வருணன் கவிதைகள்
வருணன் கவிதைகள்
ஒவ்வொரு மலை உச்சியிலும் கடவுள் இருக்கிறார்
அடிவாரத்திலிருந்து அண்ணார்ந்து பார்க்கையில்
எம்மலையும் பிரம்மாண்டம் தான்
வறண்ட குற்றுச் செடிகள், பெயரறியா மரங்கள் கடந்து
மெல்ல ஏறுகிறது
சப்பாத்துகளற்ற எளிய பயணியின் ஒரு ஜோடி காலடி
பத்து முறை
நூறு முறை
ஓராயிரம் முறை
ஏற ஏற
உலகம் கீழிறங்க
வானமும்
தவழும் மேகமும் கூட இரங்க
படுத்தபடியே ஏறி வருகிற நிழலுக்குள்
கணந்தோறும் பிடி நிலம் ஓய்வெடுக்க
பொழுதும் பயணியும் உச்சியைத் தொடுகையில்
கடவுளங்கு காத்துக் கொண்டிருக்கிறார்
காற்றின் அரூபக் கரங்களால்
அணைத்தபடி
பயணம் சுகமா என விசாரிக்க
*****
வரிசை பிறழ்ந்த ஒரு நாள்
கால வரிசைக்குள் நிற்கச் சலித்த
உன் நினைவு குடித்த நாளொன்று
தனக்குள்ளேயே
நம்மை ஒளித்து வைத்துக் கொண்டது.
மீண்டும் கண் தழுவவியலா
உன்னை மட்டுமெயென்றால்
சலித்துப் பழகிய
சல்லடைக் கண் மனதில்
இந்நாளை மீண்டுமொருமுறை
சலித்துத் தூங்கியெழுந்து இயல்பாகியிருக்கலாம்.
திருவிழாக் கூட்டத்தில்
காணமற்போன பிள்ளையைத் தேடி
தானும் தொலைந்த தந்தையைப் போலிருக்கையில்
என்ன செய்வது?
வரிசை தப்பிய அந்நாளின் வால்நுனியைப்
பிடித்துவிட்டால் கூட போதும்.
அதன் மறுமுனையில்
நானிருக்கிறேனோ இல்லையோ
நிச்சயமென் உயிரிருக்கும்.
அது போதுமே ஜீவித்திருக்க
*****
பூச்சிறை
தூய அன்பை புறக்கணிக்கிற
திராணி எவருக்கும் இருப்பதில்லை
விரல் பற்றலில்
இருந்து விடுபடத் துடிக்கும் மழலையின் சிறுவிரல் உன் யத்தனம்
அந்த அன்பு நீ விரும்பும் சுவையுடையதாய் இராத இனிப்பு
உனக்கு உவப்பில்லாத நெடி
மறுப்புகள் மலிந்திருந்தாலும் விடுபடல் சாத்தியமில்லை.
உனக்கு மிக அருகே ஒரு சுடரெனப் பெருகிப் பரவி ஒளிக்குடையென
உன்னை தனக்குள் பொதிந்து கொள்கிறது அது.
சுடர்ந்து ஒளிர்ந்து
அதுவாய் ஒரு நாள் அணையும்
வரையிலும் நீ காத்திருக்க...
*****
லட்சுமி பவனம்
அம்மா குடியிருந்த வீட்டில்
பிறகு அம்மாவைப் பற்றிய
ஞாபகங்கள் குடியிருந்தன.
இப்போது
வீடு
ஞாபகத்தில் குடியிருக்கிறது
*****
பொன்னுலக வரலாறு
கெய்ரோவை வடக்கு ஆஸ்திரேலியாவிலும்
திபெத்தை பீஜிங்கின் பின்கொல்லையிலும்
பனிப்போர் பீரங்கிகளின் மூக்கில்
பூச்செண்டுகள் செருகுதல் போல
மாஸ்கோவிற்கு மிக அருகில் நியூயார்க்கையும்
அழகிய கையெழுத்தில்
அத்தனை இயல்பாய் எழுதுகிறான்.
பிரதிபலன் எதிர்பாராது
சிரத்தையாய் முன்னேற்றம் காண்கிறது பெரும்பணி
எழுதலாமென முடிவெடுத்தது போல
பாலத்தீனத்தை எழுதிட காசா
வின் மீது
எழுதுகோல் வட்டமடிக்கையில் பார்த்து
அடித்துத் தொலைந்துவிட்டது
பாழாய்ப் போன இறுதிமணி
*****
https://www.instagram.com/p/DdQCUDkEkAQ/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/DdQCduQlImm/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/DdQC2sbFF9D/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/DdQC2sbFF9D/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/DdQC8-xFNHL/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/DdQDGTSlO6z/?utm_source=ig_web_copy_link
https://www.facebook.com/61554987526965/posts/122279067344166250/
https://www.facebook.com/61554987526965/posts/122279067896166250/
https://www.facebook.com/61554987526965/posts/122279068088166250/
https://www.facebook.com/61554987526965/posts/122279068244166250/
https://www.facebook.com/61554987526965/posts/122279068358166250/
Comments
Post a Comment