கூட்டைத் துறந்த நத்தை - ஜெ. காமாட்சி காயத்ரி

கூட்டைத் துறந்த நத்தை - ஜெ. காமாட்சி காயத்ரி “உலகின் பல்வேறு நாடுகளில் பிறந்த கவிஞர்கள், பண்பாட்டின் அரசியலை, தத்துவத்தை, வாழ்வியலைத் தம் மொழியில் செதுக்கியிருக்கின்றனர். இப்படியான கவிஞர்கள் மொழிபெயர்ப்பு வாயிலாக உலகின் மூலைமுடுக்கெங்கும் வாசிக்கப்படுகின்றனர். இவர்களின் தாக்கம் உலகத்தை அதிரச்செய்கிறது. இப்படியான கவிகளில் சிலர் என் வீட்டின் சன்னலைத் திறந்து வெளிச்சமாகவும், காற்றாகவும் நிரம்பினர். கடல் தாண்டி என் வீடு வந்து என் கால்களை நனைத்த அலைகள் அவை. இத்தொடர் உலகக் கவிதை என்ற பேரியக்கத்தின் ஒரு பகுதியைப் பற்றிய எனது புரிதல். உலகளாவிய கவிமனத்தை அறிதலுக்கான எனது தேடல்” என்ற முன்குறிப்போடு இந்தத் தொடரை இன்பா தொடங்குகிறார். கடல் தாண்டி அவர் கால்களைக் கவிதைகள் நனைத்தது போல் ‘கடல் தாண்டிய சொற்கள்’ என்ற தொடர் கவிஞர்களையும், கவிதைகளையும் கடல், காற்று, நிலம் தாண்டி நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளது. மற்ற புனைவு இலக்கியங்களை விட கவிதைகளே நுண்ணுணர்வுகளை மிக நுட்பமாக படம் பிடித்துக் காட்டும். தினமும் வாழ்ந்து கொண்டிருக்கும் எதார்த்த வாழ்வில் இருந்து தப்ப...