செந்தி கவிதைகள்

செந்தி கவிதைகள் 

வேட்டை 

ஒன்றற்ற ஒன்றில் மிளிரும் 

மின்மினிகளின் பறத்தலில் ஒரு வானம் 

திறந்து மூடப்படுகிறது.

பெரு நிலத்தின் வெளியில்

சாம்பல் பூத்த நீலி கருநீலக் கூந்தலில்

வனத்தைச் சுருட்டி நடைபயிலத் தொடங்கிய கணத்தில் 

வந்திறங்கிய ராஜகுமாரன் கைபிடித்து 

புரவியில் பறக்கத் தொடங்கினாள்.

அப்போதிறங்கிய 

விண்கற்கள் 

புதுப்புனலை உமிழ்ந்து திளைத்தன.

திசைகள் கடந்து பெரும் பயணம் நீண்டுகொண்டிருந்தது.

நீலநிறச் சிறகுகள் முளைத்தவளாய்

காட்சியளிக்கத் தொடங்கியவள் ராஜகுமாரனை

 மெல்ல அணைத்து முத்தமிடத் தொடங்கினாள்.

பள்ளத்தாக்குகள் கடந்து 

ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி 

அத்துவானக் காட்டில் 

இருக்கும் 

உச்சிமரக் கிளைப்பொந்தின்

கிளியில் 

அவனது உயிர் ஒளிந்திருக்கிறது.

மாயக் கிறுக்கனொருவன் 

அவன் உயிர் பிடிக்க பின் தொடர்கிறான்.

*****

ரயிலடி மாலை

ஏகாந்தமாகக் கிடக்கிறது இவ் ரயில்நிலையம்.

திக்கற்றவர்களின் புகலிடமாகவும் 

இது இருக்கிறது.

பருமனான உடல் கொண்ட ஒருவன் 

சட்டையணியாமல் 

நடைமேடை பெஞ்சில் அமர்ந்து 

காற்றில் கைநீட்டி 

நீண்ட நேரமாக 

தானாகப் பேசிக்கொண்டே இருக்கிறான்.

இரவு உணவிற்கு எங்கு போவான் என்று பதற்றம் கொள்கிறேன்.

சிக்னல் காட்டும் 

கம்பாஷிடர் போஸ்ட்டில் வந்த 

அவள் 

சோகமாக நின்று கொண்டிருக்கிறாள்.

செங்கோட்டை ரயிலைப் பிடிக்க 

அவசர அவசரமாக இருவர் 

ஓடி வந்து கொண்டிருக்கிறார்கள்.

குட்ஸ் ஒன்று 

மூன்றாவது நடைமேடையில் நாள் கணக்கில் 

நின்று கொண்டிருக்கிறது.

இத்தனை ட்ரக்கில் அப்படி என்னதான் இருக்கிறதென்ற யோசனையில் 

மெல்ல நடக்கின்றேன்.

வடக்கே சற்றுத் தொலைவில் இருக்கிற புதருக்குள் 

திருநங்கையொருத்தியைப் பின் தொடர்கிறான் 

கைலி கட்டிய ஒருவன்.

வழக்கமாக நடைக்கு வரும் 

தலை நரைத்தவர்கள் 

ஊதியக்குழு எப்போது அமுலாகும் என்று 

பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பள்ளிச் சீருடையில் 

மேம்பாலத்துப் படிக்கட்டில் இருவர் நெருக்கமாக அமர்ந்து 

சிரித்து விளையாடுகிறார்கள்.

சட்டென்று அவளின் கன்னத்தில் முத்தம் ஒன்று தருகிறானவன்.

சிரித்தபடி 

செல்லமாக நாணம் கொள்கிறாளவள்.

வடநாட்டு ஸ்டேஷன் மாஸ்டர் 

அவ்வப்போது 

தனது அறையில் இருந்து வெளிவந்து 

பார்த்துவிட்டுச் செல்கிறான்.

பாதசாரிகள் இருப்புப் பாதையைக் கடக்க வேண்டாம் 

ரயில் வந்து கொண்டிருக்கிறது 

என்று எச்சரிக்கும் பெண் குரல் ஒலிக்க 

சன்னமாக கேட் கீப்பர் 

கைப்பிடியைச் சுற்றுகிறான்.

வயதான பின்னர் 

நான் இங்கே தனியாக அலையக்கூடும்.

வடக்கே தனியாக ஒரே ஒரு பெஞ்ச் இருக்கிறது.

*****

தனித்து இருத்தல்.

சதா

பதினைந்திற்கு பதினான்கு அறையில்

இருக்கிறேன்.

இரு பெரிய ஜன்னல்களையும் சாத்தியே வைத்திருக்கிறேன்.

தெருவில் ஏதேனும் வாகனம் ஹாரன் அடிக்கும் சப்தம் கேட்டால் 

தொந்தரவாக இருக்கிறது.

வெங்காயம் கிலோ நாற்பதென்று

ஓயாமல் கேட்கும் சப்தம் எரிச்சலாக இருக்கிறது.

ஏன் காலையில் இப்படி வாகனங்கள்

எதையாவது கூவிக்கொண்டே இருக்கின்றன.

ஓயாமல் இந்தக் குரல்கள்

பெரும் தொந்தரவு செய்கின்றன.

சமயத்தில் சினம் கொள்ளச் செய்கின்றன.

மேற்கே திறந்த வெளியில் பசுக்கள்

மேயும் மணியோசையில்

மனம் இலகுவாகுகிறது.

கிளிகள் இரண்டு பறந்து செல்கின்றன

என்பதை அதன் கீச்சுக்குரல்கள் சொல்லிச் செல்கின்றன.

ஒரு நாள் தொடங்கி பிற்பகல் முடிய

அவ்வளவு தூக்கம் கொள்கிறேன்.

எங்கிருந்து வருகிறது இவ்வளவு உறக்கம்.

அவ்வப்போது அறையைக் குளிர வைப்பதும்

பின் மின்விசிறியை சுழல விடுவதுமாயிருக்கிறேன்.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கையில்

ஆயுள் காப்பீடு முகவர் அழைத்துச் சொல்கிறான் 

இம்மாதம் தவணை இருப்பதாக.

தூக்கக் கலக்கத்தில் சரி என்கிறேன்.

பிற்பகலில்

எழுந்து விநோத விலங்கினைப் போல் 

பல் துலக்குகிறேன்.

அறைக்குள் கிடப்பது பெரும் சுகம்.

தனித்திருத்தல் என்பது ஓர் உணர்வு.

இவ்வாறாக

நான் எனது அறையுடன் 

தனியாகப் பேசத் தொடங்குகிறேன்.

*****

https://www.instagram.com/p/DckiBDkRN3D/?igsi=MWRlemdscGsyb3Bneg==

https://www.instagram.com/p/DckiV0ujApG/?igsi=MWV0cnJqd2E5eW03ag==

https://www.instagram.com/p/DckirePDXyT/?igsi=a3B6NWd1NXB6eGhw

https://www.facebook.com/61554987526965/posts/pfbid02ibjMhSqUS8NxHP1gNHRQVGxqUUbgbD9FRjvCcYDk8j2VsdVz59wWeN7YX8jkogiwl/

https://www.facebook.com/61554987526965/posts/pfbid02VjPXcQyfxJ4Lx46UZiccgro5NveKwNpba9Z2v9DAP5AV6LeJYbk63PbbQDZ5GUTil/

https://www.facebook.com/61554987526965/posts/pfbid0CzBfoK25PrvvahyuU9qQReU6S8pcoyJ3HuH3t1VYTMWsYEyHbkjSFEsejo8L94Url/

Comments

Popular posts from this blog

மா. அன்பரசு குறுங்கதைகள்

மெய் முறிந்தால் மெய் (எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடன் உரையாடல்)

தீனன் கவிதைகள்