முள் மரத்தின் நிழல் - மா. அன்பரசு

 

முள் மரத்தின் நிழல் - மா. அன்பரசு




“நீ ஏன் அந்தச் சுவரையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்?”

உளவியல் ஆலோசகர் நடராஜனின் குரல் அமைதியாக இருந்தது.

மூலையில் அமர்ந்திருந்த சிறுவன் தலைநிமிரவில்லை.

அவனுடைய பார்வை எதிரே இருந்த வெள்ளைச் சுவரிலேயே பதிந்திருந்தது. சுவரில் எதுவும் இல்லை. ஓவியமில்லை. ஜன்னலில்லை. இருந்தும், ஏதோ ஒன்றைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல அவன் கண்கள் அசையவில்லை.

நடராஜன் மெதுவாக அவன் வழக்குக் கோப்பைத் திறந்தார்.

பெயர்: முன்னா
வயது: 17

அடுத்த பக்கத்தில் செய்தித்தாள் வெட்டுப்பகுதி ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.

“மாநிலத்தை உலுக்கிய கொடூரச் சம்பவம்... இளம் தம்பதியர் மீது மூவர் கூட்டாக வன்முறை... இருவர் கைது... சிறுவன் சீர்திருத்தப் பள்ளிக்கு...”

அதற்கு மேல் படிக்க நடராஜனால் முடியவில்லை.

அவர் கோப்பை மூடிவைத்தார்.

“பதினேழு வயது... ஒரு சிறுவன் எப்படி இவ்வளவு கொடூரமான குற்றத்தின் நிழலுக்குள் வந்தான்?”

என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது.

அவர் முன்னாவைப் பார்த்தார்.

“உன் பெயர்?”

“முன்னா.”

“எந்த ஊர்?”

“பீகார்.”

“எவ்வளவு படிச்சிருக்க?”

“ஆறாம் வகுப்பு.”

“ஏன் நிறுத்திட்ட?”

முன்னா சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

“வீட்டுல சாப்பாடுதான் முக்கியம் சார்.”

நடராஜன் அவனை உற்றுப் பார்த்தார்.

அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னால் இன்னும் சொல்லப்படாத ஏதோ ஒன்று இருப்பது தெரிந்தது.

“அந்த இரவில்... உன் எல்லையைத் தாண்ட வைத்தது என்ன?”

முன்னா உடனே பதில் சொல்லவில்லை.

வெளியில் மழை பெய்யத் தொடங்கியது.

முன்னா மெதுவாகக் கண்களை மூடினான்.

அவனுக்கு முதலில் நினைவுக்கு வந்தது அம்மாவின் முகம்.

மழையில் நனைந்தபடியே வீட்டுக்குள் வந்தாள்.

கையில் கிடைத்த கூலிப் பணத்தை தரையில் வைத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்தாள்.

அவள் சேலையின் நுனியில் இன்னும் மழைத்துளிகள் சொட்டிக்கொண்டிருந்தன.

முகத்தில் மண்ணைவிட அதிகமாக அவமானம் ஒட்டியிருந்தது.

“ஏம்மா... ஏன் அழுற?”

அவள் பதில் சொல்லவில்லை.

அன்றிரவு சாப்பிடும்போதும் பேசவில்லை.

மறுநாள் மீண்டும் வேலைக்குப் போனாள்.

மீண்டும் அதே மௌனம்.

ஒருநாள் முன்னா பிடிவாதமாகக் கேட்டான்.

“ஏன் நம்மள இப்படி நடத்துறாங்க?”

அம்மா அவன் தலையைத் தடவினாள்.

“நாம் ஏழை...”

சிறிது நேரம் கழித்து மெதுவாகச் சொன்னாள்.

“அதையும் விட... நான் ஒரு பெண்.”

அந்த வயதில் அந்த வார்த்தையின் முழு அர்த்தமும் முன்னாவுக்குப் புரியவில்லை.

ஆனால் அந்த வார்த்தைகள் அவனுக்குள் எங்கோ முள்ளாகப் பதிந்துவிட்டன.

“அதுக்கப்புறம்?” என்று நடராஜன் கேட்டார்.

முன்னா கண்களைத் திறந்தான்.

“வேலைக்காக இங்க வந்தேன் சார்.”

கட்டட வேலை.

காலை முதல் இரவு வரை உழைப்பு.

சில நாட்களில் சம்பளம்.

பல நாட்களில் திட்டுதான்.

அங்கே யாருக்கும் யாருடைய வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்ள நேரமில்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய பசியைத் தூக்கிக்கொண்டு வந்தவர்கள். ஒருநாள் வயதான தொழிலாளி ஒருவர் மேஸ்திரியிடம் சம்பளம் கேட்டார்.

“மூணு நாளா சம்பளம் தரல சார்... வீட்டுல பிள்ளைக்கு மருந்து வாங்கணும்.”

மேஸ்திரி அவனை எல்லோருக்கும் முன்னால் அறைந்தான்.

அந்த அறை சத்தம் கட்டடத்தின் சுவர்களில் எதிரொலித்தது.

யாரும் எதுவும் பேசவில்லை.

முதியவர் தலையைக் குனிந்தார்.

மீண்டும் செங்கல்லைத் தூக்கிக்கொண்டு வேலைக்குச் சென்றார்.

அன்றிரவு முன்னாவுக்கு தூக்கம் வரவில்லை.

“எதிர்த்தா அடிப்பாங்க... அமைதியா இருந்தா பிழைக்கலாம்...”

அந்த எண்ணம் மெதுவாக அவனுக்குள் வேரூன்றியது.

மற்றொரு நாள், ஒரு பெண் தொழிலாளி அழுதுகொண்டிருந்தாள்.

கையில் காயம்.

யாரும் ஏன் என்று கேட்கவில்லை.

கேட்கத் துணியவும் இல்லை.

அன்று அவனுக்கு அம்மா நினைவுக்கு வந்தாள்.

அவள் முகத்தில் இருந்த அதே மௌனம்.

அதே பயம்.

அதே தோல்வி.

ஆனால் சில நினைவுகள் மனிதனை மாற்றுவதில்லை.

மெதுவாக மரத்துப்போகச் செய்கின்றன.

ஊரின் எல்லைக்கோட்டில் இருந்த டாஸ்மாக் கடை இரவு எட்டு மணிக்குப் பிறகும் கூட்டமாகவே இருந்தது. மங்கலான மின்விளக்கின் கீழ் நின்றவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஏதோ ஒரு தோல்வியை மதுவில் கரைக்க வந்தவர்களைப் போலத் தெரிந்தனர்.

அன்றிரவு மூன்று இளைஞர்கள் இரண்டு மதுபாட்டில்களையும் சில தின்பண்டங்களையும் வாங்கிக்கொண்டு கடைக்குப் பின்னால் இருந்த முள் மரங்கள் நிறைந்த அடர்ந்த பகுதிக்குள் நடந்தார்கள்.

அவர்களில் இருவர் ஊர்க்காரர்கள்.

மூன்றாவது முன்னா.

கைபேசியின் ஒளியில் பாட்டில்கள் காலியாகிக்கொண்டிருந்தன.

சிரிப்பு.

கெட்ட வார்த்தைகள்.

மதுவின் வாசனை.

அந்த இரவின் கொடூரத்திற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தன.

அப்போது ஒரு கார் சிறிது தூரத்தில் வந்து நின்றது.

ஒரு இளம் தம்பதி காரிலிருந்து இறங்கினர்.

அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

அந்த மூவரின் பார்வை அவர்களை நோக்கித் திரும்பியது.

“யாரோ வந்திருக்காங்க...”

என்று ஒருவன் சிரித்தான்.

மற்றொருவன் எழுந்தான்.

முன்னாவும் எழுந்தான்.

சில அடிகள் நடந்தபின் அவன் நின்றுவிட்டான்.

“விடுங்கடா...”

என்று மெதுவாகச் சொன்னான்.

“பயந்துட்டியா?”

என்று மற்றொருவன் சிரித்தான்.

அந்த ஒரு கேள்வி...

பல ஆண்டுகளாக அவன் மனதுக்குள் புதைந்து கிடந்த அவமானங்களையெல்லாம் ஒரே நேரத்தில் கிளறிவிட்டது.

அம்மாவின் கண்ணீர்.

மேஸ்திரியின் அறை.

அமைதியாக நின்ற தொழிலாளர்கள்.

எதிர்க்காத மனிதர்கள்.

எதிர்த்தும் தோற்ற மனிதர்கள்.

அவன் திரும்பிச் சென்றிருக்கலாம்.

அந்த சில நிமிடங்களில் அவன் வாழ்க்கை வேறு பாதையில் சென்றிருக்கலாம். ஆனால் அவன் செல்லவில்லை. அவன் அங்கேயே நின்றான். சில நேரங்களில் குற்றத்தில் பங்கேற்பது கைகளை மட்டும் பயன்படுத்துவதில்லை.

மௌனமும் பங்கேற்கிறது.

அந்த இரவில்...

அந்த மௌனம் அவனுடைய மிகப்பெரிய குற்றமாக மாறியது.

அதற்குப் பிறகு நடந்ததை நினைத்தபோது முன்னாவின் முகம் இறுகியது.

அந்த இரவு மனிதத்தன்மையை இழந்தது.

“அது தப்புன்னு யாரும் சொல்லலையா?”

நடராஜனின் குரல் மெதுவாக இருந்தது.

முன்னா சிரிக்க முயன்றான்.

அது சோகமாக உடைந்தது.

“யாரு சொல்லுவாங்க சார்?”

அவன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

“எங்க குடிசையில பசியைத் தவிர வேற எதுவும் நிரந்தரமா இருந்ததே இல்ல.”

நடராஜன் எதுவும் பேசவில்லை.

“நியாயம் பேசுறவங்களே எங்க பகுதிக்கு வர மாட்டாங்க.”

முன்னாவின் குரல் நடுங்கியது.

“பயம் மட்டும் தினமும் வந்துச்சு.”

அவன் திடீரென்று பேசுவதை நிறுத்தினான்.

“அந்த இரவு...”

என்று தொடங்கிவிட்டு மீண்டும் அமைதியானான்.

“என்ன?”

முன்னா தலையைக் குனிந்தான்.

“அம்மா அழுத முகம்தான்... ஒரு கணம் நினைவுக்கு வந்தது சார்.”

“அப்புறம்?”

முன்னா பதில் சொல்லவில்லை.

முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டான்.

அடுத்த நொடி கதறி அழத் தொடங்கினான்.

அந்தக் கதறலே அவன் சொல்லாத பதிலாக இருந்தது.

அறை முழுவதும் சில நொடிகள் மௌனம் மட்டுமே நிலவியது.

நடராஜன் தனது குறிப்பேட்டில் எதையும் எழுதவில்லை.

முன்னாவின் அழுகை அடங்கும் வரை அமைதியாகக் காத்திருந்தார்.

பல ஆண்டுகளாக சிறார் சீர்திருத்தப் பள்ளிகளில் உளவியல் ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவம் அவருக்குச் சொல்லிக்கொடுத்த ஒரு உண்மை இருந்தது. ஒவ்வொரு குற்றத்திற்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கும். அந்தக் கதை எந்தக் குற்றத்தையும் நியாயப்படுத்தாது. ஆனால் அந்தக் குற்றம் உருவான பாதையைப் புரிந்துகொள்ள உதவும்.

“முன்னா...”

என்று மெதுவாக அழைத்தார்.

முன்னா கண்களை உயர்த்தினான்.

“நீ செய்தது மன்னிக்க முடியாத குற்றம்.”

முன்னா அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.

“அதற்குத் தண்டனை அவசியம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.”

சிறிது நேரம் நின்று நடராஜன் தொடர்ந்தார்.

“ஆனா நீ எப்படி இந்த மனநிலைக்கு வந்தாய் என்பதைப் புரிஞ்சுக்காம விட்டுட்டா... நாளைக்கு இன்னொரு முன்னா உருவாகலாம்.” முன்னா மெதுவாகக் கண்களைத் துடைத்தான்.

“நான் சின்ன வயசுல நல்லவன்தான் சார்...”

அவன் குரல் உடைந்தது.

“யாரையும் காயப்படுத்தணும்னு நினைச்சதே இல்ல.”

அந்த ஒரு வாக்கியம் நடராஜனின் மனதை கனக்கச் செய்தது.

ஒரு குழந்தை பிறக்கும்போது குற்றவாளியாகப் பிறப்பதில்லை.

அவனுக்குக் கிடைக்க வேண்டிய அன்பு குறையலாம்.

பாதுகாப்பு இல்லாமல் போகலாம்.

கல்வி பாதியில் நின்றுவிடலாம்.

மரியாதை கிடைக்காமல் போகலாம்.

சட்டத்தின் மீது நம்பிக்கை உடையலாம்.

பயம் மட்டும் அவனுடன் வளரலாம்.

ஆனால் இவை எதுவும் ஒரு கொடூரக் குற்றத்திற்கான நியாயமாக மாறாது.

ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகள் துன்பங்களுக்கிடையிலும் மனிதநேயத்தோடு வாழ்கிறார்கள். சிலர் மட்டும் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தத் தேர்வுக்கான பொறுப்பு அவர்களுடையதே. ஆனால் அந்தத் தேர்வுக்கு முன் அவர்கள் கடந்து வந்த பாதையைப் பார்க்காமல் விட்டுவிடுவதும் சமூகத்தின் இன்னொரு தோல்விதான்.

நடராஜன் மெதுவாக எழுந்தார்.

கதவருகே சென்றார்.

மழை நின்றிருந்தது.

கதவுக்கு வெளியே ஒரு முள் மரம் தெரிந்தது.

அதன் நுனிகளில் மழைத்துளிகள் இன்னும் தொங்கிக்கொண்டிருந்தன.

ஒளி விழுந்த இடத்தில் அதன் நிழல் நீண்டு தரையில் படர்ந்திருந்தது.

நடராஜன் அந்த நிழலைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“குற்றவாளிகள் நீதிமன்றத்தில் உருவாகவில்லை...”

என்று அவர் மனதிற்குள் நினைத்தார்.

“சிலர் அதற்கு முன்பே உருவாகத் தொடங்கிவிடுகிறார்கள்.”

ஆனால் அந்த எண்ணம் அங்கேயே நின்றுவிடவில்லை.

குற்றவாளியை உருவாக்கிய ஒவ்வொரு காரணமும் அவனை நிரபராதியாக்காது.

அதே நேரத்தில், குற்றவாளியைத் தண்டித்துவிட்டோம் என்பதற்காக அந்தக் காரணங்கள் அழிந்துவிடவும் இல்லை.

முன்னாவுக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

அது அவன் செய்த குற்றத்திற்கான நீதியே. ஆனால் நடராஜனின் மனதில் ஒரு கேள்வி மட்டும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. ஒரு குழந்தை பாதுகாப்பாக வளர வேண்டிய இடத்தில் பயம் வளர்ந்தால்...

அன்பு கிடைக்க வேண்டிய வயதில் அவமானம் கிடைத்தால்...

நம்பிக்கை விதைக்க வேண்டிய காலத்தில் வன்முறை விதைக்கப்பட்டால்...

அதன் அறுவடையை யார் சுமப்பார்கள்?

அன்று மாலை நடராஜன் சீர்திருத்தப் பள்ளியை விட்டு வெளியே வந்தார்.

வாசலுக்கு வெளியே அதே முள் மரம்.

அவர் சில நொடிகள் அதன் முன் நின்றார்.

முள் மரம் யாரையும் குத்துவதற்காக வளர்வதில்லை. ஆனால் அது வளர்ந்த மண்ணை நாம் கவனிக்காமல் விட்டால், ஒருநாள் அதன் முள் யாரையாவது குத்தும்.

அவன் குற்றத்தை மன்னிக்க முடியாது.

அவன் செய்ததை மறக்கவும் முடியாது.

ஆனால் அவன் குற்றவாளியாக நின்ற அந்த இரவுக்கு முன், அவனுக்குள் எத்தனை இரவுகள் இருளாகக் கிடந்தன என்பதை மட்டும் நாம் கேட்க வேண்டும்.

ஏனென்றால் - ஒரு குழந்தையின் கையில் கல் விழுவதற்கு முன், அவன் மனதில் ஏதோ ஒன்று உடைந்திருக்கலாம். ஒரு குழந்தையின் கண்களில் வன்முறை தோன்றுவதற்கு முன், அவன் கண்களில் இருந்து பயம் போயிருக்கலாம்.

ஒரு குழந்தை மனிதத்தன்மையை இழப்பதற்கு முன், யாரோ ஒருவரால் அவனுடைய மனிதத்தன்மை தொடர்ந்து காயப்படுத்தப்பட்டிருக்கலாம்.

அதனால், குற்றம் நடந்த பிறகு மட்டும் முள் மரத்தை வெட்டுவதால் பயனில்லை.

அது வளர்ந்த மண்ணையும் பார்க்க வேண்டும்.

அதற்கு நிழல் கொடுத்த இருளையும் பார்க்க வேண்டும்.

இல்லையென்றால் - ஒரு முன்னாவுக்கு தண்டனை கிடைக்கும்.

ஆனால் இன்னொரு முன்னா,

வேறொரு இரவில்,

வேறொரு முள் மரத்தின் நிழலில்

மீண்டும் உருவாகிக்கொண்டிருப்பான்.

அப்போது நாம் கேட்கும் கேள்வி,

“அவன் ஏன் இப்படிச் செய்தான்?”

என்பதாக இருக்கக் கூடாது.

அதற்கு முன்பே கேட்க வேண்டிய கேள்வி ஒன்று இருக்கிறது.

“அவன் இப்படியாக மாறிக்கொண்டிருந்தபோது... நாம் எங்கே இருந்தோம்?”

*****

https://www.facebook.com/61554987526965/posts/122277755000166250/?app=fbl

Comments

Popular posts from this blog

மா. அன்பரசு குறுங்கதைகள்

மெய் முறிந்தால் மெய் (எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடன் உரையாடல்)

தீனன் கவிதைகள்