தவம்- ச. தேவிகா
தவம்- ச. தேவிகா
நான் இப்ப எப்பிடி இருக்கேன்னு தெரியுமா? என் ஒடம்பெல்லாம் நக,வெல ஒசந்த பட்டுப் பொடவ பாக்க அப்புடியே மகாராணியப்போல இருக்கேன். பாவம் எல்லாரும் நானு செத்துப்போயிட்டேன்னு அழுதுகிட்டே இருக்காங்க. ஆனா நானு அவங்க கூட ஒக்கார்ந்து அவங்களத்தான் பாத்துட்டு இருக்கேன்னு அவங்களுக்கே தெரியல. நான் செத்ததுக்கு அப்புறம் மகாராணி மாதிரி இருக்குறதுக்கு என் மொத புள்ள தவமணி தான் காரணம்.
எனக்கு மொத்தம் மூனு புள்ளைங்க. என் மொத புள்ள தான் தவமணி. எம்புள்ள தவமணி ரெம்ப அழகா இருப்பான். ரெண்டாவது ஒரு மகன், மூனாவதா ஒரு பொம்பளப்புள்ள. இவ்வளவுதான் எங்க குடும்பம். தவமணிய நாங்க பன்னெண்டாவது வர படிக்க வச்சோம்.அவன் பத்தாவது படிக்கும் போது எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் ஒடம்புக்கு முடியாம போய்ருச்சு, படுத்த படுக்கையா கெடந்தோம். தவமணியோட படிப்பையும் எங்களால நிறுத்த முடியல. அப்ப அவன் தம்பி சமயன் எட்டாவதுதான் படிச்சிட்டு இருந்தபுள்ள, அதனால அவன மட்டும் பள்ளிக்கொடம் போகாம நிறுத்துனோம். அவன் எங்கயும் வீட்டையும் பாத்துக்கிடீடான். ஆனா சமையனுக்குப் படிக்கனும்னு ரொம்ப ஆச, சூல்நெல அவனால படிக்க முடியல. என் பொண்ணு உமாவதியும் அப்ப ரெம்ப சின்னப்பிள்ள, அவ பள்ளிக்கொடம் போய்ருவா.
ஒத்த ஆளா சமையந்தான் எல்லாத்தையும் பாத்துக்கிட்டு ன். வீட்ல இருக்க ஆடு,மாடெல்லாம் மெய்ச்சுக்கிட்டு இருப்பான் காட்டுக்குப்போய். குடும்பத்த காப்பாத்துனான். பன்னெண்டாவத முடிச்ச தவமணி விருதுநகருக்கு வேலைக்குப்போய் இருந்தான். அப்பவே மாசம் பத்தாயிரம் குடுப்பாக. அவன் வேலைக்குப் போன அஞ்சாறு மாசத்துலயே அவனுக்கு கல்யாணம் பண்ணி வைப்போம்னு முடிவு பண்றோம். என்கூடப் பொறக்கலான்னாக் கூட' எம்மேல அம்புட்டு பாசமா இருக்கும்' எங்க நாச்சான் அண்ணே, அவரு மக' முனீஸ்வரித்தான் தவமணிக்கு கட்டனும்னு பேசி. முடிவெல்லாம் பண்ணிட்டோம். அப்ப வரைக்கும் தவமணி எங்கக்கிட்ட ஏதும் சொல்லல. பேசின ரெண்டாவது வாரத்துலயே ஒரு நல்ல நாளாப்பாத்து பரிசம்போடுவோம்னு வீட்ல கலந்து பேசிட்டு இருந்தோம். அடுத்தநாள் காலையில தவமணியக்காணாம். நாங்க எங்க ஊருல தேடாத எடமில்ல.
ஆனா, தவமணி ஊருல எங்கயும் இல்ல. அவனைப் பக்கத்தூரு அக்கத்தூரெல்லாம் தேடி , போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்றோம். ஒரு நாளஞ்சு நாள்ல எங்களுக்கு ஒருசேதி வந்துச்சு. அது என்ன சேதின்னா, என் புள்ள தவமணி அரவாணியாப்போயிட்டான்னும் , அவன் இப்ப பம்பாயில இருக்கான்னும் சேதி வந்துச்சு. ஒரு பொம்பளப்புள்ளையோட வாழ்க்கைய கெடுத்துறக் கூடாதுன்னு நெனச்சுதான் ஊரவிட்டு போயிட்டானாம் எம்புள்ள
எனக்கு ஒரு பக்கம் அசிங்கமா இருந்தாலும் இன்னோரு பக்கம் கவலயா இருந்துச்சு. பத்து நாளா வாயில சோறுதண்ணிப் படல. அப்பறம் நாச்சான் அண்ணே மகள என் ரெண்டாவது மகன் சமையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம். அவங்களும் சந்தோசமாத்தான் இருந்தாங்க. அவங்களுக்கு மொத ஒரு பொம்பளப்புள்ள பொறந்துச்சு.அந்தப்பிள்ளையப் பாக்கத்தான் தவமணி மொதமொதல்ல பம்பாய்ல இருந்து வந்தான். அந்தக் கொழந்தைய மட்டும் ஆஸ்பத்திரில போயி பாத்துட்டு மறுபடியும் பம்பாய்க்கே போயிட்டான். என்'மருமகளும் மகனுந்தான் அவனப் பாத்தாங்க. நான் அங்கம் போறதுக்குள்ள தவமணி கெளம்பிட்டான். அப்பறம் சமையனுக்கு ஒரு ஆம்பளப்புள்ளையும் பொறந்துச்சு.
கொஞ்ச மாசத்துல எங்க ஊருல ஊர்ச்சாத்திரைங்குற திருவிழா வந்துச்சு. அந்தத் திருவிழா நல்லா அருமையா இருக்கும், ஏழூர் திருவிழான்னுக்கூட சொல்லலாம். மதுரையில நடக்குற ரெண்டாவது பெரியத் திருவிழான்னா அது இந்த திருவிழா தான்.
இந்தத் திருவிழா ஒருவருசம் விட்டு அடுத்த வர்சம் தான் வரும். சுத்துப்பட்டுல இருக்க அம்மாபட்டி, டி.கல்லுப்பட்டி, தேவன்குறிச்சி, வன்னிவேலம்பட்டி, காடனேரி, கிழங்குளம், சத்திரப்பட்டின்னு இந்த ஏழூர்ல நடக்கும். இந்தத் திருவிழா. ஒரு நாப்பத்தஞ்சு அடி ஒசரத்துல ஆறூருல சப்பரம் கட்டி இருக்க சனமெல்லாம் சேந்து தலைல அந்தச் சப்பரத்த தூக்கிக்கிட்டு எங்கூரு சாமியோட அக்கா சாமி இருக்க அம்மாபட்டிக்குப் போவோம். அம்மாபட்டில இருக்க சாமிக்கு மட்டும் சப்பரம் கெடையாது. ஏழூர்ல இருந்து வெளியூருக்குப்போய் வேல பாக்குற எல்லாரும் இந்தத் திருவிழாவுக்கு மட்டும் எப்புடியாச்சும் வந்து ஆத்தாவையும் சொந்த சத்தத்தையும் பாத்துட்ட போவாக. இந்தவட்டம் நடந்த திருவிழாவிற்கு தவமணியும் வந்துருந்தான். எங்க அக்கா பாப்பு தான் அவனப் பாத்து அடையாளம் கண்டு என்கிட்டக் கூட்டி வந்தா. தவமணி அப்பப் பாக்கும் போது அப்புடியே பொட்டப்புள்ள மாதிரியே இருந்தான். அப்ப என் அடிவயிறு ஏனோ கனகனன்னு இருந்துச்சு.என்கண்ணே என்ட்ட இல்ல.
அப்ப தவமணி “ஆத்தா நானும் வீட்டுக்கு வந்துரவா”ன்னு கேட்டான். ஆனா நாந்தான் கல்லு மனசுக்காரி ஊரு என்ன பேசுமோன்னு, இங்க இருக்க நெலமைய மனசுல வச்சு, “உன் மேல உங்கப்பா ரொம்பக் கோவமா இருக்காரு ராசா. நீ எங்கயாவது போயி சந்தோசமா இருடா”ன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். நான் வந்ததும் தவமணி அவனோட தம்பி வீடடுக்குப் போயி அவங்க பிள்ளைகள பாத்துட்டு அங்கக் கொஞ்ச நேரம் இருந்துருக்கான். என்ன தோனுச்சோ தெரியல அந்த ரெண்டு பிள்ளைகளப் பாத்து “எனக்கு’ இப்டி பிள்ளைங்க இல்லையே” னு சொல்லி வருத்தப் பட்ருக்கான். அப்ப' என் மகனும் மருமகளும் “யார் வேணுமோ கூட்டிட்டுப் போங்க”ன்னு சொல்ல, தவமணி “இந்தப் பிள்ளைங்க மனசுல உங்க முகம்தான் அம்மா அப்பான்னு இருக்கும். கூட்டிப்போய் வளத்தாள பிள்ளைங்க ஏங்கிப் போயிருங்க”னு சொல்லிட்டு மறுபடியும் பம்பாய்க்கே போய்ட்டான். பம்பாயில அவன் மில்லுல வேல பாக்குனறதா அவங்க தம்பிகிட்ட சொன்னானாம் தவமணி.
அப்பறம் இங்க ஒரே தண்ணிப்பஞ்சம் விவசாயமும் பாக்க முடியல. அதனால சமையனும் முனியும் மெட்ராஸ்க்குப் போயிட்டாங்க. ஒருவருசம் இருக்கும் அப்புறந்தான் எங்கப் பாக்க ஊருக்கு வந்தாங்க. என் மகனுக்கும் மருமகளுக்கும் அடிக்கடி போன் போட்டு தவமணி பேசுவான் போல.. அவங்க மெட்ராஸ்ல இருக்கும் போது, இவங்க ஊருக்கு வாரதுக்கு முன்னாடி நாளு , தவமணி கிட்ட முனி பேசும்போது “நீங்க ஊருக்கு வந்துருங்க மாமா, ஏன் அங்க யாருமே இல்லாம இருக்கீங்க”ன்னு சொல்லிருக்கா. அதுக்கு தவமணி “அப்பா தான் எம்மேல கோவமா இருக்காருல முனி அப்பறம் எப்புடி நான் அங்க வாறது”ன்னு சொல்லிட்டான்.”நாங்க ஊருக்கு போயி ரெண்டுநாளு இருந்துட்டு. வருவோம்னு இருக்கோம், நானு ஊருக்குப் போயி மாமா கிட்டப் பேசுறேன்” ன்னு சொன்னாலாம். இங்க வந்து என் வீடடுக்காரர்க் கிட்ட “பெரிய மாமா வந்தா என்னப் பண்ணுவிங்க ஏத்துப்பிங்களா?” ன்னு கேட்டா. அதுக்கு அவரு “நம்ம என்னம்மா செய்றது. அவன் பொறப்பு அப்டி, என்புள்ள தானமா, அவன் வந்தா எப்புடிமா ஏத்துக்காம இருக்கது”ன்னு சொன்னாரு. அப்ப தவமணிக்குப் போன் போட்டு குடுத்துருக்கா , அப்பனும் மகனும் பேசுனாக.
அன்னையில இருந்து எனக்கு ஒரே கவலையும் , பயமும் இருந்துச்சு. தவமணி எங்கிட்ட பேசாம போய்ருவானோன்னு. நான் நெனச்சு பயந்த மாதிரியே அவன் என்கிட்ட பேசுறத நிறுத்திட்டான்.ஒரு வருசத்துக்கு அப்பறம் என் பொண்ணு உமாவதிக்கு கல்யாணம் ,பண்ணனும்ன்னு பணம்,நக எல்லாம் ரெடி பண்ணுறதுக்கு சமயன் கிட்டயும் முனிகிட்டயும் பேசிட்டு இருந்தேன். உமா கலியாணத்தப் பத்தி தவமணி கிட்ட இவக ரெண்டு பேரும் பேசிருப்பாங்க போல. அப்ப தவமணி அவங்கப்பாக்கு போன் போட்டு “தங்கச்சிக்கு கல்யாணமாம்லப்பா எங்கிட்ட இதப் பத்தி எதுவும் சொல்ல மாட்டியாப்பா”ன்னு பேசிட்டு இருந்தான். உமா கிட்டப் பேசுனான் , ஆனா தவமணி எங்கிட்ட மட்டும் பேசவே இல்ல.
கல்யாணத்துக்கு பணம், பாத்திரம் , மிக்ஸி , கிரைண்டர்ன்னு அவனால முடிஞ்ச அளவுக்கு அங்க இருந்து அனுப்பி வச்சான். ஆனா கல்யாணத்துக்கு மட்டும் வரவே இல்ல. உமாவுக்கு கல்யாணம் முடிஞ்சு ரெண்டு நாளுக்கு அப்பறம் போன் போட்டுப் பேசுனான். “கல்யாணம் எப்படி நடந்துச்சு, பணம் போதுமா, இன்னும் அனுப்பவா” ன்னு கேட்டுட்டு இருந்தான். “ஏன்டா' கல்யாணத்துக்கு வரல”ன்னு கேட்டாரு என் வீட்டுக்காரு. அவன் அதுக்கு “ஊரு என்னப் பேசுமோன்னு தான்ப்பா வரல, அதுவும் இல்லாம மாப்ள வீட்ல தங்கச்சிய வேணாம்ன்னு சொல்லிட்டா, இதெல்லாம் யோசிச்சு தான் வரல”ன்னு சொன்னான்.அவன்கிட்ட பேசனும்போல இருந்துச்சு எனக்கு நான் போன வாங்கிப் பேசுனேன். ஆனா அவன் என்கிட்ட பேச பிடிக்காம போன வச்சிட்டான். அத நெனச்சு அழாத நாளில்ல. அவன நெனச்சு மட்டுந்தான் எனக்கு எப்பவுமே நெனப்பாவே இருக்கும்.
உமாவுக்கு நல்லபடியா ஒரு பொம்பளப் பிள்ளைப் பொறந்துச்சு. அதயாச்சும் பாக்க வருவான்னு பாத்தா அதுக்கும் வரல. அந்தப் பிள்ளைக்கு ஒரு வயசு முடிஞ்சு ஒண்ணு வயசு இருக்கும். அப்ப எங்களுக்கு பம்பாய்ல இருந்து ஒரு போன் வந்துச்சு. தவமணி' ஏதோ நோய் வந்து செத்துப் போய்ட்டான்னும், நான் செத்ததுக்கு அப்புறம் என்னோட ஒடம்ப ஊருக்கு அனுப்ப வேணாம்ன்னு சொல்லிட்டானாம். நாங்க எல்லாரும் எவ்வளவோ கெஞ்சி கதறிப் பாத்தோம். ஆனா, அவங்க அனுப்ப மாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க. என் மனசு கேக்கவே இல்ல, கடசியா ரெண்டு வார்த்தை பேசாமக்கூட போய்ட்டானே இந்த பாவி மகன். ஊரு என்ன பேசுமோன்னு நெனச்சு தான் இந்த பாதகத்தி வெரட்டி விட்டுட்டேன். இப்ப ஊருக்கு ஒடம்பக்கூட அனுப்பக் கூடாதுன்னு சொல்லிட்டுப் போயிட்டானே. இந்த நாசமாப் போன மஞ்சக்காமல என் மகனப் இப்புடி கூட்டிட்டுப் போய்ருச்சே. எந்த அம்மாவுக்கும் இந்த நெலம வரக்கூடாது. அவனுக்கு செய்ய வேண்டிய எல்லா சாத்திர சம்பிரதாயமெல்லாம் பண்றோம்.
ஒரு ரெண்டு மாசத்துக்கு அப்பறம் பம்பாயில இருந்து ஒரு தாலி, பத்து லட்சம் பணம், கூடவே ஒரு கடுதாசியும் வந்துச்சு. அந்தக் கடுதாசிய உமா தான் படிச்சா. அவ படிக்கும் போதே கண்ணுல கண்ணீரு கொட்டுது. அது சாகறதுக்கு முன்னாடி தவமணி எழுதுன கடைசி கடுதாசி. அவனுக்கு என்னைய ரெம்பப் பிடிக்குமாம், அவனுக்கு மஞ்சக்காமால முத்திப்போச்சாம். எங்கிட்ட பேசுனா அவனுக்கு வாழனும்ன்னு ஆசை வந்துருமாம். அதனாலதான் இவ்ளோ நாளா நான் போன வாங்கிப் பேசுனாக் கூட போன வச்சிருவானாம்.
இதுல இருக்க பணத்தையும் தாலியயும் வச்சு வயசானக் காலத்துல கஸ்டப் படிம நீயும் அப்பாவும் இதவச்சு ஏதாச்சும் பண்ணுங்கன்னு எழுதிருந்தான். நான் இவ்ளோ நாளா அவனத் தப்பா நெனச்சுட்டேனே. “கடவுளே...எம் முத்தையா ஒனக்கு இப்புடி ஒரு புள்ளப் பொறந்துருந்தா உனக்கு என் வலி தெரிஞ்சுருக்குமோசாமி” ன்னு திட்டித் தீட்டிட்டேன். நான் ஊருக்கு பயந்துட்டு பொய் சொல்லி அவன' அனுப்பிட்டேன்.ஆனா எம்பிள்ள நெனப்பு முழுக்க நானா மட்டுந்தான் இருந்துருக்கேன். என்னப்பத்தி நெனச்சா எனக்கே கேவலமா இருக்கு.இந்தப் பணமும் இருவத்தோரு பவுனு தாலியயும் அவன் நெனச்சா எனக்கு அனுப்ப வேணாம்ன்னு கூட சொல்லிருக்கலாம். அவன் அனுப்புன அப்பறம் தான் தெரியுது, நான் கஸ்டப் படக்கூடாதுன்னு எனக்காக ஒவ்வொன்னயும் பாத்துப் பாத்து பண்ணிருக்கான்.
அவன் எறந்துப் போன துக்கத்த மறந்து இருக்கும் போதுதான் என் பேத்திய பொண்ணு பாக்க வந்துருந்தாங்க, அப்ப அவங்க வீட்டுக்குள்ள வந்து பாத்துட்டு “அது இந்த வீட்ல தான் பொறந்துச்சு, இந்த வீட்லப் பொண்ணெடுக்க வேணாம்”ன்னு சொல்லிட்டு இருந்தாங்க. அப்ப' நான் என் மனச' கல்லாக்கி கிட்டு “அத நாங்க தத்தெடுத்து வளத்தோம் அதுக்கு கோணம் மாறவும் நாங்க அத பத்திவிட்டுட்டோம்”ன்னு சொன்னேன். ஆனா யாரும் நான் சொல்றத கேக்காமப் போய்ட்டாங்க. அப்பவும் என்பிள்ளைய தத்துப்பிள்ளன்னு சொல்லிட்டோமேன்னு ஒரே கவலயா இருந்துச்சு. அந்நேரம்பாத்து அவன் பத்தாவது படிச்சப்ப பொம்பளப்புள்ள வேசம் போட்டு எடுத்த' போட்டா என் கண்ணுலப் பட்டுச்சு. எனக்கோ அதப்பாத்ததும் மனசே தாங்கல, எனக்கே தெரியாம கண்ணுல வெண்ணீரா கண்ணீரு வந்துச்சு, இதப் பாத்த என் மருமகன் “எங்க தவமணி எனக்கு மச்சானா இல்ல. மச்சினச்சியான்னு தெரியலயே” ன்னு கேலி பண்றான், “நீங்க யாரும் நான் செத்தா என்னையத் தூக்கிப் போட வேணாமுடா. எம்மவென் பணத்துல ராணி கணக்காப் போய்ச் சேருவேன்டா, நீ வேணாப் பாத்துட்டு இரு இது நடக்குமப்பு?”ன்னு அப்ப சொன்னேன். இந்த ஆவுடையம்மா வாக்கு பலிச்சிருச்சுல... பாருங்க இந்த மகாராணிய சுத்தித்தான் அத்தனப்பேரும்' இருக்க நாங்க.
Comments
Post a Comment