தீனன் கவிதைகள்

தீனன் கவிதைகள் 


 பயணம் 

தூக்கத்தின் அசைவினில்

நுனி விழிகள்

இமைகளுக்குள் புடைத்திட

விருப்பமான நினைவுகளின் மீது

விமோசனமில்லாத சாபமாக

அன்றாடத்தின் வெறுமை

கவிழ்ந்து கிடக்கிறது

பிடரியின் ஊழைச்சதைக்குள் ஒளிந்து கொண்டு

சுறுசுறுப்பு வக்கனமிடுகின்றது

சிரிப்பைக் கொண்டு கிழித்த கோடுகளை

அழுகையைக் கொண்டு அழிக்கும்

பாவப்பட்ட வேலைக்கு

இயற்கை என்னைத் தேர்வு செய்திருக்கிறது

உடைகளுக்குள் சிறைப்பட்ட

மனித உடல்களின் வடிவங்களைச்

சேகரித்து வைக்கத் தொடங்கியிருக்கிறேன்

நடுக்களின் விளிம்பு வேட்கை

புன்னகையின் குதறல் குறி யாவும்

தலையை நிறைக்கும் சதுரங்களின் வெறுமையுணர்வாகி

நெஞ்சை இழுக்கும் அரக்க கனத்துடன்

உலகம் தலைகீழாய்த் தொங்குகிறது

நிலம் எனக்குள் உதிர்ந்து விழுந்திட

அறுதி சொல்ல முடியாத பயணமொன்றிற்கு

கிளம்பிய வண்ணம் இருக்கிறேன்

*****

ஜி பே

அச்சங்களாலான எனது உலகத்திற்கு நிறங்கள் கிடையாது 

ரத்தமும் தண்ணீரும்

ஒரே அடர்த்தியில் இருக்கும் எனது உலகத்தைப் பற்றி 

குவளையை நிரப்பும் ஓட்டல் பொடியனுக்கு புரியவைக்க முடியாததால் 

சால்னாவில் சுழற்றிய பரோட்டா வில்லையை 

வேண்டா வெறுப்பாக 

வாய்க்குள் திணித்தபடி 

கலவி பற்றிய சிந்தனைகளில் மூழ்குகிறேன் 

விசாரிப்புகள் இல்லாத எனது வெறுமையான வாழ்க்கையின் சாரம் 

ஜி பே பாஸ்வேர்டாக 

சுருங்கியதைக் கண்டு 

வீதிகளெல்லாம் 

கெக்களிக்கின்றன

*****

அசைவுகள்


அசைவுகளின் பாரம் உடலைத் துளைக்கிறது 

கணுக்களில் நாசி விரிகிறது 


உயிர் விழிகளின் சோபனத்தில் கனவுகள் எழுதும் தற்கொலைக் கடிதங்கள் கசங்கிக் கிடக்கின்றன 


போதாமையில் இம்மை கழிகிறது தீக்காயங்களின் எரிச்சல் உப்புக்காற்றில் 

போதைவஸ்துவாகி உடலை அறுத்து ஊடுருவுகிறது 


வலிகளின் ஊடுருவல் அச்சங்களை எரிக்கும் அசைவு நெருப்பு  கீறல்களின் செங்குத்தான ரணம் துளைகளின் வட்டக் குழிக்குள் நரகமாகத் தேங்குகிறது 


கலவியின் தரிசனம் விழிகளைக் கூச 

புஜங்களுக்குள் சிரிப்பை முகரும் 

தோல்க்காதலனாகிறேன்


விழிப்பு கண்களைக் கூசிட 

இடறி விழுவதற்கான ஏக்கம் பூமிக்கு என்னை ஒப்புக்கொடுத்தது


ரத்தத்தின் நெடி குடலைப் புரட்டியது 

வலிகளின் தூய்மையான வெளிப்பாடு 

சரிந்துகிடக்கும் என் சுய நினைவின் கொலைருசியை

காயங்களுக்குள் ஊட்டியது 


உயிர்த்துடிப்பை விட மறுக்கும் மீனாக நழுவிக் கொண்டிருக்கும் சுயநினைவை 

மீண்டும் பிடித்து கைகளுக்குள் இடுக்கிக்கொண்டேன் 

அது துடித்து அசைந்தது. 

******

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

மெய் முறிந்தால் மெய் (எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடன் உரையாடல்)

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024