சந்திப்பு - அழகுராஜ்

                                                                  சந்திப்பு 

                           -அழகுராஜ்  


      சந்திப்பு என்கிற தலைப்பில் வெளியான மூன்று தமிழ் எழுத்தாளர்களது சிறுகதைகள் மற்றும் சந்திப்பு என்ற பெயரில் தமிழில் ரகுநாதனால் மொழிபெயர்க்கப்பட்ட ரஷ்ய எழுத்தாளர் மாக்சீம் கார்க்கியின் கதை ஆகியவற்றை தலைப்பினை மையமிட்டு ஒப்புமைப்படுத்திப் பார்ப்பதாக இக்கட்டுரை அமைகிறது. ஒப்புமைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நான்கு கதைகளும் 1942 முதல் 1960க்கு இடைப்பட்ட காலங்களில் வெளியானவை. இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் தமிழ் மூலத்தில் வெளியான மூன்று கதைகளும் 1942, 1957, 1960 முறையே கலைமகள், கல்கி, தாமரை ஆகிய இதழ்களில் ஜூன் மாதத்தில் வெளியாகியுள்ளது. ஜூன் மாதம் என்பதிலிருந்தே ஒப்புமையைத் தொடங்குவதற்கான வெளியை சிறுகதைகள் வெளியான விவரங்கள் திறந்துள்ளது. ஜூன் மாதம் என்பதால் வெயில் விடுமுறை காலத்தில் சந்திப்பதற்காக நிகழ்ந்த பயணங்களே (நா. பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி) கதையாகி இருக்கலாம் என கருதுவதற்கு போதுமான இடமுண்டு. 


     சந்திப்பு என்ற கதைத்தலைப்பைக் கூர்மையாக கவனிக்க வேண்டியுள்ளது. சந்திப்பு தமிழ்ச் சொல்லா? என்ற கேள்வியை இந்த இடத்தில் கேட்க வேண்டியுள்ளது. “சகரக் கிளவி மொழி முதல் ஆகா” என்பது தொல்காப்பியரின் இலக்கணம். சந்திப்பு என்பதற்கு உடனிருத்தல், கூடுதல், இணைதல், சேர்தல், ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளுதல் உரையாடுதல் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.

     இலக்கண அடிப்படையில் நிலைமொழியும், வருமொழியும் இணையும் இடத்தில் ஏற்படும் பிழைகளை சந்திப் பிழைகள் அல்லது ஒற்றுப் பிழைகள் என்கிறோம். மேலும் இரண்டு சொற்கள் இணைவதைக் குறிப்பதற்கு புணர்ச்சி என்ற சொல் இலக்கணத்தில் வழங்கப்படுகிறது. இவ்வாறு உரையாடலின் நடுவிலும் இலக்கண அடிப்படையிலும் பல்வேறு வகைப்பட்ட பொருள்களில் சந்திப்பு அல்லது சந்தி பயன்பாட்டுக்கு உள்ளாகிறது. இவற்றைக் கடந்து இலக்கியம் என்ற பார்வையில், குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய வெகுஜன இலக்கியங்களை முச்சந்தி இலக்கியங்கள் என்று கூறும் போக்கு இருந்ததை ஆ.இரா. வேங்கடாசலபதியின் “முச்சந்தி இலக்கியம்” நூலின் வழி விரிவாக அறிய முடிகிறது. வடமொழிச் சொல்லாகவே இருப்பினும் இலக்கணம், இலக்கியம் என தொன்றுதொட்டு பயன்பாட்டில் இருக்கும் “சந்திப்பு” நவீன இலக்கியங்களில் குறிப்பாக சிறுகதைகளின் தலைப்பாக அமைந்திருப்பதைச் சுட்டுவதும் கதையின் உள்ளடக்கத்தை ஒப்புமை நோக்கில் பார்க்க முயல்வதுமான முயற்சியாக இக்கட்டுரையைக் காணலாம்.


சந்திப்பு நிகழ்த்தும் கொந்தளிப்பு


       கு.ப.ராஜகோபாலன், நா.பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி என்று கதை வெளியான காலத்தை அடிப்படையாகக் கொண்டு சந்திப்பு கதைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சந்திப்பு நிகழும் தருணத்தில் வெளிப்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பை சொல்லும் விதமாக கதைகளுக்குள் கதாபாத்திரங்கள் சந்தித்துக்கொள்வதை மட்டுமே மையப்படுத்தி கதை சுருக்கமாக முன்வைக்கப்பட்டுள்ளது. 


கு.ப.ராவின் சந்திப்பு 


       டாக்டர் ருக்மணி எம்.பி.பி.எஸ், நர்ஸ் வைரமணி, மலையாளிச் சேவகன் என செய்யும் வேலை அல்லது மொழி அடையாளத்தை முன்பட்டமாகக் கொண்டே ஒவ்வொரு கதாபாத்திரமும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கு விதிவிலக்காக எஸ்.சுந்தரம், க்ளார்க், சீப் ஸெக்ரடேரியட் என்ற பெயரில் சுந்தரம் கதைக்குள் வருகிறார். 


      சென்னைக் கோஷா ஆஸ்பத்திரி சூபரிடெண்டன்ட்டாக இருக்கும் ருக்மிணி சுந்தரத்தின் முதல் மனைவி. எட்டு வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் மனைவியின் உடல்நிலைக் கோளாறுக்காக மருத்துவராக இருக்கும் முதல் மனைவியை சுந்தரம் சந்திக்கிறார். சந்திப்புக் காட்சி, “மின்சார விளக்கின் வெளிச்சத்தில் அவள் முகத்தைப் பார்த்ததும் சுந்தரம் திடுக்கிட்டுப் போனார். ஆமாம், தம் மனைவி தான். எட்டு வருஷங்களுக்குப் பிறகும் அடையாளம் நன்றாகத் தெரிந்தது. அதே மாசு மறுவற்ற முகம்; சற்று உயரம்; அதற்கேற்ற பருமன்.” என்பதாக வருகிறது. இது சுந்தரம் சந்திப்பை எதிர்கொண்ட விதமென்றால், ருக்மிணி சந்திப்பை எப்படி பார்க்கிறாள் என்பதும் கதையின் முக்கிய பகுதியாகும். இதில் சுவாரஸ்யமான இடம் சுந்தரம் தனது முதல் மனைவியின் பெயரை இரண்டாம் மனைவி மூலம் பெறப்பட்ட பெண் குழந்தைக்கு சூட்டிய இடமாகும்.


      “எட்டு வருஷங்களுக்குப் பிறகு இனிமேல், இந்த ஜென்மத்தில் சந்திப்பு இல்லை என்று எண்ணியிருந்த கணவருடன் இன்று திடீரென்று, இருவருக்கும் எதிர்பாராமல், இப்படியா சந்திப்பு நேர வேண்டும்! அவரும் உடனே அடையாளம் கண்டுகொண்டார். தெரியாமல் என்ன? முகம் மாறிவிடுமா என்ன?” என்று ருக்மிணி தனக்குள் கேள்வி கேட்டுக் கொள்கிறாள். பல வருடங்கள் பிரிவின் துன்பங்களை அனுபவித்தவரின் மனம் இறுகிப் போய் இருக்கும் என்றாலும் கூட சம்பந்தப்பட்டவர்களால் இறுக்கத்தை உடைக்க முடியும் என்பதை, “ஸெண்டிமெண்ட், பலவீனம் என்று பேசிக்கொண்டு திரியும் பிரகிருதிகளைக்கூட ஆட்டிவைக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. எட்டு வருஷங்களாகக் கஷ்டங்களைப் பார்த்து பார்த்து உணர்ச்சி மங்கிப்போயிருந்த ருக்மிணிகூடக் கணவன் கலங்கினதைக் கண்டதும் தன்னை அறியாமல் அழுதுவிட்டாள்.” என்ற வரிகள் உணர்த்துகிறது.


      கதையின் இறுதிப் பகுதியில் ருக்மிணியும் சுந்தரமும் சுந்தரத்தின் இரண்டாம் மனைவி முன்னிலையில் அவள் மூலமாகவே இணைவதை “சாவின் சன்னிதானத்தில் இரண்டு உள்ளங்கள் உயர்ந்து மோதி ஒன்றாகி அடங்கின.” எனக் கூறி கதை முடிவை நோக்கிச் செல்கிறது.


நா.பார்த்தசாரதியின் சந்திப்பு 


      கணவனை இழந்த பெண்ணும் மனைவியை இழந்த ஆணும் சந்தித்துப் பிரியும் நா.பார்த்தசாரதியின் சந்திப்பு சிறுகதை காட்சி, அனுமானம், கனவு, உண்மை என்று நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது.


     பாலு என்கிற சிறுவனைப் பார்க்கும் போது அவனது தந்தைக்கு இறந்து போன அவனது அம்மாவின் நினைவாட்டம் வருவதை

“ ‘ஏரி ரொம்ப ஆழமா இருக்குமோ?’ -மலர்ந்த விழிகள் இரண்டும் விரிய என்னை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே கேட்டான் பாலு. அந்தக் கண்களையும் அவன் முகத்தையும் பார்க்கிறபோது ‘அவள்’ நினைவு வந்தது பாவி. எப்படித்தான் இந்தக் குழந்தையை விட்டுச் சாக மனம் வந்ததோ? மூன்றரை வருஷ வாழ்க்கை.” என்ற வரியின் மூலம் அறியலாம். மீண்டுமாக பாலு “இல்லேப்பா? இப்போது அம்மா உசிரோடு இருந்தால் நம்மோடு கொடைக்கானல் வந்திருப்பாள் இல்லேயா அப்பா?” என்று தனது தந்தையின் நினைவைக் கிளர்கிறான். இக்கிளர்ச்சிக்கு நடுவில் தான் சந்திப்பு நிகழ்கிறது.


     " “அதுக்கென்னடா! நீ பயப்படாமல் இருந்தால் நானும் வேகமாக விடுவேன்."-என் பதிலை அவன் கவனிக்கவில்லை. அந்தப் படகையும் அதிலிருந்து சிறு பெண்ணையுமே பார்த்துக் கொண்டிருந்தான். என் கவனமும் அந்தப் படகின்மேல் சென்றது. அதைச் செலுத்திக் கொண்டிருந்தவளைக் கவனித்தேன் நான். ஆசையால் உந்தப்பட்டுப் பார்த்த பார்வை அல்ல அது! ஏதோ தற்செயலாகச் சென்று லயித்த பார்வைதான். சாதாரணப் பார்வையாக வந்த சந்திப்புக்கு தற்செயல் என்று இரண்டாவது முறை 'இந்தப் புத்தகத்தில் நாம் படிப்பதற்கு என்ன இருக்கப் போகிறது?' என்ற அலட்சியத்தோடு பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கும்போது நமக்குப் பிடித்தமான ஒன்று அதில் அகப்பட்டுவிட்டால் எப்படியிருக்கும்? அந்த நிலைதான் தற்செயலாகச் சென்ற என் பார்வைக்கும் ஏற்பட்டது.” என்கிற வரிகள் மூலம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இது சந்திப்பில் ஏதும் முளைக்கவில்லை என்பதைத் தீவிரமாக முன்வைக்கும் பகுதியாக இருக்கிறது.


     பின் அந்தப் பெண்ணைக் குறித்தும் அவளது வருகை குறித்தும் தானாக அனுமானிக்கும் பாலுவின் தந்தையுடைய செயல்பாட்டிற்கு 

“காட்சிக்கு வரம்பு உண்டு. கட்டுப்பாடு உண்டு. அனுமானத்துக்கு இவை இரண்டுமே இல்லை. தூக்கமோ, மயக்கமோ இன்றி மனத்தில் தன் நினைவோடு ஏற்படக்கூடிய சொப்பனாவஸ்தைக்குத்தான் அனுமானம் என்ற பெயரோ?” என்று கதை வலு சேர்க்கிறது. அனுமானத்தின் அடுத்த பாய்ச்சலாக ஆசைகள் அனைத்தும் கனவு உரு கொள்வது, “நினைவோடு கூடிய எண்ணத்துக்குச் 'சிந்தனை' என்று பெயர். தூக்கத்தில் ஏற்படும் பிரக்ஞையற்ற எண்ணத்துக்கும் பெயர் உண்டா? உண்டானால் 'கனவு' என்பதுதான் அந்தப் பெயர்.” என விளக்கப்படுகிறது. 


      கனவில் வரும் ஒரு பகுதியை வைத்து கனவின் எல்லை எதுவரை சென்றுள்ளது என்பதை அளவிடலாம்.

"நாமிருவரும் ஜோடியாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டால் என்ன?" எனக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. ஆனாலும் மகிழ்ச்சி. யாராவது கரும்பு தின்னக் கூலி கேட்பார்களா? மகிழ்வால் பொங்கும் என் மனத்தைச் சமாளித்துக் கொண்டே, "அதற்கென்ன? எடுத்துக்கொண்டால் போயிற்று! பாலுவையும் உன் தங்கையையும் கூட உட்கார்த்தி எடுத்துக்கொள்வோம்!” என்கிறேன்.” என்பதாக கனவின் எல்லை நீள்கிறது.


     கனவு முடிந்த மறுநாள் காலை கனவில் வந்த உறவுநிலையில் உள்ள பிழைகள் எல்லாம் உண்மைகளாகத் தெரியவரும் இடத்தில் பெரிய மாற்றம் கதாபாத்திரங்களின் உள்ளங்களுக்குள் நிகழ்கிறது. அந்த மாற்றம் சலிப்பாக மாறுவதை, “ஏ! பாழாய்ப்போன உண்மையே! காட்சியையும், அனுமானத்தையும், கனவுகளையும்விட நீ ஏன் இவ்வளவு கசப்பாக இருக்கிறாய்” என்ற வரி உணர்த்துகிறது.


      தனது இணையரை இழந்த ஆணும் பெண்ணும் திருமணம் முடிக்காத ஒருவர் தனது எஞ்சிய வாழ்க்கையில் துணையாக இருப்பதற்கு ஏன் ஆசைப்படுகிறார்கள் என்ற கேள்வியைத் திருத்தமாகக் கேட்கும் இந்தக் கதையில் நிகழும் சந்திப்பை எதிர்பார்ப்பின் வகைப்பட்ட சந்திப்பாகவே கருத வேண்டியுள்ளது.


கு. அழகிரிசாமியின் சந்திப்பு 


       கரிசல் வட்டாரப் பகுதிகளில் நிலவும் பஞ்சத்தால் ஊரிலுள்ள அசையும் அசையா சொத்துகளை விற்றுவிட்டு புலம் பெயர்ந்த ஒருவன் உறவுக்காரர் ஒருவரை சந்திக்க மீண்டும் வருவது தான் “சந்திப்பு”.


       பதினைந்து வருடங்களுக்கு முன் பஞ்சம் பிழைக்க சிங்கப்பூர், சென்னை முதலான தொழில்துறை நகரங்களுக்குச் சென்ற செல்லப்பா சாத்தூருக்கு அருகிலுள்ள தனது சொந்த கிராமத்திற்கு சின்னம்மாவைத் தேடி வருகிறான். சின்னம்மா என்று அழைத்தாழும் அந்தப் பெண் வேற்று சாதியைச் சார்ந்தவளாக இருக்கிறாள். அக்கம் பக்கம் பழகும் தன்மையால் சின்னம்மா ஆகிய பெண்ணைப் பார்ப்பதற்காக செல்லப்பா தூர பிராயணம் மேற்கொண்டு சொந்த ஊருக்கு வருகிறான். நடுவில் திருநெல்வேலி முதலான இடங்களில் தன்னுடைய சொந்த வேலையை முடித்து விட்டு ஊருக்குள் செல்லும் அவனுக்கு நிகழ்ந்த அதிர்ச்சி அடுத்தக்கட்ட கதையாகிறது. வழக்கமாக வசித்த வீட்டை சொந்தக்காரர்களிடம் விற்றுவிட்டு சின்னம்மா விதவையாக வேறொரு குடிசையில் தங்கியிருக்கிற செய்தியை அறிந்து அங்கு போகிறான் செல்லப்பா.


     சின்னம்மாவின் சந்திப்பானது “அவள் திரும்பிப் பார்த்தாள். அவளுடைய பார்வையில் திகைப்பில்லை. பிரகாசமும் இல்லை. வறட்சி தான் இருந்தது. வறண்டு போன வெறித்தப் பார்வை” இப்படியாக நிகழ்கிறது. செல்லப்பாவை அடையாளம் கண்டு கொண்டாலும் முகத்தில் சலனமின்றி உணர்ச்சியை அடக்கிக்கொண்டு வலியில் வழியில் சாதாரணமாக நடக்கும் சின்னம்மா, செல்லப்பா போய்ட்டு வாரேன் என இரயிலடிக்குத் திரும்பும் போது செல்லப்பா என அலறி அழுகிறாள். பின் இருவரும் பேசுகின்றனர். அவள் வீட்டில் தங்கிச் செல்லலாம் என வந்த செல்லப்பா உதவி செய்து விட்டு பசியுடன் ஊருக்குத் திரும்புகிறான். பசியுடன் திரும்பினாலும் சின்னம்மா உடனான சந்திப்பு, “துயரம் நிறைந்த நெஞ்சில் எனக்கு இப்படி ஓர் ஆறுதலும் பிறந்தது: பதினைந்து வருஷங்களுக்கும் பிறகு என் சின்னம்மாவின் பூத உடலையும் பார்த்துவிட்டேன். சின்னம்மாவையும் பார்த்து விட்டேன். நான் செய்த தவப்பயன்.” என்பதாக இருக்கிறது.


ஒப்புமை:


       மூன்று சந்திப்பு கதைகளிலும் சந்திப்பு மீது ஆண்களுக்கே அதீதமான உடனடியான உணர்ச்சிக் கொந்தளிப்பு இருப்பது தெரிகிறது. கு.ப.ராஜகோபாலன் கதையில் நிகழும் எதிர்பாராத சந்திப்பு சுந்தரத்தை திக்கு முக்காட வைக்கிறது. நா.பார்த்தசாரதி கதையில் பாலுவின் தந்தைக்கு நிகழும் தற்செயலான சந்திப்பே பின் வில்லங்கமான கனவாக மாறுகிறது. கு.அழகிரிசாமி கதையில் செல்லப்பா சின்னம்மாவைப் பார்க்க வேண்டுமென்ற திட்டத்தோடு சிரத்தையெடுத்து கிளம்பி வருகிறான்.


      கண்ணீர் வடிக்கும் பகுதிகள் மூன்று கதைகளிலும் பொதுவான அம்சமாகும். கண்ணீர் வெளியேறும்போது மனதில் அழுந்திக் கிடக்கும் வலிகளும் சேர்ந்தவாறே வெளியேறுகிறது. அது இந்த மூன்று கதைகளிலும் வெவ்வேறு அளவுகளில் நிகழ்கிறது. சிலரை வாழ்வில் சந்திக்காமல் இருந்திருந்தால் வாழ்வின் போக்கு தற்போதைய நிகழ்காலத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்திருக்கும் என்ற கூற்றை பலரிடம் இருந்து நான் பெற்றுள்ளேன். சில சந்திப்புகள் சிலரது வாழ்க்கை நுழைவுகள் ஆயுள் முழுவதும் நீங்கா நினைவாகத் தங்கி அலைக்கழிக்கும் பேராற்றல் கொண்டு விளங்கும் நிலை இன்றளவும் நீடிக்கிறது. துன்பகரமான புறச்சூழல்கள் நெருங்கி நின்று கழுத்தை நெறிக்கும் சூழலில்கூட நம்மைச் சிரிக்கத் தூண்டும் நினைவைக் கிளர்வதாக சிலரது வருகை இருந்து விடுவதுண்டு. கு. அழகிரிசாமியின் சந்திப்பு சிறுகதையில் வரும் சின்னம்மாவின் நினைவு அப்படியானது. நினைவிலிருந்து நிகழாட்டத்திற்கு வரும் இடத்தில் தலைகீழ் மாற்றம் நிகழ்ந்து இயலாமையின் தகிப்பில் கண்ணீருடன் அரற்றல் ஒலி கூடுகிறது. நிகழ்நிலையில் செல்லப்பா ஏமாற்றம் அடைகிறான்.  இதிலிருந்து மாற்றாக மகிழ்வில் துள்ளிக் களிக்கும் ஒருவனின் முகம் தொங்கிக் கீழே விழுமளவு சோகம் பீடிக்க வைப்பதாகவும் சந்திப்பு குறித்த சில நினைவுகள் அமைந்து விடுவதுண்டு. 


      கு.ப.ராஜகோபாலனின் கதை கணவன், மனைவி இருவருக்கு இடையிலான சந்திப்பு. தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளிவந்த அழகி, களவாடிய பொழுதுகள் மற்றும் சேரன் இயக்கத்தில் வெளிவந்த ஆட்டோகிராப் முதலான படங்களில் இந்த கதையில் வரும் சந்திக்கும் தருணங்களை புலன்காட்சியாகப் பெறலாம். கையும் காலும் ஓடாத படபடப்பும் திடுக்கிடுதலும் சுந்தரம் என்ற பெயரைக் கேட்டவுடன் ருக்மிணிக்கும் ருக்மிணியைப் பார்த்தவுடன் சுந்தரத்திற்கும் வருகிறது. அடிமேல் அடிவாங்கி சடமாக கிடந்த ருக்மிணியின் மனதிற்குள் உயிர் இருக்கிறது என எக்மோ சிகிச்சையளித்து கண்ணீரை வரவழைக்கும் இடத்தில் மன இறுக்கம் உடைபடுகிறது.


      நா.பாரத்தசாரதியின் சந்திப்பு கதையில் வேட்கையே சந்திக்க வைக்கிறது. உண்மை பகுதியில் வெளிப்படும் வாழ்க்கை உண்மைகள் பிரிவு நிகழக்கூடிய சாத்தியங்களை ஏற்படுத்துகிறது. இக்கதையில் நேரடியாக கண்ணீர்த் துளிகள் சிந்தப்படுவதற்கு மாறாக கூச்சலும் கண்ணீருக்குப் பின் பாரத்தை இறக்கி விட்டு மிதப்பது போன்ற உணர்வுக்கு ஆட்படுவதற்கு ஒத்த நிலையும் ஏற்படுகிறது. அவர்கள் இருவரும் அதிகம் பழகாததால் கண்ணீர் கொண்டு சந்திப்பை முறிக்க வேண்டிய நிலை ஏற்படாமல் இருந்திருக்கலாம். 


      நா.பார்த்தசாரதியின் சிறுகதையில் நிகழும் சந்திப்பு முதல் சந்திப்பு. ஒருவேளை சில வருடங்களுக்குப் பின் இரண்டாவது சந்திப்பு நிகழ்ந்தால் அவர்களுக்கும் அழுகை வர வாய்ப்புண்டு. பிற இரண்டு கதைகளில் கு.ப.ராவின் சிறுகதை கணவன், மனைவி சந்திப்பு. கு.அழகிரிசாமியின் சிறுகதை தொட்டுத் தூக்கி வளர்த்த சின்னம்மாவுடனான சந்திப்பு. பழக்கமானவர்களின் சந்திப்புக்கும் சந்திப்புக்குப் பின் பழக விரும்புவதற்கும் இடையிலான வேறுபாடுகளை இக்கதைகளுக்கிடையிலான இணைமுரண்களாக கருதலாம்.


       சந்திப்பு நிகழக்கூடிய காலங்கள் எதிர்பாரதது, தற்செயலானது, எதிராபார்ப்புடன் செல்வது என்ற மூன்று நிலைகளில் அமைந்தாலும் கிடைக்கும் வெளியீட்டுப் பலன் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கிறது. எட்டு வருடங்களுக்குப் பின்னான சந்திப்பு கு.ப.ராஜகோபாலன் சிறுகதையிலும் பதினைந்து வருடங்களுக்குப் பின்னான சந்திப்பு கு.அழகிரிசாமி கதையிலும் மூன்றரை வருட இல்லற வாழ்க்கைக்குப் பின் இறந்த மனைவியின் நினைவிலிருந்து மீண்டு காதல் வயப்படும் சந்திப்பு நிகழ்வதாக நா.பார்த்தசாரதியின் சிறுகதை உள்ளது.


      பிரிவுக்குப் பின்னே சந்திப்பு நிகழ்கிறதென்றால் பிரிவு முதன்மைக் கூறாகிறது. கு.ப.ராஜகோபாலன் கதையில் ருக்மிணி தந்தையின் மூலம் ருக்மிணி மற்றும் சுந்தரம் குடும்ப வாழ்க்கையிலிருந்து பிரிகின்றனர். நா.பார்த்தசாரதி கதையில் பாலுவின் தாய் சரோஜா இறப்பதன் மூலம் முதல் பிரிவும் திருமணம் சார்ந்த உண்மைகளை அறிந்தபின் அதிர்ச்சியுடன் கூடிய இரண்டாம் பிரிவும் நிகழ்கிறது. கு‌.அழகிரிசாமி சிறுகதையில் பஞ்சம் செல்லப்பாவையும் சின்னம்மாவையும் பிரிக்கிறது.


      சமூக அடுக்கில் கு. அழகிரிசாமியின் சிறுகதையில் பஞ்சத்தால் பிரியும் நிலை கிராமத்திலிருக்கும் செல்லப்பாவுக்கு வருகிறது. கதையின் முடிவில் பணத்தால் பஞ்சத்தைச் சரிசெய்ய முயல்கிறான். கு.ப.ராஜகோபாலன் சிறுகதையில் பஞ்சம் முதலான பொருளாதார காரணங்கள் பிரிவுக்கு காரணமாவதில்லை. ருக்மிணி மருத்துவராகவும், சுந்தரம் தலைமை செயலக ஊழியராகவும் இருப்பது கதையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாறாக, தந்தை குறுக்கீடாக நிற்கிறார். அவரது மரணத்திற்குப் பின் இணைவு நிகழ்கிறது. நா.பார்த்தசாரதி சிறுகதையில் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க முடியுமென்கிற நம்பிக்கை பிறந்து உடனே உடைகிறது. இதன் மூலம் மேலே குறிப்பிட்ட இரண்டு கதைகளிலிருந்து நா.பார்த்தசாரதியின் சந்திப்பு சிறுகதை மாறுபடுகிறது. 


      மரணம் மூன்று கதைகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. கு.ப.ராஜகோபாலான் சிறுகதையில் ருக்மிணியின் தந்தையும் சுந்தரத்தின் இரண்டாம் மனைவியும் மரணிக்கின்றனர். நா‌.பார்த்தசாரதி சிறுகதையில் பாலுவின் தாய் சரோஜா மரணித்தவள். கு.அழகிரிசாமி சிறுகதையில் சின்னம்மாவின் கணவர் மரணித்து விடுகிறார். இப்படிப்பட்ட மரணங்கள் கதையின் நகர்வைத் தீர்மானிக்கும் முக்கிய புள்ளிகளாக இருக்கிறது.


நான்கு பகுதிகள்


      நா.பார்த்தசாரதி எழுதிய சந்திப்பு சிறுகதை காட்சி, அனுமானம், கனவு, உண்மை என்கிற நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதை முன்னரே பார்த்தோம். அந்த நான்கு வகையிலான பிரிப்பு முறையானது கு.ப.ராஜகோபாலன் மற்றும் கு.அழகிரிசாமி சிறுகதைகளிலும் பொருந்தி வருகிறது. 


     கு.ப.ராவின் சிறுகதையில் அனுமானம், காட்சி, கனவு, உண்மை என்கிற வரிசைமுறை அமையப்பெற்றுள்ளது. எஸ்.சுந்தரம் - சீப் ஸெக்ரடேரியட் க்ளார்க் என்ற முகவரியுடன் வரும் காகிதத்தைப் பார்த்த ருக்மிணி தனது கணவனாகத் தான் இருக்கும் என தனக்குள்ளேயே அனுமானம் செய்கிறாள்.


     ருக்மிணியைப் பார்த்து சுந்தரம் திடுக்கிடுகிறான். இருவருக்கும் இடையில் காட்சி பரவும் போது சுந்தரத்திற்கு ஏற்படும் உணர்வு ருக்மிணிக்கு ஏற்படவில்லை. கடிதத்தைப் பார்த்தவுடனேயே அவளுக்குள் உதித்த அனுமானம் காட்சியின் போதான உணர்வைத் தனக்குள் புதைத்துக்கொள்ள உதவுகிறது.


     நீலப்பட்டுப்புடவை அணிந்து குங்குமம் வைத்துக்கொள்கிறாள் ருக்மிணி. இந்தப் பகுதியை அவள் தான் மீண்டும் மணவாழ்க்கைக்குள் செல்வதாக தனக்குள்ளேயே கனவு காண்பதாக எடுத்துக் கொள்ளலாம்.


     ருக்மிணி கண்ட கனவு உண்மையாகும் இடமாக சுந்தரத்தின் இரண்டாம் மனைவி சுந்தரத்தையும் ருக்மிணியையும் சேர்த்து வைப்பதாக கதை முடிகிறது.


     நா.பார்த்தசாரதியின் சந்திப்பு கதை நான்கு தனித்தனி தலைப்புகளாக பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நான்கு வகைப் பிரிப்பு நிலைகளின் வாயிலாகவே கதை நகர்கிறது என்று சொல்லலாம்.


      காட்சி பகுதியில் சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு பெண்ணைப் பார்க்கும் காட்சி வருகிறது. காட்சிக்குப் பின் ஏன் அவள் தனியாக வந்திருக்கிறாள்? அவளுடன் இருக்கும் குழந்தை யார்? போன்ற கேள்விகள் மனதிற்குள் கேட்கப்பட்டு அனுமானமான விடைகளை பாலுவின் அப்பா பெற்றுக்கொள்கிறார். அனுமானத்தைத் தனக்கு சாதகமானதாக அமைத்துக் கொண்டவர் அதன் வழியே அந்தப் பெண்ணுடன் ஒன்றாகப் பயணிப்பதாக கனவு காண்கிறார். கனவிலிருந்து விழித்த மறுநாள் காலையில் தாயில்லாக் குழந்தையின் தகப்பனும் தகப்பனில்லாக் குழந்தையின் தாயும் ஒருவருக்கொருவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். கதையின் இறுதிப் பகுதியில் வரும் உண்மையால் கனவு உடைகிறது.


     கு. அழகிரிசாமியின் சந்திப்பு சிறுகதையில் அனுமானம், கனவு, உண்மை, காட்சி என்கிற வரிசைமுறை அமையப்பெற்றுள்ளது. சின்னம்மாவை எத்தனை முறை நினைத்திருப்பேன் என்கிற அனுமான எண்ணத்துடனே கதை தொடங்குகிறது. சின்னம்மா தன்மீது கொண்டிருந்த பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக சொல்ல விரும்பாத கனவைக் கண்டு துடிதுடித்து நடு இரவில் தன்னைப் பார்க்க வந்தாள் என்பதாக சிறுவயதில் நிகழ்ந்த சம்பவம் நினைவுகூறப்படுகிறது. இந்த நினைவுக்குள் சின்னம்மா கண்ட கனவும் பெரிய தேள் ஊர்ந்து கொண்டிருந்தது என்கிற கனவையொட்டிய உண்மையும் சேர்ந்தவாறு வருகிறது. கதையின் இறுதிப் பகுதியில் வறண்டு போன வெறித்தப் பார்வையைக் கொண்ட காட்சியுடன் சந்திப்பு நிகழ்கிறது. 



சந்திப்பு - மாக்சீம் கார்க்கி (தமிழில் -ரகுநாதன்)


      கார்க்கியின் சிறுகதை சந்திப்பு என்ற பெயரில் ரகுநாதனால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஏழை ஸ்டீபனும் பணக்கார பாலஷ்காவும் காதலித்துப் பிரிவதே இக்கதை. மேலே பார்த்த மூன்று கதைகளில் கு‌.ப.ராஜகோபாலன் சிறுகதையிலும் கு.அழகிரிசாமி சிறுகதையிலும் பிரிவுக்குப் பின்னான சந்திப்பு நிகழ்கிறது. நா.பார்த்தசாரதி சிறுகதையில் சந்தித்துப் பிரிகின்றனர். கார்க்கியின் சிறுகதை நா‌.பார்த்தசாரதியின் சிறுகதையில் வருவதைப் போன்ற சந்தித்துப் பிரியும் வகைப்பட்டது. 


      பிரியும்போது பாலஷ்கா ஓயாது அழுகிறாள். ஏற்கனவே அழுகை பற்றிய ஒப்பைமை செய்திகளைப் பார்த்தோம். இந்த கதையில் பாலஷ்காவின் அழுகை பாதிக் கதையை நிரப்பிவிடுகிறது.


     பணம் பிரிவிற்கான முதன்மைக் காரணம் ஆகிறது. கு.அழகிரிசாமி கதையிலும் புலப்பெயர்வு பஞ்சத்தால் நிகழ்கிறது. எனினும் கூட அகம், புறம் என்ற பிரிவு நிலைகளின் அடிப்படையில் இவற்றிடையே மாறுபாடு உண்டு.


     திருமணம், திருமணம் பற்றிய பேச்சுகள் சந்திப்பு கதைகளில் கவனிக்கத்தக்க அம்சமாகும். கு.ப.ராஜகோபாலன் சிறுகதையில் திருமணமானவர்கள் பிரிகின்றனர். நா.பார்த்தசாரதி சிறுகதையில் திருமணமாகி துணையை இழந்தவர்கள் என்ற காரணமும் சந்திப்பு பிரிவடையக் காரணமாகிறது. கார்க்கியின் சந்திப்பு சிறுகதையில் திருமணம் பற்றிய பேச்சு பிரிவுக்கு காரணமாகிறது.


நீலம் என்ற வண்ணம் கு.ப.ராஜகோபாலன் சிறுகதையிலும் கார்க்கியின் சிறுகதையிலும் வருகிறது.


“தானும் தன் அறைக்குச் சென்று ‘வாயில்’ புடவையைக் களைந்துவிட்டு நீலப் பட்டுப் புடவை ஒன்றை அணிந்துகொண்டாள்.” சந்திப்பு- கு.ப.ராஜகோபாலன் 


“மறுகணத்திலேயே உணர்ச்சி நிறைந்து ஒளி சிதறும் அவனது பிரகாசமான கண்கள் அந்தக் குமரியின் அகன்று விரிந்த நீலக்கருமணிகளில் படர்ந்துள்ள சோக பாவத்தைக் கண்டுவிட்டன.” சந்திப்பு - மாக்சீம் கார்க்கி (தமிழில் -ரகுநாதன்) 


      கு.ப.ராஜகோபாலன் சிறுகதையில் மகிழ்ச்சியின் குறியீடாகவும், கார்க்கியின் சிறுகதையில் சோகத்தின் குறியீடாகவும் நீலம் இடம்பெறுகிறது.


      சிந்தனையின் மீது நா.பார்த்தசாரதியின் சிறுகதையும் கார்க்கியின் சிறுகதையும் பார்வை செலுத்துகிறது. 


      “நினைவோடு கூடிய எண்ணத்துக்குச் 'சிந்தனை' என்று பெயர். தூக்கத்தில் ஏற்படும் பிரக்ஞையற்ற எண்ணத்துக்கும் பெயர் உண்டா? உண்டானால் 'கனவு' என்பதுதான் அந்தப் பெயர்.” சந்திப்பு -நா.பார்த்தசாரதி


        “நீர்ப்பரப்பின் மீது நிலைத்துநின்ற அவளது கண்கள் தீக்ஷண்யமும் திடமும் கொண்டு சிந்தனை வயப்பட்டிருந்தன.” சந்திப்பு -கார்க்கி (தமிழில் ரகுநாதன்)


      சிந்தனை என்றால் என்ன? சிந்தனை வயப்படும் அனுபவம் எப்படியானது என்பதை இவ்விரு பகுதிகளையும் ஒப்பிட்டு அறியலாம்.


     சந்திப்பு கதைகளில் நிகழும் சந்திப்புகளைக் குறித்து மேலே பேசியுள்ளோம். கார்க்கியின் சிறுகதையில் “அந்தப் பெண் அவனை பரிபூரணமாகப் பார்க்காது முகத்தை லேசாகத் திருப்பிக்கொண்டு தணிந்த குரலில் பேசினாள்:” என்பதாக சந்திக்கும் காட்சி வருகிறது. 


எடுத்தாளப்பட்டவை:


  • கு.ப.ரா சிறுகதைகள் முழுத்தொகுப்பு, பதிப்பாசிரியர் பெருமாள் முருகன், டிசம்பர் 2019, காலச்சுவடு. (சந்திப்பு- கலைமகள், ஜூன், 1942)

  • நா. பார்த்தசாரதி சிறுகதைகள் இரு தொகுதிகள், தொகுப்பு ந.அகிலன் கண்ணன் 2005, தமிழ்ப் புத்தகாலயம். (கல்கி, ஜூன், 1957)

  • கு.அழகிரிசாமி சிறுகதைகள் முழுத்தொகுப்பு, பதிப்பாசிரியர் பழ.அதியமான்,  டிசம்பர் 2019, காலச்சுவடு ( சந்திப்பு -தாமரை, ஜூன், 1960)

  • சந்திப்பு சிறுகதைகள் -மாக்சீம் கார்க்கி (தமிழில் தொ‌.மு.சி. ரகுநாதன்), 2020, தேநீர் பதிப்பகம்.

Comments

Popular posts from this blog

கூதிர் பருவம் -2 (பிப்ரவரி -2024)

கூதிர் பருவம் -4, ஏப்ரல் 2024

கூதிர் பருவம் – 3, மார்ச்- 2024