கூதிர் இதழ் அறிமுகம் - மெய்ப்பொருள் வண்ணம் கலை இலக்கியப் பள்ளி

 

      கூதிர் இதழ் பற்றிய அறிமுகக் கூட்டம் மெய்ப்பொருள் கலை இலக்கியப் பள்ளி மூலம் தொழிலாளர் நாளான இன்று புதுவைப் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள பாலகத்தின் அருகிலிருக்கும் தொல்காப்பியர் புல்வெளியில் நடைபெற்றது. முனைவர் பட்ட ஆய்வாளர்கள் ல. பிரபாகரன் மற்றும் இரா. வீரமணி ஆகியோர் முறையே கூதிர் பருவம் ஒன்று முதல் ஐந்து வரை ஆறு முதல் பத்து வரை அறிமுகப்படுத்திப் பேசினர்.








      இதழின் உள்ளடக்கங்களைப் பகுத்தும் அறிமுகம் செய்தனர். இதழில் பங்களித்தவர்களின் நிழற்பட பதிவு இல்லாதது, அதிகப்படியான புனைப்பெயர் பயன்பாடு உள்ளிட்ட சில ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் குறைகளையும் சுட்டிக்காட்டினர். இதழ் எப்படியாக 2024ல் நடந்து இலக்கிய மற்றும் சமூக நிகழ்வுகளின் பதிவுகளாக அமையப்பெற்றுள்ளது என்பதைக் கட்டுரைகள் மற்றும் கவிதைகளைச் சுட்டிக் காட்டி உரையாற்றினார்கள்.

     புதிதாக வருபவர்களுடைய ஆக்கங்கள் இதழில் இடம்பெற்றதும் இதழுக்கு அனுப்பி இடம்பெறாத பகுதிகள் குறித்தும் உரையாடல் சென்றது. நான்கு பேர் ஒன்றிணைந்து இதழ்ப்பணியில் ஈடுபடுவதில் உள்ள கருத்து முரண்கள் முதலான செயல்பாட்டுப் பிரச்சினைகளும் அதன் மத்தியில் செயல்படும் ஒன்றிணைவுப் புள்ளியும் பேசுபொருளானது.

    எடுத்தாளப்பட்ட பகுதியில் இடம்பெற்ற கட்டுரைகளை கல்விப்புல ஆய்வு முன்னோடிகள் என்ற கூற்றினையொட்டி வீரமணி சில கருத்துக்களைப் பதிவு செய்ததோடு இதழில் வெளியான இரண்டு கவிஞர்களின் (றாம் சந்தோஷ், அரா) மொழியொற்றுமையும் குறிப்பிட்டார்.  வரலாற்றின் தொடர்ச்சி இன்றளவும் எப்படியாக தொடர்ந்து நடையேறுகிறது என்பதை சுட்டிக்காட்டியதோடு மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் பற்றியும் பிரபாகரன் தொட்டுக்காட்டிப் பேசினார்.

     இதழில் வெளியான கவிதைகளை பிற கவிஞர்களின் கவிதைகளோடு ஒப்பிட்டு நடந்த உரையாடல் புதிதாக எழுதும் பெண்களுக்குள் இருக்கும் மனத்தடையை நோக்கி நகர்ந்தது. அகிலா சுப்பரமணியனின் கட்டுரை மொழி எளிமை மற்றும் விளையாட்டுத்தனங்களோடு கூர்மையான சமூக உடைப்புக் கருத்துகளைத் தனக்குள் எப்படி கொண்டுள்ளது என்பதும் சந்திப்பு, பேதைமை என்றொரு பொதுச்சொல், இரண்டு புள்ளி சுழியமும் இரண்டாயிரத்து இருபத்து நான்கும், சாலையிலும் சந்திலும் அப்துல்கலாம், ஜெய் ஹே ஆசையின் இரண்டு கவிதைகள், உளமொழியெனில் போன்ற அழகுராஜ் கட்டுரைகளில் உள்ள குறிப்பிடத்தக்க அம்சங்கள் பற்றிய கருத்துகளோடு ப. தினேஷ்குமார் எழுதிய "தமிழ் சைவம்" எனும் நெறி காவி வேட்டிகளுக்கும் கருப்பு சட்டைகளுக்கும் இடையில் கட்டுரை, தெங்காசியன் எழுதிய விளிம்பு நிலை மக்களின் குரல்களை மையப்படுத்தும் தனிச்சொல் கட்டுரை ஆகியன குறித்த செய்திகள் பகிரப்பட்டன.

     கல்விப்புலத்தில் பயணிக்கும் கோ.வெங்கடாசலம் மற்றும் நா.பரசுராமன் போன்றோர் கட்டுரைகளும் இதழில் இடம்பெற்றதைக் குறிப்பிட்டனர். கானகநாடன், றாம் சந்தோஷ், இரா‌.இராகுலன், தெங்காசியன், திரமிளன், இர.கண்ணதாசன், கிருத்திகா, அகிலா சுப்பரமணி, அரா ஆகியோரின் கவிதைகளில் சில குறிப்பிட்டு பேசப்பட்டன. மயிர் விடு தூது என்ற மரபிலக்கிய முயற்சி, சத்யா தொடர்கதையின் கதாபாத்திரங்கள் ஆகியன உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தாயளி கதையின் உள்ளடக்க செய்திகள் நிகழ்காலத்தில் பல்வேறு பகுதிகளில் எப்படியாக நடந்தேறுகிறது என்பதையும் வேலாயுதம் பொன்னுசாமியின் உந்துதலுக்கான மூலவிசை கட்டுரை பேராசிரியர் ஆ. திருநாகலிங்கம் கட்டுரையின் செய்தியோடு தொடர்பு நிலையில் இருப்பதை பிரபாகரன் விரிவான செய்திகளோடு அறிமுகம் செய்தார். கண்ணிவெடிகளின் தேசம் மற்றும் ஐந்தாவது முத்திரை ஆகிய கட்டுரைகளில் இடம்பெற்ற திரைப்படம் குறித்த தகவல்களின் குறிப்பீடு கட்டுரையைச் செழுமைபடுத்தியிருக்கும் அம்சமும் உரையாடலுக்குள் வந்தது.

     வாசகர் பகுதி விவரங்கள் பற்றிய தெளிவற்ற குறிப்புகள் குறித்த விமர்சனம் மற்றும் அதற்குரிய விளக்கம், தொகுப்பாசிரியர் பகுதியில் இடம்பெற்ற செய்திகள் என உரையாடல் பல நிலைகளில் வளர்ந்து சென்றது‌. இப்படியாக இதழை அறிமுகம் செய்ததோடு பல்வேறு வகைகளில்  இதழினை உரையாடலுக்கு உட்படுத்தும் முன்னெடுப்பினைச் செய்த மெய்ப்பொருள் வண்ணம் கலை இலக்கியப் பள்ளியினருக்கு நன்றி‌.

     இதுதான் கூதிர் இதழ் பேசப்படும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. கூதிர் இதழ் தொடங்கப்பட்ட நிலத்திலேயே அது உரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது மன நிறைவளிக்கிறது. இதுவரை இதழ் குறித்து பேசியவர்களுக்கும் வாசித்து கருத்துகள் பகிர்ந்தவர்களுக்கும் நன்றி.


https://thoughtrar.blogspot.com/2025/04/blog-post.html



Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு