கூட்டைத் துறந்த நத்தை - ஜெ. காமாட்சி காயத்ரி
“உலகின் பல்வேறு நாடுகளில் பிறந்த கவிஞர்கள், பண்பாட்டின் அரசியலை, தத்துவத்தை, வாழ்வியலைத் தம் மொழியில் செதுக்கியிருக்கின்றனர். இப்படியான கவிஞர்கள் மொழிபெயர்ப்பு வாயிலாக உலகின் மூலைமுடுக்கெங்கும் வாசிக்கப்படுகின்றனர். இவர்களின் தாக்கம் உலகத்தை அதிரச்செய்கிறது.
இப்படியான கவிகளில் சிலர் என் வீட்டின் சன்னலைத் திறந்து வெளிச்சமாகவும், காற்றாகவும் நிரம்பினர். கடல் தாண்டி என் வீடு வந்து என் கால்களை நனைத்த அலைகள் அவை. இத்தொடர் உலகக் கவிதை என்ற பேரியக்கத்தின் ஒரு பகுதியைப் பற்றிய எனது புரிதல். உலகளாவிய கவிமனத்தை அறிதலுக்கான எனது தேடல்” என்ற முன்குறிப்போடு இந்தத் தொடரை இன்பா தொடங்குகிறார். கடல் தாண்டி அவர் கால்களைக் கவிதைகள் நனைத்தது போல் ‘கடல் தாண்டிய சொற்கள்’ என்ற தொடர் கவிஞர்களையும், கவிதைகளையும் கடல், காற்று, நிலம் தாண்டி நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளது. மற்ற புனைவு இலக்கியங்களை விட கவிதைகளே நுண்ணுணர்வுகளை மிக நுட்பமாக படம் பிடித்துக் காட்டும். தினமும் வாழ்ந்து கொண்டிருக்கும் எதார்த்த வாழ்வில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியை கவிதை காட்டும். தன்னுள் எண்ணிறந்த அர்த்தங்களை உள்ளடக்கி தனித்துவமாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும். சமுதாயத்தில் உள்ள மாறாத கருத்தாக்கங்களுக்கும் கட்டமைப்புகளுக்கும் எதிரான குரலை கவிதை வழி மிக ஆணித்தரமாக பேச முடியும்; கவிதைதான் அதைச் செய்யவும் முடியும் என நான் நம்புகிறேன்.
கழிவுகளைச் சுத்தப்படுத்தும் வேலையை கவிதை செய்யாது; சுத்தப்படுத்தச் சொல்லி புறமண்டையில் ஒரு அடி போடும். நாம் தினமும் கண்களால் பார்க்கும் நம் எல்லைக்குட்பட்ட நிலத்தில் வாழும் மனிதர்களின் பிம்பத்தை மட்டுமே உலகமென நம் மனம் நம்மை ஏமாற்றும். உலகின் ஓரங்களில் ஒடுக்கப்படுபவர்களின், கொத்துக்கொத்தாக அழிக்கப்படுபவர்களின் வலியை கவிதை வெளித்தள்ளும்போது இதயத்தின் இறுக்கம் அசைந்து கொடுக்கிறது. நமக்கு இதுவரை குடும்பமும், நண்பர்களும், சமூகமும் கற்பித்த பலவற்றை பொய்யென கவிதை நிரூபித்துக் காட்டும்.
நாடுகளில் மொழி வேறுபடலாம்; மனித மனத்தின் உணர்வுகள் மாறுவதில்லை. அதனால் தான், ஆப்பிரிக்கப் பின்னணியில் எழுதும் மாயா ஏஞ்சலோவின் கவிதைகளை வாசித்ததும் மனம் கசிகிறது. நெரூதாவின் கவிதைகளை வாசித்ததும் காதலிக்க வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. காதலித்தவர்களுக்கு காதலி அல்லது காதலனின் நினைவு குத்தி குடையத் தொடங்கி விடுகிறது. இனம், மொழி, தேச, வர்த்தமானங்கள் கடந்தும் மனித மனம் ஒன்றுபடுவதற்கு கவிதை தன்னையே அர்ப்பணிக்கிறது.
ஆண்டுகள் கடந்தும் ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல்- பாலஸ்தீனியம் போர் நடந்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியிலும், செய்தித்தாளிலும் மட்டும் போர் பற்றிய செய்திகளை அறிந்துகொண்டு அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அன்றாட அலுவல்களுக்கு சென்று விடுகிறோம். குண்டுவெடிப்பில் இறந்த குழந்தைகளின் அழுகைக் குரல்களும், நம்பிக்கையை இழந்த மனிதர்களின் கதறல்களும் நம்மை அடையும் முன்பே காதுகளை பொத்திக் கொள்கிறோம். தமிழ் ஈழ போராளிகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் இடையே கிட்டத்தட்ட 26 ஆண்டுகளாக நடைபெற்ற ஈழப் போரின் துயரங்களில் உள்நோக்கிய நகர்வுகளை வளர்த்தெடுத்த கமலா விஜயரத்னவின் கவிதைகள் இன்றைய சூழலிலும் மிகப் பொருத்தமானதாக உள்ளன. அதிகார வர்க்கத்தின் பேராசையால் போர் வீரர்களின் மூளைகள் மழுங்கடிக்கப்படுகின்றன. போர் வீரர்களின் குடும்பம் சமூகத்தில் சந்திக்கிற பிரச்சனைகள் பல. போரிடுவது தன் கணவனோ அல்லது தந்தையோ அல்லது சகோதரனோ என்றாலும் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் பிற உறவினர்களுக்கும் கூட மனிதநேயமற்றவர்கள் என்ற முத்திரை குத்தப்படுகிறது. வீரர்களின் குடும்பத்து பெண்கள் படும் சிரமங்களையும், அதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றிய நுண்ணியமான புரிதலையும் பதிவு செய்துள்ள சிங்கள கவிஞர் கமலா விஜயரத்னவின் கவிதைகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. உலகில் எங்கு போர் நடந்தாலும் இக்கவிதைகள் மனிதர்களோடு நம்மைத் தொடர்புப்படுத்தும்.
‘நான் என்னை
நான் என்று அழைத்துக் கொள்கிறேன்’ – கமலாதாஸ்
சுயம் மறந்து போன பெண்களுக்கு கமலாதாஸின் இந்தக் கவிதை வரி மிக அணுக்கமானது. நானும் அடுத்தவரிக்கு செல்ல முடியாமல் இவ்வரிகளிலேயே கட்டுண்டு கிடந்தேன். நான் யார்? நான் யார் என்று நான் சொல்லிக் கொள்ளும் பதிலில் உண்மையில் நான் இருக்கிறேனா? பிறந்ததிலிருந்து சமூக கருத்தாக்கங்களுக்கு (Conceptualization) தன்னை ஒப்புக்கொடுத்தும், சமூகக் கட்டமைப்புகளை மீறுவதற்கு பயந்தும் அதைத் தன் தலை மேல் ஏற்றிக்கொண்ட பெண்கள் தான் அதிகம். எழுத்தாளர் சுகுமாரன் தொகுத்த ‘லீலை - 12 மலையாள கதைகள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பில் மாதவிக்குட்டி என்ற பெயரில் கமலாதாஸ் எழுதிய ‘கடலின் விளிம்பில் ஒரு வீடு’ கதையை வாசிக்க நேர்ந்தது. கதையில் வரும் பெண் தன்னிடம் இசை பற்றி பேசியதற்காக தன்னிடம் இருந்த ஒரே ஒரு போர்வையை வழிப்போக்கனுக்கு அளித்திருப்பாள் . ‘ஏன் இப்படி செஞ்ச’ என்று கணவன் கேட்டதும் ‘அவன் என்னிடம் சங்கீதம் பற்றி பேசினான்’ என்பாள் அவள். ‘மாதவிக்குட்டியின் கதைகள்’ என்ற தொகுப்பில் உள்ள ‘தண்டனை’ கதையில் ‘கல்யாணம் முடிஞ்சா தூங்கக் கூடாதா?’ என்று பாட்டியிடம் புதிய மணப்பெண் கேட்பாள். இதுவரை வாழ்வில் வெளிப்படுத்த முடியாத வார்த்தைகளை கமலாதாஸின் கதாபாத்திரங்கள் ஊசிக்குள் நூல் கோர்ப்பதாய் மிக கவனமாக பேசி விடுகின்றன. அவற்றை வாசிக்கும் போது பதற்றமும், படபடப்பும் வருவதை தடுக்க முடியவில்லை. கூடவே, ஆங்காரச்சிரிப்பு வருவதையும். கதைகளில் எளிய சொற்களின் மூலம் காத்திரமான மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு கமலாதாஸின் கவிதை மனத்திற்கு மிகுந்த பங்கிருக்கிறது. காதலையும், காமத்தையும் பெண்கள் வெளிப்படுத்தவே கூடாது என்பது சமூகத்தின் பொது புத்தி. புண்ணுக்கு மெல்ல பக்கு உரிப்பது போல காதலையும், காமத்தையும் வெளியெடுத்து கவிதை வரிகளால் கழும்பிட்டுக் கொள்கிறார் கமலாதாஸ். அகவயச் சிந்தனைகளையும், பெண்ணியக் கருத்துகளையும் கமலாதாஸின் கவிதைகள் சமுத்திர ஓதமாய் கதைத்துக்கொண்டே இருக்கின்றன.
அகமனச் சிந்தனை, ஆணாதிக்க எதிர்ப்பு ஆகியவை மட்டுமல்லாமல் கருப்பின மக்களுக்கு சமூகத்தில் நடந்த அவலங்களின் எதிர்ப்புக் குரலாக மாயா ஏஞ்சலோ மற்றும் ரிட்டா டவ் ஆகியோரின் கவிதைகள் முழங்கி கொண்டிருக்கின்றன. தன் மேல் விழுந்த அடிமைத்தனத்தின் தளைகளைக் கட்டவிழ்க்க மொழியையும், கவிதையையும் ஆயுதமாக கையாண்டுள்ளனர்.
“வாழ்க்கையே என்னைத் தொடு
மென்மையாக அல்ல” – மாயா ஏஞ்சலோ
முரண்களால் தான் மனிதகுலம் வாழ்கிறது ; கேள்வி கேட்கிறது; சிந்திக்கிறது; மறைகிறது. இரவு – பகல், ஆண் - பெண் போல இருமைத் தன்மை கொண்டதல்ல அதிகாரமும் அடிமைத்தனமும். இயற்கையின் இருமைத் தன்மை மனித குலத்தை வாழ வைக்கும். ஆனால் அதிகாரமும் அடிமைத்தனமும் சிலர் வாழ பலரை பகடையாக்கும். ரிட்டா டவ்வின் ‘ரோசா’ கவிதை ஆழமான எதிர்ப்பைச் சொல்வதுடன் அடிமைத்தனத்தை எதிர்ப்பவர்களின் குற்றவுணர்ச்சியை களைந்து நீங்கள் செய்வது சரிதான் என்ற நம்பிக்கையை உள்ளூட்டுகிறது.
“I am a women phenomenlly
Phenomenal women
that's me” - Maya Angelo
இந்தக் கவிதை வரிகள் முடங்கியிருக்கும் பெண்ணிற்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கின்றன. விடுதலை தாருங்கள், சுதந்திரம் தாருங்கள் என்று யாரிடமும் இறைஞ்சு நிற்பதாய் இவர்களது கவிதைகள் இருப்பதில்லை. நாங்கள் நாங்களாகவே தனித்துவமும், உரிமைகளும் பெற்றவர்கள் தான் என்று அதிகாரம் செய்பவர்களுக்கு உறைக்கும் படியாய் எழுதுகின்றனர். இனம், பால் சார்ந்து பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து அவர்களை மீட்டெடுக்கும் மொழியை கவிதையாய் வார்த்துள்ளனர்.
இந்திய இலக்கிய வரலாற்றை ஆராயும்போது பெண் எழுத்தாளர்கள் 18 ஆம் நூற்றாண்டு வரை குறைவாகவே உள்ளனர். எழுத்துக்காக அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பும் குறைவுதான். அதிலும் வசதி படைத்த பெண்களுக்குத் தான் அந்த வாய்ப்பு கிட்டியது. சாமானிய பெண்கள் பலர் எழுதியிருக்கலாம். ஆனால் அவை நமக்கு கிடைப்பது அரிது தான். வசதி வாய்ப்பு பெற்ற பெண்களும் தங்கள் எழுத்துகளில் மேட்டிமைத்தனம் இல்லாது சாதாரண மக்களுக்காகவும் எழுச்சிக் குரல் எழுப்பியுள்ளனர். சரோஜினி நாயுடுவும் தன் கவிதைகள் மூலம் மக்களுக்கான போராட்ட உணர்வைத் தூண்டிவிட்டார். இசைமையோடு சமூக நீதிக்கான கவிதைகளை குறியீட்டுத் தன்மையுடன் எழுதியுள்ளார். கவிதைக்கான பொருண்மைமைகள் பரந்து கிடக்கும் போது சமூக நீதியைத் தேர்ந்தெடுத்து மரபோடு அழகியல் உணர்வுடன் நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார் சரோஜினி நாயுடு. தன்னுணர்வு பாடல்களிலும் சிறந்த கவியனுபவத்தை வெளிப்படுத்துகிறார்.
21 வயதுக்குள்ளாகவே இலக்கியம் படைத்து உலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட தோரு தத்தின் கவிதைகள் இயற்கையை உள்ளபடி அழகியலோடு உணர்த்துபவை. இந்திய இலக்கியங்களில் தொன்மை வாய்ந்த புராணங்களின் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து கூற்று வடிவில் கவிதைகளைப் படைத்து கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளார். இன்பாவின் இந்தத் தொடரை வாசித்ததன் மூலம்தான் தோரு தத் என்ற படைப்பாளியை அறிந்து கொண்டேன். காசநோயால் இறக்கும் வரை கவிதை எழுதிக் கொண்டிருந்த படைப்பு உள்ளத்தின் தழும்பலை இந்தத் தொடரில் பதிவு செய்திருக்கிறார் இன்பா.
‘பரிவும் தெய்வீக அன்பும் வார்த்தைகளால் சொல்ல முடியாத பிரகாசத்தில் மின்னும் சொற்களைப் பற்றிக்கொண்டு மரத்தின் அருகே இருபத்தியொரு வயது தேவதை போல் தோரு நிற்கிறாள்.
தோரு தத்தின் உணர்வலைகள் விசித்திரமான இலைகளின் சுவையான தொடுதல்!’
உலகக் கவிதைகளைப் படித்து திளைத்து அனைவருக்கும் பாப்லோ நெரூதா செல்லக்குட்டியாக மாறிவிடுவார். ஒவ்வொரு வரியிலும் கவிமனம் மழை போல் பொழியும். தனிமையையும், காதலையும் உள்ளம் எப்படி உணர்கிறதோ அந்த வலியையும் பிரியத்தையும் நூலில் மணிகளை கோர்த்து லாவண்யமான பெண்ணுக்கு அணிவிப்பது போல் கவிதையைச் சொற்களால் சொக்க வைக்கிறார். எழுத்தாளர் சுகுமாரன் தொகுத்த “இருபது காதல் பாடல்களும் ஒரு நிராசைப் பாடலும்” என்ற கவிதைத்தொகுப்பு தான் நெரூதாவை எனக்கு அறிமுகப்படுத்தியது. ‘இன்று இரவு என்னால் எழுத முடியும்’ என்ற கவிதை பிடித்தமான கவிதை. காதலுக்குள் ஒளியைப் பரவ விடுபவர் நெரூதா. வாசிக்க வாசிக்க உள்ளம் மகிழ்ந்து போகும். காதலில் அல்ல, அந்த சிலிநாட்டு மாயக்காரனிடம் இருந்தது வெளிச்சம். அதை கவிதைகளில் ஒளிரவிட்டான்.
“ஒவ்வொரு நாளும் ஒரு மலர்
உன் இதழில் விரியும் போது
உன்னைத் தேடுகிறேன்; என் காதலியே என் உயிர்”
சில சமயம் நெரூதாவின் காதலியாக என்னை நானே கற்பனை செய்து கொள்வதுண்டு. ஒவ்வொரு கவிதையையும், வரியையும் என்னை நினைத்து தான் நெரூதா எழுதி வைத்ததாகவும் நினைப்பதுண்டு. அவரது காதல் மிதந்து வந்து என் மடியில் சுருண்டு கொள்வதாயும் நான் நம்புகிறேன்.
இன்பாவின் ‘கடல் தாண்டிய சொற்கள்’ மூலம் தான் எட்வின் தம்புவையும் நிசிம் எசக்கியலையும் அறிந்து கொண்டேன். உலகக் கவிஞர்களை அவர்களின் படைப்பு வழியாக அறிமுகம் செய்து கவித்தன்மையோடு கட்டுரையாக்கி இருக்கிறார் இன்பா. கவிதை வாசகர்களுக்கு இத்தொடர் வைனில் ஊற வைத்து செய்த பிளம்கேக். சுவையரும்பின் கடைசி மொட்டையும் முகிழ்க்க வைக்கிறது. அருமையான இம்முயற்சி தொடர வாழ்த்துகளும், அன்பும் இன்பா.
பார்வைக்கு:
https://www.vikatan.com/literature/indian-poet-toru-dutt-who-wrote-literature-at-age-of-21
https://www.vikatan.com/literature/arts/the-nightingale-of-india-sarojini-naidu-biography
https://www.vikatan.com/literature/arts/pablo-neruda-a-chilean-poet-diplomat-kadal-thanadiya-sorkal
Comments
Post a Comment