அரா கவிதைகள்

 அரா கவிதைகள் 

பரந்து விரிந்த தோளும்

வியர்வை வடியும் தோலும்

அம்சமாக அமையப் பெற்ற

மரம் வெட்டுபவனின்

பழுத்துப் போன விரல்களின் பிடியில்,


வேகமாய் நகர்ந்த கோடாரி

வேங்கை மரத்தை சாய்க்க

மரத்தின் மத்தியில்

கூடு கட்டியிருந்த குருவி

குமுறி அழுது பறந்தது..


அந்த மரத்தைத் தொட்ட

ஆசாரியின் உளி இசையுடன்

ஒரு குருவிக் கூட்டை

கட்டி முடிக்கும் முன்பே

குருவிக் குஞ்சுகள் பறந்தது..


நிலைக் கதவின் ஓரத்தில்…

*****


அழுக்கு மண்டிய தோளில்,

கட்டுக்கட்டாய் சுமந்திட்ட

நிலைப்பாடு எல்லாம்

கரைந்தவாரே கடலினை

எதிர்நோக்கும் அந்த நொடி..

காலத்தின் பகடியாட்டம்!

*****


இடையில் சொருகிய சுருக்குப் பையின்

இத்துப்போன நூல் திரிந்த துரிதத்தில்,

இங்கும் அங்கும் சுற்றிய ஈரனாவின்

இடைவிடா அலைச்சல் ஓய்ந்தது..


பாக்கை மென்று ஒதுக்கி விரலிடையில்

ப்ளிச் என்று துப்பிய கிழவனின்

பொக்கை வாய் டப்பென மூடியது

பட்டணத்தைச் சுற்றியுள்ள கண்களால்..


பழைமை அடிபட்டு பட்டணங்களில் ஊற

அட்டைகளில் அசலும் எண்களில் முதலும்

தேய்ந்து சுருண்டு உதட்டு இடுக்கில் 

போதை தலையிலேற

கண்கள் சுருங்கி விரிகிறது


மூடித் திறந்து பார்க்கும் 

ஒவ்வொரு முறையும் 

ஒரு கிலோமீட்டர் தள்ளிச் செல்கிறாய்


எத்தனை முறையென எண்ணிமுடிப்பதற்குள்

சில்வர் பெட்டியிலிருந்த கார்டுகள் குலுங்குகிறது.


இரண்டாயிரம் ரூபாய் பறக்க

அனல் காற்றுடன் மீண்டுமோர் திறப்பு

******


அந்த காட்டுக் குரங்கை

குத்த வந்த அம்பு

குடைந்து விட்டது


இறுக்கிப் பிடித்து பிடுங்கிய

கூரின் ஓரத்திலோர் நமட்டல்

நையப் புடைத்த கொல்லனின்

கைவண்ணத்தில்

தீட்டுதலின்றி சம்மட்டி அடிக்கப்பட்டிருக்கிறது


துளையின் விட்டத்தில்

பொசு பொசுவென

இரத்தம் நதியாக பாய

நரம்பு வழிவிட்டது..


வெறிச்சோடிய வனத்தில்

அந்தக் குழந்தையின் கண்ணீர் உறைந்து 

கருஞ்சிவப்பு பிசினாக தொங்கி நிற்க

குளம் உப்பரித்தது..

******


கூட்டில் போட்ட முட்டையை

அடையில் அமர்ந்து

குஞ்சு பொரிக்கும் முன்னே,


சாலையின் சூட்டில் விழுந்து

எண்ணெயாக மிதந்த தாரினுள்

பொரிக்கப்பட்டது தாய் பறவை


இறகுகள் மேலே மிதக்கிறது

வண்ணக்கலவைகளோடு செத்த பறவைக்குள்

பிக்காசோ உயிரடைந்து

தூரிகைகள் ஏந்தியவானாக

பார்த்து பார்த்து சிரிக்கிறான்


அவன் வரைவதற்குள் பறக்கும் வண்ணங்களுக்குள்

பறவை இல்லை

ஏதோ ஓர் ஈட்டி படுவேகமாக

சிலம்பி சிலம்பிச் சுற்றி

சிலந்தி வலைகளைக் கிழித்து

சிறைபட்டுச் செத்த 

இராணித் தேனியின் உடலைத் தூவுகிறது


பௌர்ணமி நாளில் கொட்டிய

எண்ணற்ற வண்ணங்களுக்குள்

ஈட்டியை அலகில் கொத்திய பறவை

கரகரவென்று கரணமிடும் வேளையில் 

பல்லி ஒரு முட்டையைப் போட்டது

******


அன்பை நகலெடுக்க ஆசைப்பட்டு

கீச்சிடும் எலிகள் வசித்த

அந்த தூசு நிரம்பிய 

பழைய நகலெடுப்பு இயந்திரத்தில்

கண்ணைக் கட்டி இழுத்த

வண்ணத் தாளை சொருகினேன்..

வர்ணத் தாள் வண்ணமிழந்து

கருப்பு வெள்ளை தாளாக மாறிட

அந்த மங்கலான விளக்கும்

தன் ஒளியை நிறுத்தியது..

அந்த சமயத்தில் அடித்திட்ட 

வேனிற் காற்றின் வீச்சில் 

கருப்பு வெள்ளை தாளும்

கருகிச் சாம்பலானது..

******


நேரத்தைப் பற்றியதொரு தத்துவம்

நெடுநாட்களைக்குப் பின்

நினைவில் வர

நொடிகளை எண்ணத் தொடங்கினேன்

நிமிடங்களையும் எண்ணினேன்

அதில் ரம்பத்தின் அறுவைச்சத்தமும்

கொட்டாப்புளி உளிமீது விழும் சத்தமும்

ஓயாமல் கேட்டுக் கொண்டேயிருக்க

ஒரு மரம் நிலையாக மாறிக்கொண்டிருந்தது

எண்ணிய நிமிடங்களும் நொடிகளும்

இப்போது நினைவில் இல்லை

அந்த தத்துவமும் மறைந்து போனது

நிலையாவது மறையாமல் நிலைத்திருக்கட்டும்..

******



Comments

Popular posts from this blog

கூதிர் பருவம் -2 (பிப்ரவரி -2024)

கூதிர் பருவம் -4, ஏப்ரல் 2024

கூதிர் பருவம் – 3, மார்ச்- 2024