வாசகர் பக்கம் அப்படியென்ன - அரம்பன்

வாசகர் பக்கம்

அப்படியென்ன - அரம்பன்

      கைம்பெண் வாழ்வை பேசும் கோ. பிரதீபாவின் கவிதையில் கூதிர் இரண்டாம் இதழ் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து சத்யா தொடர் கூதிர் இதழின் பலமாக இடம்பெற்றுள்ளது. இரண்டாம் தொடரில் சத்யா என்னும் இளைஞனை கேலியாக முன் வைப்பது தெரிந்தாலும் அதற்குள் ஆழமான அர்த்தங்கள் உண்டு. ஏற்கனவே கூதிர் இரண்டாம் இதழில் வெளிவந்த திரமிளன் பற்றிய கூற்று இந்த பகுதிக்கும் பொருந்தும். திரமிளன் என்கிற பெயர் பேசும் அரசியல், போன இதழில் மயக்கத்தோடு கூறப்பட்டாலும் இந்த இதழில் அரசியலின் தீவிரத்தன்மையோடு வெளிப்படுகிறது. அதே சமயம் ஒரு சார்பில் இருக்கும் போது தன் தரப்பை முழுவதுமாக நியாயப்படுத்த ஏன் பலவாறாக மெனக்கிட வேண்டும் என்ற கேள்வியும் திரமிளனின் கவிதையை படிக்கும் போது எழுகிறது. வேலாயுதம் பொன்னுசாமியின் உந்துதலுக்கான மூல விசை கட்டுரை பிறவற்றிலிருந்து தனித்து நிற்கும் தன்மை உடையதாக காணப்படுகிறது. வரட்டுவாத எதிர்ப்பிலிருந்து விலகி காரண காரியங்களின் மூலத்தைத் தொட்டு அதனை நரம்பு வழியாகக் கடத்தும் செயல்பாட்டைக் கட்டுரையில் காண முடிகிறது. சிறிய பகுதியாக இருந்தாலும் அதற்குள் ஆழமாக சிறு தெய்வ வழிபாட்டையும் மார்க்சியத்தையும் இணைத்து வலுவாக முன்னிறுத்தி உள்ளார் கட்டுரையாசிரியர். எதை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்ற தொடக்கப் புள்ளியை வைப்பதாக அமைந்து கட்டுரை வெளிப்படுத்தும் பார்வை இதுவரை அதிகம் கவனிக்கப்படாத அல்லது கவனிக்கப்பட்டும் கண்டுகொள்ளப்படாததுமான பகுதியாகும்.

     மனுஷ்யபுத்திரனின் குறிப்பிடத்தகுந்ததொரு கவிஞர் ஆவார். அவரது கவிதை மீதும் அவர் மீதும் நிகழ்த்தப்பட்ட கேலியற்ற வன்மப் போக்கை எதிர்த்து எழுந்த கண்டனக் குரல்களை பதிவு செய்ததன் மூலம் இலக்கியத்தையும் இலக்கியப் போக்கையும் கூதிர் கவனிக்கிறது என்பது தெரிகிறது. கவிஞருக்கு ஆதரவாக நிற்கும் ஏனைய கவிஞர்களின் மாறுபட்ட குரலை ஒருசேர பதிவு செய்து கவிதளத்தில் இயங்கும் கவிஞர்கள் இலக்கியத்திற்குள் எழும்பும் குட்டிக் கலாட்டாக்களை கவனித்து வருவதையும் அது பற்றி அவர்களுடைய பார்வையையும் நாம் ஒரு சேர காண முடிகிறது

      பிரதீபா கவிதை வலியை பதிவு செய்வதென்றால் கவி கோ. பிரியதர்ஷினியின் கவிதை எதிர்க்குரலை முன்வைக்கிறது. இவ்விரண்டு வகைப்பட்ட படைப்புகளுக்கும் ஒரே மாதிரியான இடத்தை இதழ் தந்துள்ளதை நாம் அறியலாம். இரண்டு புள்ளி சுழியமும் இரண்டாயிரத்து இருபத்து நான்கும் பகுதி அனுபவமும் உரையாடலுமாக விரிந்துள்ளது. காசி தமிழ் சங்கமம் கலாச்சாரம் என்ற பெயரில் என்ன செய்கிறது என்பதை சூசகமாக அழகுராஜ் கூறிச் செல்லும் பகுதியாகவே அனுபவம் பற்றிய பகுதி உள்ளது. அதனை கொஞ்சம் உடைத்துப் பேச வைக்க தினேஷ்கண்ணன் உரையாடல் பகுதியில் முயற்சி செய்துள்ளார். பயணம் பற்றிய பார்வையோடு பயணத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளோடு அரசியலையும் இணைத்துப் பார்க்கும் இடத்தை திரமிளனின் கவிதையோடு இணைத்துப் பார்க்கலாம்.

       மாயோன் தொழில் கவிதை மாதிரியான தொடர் கவிதைகள் தொடர்ந்து எழுதப்படுவதும் நல்லதே. இந்த கவிதைகளின் சிறப்பம்சங்களில் ஒன்று வட்டார வழக்கு ஆகும். வட்டார வழக்கைக் கொண்டு சங்க இலக்கியச் சொல்லைத் தலைப்பாக வைத்து எழுதப்பட்ட கவிதையாக மாயோன் தொழில் உள்ளது. காந்தி யார்? காந்தியின் ராமர் யார்? என்பதை ஆசையின் கவிதைகள் மற்றும் அருஞ்சொல் இதழின் கட்டுரைகளோடு இணைத்துப் பேசும் பகுதியாக ஜெய் ஹே ஆசையின் இரண்டு கவிதைகள் சிறு கட்டுரை இருக்கிறது. அராவின் கவிதைகள் குறித்து அரம்பன் இப்போதைக்கு பேசப்போவதில்லை.

 

 

Comments

Popular posts from this blog

மெய் முறிந்தால் மெய் (எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடன் உரையாடல்)

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு