மொழிபெயர்ப்பு கவிதைகள் (தமிழில் ஹவி)
மொழிபெயர்ப்பு கவிதைகள் (தமிழில் ஹவி)
தரிசு நிலம்
தரிசு நிலத்தின் சந்திரிகா சேச்சி
பின் கதவு வழியாக மட்டுமே
நுழையும் வீடுகளை
குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறாள்
முன் கதவு வழியாக நுழையும் அடுக்குமாடி குடியிருப்புகள் -
தாழ்வார விளக்கு எரியும் வீடுகள்.
தினமும் சந்தையிலிருந்து
வாங்கி வரப்படும் மீனும்
அவளும் -
ஒரே பாதையைப் பகிர்ந்து கொள்கின்றனர் -
பின் கதவு வழிப்பாதை.
ஒரே பாதை வழியாக நுழைகையில்
ஆகஸ்ட் 15 அன்று
தொலைக்காட்சியில்
அலறியபடி கேட்கிறது
அந்த உறுதிமொழி -
அனைத்து இந்தியர்களும்
என் சகோதர சகோதரிகள்.
••
மலையாளத்தில் - விஜிலா சிரப்பாட்
ஆங்கிலத்தில் - சஞ்சீவ் கும்பெணபள்ளி
தமிழில் - ஹவி
விஜிலா சிரப்பாட் மலையாளத்தில் எழுதும் ஒரு தலித் பெண் கவிஞர். கேரளத்தின் கம்யூனிச வரலாறு சாதியற்ற சமூகத்தை அடைய எதுவும் செய்யவில்லை என்பதை அவரது கவிதைகள் உணர்த்துகின்றன.
அவரது கவிதைகள் வீடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பெண்கள் எதிர்கொள்ளும் அன்றாட சிரமங்களை பிரதிபலிக்கின்றன. அடுக்களை இல்லாத வீடு (சமையலறை இல்லாத வீடு, 2006), அம்மா ஒரு கல்பனிகா கவிதா அல்ல (அம்மா நம் கற்பனையின் கவிதைப் படம் அல்ல, 2009) மற்றும் பகர்த்தி எழுத்து (நகல் குறிப்புகள், 2015) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளை விஜிலா சிரப்பாட் வெளியிட்டுள்ளார்.
*****
கிளர்ச்சி, கிளர்ச்சி, கிளர்ச்சி
நான் அவனிடம் சொன்னேன் -
"இப்போது வந்து போராட்டத்தில் சேர்ந்து கொள், போராட்டத்தில் ஏதேனும் ஒரு பொறுப்பை ஏந்து."
அவன் சொன்னான் -
"சமீபத்தில்தான் நான் என் கல்வியை முடித்தேன், வேலை தேடுகிறேன்
பிறகு வா..."
அவனுக்கு வேலை கிடைத்தது,
வேலை செய்யத் தொடங்கினான்.
நான் அவனிடம் திரும்பிச் சென்று மீண்டும் சொன்னேன் -
"இப்போது வந்து போராட்டத்தில் சேர்ந்து கொள், போராட்டத்தில் ஏதேனும் ஒரு பொறுப்பை ஏந்து."."
அவன் பதிலளித்தான் -
"சமீபத்தில்தான் எனக்கு வேலை கிடைத்தது
இப்போது நான் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன்
நீ இவ்வளவு சுற்றித் திரிகிறாய்
திருமணம் செய்ய ஒரு பணக்கார மணமகளைக் கண்டுபிடிக்க
நீ ஏன் எனக்கு உதவக்கூடாது?"
இறுதியில் அவன் திருமணம் செய்து கொண்டான்.
குழந்தைகள் பிறந்தனர்.
அவரது குழந்தைகள் வளர்ந்தனர்
அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்,
அவனை ஒரு தாத்தாவாக்கினர்.
அவர் ஒரு காரையும்
ஒரு பங்களாவையும் வாங்கினார்
நான் அவரை அவரது பங்களாவில் சந்தித்தேன்.
நான் அவரைப் போராட்டத்தில் சேருமாறு கெஞ்சப் போகிற நேரத்தில்,
குடும்பத்தினர் அனைவரையும்
அவர் வரவேற்பறைக்கு அழைத்தார்
அவரது குழந்தைகள்
அவரது மனைவி
அவரது மருமகள்கள்
அவரது பேரக்குழந்தைகள்
அனைவரும் கூடினர்.
அவர் என்னை அறிமுகப் படுத்தினார்
“இதோ தன் வாழ்நாள் முழுவதும் போராட்டத்திற்காகவே அர்ப்பணித்த ஒரு தன்னலமற்ற தன்னார்வலர்”
அது மட்டுமல்லாமல்
அவர் எனக்கு ஒரு சால்வையையும்
ஒரு தேங்காயையும் வழங்கிப் பாராட்டினார்!
நான் வீட்டிற்கு வந்தேன்.
சால்வையைக் கழற்றி வீசி எறிந்தேன்
கதவை ஓங்கி அறைந்து சாத்தினேன்
பாபாசாகேப்பின் உருவப்படத்தை இறுக்கமாகத் தழுவினேன்,
நான் வேதனையுடன் அழுதேன் –
“ஜெய் பீம்
ஜெய் பீம்
ஜெய் பீம்…”
••
மராத்தியில் - அஞ்சலி தயாடே
ஆங்கிலத்தில் - ஷார்தூல் தாக்கூர்
தமிழில் - ஹவி
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சமகால மராத்தியக் கவிஞரான அஞ்சலி தாயடே, நவீன தலித் இலக்கியத்தின் ஒரு வலிமையான குரலாக அறியப்படுகிறார். அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்து, தனது ஆரம்பக் கல்வியை அங்கேயே முடித்தார். மருத்துவம் பயின்ற இவர், ஹோமியோபதி மருத்துவத்தில் (BHMS) பட்டம் பெற்றவர்.இவரது கவிதைகள் ஷர்துல் தாக்கூர் போன்றவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, 'பெங்களூர் ரிவியூ' போன்ற முன்னணி இலக்கிய இதழ்களில் வெளியாகியுள்ளன.
*****
மாலை
சூரியன் எவ்வளவு
பெண்மையுடன் இருக்கிறது?
ஒரு துளி கண்மை
அதன் கண்களில் பட்டதால்
உலகமே இருண்டுவிட்டது
சாராயக் கடைக்காரன்
கிராமத்துக்கு வெளியே யுள்ள
ஒரு வீட்டிற்குள்
நரியைப் போல
பதுங்கி நுழைகிறான்
அந்த நேரத்தில்,
கங்கா, யமுனா, சரஸ்வதி
மார்பளவு நீர் நிரம்பிய
காதல் ததும்பும் குடங்களுடன்
இயற்கை உபாதைக்காக
அருகிலுள்ள
வயல்வெளிக்குச் செல்கிறார்கள்.
இலைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஈக்களுடன் சேர்ந்து
இருள் எப்படி கவிகிறது என்பதை இப்போது அனைவரும் மறந்துவிட்டனர்
அந்தத் திருட்டுத்தனமான காதலையும்,
கடைக்காரனின் வேட்டியில் வீசும்
மலிவான வாசனை திரவியத்தின் நெடியையும்
அவர்கள் மறந்துவிட்டார்கள்.
இப்போது
கங்கா, யமுனா, சரஸ்வதி
நெற்றியில் குங்குமத்துடன்
தங்கள் வாழ்வாதாரத்திற்காக
முனைப்புடன்
போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில்,
இருளுக்கு அஞ்சாதவர்
எதற்காகப் பிரார்த்தனை
செய்ய வேண்டும்?
•••
ஒரியாவில் - வாசுதேவ் சுனானி
ஆங்கிலத்தில் - ரவீந்திர கே ஸ்வைன்
தமிழில் - ஹவி
ஒடிசாவின் புகழ்பெற்ற எழுத்தாளரான வாசுதேவ் சுனானி (பிறப்பு: 1962), கவிதை, நாவல், கட்டுரை எனப் பன்முகத்தன்மை கொண்டவர். ஒடியா மற்றும் ஆங்கிலத்தில் தலித் மக்களின் வாழ்வியலையும் போராட்டங்களையும் மையமாக வைத்து எழுதும் இவரது படைப்புகளான அஸ்ப்ருஷ்யா, படா போடி, மஷானி சஹாரா டெல்லி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவரது எழுத்துக்கள் தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், அரபு உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலக்கிய பங்களிப்பிற்காக சாகித்ய அகாடமி மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார்.
*****
https://www.instagram.com/p/DckheS6lN-c/?igsi=ZzJheTY5Y2toeXhq
https://www.instagram.com/p/Dckh12vjr-Z/?igsi=MTlmdG50dnltcGNtcA==
https://www.instagram.com/p/Dckh82wDSU9/?igsi=ZzA1OGlmaXQybG0y
Comments
Post a Comment