அரா கவிதைகள்

 அரா கவிதைகள் 


உன்னிடம் மட்டும் சொல்கிறேன் என் காதலை

வேறெவர் கேட்பினும் நான் சொல்வதில்லை

உன் மீதான ப்ரியத்தை

நீ செத்தாலும் சொல்லமாட்டேன் 

நீ செத்ததாலும் சொல்லமாட்டேன்

ஏன் சொல்ல வேண்டும் 

அது அப்படியே உலவட்டும்

உயிர்ப்பலி கேட்கும் சிலைகளைப் போல


சொல்லச் சொல்லி சொல்லியிருக்க நினைத்தும்

வாய் தவறியும் சொன்னதில்லை

நான்கு மாதம் முன்

நடமாட முடியாது படுத்திருந்த புலம்பலில்

எனக்கு நானே சொன்னதுண்டு

எவருக்கும் கேட்காதவாறு

நம்மிடையிலான நட்பேறிய காதலை


என்னால் அல்ல தானாக நிகழட்டும் 

காதலைப் போல கொலையும்

முடிவில் உயிர் பறிப்பின் சின்னமாக 

மனதளிக்கப்பட்ட சிலுவையின் நீளம்

உன்னைவிட இரண்டடி நீண்டது

அகலம் 

உன்னைவிட நான்கடி அகண்டது

******


எதிரிலுள்ள புற்று மண்ணைத் தின்று வளர்ந்து

என்னிடம் வந்த பாம்பின் உடல் முழுக்க விஷம்

அசைந்துச் சுற்றி வளையமிட்டு

அடிக்கடி பேசியதற்குள்ளும்

விஷத்துளிகளின் தெறிப்புகளிருப்பதை

புற்றைக் குறித்த என் பேச்சில் 

விரைத்து அசைந்த 

பாம்பின் நாவுகள் காட்டிக்கொடுத்தன


பறந்து பறந்து இல்லையென்றாலும்

ஓடிவந்து வக்காலத்து வாங்கும் இரட்டைநாவுகள்

தீவிரத்துடன் அசைய

ரகசியங்களடங்கிய பெட்டிகளின் சில சாவிகளைக்

கொத்திக்கொண்டு நிற்கிறது

எப்போது வேண்டுமானாலும் அவை திறக்கப்படலாம்

எப்போது வேண்டுமானாலும் நான் கொத்தப்படலாம்


மீண்டும் திரிகிறேன் 

பாம்பை அப்படியே விட்டுவிட்டு

*****


நடந்துகொண்டிருக்கும்போதே 

நடக்கும் வித்தை மறக்கிறது

கால்கள் தடங்கலாகி 

நடை பாணி காணாமலாகிறது

இதுவரை எப்படி நடந்தேன்


நடந்துகொண்டே எத்தனை முறை யோசித்தாலும்

நினைத்தது இன்னும் உதிக்காத 

பெருங்கடலின் கரையில்

நிறுத்தப்படுகிறேன்


என்னைப்போலவே தன் நடையை மறந்து

நினைவுகளற்று ஆடுகின்றன அலைகள்

அதன் நினைவற்ற பிரம்மை 

என்னையும் நினைவற்றதாக்கி 

நடக்கச் சொல்கிறது 


எவ்வளவு நேரம் உடைந்த படகின் இடுப்பில் சுற்றிய கயிறுகளைத் திரித்துக்கொண்டிருப்பது

எவ்வளவு நேரம் தரையில் கிடக்கும் மணல்துகள்களை எனது செருப்பிற்குள் ஏறுமாறு அழுத்துவது

இவ்விடம் கழிய அடித்து தள்ளும் 

ஒரு காற்று வேண்டியிருக்கிறது 

*****

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு