யாரும் தேடாத இடம் - மா. அன்பரசு

                யாரும் தேடாத இடம் - மா. அன்பரசு


2009-ஆம் ஆண்டு.

பாலக்காடு மாவட்டம், அயலூர் கிராமம்.

மாலை நேரம். வீட்டின் பின்புறம் இருந்த பழைய கிணற்றின் அருகே சஜிதா நின்றுகொண்டிருந்தாள். ரஹ்மான் எதிரே இருந்த புளியமரத்தில் சாய்ந்திருந்தான். சில நொடிகள் இருவருக்கும் இடையில் பேச்சு இல்லை.

“வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டாங்க.”

ரஹ்மான் நிமிர்ந்து பார்த்தான்.

“அடுத்த மாசம் நிச்சயதார்த்தமாம்.”

அவள் குரல் நடுங்கியது.

ரஹ்மான் எதுவும் பேசவில்லை.

“நம்ம விஷயத்தைச் சொல்லலாமா?”

“சொன்னா?”

அவள் அவனைப் பார்த்தாள்.

“என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்ப மாட்டாங்க. உன்னையும் விட மாட்டாங்க.”

கிணற்றுக்குள் ஒரு கல் விழுந்த சத்தம் கேட்டது. இருவரும் அந்தச் சத்தத்தையே கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அந்த இரவு ரஹ்மானுக்கு உறக்கம் வரவில்லை.

அடுத்த சில நாட்கள் அவர்கள் வெளியூருக்குச் சென்று வாழ்வது பற்றிப் பேசினர்.

வேலை இல்லை.

பணம் இல்லை.

தங்க இடமில்லை.

வீட்டிலிருந்து வெளியேறியவுடன் காவல்துறை தேடத் தொடங்கிவிடும்.

ஒரு இரவு ரஹ்மான் நீண்ட நேரம் அமைதியாக இருந்துவிட்டு சொன்னான்.

“எல்லாரும் உன்னை வெளியில்தான் தேடுவாங்க.”

சஜிதா அவனைப் பார்த்தாள்.

“யாரும் என் வீட்டுக்குள்ள தேட மாட்டாங்க.”

அவள் முகம் மாறியது.

“உன் வீட்டிலேயா?”

“ஆமாம்.”

“அது எப்படி முடியும்?”

“என் அறை யாரும் வராத இடம்.”

அவன் சிரிக்க முயன்றான்.

“பழைய டிவி, ரேடியோ, வயர்... எல்லாம் குவிஞ்சு கிடக்கும். யாரும் அதை அறைன்னு கூட நினைக்க மாட்டாங்க.”

சஜிதா சில நொடிகள் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“பிடிச்சுட்டா?”

ரஹ்மான் பதில் சொல்லவில்லை.

பிறகு மெதுவாகச் சொன்னான்.

“அதுக்கப்புறம் நம்ம வாழ்க்கையை விதி முடிவு பண்ணட்டும்.”

2010

பிப்ரவரி.

அதிகாலை.

கிராமம் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தது. சஜிதா வீட்டின் பின்வாசலை மெதுவாகத் திறந்தாள். செருப்பை கையில் எடுத்துக்கொண்டாள். வாசலை மூடியபோது ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். வீட்டின் உள்ளே சிறு விளக்கு எரிந்துகொண்டிருந்தது.

அவள் கண்களில் கண்ணீர் வந்தது.

துடைத்துக்கொண்டாள்.

பிறகு நடந்தாள்.

ஐநூறு மீட்டர்.

அவ்வளவுதான்.

அந்த ஐநூறு மீட்டருக்குப் பிறகு அவளைக் கண்டுபிடிக்க ஒரு கிராமமே வெளியே தேடப்போகிறது.

ரஹ்மானின் அறை வீட்டின் கடைசி மூலையில் இருந்தது.

உடைந்த தொலைக்காட்சிகள்.

பழைய ரேடியோக்கள்.

விசிறி மோட்டார்கள்.

வயர் சுருள்கள்.

மரப்பெட்டிகள்.

அந்தக் குப்பைகளுக்கு நடுவே ஒரு மனிதர் படுக்கக்கூடிய அளவுக்கு மட்டும் இடம்.

அதுதான் சஜிதாவின் புதிய உலகம்.

ஆனால் ரஹ்மான் அந்த அறையை அப்படியே விட்டுவிடவில்லை.

அவன் ஒரு பழைய தொலைக்காட்சியைச் சுத்தம் செய்து, சுவரில் இருந்த சிறிய அலமாரியின் மேல் வைத்தான்.

அதன் ஒலியை வெளியே யாரும் கேட்கக்கூடாது என்பதற்காக, பழைய ஹெட்செட் ஒன்றை தொலைக்காட்சியுடன் இணைத்துக் கொடுத்தான்.

மின்விசிறியையும் சத்தம் குறைவாக இயங்கும் வகையில் சரிசெய்தான்.

“இதுல செய்தி, படம் எல்லாம் பார்க்கலாம்.”

சஜிதா தொலைக்காட்சியைப் பார்த்தாள்.

“சத்தம் வெளியே கேட்காதா?”

“ஹெட்செட் போட்டுக்கிட்டா கேட்காது.”

“மின்விசிறி?”

“இதுவும் சத்தம் அதிகமா வராது. பகலிலும் ஓடவிடலாம்.”

அவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

“உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கக் கூடாது.”

சஜிதா பதில் சொல்லவில்லை.

அந்த அறைக்குள் அவளுக்காக ஒரு சிறிய உலகத்தை உருவாக்கியிருந்தான்.

ஒரு படுக்கை.

ஒரு மின்விசிறி.

ஒரு தொலைக்காட்சி.

ஒரு ஹெட்செட்.

சில புத்தகங்கள்.

தண்ணீர்.

உணவு.

அதற்கு அப்பால் - ஒரு மூடிய கதவு.

வெளியில் அவளைத் தேடி மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

“அவள் எங்க போயிருப்பா?”

“பேருந்து நிலையம் பார்த்தீங்களா?”

“அவளோட தோழிகளிடம் கேட்டீங்களா?”

“காவல்துறைக்கு தகவல் சொல்லுங்க!”

அதே நேரத்தில், அவர்கள் தேடிய பெண் ஒரு வீட்டின் கடைசி அறையில் சுவரோடு ஒட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளுடைய மூச்சுச் சத்தம்கூட அவளுக்கே பெரிதாகக் கேட்டது. அன்றிரவு அவளால் தூங்க முடியவில்லை. வெளியில் காலடிச் சத்தம் கேட்டது. அவள் உடலைச் சுருக்கிக்கொண்டாள். கதவின் கைப்பிடி அசைந்தது.

அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

“ரஹ்மான்...”

அவளுடைய உதடுகள் மட்டும் அசைந்தன.

கதவு திறக்கவில்லை.

சில நொடிகளுக்குப் பிறகு காலடிச் சத்தம் விலகியது.

அவள் மெதுவாக மூச்சை வெளியே விட்டாள்.

ரஹ்மான் அவளைப் பார்த்தான்.

“பயப்படாதே.”

அவள் அவனைப் பார்த்தாள்.

அந்த இரவில் இருவருக்கும் தெரிந்தது ஒன்றுதான்.

வெளியில் இருப்பது ஆபத்து.

உள்ளே இருப்பது பாதுகாப்பு.

அந்த நேரத்தில் அந்த இருவருக்கும் அது மட்டுமே உண்மை.

முதல் சில நாட்கள் அப்படித்தான் சென்றன.

ரஹ்மான் வேலைக்குச் செல்வான்.

சஜிதா அறைக்குள் இருப்பாள்.

காலை அவன் உணவை வைத்து கதவை மூடுவான்.

அவள் ஹெட்செட் போட்டுக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பாள்.

வெளியில் உலகம் ஓடிக்கொண்டிருக்கும்.

அறைக்குள் நேரம் மட்டும் மெதுவாக நகரும்.

ஒருநாள் ரஹ்மானின் தாய் கதவைத் திறக்க வந்தார்.

“இந்தக் குப்பையெல்லாம் எப்ப சுத்தம் பண்ணப் போறே?”

ரஹ்மான் உடனே கதவுக்கு முன்னால் நின்றான்.

“அம்மா... வயரெல்லாம் கலந்துகிடக்குது. நாளைக்குப் பார்த்துக்கறேன்.”

அவர் உள்ளே பார்க்க முயன்றார்.

ரஹ்மான் கதவை இன்னும் கொஞ்சம் சாத்தினான்.

“இப்ப வேண்டாம்.”

அவர் சென்றுவிட்டார்.

கதவு மூடப்பட்டது.

பழைய டிவி பெட்டியின் பின்னால் நின்றுகொண்டிருந்த சஜிதா மெதுவாக மூச்சை விட்டாள். அவளுடைய கைகள் நடுங்கின.

ரஹ்மான் அவளைப் பார்த்தான்.

இருவரும் பேசவில்லை.

சில நொடிகளுக்குப் பிறகு சஜிதா ஹெட்செட்டை காதில் மாட்டிக்கொண்டாள்.

தொலைக்காட்சியில் ஒரு பழைய பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

வெளியுலகம் மறைந்தது.

அறை மட்டும் மீதமிருந்தது.

ஆண்டுகள் நகர்ந்தன.

அறையில் இருந்த ஒரு பழைய காலண்டர் மட்டும் ஒவ்வொரு ஆண்டையும் காட்டியது.






ஒவ்வொரு டிசம்பரிலும் சஜிதா அந்தக் காலண்டரை எடுத்துப் பார்த்தாள்.

பிறகு கிழித்தெறிந்தாள்.

புதிய காலண்டர் வந்தது.

புதிய ஆண்டு வந்தது.

அவளுக்கு மட்டும் புதிய வாழ்க்கை வரவில்லை.

கோடைக்கால மதியம்.

அறைக்குள் காற்றே இல்லை.

மின்விசிறி மெதுவாகச் சுற்றிக்கொண்டிருந்தது.

சஜிதா ஜன்னலைத் திறந்தாள்.

வெளியில் குழந்தைகள் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிறுமி சைக்கிளில் விழுந்தாள்.

அவள் அழுதாள். அவளுடைய தாய் ஓடி வந்து தூக்கிக்கொண்டாள்.

“ஒண்ணும் ஆகல... அழாதே.”

சஜிதா ஜன்னலுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தாள்.

அவள் கண்களில் கண்ணீர்.

“அம்மா...”

என்று மெதுவாகச் சொன்னாள்.

அந்தச் சிறுமியின் அழுகை தூரமாகிப் போனது.

சஜிதா ஜன்னலை மூடினாள்.

மின்விசிறி தொடர்ந்து சுழன்றது.

மழைக்காலம்.

சுவரில் ஈரம் படர்ந்தது.

ஓட்டிலிருந்து தண்ணீர் சொட்டியது.

சஜிதா ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் உள்ளே பழையத் துணியை போட்டு அந்த இடத்தில் வைத்தாள். டப் டப்பென விழுந்த சத்தம்

தப்.

தப்.

யாருக்கும் கேட்காத அந்தச் சத்தம் முழு இரவும் தொடர்ந்தது.

அவள் ஹெட்செட் போட்டுக்கொண்டு தொலைக்காட்சியைப் பார்த்தாள்.

திரையில் மழை பெய்துகொண்டிருந்தது.

வெளியிலும் மழை.

திரையிலும் மழை.

அவளுக்கு மட்டும் இரண்டிலும் வித்தியாசம் தெரியவில்லை.

ஒருநாள் பழைய கண்ணாடித் துண்டில் தன் முகத்தைப் பார்த்தாள்.

நீண்ட நேரம் பார்த்தாள்.

“நான் இன்னும் அதே சஜிதாதானா?”

கண்ணாடி பதில் சொல்லவில்லை.

அவள் தலைமுடியைத் தொட்டுப் பார்த்தாள்.

பிறகு கண்களைப் பார்த்தாள்.

அந்தக் கண்களில் பதினெட்டு வயது பெண் இல்லை.

காத்திருந்த ஆண்டுகள் மட்டும் இருந்தன.

ரஹ்மான் தினமும் மாலை திரும்புவான்.

உணவு.

மருந்து.

புத்தகங்கள்.

சில நேரங்களில் அவளுக்குப் பிடித்த இனிப்பு.

ஒருநாள் ஒரு சிறிய மல்லிகைப்பூச் சரம் கொண்டு வந்தான்.

“வாசல்ல ஒரு பொண்ணு வித்துக்கிட்டிருந்தா.”

சஜிதா பூவை வாங்கிக்கொண்டாள்.

அதைத் தலைமுடியில் வைத்துக்கொண்டாள்.

கண்ணாடி இல்லாததால் பழைய டிவியின் கருப்புத் திரையில் தன் முகத்தைப் பார்த்தாள்.

“நல்லா இருக்கா?”

ரஹ்மான் சிரித்தான்.

“நல்லா இருக்கு.”

அவளும் சிரித்தாள்.

அந்தச் சிரிப்பு சில நொடிகள்தான் நீடித்தது.

பிறகு இருவரும் கதவைப் பார்த்தார்கள்.

ஒரு இரவு ரஹ்மான் கதவை மூடிவிட்டு வெளியே சென்றான்.

சில நொடிகள் கழித்து மீண்டும் வந்தான்.

கதவைத் திறந்தான்.

சஜிதா ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“என்ன?”

ரஹ்மான் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“ஒண்ணுமில்ல.”

கதவை மீண்டும் மூடினான்.

அந்த இரவு அவனால் தூங்க முடியவில்லை.

ரஹ்மான் சில நொடிகள் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனுடைய மனதில் ஒரே கேள்வி.

“நான் அவளைக் காப்பாற்றுறேனா... இல்ல சிறை வைக்கிறேனா?”

அந்தக் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.

ஆண்டுகள் இன்னும் நகர்ந்தன.

ரஹ்மானின் தலைமுடியில் சில நரை.

சஜிதாவின் முகத்தில் வயது.

அவள் அறையில் மட்டும் அதே சுவர்.

அதே ஜன்னல்.

அதே கதவு.

அதே மின்விசிறி.

அதே தொலைக்காட்சி.

ஹெட்செட் மட்டும் பலமுறை பழுதாகி மாற்றப்பட்டது.

ஒருநாள் சஜிதா கேட்டாள்.

“நமக்கு வெளியில என்ன நடக்குது?”

ரஹ்மான் சிரித்தான்.

“எல்லாமே நடக்குது.”

“எனக்கு மட்டும்?”

அவன் அமைதியாக இருந்தான்.

ஒரு நாள் ரஹ்மானின் தாய் கேட்டார்.

“உனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமே இல்லையா?”

“இப்ப வேண்டாம்.”

“எப்ப?”

“கொஞ்சம் வேலை செட்டாகட்டும்.”

மற்றொரு நாள் -

“வெளிநாட்டுக்குப் போகப் போறேன்.”

இன்னொரு நாள் -

“கடன் இருக்கு.”

ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பொய்.

ஒவ்வொரு பொய்க்குப் பின்னாலும் ஒரு மூடிய கதவு.

ஒரு வருடம் கிராமத் திருவிழா நடந்தது.

மேளதாளம்.

பட்டாசு.

சிரிப்பு.

வண்ண விளக்குகள்.

சஜிதா ஜன்னலருகே நின்று தொலைவில் தெரிந்த விளக்குகளைப் பார்த்தாள்.

“அடுத்த வருஷம்...”

ரஹ்மான் திரும்பிப் பார்த்தான்.

“நாம வெளியே இருப்போமா?”

அவன் பதில் சொல்லவில்லை.

அவள் அவனைப் பார்த்தாள்.

“சொல்லு.”

ரஹ்மான் தலையைக் குனிந்தான்.

“இருப்போம்.”

அது ஒரு வாக்குறுதியா?

இல்லை.

அந்த இரவுக்காக அவன் சொன்ன இன்னொரு பொய்யா?

அவனுக்கே தெரியவில்லை.

2020

கொரோனா.

உலகமே வீடுகளுக்குள் அடைந்தது. தொலைக்காட்சியில் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. மக்கள் வீட்டுக்குள். கதவுகள் மூடப்பட்டன. சாலைகளில் காவல்துறை.

சஜிதா ஹெட்செட் போட்டுக்கொண்டு செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஊரடங்கு...”

“வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்...”

“அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும்...”

அவள் ஹெட்செட்டை கழற்றினாள்.

சில நொடிகள் சிரித்தாள்.

“எல்லாருக்கும் இது சில மாதங்கள்.”

ரஹ்மான் அமைதியாக இருந்தான்.

“எனக்கு...”

அவள் சுவரைப் பார்த்தாள்.

“இது பத்து வருஷம்.”

ரஹ்மான் தலையைத் திருப்பிக்கொண்டான்.

அவனுடைய கண்கள் கலங்கின.

அன்று இரவு அவன் முதல் முறையாக அந்தக் கதவின் பூட்டை நீண்ட நேரம் பார்த்தான்.

2021

ஜூன்.

ஒரு மாலை ரஹ்மான் அறைக்குள் வந்தான்.

அவன் கையில் ஒரு சிறிய சாவி.

சஜிதா அவனைப் பார்த்தாள்.

“என்ன?”

“நாம போகலாம்.”

அவள் சில நொடிகள் புரியாமல் பார்த்தாள்.

“எங்கே?”

“எங்க வேண்டுமானாலும்.”

அவன் குரல் நடுங்கியது.

“இனி இங்க இருக்கக் கூடாது.”

சஜிதா எழுந்தாள்.

“பயமா இருக்கு.”

“எனக்கும்.”

“பிடிச்சுட்டா?”

ரஹ்மான் அவளைப் பார்த்தான்.

“பத்து வருஷமா பயந்துட்டே இருக்கோம்.”

அவன் கதவைத் திறந்தான்.

“இன்னும் எவ்வளவு நாள்?”

சஜிதா அந்தக் கதவைப் பார்த்தாள்.

பத்து ஆண்டுகளாக அவள் பார்த்த அதே கதவு.

அன்று முதல் முறையாக அது வெளியே திறந்தது.

அந்த இரவு பழைய மின்சாதனங்கள் சில பெட்டிகளில் அடுக்கப்பட்டன.

தொலைக்காட்சி.

வயர் சுருள்கள்.

சில பழைய கருவிகள்.

ரஹ்மான் வீட்டில் சொன்னான்.

“வேலைக்காக வெளியூர்ல தங்கணும். நண்பனோட சேர்ந்து வீடு எடுத்திருக்கேன்.”

யாரும் அதிகமாகக் கேட்கவில்லை. அவன் பல ஆண்டுகளாகச் சொல்லிய பொய்களில் அது இன்னொரு பொய்தான். ஆனால் அந்த இரவு மட்டும் அந்தப் பொய் அவர்களை வெளியே அழைத்துச் சென்றது.

சஜிதா வீட்டின் வாசலைக் கடந்தாள்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு.

அவள் சில அடிகள் நடந்தாள்.

நின்றாள்.

வானத்தைப் பார்த்தாள்.

முழு வானமும் அவளுக்கு புதிதாக இருந்தது.

“இவ்வளவு பெரியதா இருந்துச்சா?”

ரஹ்மான் சிரிக்கவில்லை.

அவன் கண்களில் கண்ணீர் இருந்தது.

அவர்கள் ஒரு சிறிய வாடகை வீட்டில் தங்கினர்.

முதல் இரவு சஜிதா கதவைத் திறந்து வைத்து தூங்கினாள்.

ரஹ்மான் ஆச்சரியமாகப் பார்த்தான்.

“கதவு மூடலையா?”

“வேண்டாம்.”

அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

“இன்னைக்கு திறந்தே இருக்கட்டும்.”

அந்த இரவு மின்விசிறி சுழன்றுகொண்டிருந்தது. அதன் சத்தத்தை அவள் முதன்முறையாக ஹெட்செட் இல்லாமல் கேட்டாள். அந்தச் சத்தம் அவளுக்குப் புதிதாக இருந்தது. பத்து ஆண்டுகளாக அறைக்குள் அடக்கப்பட்டிருந்த காற்று, அன்றிரவு மட்டும் வெளியேறியது போலிருந்தது. ஆனால் வெளியேறியது காற்று மட்டும் அல்ல. பத்து ஆண்டுகளாக மூடியிருந்த ஒரு ரகசியமும், அந்த இரவிலிருந்து மெதுவாக வெளியே வரத் தொடங்கியது. சில நாட்களில் ரஹ்மானின் தூரத்து சகோதரர் அவர்களைப் பார்த்தார்.

அவருடைய முகம் மாறியது.

செய்தி குடும்பத்துக்குச் சென்றது.

காவல்துறை வந்தது.

பத்து ஆண்டுகளாக காணாமல் போன சஜிதா உயிருடன் இருப்பதாகச் செய்தி பரவியது.

கிராமம் மீண்டும் பேசத் தொடங்கியது.

இந்த முறை அவளைத் தேடி யாரும் ஓடவில்லை.

அவள் தானாகவே வெளியில் வந்திருந்தாள்.

நீதிமன்றம்.

சஜிதா அமைதியாக நின்றிருந்தாள்.

“உங்கள் விருப்பத்துடன்தான் இவருடன் இருந்தீர்களா?”

“ஆமாம்.”

“யாராவது உங்களை வற்புறுத்தினார்களா?”

“இல்லை.”

சில நொடிகள் அமைதி.

“இனிமேல் எங்கே இருக்க விரும்புகிறீர்கள்?”

சஜிதா ரஹ்மானைப் பார்த்தாள்.

பிறகு மெதுவாகச் சொன்னாள்.

“அவரோட.”

அவ்வளவுதான்.

பத்து ஆண்டுகளாக மூடியிருந்த ஒரு கதவைத் திறக்க இந்த சிறிய பதில்கள் போதுமானதாக இருந்தன.

சில மாதங்களுக்குப் பிறகு அவர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இன்றும் அயலூரில் அந்த வீடு இருக்கிறது.

வீட்டின் கடைசி அறையும் இருக்கிறது.

பழைய டிவி இல்லை.

வயர் சுருள்கள் இல்லை.

மரப்பெட்டிகள் இல்லை.

சுவரில் மட்டும் ஒரு பழைய தடம்.

மின்விசிறி இருந்த இடத்தில் இப்போது வெறும் மின்கம்பி மட்டும் தொங்குகிறது.

ஒரு காலத்தில் அந்த அறைக்குள் தொலைக்காட்சியின் ஒளி மட்டுமே இரவை உடைத்தது. அதன் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க சஜிதா ஹெட்செட் போட்டுக்கொண்டு உலகத்தைப் பார்த்தாள்.

வெளியுலகம் அவளைத் தேடியது.

அவள் அந்த உலகத்தை ஒரு சிறிய திரையில் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஒரு காலத்தில் அந்த ஒளி அவளுக்கு ஆறுதல்.

அதே ஒளி அவளுடைய சிறையையும் நினைவூட்டியது.

இப்போது அந்த அறைக்குள் சூரிய ஒளி நேராக விழுகிறது.

ஜன்னலைத் திறக்க அவளுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.

அவள் வெளியே நடக்கலாம்.

வானத்தைப் பார்க்கலாம்.

மழையில் நனைந்துகொள்ளலாம்.

கதவைத் திறந்து வைத்துக்கொண்டு தூங்கலாம்.

யாரும் கதவை மூடச் சொல்லமாட்டார்கள்.

ஆனால் அந்த அறை மட்டும் - அந்தப் பத்து ஆண்டுகளை மறக்கவில்லை.

ஒரு காதலைக் காப்பாற்ற உருவாக்கப்பட்ட அறை.

ஒரு பெண்ணின் உலகமாக மாறியது.

பிறகு...

அதே உலகம் அவளுடைய சிறையாகவும் மாறியது.

அந்த அறையில் ஒரு தொலைக்காட்சி இருந்தது.

ஒரு ஹெட்செட் இருந்தது.

ஒரு மின்விசிறி இருந்தது.

வெளியுலகத்துடன் அவளுக்கிருந்த மூன்று சிறிய இணைப்புகள்.

ஆனால் அவளுக்கு கதவு இல்லை.

இன்று கதவு இருக்கிறது.

சிறை இல்லை.

வெளியுலகம் இருக்கிறது.

அதனால்தான் அந்த அறை இன்னும் ஒரு கேள்வியை மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஒருவரைத் தேடாமல் இருப்பது மட்டுமல்ல...
ஒருவர் நம்மிடையே இருந்தும், அவர் வாழ்ந்த வாழ்க்கையை யாரும் தேடாததும் ஒரு மறைவுதானே?

அதுதான் - யாரும் தேடாத இடம்.


Comments

Popular posts from this blog

இலக்கியமும் இசையுமுமான வாழ்வு கவிஞர் சுகுமாரனுடனான உரையாடல்

கல்லூரிகள் டூ பல்கலைக்கழகங்கள் -மா. அன்பரசு

மா. அன்பரசு குறுங்கதைகள்