LPGமயமான கல்வி -ஶ்ரீ அய்யனேஷ்வர்
LPGமயமான கல்வி -ஶ்ரீ அய்யனேஷ்வர்
டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டம் என்பது வெறும் NEET, தேர்வு முறைகேடு, அல்லது கல்வி அமைச்சரின் ராஜினாமா என்பதோடு சம்பந்தப்படுத்தப்படும் போராட்டம் மட்டுமல்ல. இன்று மாணவர்களுக்கும் கல்வி முறையின் மீது இருக்கும் தீர்க்கமான அதிருப்தியின் வெளிப்பாடாகவும், வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, வாய்ப்பு மறுக்கப்படுவது போன்ற அதி முக்கியமான பிரச்சினைகளில் சிக்கவைக்கப்பட்டு இருக்கும் இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் அரசியல் நிகழ்வாகவும் பார்க்கப்பட வேண்டும்.
அரசியல் அமைப்பு நமக்கு வழங்கி இருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்று கல்வி பெறும் உரிமை. இன்று கல்வியை உரிமை என்ற இடத்தில் இருந்து, வணிகமாக, பணம் படைத்தவர்கள் மட்டும் பெறக்கூடிய பண்டமாக தற்கால கல்வி முறை மாற்றி இருக்கிறது. அனைவருக்கும் கல்வி என்பதற்கு மாறாக, பணம் படைத்தவர்களுக்கு மட்டும் கூடுதல் வாய்ப்பு என்பதை ஊக்குவிக்கிறது. அதாவது "Formal Equality, Real Inequality". அனைவருக்கும் கல்வி என்பதுபோல் தெரிந்தாலும், குறிப்பிட்ட சிலர்தான் அதில் பலன் சென்ற சேரும்.
வேதகாலம் தொடங்கி இன்று வரையிலான மாற்றங்கள் நம்மை முன்னோக்கி நகர்த்தி இருந்தாலும், இன்றும் அதன் கூறுகள் சமூகத்தில் பிரதிபலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. மனுஸ்மிருதியில் சொல்லப்படுவது போல் கல்வி எப்படி குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே கிடைத்ததோ, அதைப்போன்று இன்று குறிப்பிட்ட வணிக ரீதியான நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்ற நிலைமை உருவாகி இருக்கிறது.
மனுஸ்மிருதி சமூகத்தை பிறப்பின் அடிப்படையில் படிநிலைகளாகப் பிரித்து, கல்வி, அறிவு, அதிகாரம் ஆகியவை சிலருக்கே உரியது என்ற எண்ணத்தை பிரதிபலித்தது. அறிவின் மீது அனைவருக்கும் சமமான உரிமை என்று சொல்லுவதை அது ஏற்கவில்லை. இன்று நாம் வந்து சேர்ந்து இருக்கும் கோச்சிங் சென்டர் கலாச்சாரம் அனைவருக்குமான வாய்ப்பை வழங்குகிறது என்றால், இல்லை என்பதுதான் உண்மை.
இந்தியக் கல்வி அமைப்பு கடந்த பல தசாப்தங்களாக எவ்வாறு மாறி இருக்கிறது என்பதன் வரலாற்றுப் பின்னணியில் தான் இந்தப் போராட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக உலகமயமாக்கல் (Globalisation), நவதாராளவாதம் (Neoliberalism) மற்றும் இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கல்வியை ஆழமாக மாற்றியுள்ளன. மேலும், கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியதன் விளைவு, கல்வி சார்ந்த சீர்திருத்தங்களை மத்திய அரசுகளால் சுலபமாகவும், அவர்களுக்கு ஏற்றதுபோல் மாற்றி அமைப்பதற்கான சுதந்திரத்தை வழங்கியது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டு 1944யில் அமெரிக்காவில் நடைபெற்ற பிரிட்டன் வுட்ஸ் (Bretton Woods) மாநாட்டில் International Monetary Fund (IMF) மற்றும் World Bank உருவாக்கப்பட்டன. 1970களின் இறுதியிலும் 1980களின் தொடக்கங்களிலும் அந்த காலகட்டத்தில் நிலவிய எண்ணெய் விலையேற்றம், மற்றும் 1980யில் அமெரிக்காவில் ஏற்பட்ட பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கன் பெடரல் வங்கி அதன் வட்டி விகிதத்தை உயர்த்தியதினாலும், வளர்ந்து வரும் நாடுகள் பெரும் கடன் சுமைக்கு ஆளானது.
இந்த சூழலை சமாளிக்க வளர்ந்து வரும் நாடுகள் IMF, உலக வங்கி முதலிய நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறத் தொடங்கின. இந்த சூழலில் நிபந்தனைகளுடன் கடன் தருவதற்கு இந்த நிறுவனங்கள் முன்வந்தன. Structural Adjustment Programmes (SAPs) போன்ற நிபந்தனைகளுடன் கடன் பெறப்பட்டது. இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் நாடுகளின் பொருளாதாரக் கையாளுகையில் மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெறத் தொடங்கியது.
அரசு செலவினங்களை குறைத்தல், தனியார்மயமாக்குதல், நாட்டின் சந்தைகளைத் திறந்துவிடுதல், நிறுவனங்களின் மீதான அரசு கட்டுப்பாட்டை குறைத்துக்கொள்ளுதல் போன்ற நிபந்தனைகள் அதில் அடங்கும். இது இந்திய கல்வி முறையை நேரடியாக பாதிக்கவில்லை என்றாலும், இதன் பின்னர் இந்த நிபந்தனைகளின் கீழ் செய்யப்பட்ட மாற்றங்கள் இன்றைய கல்வி முறைக்கு வித்திட்டது என்று சொல்லலாம்.
1948 ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் மனித உரிமைப் பிரகடனம் (UDHR) வெளியிடப்பட்டது. இதில் பிரிவு 26யில் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் கல்வி பெறும் உரிமை உண்டு என்று அறிவித்தது. தொடக்கக் கல்வி இலவசமாகவும் கட்டாயமாகவும் இருக்க வேண்டும் என்றும், உயர்கல்வி திறமை (Merit) அடிப்படையில் அனைவருக்கும் சமமாக அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்துகிறது.
இதன் பின்னர் 1950யில் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பு, குறிப்பாக Directive Principles of State Policy-இல், கல்வியை அரசின் சமூகப் பொறுப்பாக மாற்றியது. பின்னர் 86வது அரசியலமைப்புத் திருத்தம் (2002) மற்றும் கல்வி உரிமைச் சட்டம் (2009) மூலம் தொடக்கக் கல்வி அடிப்படை உரிமையாக மாற்றப்பட்டது. இதன் பின்னர் அரங்கேறிய நிகழ்வுகள் கல்வியை சமூகப் பொறுப்பில் இருந்து விலக்கி சந்தைப் பொருளாக மாற்றியது. சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
அரசுகளின் கொள்கையை விளக்குவதற்கு முன் LPG தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற கொள்கை இந்திய பொருளாதாரத்தில் எவ்வாறான தாக்கத்தை உருவாக்கின என்பதையும், சந்தை எவ்வாறு மாற்றப்பட்டது என்பதையும் ஆராய்வது முக்கியம்.
1991-க்குப் பிறகு இந்தியா புதிய பொருளாதாரக் கொள்கையான Liberalisation, Privatisation, Globalisation (LPG Reforms)-ஐ ஏற்றுக்கொண்டது. 1991 பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகு, கல்வித் துறையிலும் சந்தை நோக்கு மேலோங்கியது. தனியார் பள்ளிகள், தனியார் பல்கலைக்கழகங்கள், சுயநிதிக் கல்லூரிகள், கோச்சிங் சென்டர்கள் ஆகியவை வேகமாக வளர்ந்தன.
உயர்கல்வியில் அரசின் முதலீடு போதுமான அளவில் அதிகரித்திடாத நிலையில், தனியார்துறை முக்கிய பங்காற்றத் தொடங்கியது. அதே நேரத்தில் அதன் நோக்கம் உலகப் பொருளாதாரத்துடன் இந்தியாவை இணைத்து முதலீடுகளை ஈர்ப்பது, பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதாக இருந்தது. இதன் விளைவாக தகவல் தொழில்நுட்பம் (IT), BPO, தொலைத்தொடர்பு, வங்கி, நிதிச் சேவைகள், மருந்துத் தொழில்நுட்பம் வளர்ச்சி போன்ற துறைகள் வேகமாக வளர்ந்தன.
உதாரணமாக, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, புனே, குருகிராம் போன்ற நகரங்கள் உலக IT நிறுவனங்களின் மையங்களாக மாறின. இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகின. 1990-களுக்கு முன்பு இந்திய இளைஞர்களின் முக்கிய இலக்கு அரசு வேலை அல்லது பொதுத்துறை நிறுவனங்களாக இருந்த நிலையில், 2000-களுக்குப் பிறகு தனியார் IT துறைகள் மிகப்பெரிய வேலைவாய்ப்பை வழங்கத் தொடங்கின.
ஆனால் இதே நேரத்தில், உலகமயமாக்கலின் கீழ், பன்னாட்டு நிறுவனங்கள் "Flexible Labour Market" (நெகிழ்வான தொழிலாளர் சந்தை) என்ற கொள்கையை முன்னிறுத்தின. அதாவது, நிறுவனங்கள் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப தொழிலாளர்களை எளிதில் பணியில் அமர்த்தவும், தேவைப்பட்டால் பணிநீக்கம் செய்யவும் வசதியாக இருக்க வேண்டும் என்ற அணுகுமுறை. இதன் விளைவாக பல துறைகளில் நிரந்தர வேலைகளை விட ஒப்பந்த வேலை (Contract Employment), அவுட்சோர்சிங் (Outsourcing), தற்காலிக வேலை (Casual Employment) ஆகியவை அதிகரித்தன. 2022–2024 காலகட்டத்தில் உலகளாவிய IT நிறுவனங்களில் நடந்த பெருமளவிலான பணிநீக்கங்கள் இதற்கு ஒரு உதாரணம். உயர்ந்த சம்பளம் இருந்தாலும் வேலை நிரந்தரமில்லாமல் ஆனது.
இதன் பின்னர் அரசு துறைகளிலும் ஒப்பந்த வேலை, அவுட்சோர்சிங், தற்காலிக வேலை ஆகியவை அதிகரித்தன. 1990-களில் பொறியியல் கல்லூரிகள் வேகமாக அதிகரித்தன. குறிப்பாக தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான தனியார் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் வெளியே வரத் தொடங்கினர். ஆனால் அதே அளவுக்கு உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. கல்விக்கு ஏற்ப வேலையைத் தேடிக்கொள்வதில் தொடர் சிக்கல் நிலவியது.
கார்ல் மார்க்ஸ் சொல்லுவதைப் போல் "Reserve Army of Labour" என்ற கருத்து, அதாவது வேலை இல்லாமல் அல்லது தகுதியான வேலை கிடைக்காமல் பெரும் கூட்டம் தெருக்களில் அல்லோலப்பட்டுக்கொண்டு இருப்பது முதலாளிகளுக்கு ஊதியத்தை கட்டுப்படுத்தவும், தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்ற கருத்து இன்று இந்தியாவில் நிலைமையுடன் பொருந்துவதாக இருக்கிறது.
இன்றைய இந்தியச் சூழலில், உயர்கல்வி பெற்ற கோடிக்கணக்கான இளைஞர்கள் குறைந்த எண்ணிலான வேலைகளுக்குப் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள் பெருமளவில் தனியார்மயமாக்கப்பட்டு இருக்கின்றன. போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களைச் சார்ந்ததாக மாறிவிட்டன. கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் சமமான போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகிறது.
இதனால், "அறிவு அனைவருக்கும்" என்ற சமத்துவக் கொள்கைக்கு பதிலாக, "வாய்ப்பு உள்ளவர்களுக்கே வெற்றி" என்ற நிலை உருவாகிறது. இந்தியச் சமூகத்தில் வர்க்கமும் சாதியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதால், கல்வி அமைப்பையும் இந்த இரு பரிமாணங்களிலும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தனது Annihilation of Caste நூலில் குறிப்பிடுகிறார்: "Caste is not merely a division of labour; it is a division of labourers." அதாவது, சாதி என்பது வேலையின் மீதான பிரிவினை மட்டும் அல்ல; அது மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்து, அவர்களின் வாழ்க்கையையும் வாய்ப்புகளையும் நிர்ணயிக்கும் அமைப்பாக செயல்படுகிறது. இதை கல்வி வாய்ப்புகளுடன் ஒப்பிடுகையில், அனைவருக்கும் கல்வி என்பதில் இருந்து "வாய்ப்பு உள்ளவர்களுக்கே வெற்றி" என்பதாக மாறியிருப்பதையும், வாய்ப்புகள் யார் கையில் சென்று சேர்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரெட்ரிக் எங்கல்ஸ் The German Ideology என்ற நூலில் இவ்வாறு சொல்கின்றனர்: "The ruling ideas of each age have ever been the ideas of its ruling class." இதை நாம் பொருத்திப் பார்த்தோமானால், கல்வி அமைப்பு நம்மை மேன்படுத்துவதற்க்கானது அல்ல; அது ஆளும் வர்க்கத்தின் பொருளாதார மற்றும் அரசியல் நலன்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது விளங்கும்.
முதலாளித்துவ சமூகத்தில் கல்வியின் நோக்கம் முழுமையான மனிதனை உருவாக்குவது அல்ல; மாறாக, சந்தையின் தேவைக்காக தொழிலாளர்களை உருவாக்குவதாக அமைகிறது. கல்வியை அடிப்படை உரிமையாகக் கருதினாலும், நடைமுறையில் கல்வி அமைப்பு அதிகளவில் சந்தைமயமாக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி, கோச்சிங் சென்டர் கலாச்சாரம், நுழைவுத் தேர்வுகளை மையப்படுத்திய மதிப்பீடு போன்றவை கல்வி ஒரு உரிமையாக இல்லாமல், வாங்கக்கூடிய பொருளாக மாறும் அபாயத்தை உருவாக்கி இருக்கின்றன.
NEET போன்ற நுழைவுத் தேர்வுகள் இந்தியாவில் ஏன் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்? என்றால், கல்வி அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமையாக ஒரே நாளில் நிறைவேற்றப்படவில்லை. கல்வி என்பது நமது வாழ்நிலையை தீர்மானிக்கும் கருவியாக இருந்தாலும், உண்மையில் இன்றைய நிலைமை எப்படி இருக்கிறது? நம்மில் பலரும் முதல் தலைமுறை பட்டதாரிகள். அரசியல் அமைப்பு உருவான பின்னும் அனைவருக்கும் கல்வி என்ற நிலையை அடைவதற்கு இன்று வரை நாம் தொடர் போராட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கிறோம்.
கல்வி பெறாமல் நாம் உயிர்வாழ முடியும், கல்வி கற்காமல் வேலை கிடைக்கும், கல்வி பெறாமல் மூன்று வேலை உணவை நாம் பெற முடியும். இருந்தும் ஏன் கல்விக்கான போராட்டத்தை நாம் நடத்துகிறோம்? "உங்களுக்கு கல்வி பெறும் தகுதி கிடையாது" என்று ஒரு கூட்டம் தொடர்ந்து சொல்லுகிறது. அதை மறுத்து, "நாங்கள் ஒன்றும் வேற்றுகிரகவாசிகள் கிடையாது. நாங்கள் மனிதர்கள். உங்களைக் காட்டிலும் கல்வியில் நாங்கள் சிறந்து விளங்க முடியும். நீங்கள் கல்வியை கௌரவமாகப் பார்க்கிறீர்கள்; நாங்கள் எங்கள் வாழ்நிலையை மேம்படுத்திக்கொள்ளும் கருவியாகப் பார்க்கிறோம்" என்று அவர்களுக்கு தொடர்ந்து சொல்ல வேண்டி இருக்கிறது.
இன்னும், சமூக, பொருளாதார சூழல்களை எல்லாம் கடந்து படிப்பை முடித்தால், "உனக்கு தகுதி இருக்கிறதா?" என்று அரசு கேட்கிறது. நீங்கள் தேர்வு முறையை தகுதியாக வைத்தீர்கள் என்றால், இங்கு அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பு இல்லை என்பதும், அது திட்டமிட்டு மறுக்கப்படுகிறது என்பதும் நிதர்சனமாக இருக்கிறது.
கற்றலுக்கான வாய்ப்புகளை மேம்படுத்தாமல், கல்வி முறையை வலுப்படுத்தாமல், தேர்வை கடினமாக்குவதன் நோக்கம் என்ன? அனைவரையும் சமமாகப் பார்க்கும் தேர்வு முறை, மாணவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்கிற நோக்கங்களுக்காக உருவாக்கப்படுகிறது என்று சொன்னால், அது ஏற்றத்தாழ்வை மேலும் வலுப்படுத்தச் செய்கிறது.
NEET-உடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால், பணம் கட்டி இரண்டு, மூன்று வருடங்கள் இதற்கென்றே படிக்கும் மாணவர்களுடன் அரசு பள்ளியில் படித்த பின்தங்கிய சமூக வாழ்நிலையை கொண்ட மாணவரும் போட்டி போட வேண்டும் என்று சொல்லுவது, அரசு பள்ளியில் படித்த மாணவர்களை நேரடியாக "உங்களுக்கு தகுதி இல்லை, எங்களுடன் போட்டிக்கு வராதீர்கள்" என்று சொல்லுவதைப் போல இருக்கிறது. இதன் காரணமாகத்தான் இதை நவீன மனுவாத அணுகுமுறை என்று கருதவேண்டி இருக்கிறது.
NEET வருவதற்கு முன் என்ன நிலைமை? பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தால் அரசு மருத்துவக் கல்லூரி எளிதில் கிடைத்துவிடும். இன்று நிலைமை வேறுவிதமாக மாறி இருக்கிறது. பள்ளிக் கல்வியில் அதிகமான மதிப்பெண் பெற்றாலும், NEET-இல் தேர்ச்சி பெற வேண்டும். NEET-இல் தேர்ச்சி பெற்றாலும், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரி கிடைக்கும். இல்லை என்றால் லட்சங்களில் பணம் செலுத்தி தனியார் கல்லூரிகளில் படிக்க வேண்டும். இதில் என்ன சமத்துவம் இருக்கிறது? இது திட்டமிட்டு பின்தங்கிய சமூகப் பிரிவினர் மீது நடத்தப்படும் வன்முறை வெறியாட்டம்.
பணம் படைத்தவர்கள் பல லட்சங்கள் கோச்சிங் சென்டர்களுக்கு செலுத்தி அரசு கல்லூரிக்கு போட்டி போடுகிறார்கள். வெறும் கனவுகளை மட்டும் சுமந்து அரசு பள்ளிகளில் படித்து மருத்துவராக வேண்டும் என்று நினைப்பவர்கள், பணம் இருந்தால் மட்டுமே மருத்துவராக முடியும் என்பதை சொல்லி தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். மனு சாதியைச் சொல்லி படிப்பை பறித்தது, இன்று தகுதி என்று சொல்லி, பணம் இல்லை என்று சொல்லி, பொருளாதாரத்திலும் சாதியிலும் ஒடுக்கப்பட்டவர்களை ஒடுக்குகிறது NEET.
கல்வியின் தரத்தை உயர்த்துகிறோம் என்ற பெயரில் தேர்வு முறையை கடினமாக்குவது, இதுவரையில் முதல் தலைமுறை பட்டதாரிகளாக மாற நினைப்பவர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்தும் நடைமுறையாகும். இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம் சமமாக இல்லாத நிலையில், நுழைவுத் தேர்வுகள் உண்மையில் சமமான போட்டியை உருவாக்குவதில்லை. பல இலட்சம் ரூபாய் செலவழித்து பயிற்சி பெறும் மாணவருக்கும், அத்தகைய வசதி இல்லாத மாணவருக்கும் இடையேயான போட்டி சமத்துவமின்மையை மேலும் வலுவடையச் செய்கிறது.
இது நாம் முன்னரே சொன்னதுபோல் "Formal Equality, Real Inequality" — சட்டரீதியாக சமம், நடைமுறையில் சமமற்ற தன்மையை பிரதிபலிக்கிறது. அறிவை அனைவருக்குமான பொதுச் சொத்தாக மாற்றுவதை இன்றைய கல்விமுறையம் அரசும் விரும்பவில்லை. ஒரு சமூகத்தில் கல்வி சந்தைப் பொருளாக மாறும் போது, பணக்காரர்களின் வாய்ப்புகள் பெருகுகின்றன; இது அரசியல் அமைப்பின் சமத்துவத்திற்கான கூறுகளை சிதைப்பதாக அமைகிறது. டெல்லி மாணவர் போராட்டம் வெறும் செய்தியல்ல, இந்தியக் கல்வி அமைப்பின் எதிர்காலத்தைப் பற்றிய எச்சரிக்கை.
அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும் வரை நமது போராட்டம் தொடரும். சமத்துவ இந்தியாவை உருவாக்கும் வரலாற்றின் குரலாகவே அது எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

Comments
Post a Comment