மா. காளிதாஸ் கவிதைகள்
மா. காளிதாஸ் கவிதைகள்
என்னிடம் இருக்கும்
எல்லாக் களிம்புகளையும்
உன்னிடம் தந்து விட்டேன்
அவையெதுவும் காலாவதியாகவில்லை
புண்ணை ஆற்றுவதற்கான தகுதிகள் இன்னமும்கூட
நீர்த்துப்போகாமல் தான் உள்ளன
முதலில் எரிச்சல் இருக்கத்தான் செய்யும்
சற்று பொறுத்துக் கொள்ள மாட்டாயா?
நீ துடைக்காத ரத்தமா
நீ காணாத காயமா
நீ தடவாத களிம்பா
நீ அவிழ்க்காத கட்டா?
சொல் பார்வை கேலிச் சிரிப்பு பொய்யான அழுகைகளால்
ரணமான போது கூட
நீ இப்படி வருந்தியது இல்லை
ஒரு மடக்கு தண்ணீர்
உப்பு ஒத்தடம்
தேங்காய் எண்ணெய் நீவல்களால்
எத்தனை புண்களைக்
காணாமல் போகச் செய்திருக்கிறாய்?
நீ இப்போது வேண்டுவதெல்லாம்
ஒரு நிம்மதியான தூக்கம்
அப்படியே மரணம்
நவீன மருத்துவ அறிக்கைகள் கிடக்கட்டும்
என்னிடம் இன்னும் கொஞ்சம் அன்பும்
உன்னிடம் இன்னும் கொஞ்சம் இரக்கமும் உள்ளது
நாம் ஏன் அதை
நம் தேநீர்க் கோப்பைகளில் ஊற்றி
கரம் பற்றியபடியே
பரஸ்பரம்
நம் சூடாற்றிக் கொள்ளக் கூடாது?
*****
லேசாக அடிபட்ட பறவையெனத்
தத்தித் தத்தி
நகர்ந்து கொண்டிருக்கிறது இரவு
சற்றுமுன் தான் பசியாறியிருக்க வேண்டும்
கவுச்சி வாடை அடிக்கிறது
அதன் அலகில்
தாகம் தணிப்பதற்கென
ஒவ்வோர் அதிகாலையிலும்
வைக்கப்படும்
குவளைத் தண்ணீரில் கூடத்
தன் அலகை
நனைத்திருக்கலாம் இரவு
முனகலா கேவலா
அடக்கப்பட்ட மென்சிரிப்பா
எதுவென்று பிரித்தறியத்
துப்பில்லாமல்
கழுத்தை மட்டும் நீட்டி
எட்டிப் பார்க்கிறது
கனவின் ஒவ்வொரு கிளையிலும்
மாறிமாறி அமர்ந்து
இளைப்பாற்றுகிறது தன் வலியை
தனக்குக் கீழ் நடக்கும்
அக்கிரமங்களின் மீது
ஒருநாளேனும்
எச்சமிடும் துணிவைத் தருமாறு
புட்டத்தால் குந்தி
கால்களைக் குவித்து
அது மன்றாடுகிறது
தன் நிறமொத்த கடவுளிடம்
அப்போது தான் புலர்ந்த பொழுதில்
மொட்டைமாடியில் நின்றபடி
கூட்டம் கூட்டமாகப்
பறவைகள் வலசை போவதைப்
பார்க்கும் நீங்கள்
இனிமேலாவது உணர்வீர்களா?
காயம் மறந்து பறக்கும் அவை
யாருடையதோ இரவுகள் என்று
*****
நீ அயர்ந்து உறங்கிவிடுகிறாய்
அப்போது நீ தின்றது அனைத்தும் செரித்துவிடுகிறது
உன் மாத்திரைகள்
ஒழுங்காக வேலை செய்கின்றன
நீ அசைந்து கொடுப்பது
உனக்கே தெரியாத போது
ஓர் இலை உதிர்வது
ஒரு பூ மலர்வது
ஒரு நாய் ஊளையிடுவது
ஒரு மன உளைச்சல்
தன்னை மாய்த்துக் கொண்டது
எல்லாமே
கணநேர மின்வெட்டின் போது
நீ துடைத்துக் கொண்ட
வியர்வைத் துளிகளே
உன்னையறியாமல் ஒருக்களித்துப் படுத்தாய் தானே?
அப்போது தான்
ஒரு மர்மம் அவிழ்ந்தது
ஓர் அநியாயம் அரங்கேறியது
ஒரு கரப்பான்பூச்சி
உனக்கு மிக அருகே உன்னைக் கடந்தது
ஒரு சொலவடை உண்மையாகியது
குவளைநீருடன் நிற்கும் கரத்தைப் போல
சிறு திருத்தங்களுடன்
உனக்கான அறிவிப்பு ஒன்று
உன்னை எழுப்பத் தயாராக உள்ளது
அதற்குமுன் உன் காதில் யாரோ
இதைக் கிசுகிசுத்தது போன்ற உணர்வு:
"இரவு, ஒரு தகன மேடை.
கனவு, வெட்டியானைப் போல
எல்லாவற்றையும் எரித்துக் கொண்டிருக்கிறது."
கொசு கடித்ததாக நினைத்து
உன் கன்னத்தில்
நீயே லேசாக அறைந்து கொண்டு
உன் தூக்கத்தைத் தொடர்கிறாய்
*****
அழகாய்ப் பூத்திருக்கிறது
தப்பித்த கொன்றைமரம்
வண்டுகளின் பாடலை ரசிக்கின்றன
சிறகுலர்த்தும் பறவைகள்
மலர்களின் மனதைக் கொத்தாக அள்ளித் தன் காதலிக்குப் பரிசளிக்கிறான்
பழைய நறுமண காலத்தை அசைபோடுகிறார் அவர்
இரண்டு கைகளையும் அகல விரித்து தனக்கான வாழ்த்தைப் பெற்றுக்கொள்கிறாள் அச்சிறுமி
இதுதான் தன்னால் இயன்றதென்றோ
உனக்கிது போதுமென்றோ
ஒருபிடி அள்ளி
இஷ்ட தெய்வத்தை நோக்கிக்
கண்ணீரும் கம்பலையுமாய்
வீசுகிறாள் அவள்.
ஆனாலும் நகரின் அந்தச் சிறிய இடம்
தன்னால் ஒரு வட்டவடிவ சவப்பெட்டியாக உருமாறியது கண்டு
கண்ணீர்த்துளியைப் போல
மேலும் ஒரு பூவை உதிர்க்கிறது கொன்றை
நெற்றியில் முத்தமிட்டு
மலரின் காதில்
ஏதோ கிசுகிசுக்கிறது காற்று
உண்மைதான் எனச்
சற்றே ஒருக்களிக்கிறது மலர்
*****
https://www.facebook.com/61554987526965/posts/122277522356166250/?app=fbl
https://www.facebook.com/61554987526965/posts/122277522668166250/?app=fbl
https://www.facebook.com/61554987526965/posts/122277522890166250/?app=fbl
https://www.facebook.com/61554987526965/posts/122277523046166250/?app=fbl
Comments
Post a Comment