வா. மு. கோமுவின் "ஆளைப்பாரு சோளக்காட்டுல" சிறுகதைத் தொகுப்பில் நகரமயமாதலும் அதன் தாக்கங்களும் -நா. பூபாலக் கண்ணன்
வா. மு. கோமுவின் "ஆளைப்பாரு சோளக்காட்டுல" சிறுகதைத் தொகுப்பில் நகரமயமாதலும் அதன் தாக்கங்களும் -நா. பூபாலக் கண்ணன்
ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியில் வசிக்கும் வா.மு. கோமகன் என்னும் வா. மு. கோமு எளிய மக்களையும் பனியன் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளர்களையும் கதை மாந்தர்களாகக் கொண்டு எழுதிவருபவர். தனக்கே உரித்தான எள்ளல் மற்றும் எளிய நடையில் கதை சொல்லும் விதத்தில் எழுதக்கூடியர். அத்தகையவரின் சிறுகதைத் தொகுப்பான “ஆளைப்பாரு சோளக்காட்டுல!” என்னும் தொகுப்பில் உள்ள கதைகளில் காணலாகும் நகரமயமும் அதன் விளைவுகளும் குறித்து விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
நகரமயமாக்கல் என்பது அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒப்பீட்டளவில் சிறிய பகுதிகளில் நிரந்தரமாக குவிந்து, நகரங்களை உருவாக்கும் செயல்முறை ஆகும். இதனை ஆங்கிலத்தில் Urbanization எங்கிறார்கள். Urbanization என்பதை Urbanization refers to the concentration of human populations into discrete areas. This concentration leads to the transformation of land for residential, commercial, industrial and transportation purposes. It can include densely populated centers, as well as their adjacent periurban or suburban என்று அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான US EPA (Enviromental Protection Agency) பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதனை “நகரமயமாக்கல் என்பது வேலைவாய்ப்பு, சிறந்த வாழ்க்கை முறை, கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைத் தேடி, கிராமப்புறங்களில் இருந்து மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து, அங்கு நிலைபெறுவதைக் குறிக்கும் செயல்முறையாகும். இது கிராமப்புற சமூகங்கள் நகரப்புற சமூகங்களாக மாற்றமடைந்து, நகர்ப்புற மக்கள்தொகை சதவீதம் மற்றும் அடர்த்தி அதிகரிக்கும் நிகழ்வாகும் என வரையறை செய்யலாம். இந்நிகழ்வு சாதக மற்றும் பாதகங்களைக் .கொண்டதாகும்
பதினைந்து சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் நகரமயக் கூறுகளையும் மற்றும் அதன் பாதகங்களையும் காண முடிகிறது. நகர்ப்புரங்கள் வேலைவாய்ப்பு, போக்குவரத்து உள்ளிட்ட இதர கட்டமைப்பு வசதிகளில் சிறப்புற இருந்தாலும் அதிக மக்கள் தொகை மற்றும் தனிநபர் வாகனப்பயன்பாட்டினால் சாலைகளில் வாகனங்கள் சென்ற வண்ணமாகவே உள்ளன. இதனை “திருப்பூரிலிருந்து வந்த பேருந்திலிருந்து பெரியபாளையம் நிறுத்தத்தில் இறங்கிய ஏழெட்டுப்பேர்களில் சகுந்தலாவும் ஒருத்தி பேருந்து கிளம்பியதும் சாலையைக் கடந்து செல்வது எளிதான விசயமாக இல்லை அவளுக்கு. இருபுறமும் இரு சக்கர வாகனங்கள் போய்க்கொண்டேயிருந்தன. ஐந்தாறு வருடங்களுக்கும் முன்பாக இப்படியில்லை. இப்போது வாகனங்கள் பெருத்துவிட்டன. அப்படி இத்தனை மனிதர்கள் இவ்வளவு அவசரமாய் எங்குதான் செல்கிறார்களோ? என்று நினைத்துக் கொண்டாள் சகுந்தலா” எங்கிறார். (புனிதமான காதல் ப- 102). இது திருப்பூருக்கான நிலை மட்டும் அல்ல. பெருநகரங்கள் மற்றும் குறுநகரங்களின் நிலமையும் இவ்வறுதான் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.
வாகனங்களின் பெருக்கத்தால் சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இந்தியாவில் சாலை விபத்துகள் அதிக எண்ணிக்கையில் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் முதல் 4 இடங்கள்:
உத்தரப் பிரதேசம் : 23,652
தமிழ்நாடு : 18,347
மகாராஷ்டிரம் : 15,366
மத்தியப் பிரதேசம் : 13,798
சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் அதிக எண்ணிக்கையில் நடைபெறும் மாநகரங்களின் பட்டியலில் முதல் 3 இடங்கள்:
புதுதில்லி : 1,457
பெங்களூரு : 915
ஜெய்ப்பூர் : 850
என்று 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். (14 டிசம்பர் 2024 தினமணி, https://www.dinamani.com/india/2024/Dec/14/road-accidents-4-indian-states-with-highest-numbers). இந்நிகழ்வை கதையில் கூறும்போது ஆசிரியர் இவ்வாறு பதிவு செய்கிறார் “ வாகனங்கள் பெருத்துப்போகையில் சாலை விபத்துக்கள் நடைபெறுவது சகஜம்தான். நம் கையில் என்ன இருக்கிறது” ( ஹா! ப-130)
நகரங்கள் எப்போதும் சத்தம் மிகுந்ததாகவே இருகிறது. அச்சத்தம் பலருக்கு மனரீதியான பாதிப்புகளையும் வெறுப்பையும் தருகிறது என்பதை “நகர்ப்புறங்களின் பேரிரைச்சல் பிடிக்காமல் நான் குறுநகரங்களில் உலாத்தினேன். சில இடங்களில் என்னைத் திருடன் எனக்கூறி ராக்காலங்களில் மிதித்தார்கள் என்று பதிவு செய்கிறார். (நானெல்லாம் கவரிமான் சாதி ப- 13). நகரத்தில் வசிக்கும் பலர் விடுமுறை நாட்களில் எங்காவது அமைதியான இடத்திற்குச் சென்று நகரின் இரைச்சலிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று கூறுவதையும் காணமுடிகிறது.
நகரமயமாதலின் ஒரு வளர்ச்சியாக மின்சாரம் மற்றும் மின் சாதன பயன்பாட்டைக் குறிப்பிடலாம். இதனால் பல பொருட்களின் உற்பத்தி அதிகமாகி மக்களின் நேரம் சேமிக்கப்பட்டாலும் பண்பாட்டு புழங்கு பொருட்களை நாம் தொலைத்து விடுகிறோம் என்பதனை “ முன்னொரு காலத்தில் வீட்டினுள் கைராட்டை வைத்து டெக்ஸிலிருந்து நூல்க்கட்டு எடுத்து வந்து கைத்தறிக்காக சிறுகோனில் சுற்றியெடுத்துப்போய்க் கொடுத்து வாரக்கூலி வாங்கிப்பழகியிருந்த நீலவேணியின் அம்மாள், கால மாற்றத்தில் கைத்தறிகள் சென்னி மலைக்குள் அழிந்து விசைத்தறிக்கூடங்களுக்கே பெண்கள் செல்ல ஆரம்பித்த காலத்தில் அதில் விருப்பமில்லாமல் ராட்டையை வீட்டின் பொடக்காலிப்பக்கம் கவிழ்த்தி கரையான்களுக்கு உண்ணக் கொடுத்திருந்தாள்” என்று பதிவு செய்கிறார். (நீங்கள் யாரையாச்சிம் காதல் பண்ணியிருக்கிங்களா? ப- 66-67) மேலும் “அடுத்ததாக விசைத்தறிகள் வந்துவிட, கட்டைகளால் உருவாகி கூட்டிச் சேர்க்கப்பட்டு கால்மிதியாலும் கையிழுப்பாலும் ஓடிய ‘கடக்புடக்’ சப்தம் சென்னிமலைக்குள் குறைந்தே போனது” என்கிறார். (மேலது ப- 67-68). சென்னிமலை மட்டும் அல்ல நெசவு செய்யும் பல ஊர்களிலும் இது போன்று பலர் விசைத்தறிக்கும் இன்னும் சிலர் தறியை விற்றுவிட்டு வேறு வேலைக்குச் சென்றுவிட்டார்கள். பஞ்சும் பசியும், வேள்வித்தீ, தறிநாடா, சாலாம்புரி போன்ற நாவல்கள் நெசவாளர்களின் துயரக்கதைகளை நமக்குச் சொல்கின்றன. நெசவு மட்டுமல்லாமல் விவசாயம் போன்ற பல துறைகளில் மின் மற்றும் அதிநவீன சாதனங்களால் நமக்கே உரித்தான புழங்கு பொருட்களை இழந்து விட்டோம்.
இன்றைய சூழலில் தகவல் தொடர்பில் முதன்மையாக இருப்பது அலைபேசியாகும். அலைபேசியின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்த பிறகு நாம் இழந்தது ஏராளம். கடிகாரம், கைக்கடிகாரம், நாள்காட்டி போன்றவற்றின் பயன்பாடும் குறைந்து வருகிறது. எல்லோரிடமும் அலைபேசி வருவதற்கு முன்னால் கடைகளில் ஒரு ரூபாய் போட்டு பேசும் தொலைபேசி இருக்கும். இவ்வியந்திரம் இப்போது அரிய பொருள் விற்கும் கடைகளில் இருக்கின்றன. இதன் பயன்பாடு இல்லாமல் போனதை “முன்பெல்லாம் இங்கே ஒருரூபாய் காயின் போட்டு பேச போன் வைத்திருந்தார்கள், இப்போது தான் அது எங்குமே இல்லையே. சாலையை கடக்கவென்று இவளுக்கும் முன்பாகவே பலர் நின்றிருந்தனர் எனக் கூறுகிறார். (புனிதமான காதல் ப- 110). அலைபேசி பயன்பாட்டினால் நாம் இழந்தவைகளுள் உயிருள்ளவையும் அடங்கும். அதில் பிரதானமானவை சிட்டுக்குருவிகள். சிட்டுக்குருவிகளை காண்பதே அரிதாகிவிட்டது. கிராமங்களிலும் அவற்றைக் காணமுடியவில்லை. இதனை தொடர்ந்து இப்போது அரிதாகி வரும் பறவைகளாக கிளிகள் மாறிவருகின்றன. இதனை “முன்பெல்லாம் கிளி ஜோசியம் பார்க்கும் ஆட்கள் கிளிப்பெட்டியோடு வீடு வீடுக்கு நடந்து வந்தே சொல்லிப் போவார்கள். இப்போது நகரில் எங்குத் தேடியும் அவர்கள் இல்லை. கிளிகளும் இல்லை. என்கிறார். (என் மஞ்சுவோட அவனுக்கென்ன ஜாலாக்கு? ப – 114) இதற்குக் காரணம் நகர வளர்ச்சியின் காரணமாக மரங்கள் மற்றும் காடுகளை அழிப்பதே ஆகும். நகரங்கள் விரிவடைய விரிவடைய விளைநிலங்கள் குறுகிக்கொண்டே செல்கின்றன.
நகரமாக்கலுக்குப் பிறகு பெரும்பாலான துறைகளில் வேலையானது கணினி மயமாக்கப்பட்டுவிட்டன. இதனால் நேரம் சேமிக்கப்பட்டது. வேலை துரிதமாக நடைபெற்றது. காகிதத் தேவையும் குறைந்தது. இதனை “ஒரு பெரிய பிரஸ்ல கம்ப்யூட்டர் ஸ்கிரீன் முன்னாடி தானுங்க மூனு வருஷமா உக்கோந்துட்டு இருந்தேன்.நானு ப்ளக்ஸ்செல்லாம் டிசைன் பண்ணிக்குடுக்குறவனுங்க! அடிக்கடி நான் பண்ணுற வேலையெல்லாம் இறைவனடி சேர்ந்தார்னு பண்ணுறதுதான். எப்பாச்சிம் கோவில் கும்பாபிஷேகம் டிசைன் பண்ணுவேன். அப்புறம் கடைத்திறப்பு, பொறந்தநாளு வாழ்த்துன்னு டிசைன் பண்ணிக்குடுக்குறது மட்டும் என்னோட வேலையா இருந்துச்சுங்க. நல்லசம்பளமும் கூட. காத்தால பத்துமணிக்கு உள்ளார நொழைஞ்சன்னா பொழுதோட ஆறுமணிக்கி மடிப்பு கலையாம அப்பிடியே பஸ்ஸ்டாண்டு வந்து பஸ்சேறி வெச் மங்கலம் வந்துருவனுங்க.”{ நிறக்குருடு ப- 8} ஆனால் கணினி முன்பு அமர்ந்து அதிக நேரம் திரையை பார்ப்பதாலும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதாலும் மனிதர்கள் பலவித நோய்களுக்கு ஆட்படுகிறார்கள். இதனை “இப்பிடியிருக்கப்பத்தான் எனக்கு டோரிக்கண்ணு ஆயிப் போச்சுங்க! டோரிக்கண்ணுன்னா மொத்தமா போறது.. இது என்னடான்னா இந்த நாயிங்களுக்கெல்லாம் தெரியுமாமே வெள்ளையும் கறுப்புமா.. அப்பிடி எம்பட கண்ணு இந்தப் பத்துநாளா ஆயிப்போச்சுங்க. திடீருன்னு ஒரு மனுசனுக்கு இப்பிடி ஆனா என்னதானுங்க பண்டுவான் அவன்? நல்லவேளைங்க.. ஒரே இருட்டாப்போவலீன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான். கண்ணாஸ்பத்திரில கொண்டிக்காட்டி செரிபண்டிக்க வேண்டியது தானேன்னு சொல்றீங்க! இன்னிக்கெல்லாம் அங்க போயி படீல காலு வெக்கமுடியுங்களா? இருக்குற பிரச்சனைக்கி ஜோப்புல ஐநூறு ரூவாக்கத்தை தானுங்க கொண்டு போவணும். ஆனா ஊருக்குள்ள யாருக்கும் எனக்கு இப்பிடி கண்ணுக்கு ஆயிப்போச்சுன்னு சொல்லலீங்க இயற்கை வைத்தியமுன்னுட்டு இந்த நாட்டுக்கோழி முட்டைய வேவவச்சி ரெண்டாக்கீத்துப்போட்டு கண்ணுல வெச்சு துணியால கட்டீட்டு படுத்துக்கெடந்தனுங்க! காத்தால சூரியன் உதிக்கிறப்ப போயி நின்னு அதை உத்துப்பார்த்துட்டு நின்னனுங்க. நாலு தலைகாம்பெ அரைச்சு கண்ணுல உட்டுட்டு எரியுது. கொடையுதுன்னு கெடந்தனுங்க! வைத்தியம் மேல வைத்தியம் பார்த்துட்டு போமயிருன்னு உக்கோந்துட்டனுங்க.” { நிறக்குருடு ப- 9}. மருத்துவமனை என்பது இன்றைய காலத்தில் வியாபாரத்தலமாக மாறிவிட்டது என்பதையும் பணம் இல்லமால் மருத்துவமனைக்குள் நுழைய முடியாது என்பதைத் தெரிவிக்கிறார். “டாக்ரைப்பார்த்து உங்களின் வியாதியைச் சொல்கிறீர்கள். அவர் முதலாக உயர்குருதி அழுத்தம் உங்களுக்கு உள்ளதாவென பார்க்கிறார். இருப்பதை உணர்ந்து உங்களிடம் தெரிவிக்கிறார். உங்களின் கண்களின் அளவு சற்று விரிவடைந்து வெளியே விழுந்து விடுமோவென பயம் கொள்கிறீர்கள். {துப்பறியும் மூர் ப- 93} மேலும் “நீங்கள் மெடிக்கலில் வாங்கிய மாத்திரைகளை பார்த்தால் அவை பதினைந்து நாளைக்கு மூன்று வேளையும் இருக்கின்றன. பணம் கேட்டபோதுதான் உங்களுக்கு இடுப்பு வலியுடன் சேர்ந்து நெஞ்சு வலியும் இருப்பதாய் உணர்கிறீர்கள். ஆக இத்தனை நாட்கள் சென்னி மலை தோப்புப்பாளையத்தில் சைக்கிள் கடை வைத்து ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கு பஞ்சர் போட்டும், கிளம்பாமல் மக்கர் செய்யும் இருசக்கர வாகனங்களைக் கிளம்ப வைத்தும் காசு பார்க்கும் நீங்கள், பேசாமல் டாக்டராகி இருக்கலாமென நினைக்கிறீர்கள். துப்பறியும் மூர் ப- 94} ஒருமுறை மருத்துவரிடம் சென்று வந்தால் மீண்டும் மீண்டும் செல்லும் படியாக இருக்கிறது. ஒரு நோய்க்காகப் மருத்துவமனைக்குச் சென்றால் அடுத்தாக வேறு ஒரு பிரச்சினைத் தோற்றுவைக்கும் படி அமைகிறது. அதனால் தன் கண் அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்ட கண்ணுச்சாமி அடுத்தாக காது மருத்துவரை பார்க்கும் படி ஆகிவிட்டது என்று “ஒன்னுமில்ல சரோஜா.. இனி காது டாக்டரை நாம பார்க்கணும்லு நினைக்கிறேன்.. காதுல மாத்தி மாத்தி குரலுங்க கேட்டுச்சு/ உன்னோட புளூக்கலர் சுடிதாரு நல்லாயிருக்கு!" அப்படின்னு சொன்னனுங்க! { நிறக்குருடு ப-12}. இன்றைய உணவுமுறை மாற்றத்தாலும், இரவு வேலை {NIGHT SHIFT} காரணமாக இரவு தூக்கத்தை இழப்பதாலும், மது அருந்துவதாலும் திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெற்றுக்கொள்வதில் தாமதமும் சிலருக்கு குழந்தை இல்லாமலும் போகின்றன. இதனை “குழந்தைப் பிறப்பில்லாமல் பல குடும்பங்கள் வாடகைத்தாயை நோக்கியும், தத்து எடுத்துக் கொள்ள ட்ரஸ்டுகளை நோக்கியும் ஓடிக்கொண்டிருக்க….” என்கிறார். { ஹா! - ப 127}.
வா. மு. கோமு பெரும்பான்மையான கதைகளில் தனிமனித, நகரமய, சிக்கல்களைக் குறித்துப் பேசியுள்ளார். மேற்குறிப்பிட்ட தன்மைகளை இத்தொகுப்பிலும் காண முடிகிறது. நகரமயமாதல் மனிதர்களின் வாழ்க்கையை பல விதங்களில் முன்னேற்றத்தையும், வேலைகளை விரைவாகவும் குறைவான நேரத்திலும் செய்து முடிக்கும் படியும் பலவித சதனங்கள் மூலம் மாற்றி அமைத்தன. இவ்வளர்ச்சியானது மேலும் மேலும் அதிகரிக்கவே செய்யும். ஏனெனில் வர்த்தகம் மற்றும் தொழில் நுட்பத்தின் மூலம் உலக நாடுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருக்கும். இத்தொடர்பின் மூலம் ஒரு நாடு மற்றொரு நாட்டின் முதலீட்டை ஈர்க்கும். முதலீட்டை ஈர்ப்பதன் மூலம் தொழிற்சாலை அமையும். தொழிற்சாலை அமைவதன் மூலம் கிராமம் குறுநகராகும், குறுநகர் நகரமாகும், நகரம் மாநகரமாகும். வளர்ச்சி இருக்கும் அளவிற்கு வீழ்ச்சியும் இருக்கிறது என்பதையே வா.மு கோமுவின் கதைகளின் வழியே அறிய முடிகிறது.
*****
https://www.facebook.com/61554987526965/posts/122277525584166250/?app=fbl
Comments
Post a Comment