்பாட்டினையும் சில எழுத்தாளர்களையும் அறிமுப்படுத்துவதாக அமைகிறது.
தலித்தியம்
பொதுவாக தலித் என்ற சொல் சாதிய அடிப்படையில் புரிந்து கொள்ளப்பட்டாலும் சமூகத்தால் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட அனைவரையுமே குறித்து நிற்கும். இங்கு மற்ற விளிம்புநிலை மக்களையும் குறித்து பேசவிருப்பதால் சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் விடுதலை அரசியலாக தலித்தியம் எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்வோம். தலித் இலக்கியம் அல்லது தலித் அழகியல் என்பது வருணாசிரம அமைப்பின் மீதான விமர்சனத்தை முன்வைப்பது, விளிம்பை மையப்படுத்துவது, அனுபவத்தை எழுதுவது, புறக்கணிப்பை முதன்மைப்படுத்திய விடுதலை அரசியலை முன்னெடுத்தல் போன்றதாக அமையும். இதன் உள்ளோடும் ஒழுங்காக வரையறையை மீறல், இயல்பை மறுத்தல், அதிகாரப் புனைவுகளைக் தூக்கியெறிதல் என்பவை நிகழும். என். டி. ராஜ்குமார், ராஜ் கௌதமன், அன்பாதவன், ஆதவன் தீட்சண்யா, பாமா, பூமணி, இமையம், சு. தமிழ்ச்செல்வி, சிவகாமி போன்றோர் ஆக்கங்கள் குறிப்பிடத்தக்கன.
பெண்ணியம்
பெண்ணியம் என்பது பெண்களுக்கானது என்று தவறான புரிதல் இன்னமும் இருந்துவருகிறது. பெண்ணியம் குறிப்பிட்ட பாலினத்தை மையமிட்டதாக வளரவில்லை. அது ஆணாதிக்க மனநிலையை எதிர்த்தே தோன்றியது. இது ஆணாதிக்கத் தன்மை கொண்ட எல்லோரையும் எதிர்க்கிறது. இந்த ஆணாதிக்க மனநிலை பெண்களை மட்டுமல்ல ஆண்களை மற்ற பாலினத்தவரையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. பெண்ணியத்தின் நோக்கமாக இருக்கும் சிலவற்றை இங்கு சுருக்கமாக காணலாம். மரபின் மீதான விமர்சனம், பெண் முதன்மையான அடையாள அரசியலைப் பேசுதல், பாலின மையத்தை களைதல், கலை அழகியலில் பெண்ணை நோக்கிய சமூக பண்பாட்டு மாற்றத்தை முதன்மைப்படுத்துதல் போன்றவை. வரலாற்றில் பெண்ணின் இருப்பு என்பது பெண்ணின் சார்பிலிருந்து எழுதப்படவில்லை. அதிலும் இந்திய/தமிழ்ச் சூழலில் பெண் உடல் என்பது இரண்டாம் நிலை உடலாக இருந்து வருகின்றன. பெண்ணியத்தின் அடிநோக்கமாகப் பெண்களை மரபிலிருந்து மாற்றி மறு கட்டமைப்பு செய்வதும் வரலாற்றில் தொலைந்ததைத் தேடுவதாகவும் இருக்கிறது. இவற்றைப் பெண்களே செய்ய வேண்டும். படைப்புலகில் ஆண் தன்மையுடன் எழுதப்பட்ட ஆண் மற்றும் பெண் எழுத்துக்களை புறக்கணிப்பது ஒரு மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. க்ருஷாங்கினி, மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சல்மா, சுகிர்தராணி, உமாமகேஸ்வரி, சு. தமிழ்ச்செல்வி போன்றவர்கள் பெண்ணிய எழுத்தாளரகளாக அறியப்படுகிறார்கள்.
பால்புதுமையர்
ஆண் x பெண் என்ற இரு பால்களே இருக்கின்றன என்ற கருத்தாக்கம் சமூகத்தில் பரவலாக காணப்படுகின்ற ஒன்று. திருநங்கை என்ற பாலினத்தைக் கூட இவர்கள் மூன்றாம் பாலினமாகத்தான் வைத்திருக்கிறார்கள். மூன்றாம் பால் என்ற ஒன்று உண்டென்றால் அப்போது முதல், இரண்டாம் பால் எது என்ற கேள்வி எழுகிறது. எந்த தயக்கமுமின்றி ஆணே முதல் பால் என்றே பதில் வரும். அதிலேயே புரிந்துவிடும் இந்த பால் என்பது இரண்டுதான் என்பதை யார் உருவாக்கிய இருப்பார்கள் என்று? இங்கு ஆண் எனப்படுவது ‘ஆணாதிக்க மனநிலையே’. பால் புதுமையர் பற்றிய பேச்சுக்கள் விவாதங்கள் எழுந்த பின்னர் ஆண், பெண் என்பவை பால் (Sex) என்றும் மற்றவை பாலினம் (Gender) என்று வகைப்படுத்தினர். பால் என்ற கருத்தாக்கம் சமூகத்தால் ஒரு ஒழுங்கமைவிற்கு ஏற்ப்படுத்தப்பட்ட ஒன்று. பாலினம் அதன் புறனடை எனலாம். பால்புதுமையர் அழகியல் பாலினத்தை பன்மை வடிவமாகா முன்வைக்கிறது. LGBTIQA+ என்று பாலினத்தை மறுசீரமைப்பு செய்கிறது.
LGBTIQA+ என்பது Lesbian, Gay, Bisexual, Transgender, Intersex, Queer/Questioning, and Asexual. + என்பது மேலும் பல போன்றதாகும். பால்புதுமையரின் விடுதலை அரசியல் இயல்பு என்பதன் மீதான விசாரணையை முன்வைக்கிறது. எது இயல்பு என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் ஆண், பெண் தன்னைமை அசைத்துப் பார்க்கிறது. பாலின நீர்மை (Gender Fluidity) மற்றும் மயக்கத் தன்மையைக் கொண்டாடுவது, உடல் - பால் கருத்தாக்கத்தை மறு வடிவமைப்பிற்கு உட்படுத்துவது, புதிய காலம் - வெளி - மொழி - பண்பாட்டை உருவாக்கி பேசுதல் போன்றவை இதன் நோக்கம். வெள்ளைமொழி ரேவதி, லிவிங் ஸ்மைல் வித்யா, கல்கி சுப்ரமணியம், மரக்கா, அழகு ஜெகன் போன்றவர்கள் பால் புதுமையராகவும் அதன் விடுதலையை பேசுபவர்களாகவும் அறியப்படுகிறார்கள்.
மாற்றுத்திறனாளியம்
மனித உடல் என்பது எப்பொழுதும் முழுமை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. தமிழில் மாற்றுத்திறனாளி என்ற சொல்கூட ஒருவகை கருணையுடானான புனிதத்துவம் செய்யும் வேலையாக இருக்கிறது. இது ஒருவகை முழுமை என்ற கருத்தாக்கத்தை சமாதானம் படுத்துவதாக்த்தான் இருக்கிறது. ஆங்கிலத்தில் இதற்கு Disabled person என்ற சொல்லே இருக்கிறது. ஆங்கில மொழி மற்றும் நாட்டைப் போல தமிழர் - தமிழ் - மொழி சமத்துவத்தை நோக்கி நகரவில்லை. மொழியின் சமூக பண்பாட்டு கூறுகளே சொல்லின் பொருள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஒருபுறம் இருக்கட்டும். மாற்றுத்திறனாளியம் தங்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது நடத்துகிறது என்பதையும் அதேநேரம் அவர்களை எப்படி அணுகுவது அவர்களை எப்படி நாம் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்பதையும் இது வலியுறுத்துகிறது. அழகு, இயல்பு, திறனுடல் போன்ற கருத்துக்களை ஆராய்வதன் மூலம் அதற்கு பின்னால் உள்ள அரசியலை முன்னிறுத்துகிறது. தங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதும், இவர்களை சமூகம் எப்படி அணுகுகிறது என்பதும் இவர்கள் சமூகத்தினை அணுகுவதில் (Accessibility) உள்ளம் சிக்கல்களையும் குறிப்பிடுகின்றனர். சுகுமாரன், மனுஷ்ய புத்திரன், மு.ரமேஷ், கோ.கண்ணன், ப.சரவண மணிகண்டன் குறிப்பிடத்தக்கவர்கள்.
புலம்பெயர்வு இலக்கியம்
புலம்பெயர்வு (Diaspora) என்பதும் தனி ஆய்வு போக்காகவே இருக்கிறது. புலம்பெயர்வு இரண்டாக பார்க்கப்படுகிறது. ஒன்று தன் நாட்டிலேயே நடக்கும் பெயர்வு மற்றொன்று வேறு நாட்டிற்கு பெயர்ந்து போவது. இதில் இரண்டாவதாவது வேறு நாட்டிற்கு புலம்பெயர்தல் என்பதே விரிவாக பேசப்படுகிறது. இது மக்களின் பண்பாட்டு வெளி தொடர்பான சிக்கல்களை உள்ளடக்கியதாகும். ஒரு நாட்டில் இருந்து வேறு நாட்டிற்கு புலம்பெயர்ந்து போவோர் தங்கள் பண்பாட்டை காப்பதற்காக தங்கள் அடையாளத்தை நிறுவுவதற்கான பெரும் போராட்டத்தை மேற்கொள்வர். பண்பாட்டு கலப்பு, அனுபவம், பிறந்த நாட்டின் நினைவு, மொழி இழப்பு போன்ற சவால்களைச் சந்திக்க நேரிடும். அதேபோல் இந்திய மக்கள் தங்கள் பண்பாட்டை அந்நிலத்தில் மேற்கொள்ளும் (Practice) போது இந்திய பண்பாட்டின் பிற்போக்குகள் வெளிப்பட தொடங்கும். இங்கிருக்கும் சாதிய மத மேல் - கீழ் பார்வை அங்கே சலசலப்பை ஏற்படுத்தும். இது பண்பாடு, மொழி, இன வெளிகளைத் தாண்டிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் இலக்கியமாக மாற்றப்படுகிறது. பா.அகிலன், ஆழியாள், ஔவை, சோபா சக்தி, செந்தூரன் ஈசுவரநாதன் போன்றவர்கள் புலம்பெயர் அழகியல் படைப்பாக மாற்றியுள்ளனர்.
பழங்குடி அழகியல்
பழங்குடித் தன்மை என்பது ஒருவகையில் இயற்கை சார்ந்த விலங்குத்தன்மை எனலாம். இது சமவெளி ஆதிக்க மனித முன்னிலைப்படுத்துலுக்கு எதிரானது. பழங்குடி அழகியல் என்பது அவர்களுக்கும் இயற்கைக்குமானா உறவுநிலை, அதாவது பழங்குடி மக்களுக்கும் அவர்களின் வெளிக்குமான உறவு என்பதாகும். இந்த உறவை முதன்மைப்படுத்தி வெளிப்படுத்தக்கூடியப் படைப்பிலக்கியம் பழங்குடி இலக்கியமாகும். ஆனால் இந்த சமவெளி ஆதிக்க மனித மனநிலை இவர்களையும் இவர்களின் பண்பாட்டையும் பொதுமைப்படுத்துவதன் மூலம் ஒரு பண்பாட்டு இழப்பையும் வெளி அபகரிப்பையும் நிகழ்த்துகின்றனர். இப்படிபட்ட பண்பாட்டு இழப்பு ஏற்படும் எதே வேலையில் பண்பாட்டு கலப்பும் ஏற்படுகிறது. இதன் மூலம் பழங்குடி மக்கள் விளிம்புக்கு தள்ளப்படும் ஏதே வேலையில் அடிமைகளாகவும் ஆக்கப்படுகிறார்கள். இப்படி தம், தம் இயற்கை சார்ந்த வாழ்வியலையும் பொதுமைப்படுத்தப்பட்ட சமூகத்தில் நுழைவதன் மூலம் ஏற்படும் சிக்கல் இரண்டையும் பதிவு செய்வதாக பழங்குடி அழகியல் அமைகின்றது. லட்சுமணன் எழுதிய ஒடியன் கவிதைத் தொகுப்பும் சப்பே கொகாலு என்ற சிறுகதைத் தொகுப்புமே வெளிவந்தது இருக்கின்றன.
விளிம்புநிலைக் கோட்பாடுகள் ஒவ்வொன்றும் தொடர்புடையது. விளிம்புநிலை குறைந்தபட்டசம் இரண்டு ஒடுக்குமுறைக்கு உள்ளாகுகின்றனர். பெண் – பாலின ரீதியாகவும் சாதிய ரீதியாகவும் தலித்தியப் பெண் என்று இரண்டு ஒடுக்குதலுக்கு ஆளக்கப்படுகிறார். மேலும், ஒரு பெண் பாலின – சாதிய – மாற்றுத்திறனாளிய- பழங்குடி போன்று பல ஒடுக்குதளுக்கு ஆளாகுவது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு மேற்கூறியவற்றை வரையறுத்துக் கூறினும் இதுபோல் பல விளிம்புநிலை சார்ந்த கோட்பாடுகள் உருவாகலாம். இது தமிழ் இலக்கிய வகைமைக்குப் புதியது எனினும் காலந்தோறும் வரலாற்றில் எழுந்த இலக்கிய வகைமைக்குப் பொருத்தி விளக்கவும் விமர்சனம் செய்யவும் இவ்விளிம்புநிலை கோட்பாடுகள் உதவுகின்றன. முன்னர் கூறியது போல் இது சமூதாய கோட்பாட்டளவில் நின்றுவிடாமல் இலக்கியமாகவும் உருவெடுக்கின்றன.
தலித்தியம், பெண்ணியம், புலம்பெயர்வு சார்ந்து பேசிய அளவில் மாற்றுத்திறனாளியம், பால்புதுமையர் அரசியல், பழங்குடியினர் மரபு போன்றவை வீரியமாகப் பேசப்படவில்லை. தமிழ் மற்றும் மொழித் துறையின் பாடத்திட்டத்திலும் சரி இலக்கியம் வரலாறுகளிலும் சரி விளிம்புநிலை பற்றிய பகுதிகள் இடம்பெறுவது குறைவே. தொகுப்பது, வகைப்படுத்துவது என்பதற்கு பின்னால் உள்ள அரசியலை புரிந்துகொள்ளவதன் மூலம் இந்த விளிம்புநிலை கோட்பாடுகள் ஏன் தவிர்க்கப்படுகின்றன என்பதை புரிந்துக்கொள்ளலாம். இன்னும் பல்வேறு வகைமைகளையும் இலக்கிய இலக்கணப் போக்குகளையும் பற்றி பேசுவதன் மூலம் தமிழை பல்துறை சார்ந்த அறிவுடன் இணைத்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். ஒழுங்கு, அமைப்பு, இவர்களுக்கு உரியது, என்ற மேட்டிமைத்தன்மையான புனிதத்தன்மையிலிருந்து தமிழ் இலக்கிய வரலாற்றை வழிமாற்றுவதாக அமையும்.

Comments
Post a Comment