அரா கவிதைகள்
அரா கவிதைகள்
பற்றுப்புள்ளிகளில் பொருத்தப்பட்ட
மரக் கைப்பிடிகள் பிடித்து
ஓட்டைகளுக்குள் கால் வைத்து மேலேறுகிறேன்
ஆங்காங்கே விடைத்து நிற்கும் கைப்பிடிகளும்
குழிந்து கிடக்கும் பொந்துகளுமாக
அச்சுவர் பரந்து கிடக்கிறது
ஒவ்வொரு நாளும் விடாமல் ஏறுவது
தொழிலாகிவிட்டது
புண்களிலிருந்து உலர்ந்து உதிரும் பக்குகளை
உருட்டி துளைகளை அடைப்பதற்கு
மயிரிழை வெற்றி கோப்பையாக கைகளுக்கு வரலாம்
உடைந்து போன முகத்தின் மேல் முனைகள் அறுக்கின்றன
பச்சை பூசிய மயிர்களைத் திண்ணும்
ஆடு மாடுகளின் தொண்டைக் குழிக்குள்
வெடுக்கென விழும் அழுக்குச்சட்டைகளுக்குள்
ஒரு மனித உடல் விழுங்கப்பட
கம்மிய குரலில் புத்தோசையில் மெட்டுக்கேற்ற
கதைப்பாடல் ஒன்று பிறக்கிறது
பிறப்பின் உற்சவத்தை கைப்பிடியைப் பிடித்து தொங்கி
கண் மூடி உள்ளிழுத்து ரசிப்பவர்கள்
நாளையிலிருந்து மீண்டும் மேலேற வேண்டும்
*****
மிக சாவகாசமாக இடுப்புக்கு மேல் போடும்
உன் கைகளைச் சுற்றி
இழுத்துவிடும் இயந்திரத்தின்
மூர்க்கமான மூக்குக்குள்ளிருந்து
தூசு பறந்து விழுகிறது
மோட்டாருக்கும் சக்கரத்திற்கும் இடையிலான வார்
நைந்து பிய்ந்து விழுவதற்கு
இன்னும் சில வாரங்களோ
மாதங்களோ
வருடங்களோ கூட ஆகலாம்
அதுவரை சுற்றும் கத்திகள் கூர்மை தீட்டப்படாமலே குத்தி குத்தி கரைக்கிறது
மங்குனியென பேந்த பேந்த விழித்துக்கொண்டிருக்கும்
கண்களுக்குள் பறக்கும் தூசியால்
இத்தினியேனும் எண்ணெய் வடியாது
விளக்குகள் எரிகின்றன
வெளிச்சத்தை எவரேனும் எடுப்பாரென
வெள்ளைத்துணிக்கு மேல் சிவப்புத்துணி போட்டு மூடியும்
புடைத்துக்கொண்டு எரியும் விளக்குக்கான சாவிகள் வரிசையாக அடியிலிருக்கின்றன
எதை அழுத்தினால் அமர்ந்துபோகுமென தெரியாது குழம்புகையில்
பட்டென போன மின்சாரத்தில்
எல்லாம் மூளியாகியும்
விழிப்பில் நிகழ்கிறது பைத்தியக் குழப்பம்
*****
நீ தானாக வந்து எதையேனும் சொல்லும்போது
உன்னைக் கொலை செய்ய எத்தனித்திருந்தேன்
செய்யவும் செய்தேன்
இப்போது தானாக நிகழ்கிறது
நான் கேட்பதும் நீ சொல்வதும்
தானாக நிகழ்கிறது
நான் கேட்பதும் நீ சொல்லாமல் இருப்பதும்
தானாக நிகழ்கிறது
எதையும் சொல்லாமல் நீ கடந்து செல்வதும்
தானாக நிகழ்கிறது மாற்றம்
நான் நீயாக நீ நானாக
தானாக நிகழ்ந்து விடுகிறது
அனைத்தையும் முடித்திடும் மனக்கொலை
*****
https://www.instagram.com/p/DPiFfiFiEmm/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
https://www.instagram.com/p/DPiFmnNiE8H/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
https://www.instagram.com/p/DPiFtYHCOv8/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
Comments
Post a Comment