தீனன் கவிதைகள்

 தீனன் கவிதைகள்

உயிர்ப்பசி

இருண்மையின் முட்கள் குதறியெடுத்த

புண்களைச் சுமக்கும் குறுகிய மனது 

நைந்து கிழிந்த பழந்துணிபோல எலும்புக்கும் தோலுக்கும் உயிர்கொடுக்கிறது 


எரிச்சலை சேமித்து 

சலிக்கிறதெனக்கு 

சலனத்திருந்தே பழகிய அசைவுகள் 

செயலின்மைக்குள் அழுகுவதான கொச்சை எண்ணங்கள்  

உடல்மேல் ஊரும் புலையான உணர்ச்சிக்குள் 

விழிகள் விரிக்க

திணறலில் இருக்கும் சுகங்களுக்காக 

சுய இரக்கத்தைப் பிழியும் 

கற்பனைத் துயரைக் கற்பித்துக்கொள்கிறேன்


அழுகையில் அடைக்கும் மூச்சுப் பாதையில் 

இரைகிற காதுகள் 

ஒலியினில் நிசப்தித்திருக்க 

நெற்றியில் துருத்தும் ஒற்றை நரம்பினில் 

பின்னந்தலையில் துடிக்கும் இதயத்தில் 

கணுக்கால் விரல்களில் 

உயிர்ப்பினை நிறுத்தி 

சுவரினில் தலையினை மோதிக்கொள்ளும் 

தசையின்பத்தின் உச்சியில் பிதற்றிட 

ஒரு பிடியவளில் சுருங்கிய உயிரை அசைவுகளின்றி வெறித்துக் கிடந்தேன்   


உதடுகள் திறந்தே இருக்கும் புரியாமையின் பாவனை

தலையை ஒருபுறமாகத் திருகும் பிரம்மையின் வெறியாய்

எச்சில் சிந்தும் மூச்சிறைப்பில் கலந்திட்ட 

மாமிச வாடையின் முடைநாற்றத்தில் 

பசியைக் கிளர்த்தும் குத்தல்கள் துளைத்திட

ஆக்சிஜன் புகாத பொந்துகள் இருந்தால் 

தற்கொலை செய்ய வசதியாய் இருக்கும்.

*****

பாம்புகள்

இறைச்சியின் ஜீவன் சதையைக் கொன்று
உயிரை உண்ணும் முரண்விளையாடல் தொடங்கியது
நச்சுக் கனவுகளில் ஏணியேறும் பாம்புகள்
எலும்புப் பகடைகளின் அச்சக் குழிக்குள்
மயிர் சுற்றிய பேய்களாக ஆசுவாசிக்கின்றன
பரணிக்கூத்தில் குருதிநிறைக்கும்
கத்திக் கூர்மையின் ஊசலாட்டம்
நூலை இயக்கும் கலைஞனின் விரல்களைத் துண்டுதுண்டாக
நைலான் அறுத்தது
யவ்வனமான ஆடை தரித்த வைக்கோல் பொம்மைகள்
குருதியில் நனைந்திட
அம்மணமாக வலியைச் சுவைக்கும்
ஆவலின் மூர்க்கம் பிறப்பெடுக்கிறது
குற்றத்தின் சுமையில் உடலும் நசுங்க
வயிற்றுக் குமட்டலில்
எலும்புகளைக் கக்குகிறேன்

உறுப்புருப்பாக சிதைவதன் வலியை
தேயிலைக் கசப்போடு தொண்டையில் சேமித்தேன்
எண்ணங்கள் பூஜ்ஜியமிடும் நினைவுப் பிரதேசத்தின்
விரியாத துளைகளுக்குள்
நெறி கட்டிய விடுதலையைக் கீழ்த்தரப்படுத்தும்
ஊமைச் சயனத்தில் அழிந்து கொண்டிருக்கிறேன்
சிதறலின் வலியும் ஒருங்குதலின் வலியும்
சாதலில் ஒன்று சேரக் கடவது எனும்
தத்துவச் சரக்கின் தரிசன நெடியை
இன்மையில் அடைக்கும் சாரக் குப்பியாய்
உயிர் சிரிக்கின்றது
சிராய்ப்புகளில் பூத்த வலியின் கோடுகளை
நரம்புகளாகத் திரிப்பதன் சுகத்தின்
சமாதி நிலையை தரிசித்து தீர்க்க முற்படுகின்றேன்
பாம்புகள் வட்டமாகச் சுருளும்
காய்ச்சல் கனவுகளின் அனிச்சையான நடுக்கத்தைக்
காரணமின்றி சாகத்துணிந்த
அமைதியான கருக்கல் பொழுதுகளில்
எனக்குள் உணர்கிறேன்
*****
அந்தரம்
எனது கழுத்தோடு இறுக்கப்பட்ட
தூக்குக் கயிற்றைச் சுமந்து கொண்டிருக்கும் மரம் ஒரு பறவையாக உருவெடுத்து சிறகசைக்கிறது
மேல்நோக்கிய உயிர்த் துவாரங்களின் ஊடாக
எச்சிலால் மருந்திட்ட காயங்களின் வலி
விம்மலாக வெளிப்படுகிறது
வான் நோக்கி எக்கும் படபடக்கும்
குறுஞ் சிறகுகளின் பேராவல்
என் மரணத்தின் புன்னகையை ஒத்திருப்பதாகப்பட்டது
தன்னுணர்ச்சியற்ற ஞாபக வெளிக்குள்
பூதக் கனவுகளின் வெறுமை நிழலாடுகிறது
அந்தரத்தில் நிறுத்தப்பட்ட இந்த சாவுக்கலியில் தூக்குக் கயிறுகள் கூத்தாடும் பைத்தியக்காரத்தனத்தில்
எஞ்சியுள்ள உயிர்ப்புக்கு முத்தமிட்டு சுகித்திருக்கிறேன்
*****

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

மெய் முறிந்தால் மெய் (எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடன் உரையாடல்)

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு