தீனன் கவிதைகள்
தீனன் கவிதைகள்
சாலையைக் கடக்கும் கிழவிக்கு
கைபிடித்துதவ ஒருவருமில்லை
வெடிமருந்துகளில் தீ உரச
அவளின் தள்ளாட்டங்கொண்ட கையெலும்புகள் பொருத்தமாய் இருக்கலாம்
பிரசவ வலியில் கூச்சலிடும் கர்ப்பிணியின் வாய்க்குள்
அழுக்குத் துணியொன்றை திணித்தபடி வன்புணரும்
மருத்துவமனை ஐனக்கூட்டம்
செல்ஃபிக்கு அழைக்கிறது
கோணித்துணியில் முகம் மறைத்து அறுபது டிகிரி தீக்காயங்களோடு
உடல் நோக நடந்து வந்த
குருட்டுச் சிறுவன்
தெரு நடுவே மண்டியிட்டு
தன் பாலினத்தை அறிவித்தான்
சுவர்க்கிறுக்கல் ஓவியத்தின்
படர்க்கைக் கோடுகளினால்
ஞாபகத்தை மீட்டெடுத்த
தொண்டுக் கிழவர்
ஒற்றைக் காலில் நொண்டியடித்து
ஹேன்ட் பேக் சுமந்த யுவதிமீது எச்சிலுமிழ்ந்து
ஐ லவ் யூ சொன்னார்
சொற்களுக்கிடையே இடைவெளி விடுவதால்
பொறுமையிழந்த மாணவன் ஒருவன்
நிறுத்தற்குறிகளால் பைத்தியமான தமிழாசிரியன் மேல்
திராவகம் ஊற்றினான்
கலிங்கத்துப்பரணி பேய்களனைத்தும்
புத்தகத்தினின்று விடுதலை பெற்று
தலைகீழாக வகுப்பறைச் சுவர்களில்
ஒன்றோடொன்று புணரத் தொடங்கின
இணை கிடைக்காத பேய்க்கணம் ஒன்று
ழகரம் வராத மாணவி நாவில்
அழுது சிவந்த கண்களைப் பிடுங்கி
ஒத்தடமிட்டுப் பெருமூச்செரிந்தது
முன்னாள் காதலி
திருமணக்கோலத்தை
நினைவிலிருந்து அழிக்கும் அளவுக்கு
எலி மருந்துக்கு வல்லமை இல்லை
துவாரங்களனைத்தும் தனிமையில் அழுக
பூமிக்குள் அழுகிய
பிணங்களின் முதுகில்
எலும்பினைத் தேடி நெழிந்துகொண்டிக்கும்
அழுக்குப் புழுக்களின்
இருப்பை அறியாமல்
பிரபஞ்சக் கோட்பாடு
பூர்த்தி காணாது
அங்கங்கள் அனைத்திலும்
சேமித்த துக்கத்தை வாய்விட்டலற ஆம்புலன்சுக்கேனும்
இரக்கம் இருக்கின்றது
நகரங்கள் கடந்த சுடுகாடொன்றில்
பேரிடராக அறிவிக்கப்பட்ட
காதல் தோல்வி
பிணங்களுக்கிடையில் சவக்குழியொன்று
காத்திருக்கிறது
வாசனை பிடிக்கும்
சொறி நாயொன்று
தொங்கிய நாக்குடன்
பூமியில் புரள
அருவருப்பூட்டும் ஞாபகப் புண்கள் ஆங்காரித்தோங்கிய கலவியின்போது
வலுவலுப்பான கழுத்தின் அண்மையில் கண்ணீர் சுரந்த
நாட்களின் உப்பை
பேராவலோடு நக்கத் தொடங்கினேன்
திருமணக்கோலத்தில்
முன்னாள் காதலி
சாலையில் பார்த்த
பூதக் கிழவி
தொண்டையில் கசந்த எலிமருந்தோடு
பிளேடில் சிதைத்த கை நரம்புக்குள்
பட்டணம்பொடியை அடைத்திருக்கின்றாள்
மருத்துவமனையின்
கொச்சைச் சூழலில்
பட்டணம்பொடியின் போதைச் சுகத்தில்
கண்ணீரில் கரையும் முகப் பூச்சோடு
முன்னாள் காதலி குழைந்தழுகின்றாள்
மன்னிப்பை இரைஞ்சும் பழகிய குரல்கள்
அண்மித்திருக்கும்
பெண்மையின் வாசனை
கூந்தலில் காயும்
பூக்களின் சுவாசம்
ஸ்ட்ரச்சரில் உருளும்
மரணத்தின் ஓலம்
எலிமருந்துக்களித்த
இனிமா எல்லாம்
மறுவழியற்ற துயிலுக்குள் தள்ள மயக்கத்திலிருந்து விழிக்கும்போது
டாக்டரைத் தவிர ஒருவருமில்லை.
கசங்கிய பூக்களும் தெர்மாமீட்டரும்
ஊன்றி நடக்கும் கைத்தடியொன்றும்
பாதி முடிந்த பட்டணம்பொடியும்
செவிலியின் பெர்ஃப்யூம் வாசனையோடு
உருவமழிந்து அர்த்தமிழந்தன
செங்குத்தான மலைப் பிரதேசத்தில்
கைவிடப்பட்ட பழங்கோவிலொன்றில் பெயரில்லாத சாமியின் சிலைக்கு
இடப்புறம் இருக்கும்
நான்காம் தூணில்
கிறுக்கலில் எழுதிய
பெயர்கள் இரண்டும்
கள்ளமில்லாமல்
புன்னகைக்கின்றன.
******
உதடுகள் கிழிந்த
இளம் பெண்ணொருத்தி
கல்லறைத் தெருவுக்கு
வழிகேட்டு வந்தாள்
கத்தியில் அறுத்த
காயங்கள் முதிர்ந்து
கன்னமிரண்டும் வீங்கியிருந்தன
நெற்றியில் ஒட்டிய
பேண்டைடில் இருந்து
மஞ்சள் மருந்து
வலிந்து கொண்டிருந்தது
மன்னிப்புக்கு இரைஞ்சும் பாவனையோடு
கைகளிரண்டும் காற்றில் தொங்கின
ஆடை கிழிந்து அங்கங்கள் தெரிய
நெஞ்சுக்குள்ளிருந்து முனுமுனுப்பதுபோல்
சீரான சப்தத்தில்
கேவல்கள் பிறந்தன
நிச்சயமற்ற பாவனையோடு
தெரியாது என்றே
சொல்லியிருப்பேன்
யோசனைச் சிறைகளின்
கூச்சல்களாகி
எண்ணங்கள் இரைஞ்சிய
பாதையின் ஊடாய்
சுயநினைவழிந்து
அவளுடன் நடந்தேன்
தேடலைத் தாண்டிய
பிரதேசமொன்றில்
மனித சதைக்காய் காத்திருந்தது போல்
கல்லறைத் தெருவின் வழிகள் திறந்தன.
பெண்ணுக்குள்ளிருந்து ஜனனமெடுத்து
பெண்ணுக்குள்ளிருந்து ரத்தமருந்தி
பெண்ணுக்குளொடுங்கும் ஊன் பிறப்பாகி
மானுடக் கீழ்மைகள்
யாவையும் சுமக்கும்
தன்னுடல் மறந்து
என்னுடல் திண்ணும்
சுயநரகத்தின் வேதனையனைத்தும்
ரூபம் சிதைந்த பெண்ணுருவாக
என்னருகில் அந்த கல்லறைத் தெருவில்
மரணத்தை இறைஞ்சி
நின்றிட கண்டேன்
எச்சிலுக்குப் பதிலாய்
இரத்தத்தைச் சுரக்கும்
குரூரத்தின் நுனியிட்ட
நாவினை நீட்டிட
கிழிந்த உதடுகள்
அறுந்து விழுந்திட
மரணத்தைப் பிறப்பிக்கும்
முத்தத்தைச் சுவைத்து
அகலத் திறந்திட்ட
பூமிக்குள் இருவரும்
உயிர்வலி ஒடுங்கிய
மொளனத்தில் புதைந்தோம்.
இரைச்சலடங்கிய
கல்லறைத் தெருவும்
எங்கள் முத்தத்தின் பூரிப்பில்
நிசப்தித்திருந்தது.
******
https://www.instagram.com/p/DJk_gUWyLAT/?igsh=YzljYTk1ODg3Zg==
https://www.instagram.com/p/DJldNzCyuNP/?igsh=YzljYTk1ODg3Zg==
Comments
Post a Comment