காயத்ரி ரவீந்திரன் கவிதைகள்
காயத்ரி ரவீந்திரன் கவிதைகள்
தொட்டிக்கட்டு வீடு
ஆலம் விழுதுகளுக்கிடையே பாசித்தூண்கள் வெடிப்பேறியிருந்தன
பதினாறு அறைகளில் எதற்கும் கதவுகளில்லை
எண்பத்தாறு வருடப் பழைய கிணற்றுக்குள்
கையுடைந்த பிளாஸ்டிக் பொம்மை மிதந்து கொண்டிருந்தது
வரவேற்பறையின் நடுவே
உருக்குலைந்த பெண்ணின் சிலை சரிந்து கிடந்தது
செடி முளைத்திருந்த குசினிச் சுவரினை மெதுவாக வருடிப் பார்க்கிறேன்
அம்மம்மாவின் மடியிலமர்ந்து நிலவு பார்த்து உறங்கிய இரவுகள்
ஜமுனாப்பாரி ஆட்டுப்பால் குடித்து வளர்ந்த சிறுபருவம்
நண்டுக்கால் சதை ஊட்டிவிடும் ஐயாவின் கைவாசனை
குழல் புட்டோடு மாம்பழம் சேர்த்து இனிப்பூறிய காலை உணவு
சப்பாணி கட்டியிருந்து பலாச்சுளை எடுத்துண்ட மாலை நேரங்கள்
மரவள்ளி அவியலொடு இடிச்ச சம்பலும் கருவாட்டுப் பொரியலும்
இப்படியான ஞாபகங்கள் படிந்திருக்கும் தொட்டிக்கட்டு வீட்டுக்குள்
என் முன்னோரின் மூச்சுக்காற்று கேட்டபடி இருக்கின்றது
*****
எல்டர்பெர்ரி வைன் (Elderberry Wine)
இறுதியாக அவளைப் பார்த்தபோது
வைன் நிரம்பிய குடுவையொன்றுக்குள்
அவளை ஊறவைத்திருந்தார்கள்
நீலம்பாரித்திருந்த உடல் மெழுகுச்சிலை போல் மாறியிருந்தது
நித்திரைக் குளிகைகளால் சமாதானமான இதயம்
எல்டர்பெர்ரி வைனால் குளிரத் தொடங்கியிருந்தது
அவளது ஈர்த்துக்கிடந்த கைகளைப் பற்றியபோது
உதடுகள் எதையோ சொல்லத் தொடங்கின
வைன் ஊறிய வார்த்தைகள்
தொண்டைகுழிக்குள் மதுரமாய் மிதந்து இறங்கின
ஆண்வாசனை நிரம்பிய குடுவைக்குள்
பெண்ணுடல் அநாதியாய் நீந்திக் கொண்டிருந்தது
இவ்வளவு மகிழ்ச்சியான என்னை
இதுவரை நான் கண்டதேயில்லை
*****
ஓவியங்கள் நிறைந்திருக்கும் வீடு
எங்கள் வீடு எப்பொழுதும் ஓவியங்களால் நிறைந்திருக்கும்
நீராவியில் அவித்த ஓவியங்களை அம்மா எமக்கு பரிமாறுவார்
ஓவிய மீன்குழம்பு மண்சட்டியில் கொதிப்பதை
அப்பா புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பார்
சிரிப்பு சத்தம் வீடுமுழுக்க நிறைந்திருக்கும்
ஓவிய இறைச்சித் துண்டுகளை
அப்பா எனக்கு பதமாக ஊட்டிவிடுவார்
எண்ணெய் ஓவியக் கறியின் சுவை
எனக்கு எப்போதும் பிடித்தமானது
அந்த இரவும் அப்படித்தான்
உண்ட களைப்பில் உறங்கச் சென்றுவிட்டேன்
மறுநாள் அதிகாலை
அப்பாவின் உடலை சுமந்தபடி
அண்ணன் நின்று கொண்டிருந்தான்
வீடு நிறைந்த உறவுகள் கூட்டம்
அப்பாவை கண்ணீரால் குளிப்பாட்டி ஒப்பனை செய்தார்கள்
‘இன்று எங்களுக்கு சவக்காலையில் மதிய விருந்து
சீக்கிரம் கிளம்பு ’ என அம்மா அழைக்கும் போது
ஓவியமாக மாறிப்போயிருந்த அப்பாவின் மடியில்
நான் தலை வைத்து உறங்கிக்கொண்டிருந்தேன்
*****
https://www.instagram.com/p/DcqLXrZFJ-U/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/DcqLbxfFM41/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/DcqLgO0lC7C/?utm_source=ig_web_copy_link
Comments
Post a Comment