Posts

இசையும் வசனமும் கலந்த முதல் தமிழ் நாடகம் - அழகுராஜ் ராமமூர்த்தி

Image
  இசையும் வசனமும் கலந்த முதல் தமிழ் நாடகம் - அழகுராஜ் ராமமூர்த்தி       பிரதாபசந்திர விலாசம் தமிழ் நாடக வரலாற்றில் நாடகத்தின் போக்கை மாற்றிய நாடக இலக்கிய வரிசையில் நிற்கத்தக்க படைப்பு. இந்நாடகத்தை திண்டிவனத்தைச் சேர்ந்த ப. வ. இராமசாமி ராஜு எழுதியுள்ளார். இந்திரா பார்த்தசாரதி திண்ணை இதழில் 2006ல் எழுதிய “தமிழின் முதல் இசை நாடகம்” என்ற கட்டுரை பிரதாப சந்திர விலாசம் பற்றிய கவனத்தைத் தமிழ் பரப்பில் கொடுத்தது. அதன்மூலம் 2007ல் இந்நாடகம் ஏனி இந்தியன் பதிப்பகம் மூலம் மறு பதிப்பும் ஆனது. அக்கட்டுரையிலிருந்தே நாமும் இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம்.    1871ல் பிரதாபசந்திர விலாசம் எழுதப்பட்டதாக இந்திரா பார்த்தசாரதி கூறியுள்ளார். மேலும் இந்நாடகம் மேடை ஏற்றப்பட்டதா? என்கிற ஐயத்தை முன்வைத்து க.நா.சு தன்னிடம் தனிப்பேச்சில் பகிர்ந்த செய்தியையும் குறிப்பிட்டிருக்கிறார். பம்மல் சம்பந்த முதலியாரின் “நாடக மேடை நினைவுகள்” நூல் இராமசாமி ராஜு மற்றும் பிரதாபசந்திர விலாசம் அரங்கேறிய செய்தியை அறியத் தருகிறது. “காரிய தரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியாரும் நானுமாக காலஞ்சென்ற ராம...

அரா கவிதைகள்

  அரா கவிதைகள்  உன்னிடம் மட்டும் சொல்கிறேன் என் காதலை வேறெவர் கேட்பினும் நான் சொல்வதில்லை உன் மீதான ப்ரியத்தை நீ செத்தாலும் சொல்லமாட்டேன்  நீ செத்ததாலும் சொல்லமாட்டேன் ஏன் சொல்ல வேண்டும்  அது அப்படியே உலவட்டும் உயிர்ப்பலி கேட்கும் சிலைகளைப் போல சொல்லச் சொல்லி சொல்லியிருக்க நினைத்தும் வாய் தவறியும் சொன்னதில்லை நான்கு மாதம் முன் நடமாட முடியாது படுத்திருந்த புலம்பலில் எனக்கு நானே சொன்னதுண்டு எவருக்கும் கேட்காதவாறு நம்மிடையிலான நட்பேறிய காதலை என்னால் அல்ல தானாக நிகழட்டும்  காதலைப் போல கொலையும் முடிவில் உயிர் பறிப்பின் சின்னமாக  மனதளிக்கப்பட்ட சிலுவையின் நீளம் உன்னைவிட இரண்டடி நீண்டது அகலம்  உன்னைவிட நான்கடி அகண்டது ****** எதிரிலுள்ள புற்று மண்ணைத் தின்று வளர்ந்து என்னிடம் வந்த பாம்பின் உடல் முழுக்க விஷம் அசைந்துச் சுற்றி வளையமிட்டு அடிக்கடி பேசியதற்குள்ளும் விஷத்துளிகளின் தெறிப்புகளிருப்பதை புற்றைக் குறித்த என் பேச்சில்  விரைத்து அசைந்த  பாம்பின் நாவுகள் காட்டிக்கொடுத்தன பறந்து பறந்து இல்லையென்றாலும் ஓடிவந்து வக்காலத்து வாங்கும் இரட்டைநாவுகள் தீ...

காட்சிப் பொருளல்ல கருத்துப் பொருள் - அழகுராஜ் ராமமூர்த்தி

Image
  காட்சிப் பொருளல்ல கருத்துப் பொருள் - அழகுராஜ் ராமமூர்த்தி     குருகு இணைய இதழில் எழுதப்பட்டுள்ள கிறிஸ்துவின் சித்திரங்கள் கட்டுரைத் தொடர் தெய்வீக அம்சம், துயரமும் மறைஞானமும், உடலும் ரத்தமும், உலகப்போர்கள் என்ற நான்கு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. தாமரைக்கண்ணன் அவிநாசி எழுதிய இத்தொடர் முழுமையாக இணையத்தரவுகளை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளதாகவே தெரிகிறது..     கிறிஸ்துவின் ஓவியங்களைப் பற்றிய இத்தொடர் ஓவியங்களை கிறிஸ்தவர்கள் எப்படியாக பார்த்தார்கள் என்பதிலிருந்து தொடங்குகிறது. மோசேயின் காலத்தில் சிற்பங்களையும் சிலைகளையும் எகிப்தியர் முதலான பிற இனத்தவர்கள் வணங்கியபோதும் கூட உருவமற்ற வழிபாட்டையே ஆபிரகாமின் வழியில் அவரது வம்சாவழியினர் கைக்கொண்டனர். இவையெல்லாம் பிற்கால கிறிஸ்தவத்திற்குரிய தோற்றுவாய் என்பதால் அவற்றையும் கணக்கில் கொண்டே ஓவியம் முதலான கலைகள் கிறிஸ்தவ பின்புலத்தில் செயல்படுவதைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதேபோல குறியீடுகள் தான் ஓவியத்திற்கும் எழுத்திற்கும் அடிப்படை. உருவ வழிபாடற்ற பின்னணியைக் கிறிஸ்தவம் கைக்கொண்டதால் கிறிஸ்துவின் ஓவியங்கள்...

கவிதைகள்

  கவிதைகள்   காது கொடுத்து கேளுங்கள் சுருக்கென்று ஒன்று சொல்லணும் ஒரு கவிதையைப் படித்துவிட்டு இப்படி சுருக்கென்று இருக்கணும் என்றார் சொல்லிவிட்டு உங்கள் கவிதையைச் சொல்லுங்கள் என்றார் சுருக்கென்றது... -சு. வருண்குமார் இருள் நிறைந்த சாலையில் தன் தொழிலுக்காக நின்றிருந்தாள் தேவையை மீறிய தன் வாழ்க்கைக்காக அவளொரு அசிங்கம்  அவசரத்தில் பார்ப்போரின் கண்களுக்கோ தேவதை  எவரும் காணாத தேவதை என்னுடனான அவளது பேச்சில் சொற்களின் மதிப்பு மேலேறியது நான் பேசி நான்கு நாட்கள் கூட ஆகவில்லை ஆணவப் படுகொலை அன்றிலிருந்து இன்று வரை  இருள் வாழ்க்கை இருளை நோக்கி....! -இர. பிரகாஷ்ராஜ்

எதார்த்த வாழ்வியலிலிருந்து முகிழ்க்கும் புனைவு : ‘குதிப்பி’ புதினத்தை முன்வைத்து - இரா. வீரமணி

  எதார்த்த வாழ்வியலிலிருந்து முகிழ்க்கும் புனைவு : ‘குதிப்பி’ புதினத்தை முன்வைத்து                                                        - இரா. வீரமணி       சமையல் ஒரு கலையாகுமா? சமையல் கலை குறித்த இலக்கியங்கள் தமிழில் பெரிய அளவில் வெளிவந்திருக்கின்றனவா? (‘மடைநூல்’ எனும் சமையல் கலை நூல் இருந்ததாகச் சீவக சிந்தாமணி உரையின் வழி எடுத்துக் காட்டுவார் கே.கே.பிள்ளை. ஏலாதி, சிறுபஞ்சமூலம் போன்றவை பெயரளவில் மூலிகைப் பொருட்களால் சுட்டப்படும் அறநூல்களே தவிர, உணவுப் பண்பாட்டை விரிவாகப் பேசுவன அல்ல.) பாணர், விறலியர் போன்று சமையல் கலைஞர்களின் வாழ்வியல் எங்கேனும் பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியிருக்கிறதா? இப்படியான கேள்விகள் நம்முள் எழுந்திருக்கக்கூடுமா என்பது சந்தேகம்தான். இக்கேள்விகளுக்குத் தமிழ்ச் சூழலில் நெடிய வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது. அவ்வரலாற்றைப் பேசும் முன், இவ்வரலாறு பேசப்படும் தருவாயை ஏற்படுத்தியை நூலினைக் குறித்து அறியவேண்டு...

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

Image
  நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு . நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல் சந்திப்பு: ரா. அழகுராஜ் , ச. தணிகைவேலன் , இர. பிரகாஷ்ராஜ்   ரா. அழகுராஜ்: நாடகம் , நடிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள் ?           நான் ‘ கருஞ்சுழி ’ நாடகத்தை 2001 ல் பார்த்தேன். அப்போது ,  நாடகம் தொடர்பான எந்தவொரு அறிமுகமும் எனக்கு இல்லை. ஒரு பார்வையாளராக , அந்த நாடகம் எனக்குள்ளே ஒரு பாதிப்பை உருவாக்கியது. எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தியதென தெளிவான பதில் இல்லை. நான் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய பின் , அந்த நாடகத்தில் நடிப்பு தான் என்னை பாதிப்புக்குள்ளாக்கியது என்ற தெளிவான பதில் கிடைத்தது. இப்போது , நடிப்பு என்பதில் இருக்கும் கற்பனைகள் தான் என்னைத் தொடர்ந்து நாடகத்தில் இயங்கவைக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.        அந்த நாடகத்தில் நடித்தவர்கள் என்னைப் போன்ற பார்வையாளர்களை கவர்ந்திழுக்கவே நடித்தார்களா ? புதிதாக நாடகத்திற்குள் வருபவர்களையும் இள...